The Talkie
Thursday, October 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home கட்டுரைகள் இந்தியத் திரைப்படங்கள்

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

The Talkie by The Talkie
October 1, 2026
in இந்தியத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon அபுல்கலாம் ஆசாத்

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைக் கதைக்கருவாக அல்லது கதைக்கருவின் ஒரு பகுதியாகக் கொண்ட இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் நீளமானது. இந்துஸ்தான் கி கசம், கரம் ஹவா, பார்டர், ஹென்னா, 1947: எர்த், டி-டே, ஹே ராம், தி காஸி அட்டாக், பட்டான், சாம் பகாதுர் என துரந்தர் வரையில் நீள்கின்ற அந்தப் பெரும் பட்டியல் சுவாரசியமானதும்கூட. கதைக்கருவில் இந்தியப் பிரிவினை, எல்லை தாண்டிய காதல், மனித நேயம், போர்கள், ஒற்றர் படை நடவடிக்கைகள், அரசியல் என இந்தியா – பாகிஸ்தான் உறவு இந்தியத் திரைக்குச் சில கதைகளைத் தந்திருக்கிறது.

திரைக்கதைகளைத் தந்த இந்தோ-பாக் போர்கள் இரண்டும் சென்னை வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை உண்டாக்காவிட்டாலும், அந்த இரண்டு போர்களையும் சென்னை உணர்ந்தது. 1965 போரின் போது, இரவில் ‘போர்க்கால விளக்கணைப்புப் பயிற்சி’ (Blackout) நடத்தப்பட்டது. 1971 போரின் போது  திருவல்லிக்கேணியில் நான் பயின்ற பள்ளிக்கூடத்துக்கு அருகே பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் யாஹியா கானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்த கலைஞர் அரசு போர் நிதி திரட்டித் தந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.

இந்தோ-பாக் போர்கள் தொடர்பான செய்திகள் இந்த அளவுக்கு அப்போதைய மாணவர்களாகிய எங்கள் மனதில் பதிந்திருக்கையில், ஆண்டு 1973இல் சேத்தன் ஆனந்தின் ‘இந்துஸ்தான் கி கசம்’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. சென்னையில் சத்யம் திரையரங்கில் வெளியான அந்தப் படத்தைப் பள்ளி மாணவர்களாக இருந்த நாங்கள் கூட்டமாகச் சென்று பார்த்தோம்.

போரும் அதன் விளைவுகளும் இந்த அளவில் அறிமுகமாகியிருந்த அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு இன்னொரு வார்த்தையும் அறிமுகமானது. ‘புதிய அலை திரைப்படங்கள்’.

இந்தியத் திரையின் கலைப்படங்களின் உச்சமாக 1970 – 1980ஐச் சொல்கின்றனர். கலைப்படம், இணை சினிமா, புதிய அலை என எப்படி அழைக்கப்பட்டாலும், வணிகத் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு கலைக்காகவே திரைப்படத்தை அணுகும் முறை சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியில் 1955இல் தொடங்கி, 1970-1980 ஆண்டுகளை இந்தியில் ஷியாம் பெனகல், கோவிந்த் நிஹ்லானி, மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், ஜி. அரவிந்தன், கன்னடத்தில் கிரீஷ் கர்னாட் என இயக்குநர்கள் கலைப்படங்களின் பொற்காலமாக மாற்றினர். 1974இல் ஷியாம் பெனகலின் அங்கூர் வெளியானது. 1973இல் புதிய அலைத் திரைப்படமாக எம்.எஸ். சத்யுவின் ‘கரம் ஹவா’ வெளியானது.

போர்! வெற்றி! எனப் பரணி பாடாமலும், வணிக சமரசங்கள் இல்லாமலும், மிகையான எதுவும் இல்லாமலும் இயல்பாகப் பிரிவினையின் வலியைப் பேசிய திரைப்படம், கரம் ஹவா. இது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைக் கதைக்களமாகக் கொண்டு, கலைப்படமாக வெளிவந்த முதல் திரைப்படம்.

