The Talkie
Saturday, August 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள்

ஸ்டார்ட் கேமரா 09 – அசோக் குமார்

The Talkie by The Talkie
August 1, 2026
in தொடர்கள், ஸ்டார்ட் கேமரா
A A
0
ஸ்டார்ட் கேமரா 09 – அசோக் குமார்
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon அகிலா ஸ்ரீதர்

முள்ளும் மலரும் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளம். இயக்குனர் மகேந்திரனின் வருகையை அறிவித்த திரைப்படம் அது. ஒளிப்பதிவு பாலு மகேந்திரா. இந்தக் கூட்டணி ஒரே படத்தில் பிரிந்து விட்டது.  மகேந்திரன் தன அடுத்த படத்துக்கான கேமராமேனைத் தேடினார். அவரது முதல் படத்தில் பாலு மகேந்திரா நிகழ்த்திய ஒளியின் மேஜிக்கை நிகழ்த்தக் கூடிய மற்றொரு திறமைசாலியைத் தேடிய மகேந்திரனுக்கு கிடைத்த கேமரா கலைஞன்தான் அசோக்குமார்.

உதிரிப்பூக்கள் ரிலீஸானபோது  ஒளிப்பதிவாளர் அசோக்குமாரை பாராட்டி  ஒரு பத்திரிகை இப்படி எழுதியது. “ஒளிப்பதிவாளர் அசோக்குமார். தமிழ்நாட்டுக்குக் கிடைத்த  உத்திரப் பிரதேசத்து லாட்டரி“ (அசோக்குமார் உத்திரப்பிரதேசத்தை சார்ந்தவர்).

1970களில் மிகை உணர்ச்சி காட்சிகளோடு இருந்த தமிழ் சினிமாவை யதார்த்த பாணி படங்களுக்குத் திசை  திருப்பியவர்களில் முக்கியமானவர் இயக்குநர் மகேந்திரன்.. இலக்கிய வாசிப்பும், உலக சினிமாக்களைப் பார்த்த அனுபவமும் கொண்ட மகேந்திரன் தமிழ் சினிமாவில் தனது படங்கள் யதார்த்த பாணியில்தான் அமைய வேண்டுமென்பதில் உறுதியாக நின்றார்.  சிறுகதையோ, நாவலோ எதுவாக இருந்தாலும் அந்தக் கதையை திரைக்கதையாக்கும் நுட்பத்தில்தான் படத்தின் வெற்றி இருக்கிறதென்று நம்பினார். 

உதிரிப்பூக்கள் வெளியாகி 47 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, ஆனால் இன்று வரை தமிழின் நல்ல சினிமாக்களைப் பட்டியல் போடுபவர்கள்  குறிப்பிடும் பெயர்களில் “உதிரிப்பூக்கள்” உண்டு. 

அந்தப் படத்தின் முதல் காட்சியில் சரத்பாபுவும், அவர் மனைவியும் ரயிலில் வந்து இறங்கி ஒரு ஜீப்பில் ஊருக்குள் செல்வார்கள், ஜீப் குலுங்குவதையும்,  அதனால் உள்ளேயிருக்கும் அவர்களிடம் ஏற்படுகிற அசைவையும் இயல்பாக காண்பித்திருப்பார்கள். செல்லும் வழியெங்கும் கேமராவும் நகர்ந்து கொண்டே அந்தக் கிராமத்தின் அழகையும் காண்பித்துக் கொண்டே செல்லும். 

“நான் பாட வருவாய்” என்கிற பாடலை மதுமாலினி ஆற்றங்கறையில் அமர்ந்து பாட, ஆற்றின் நீரோட்டத்தையும், அதற்குள் பிரதிபலிக்கும் சூரிய வெளிச்சத்தையும் காண்பிக்கும் கேமரா இறுதியில் இசைக்கேற்ப அசைந்தாடும் அப்பெண்ணின் ஜிமிக்கியையும், மூக்குத்தியையும், ஜடைபில்லையையும் அழகாகக் காண்பிக்கும். விஜயனுக்கு பயந்து நடுங்கும் அஸ்வினியின் முகத்திற்கு  படம் முழுவதுமே லோ கீ லைட்டிங் வைக்கப்பட்டிருக்கும். 

