The Talkie
Monday, June 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் உலகத் திரைப்படங்கள்

மைக்கேல் – குழந்தைமையின் ஆன்மிகம்

The Talkie by The Talkie
June 1, 2026
in உலகத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ஜா.தீபா

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை படமாக வெளியாகவிருக்கிறது என்றதுமே எல்லோருக்கும் ஒரு முழு திரைப்படமும் மனதில் ஓடியிருக்கும். 1980களில் மைக்கேல் ஜாக்சன் என்கிற  தனிப்பெரும் பெயர் பெற்று மிகப் பிரபலமானார். மைக்கேல் மரணமடையும்வரை அவர் குறித்த செய்திகள் வராத நாட்கள் இல்லை. உலகுக்குத் தான் கலைஞனாக மட்டுமே அறிவித்துக் கொண்டால் போதும் என்று ஒதுங்கிய ஒருவரைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டே இருந்ததும், அவருடைய ஒவ்வொரு அங்குல வாழ்க்கையினையும் தங்களுக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்துக் கொண்டதும் அவருக்கான துரதிருஷ்டமே. தனது மரணம் வரையிலும் புதிர்த்தன்மையை அளித்துச் சென்ற ஒருவர் குறித்த படம் எனும்போது எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருந்தது. MICHAEL படம் எதை முன்னிறுத்தப் போகிறது என்பதுதான் ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு.

எல்லோருக்கும் தெரிந்த ஒருவரின் வாழ்க்கையினைப் படமாக எடுப்பதில் பல சவால்கள் உண்டு. மைக்கேல் மீது 1993 தொடங்கி குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், சீண்டல் என வழக்குகள் போடப்பட்டிருந்தன. முறையான நிரூபணம் இல்லாத காரணத்ததால் அவர் மீது குற்றம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனாலும், பாப் இசையின் சக்கரவர்த்தி என்கிற பெயரோடு இந்தக் குற்றச்சாட்டும் அவர் குறித்து முணுமுணுக்கப்படுகிறது. இந்த வழக்குகள் குறித்தும் அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதும் படத்தில் எங்கும் சொல்லப்படவில்லை, மாறாக, அந்தக் குற்றச்சாட்டுக்கு ஒரு பதில் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டினை எதிர்கொண்ட மைக்கேல் அதனை எப்படி உள்வாங்கியிருக்கக்கூடும் என்பதை நம் முன் எடுத்துக்காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.

MICHAEL படத்தின் இயக்குநர் ஆண்டன் ஃப்யூக்வா, இந்தப் படம் குறித்து முதன்முதலாக சொல்கிறபோது ‘இது ஒரு ஆன்மீகரீதியிலான பயணம்’ என்றார். இது இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் புதிர்த்தன்மையையும் ஏற்படுத்தியது.

எந்த மேடையில் ஏறினாலும்,விருதுகள் பெற்றாலும் மைக்கேல் கடவுளுக்கு நன்றி சொல்வார். தன்னை வழிநடத்துவது கடவுள்தான் எனப் பலமுறை சொல்லியிருக்கிறார். எனில், இது அவரது கடவுள் நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிற ஒரு படமா என்கிற விவாதங்களை உருவாக்கியிருந்தன. ஆன்மிகம் என்பது கடவுளுடன் தொடர்பு கொண்ட ஒன்றாகவே பார்க்கப்படுவதன் விளைவே இந்த விவாதங்கள் என இயக்குநர் அதற்கும் பதில் சொன்னார். பிறகு என்னதான் சொல்லப்போகிறீர்கள் என ரசிகர்கள் காத்திருந்தபோது தான் MICHAEL படம் வெளிவந்தது.