இடதுசாரிச் சிந்தனையாளர்களின் பங்களிப்பு இத்திரைப்படத்தில் அதிகமாக இருந்ததனாலும், கதைக்களம் இந்தியப் பிரிவினை என்னும் செய்தி கசிந்ததனாலும் படப்பிடிப்பிலும், திரைப்படம் வெளியாவதிலும் அதிக எதிர்ப்புகளைக் கண்ட திரைப்படம்.

இந்திய மக்கள் நாடகச் சங்கம் (IPTA – Indian People’s Theatre Association), இடதுசாரிச் சிந்தனையாளர்களைக் கொண்ட சங்கம். அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவர் கரம் ஹவாவின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த பால்ராஜ் சாஹ்னி.

திரைப்படத்தின் மூலக்கதையை எழுதிய இஸ்மத் சுக்தாய் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இயங்கியவர்.

இயக்குநரும் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான எம்.எஸ். சத்யு இந்திய மக்கள் நாடகச் சங்கத்தில் இயங்கியவர்.

இஸ்மத் சுக்தாயின் கதையை கரம் ஹவாவாக மாற்றி எழுதியவர் கைஃபி ஆஸ்மி. கைஃபி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். இஸ்மத் சுக்தாயின் நூல்கள் ‘இஸ்மத் சுக்தாய் கதைகள்’, ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’ ஆகிய இரண்டும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கைஃபியுடன் சேர்ந்து திரைக்கதையை எழுதிய ஷமா ஸைதி, இதன் இயக்குநர் எம்.எஸ். சத்யுவின் மனைவி. அவர் இடதுசாரிச் சிந்தனையுள்ள  சூழலில் வளர்ந்தவர்.  

சலீம் மீர்ஸா கதபாத்திரத்தின் மனைவியாக ஷௌகத் ஆஸ்மி நடித்திருப்பார். கைஃபி ஆஸ்மியின் மனையான ஷௌகத்தும் இந்திய மக்கள் நாடகச் சங்கத்தைச் சேர்ந்தவர்.

ஒரு திரைப்படத்தின் இயக்குநரும், மூலக்கதையின் ஆசிரியரும், திரைக்கதையின் ஆசிரியர்களும், வசனம் எழுதியவரும், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தவரும் இடதுசாரிச் சிந்தனையுள்ளவர்களாகவும் முற்போக்காக சிந்திப்பவர்களாகவும் இருக்கையில், அந்தத் திரைப்படத்தின் மீது பார்வை குவிவதும், திரைப்படம் அரசுக்கு எதிரான கருத்தை முன்வைக்கலாம் என்னும் முன்முடிவும் உண்டாவது இயல்பு.

அவை படத்தின் படப்பிடிப்புக்கு மட்டுமன்றி வணிகத்துக்கும் இடையூறாக இருந்தன. இதனாலும், படத்தின் தயாரிப்பாளர்கள் பின்வாங்கக்கூடிய சூழல் உருவானது. சர்ச்சைக்குரிய கதைக்கருவும், இடதுசாரிச் சார்புள்ளவர்களின் பங்களிப்பும் சேர்ந்து தயாரிப்பாளர்களை திடீரென விலகச் செய்தன. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC – National Film Development Corporation) உதவ முன்வந்தது, இயக்குநர் எம்.எஸ். சத்யு கடன் வாங்கினார், ஒளிப்பதிவாளர் இன்னொரு தயாரிப்பாளராக இணைந்து கொண்டார். படப்பிடிப்பு தொடர்ந்தது.

தடைகளை மீறிப் படம் தயாரானதும் தணிக்கையில் பிரச்சனை உருவானது. தணிக்கைக் குழுவுக்கு மட்டுமல்லாது அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் எனச் சிலருக்கு சத்யு படத்தைத் திரையிட்டுக் காட்டினார். மும்பையில் படம் வெளியானால் அரங்கத்தைத் தீக்கிரையாக்குவோம் என பால் தாக்கரே எச்சரித்தார். அவருக்கெனத் தனியாக முதல் காட்சி அதே அரங்கில் திரையிட்டுக் காட்டப்பட்டு, அவர் அனுமதித்த பின் பொதுமக்கள் காட்சி தொடங்கியது.

