The Talkie
Friday, July 3, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home ஆளுமைகள்

கதை TO திரைக்கதை : MADE IN INDIA – A TITAN STORY

The Talkie by The Talkie
July 2, 2026
in ஆளுமைகள்
A A
0
கதை TO திரைக்கதை : MADE IN INDIA – A TITAN STORY
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ஜா.தீபா

அமேசான் ப்ரைம் MX Playerல் கடந்த மாதம் MADE IN INDIA  – A TITAN STORY  தொடர் வெளிவந்திருக்கிறது. மொத்தம் ஆறு எபிசோடுகள்.

டாடா நிறுவனத்தின் டைட்டன் கைக்கடிகாரங்கள் உலக அளவில் பிரபலமானவை. கைக்கடிகாரம் என்பது ஓர் ஆடம்பரமான பொருள் அல்ல, அது உணர்வோடு கலந்த ஒன்று என்பதாக இந்தியரை நினைக்க வைத்த பெருமை டைட்டனுக்கு உண்டு. இந்தியாவால் உலகத்தரத்துக்கு கைக்கடிகாரங்கள் தயாரிக்க முடியுமா என்கிற சந்தேககங்களும் கேள்விகளும் எழுந்தபோது முடியும் என்று உறுதி கொண்டு, ஐரோப்பா உட்பட வெளிநாடுகளில் டைட்டனை பிரபலமாக்கிய கதைதான் இந்தத் தொடர்.

இந்தியாவில் வெளிவரும் நெட் சீரிஸ்கள் மர்மம், குற்றங்கள், விசாரணைகள் இவற்றை அடிப்படையாக வைத்தே வெளிவருகின்றன. விதிவிலக்குகளும் உண்டு. இவை எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டு, முழுக்கவுமே ஒரு பிராண்ட் உருவாகி தன்னை நிலைநிறுத்திக் கொண்ட  கதையை உணர்வுப்பூர்வமாகச் சொன்ன சீரிஸ் இது. ராபி கிரேவால் இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார். கந்தர்ப் ஷ்ராஃப், கரன் வ்யாஸ், நிராஜ் தசா என மூன்று பேர் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இந்தத் தொடர், பத்திரிகையாளர் வினய் காமத் எழுதிய TITAN – INSIDE INDIA’S MOST SUCCESSFUL CONSUMER BRAND எனும் புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. வினய் காமத், தி இந்து குழுமத்தின் பிசினஸ் லைன் பத்திரிகையின் சீனியர் அசோசியேட் எடிட்டர். 2018ல் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

ஒரு பிசினஸ் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளைக்கொண்டு இவ்வளவு சுவாரஸ்யமான ஒரு தொடரை எடுத்திருப்பதன் காரணம் டைட்டன் கைக்கடிகாரம் உருவானதன் உண்மையான பின்னணிதான். இதில் பல உணர்வுப்பூர்வமான கதைகள் உண்டு, சவால்கள் இருந்திருக்கின்றன, மாபெரும் வெற்றிகளும், சறுக்கல்களும் கொண்டிருந்தன. இதோடு இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியின் தசாப்தங்களையும் பார்க்க முடிகிறது.

மக்கள் நேரடியாகப் பயன்படுத்தும் பொருட்களை டாடா குழுமம் தயாரிக்கத் தொடங்கியதே டைட்டன் கைகடிகாரத்தில் இருந்துதான். அதன்பிறகே தங்க நகைகள், கண்கண்ணாடிகள், வாசனைத் திரவியங்கள், உடைகள், உப்பு, சமையல் பொருட்கள் என நீட்டிக்கொண்டே போனது. எப்போதுமே தொடக்கம் சாதாரணமாக அமைந்துவிடுவதில்லை என்பதே வினய் காமத் எழுதிய புத்தகத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

ஜர்க்ஜீஸ் தேசாய் (XERXES DESAI) டாடா குழுமத்தின் உயரிய பொறுப்புகள் வகித்தவர். ஜேஆர்டி டாடாவின் நம்பிக்கைக்குரியவர். ஜீ என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற இவருடைய கனவுகளும் முடிவுகளும்தான் டைட்டனின் வளர்ச்சியும் சறுக்கல்களும் பிரமாண்டமும் என்கிறது புத்தகம்.