“ஐந்து வயது முதல் ஆயிரக்கணக்கானவர் முன்னிலையில் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டும் இருக்கும் ஒரு சிறுவனின் வாழ்க்கையை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. அவன் பார்க்கும் உலகமும், அவனைப் பார்க்கும் உலகும் உங்களுக்குப் புரியாதது” என்று மைக்கேல் ஜாக்சன் ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பார். அவர் தவறவிட்ட  சிறுவயதுக் காலம் அவருக்குள் தீராத ஏக்கமாக மாறிவிட்டிருந்தது. அதை மீட்க அவர் அந்தக் காலத்தைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டேயிருந்திருக்கிறார். இதை புரிந்து கொண்டவர்களையே அவர் நம்பியிருக்கிறார். இதனை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கண்டிப்பு மிகுந்த தகப்பனின் ஐந்து பிள்ளைகளும் இரவும் பகலும் பாடல்களைப் பாடி பயிற்சி எடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். சேர்ந்து உணவு உண்பது, கிறிஸ்துமஸ் , புத்தாண்டு கொண்டாடுவது என எதுவுமற்ற, நடுஇரவில் கூட இசைப் பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு பால்யம் மைக்கேலினுடையது.. இசை தான் தன்னுடைய வாழ்க்கை என்றபோதிலும் அது தனக்குள் ஒரு மாற்று உலகத்தினை ஏற்படுத்துகிறது என்று அந்தச் சிறுவனுக்குப் புரியத் தொடங்குகிறது. ஆனால், அந்த இசை கட்டற்றதாக, சுதந்திரத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டுமென விரும்புகிறான். அதற்கு தன்னுடைய இசையைத் தானே எழுதியாக வேண்டும் என நினைக்கிறான். அவனுடைய அப்பா அதற்கு மறுக்கிறார். ‘நீ என்ன செய்யவேண்டும் யோசிக்க வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன்’ என்கிறார். அவன் அதை மீறுகிறான். தனக்கு எல்லாமுமாக இருந்து வழிநடத்திய அப்பாவை எதிர்ப்பது தயக்கதினை ஏற்படுத்துகிறது. மற்றொரு பக்கம் தன்னுடைய சுய அடையாளத்தினைத் தேடுவதற்கான பயணத்தையும் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையில் மைக்கேல் படுகிற அவஸ்தை படம் முழுவதுமே சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் சுயஅடையாளத்தின் மீது சந்தேகம் கொண்ட ஒருவன் அதில் இருந்து  மீள்வதற்கான முழு தைரியத்தினையும் பெற்றுவிட்டான் என்பதோடு படமும் முடிகிறது. தன்னையறிதல் என்பது மைக்கேல் ஜாக்சனுக்குள் எவ்வாறு நிகழ்ந்தது என்று சொன்னதாலேயே இதனை ஆன்மிகப் பயணம் என்று இயக்குநர் சொல்லியிருக்கலாம். அதற்கு முழு அர்த்தமும் படத்தில் இருக்கிறது.

இதோடு மற்றொரு முக்கியமான பார்வையைப் படம் தருகிறது. கறுப்பின இசையின் வரலாறு நெடியது. பொழுதுபோக்கிற்கான இசை அல்ல அது. அடக்கப்பட்ட உணர்வுகளை, அடிமைத்தனத்தின் அநீதிகளை உரக்கச்சொல்லும் ஒரு வடிவமாகத்தான் இன்றளவும் கறுப்பின இசை பார்க்கப்படுகிறது. மேற்கத்திய இசை என்பது மென்மையும், செவ்வியல்தன்மையும் கொண்டது என்று வரலாறு எழுதப்பட்ட காலகட்டத்தில் மனதின் குரலாய் இசையைத் தந்தவர்கள் கறுப்பினத்தவர்கள். அதனால் அதற்கு வலு அதிகம். கறுப்பினத்தவரின் பேச்சுகளுக்குத் தடை வந்தது போல, இசைக்கும் தடை ஏற்படும்போதெல்லாம் அது தன்னை வீரியமாக வெளிக்கொண்டு வந்தது. பொதுமேடைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன. அரசு விழாக்களில் கறுப்பினத்தவர்களின் இசை மேடையேறியதே தனி வரலாறு. அவர்களின் இசை, கேள்விகள் கேட்டது, உலுக்கியது, பல்லாயிரம் நாவுகளால் இசைக்கப்பட்டது.

இதன் பின்னணியில்தான் மைக்கேல் ஜாக்சனின் வரவைப் பார்க்க வேண்டும். MTV ஒளிபரப்பிய பாடல்கள் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாயின. அவற்றில் கறுப்பினத்தவர்களின் இசை விருப்பத்துடன்  ஒளிபரப்பப்பட்டதில்லை. அதை மீறியவர் மைக்கேல் ஜாக்சன். அவரது ஆல்பங்கள் இலட்சக்கணக்கில் விற்பனையில் இருந்தபோதும் MTV கண்டும் காணாமல் இருந்ததைத் தகர்த்திருந்தார் மைக்கேல். `மைக்கேல் ஜாக்சனுக்கு முன்பும் MTVயில் கறுப்பினக் கலைஞர்களின் இசை ஒளிபரப்பப்பட்டது என்றபோதிலும், அது மிகக் கவனமாகத் தவிர்க்கப்பட்டும் வந்தது. CBS ரிகார்ட்ஸ் நிறுவனத்தின் செயலர் வால்டர் யட்னிகோஃப் உறுதியான முயற்சியில் மைக்கேல் ஜாக்சனின் Billie Jean மற்றும் Thriller திரும்பத் திரும்ப எம்டீவியில் ஒளிபரப்பானது என்பது இசை உலகின் மாபெரும் சகாப்தத்தைத் தொடங்கிவைத்தது. தனது இனத்துக்காக மைக்கேல் தொடங்கிவைத்த சாதனையாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.

