The Talkie
Thursday, October 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள் கரு உரு

கரு உரு 05

The Talkie by The Talkie
October 1, 2026
in கரு உரு, தொடர்கள்
A A
0
கரு உரு 05
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon நாராயணி கண்ணகி

“ஓப்பன் பண்ணா…” என்கிற வார்த்தையைச் சொல்லாத இயக்குனர்கள் யாராவது இருக்கிறார்களா என்றால் இல்லை என்று சொல்வதே நியாயம். ஓப்பன் பண்ணா என்கிற இப்பதம்தான் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லும் அளவிற்கு முக்கியமானது. தேர்ந்த இயக்குனர்கள் கண்டதை எல்லாம் ஓப்பன் பண்ண மாட்டார்கள். சூப்பரான ஸீன் என்று அவர்கள் கண்டதை மட்டுமே சொல்வார்கள். 

இந்த ஓப்பன் பண்ணாவை ஓப்பனிங் ஸீனிற்கு மட்டும் சொன்னவர்கள் ஒவ்வொரு ஸீனிற்கும் திறந்து விட்டார்கள். 

தமிழ்த் திரைப்படங்களில் வெற்றிகரமாக ஓடிய, அல்லது ஆகச் சிறந்த திரைப்படம் என்று போற்றப்பட்ட சில திரைப்படங்களில் இடம் பெற்ற ‘காட்சி முதல்’களைப் பார்ப்போம். ‘ஓப்பனிங் ஸீன்’ என்பது, ‘ஓப்பனிங் ஸாங்’ என்றே மாறி விட்டதையும் ஓப்பனாக ஏற்க வேண்டும். 

இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்த காலத்தைப் பதிவு செய்யும் ‘பராசக்தி’ திரைப்படத்திலும் காட்சி முதலாக ஆடலும், பாடலுமே இடம் பெற்றுள்ளது. அதுவும் தமிழ் நாட்டில் இல்லை, அயல்நாட்டில் செல்வ செழிப்பான ஆடம்பர வாழ்க்கை வாழும் தனவந்தர்கள் ரசிக்கும் நடன நிகழ்ச்சி! நடன நிகழ்ச்சி முடிந்த பிறகே கதைத் தொடங்குகிறது. சொந்த மண்ணில், தாய் மண் தமிழ் நாட்டில் நடக்க இருக்கும்  தங்கையின் திருமணம் குறித்து சகோதர்கள் பேசுகிறார்கள். அண்ணன்கள் மூவருக்குமே தங்கையின் திருமணத்தைக் காண விருப்பம். ஆனால் ஒருவருக்குதான் டிக்கெட் கிடைக்கிறது. சிவாஜி கணேசன் மட்டும் சொந்த மண்ணிற்கு வருகிறார். வந்தவர் ஒரு நடன நிகழ்வைப் பார்க்க போகிறார். அங்கே பணம் மொத்தம் இழக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. முதல் காட்சி ஆடலும், பாடலும் வைத்தாலும் அங்கேயே மேற்கொண்டு கதை வளர்வதற்கான அதிர்வை விதைத்து விடுகிறார்கள். 

பாடலால் தொடங்கும் படங்கள் சிலவற்றை ஞாபகம் கொள்வதற்காக கேட்போம். ‘என் அண்ணன்’ திரைப்படம் பார்ப்போம்! எம்ஜிஆரின் பல படங்களில் குதிரையின் குளம்பொலி இருக்கும். எம்ஜிஆர் காலத்து சிறுவர்கள் “டொக், டொக்..” என்று வாயில் குரலெழுப்பி கொண்டு, தங்களை குதிரையாக பாவித்து கொண்டு, அல்லது குதிரை வீரனாக பாவித்து கொண்டு ஓடுவார்கள். அந்தக் காலத்து இசைக் கச்சேரிகளில் கையில் தேங்காய் மூடிகளை வைத்துக் கொண்டு குதிரை ஓடுவது போன்று வித விதமான டொக் டொக் இசை அமைத்து ரசிகர்களின் கைத்தட்டல்களை வாங்குவார்கள் இசைக் கலைஞர்கள்! என் அண்ணன் திரைப்படத்தின் ஓப்பனிங் ஸீன் என்பது அண்ணாசாலையில் ஓடி வரும் குதிரையின் கால்கள்தான்… குளம்படிகள்தான் இசை! அப்படியே பாடலும் ஓட ஆரம்பிக்கும் “நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா! நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!” கண்களுக்கு, செவிகளுக்கு, இதயத்திற்கு, மூளைக்கு என்று எல்லா நுட்பங்களையும் கொண்டாட வைக்கும். வேகம், தத்துவம், புரட்சி எல்லாம் துள்ளலாக கிடைக்கும். 

