க.சீ சிவகுமார்
சௌந்தராம்பிகை திரையரங்கம் மூலனூர், அமராவதி திரையரங்கம் சின்னதாராபுரம். டெண்ட்டுக் கொட்டகையுள்ள மூலனூருக்கு மொட்டை வண்டியிலும் தியேட்டராகக் கட்டியிருந்த சின்னதாராபுரம் அமராவதிக்கு வில் வண்டியிலும் போய்ப் படங்கள் பார்த்த நினைவுகள் உண்டு. தலையில் கூரையுள்ள வண்டியாக இருப்பின் அதற்கு சவாரி வண்டி என்று பெயர்.சக்கர விளிம்புகளில் இரும்பும் (பீடிங்)ரப்பருமான வித்யாசங்கள் மொட்டை வண்டிக்கும் வில்வண்டிக்கும் உண்டு. கூரைகள் இல்லாத வண்டிகளாதலால் பேதலிக்க வைக்கும் விண்மீன்கள் தொங்கிக் கிடந்த இரவுகளில் படங்கள் பார்த்திருக்கிறேன். கறுப்பு வெள்ளைப் படம் ஏதோ ஒன்றில் எழுத்துப் பிச்சரின்போது எம்.எல்.வசந்த குமாரி என்கிற பெயர் மின்னுகிறது. வெள்ளி வெள்ளை நிறத்தில் இல்லாமல் அபூர்வமான மஞ்சள் மினுக்கும் நிலாவின் நிறச்சாயை அந்த வெள்ளை எழுத்தின் மேல் உண்டு.
இன்றைக்கு அந்த அரங்குகள் இரண்டும் மூடிக்க்கிடக்கின்றன. உள்ளே ஒரு சிறு கத்தியுடன் நுழைந்தால் அந்தப் பெயர் ஒளிர்ந்த ஒரு நீள் செவ்வகப் பரப்பைமட்டும் என்னால் கச்சிதமாக வெந்திரையிலிருந்து வெட்டியெடுக்கமுடியும்.அது அமராவதியிலா சௌந்தராம்பிகையிலா என நான் சொல்லத் தயாரில்லை. ஏனெனில் நினைவுகள் நிரூபணங்கள் இல்லை என்பதே தத்துவம்.ஆயின் உணர்வுகள் அல்லது பலப்படும் புலப்படும் புலன்களின் உணர்விலிருந்து நினைவுகள் தோன்றுகின்றன. பின்னொரு கட்டத்தில் நினைவுகளே உணர்வுகளை உண்டாக்கும் அல்லது துல்லியம் கொள்ளவைக்கும் காரணிகளாகின்றன. சில சமயம் உன்மத்தம்.
என் நினைவில் கிளுகிளுக்கும் எம்.எல்.வியின் முதல் பாடலைக் கண்டுபிடித்துவிட்டேன். எனக்கான அவரது முதல் பாடல் என்றே அதைக் கருதவேண்டுமேயல்லாது அவரது தரவுப் பட்டியலிலிருந்தல்ல.
’கூவாமல் கூவும் கோகிலம்’ – பாடலில் மேலது வரியை அவர் பாடவில்லை. திருச்சி லோகநாதன் பாடியிருக்கிறார். அதை உணரும் வயதையும் நிலையையும் நான் அப்போது எட்டியிருக்கவில்லை. பாடலினூடே நடக்கும் நாடகமே என்னைக் கவர்ந்திருக்கக் கூடும். ‘மணமகனோ இங்கே மணமகளோ அங்கே’ என்கிற உட்கிடக்கையைக் கொண்ட வைரமாலை படத்தின் பாடலையே ஹிருதயத்தில் சூடாமல் சூடினேன்.
கோகிலம் என்றால் குயில் என்றும் கோமளம் என்றால் மென்மை என்றும் கற்றோரையும் மற்றோரையும் கேட்டறியும் பருவமாயிருந்தது அது எனக்கு.வார்த்தை வங்கியை வளம் கொழிக்கச் செய்யும் தாகமாக்கும் இது. அந்தப் பாடலில் வராத லலிதம் என்னும் பதத்துக்கு அர்த்தமோ என்னவென்றால் பாசகத்துடன் சேரும்போது மென்மை என்றும் கலைகளுடன் சேரும்போது நுண் என்றும் படுவதாகும்.