தடைகளுக்குப் பின் திரைப்படம் வெளியானதும் நிலைமை தலைகீழ். தேசிய விருதுபெற்றது, ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்கான நர்கீஸ் விருது பெற்றது. சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் ஆஸ்காருக்கும் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது, கான்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் மூன்றினைப் பெற்றது. வசனத்துக்காக கைஃபி ஆஸ்மியும், கதைக்காக கைஃபி ஆஸ்மியும் இஸ்மத் சுக்தாயும் சேர்ந்து, திரைக்கதைக்காக கைஃபி ஆஸ்மியும் ஷமா ஸைதியும் சேர்ந்து பெற்றனர்.    

கரம் ஹவா – வெப்பக் காற்று என மொழிபெயர்க்கலாம்.

இந்தியப் பிரிவினையில் சிக்கித் தவிக்கும் ஒரு ஸ்டேஷன் மாஸ்டரின் கதையை இஸ்மத் சுக்தாய் எழுதினார். அது திரைக்கதைக்கு வருகையில் ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரம் காலணி தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளியாக மாற்றமடைந்தது. அப்படி மாறியதன் முக்கியக் காரணம், திரைக்கதையும் வசனமும் எழுதிய கைஃபி ஆஸ்மி காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றியவர். தொழிலாளர் பிரச்சனைகளும் கதைப் பின்னணியும் சிறப்பாக அமையும் என்பதால் ஸ்டேஷன் மாஸ்டரை முதலாளியாக்கித் திரைக்கதை அமைக்கப்பட்டது. அப்படி மாறியதும் கரம் ஹவாவின் கலைத்தன்மைக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தின் கதை, என ஒரு வரியில் கரம் ஹவாவின் கதையைச் சொல்லலாம். இதன் மீது படிப்படியாக கைஃபி ஆஸ்மியும் ஷமா ஸைதியும் திரைக்கதையைச் செதுக்கியிருப்பார்கள். பிரிவினையைக் காட்டும் திரைப்படங்களில் பொதுவாக இடம்பெறும் கொலைகளும் வன்முறையும் இதில் காட்டப்படவில்லை என்பது இப்படத்தின் சிறப்பு. பொதுவான வன்முறைதான் இடம்பெறவில்லையே தவிர, பிரிவினை இரண்டு சமூகங்களுக்கு இடையில் உண்டாக்கிய வெறுப்பும் அதன் தாக்கமும் காட்டப்பட்டிருக்கும்.

சலீம் மீர்ஸா, ஆக்ராவில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையின் முதலாளி. இந்தியப் பிரிவினைக்கு முன்பு வரையிலும், மகாத்மாவின் படுகொலைக்கு முன் வரையிலும்கூட எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழும் முதலாளி. அவருடைய மகள் ஆமினாவுக்கு உறவில் மாப்பிள்ளை பார்ப்பதும், மூத்த மகன் தொழிற்சாலையைப் பார்த்துக்கொள்வதும், இளைய மகன் கல்லூரியில் படிப்பதுமாகப் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை. பிரிவினையின் தாக்கம் சலீம் மீர்ஸாவை நெருங்கும்போது அவருடைய நம்பிக்கைகளும் துணைகளும் ஒவ்வொன்றாகக் கையை விட்டு நழுவுகின்றன.

சர் ராட்க்ளிஃப் கிழித்த கோடு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்தெடுக்கையில் இரத்தக்களறியை உண்டாக்கியது. ஏற்கெனவே இந்து முஸ்லிம் பகைமை மக்களின் மனதில் ஊன்றப்பட்டிருக்கையில், அதனுடன் காலக்கெடுவைக் காரணம் காட்டி சரியாகத் திட்டமிடப்படாமல் இழுத்த கோடு அரசியல் அடிப்படையில் இரண்டு நாடுகளை மட்டும் பிரிக்கவில்லை. அந்தக் கோட்டினால் நேரிடையாகப் பிரிக்கப்பட்டவர்களும், தொடர்ந்த வன்முறைகளால் பிரிக்கப்பட்டவர்களும், புலம் பெயர்தல்களால் பிரிக்கப்பட்டவர்களுமாக நாடு அமைதியின்மையில் மூழ்கி மகாத்மாவின் உண்ணாவிரதம் வரையில் சென்றது வரலாறு.