மன்னாதி மன்னனில் “அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிடர் உடமையடா” பாடி தமிழர்களின் செவி வழியாக மக்கள் திலகம் சார்ந்திருந்த அரசியல் குளுக்கோஸையே தத்துவமாக கொள்கையாக ஏற்றினார்கள். அந்தக் குளுக்கோஸ் வாத்தியாருக்கே வளம் சேர்த்தது. 

எம்ஜிஆர் முதல்வர் ஆவதற்கு முன்னர் கடைசித் திரைப்படமாக வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபனில் “இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. இப்படைத் தோற்பின் எப்படை வெல்லும்..” என்ற பாடல் வெறும் டைட்டில் ஸாங்காக அமைந்தாலும் பின்னாளில் முதல்வர் என்ற டைட்டில் வருவதற்கும் துணையாக இருந்தது. 

இதயவீணையில் அழகான எம்ஜிஆர் ஆடிப்பாடி இல்லை,இல்லை துள்ளலோடு ஓடிப்பாடி “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்.. காஷ்மீர் வொன்டர்ஃபுல் காஷ்மீர்..” ஆரம்பித்து கூடவே தமிழ் நாட்டை ஆள்வதற்கான  சுலோகங்களையும் சேர்த்து விடுவார். “சத்தியம்தான் நான் படித்த புத்தகமம்மா.. சமுத்துவம்தான் நானறிந்த தத்துவமம்மா..” அதோடு நின்றாரா? “அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்.. நேருவின் பேர் சொல்லும் பூமி இது..” என்று சொல்லி அப்போதையை கூட்டணிக்கும் வலிமை சேர்க்கிறார். எம்ஜிஆரைப் பொறுத்தவரை அவர் படத்தின் ஓப்பனிங் ஸாங் என்று கிடைத்தது எல்லாம், அவரின் அரசியலுக்கும், ஆட்சிக்கும் உருவாக்கப்பட்ட ஆரம்பமாகவே அமைந்தன. 

‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் எடுத்ததுமே டிரிய்யோ.. டிரிய்யோ.. டுர்ர்ருதான் “சத்தியம் நீயே தர்மதாயே.. குழந்தை வடிவில் தெய்வம் நீயே.. குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை.. குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே..” இந்த வரிகள் எல்லாம் எங்கே தொடங்கும் என்றால் டைட்டிலில் ஜெயலலிதா என்ற பெயர் இடம் பெற்றதும் தொடங்கும், அடுத்த பேர் லட்சுமி என்று வரும் வரைக்கும் இந்த நான்கு வரிகள் இருக்கும். ‘மாட்டுக்கார வேலன் வெளிவந்த காலத்தில் இந்தப் பாடல் முழுவதும் பசுவுக்காக மட்டும் எழுதவில்லை. செ.ஜெ.ஜெவிற்காக எழுதியது என்று பேசிக் கொண்டார்கள். “அம்மாவை அம்மா என்று அழைக்கின்ற சொல்லும்.. அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ…” என்ற சொற்கள் உருவானது பசுக்களுக்கானதுதான் காலம் அதை அந்த அம்மாவுக்கும் இணைத்து கொண்டது. 

‘நாளை நமதே’ திரைப்படத்தில் எம்ஜிஆர்கள் சிறுவர்களாக இருப்பார்கள். பெற்றோருக்கு திருமண நாள்! இப்போது வரை பிரசித்தி பெற்ற பெற்றோர்களிடம் பிள்ளைகள் கேட்கும் கேள்வியான “உங்க கல்யாணத்துக்கு எங்களை ஏம்மா கூப்பிடல?” என்ற பிரபலமான கேள்வி நாளை நமதே படத்தில்தான் இடம் பெற்றிருக்கும். அப்புறம் என்ன பாடல் தொடங்கி விடும். “நாளை நமதே! இந்த நாளும் நமதே! தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழிச் சென்றால் நாளை நமதே!”

பாடல் முடிந்ததும் சிறுவர்கள் பிரிந்து விடுவார்கள். படம் முழுவதும் நாளை நமதே பாடல் இடம் பெறும். பாடல்தான் பிரிந்த சகோதரர்களை சேர்த்து வைக்கும். ஐம்பது ஆண்டுகளாக குடும்பப் பாடல் என்று கேலிக்குள்ளாகி வந்தாலும் எம்ஜிஆர் அரசியலில் இறங்கிய போது, ஒவ்வொரு மேடையிலும் “நாளை நமதே” என்ற முழக்கத்தை சொல்லாமல் இருந்ததில்லை. வெல்லாமலும் இருந்ததில்லை. 