ஜீ என்கிற ஜர்க்ஜீஸ் தேசாயை மையமிட்டே அமேசான் தொடரும் அமைந்திருக்கிறது. ஜீ மற்றும் ஜேஆர்டி டாடா தவிர மற்ற அத்தனை கதாபாத்திரங்களின் பெயர்களும் தொடருக்காக மாற்றப்பட்டிருக்கின்றன.

தொடருக்காக, புத்தகத்தில் இருக்கும் சில சம்பவங்கள் முற்றிலும் வேறானவையாக மாற்றப்பட்டுள்ளன. ஜீயைச் சுற்றியே முழுக்கதையும் என்பதால், அவர்தான் எல்லாவற்றையும் திட்டமிட்டார், அவருடைய கனவுதான் டைட்டன் என்பதாக சீரிஸ் சொல்லியிருப்பது, செய்தியைப் புனைவாக மாற்றும்போது எடுத்துக்கொள்ளப்பட்ட சுதந்திரம்.

ஜீ, ஐந்து வருட காலங்கள் ஒப்பந்த அடிப்படையில் டாடா குழுமத்தினால் மும்பையின் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்துக்காக திட்ட மேலாண்மைப் பணிக்காக அனுப்பப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு நல்ல பெயரும் அங்கீகாரமும் கிடைத்து, அங்கேயே பணி செய்ய அழைக்கப்பட்டபோது, டாடாதான் தனது தாய்வீடு என்று திரும்பியிருந்தார். டாடாவின் பிரபலமான நட்சத்திர விடுதிகளை அமைத்ததில் பெரும்பங்கு ஜீ-க்கு இருந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஜீ டாடாவுக்கு திரும்பி வருகையில் அவருக்கான பொறுப்பு என்பது எதுவென தீர்மானிக்க முடியாமல் இருந்திருக்கிறது. நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த டாடா பிரஸ் நிர்வாகத்தினை ஜீயிடம் ஒப்படைக்கிறார்கள். அப்போதுதான் அவருடன் பணி செய்த ஆகாஷ் வந்து இணைகிறார். (அனில் மன்சந்தா என்பவரின் பெயரைத்தான் ஆகாஷ் என, தொடரில் மாற்றியிருக்கிறார்கள்).

டாடா பிரஸ்ஸுக்கு தொல்பொருள் துறைக்காக அச்சிட்ட புத்தகங்களுக்கான தொகை வரவேண்டியிருந்தது. ஐஏஎஸ் அதிகாரியான ஐராவதம் மகாதேவனின் உழைப்பிலும் ஆர்வத்திலும் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிந்து வெளி நாகரிகம் குறித்த புத்தகத்திற்கான நிலுவைத் தொகைதான் அது. (தொடரில் சங்கர் மனோகரனாக பெயர் மாற்றம் பெற்றிருந்த கதாபாத்திரம்). நிலுவைத் தொகையைப் பெறுவதற்காக அப்போதைய ஐராவதம் மகாதேவனைச் சந்திக்கிறார் அனில். தொழில்துறையில் இந்தியா புதிய வாய்ப்புகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவிருக்கிறது என்கிற தகவலை அனிலிடம் ஐராவதம் மகாதேவன் சொல்கிறார். தங்கத்திற்கு அடுத்து அதிகமும் கள்ள மார்கெட்டில் விற்கப்படுவது கைக்கடிகாரங்கள்தான் என்கிற தகவல் அனிலுக்கு ஆச்சரியம் தருகிறது. அவர்தான் ஜீயிடம் கைக்கடிகாரங்களைத் தயாரிக்கலாம் என்று சொல்கிறார். அந்த யோசனை ஜீக்குப் பிடித்துப் போகிறது.

மக்களின் நேரடிப் பயன்பாட்டுக்க்கான பொருட்களைத் தயாரிக்க அரசின் ஆதரவு இருக்கும் என்றதும் ஜேஆர்டி டாடாவுக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. பிறகே கைக்கடிகாரம் தயாரிக்கும் முடிவுக்குச் செல்கிறார்கள்.