சிறுவன் காஜா ஷெரீஃப் ஓடி வந்து தன் அம்மாவின் கையில் பூவைக் கொடுத்து விட்டு “சாயங்காலம் சினிமா போகலாம்னு அப்பா சொன்னாரு”  என்று சொல்வான். அன்பே இல்லாத கொடுமைக்காரக் கணவன் சினிமாவுக்கு கூட்டிப் போகிறானா? என்கிற வியப்புடன் அஸ்வினி வெளியில் வந்து நிமிர்ந்து வானைப் பார்ப்பார்.  மழை மேகங்கள் மேலே திரண்டிருக்கும்.. நம்ப முடியாதவை நடக்கும்போது “இன்னிக்கு மழை வரப் போகுது” என்று சொல்வது நம் ஊர்களில் வழக்கம்.. இந்த வழக்கத்தை அழகாக காட்சி மொழியில் சொல்லியிருப்பார் மகேந்திரன். அசோக்குமாரின் கேமரா அதனை அழகாக வடித்திருக்கும். 

உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் தாய், தந்தை இருவரையும் இழந்த  அந்தக் குழந்தைகள்  ஆற்றங்கரையோரம் நடந்து செல்வார்கள்.. திரையில் உதிரிப்பூக்கள் என்கிற எழுத்துக்கள் தோன்றும்…தமிழ் சினிமா அது வரை கண்டிராத காவியத்தன்மை கொண்ட ஷாட் அது.  

மிகக் குறைந்த வசனங்களுடன், படத்தினை அழகிய காட்சிகளால் கோர்த்து, உணர்வுப்பூர்வமாக படம் பிடித்த மகேந்திரனின் எண்ணங்களை அப்படியே  ஒளிப்பதிவில் கொண்டு வந்தார் அசோக்குமார். 

“அழகிய கண்ணே, உறவுகள் நீயே” பாடலில் அஸ்வினியும், இரு குழந்தைகளும் இடம் பெறும் மான்டேஜ் காட்சிகள் திரையில் எழுதப்பட்ட கவிதைகளாய் இன்றும் திகழ்கின்றன.

தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த செயற்கை விளக்குகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து படம் முழுவதும் இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்தினார். ஆற்றின் கரையில் நடக்கும் இறுதிக்காட்சியில் மங்கலான வெளிச்சத்தைப் பயன்படுத்தி, கதாபாத்திரங்களின் முகத்தில் விழும் இயற்கையான நிழல்களின் வழியே அவர்களின் உள்ளார்ந்த கோபத்தையும் சோகத்தையும் குளோசப் காட்சிகளில் மிக இயல்பாக வெளிப்படுத்தினார்.

அலகாபாத்தில் ஒரு கவிஞரின் மகனாகப் பிறந்த அசோக்குமார் அலகாபாத் பல்கலைகழகத்தில் புகைப்படமெடுக்கும் துறையில் டிப்ளமோ பெற்றார். சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்று, உலகத் திரைப்படங்களின் காட்சி மொழியைத் தென்னிந்திய சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் இவர். அசோக்குமாரின் கேமரா நுணுக்கங்களை வெறும் ஒளியமைப்பு என்று சுருக்கிவிட முடியாது; அவை ஒவ்வொன்றும் தொழில்நுட்ப ரீதியாக மிக நுணுக்கமானவை:

மகேந்திரனுடன் இணைவதற்கு முன்பே அசோக்குமார் மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தார். அவருடைய ஒளிப்பதிவில் வெளிவந்த முதல் திரைப்படம் ஜென்மபூமி. ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் அவருக்கு ஆசிரியராக இருந்த ஜான் சங்கரமங்கலம் இயக்கிய படம். தனது அறிமுக மலையாளப் படத்திலேயே ஆவணப்படப் பாணியிலான யதார்த்தத்தைக் கொண்டு வந்தார். கறுப்பு-வெள்ளைப் படமான இதில், கேமராவின் எக்ஸ்போஷரை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்தி, கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களுக்கு இடைப்பட்ட சாம்பல் நிற நிழலாட்டங்களின் வழியே கதாபாத்திரங்களின் துயரத்தைப் பதிவு செய்தார். இதற்காகத் தனது முதல் படத்திலேயே கேரளா மாநில அரசின் விருதைப் பெற்றார்.