கூத்தனூர் அய்யாஸ்வாமி அய்யருக்கு மகள் எனத் தெரிவிக்கப்படும் வசந்த குமாரி அறியப்படுவதென்னவோ மதறாஸ் லலிதாங்கி வசந்த குமாரி என்றுதான். லலிதாங்கியே ஒரு ராஜதானி புகழும் பாடகர்தான்.
மங்கைப் பருவத்திலேயே அரங்கில் பாடுவதற்கு வந்துவிட்ட வசந்த குமாரி திரைப் பாடல்களுக்கு வந்தது பொருளாதாரக்காரணங்களுக்காகத்தான். பண முடை என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா தெரியவில்லை. வசந்த குமாரி ஆயினும் சரி,ஒரு நாட்டிய தாரகையோ வெற்றிகர இல்லத்தரசியோ பாடகியோ ஆகாமல் திரை மீனாய் ஒளிர்ந்த அவரது மகள் ஸ்ரீ வித்யாவும் சரி பணம் என்றால் என்ன? என்கிற கேள்வியை விதைக்கிறார்கள். ஸ்ரீ வித்யாவின் வெற்றிகரக் கலை வாழ்வில் அவரது அப்பாவின் பெயரிலிருந்த ‘விகடம்’(ஆர். கிருஷ்ண மூர்த்தி) வேலை செய்துவிட்டது.
ரத்தக் கண்ணீர் படத்தில் ‘கதவைச் சாத்தடி… கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி’ ஓர் அருமையான பாடல். சிறு வயதில் படம்பார்த்ததல்லாமல் ஒலிநாடிய ஒலி நாடாக் காலத்தில் எங்கள் டீக்கடையில் ரத்தக் கண்ணீர் ஒலிச் சித்திரமாக பன்முறை ஓடியிருக்கிறது. திருமணம் முடிந்தபின் நானாக வலிந்து என் மனைவியை அழைத்துச் சென்ற முதல் படம் ‘ரத்தக் கண்ணீர்’தான்.பழைய தரித்திரங்களையும் சரித்திரங்களையும் குடும்பத்துக்கு உணர்த்திவிட வேண்டும் என்கிற எனது எத்தனங்களும் வியர்த்தங்களும் இத்தகையது.நல்லவேளையாக தம்பதிப் புதியராக சென்னை சென்றிருந்தபோது ரத்தக்கண்ணீருக்கு முன்னதாக ‘ஆனந்தம்’ படத்துக்கு என்னையும் சாந்தியையும் ஞாநி அழைத்துப்போயிருந்தார். ஆகவே (மண)வாழ்வில் இன்பதுன்பம் எது நடந்தாலும் அதற்கான தற்குறிப்பேற்றம் நடைபெற்றாகிவிட்டது.எப்படியாயினும் ’காசில்லாதவன்’ ஒரு முக்கியமான பாடல் என்பதில் சந்தேகமில்லை.
பராசக்தி படத்தில் ‘வாழ்க வாழ்கவே’ என திராவிட நாட்டை வாழ்த்தி வசந்தகுமாரி பாடுவதும் நல்லபாடலே.
ஆனால் அந்தப் பாடலை அனேகமாக வானொலிகளில் போடமாட்டார்கள். ‘பிரசார் பாரதி’யில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாலே தங்கள் ஒலி மற்றும் ஒளி பரப்பை பிரதமரும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் கவனிக்கிறார்கள் என்பது போலப் பயம் வந்துவிடும்.(ஆனால் அந்த அச்சத்தை ஒரு செருக்கான ஆரம்பத்தால் உடைத்த அச்சம் என்பது மடமையடா! பாட்டுக்கு ஒரு செம்மொழி வணக்கத்தைப் போடவேண்டும். அது அஞ்சாமை தமிழர் உடமையடா எனப் பாடப்பட்டிருந்தால் ஒலிபரப்பில் இன்னும் சிக்கல் சேர்ந்திருக்கும்). இது நிற்க…
பாரதிக்குத் தப்பிய பாடகர்கள் இல்லை என்பதால் வசந்தகுமாரிக்கும் ஒரு ‘சின்னஞ் சிறு கிளி’ உண்டு. வசந்தகுமாரியின் குரல் பத்மினிக்குப் பொருந்தி வந்ததாகவே சிலபடங்களில் தோன்றியது. இவரது குரலை டூயட்டுக்கு அவ்வளவு சிலாக்கியமானதாகக் நான் கருதவில்லை. ஆனால் ஆச்சரியகரமாக ’காவேரி’ படத்தில் மஞ்சள் வெய்யில் மாலையிலே’ நல்ல டூயட்தான். ஒருவேளை உடன்பாடியது சிதம்பரம் ஜெயராமன் என்பது காரணமாயிருக்கலாம்.