சீரிஸ் நம்மை ஈர்ப்பது இங்குதான். ஒரு பொருள் ஏன் தயாரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்கிற காரணத்தை அடுத்தடுத்து சொல்லிக்கொண்டே போகிறார்கள். கைக்கடிகாரங்கள் மக்களுக்கு எந்தளவுக்குத் தேவைப்படுகிறது, அதன் டிமாண்ட் என்ன என்பதற்கு ஜீ மற்றும் ஆகாஷ் கள்ளச்சந்தைக்குச் செல்கிற காட்சிகள், ஜேஆர்டி டாடா, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த  ANDRE JAUBA வாட்ச் நிறுவனத்தின் தலைவர் எரிக்குடன் நடத்திய பேச்சுவார்த்தை அவமானத்தில் முடிந்தது, அவர் ஜீயை சந்தித்து இனி நமது சொந்தத் தயாரிப்பு வாட்ச்தான் கட்டுவேன் என தன்னுடைய கைக்கடிகாரத்தைக் கழற்றியது என சுவாரஸ்யமான சம்பவங்கள். இதில் எதுவுமே புத்தகத்தில் இல்லை; ANDRE JAUBA வாட்ச் நிறுவனமும் அதன் நிறுவனர் எரிக்குமே புனைவுதான்.

 ஒரு சிறு புள்ளியில் இருந்து எப்படி ஒரு பிரமாண்டம் உருவானது என்பதைத் தொடர் பல்வேறு கதைமாந்தர்களின் வழியாகச் சொல்கிறது. புத்தகம் முழுக்கவுமே திட்டமிடுதல்களும், புள்ளிவிவரங்களும், நிர்வாகம் குறித்தும் பேசுகிறது. அதை அப்படியே சொல்வதில் எந்த ஆர்வமும் இருக்கப்போவதில்லை, அது ஆவணமாக ஆகிவிடும் என்பதால், அடிப்படைத் தகவல்களைக் காட்சிகளாக மாற்றியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலையைத் தொடங்கவேண்டும் என்றால், வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறது அப்போதைய தமிழக அரசு. நிலம் கிடைத்தாகிவிட்டது. அடுத்ததாகப் பணியாளர்கள் வேண்டும் என்றதும் ஓசூர், திருவண்ணமாலை, சேலம், நாமக்கல் பகுதிகளில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவ மாணவிகளிடம பேசியிருக்கிறார்கள். அதில் ஆர்வமுள்ளவர்கள் நன்றாகப் படிக்கக்கூடியவர்களை அவர்கள் படிப்பு முடியும் முன்னரே ஒப்பந்தத்துக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். படிக்கும்போதே வேலைக்கான உத்தரவாதமும் கிடைத்ததில் பலரும் மகிழ்ச்சி கொண்டிருந்தனர். ஓசூரிலேயே தங்கியாக வேண்டும் என்பதால் மாணவ மாணவிகளின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். முதன்முதலாகக் குடும்பத்தை விட்டு விடுதியில் தங்கப்போகும் மாணாக்கர்களில் நான்கு பேருக்கு ஒருவர் என காப்பாளர்களையும் நியமித்திருக்கிறார்கள்.

வினய் காமத், தனது புத்தகத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். படிக்கும்போதே கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு மாணவி டைட்டனில் வேலை கிடைத்து ஓசூருக்கு வந்துவிடுகிறார். அவரைத் தேடி அடியாட்களுடன் கணவர் வீட்டைச் சேர்ந்தவர்கள் வந்துவிடுகிறார்கள். இப்போது அந்தப் பெண் அங்கே தங்கவேண்டுமா அல்லது கணவர் வீட்டாருடன் அவளை அனுப்ப வேண்டுமா என்கிற குழப்பம். வினய் காமத் சொல்கிறார், “அங்கு நடந்தது தமிழ் சினிமாவின் காட்சி போல இருந்திருக்கிறது. அந்தப் பெண் எல்லோர் முன்பும் தன் தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு, ‘இதை எடுத்துக் கொண்டு போங்க. நான் இங்கே வேலை செய்வேன்’ என்றிருக்கிறார்”. பலருடைய வாழ்வாதாரத்திற்கு டைட்டன் பலமாக இருந்திருக்கிறது. மிகச் சாதாரணமான வேலையில் சேர்ந்து நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் பற்றிய குறிப்பு புத்தகத்தில் அங்கங்கு வருகிறது.