BEAT IT ஆல்பத்திற்காக கிரிப்ஸ் மற்றும் ப்ளட் என இரண்டு குழுக்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதெல்லாம் எவரும் செய்யத் துணியாத ஒன்று. அதற்கான காரணமாக எது அமைந்தது என்பதைப் படம் சொல்கிறது. இரண்டு குழுக்களும் சாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து துன்புறுத்துவதும் எனத் தொடர்ந்துவந்த செய்திகள் மைக்கேலைப் பாதித்ததாகவும், அவர்களை நேரில் சென்று தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு மைக்கேல் கேட்டுக்கொண்டதாகவும் படம் சொல்கிறது. இது பெருமளவு உண்மைதான் என்று அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். வன்முறையைக் கலையாக மாற்றியதன் நேர்மறையான விளைவாக  அது அமைந்திருந்தது.

மைக்கேல் ஜாக்சன் என்பது ஒரு ‘பிராண்டாக’ மாறத் தொடங்கி அவர் பெயர் உலகம் முழுவதும் தெரியத் தொடங்கியபோதும் அன்புக்காக ஏங்கிய ஒருவராகவே இருந்திருக்கிறார். குழந்தைகளிடமும் விலங்குகளிடமும் அவர் தனக்கான உலகத்தினை அமைத்துக்கொண்டார். அவர் மலைப்பாம்பினை வளர்த்ததும், பப்பிள்ஸ் எனும் சிம்பன்சியை வளர்த்ததும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தன. அவர் வளர்த்த பப்பிள்ஸ் இப்போது ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. தினமும் அதற்காக மைக்கேல் ஜாக்சனின் இசையை ஒலிக்கவிடுகிறார்கள் என்கிறார்கள். பப்பிள்ஸ்  ஜாக்சன் நட்பும், ஜாக்சன் அதனிடத்தில் தன்னைப் பற்றிச் சொல்வதும், தன்னுடைய ஆத்ம நண்பனாகவே அதை நினைத்ததும் நெகிழ்ச்சியான காட்சிகள். “யாரும் என்னுடன் விளையாட வர மாட்டேன் என்கிறார்கள். எல்லோரும் காட்சிப் பொருளைப் போல பார்க்கிறார்கள்’ என்று அம்மாவிடம் சொல்லி வருத்தப்படும்போது “நீ ரொம்ப ஸ்பெஷல் மைக்கேல்’ என்று அவனது அம்மா தரும் ஆறுதலும், சார்லி சாப்ளின் படத்தினை அம்மாவோடு பார்க்கும் டீன் ஏஜ் மைக்கேலைத் திரும்பத் திரும்பக் காட்டுவதும், அவருக்குள் உருவாக்கிக் கொண்டிருந்த பால்ய உலகத்தின் வெளிப்பாடுகளே. டீன் ஏஜ் ஆன பின்பும் கடைக்குப் போய் குழந்தைகள் விளையாடும் பொருட்களை வாங்கிக் குவிக்கும் மைக்கேலை பப்பிள்ஸ் மட்டுமே புரிந்து கொள்கிறது.

சிறு வயதில் தன்னைப் பாதித்த கற்பனைக் கதாபத்திரமா பீடர் பான் போல வாழ வேண்டும் என்று விரும்பினார் மைக்கேல். ‘நீங்கள் யார்?” என்கிற கேள்விக்கு ஒருமுறை ‘நான் பீடர் பான் போன்றவன். வளர விரும்பாதவன். அதனாலேயே குழந்தைமையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். சிறுவனாக இசைக்கச்சேரிகளை முடித்துவிட்டு நடுஇரவில் வீட்டுக்கு வந்தபோதும் பீட்டர்பான் கதைகளையே  திரும்பத் திரும்ப வாசித்து தனக்குள் ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டார் என்பதைக் காட்டுகிறது படம். மைக்கேல் ஜாக்சன் அவர் வாழ நினைத்த வாழ்க்கையை NEVERLANDல் உருவாக்கியிருக்கிறார். 

எதற்கெடுத்தாலும் அடிக்கிற அப்பாவின் மகனாக அஞ்சி வாழ்தலில் இருந்து தப்பித்தலையே கைகொண்டிருந்தார் மைக்கேல். இசையும், புத்தக வாசிப்பும் அவரை மாற்று உலகத்துக்குள் தக்க வைத்திருந்தது. முறையாக நடனம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவரது உடல்மொழி என்பது அசைவுகளால் ஆனது. அவருக்கிருந்த இசையார்வம் என்பது திறமை மாத்திரமல்ல, அவரது வாழ்க்கை முறை என்பதைத்தான் முதன்முறையாக தனியாக ரிகார்டிங் செய்யும்போது நிரூபிக்கிறான் சிறுவன் மைக்கேல்.