புகழ்பெற்ற மலையாள இயக்குநர் ஃபாசில் இயக்கிய முதல் திரைப்படம். “மஞ்சில் விரிஞ்ச பூக்கள்”. .பெரும் வெற்றி பெற்ற அந்தத் திரைப்படத்தின் ஆடிஷனுக்கு வந்திருந்த மோகன்லாலை, அங்கு நடிகர்களைத் தேர்வு செய்ய வந்திருந்தவர்கள் நிராகரிக்க, படத்தின் இயக்குநரான ஃபாசில் அவரைத் தேர்வு செய்தார். இயக்குநர் ஃபாசில், மோகன்லால், இசையமைப்பாளர் ஜெர்ரி அமல்தேவ் என மூவருக்கும் அது தான் அறிமுகத் திரைப்படம்.  புது முகங்கள் அறிமுகமாகும் படத்துக்கு புது கேமரா தான் வேண்டும் என்று எண்ணிய நவோதயா ஃபிலிம்சின் அப்பச்சன் ஜெர்மனியிலிருந்து Amiflex 35 IIC கேமராவை வாங்கி வந்து அசோக்குமாரிடம் கொடுத்தார். 

ஃபாசில் திரைத்துறைக்குள் நுழைந்தபோது பாலு மகேந்திரா, மார்க்கஸ் பார்ட்லே, வின்சென்ட் ஆகிய மூவரும் அவரை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தனர். ஆனால் அசோக்குமாருடன் பணியாற்றத் தொடங்கிய பிறகு, இந்த மூவருக்கும் ஈடான பொருத்தமான நபர் அசோக்குமார் என்பதை உணர்ந்து கொண்டார். மலையாளத் திரைத்துறைக்கு ‘பாக்சர்’ வகை ஆடையை அறிமுகப்படுத்திய முதல் திரைப்படப் பிரபலம் அசோக்தான் என்று ஃபாசில் வேடிக்கையாகக் கூறுவார்.

‘என்டே மாமாட்டி குட்டியம்மைக்கு’ ( தமிழில் `என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’) மற்றும் ‘நோக்கெத்ததூரத்து கண்ணும் நட்டு’ (தமிழில் ‘ பூவே பூச்சூடவா‘) ஆகிய ஃபாசிலின் இரண்டு படங்களிலும் அசோக்குமார் தான் ஒளிப்பதிவாளர். பேக்லைட் மற்றும் சில கேமரா நுட்பங்களை அகோக்குமாரிடமிருந்து கற்றதாக ஃபாசில் கூறியிருக்கிறார். 

 

‘நோக்கெத்ததூரத்து கண்ணும் நட்டு’ படத்தில் வருகிற ஒரு மருத்துவமனைக் காட்சியைப் படமாக்குவதற்காக ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு, படப்பிடிப்பிற்காக ஒரு உண்மையான வார்டை முன்பதிவு செய்திருந்தார்கள்.. ஆனால் அந்த வார்டு அறை மிகவும் சிறியது என்பதோடு வெறும் நான்கு நிலையான விளக்குகள் மட்டுமே அங்கு இருந்தன. ஒளியமைப்பில் எந்த மாற்றமும் செய்வதற்குப் போதிய இடம் இல்லை, திரைக்கதை அமைக்கும் போது தன் மனதிலிருந்த சரியான காட்சியமைப்பை எப்படி உருவாக்குவது என்று ஃபாசில் குழம்பித் தவித்தபோது,, ஒளியமைப்பில்  தான் பார்த்துக்கொள்வதாகக்  கூறிய அசோக்குமார்  மிகச் சிறப்பாக பாசிலின் மனதில் இருந்தபடியே அந்தக் காட்சிகளை எடுத்துக் கொடுத்தார்.. 

மும்பையில் தான் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே ஓர் இளம்பெண் டிராக் சூட் அணிந்து மகிழ்ச்சியோடு ஜாகிங் போய்க் கொன்டிருந்ததைப் பார்த்த மகேந்திரன் “இவள் திருமணமானவுடன் இன்னும் தன் வாழ்க்கையில் எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்குமோ” என்று சிந்தித்தவர் அதையே கதையாக எழுதி இயக்கிய படம் “நெஞ்சத்தைக் கிள்ளாதே”.

1980-ல் வெளிவந்த இந்தப் படத்தைச் சொன்னவுடனேயே “பருவமே.. புதிய பாடல் பாடு” என்கிற பாடலும், சுஹாசினியும் மோகனும் டிராக் சூட்டில் அதிகாலைப் பனியின் பின்னணியில் ஓடும் காட்சியும் உங்களுக்கு நினைவில் வந்து விடும்.. 