ஒரு நிறுவனம் தங்களிடம் பணிக்கு வருபவர்களை பணியாளர்களாக மட்டும் பார்க்காமல், குடும்ப உறுப்பினர்கள் போல நடத்துவதைச் செய்திருக்கிறார்கள். அதனால்தான் டைட்டன் என்கிற கைக்கடிகாரம் உருவாகும்போது அது விரைவாகவே உணர்வுடன் கலந்து போகிற ஒன்றாக மாற்றமடைந்திருக்கிறது என்கிறார் வினய் காமத். இந்த நிறுவனம் – பணியாளர் உறவினை சில காட்சிகளில் தொடர் சொல்கிறது. ஜீயும் ஆகாஷும் எதையோ விவாதித்துக்கொண்டே வளாகத்துக்குள் நடந்து போகையில் ஓர் இளைஞன் அவர்களுக்கு இனிப்புத் தருவார். அவர் பெயர் சொல்லி என்ன விசேஷம் என்பார் ஜீ. அவருடைய திருமண வாழ்க்கை பற்றி விசாரிப்பார். தனக்குக் குழந்தை பிறந்திருப்பதை அந்த இளைஞன் சொல்ல, ஆகாஷும் ஜீயும் அவனை வாழ்த்துவார்கள். ஒரு கடைநிலை ஊழியனைப் பற்றியத் தகவல்களும் பெயரும்கூட, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதற்கான காட்சி அது.

TITAN என பெயர் வைத்ததை சீரிஸ் காட்டியதெல்லாம் திரைக்கதைக்கான அட்டகாசமான சுவாரஸ்யம். TATA INDUSTRIES AND TAMILNADU இதன் சுருக்கம் தான் TITAN என்று ஒற்றை வரியில் சொல்லிப் போகிறது புத்தகம்.

வாட்சுகளை முதன்முதலாகத் தயாரித்து அதைக்கொண்டு போய் ஜேஆர்டி டாடாவுக்குத் தர, அணிந்துகொண்ட சிறிது நேரத்திலேயே வாட்ச் நின்று போயிருக்கிறது. அவர் வாட்சினைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். ஒட்டுமொத்த டைட்டன் தொழில்நுட்பக் குழுவும் பரபரப்பாக, நீண்ட நாட்கள் சில உதிரி பாகங்களை ஸ்டாக் வைத்திருந்தால் பயன்படாமல் போகும் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தக் காட்சி திரைக்கதையில் மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. யார் முன்பாக தன்னுடைய நிறுவனம் தயாரித்த வாட்சோடு நின்று டாடா பெருமையோடு நிற்க வேண்டும் என்று நினைத்தாரோ அதே எரிக் முன்பாக வாட்ச் நின்று போன அவமானத்தையும் அவர் சந்தித்திருந்ததாகக் காட்டப்பட்டது. .

டைட்டன் விற்பனைக்கென தனி ஷோரூம்கள் திறக்கப்படவேண்டும் என ஜீ முடிவெடுத்தது குறித்து சீரிஸில் இடம்பெற்றிருக்கிறது. அதற்கு முன்பாகவே சில முயற்சிகளை நிறுவனம் தொடங்கியிருந்தது. கூர்க்கில் ஒரு பண்டிகைக் காலத்தில் டாடா டீ எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டை போனஸ் அறிவித்திருந்தது டாடா நிறுவனம். இதைப் பயன்படுத்தி அங்கு டைட்டனுக்கான கண்காட்சி நடத்தினால் பணப்புழக்கம் இருக்கும் சமயம் தொழிலாளர்கள் கடிகாரம் வாங்குவார்கள் என யோசித்திருக்கிறார்கள். அதன்படி கூர்க்கில் கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. அங்கு விற்ற கடிகாரங்களின் எண்ணிக்கை வெறும் பத்து. பணம் கைக்கு வந்ததும் கடன்கள் அடைப்பதையும், அதி அவசியமான பொருட்கள் வாங்கவும் செலவிட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. தொழிலாளர்கள் எஸ்டேட்டில் மணி அடிக்கப்படும் ஒலியை வைத்து மட்டுமே நேரத்தை கணக்கிடுகிறார்கள் என்பதும், அவர்களுக்கு கைக்கடிகாரம் அவசியமற்ற ஒன்று என்றும் தெரிய வர, மக்கள் கைக்கடிகாரம் வாங்க வேண்டும் என்றால் அதற்கான இடத்தையும் அவசியத்தையும் உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானித்து ஷோ ரூம் திட்டத்தினை வகுத்திருக்கிறார்கள்.