அந்த வரலாற்றுப் பக்கங்களின் ஒரு பகுதியாக, சலீம் மீர்ஸாவின் காலணித் தொழிற்சாலைக்குப் பணியாளர்கள் வேலைக்கு வர மறுக்கிறார்கள். காலணி தயாரிப்பில் தாமதம் உண்டாகிறது. அதனைத் தொடர்ந்து நஷ்டம் உண்டாகிறது. நேற்று வரையில் பிரிட்டிஷ் இந்தியாவில் ஒருவராக இருந்த முதலாளி, திடீரென அந்நியராகப் பார்க்கப்படுகிறார். தொடர் நஷ்ட நெருக்கடியால் தொழிற்சாலையை விற்கும் நிலைக்கு சலீம் தள்ளப்படுகிறார்.

சலீமின் அண்ணன் அரசியலில் முஸ்லிம் லீக் ஆதரவாளராகவும், பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்பவராகவும் இருக்கையில் அதன் தாக்கம் சலீமை நோக்கிக் கேள்விகளை எழுப்புகிறது. தொழிலில் நஷ்டமும், குடும்பத்தில் ஒருவர் பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்வதால் உண்டாகும் அழுத்தமும் அவரை அலைக்கழிக்கின்றன.

முதன்மைக் கதாபாத்திரம் சலீம் மீர்ஸாவாக நடித்த பால்ராஜ் சாஹ்னிக்கு கரம் ஹவா கடைசிப் படம். படம் வெளியாவதற்கு முன்பே பால்ராஜ் சாஹ்னி மறைந்துவிட்டார். சலீம் மீர்ஸாவாக பால்ராஜ் சாஹ்னி வாழ்ந்தார் என்றால் அது தேய்வழக்கு. இஸ்மத் சுக்தாய், கைஃபி ஆஸ்மி, எம். எஸ். சத்யு இணைந்து உருவாக்கிய சலீமின் வலிகளை உள்வாங்கி, இந்தோ-பாக் பிரிவினையால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற குடும்பத்தின் ஒற்றை பிரதிநிதியாக அவர் கரம் ஹவாவில் நடித்தார் என நீட்டிச் சொல்வதுதான் சரியாக இருக்கும்.

பொதுவாகப் பிரிவினையைப் பேசும் இந்தியப் படங்களின் அணுகுமுறை வணிகமாகத்தான் இருக்கும். கலையின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் அமைதியைப் பேசினாலும் திரைப்படமென வந்துவிட்டால் அதில் மற்றவரைத் தவறென நிறுவும் மனவெழுச்சிகளைத் தவிர்க்க முடிவதில்லை. அதனை மாற்றிய திரைப்படம் கரம் ஹவா.

கரம் ஹவாவுக்குப் பின் வன்முறைக் காட்சிகள் இல்லாமல் அன்பையும் அமைதியையும் முன்வைத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லை தாண்டலைக் கதைக்களமாகக் கொண்ட திரைப்படம் ‘ஹென்னா’. இதனை ராஜ் கபூரின் கனவு என்றும் சொல்வார்கள். ஆனால், கதையாக அது இருக்கும்போதே ராஜ் கபூர் இயற்கை எய்தினார். ரிஷி கபூர் ராஜ் கபூரின் கனவை நிறைவேற்றினார். எல்லை தாண்டி விழுந்து நினைவிழக்கும் இந்தியன் ஒருவனுடன் அவனை இந்தியன் என அறியாமல் காதலில் வீழும் பாகிஸ்தானிப் பெண் ‘ஹென்னா’வின் கதை.