பெங்களூர் குளிரில் அனைவரும் உறங்கும் அதிகாலை 4:30 மணி. இன்னும் சூரியன் அடிவானத்தில் எட்டிப்பார்க்கவில்லை. பக்கத்திலிருப்பவரின் முகம் கூட சரியாகத் தெரியாத அளவுக்கு எங்கும் பனிமூட்டம் படர்ந்திருக்க, அந்தச் சில நிமிடங்களுக்கு மட்டுமே நிலைக்கும் மங்கலான நீல நிற ஒளியில் (Blue hour) ஓர் இளம்பெண் துள்ளலோடு ஓடிக்கொண்டிருக்கிறார். காற்றில் மிதக்கும் பனித்துளிகளுக்கு இடையே சூரியனின் மெல்லிய கதிர்கள் ஊடுருவி வருவதை, அசோக்குமார் தனது கேமராவை அந்தப் பெண்ணின் ஓட்டத்திற்கு இணையாக நகர்த்தி,  அதே சமயம் அந்த உருவத்தைச் சுற்றிலும் ஒரு ஒளிவட்டம் போன்ற அழகைத் தர பேக்லைட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்.

அந்த நேரத்தின் பனிமூட்டத்தில் ஒளிப்பதிவு செய்தால் சரியாக வருமா  என்கிற தயக்கம் மகேந்திரனுக்குள் எழ, “சரியாக வரும்.. நான் முயற்சிக்கிறேன்”’ என்றிருக்கிறார் அசோக்குமார். அவற்றைப் பிரிண்ட் போட்டுப் பார்த்த போது அற்புதமான காட்சிகளாக அவை பதிவாகியிருந்தன. தன்னுடைய திறமையின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த அகோக்குமார் புதுமையான முயற்சிகளைப் பரிசோதனையாக எடுத்துப் பார்க்கத் தயங்கியதேயில்லை. 

அந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்காக இந்தியத் திரைத்துறையின் தேசிய விருதைப் பெற்றார்  அசோக்குமார். 

ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த ‘ஜானி” திரைப்படத்தில், ‘லோ-கீ லைட்டிங்’ உத்தியைப் பயன்படுத்தி, ஒரு ரஜினியை ஸ்டைலான த்ரில்லர் நாயகனாகவும், மற்றொருவரைத் தனிமை கலந்த மென்மையான காதலனாகவும் காட்சிப்படுத்தினார்.  ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக வரும் ரஜினியின் வளைந்து கீழிறங்கும் மீசையையும், கண்னாடியையும் குளோசப்பில் காண்பித்து இருவருக்குமான வித்தியாசத்தை ரசிகர்களுக்கு உணர்த்தியிருப்பார். 

ஶ்ரீதேவியின் அறிமுக காட்சியில் பேக்லைட் வைத்து அவரின் முகம் இருட்டில் இருக்க தலைமுடியில் மட்டும் வெளிச்சம் இருக்கும்.

“என் வானிலே” பாடலின் நடுவில் ஒரு புல்வெளியில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஶ்ரீதேவி பியானோ வாசித்துக் கொண்டிருக்க, ரஜினி முன்னால் நின்று அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் பின்னணியில் சூரிய வெளிச்சம் பரவி ஆரஞ்சு நிறத்தில் நிற்க, அவர்களுக்கு நடுவில் சூரியனைக் காண்பித்திருப்பார். அவருடைய பிரத்யேகமான ஒரு ஷாட்டை கனவுக் காட்சியாக வைத்திருப்பார்.  ஶ்ரீதேவி சிதார் வாசிக்கும்போது,  ரஜினியின் நினைவில் வரும் சிதார் வாசிக்கும் அவன் அம்மாவும், ரஜினியும், அம்மாவின் அழுகின்ற முகமும், வாசிக்கும் விரல்களும்   நிழலுருவங்களாகத் தெரிவார்கள். மிக அழகான சிறிய ஃப்ளாஷ்பேக் காட்சி.  ஸ்ரீதேவி பாடும் “காற்றில் எந்தன் கீதம்” பாடல் காட்சியில், ஒளியின் பிரதிபலிப்பை மென்மையாகக் கையாண்டு, அவருடைய முகத்தில் இருக்கும் தனிமையை ஒரு காவியமாக மாற்றினார்.

இரண்டு வேடங்களில் நடிக்கும் ரஜினி ஒருவரை ஒருவர் சந்திக்கும் காட்சியில் ஒரு ரஜினி தீப்பெட்டியைத் தூக்கிப் போட அதனை இன்னொரு ரஜினி பிடிக்கும் சிக்கலான ஷாட்டை வெகு நேர்த்தியாக படமாக்கியிருப்பார்.

ஜானி  திரைப்படத்தில் ரஜினியை ஸ்டைலாக காண்பித்த அசோக்குமார் அவர் நடித்த “காளி” திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கேற்ப ஆக்ரோஷமான ரஜினியைக் காண்பித்திருப்பார். கிளப் சாங் பாடல் காட்சிகள் வருமிடங்களில் சிவப்பு வண்ணத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருப்பார். ரஜினியின் கோபத்தைக் காட்டும் விதத்தில் படம் முழுவதிலுமே அதிகமாக சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களைப் பயன்படுத்தியிருப்பார். 