அதன்படி கோவையில் அதிகக் கூட்டம் வரும் அன்னபூர்ணா உணவகத்தின் அருகிலும், விசாகபட்டினத்தில் புண்ணியமூர்த்தி டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள்ளும் சிறிய இடம் வாங்கி வாட்சினை வைத்திருக்கிறார்கள். இப்படி ஓரிடத்தில் வைக்கப்பட்ட டைட்டன் வாட்சுகள் காணாமல் போய்விட அவர்களுக்கு ஆச்சரியம் என்னவென்றால் அங்கு இருந்த ஹெச்எம்டி வாட்சுகள் அப்படியே இருக்க, திருடன் டைட்டனை மட்டும் தூக்கிக் கொண்டு ஏன் போக வேண்டும் என்கிற ஆர்வம் எழுந்திருக்கிறது. திருடன் பிடிபட்டதும் அவனிடம் இந்தக் கேள்வியை முன்வைக்க, அவன் டைட்டன் தான் விலையுயர்ந்தது என்றும் அதனால் அதை விற்றால் அதிகப் பணம் கிடைக்கும் என்றிருக்கிறான்.

இதனை யோசித்து அடுத்தக் கட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள். ஆடம்பரமான, விலையுயர்ந்த என்பதுதான் பரவலான வாடிக்கையாளர்களைக் கொண்டு சேர்க்காமல் இருக்கிறது என்பதை உணர்ந்து ‘மனைவிக்கு எப்போதும் புடவை வாங்கித் தருகிறீர்கள்… கைக்கடிகாரம் பரிசளியுங்களேன்’ என்பது மாதிரியான விளம்பரங்களை நாளிதழ்களில் வெளியிட அது பெரும்பலனைத் தந்திருக்கிறது. எதற்கெல்லாம் பரிசு தரலாம் என்று டைட்டன் விளம்பரங்கள் சொல்லத் தொடங்கின. முதல் ரேங்க் வாங்குகையில், பதவி உயர்வு பெறுகையில், காதலன் காதலிக்கு, ஊழியர்களுக்கு என விதம்விதமாக ஐடியாக்களைச் சொல்ல, டைட்டன் வாட்சுகள் சிறந்த பரிசுப்பொருள் என்பதாக மக்கள் மனதில் பதியத் தொடங்கியிருக்கிறது. இவை இந்த சீரிஸில் வேறு பல காட்சிகள் மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதே போல மியான்மரில் டைட்டன் வாட்ச் காட்டுபவர்கள் அதிகமாகிறார்கள் என்பது தெரிந்ததும் ஒரு ஷோரூம்கூட இல்லாத அங்கு எப்படி எல்லோரும் நமது வாட்ச்சினைப் பயன்படுத்துகிறார்கள் என்று துப்புத் துலக்கியிருக்கிறார்கள். இந்திய எல்லைக்கு அருகில் இருப்பதால் இங்கிருந்து வாட்சுகள் கடத்தப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்ததும், மியான்மார், பூட்டான், நேபாளம் போன்ற இடங்களிலும் தெற்காசியாவிலும் தங்கள் கிளைகளை டைட்டன் தொடங்கியிருக்கிறது.

இந்த சீரிஸ் வெற்றியடைந்ததற்கு முக்கியமான காரணம் டைட்டன் என்கிற பிராண்ட் நம்மிடம் உருவாக்கியிருக்கிற நெருக்கம் எதனால் ஏற்பட்டது என்பதைச் சொல்லியிருப்பதுதான். டைட்டன் விளம்பரத்தில் இன்றளவும் இசைக்கப்படுகிற இசை நமக்கு முப்பது வருட வாழ்க்கையை நினைவுபடுத்தக்கூடியது. தொலைக்காட்சிகள் வீடுகள்தோறும் வாங்கப்பட்ட காலக்கட்டத்தில் விளம்பரங்கள் மூலமாக மக்களைச் சென்றடைய முடியும் என்று நிறுவனத்தார் நம்பினார்கள். அதற்கு முன்பாக நாளிதழ்களில் டைட்டன் விளம்பரங்கள் வெளிவரும்போது அதற்கு மாடல்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் டைட்டன் வாட்சுகள்தான் மாடல் ஆக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தனர் என வினய் காமத் எழுதியிருக்கிறார். ஏற்கெனவே டாடா பிரஸ்ஸில் கிடைத்த அனுபவத்தினை வைத்து அச்சு இதழில் ஒரு விளம்பரம் எப்படி வந்தால், வசீகரிக்கும் என்பதை ஜீ தெரிந்து வைத்திருந்தார் என்கிறார் வினய். அதில் அவர் காட்டிய அக்கறை சாதாரணமானதல்ல. கூடவே அச்சுக்கூடத்துக்கும், நாளிதழ் வடிவமைக்கும் இடத்துக்கும் சென்று அமர்ந்து கொள்வாராம். நேரில் பார்ப்பது போல இருக்க வேண்டும், அதை அப்படியே எடுத்து கையில் கட்டிக்கொள்ளவேண்டும் என பார்ப்பவர்களுக்குத் தோன்ற வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதன் பலனாக விளம்பரம் வந்த நாளிதழை எடுத்துக் கொண்டு ஷோரூம் வந்தவர்கள் இதே டிசைன்தான் வேண்டும் எனக் கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அதன் பின்னரே தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு வந்திருக்கிறார்கள். சீரிஸில் நிர்வாகக்குழு பல இசைக்கோவைகளைக் கேட்டு அதில் மூளை சூடாகி அதைத் தணிக்க மொசார்ட்டின் இசைக்கச்சேரிக்கு போனதாகவும், அங்கு கேட்ட இசைத்துணுக்கைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் வருகிறது.