ராம் சந்த் பாகிஸ்தானி என்னும் பாகிஸ்தான் திரைப்படம், இந்திய நடிகர்களும் நடித்தது விமர்சகப் பார்வையில் முக்கியத்துவம் பெற்றது. நந்திதா தாஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். அதுவும் அமைதியை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். எல்லை தாண்டிய ஊடுருவல்களில் அரசு அதிகாரிகளின் சிகப்பு நாடா அணுகுமுறை எப்படி ஒரு குடும்பத்தை அலைக்கழிக்கிறது என்பதை ஆரவாரமில்லாமல் இயல்பாகக் காட்டுகின்ற திரைப்படம்.

கரம் ஹவா உண்டாக்கிய பாதையில், அவ்வப்போது இப்படிச் சில திரைப்படங்கள் வன்முறையைக் காட்டாமல் பிரிவினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டாலும், மனவெழுச்சியும் வன்முறையும் எல்லை தாண்டிய தீவிரவாதமும் மட்டுமே பெரும்பாலான இந்தோ- பாக் பிரச்சனைப் படங்களில் நிறைந்திருக்கும். கரம் ஹவாவில் சலீமின் வாழ்க்கை தடம் மாறிச் சுழலில் சிக்கினாலும் அவர் இந்தியா என்னும் அமைப்பின் மீது கொண்ட நம்பிக்கை ஒவ்வொரு காட்சியிலும் உறுத்தாமல் தெரியும்.   

வீட்டுக்கு வெளியே தொழிலிலும் சமூக அங்கீகாரத்திலும் விதைக்கப்பட்ட வெறுப்பால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளத் தவிக்கும் சலீமுக்கு வீட்டில் ஒரே ஆறுதல் மகள். தந்தை – மகள் உறவை மனவெழுச்சிக் காட்சிகளாக அமைத்து சோகத்தைப் பிழிந்தெடுக்காமல், சாப்பிடாமல் படுத்திருக்கும் தந்தையின் அறைக்குச் சென்று சாப்பாட்டை வைத்துவிட்டு ஒரு வரி வசனம் பேசித் திரும்பும் மகளை இயல்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார் எம். எஸ். சத்யு. தந்தை – மகள் உரையாடல்களிலும் கைஃபியின் வசனங்கள் கூர்மையாக வெளிப்படும்.

அப்படிப் பாசமாக இருக்கும் மகளின் மனதும் பிரிவினையால் அலைக்கழிக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே தான் பார்த்து வளரும் உறவினர் மகனைப் பெற்றோர் மாப்பிள்ளையாக நிச்சயிக்க, இருவரும் காதலிக்கின்றனர். ஆனால், பிரிவினையில் மணமகனாக நிச்சயிக்கப்பட்ட காதலன் பாகிஸ்தானுக்குப் குடிபெயர்கிறான். அதனைத் தொடர்ந்து ‘ஆமினா’ என்னும் அந்தக் கதாபாத்திரம் அலைக்கழிக்கப்படுவது நிற்கவில்லை. ஆமினாவாக கீதா சித்தார்த் நடித்திருந்தார். அதன் பின்னர் சில வணிகத் திரைப்படங்களில் கீதா சித்தார்த் நடித்திருந்தாலும், அவர் ‘கரம் ஹவா’ கீதா சித்தார்த் என்றே அறியப்பட்டார்.

ஒரே மகளின் திருமண ஏற்பாடுகளின் தோல்வியுடன் சலீமுக்கு இன்னொரு பிரச்சனையும் சேர்ந்துகொள்கிறது. அவருடைய மூத்த மகன் பாகிஸ்தானுக்குக் குடிபெயர நினைக்கிறான். அடிமேல் அடியாக வீட்டுக்கு வெளியிலும் உள்ளேயும் மனபோராட்டங்களைச் சந்திக்கும் சலீமுக்குப் பேரிடியாகத் தலையில் வீழ்வது சொத்துப் பறிமுதல். முதலாவதாக, நசிந்து வரும் காலணித் தொழிற்சாலைத் தூக்கி நிறுத்த வங்கி கடன் தர மறுக்கிறது. காரணம், சலீம் பாகிஸ்தானுக்குக் குடிபெயர வாய்ப்பு இருக்கிறது. அடுத்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து விட்ட அண்ணனின் பெயரில்தான் சலீமின் பூர்வீக மாளிகை இருக்கிறது. அண்ணன் பாகிஸ்தானியாகிவிட்டதால் இப்போது இந்திய அரசின்படி அது ‘வெளியேறியவர் சொத்து’. அதன் மீது சலீமுக்கு எந்த உரிமையும் கிடையாது. சட்டப்படி அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