தனது திரைப்படங்களைப் பிரம்மாண்டமாகவும், பாடல் காட்சிகளைத் தனிக்கவனத்துடனும், வித்தியாசமான முறையிலும் உருவாக்குகிற இயக்குநர் சங்கர், தனது அடுத்த படத்துக்கும் ஒளிப்பதிவாளர் ஜீவாவைத் தான் அழைப்பார் என்றிருந்த வேளையில், தனது ஜீன்ஸ் படத்திற்கு சந்தோஷ் சிவனை ஒளிப்பதிவாளராக நியமித்து அறிவிப்பு செய்தார். ஆனால் பின்னர் அவரும் மாற்றப்பட்டு அசோக்குமார் ஒளிப்பதிவாளராக வந்தார். 

அமெரிக்காவின் பல பகுதிகளிலும், பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலுக்கு எகிப்து, சீனா, பாரிஸ் என பல உலக நாடுகளிலும் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஆச்சர்யப்படும் விதத்தில், கொலம்பஸ் பாடல் மகாபலிபுரத்தில் செட் போட்டு எடுத்து அது அமெரிக்க கடற்கரை என்று நம்மை நம்ப வைத்ததில் அசோக்குமார் மற்றும் கலை இயக்குநரின் பங்களிப்பு அபாரமானது. 

பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், ‘மோஷன் கண்ட்ரோல் கேமரா’ உத்தியைப் பயன்படுத்தி, இரு பிரசாந்த்களும் ஒரே ஃபிரேமில் தோன்றும் காட்சிகளில், லைட்டிங் கான்டினியூட்டி சற்றும் மாறாமல்  அவர்கள் உண்மையாகவே அருகருகே நிற்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கினார். 

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் பாடலில் ஒவ்வொரு உலக அதிசயத்தின் பிரம்மாண்டத்தையும் ஐஸ்வர்யா ராயின் அழகையும் ‘ஏரியல் மற்றும் கிரேன் ஷாட்கள்  மூலம் ஒரே ஃபிரேமில் நிறுத்திய அசோக்குமாரின் லென்ஸ் கணக்கீடுகள் உலகத் தரம் வாய்ந்தவை. பல்வேறு நிலப்பரப்புகளையும் ஒருசேர திரையில் காண்பித்த அந்தப் பாடல் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற வணிகத் திரைப்படங்களிலும் கூட, பாக்யராஜின் முத்திரையான நகைச்சுவை உடல்மொழியைத் lதுல்லியமாகப் படம் பிடிக்கப் பிரத்யேக ஃபிரேமிங் உத்திகளைக் கையாண்டார். கதாபாத்திரங்களின் முகத்தில் ஒளியின் பிரதிபலிப்பு விழாதவாறு சாஃப்ட் லைட்டிங் செய்து, காதலுக்கும் நகைச்சுவைக்கும் தேவையான ஒரு மென்மையான உணர்வைத் தந்தார்.

1984 ஆம் ஆண்டில் ஓணம் பண்டிகையின் போது மகாபலியோடு ஒரு குட்டிச் சாத்தானையும் கேரளா வரவேற்றது.

தன்னுடைய 70MM திரைப்படமான ‘படயோட்டம்’ தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நவோதயா ஃபிலிம்ஸ் அப்பச்சனின் மகனான இயக்குனர் ஜிஜோ புன்னூஸ் ஒரு புதிய முயற்சியில் இறங்கினார். ஜாஸ் படத்தின் மூலம்  3D தொழில்நுடபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஜிஜோ அதற்கான முயற்சிகளில் இறங்கினார். இந்த தொழில் நுட்பத்தைப் புரிந்து கொள்ள அவர் பர்பாங்க், கலிபோர்னியாவுக்குப் பல முறை பயணம் செய்தார். 

ஸ்டீரியோவிஷன் எனப்படும் புதிய 3D தொழில்நுட்பத்தில் இரண்டு தனித்தனி கேமராக்களிலிருந்து படங்களை ஒன்றிணைத்து 3D விளைவை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒரே கேமராவில் பொருத்தக்கூடிய 3D லென்ஸ்களை ஸ்டீரியோவிஷனின் கிறிஸ் கான்டன் கண்டுபிடித்தார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருடன் ஸ்டீரியோகிராஃபராகப் பணியாற்ற டேவி ஷ்மியர் வந்தார்.