ஜெயராமனுக்கு டூயட் என்றாலே எனக்கு மெலிதான சிரிப்பு வந்துவிடும். ‘தனியே ஏதோ ஒன்று கதிக்கும் குரல்’ எம்.எல்.விக்கு.(சி.எஸ்.ஜேயை அப்புறம் பர்ர்த்துக்கொள்ளலாம்).
குரல் கேட்டால் முகம் ஒருப்படும் லயத்தில் நான் வசந்தகுமாரியின் குரலுடன் பரிச்சயம் கொண்டிருக்கவில்லை.
ஸ்ரீரங்கத்தில் நிலவு வெளியில் ஒரு மொட்டை மாடியில் பக்கவாட்டில் கோபுரம் உயர்ந்திருக்க கொஞ்சும் புறாவை தத்திப் பறக்கவிட்டு டி.கண்ணன் (கல் வெட்டுச் சோழன்) ‘இதைக் கேளுய்யா!’ என பிரக்ஞையில் ஒரு பீலியைச் செருகியபோது தமிழுக்கு; திரை இசைக்கு அனுராதாஸ்ரீராமும் வந்துவிட்டிருந்தார்.காலம் கடந்திருந்தபோதும் ஞாலம் கடந்திருக்கவில்லை.
சிஷ்யப் பரம்பரை வகை வந்ததன் வசந்த நீட்சியாக எம்.எல்.விக்கும் சிஷ்யர்கள் உண்டு. அதில் இரண்டு பேரைப் பற்றி நினைவுகொள்ள எனக்கு சங்கதிகள் உண்டு. ஒருவர் சுதாரகுநாதன்.பாட்டொலியும் பட்டொளியுமாக பரிமளிக்கும் புகழினர்.எம்.எல்.வி,ஏறத்தாழ இருபது ஆண்டுகள் திரையில் பாடிவிட்டு முழுமுழுக்கவும் கர்நாடக சங்கீதத்துக்குத் தாவினார் .
சுதாவோ ஏற்த்தாழ இதே அளவுக்கோ அல்லது அதனினும் அதிகமான ஆண்டுகளின் சாதகத்தால் திரையிலும் பாடவந்தார் .அவரை ஒருமுறை பேட்டியாளனாகச் சந்திக்கவேண்டியிருந்தது.. அவரது வீட்டுக்கு வழிகேட்டதும் தொலைபேசியில் சொல்ல ஆரம்பித்தார்.மூன்று அடுக்குகளுக்கு மேல் எதைச் சொன்னாலும் சப்பழிந்து பொய்விடுவேன் நான். எனது திணறலை உணர்ந்தவர் ‘ராஜா அண்ணாமலைபுரம்’ கிளம்பி வாங்க. வழிகேட்டுக்கிடே இருந்தா வ்ந்து சேரமுடியாது.’ தொலைபேசியை வைத்துவிட்டார். ஆகா, எம்.எல்.வி ஒரு மேதையைத் சம்பவித்திருக்கிறார்.நான் நல்லபடியாக அந்தப் பேட்டியை முடித்தேன். விஷயம் என்னவென்றால் என்னை அழைத்துச்சென்ற்வர் ஒரு புகைப்படக்காரர். புகைப்படக்காரர்களுக்கு தங்களது படங்கள் எங்கே இருக்கின்றன என்பது தெரியும்.
இரண்டாவதாக ,பிரதியிது இசையைக் குறித்தது ஆதலின் ஸ்ரீவித்யாவின் ஒற்றைக்கொரு திரைப்பாடாலே நினைவுக்கு வருகிறது.
‘சண்ட பஜாரு மாமா கொஞ்ச உஷாரு’ – ஞாபகத் திரிபிலோ வல்லின இடையின மயக்கத்திலோ இது ‘சந்தை பஜா’ராகக் கூட இருக்கலாம்.
அறுபதுகளில் தொடங்கி தனது அறுபத்து மூன்றாம் வயது வரை அக்டோபர் இறுதில் மரிக்கும் வரை வசந்தகுமாரியின் பயணம் கர்நாடக சங்கீதத்தின் பாற்பட்டு ஆன்மீகப் பாடல்கள் சார்ந்ததாக இருந்தது. ஆகவே திருப்பாவைகளில் அவரும் ஒருவராகி….
‘வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு…..’