பிரிவினையின் பெருங்கரத்து விரல்கள் சலீமின் வாழ்க்கை செல்கின்ற இடத்துக்கெல்லாம் நீண்டு அவருக்கு நிம்மதியின்மையைத் தந்துகொண்டே இருக்கின்றன.

வயதான தோற்றம், ஆக்ராவின் இயல்பான உருது உச்சரிப்பு, மிகையில்லாத நடிப்பு, உடலும் முகமும் ஒவ்விரு அசைவிலும் சலீம் மீர்ஸாவின் வலியைப் பிரதிபலிப்பது என பால்ராஜ் சாஹ்னி அதனுடைய கடைசிப்படத்தில் வெளிப்படுத்திய நடிப்பு படத்தைக் காண்பவரைப் பேசவைக்கும். அவசியம் பார்க்கவேண்டிய இந்தியப் படங்களுள் கரம் ஹவாவையும் ஒன்றாக தி கார்டியன், டைம்ஸ் ஆஃப் இண்டியா, தி டைம்ஸ், போன்ற முன்னணி நாளிதழ்கள் வகைப்படுத்துகின்றன.

சலீமின் இரண்டாவது மகன் ஃபரூக் ஷேக் நடித்திருப்பார். இணை சினிமாவின் – புதிய அலை நடிகர்களில் ஒருவராகவும் அறியப்பட்ட ஃபரூக் ஷேக்கிற்கு இது முதல் திரைப்படம். முதல் திரைப்படத்தில் மாணவனாகவும், அலைக்கழிக்கப்படும் குடும்பத்தின் கடைசி மகனாவும் நடித்து, கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தித் தனது நீண்ட திரை வாழ்க்கையின் முதல் படியை உறுதியாக ஃபரூக் ஷேக் வைத்த திரைப்படம்.

படத்தின் இறுதிக்காட்சிதான் திரைப்படம் சொல்ல வந்த மையக் கருத்தின் உச்சம். அனுபவம் மிக்க நடிகர் பால்ராஜ் சாஹ்னியும், முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் ஃபரூக் ஷேக்கும் தங்கள் நடிப்பால் முடித்து வைக்கும் கடைசிக் காட்சி அது. இனி இந்தியாவில் வாழ முடியாது என்னும் நிலைக்கு ஆளாகி, புலம்பெயரும் முடிவை எடுத்த பின் சலீமும், சிக்கந்தரும் (ஃபரூக் ஷேக்) செல்லும் காட்சியில் இருவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

சலீம், சிக்கந்தர் கதாபாத்திரங்கள் அப்படி அமைந்திருக்க, ஆமினா சலீமின் மகள் தன்னுடைய இரண்டு காதல் தோல்விகளை எப்படிக் கையாள்கிறார் என்பது விவாதிக்க வேண்டிய முடிவு. மீண்டும், முற்போக்குச் சிந்தனையாளர்கள் தருகின்ற தீர்வு அப்படி இருக்குமா என இன்றைய பார்வையாளர்கள் கேள்வி எழுப்பக்கூடிய முடிவை ஆமினா எடுக்கிறார். அந்த முடிவுக்கு முன் அவருடைய காதலனுக்கும் அவருக்கும் இடையில் நடக்கின்ற உரையாடல் வலிமையான வசனங்களைக் கொண்டது. அற்றைத் திங்கள் அவ்வெணிலவில், அன்றொரு நாள் இதே நிலவில் வகைமையில் அமைந்த வசனம் உள்ளுறையாக ஆமினாவின் வாழ்க்கை செல்லவிருக்கும் திசையைக் கொண்டிருக்கும்.