ஆனால், வினய் காமத் எழுதியது வேறாக இருக்கிறது. கேட்பரீஸ் டயரி மில்க் விளம்பரங்களையும், ‘Mile suru mera thumhara’ என்கிற, நாம் அடிக்கடி தூர்தர்ஷனில்  பார்த்து வியந்த பாடலை படமாக்கிய சுரேஷ் மல்லிக்கும் ஜீயும் பலவிதமான இசைப்பாடல்களைக் கேட்டு ஒன்றும் பிடிக்காமல் போய் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் சுரேஷுக்கு AMADEUS படம் பார்க்கக் கிடைத்திருக்கிறது. மொசார்ட்டின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிற இந்தப் படத்தில் கேட்ட மொசார்ட்டின் 25ஆவது சிம்பனி அவருக்குள் ஒரு பொறியைத் தர, அந்த சி.டியை எடுத்துக் கொண்டு ஜீயிடம் சென்றிருக்கிறார். மொத்த நிர்வாகக்குழுவும் அமர்ந்து இந்த இசையைக் கேட்க எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அப்போதிலிருந்து அது டைட்டன் இசையாகியிருக்கிறது.

இப்படி, புத்தகம் எந்தவொரு சிறு தகவலையும் விடாமல் சொல்லிக்கொண்டே போகிறது. டைட்டன் எனும் பிராண்ட் உருவாக்கத்தின் பின்னணியில் இருக்கும் ஒருவரைக்கூட விடாமல் வினய் காமத் சொல்லியிருக்கிறார். இவர்களுக்கெல்லாம் மூளையாக இருந்து செயல்பட்ட ஜர்க்ஜீஸ் தேசாயை மையமிட்டு சீரிஸ் இருந்ததால் புத்தகத்தில் இருப்பது விடுபட்டு போயிருக்கிறது.

இந்தியாவில் டைட்டன் காலூன்றி, எதிர்பார்த்ததைவிட இலாபம் ஈட்டிய பிறகு ஜீக்கு ஐரோப்பாவில் தடம் பதிக்க வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது. இது குறித்து தொடர் பேசியிருந்தாலும்கூட, எதனால் ஐரோப்பாவில் டைட்டனால் தடம் பதிக்க முடியவில்லை என்பதை அத்தனை விளக்கமாக சொல்லவில்லை. கதைக்கு தேவைப்படவும் இல்லை. அதைச் சொல்லியிருந்தால் ஆவணப்படமாக மாறியிருக்கும். ஆனால் புத்தகத்தைப் படிக்கிறபோது தொழில்முனைவோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. டாடா போன்ற நம்பகமான நிறுவனம் ஐரோப்பாவில் எப்படி பின்வாங்கியது என்பதற்கான காரணங்கள் விலாவரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வருடாவருடம் நடைபெறும் கடிகாரங்களுக்கான கண்காட்சியில் ஐரோப்பா தவிர மற்ற நாடுகளின் வாட்ச் பிராண்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இது தான் டைட்டன் ஐரோப்பாவில் சந்தையை உருவாக்க வேண்டும் என்று ஜீ முடிவெடுக்க காரணமாக அமைந்திருந்தது.