அதிகப்படியான லைட்ஸ், பிரகாசமான பேக் லைட்ஸ், ஷாலோ ஃபோகஸ் மற்றும் குறைந்த வெளிச்சம் போன்ற தனது பிரபலமான உத்திகளைத் தவிர்ப்பதாக அசோக்குமார் ஜிஜோவிடம் வாக்குறுதி அளித்தார். 3D என்பது ஃபில்டர்கள் இல்லை, மாஸ்கிங் இல்லை, எந்த ‘புகைப்பட உத்திகளும்’ இல்லை என்பதோடு. முன்னேற்றத்தைக் கணிக்க மானிட்டர்களும் இல்லை. ஃபிலிம் ரீல்களை பிராசஸ் செய்ய மெட்ராஸுக்கு அனுப்ப வேண்டியிருந்தது, மேலும் ஒரு ஷாட்டைப் பயன்படுத்த முடியுமா இல்லையா என்பதைப் பார்க்க குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஆகும். 

2D ஒளிப்பதிவில், ஃபோகஸ் எங்கு இருக்க வேண்டும், மற்ற பகுதிகள் ஃபோகஸ் இல்லாமல் அல்லது எவ்வளவு மங்கலாக இருக்க வேண்டும், படம் எவ்வளவு கூர்மையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் எப்போதும் ஒளிப்பதிவாளரின் விருப்பமாக இருக்கும். ஆனால் 3Dயில் படமாக்கும்போது, படத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பொருட்களும் முடிந்தவரை கூர்மையாக இருக்க வேண்டும்.”

இந்தப் படத்தில், குட்டிசாத்தான் தனது மாயாஜால சக்தியைப் பயன்படுத்தி சுவரில் ஏறி, கூரையின் மீது நடப்பது போன்ற காட்சிக்காக ஒரு சுழலும் செட்டை உருவாக்கினார்கள். . குழந்தைகள் அறைக்குள் 360 டிகிரியில் நடப்பது போன்ற மாயையை உருவாக்க இருபுறமும் ஆறு பேர் கொண்ட குழு அதைச் சுழற்றினார்கள். இளையராஜா இசையமைப்பில் உருவான ‘ஆலிப்பழம் பெருக்காம்’ என்ற பாடல், குழந்தைகள் நடக்கும் வேகத்திற்கும் தாளத்திற்கும் ஏற்ப அறை சுழலும் வகையில் நடனம் அமைக்கப்பட்டது. இந்த நான்கு நிமிட பாடலை படமாக்க 14 நாட்கள் ஆனது. 

மிகச் சவாலாக இருந்தாலும், இந்தியாவின் முதல் 3D படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்கிற பெருமை இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்க்கு கிடைத்தது.

ராஜஸ்தானைச் சேர்ந்த சாதி மறுப்பு இயக்கப் போராளியான பன்வாரி தேவியின் வாழ்க்கையையும், அவரை அடக்குவதற்காக மேல்சாதியைச் சேர்ந்த நான்கு ஆணாதிக்கவாதிகள் அவரைப் பாலியல் வன்புணர்வு செய்த உண்மை சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “பவந்தர்” என்னும் ஹிந்தி திரைப்படம் 2004ல் வெளி வந்தது,   அழகியலைத் தன் பலமாகக் கொண்ட அசோக்குமார் அதற்கு முற்றிலும் மாறுபட்டு ராஜஸ்தானின் வறண்ட பாலைவனத்தையும், அவர்களின் வன்ணமயமான உடைகளையும்,, பதைபதைக்க வைக்கும் அந்த சம்பவத்தையும், ஹீரோயினாக நடித்த நந்திதா தாஸையும், அவரின் போராட்டத்தையும் மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார். மின்சாரம் இல்லாத ராஜஸ்தான் கிராமங்களில் இரவு நேரக் காட்சிகளில், லாந்தர் விளக்குகள், தீப்பந்தங்கள் மற்றும் நிலவொளியை மட்டுமே பிரதான ஒளியாகக் கொண்டு அசோக்குமார் படமாக்கினார்.  நிழல்கள் அடர்ந்த இந்தக் காட்சிகள், நாயகியின் தனிமையையும் அச்சத்தையும் பார்வையாளரின் மனதிற்குள் கடத்தின.