இன்னொரு புறா பறந்துவிட்டதைக் காதலன் சொல்லும்போது ‘இன்னொன்றைப் பறக்கவிடமாட்டேன்’ என ஆமினா சொல்லும் காட்சியிலிருந்து சலீம் சிஷிதியின் தர்காவில் நடைபெறும் கவ்வாலிப் பாடல் விரியும். ஆமினாவின் காதலனாக நடித்தவர் ஜலால் ஆகா. ஜலால் ஆகாவும் இணை சினிமாவின் அங்கமாக இருந்தவர் என்றாலும், அவர் ஷோலேயின் ‘மெஹ்பூபா மெஹ்பூபா’ பாடலில் ஹெலனுடன் நடனமாடியதால், இன்றைக்கு எளிதாக ஷோலேயின் அந்த நடனத்தால் அறியப்படுகிறார்.

சமூக ஊடகத்தில் இந்தித் திரைப்படங்களில் இடம்பெற்ற முக்கியமான சில ‘கவ்வாலி’ வகைப் பாடல்களைப் பட்டியல் இட்டபோது எழுத்தாளர் இரா. முருகன் மேற்சொன்ன கவ்வாலியை அவசியம் பட்டியலில் இணைக்கச் சொன்னார். கரம் ஹவாவின் திரைக்கதை, வசனங்களுடன் இந்த கவ்வாலியையும் கைஃபி ஆஸ்மிதான் எழுதினார். ‘மௌலா சலீம் சிஷ்தி’ எனத் தொடங்கி பதேபூர் சிக்ரியில் இருக்கும் ‘சலீம் சிஷ்தி’ கல்லறையின் வெளிப்பரப்பில் நடக்கும் கவ்வாலி. இதனை வார்சி சகோதரர்கள் என அழைக்கப்படும், அஜீஸ் அஹமத் கான் வார்சி பாடினார். புதிய அலை வரவேற்கப்பட்ட நேரத்தில் இந்த கவ்வாலிப் பாடலும் வரவேற்கப்பட்டது. அதன் முக்கிய காரணம், வெகுஜன ரசனையும் துள்ளலும் இல்லாத கவ்வாலியாக அது அமைந்ததுதான்.

மாற்றுக் கருத்துகள் இருப்பினும், கவ்வாலி வகைப் பாடல்களே படிப்படியாக வெகுஜனத்தை ஈர்க்கும் முயற்சியில் எளிமையாக்கப்பட்டன. இறைவனையும் இறைநேசர்களையும் பாடிய கவ்வாலிகள் வெவ்வேறு வகைமைகளாகப் பிரிந்தன. எளிமையாயின, இறைக்காதலைப் பாடியவை இறைக்காதலெனச் சொல்லி மானிடக் காதலையும் பாடின, திருமண கவ்வாலி இன்னும் எளிமையாக்கப்பட்டது. அதனால், அதில் நகைச்சுவையும் சேர்க்கப்பட்டது. பின்னர் நிஜமான கவ்வாலி இறைநேசர் சந்நிதிகளிலும் எளிமையான கவ்வாலிகள், சில நேரங்களில் நகைச்சுவை கவ்வாலிகள் திரையிலும் என்றாகின.

கவ்வாலியின் நீர்த்த வடிவம் தமிழ்த் திரைப்படங்களிலும் இடம்பெற்றது. வல்லவனுக்கு வல்லவன் திரைப்படத்தில் ‘பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்’ என எஸ்.ஏ. அசோகனும் ஆர்.எஸ். மனோகரும் திரையில் பாடுவது தமிழ்ப்படுத்தப்பட்ட கவ்வாலி.

இப்படியான எளிமைப்படுத்தல்களை ரசிகமனப்பான்மையில் தவிர்க்க இயலாதவை. அவற்றை உயர்த்தியும் தாழ்த்தியும் பேசுவது தேவையற்றது. எளிமையாக்கப்படும் எதையும் எதிர்க்கவேண்டுமென்னும் அவசியம் இல்லை.