தொடக்கத்தில் தனியாக ஷோரூம் தொடங்கியபோது பெரிய பிரேஸ்லெட் வகை வாட்ச்கள், டயல் பெரிதாக இருப்பதெல்லாம் ஐரோப்பியர்கள் விரும்பியிருக்கவில்லை. இந்திய மணிக்கட்டும், ஐரோப்பியர்களின் மணிக்கட்டுக்குமே வித்தியாசம் இருந்ததை புரிந்து கொண்டார்கள். ஐரோப்பிய டிசைனர்களைக் கொண்டு வாட்சுகள் வடிவமைக்கப்பட்டு, அதனை இந்தியாவில் தயாரித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என்பது ஜியின் திட்டம். இதற்கு நிறுவனத்திடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரபலமான வாட்ச் வடிவமைப்பாளர் ஜெரால்ட் ஜென்டாவினை ஜீ தொடர்பு கொண்டார். 90களிலேயே இவர் வடிவமைத்த வாட்ச் ஒன்று 8 கோடிக்கு விலை போகும். தன்னுடைய வாடிக்கையாளரை இவர் தேர்ந்தெடுத்தார். இவரை ஜீ சந்தித்து தங்களுக்கு வடிவமைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதுதான் நிறுவனத்துக்கும் ஜீக்கும் பிரச்னையானது. யார் சொல்லியும் கேட்காமல் ஜீ மேற்கொண்ட இந்தச் செயல்களால் அனில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அனில் டாடா நிறுவனத்தையும் தன்னையும் விட்டுச் செல்ல முடியும் என்பதை ஜீ நினைத்துப் பார்க்கவேயில்லை. இதை சீரிஸ் மிக உணர்ச்சிப்பூர்வமாகக் காட்டியிருந்தது.

இன்னொருபுறம் சுவிஸ் வாட்ச் நிறுவனங்கள் ஒன்றுகூடி ஐரோப்பாவில் வெளி தேசத்தவர் தடம்பதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள் அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்தார்கள். ஏனெனில் 1970களில் சுவிஸ் நிறுவனங்கள் மெக்கானிகல் வாட்சுகளை வைத்துக் கொண்டிருந்தபோது ஒரு ஜப்பான் நிறுவனம் க்வார்ட்ஸ் தொழில்நுட்பத்துடன் ஐரோப்பாவிற்குள் வந்தது. விலையும் குறைவு, தரம் மிகத் துல்லியம் என்கிற பெயரை அது பெற, பல சுவிஸ் நிறுவனங்கள் தங்கள் கடைகளை மூட வேண்டியதானது. மிகவும் போராடி ஜப்பான் நிறுவனத்தை வெளியேற்றிவிட்டு மீண்டும் சந்தையைப் பிடிக்க சுவிஸ் நிறுவனங்கள் போராட வேண்டியிருந்தது. அந்தக் கசப்பான அனுபவம் இந்தியா மூலமாக மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதில் ஐரோப்பிய நிறுவனங்கள் கவனம் கொண்டிருந்தன. இந்த ஒட்டுமொத்த வரலாற்றையும் தொடரின் ஒரு காட்சி நமக்கு விளக்கியிருக்கும். விமானத்தில் ஜேஆர்டி டாடாவை சந்திக்கும் ANDRE JAUBA வாட்ச் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஜப்பான் ஐரோப்பிய சந்தையைக் கைப்பற்றியதைப் போல இந்தியாவை விடமாட்டோம். நீங்கள் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டீர்கள் என்பார்.

சீரிஸில் ஐரோப்பியர்களுக்கு ஏற்றவாறு உலகின் மெல்லிய வாட்சினை டைட்டன் நிறுவனம் வடிவமைத்ததோடு நின்றுவிடுகிறது. யதார்த்தத்தில், ஐரோப்பாவில் டைட்டனால் காலூன்ற முடியவில்லை. அங்கு டைட்டன் பிரபலமான அளவுக்கு இலாபம் ஈட்டித் தரவில்லை. இதற்குள் ஜீயும் பணி ஒய்வு பெற்றார். ஐரோப்பாவில் ஏற்பட்ட நஷ்டத்தினை இந்தியாவில் மீட்டெடுத்தனர். 2000ஆவது ஆண்டில் 27வந்த மாநிலமாக உத்தரகான்ட் உருவானபோது அரசு டைட்டனுக்கான தொழிற்சாலையை நிறுவ அனுமதி தந்தது. தமிழ்நாட்டில் டைட்டன் தொடங்கியபோது இருந்த அதே ரீதியில் மலைப்பகுதியில் இருந்த பெண்களுக்கு பிரத்யேகப் பயிற்சி அளித்து தொழிற்சாலையைத் தொடங்கினார்கள். இதனால் இந்தப் பகுதிகளில் வாட்ச் விற்பனை பரவி, நஷ்டம் ஈடு செய்யப்பட்டது.