சிறு வயது மைக்கேல் ஜாக்சனாக நடித்த சுளியானோ வால்டியும் , இளவயது மைக்கேலாக நடித்த ஜஃபார் ஜாக்சன் இருவருமே அற்புதம் செய்திருக்கிறார்கள். இருவருக்குமே இது முதல் திரைப்படம். ஜஃபார் மைக்கேலின் சகோதரர் மகன். உடனிருந்து அவரைப் பார்த்தவர். இரண்டு வருட காலம் தினமும் பல மணிநேரங்கள் மைக்கேலின் வீடியோக்கள், ஆறு மணி நேரம் நடனப் பயிற்சி, நடிப்புப் பட்டறைப் பயிற்சி என இந்தப் படத்துக்காகத் தன்னை ஒப்புக் கொடுத்திருக்கிறார். மைக்கேல் பாடகர் மட்டுமல்ல, அவரது நடன அசைவுகளுக்கு இப்போதும் ரசிகர்கள் உண்டு. நடனத்தில் தனக்கென ஒரு பாணி கொண்டிருந்தார். மைக்கேல் ஜாக்சன் பாணியில் ஆடுவது வேறு, மைக்கேலாக ஆடுவது வேறு. மைக்கேலை அப்படியே ரசிகர்கள் நம்பும்படி பிரதியெடுப்பது சாதாரணமே அல்ல. ‘நாம் பார்த்துக் கொண்டிருப்பது மைக்கேலைத்தான்’ என்று நம்பும்படி செய்ய ஜஃபார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அபாரமானவை. குறிப்பாக படத்தின் கடைசி பத்து நிமிடங்களுக்கு வருகிற BAD இசை டூரின் இசையும் நடனமும்.

பெப்சி விளம்பரத்தின் போது மைக்கேலுக்கு ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து வருகிற மருத்துவமனைக் காட்சிகள் மைக்கேல் வேறு ஒரு தளத்தினை நோக்கி பயணம் செய்யவிருக்கிறார் என்பதைக் காட்டுபவை. அதனை ஜஃபார் மூலமாகப் பார்க்க முடிந்தது. வலியின் வேதனையில் இருக்கும் மைகேலுக்குக் கிடைக்கிற மிக்கி மவுஸ் பொம்மையைப் பார்த்தும் சிரிக்கும் அந்த குழந்தைத்தனம் ஓர் உதாரணம்.

Bohemean Rhapsody படத்தின் தயாரிப்பு நிறுவனமே இந்தப் படத்தினையும் தயாரித்திருக்கிறார்கள். இரண்டு படங்களுமே மாபெரும் இசைக் கலைஞரின் உளவியலைப் பேசுகின்றன. Michael படத்தின் திரைக்ககதை அமைத்திருக்கிறார் ஜான் லோகன். மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் பின்னணியையும் உளவியலையும் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை. எல்லோருக்கும் தெரிந்த அவரது வாழ்க்கை, யாருக்கும் தெரிந்திராத அவரது மனவோட்டம் இதுதான் திரைக்கதையின் சாரம். இதனை இயக்கியிருப்பவர் ஆண்டன் ஃப்யூக்வா. மைக்கேலுக்குள் இருந்த மனிதாபிமானம், குடும்பத்தின் மீது அவர் கொண்டிருந்த அச்சமும், அன்பும், குறிப்பாக அம்மாவுக்கும் அவருக்கும் இடையில் இருந்த நெருக்கம் இதெல்லாம்தான் அவரை வடிவமைத்தவை. அது குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்றிருந்தார்.

 மைக்கேல் குறித்த சர்ச்சைகள் ஒருபக்கம், அவருடைய உடல்நலம், மனநலம் பற்றிய வதந்திகளும் உண்மைகளும் இன்னொருபுறம் என அசாதாரண வாழ்க்கை அமைந்த ஒருவரின் கதை எப்படியானதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பினைப் புரிந்துகொண்டு சொல்லப்பட்ட படம் இது. மைக்கேல் இறந்து பதினைந்து வருடங்கள் ஆனபோதும் அவர் வாழ்க்கை குறித்தான சில கேள்விகளுக்கான பதில் தேடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. பால்ய காலம் என்பது ஒருவரின் ஆளுமையை எப்படி வடிவமைக்க முடியும் என்பதை மைக்கேல் ஜாக்சனை முன்வைத்துச் சொல்லியிருக்கிற படமும்கூட. ‘என்னை ஒரு புதிராகவே மக்கள் பார்க்க வேண்டும்’ என்கிற மைக்கேலின் எண்ணத்தினை இந்தப் படம் நேர்மறையாக தகர்த்திருக்கிறது. ‘மைக்கேல் நீங்கள் புதிர் அல்ல, புரிந்து கொள்ளப்படவேண்டியவர்’ என்பதாகவே எடுக்கப்பட்ட படம். 

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

மைக்கேல் – குழந்தைமையின் ஆன்மிகம்

June 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?