பாலைவனத்தின் காற்றையும், காற்றில் மிதக்கும் தூசிப் படலங்களையும் கேமரா லென்ஸில் துல்லியமாகப் பதிவு செய்தார்.  சூரியக் கதிர்கள் அந்தப் தூசிப் படலத்தின் ஊடே ஊடுருவி வரும் காட்சிகளில் எவ்விதச் செயற்கைக் கலவையுமின்றி இயற்கை வெளிச்சத்தைக் கொண்டே காட்சியை அழுத்தமாக்கினார்.

நந்திதா தாஸின் முகபாவனைகளை அசோக்குமார் படமாக்கிய விதம் மிக நுட்பமானது.  நீதிமன்றக் காட்சிகளிலும், கிராமப் பஞ்சாயத்து விசாரணைகளிலும் அவர் அவமானப்படுத்தப்படும் தருணங்களில், அசோக்குமார் வைட்-ஆங்கிள் லென்ஸ்களைக் கொண்டு அவரை நெருக்கமாகக் காட்டி சுற்றிலும் இருக்கும் ஆண்களின் ஆதிக்கத்தை அவளுக்கு மேலிருக்கும் அச்சுறுத்தலாகக் காட்சிப்படுத்தினார்.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், அசோக்குமாருக்கு சர்வதேசப் புகழையும்,  சிறந்த ஒளிப்பதிவுக்கான V.சாந்தாராம் விருதையும் பெற்றுத் தந்தது.

ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் பத்துப் படங்களை இயக்கியுமிருக்கிறார் அசோக்குமார். 

ஒளிப்பதிவாளராக இருப்பவர் இயக்குநராகவும் மாறும்போது அந்தப் படத்தின் விஷூவல்ஸ் இன்னும் எத்தனை அழகுடன் மிளிரும் என்பதற்கு “அன்று பெய்த மழையில்” என்கிற படம் தான் சான்று. இந்தப் படத்தின் ஒளிப்பதிவோடு, இயக்குநராகவும் இருந்த அசோக்குமார்,  முதல் காட்சியிலேயே அவருக்கு மிகப் பிடித்த மழையையும், நீர் சொட்டிக் கொண்டிருக்கும் இலைகளையும், மழையால் குளித்திருக்கும் மரங்களையும், அதன் இடைவெளிகளில் கசிகிற ஒளியையும் படம் பிடித்திருப்பார், .சில்க் ஸ்மிதா அறிமுகமாகும் பாடல் காட்சியின் லைட்டிங், கடற்கரையோரம் சரத்பாபுவும், ஸ்மிதாவும் ஓடும் காட்சிகள் என அனைத்துமே கவிதையாக இருக்கும். பாலியல் குறித்த உண்மைகளுக்கும் கற்பனைகளுக்கும் இடைப்பட்ட ஒரு விசித்திரமான உலகத்தை அசோக்குமார் தனது ஒளியமைப்பால் மிக அற்புதமாகக் கையாண்டிருப்பார்.  காமத்தின் உணர்ச்சிப் பெருக்கைக் உச்சத்திற்குக் கொண்டுசெல்லத் தன் வசமிருந்த ஒவ்வொரு காட்சி நுட்பத்தையும் அவர் முழுமையாகப் பயன்படுத்தியிருப்பார். இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதா வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரை சிறப்பான கோணங்களில் அழகியலோடு காண்பித்திருப்பார். காமமும் காதலும் கலந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளையும், மழை மற்றும் இரவு நேரச் சூழல்களை அவர் கையாண்ட விதத்தையும் பாராட்டி சிறந்த ஒளிப்பதிவுக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

பழகுவதற்கு மிகவும் இனிமையான குணம் கொண்ட அவர் இயக்குநர்களோடு விவாதித்து ஒத்திசைந்து அவர்கள் மனதில் இருக்கும் காட்சிகளைக் கொண்டு வர மெனக்கெடுவார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் இணைந்து அசல் கிராமங்களைத் தமிழ்த் திரையில் காண்பித்த ஒளிப்பதிவாளர்  பி.எஸ். நிவாஸ், அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர்.  அசோக்குமாரிடமிருந்து தான் அந்த அழகியலைக் கற்றுக் கொண்டார். தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய `16 வயதினிலே’  படத்துக்கு நிவாஸும், `உதிரிப்பூக்கள் ‘படத்துக்கு அசோக்குமாரும் ஒளிப்பதிவு செய்து தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்களித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் பி.ஆர். விஜயலட்சுமியும், நடிகை சுஹாசினியும் அவரிடம் உதவி ஒளிப்பதிவாளர்களாகப் பணி புரிந்தனர்.