கரம் ஹவாவில் இடம் பெற்ற கவ்வாலி வெகுஜன ரசனைக்கான கவ்வாலி கிடையாது. அது இறைநேசர்களை நோக்கிப் பாடப்படுவது. படத்தில் ஆக்ராவின் இஸ்லாமியக் கலாசாரம் இடம்பெற வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட கவ்வாலியாக இல்லாமல், அது கதையுடன் சேர்ந்து தனக்கான இடத்தைப் பாடி நிலைத்துள்ளது.

இந்தியாவில் வாழும் குடும்பம், இந்திய அமைப்பின் மீது நம்பிக்கை வைத்த ஒரு பெரிய மனிதர், பணம், புகழ், சொத்து, அனைத்தையும் இழந்து வாழ்ந்துகெட்டாலும், உறவினர்கள் பாகிஸ்தானுக்குச் சென்ற பின்னும் பிடிவாதமாக இந்தியாவில்தான் இருப்பேன் என்னும் முடிவை எடுக்கும் மூத்தவர், எப்படிப் புலம்பெயர்தலுக்கு ஒப்புக்கொள்கிறார் எனப் படிப்படியாகக் கதையை நகர்த்திச் சென்றது கைஃபி ஆஸ்மி – ஷமா ஸைதி கூட்டணியின் திரைக்கதைத் திறனுக்கு என்றும் எடுத்துக்காட்டாக நிற்கும்.

புலம் பெயர்வதுதான் தீர்வா? முற்போக்குச் சிந்தனையாளர்களின் பங்களிப்பில் உருவான ஒரு படைப்பில் அப்படியான ஒற்றைத் தன்மைத் தீர்வு இருக்குமா? சலீமையும் சிக்கந்தரையும் மெல்ல மெல்ல நகர்த்தி புலம் பெயர்தலை மட்டுமே தீர்வாக அமைத்திருந்தால், கரம் ஹவா இவ்வளவு பேசப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குரியது. கதைகளின் முடிவு பார்வையாளர் அல்லது வாசகனின் கோணத்தில் வெவ்வேறாக இருப்பினும் முடிவென்னும் ஒன்றை நோக்கி நகர்வதுதான் கதை என்பது பொதுவிலக்கணமாக இருப்பினும், முற்போக்காளர்கள் இணைந்து பணியாற்றிய கலைப்படைப்பில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னான இந்தியாவுக்கு அவர்கள் என்ன தீர்வை முன்வைத்திருப்பார்கள்?

பாதிப் படம் நகர்ந்த பின்னர் இதன் முடிவு என்னவாக இருக்கும் எனப் பார்வையாளரை நினைக்கவிட்டது கரம் ஹவாவின் கலைத்தன்மைக்குக் கிடைத்த வெற்றி.

ராட்க்ளிஃப் கிழித்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கோடு, ஆக்ராவில் வாழ்ந்த முஸ்லிம் தொழிலதிபரின் வாழ்க்கையை எப்படி அலைக்கழித்திருக்கும் என்னும் கேள்விக்கு விடையெழுதும் முயற்சியில் முற்போக்காளர்கள் உருவாக்கிய இந்தக் கலைப்படைப்பு இந்தியாவில் இணைத்திரைப்பட – புதிய அலைத் திரைப்பட வரலாற்றில்முக்கியமான திரைப்படம். வெளியான காலகட்டத்தில் விருதுகளைக் குவித்தும், கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் நிரந்தர இடத்தையும் பெற்றிருக்கும் இது, தீவிரமான திரை ரசிகர்களுக்கு மட்டுமானது.

Author Image

அபுல்கலாம் ஆசாத்

ஸீரோ டிகிரி இலக்கிய விருதுப் போட்டியில் நெடும், குறும்பட்டியல்களில் இடம்பெற்றவர்.’கடற்கழியோடி’ நாவலுக்கு முதல் பரிசு வென்றவர். நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026
கரு உரு 05

கரு உரு 05

October 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?