அதன் பின்னர் புத்தகம் அமெரிக்க நிறுவனமான டைமக்ஸுடன் டைட்டன் இணைந்த கதையை விவரிக்கிறது.

உண்மைக்கு புறம்பாக எடுக்கப்பட்ட சீரீஸ் என்று இதுவரையாரும் சொல்லவில்லை. மாறாக, புனைவுக்காக சிலவற்றை விலக்கி, சேர்த்து டைட்டன் உருவாக காரணமாக இருந்த ஆளுமைகளுக்கு சிறப்பு செய்ததாகவே இந்த சீரிஸ் எடுக்கப்பட்டிருக்கிறது.

தொடரின் தொடக்கத்தில் ‘இது தான் நமக்கு கடைசி வாய்ப்பு… இனிமேல் எல்லாம் முடிந்தது’ என்கிற ஜீயின் குரலோடு தொடங்குகிறது. அதன் பின்னர்தான் கதை முதலில் இருந்து ஆரம்பிக்கிறது. இவ்வளவு வேகமாக வளரும் ஒரு நிறுவனம் எதனால் நஷ்டத்தைச் சந்திக்க முடியும் என்கிற கேள்வியை எழுப்பிவிட்டு அதற்கு  பதிலும் தந்திருக்கிறது சீரிஸ். யதார்த்தத்தில் ஐரோப்பாவில் டைட்டன் இலாபம் தரவில்லை என்றாலும், world slimmest watch என்பதை அறிமுகம் செய்தது அதன் சாதனைதான். அதையே காட்டி சுபமாக சீரிஸ் முடிந்திருக்கிறது.

அசலான புகைப்படங்கள், வீடியோக்களை அங்கங்கே காட்டியது, அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறு இந்திப் பாடல்களைப் பின்னணியில் ஒலிக்கவிட்டது, இப்படித்தான் நடந்திருக்க முடியும் என நம்மை நம்ப வைக்க உண்மையையும் கற்பனையும் சரிவிகிதமாகக் கலந்தது என மிக நேர்த்தியான திரைக்கதையமைப்பு. சற்று சறுக்கியிருந்தாலும் ஆவணப்படமாக மாறிவிடுகிற சூழல் கொண்ட தொடர். அதற்குள் காதல், தோல்வி, சந்தோஷங்கள், பிசினஸ் ஐடியாக்கள், உத்வேகம் கொடுக்கும் நிகழ்வுகள் எனச் சேர்த்திருப்பதால், எங்குமே அலுப்புத் தட்டாமல் சொல்லப்போனால் ஒரே மூச்சில் பார்த்து விட வேண்டும் என்கிற எண்ணத்தையும் இந்தத் தொடர் ஏற்படுத்தியிருக்கிறது. இராஜீவ் காந்தி, நரசிம்மராவ் என அரசியல் தலைமைகளின் பங்கு தொழில்துறைக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. ஆனால், அது குறித்து புத்தகம் பேசிய அளவுக்கு சீரிஸ் அந்தப் பக்கம் திரும்பவேயில்லை. ஜீ மற்றும் அவரது குழுவிற்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்கிற பார்வையில் தன்னை முழுவதுமாக சீரிஸ் நிலைகொண்டுவிட்டது. அது ஒரு புனைவுக்கு அவசியமானதும்கூட. எதைச் சொல்ல வேண்டும் என்பதைவிட எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் கச்சிதமாக நேர்க்கோட்டில் கதையை நம்மால் தொடர முடிந்திருக்கிறது.

இந்தத் தொடர் பார்த்து முடித்ததும் ஒருமுறையேனும் டைட்டன் வாட்ச் வாங்க வேண்டும் என்று தோன்றியிருக்கும். இந்திய வர்த்தகத்தால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை என்றும் நினைத்திருக்க வைத்திருந்தால், அதுதான் இந்தத் தொடர் ஏற்படுத்திய வெற்றி.

Author Image

ஜா.தீபா

எழுத்தாளர். ‘மேதைகளின் குரல்கள்’ ‘கறுப்புத் திரை’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களையும், “நீலம் பூக்கும் திருமடம்’, ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும் கவனம் பெற்றவை. தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026
காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

July 2, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?