காமாக்னி, காமா, காமசூத்ரா கதைகள்  என காமத்தை முன்னிருத்தும் சில படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து, இயக்கியுமிருக்கிறார் அசோக்குமார். அத்தகைய காமம் சார்ந்த  படங்களை அழகியல் என்பதோடு அவற்றை ஒரு வியாபார உத்தியாகவே அவர் கருதினார். 

அசோக்குமார் தனது லென்ஸ்கள் வழியாக வெறும் நடிகர்களைக் காட்டாமல், கதையின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களாகவே அவர்களை உருமாற்றினார். நடிகர்களின் உடல்மொழி மற்றும் முகபாவனைகளுக்கு ஏற்ப ஒளியமைப்பையும் கேமரா கோணங்களையும் மாற்றி அமைக்கும் இவரது திறன், இந்திய சினிமாவின் காட்சி அழகியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

பனி சூழ்ந்த மலைப்பிரதேசங்களின் மேல் மிகவும் காதல் கொண்டவர் அசோக்குமார். அவருக்கு சாதகமாகவே பெங்களூர், ஊட்டி, கொடைக்கானல்… என பல லொகேஷன்களும் அமைந்தன, 

சிறந்த தொழில்நுட்பத் திறன்களோடு அழகியல் உணர்வும் கொண்ட ஒரு நிறைவான ஒளிப்பதிவாளர் அசோக்குமார். . ஒப்பனையில்லாத நடிகர்களின் முகங்களை இயற்கையான ஒளியின் பின்னணியில் பதிவு செய்வதில் விருப்பமுடையவர். நடிகர்களின் தோற்றத்தையும் அவர்களின் கதாபாத்திரத் தன்மையையும், அவர்களின் பிம்பத்தையும் ஒளியமைப்பின் மூலம் மேம்படுத்திக் காட்டுவதில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார் 

கிட்டத்தட்ட 125 திரைப்படங்களுக்கும் அதிகமாக ஒளிப்பதிவு செய்திருக்கும் அசோக்குமார், தமிழில் மகேந்திரன், பாக்யராஜ், சங்கர் என பல பிரபலமான இயக்குநர்களுடனும்,, மலையாளத்தில் பரதன், பி.என். மேனன், ராமு கரியத், பாபு நந்தன்கோடு ஆகிய இயக்குநர்களுடனும் பணியாற்றியிருக்கிறார். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ், ஶ்ரீதேவி, அமலா, ஐஸ்வர்யாராய் உட்பட பெரும்பாலான நடிகர்கள், நடிகைகளை திரையில் மிக அழகாகக் காண்பித்தவர் அசோக்குமார்.

கேமராவின் லென்ஸ்கள் வழியே மனிதர்களின் ஆன்மாவைத் தொட்ட ஒரு மகா கலைஞனான அசோக்குமாரின் தொழில்நுட்ப நுணுக்கங்கள், இந்தியச் சினிமாவின் காட்சி மொழியை என்றென்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

சிரந்த ஒளிப்பதிவுக்காக ஒரு தேசிய விருது, கேரள மாநில அரசின் மூன்று விருதுகள்,  தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் இரண்டு, ஒரு நந்தி விருது மற்றும் சாந்தாராம் விருது என பல விருதுகளை அசோக்குமார் பெற்றிருக்கிறார்.

உத்திரப்பிரதேசத்தில் பிறந்து சென்னையில் படித்து, தமிழ்த் திரையுலகில் தன் அழியாத முத்திரையைப் பதித்த அசோக்குமார் உண்மையிலேயே அந்தப் பத்திரிகையில் சொன்னதைப் போல, ”தமிழ்நாட்டுக்கு அடித்த உத்திரப் பிரதேச லக்கி லாட்டரி பிரைஸ் தான்“.

Author Image

அகிலா ஸ்ரீதர்

மொழிபெயர்ப்பாளர். உதவி இயக்குநர். எழுத்தாளர். ஆங்கிலப் படங்களுக்கான வசனங்களை சப்டைட்டில் செய்யும் பணியிலும் இருக்கிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
இயக்குநர் சசி நேர்காணல்

இயக்குநர் சசி நேர்காணல்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

August 1, 2026
The Odyssey – கூடடையும் கலை

The Odyssey – கூடடையும் கலை

August 1, 2026

ஆதிக்க உணர்வின் உளவியல்

August 1, 2026

இரு கண்களும் பன்னிரு கைகளும்

August 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

August 1, 2026
The Odyssey – கூடடையும் கலை

The Odyssey – கூடடையும் கலை

August 1, 2026

ஆதிக்க உணர்வின் உளவியல்

August 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?