சரி, உதாரணத்திற்கு எடுத்துக்கொண்ட எம்ஜிஆர் படங்களை நிறுத்தி விட்டு மற்றவர்களையும் பார்ப்போம். 

சூப்பர் ஸ்டார் குதிரைகளை அடக்கி வைக்க முடியுமா? “ஒருவன் ஒருவன் முதலாளி! உலகில் மற்றவன் தொழிலாளி!” என்று தத்துவங்களோடு பறக்கும் குதிரை.  நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டுவின் நீட்சிதானே?

படிக்காதவன் திரைப்படத்தில் சிவாஜியின் பேரப் பிள்ளைகள் போலிருக்கும் தம்பிகளிடம் பாடும் “ஒரு கூட்டுக் கிளியாக.. ஒரு கூட்டுக் குயிலாக பாடு பண் பாடு..” என்ற பாடல் நாளை நமதே காட்சியின் காப்பி பேஸ்ட்டுதானே? 

கதை விவாதத்தில் என்ன செய்கிறார்கள்? 

90% காப்பி பேஸ்ட் செய்கிறார்கள்!

கதையை மட்டும் இல்லை, பாடலுக்கான காட்சிகளையும் சுட்டுதான் எடுக்கிறார்கள். மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். பாடல் காட்சிகள் வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியாது. படம் எடுத்து முடித்து வெளியாகி ரசிகர்களிடம் போவதற்கு முன்பு, பாடல்கள் போய் சேர்ந்து விடும். பாடல்கள் வெற்றி அடைந்தால் படமும் வெற்றி அடைந்து விடும். அற்புதமான பாடல்கள் அமைந்த சில படங்கள் தோல்வியும் அடைந்து இருக்கின்றன. இளையராஜா இசையையும், பாடல்களையும்தான் தருவார். டைரக்சனுமா பண்ணிக் கொடுப்பார்? 

ஆனால், வெறும் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் இருக்கின்றன. சின்னத்தம்பி, நினைவெல்லாம் நித்யா, கரகாட்டகாரன், அன்னக்கிளி என்று பெரிய பட்டியல் போடலாம். 

ஒரே ஒரு பாடல் ஒரு படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியதும் உண்டு. ‘திருடா திருடி’ படத்தில் ‘மன்மத ராசா.. மன்மத ராசா..’

மன்மத ராசா பாடலின் வெற்றிக்குப் பிறகு அதே மாதிரி ஆட்டமும் பாட்டும் காப்பி பேஸ்ட் பண்ண படங்கள் ஓடவில்லை. 

எண்பது, தொன்னூறுகளில் சில்க் சுமிதாவின் ஒரு கிளாமர் குத்து ஆட்டமும், பாட்டும் இருந்தால்தான் விநியோகஸ்தர்கள் படங்களை வாங்கினார்கள். அது சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும், உலக நாயகன் படமாக இருந்தாலும் சில்க்கின் டான்ஸ் இருக்க வேண்டும். 

‘இந்தக் கதைக்கு சில்க்கின் அயிட்டம் டான்ஸ் தேவைப்படாதே..” என்று இயக்குனர்கள் சொன்னால்.. 

“எங்களுக்கு உங் கததான் தேவப்படாது.. அயிட்டம் மட்டும் போதும்” என்பார்கள் ரசிகர்கள். 

சில்க் மேலோகத்தில் ஆடப் போனதும், அவரின் இடத்தை கதாநாயகிகளே பிடித்து கொண்டார்கள். மகாத்மா மறைந்த பிறகு, எல்லா அரசியலவாதிகளும் மகாத்மா வேடம் போட்ட மாதிரி, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு எல்லா நடிகர்களும் எம்ஜிஆர் ஆக நினைத்துக் கொண்ட மாதிரி, சிலுக்குக்கு பிறகு எல்லா நடிகைகளும் முழுப்பட சிலுக்காகவே மாறினார்கள். அப்படி மாற முடியாதவர்கள் அவசர அவசரமாக அம்மா பதவிக்கும், அக்கா பதவிக்கும் புரொமொசன் செய்யப்பட்டார்கள். 

கதாநாயகியாகவே நடிக்க வேண்டிய சில்க் ஸ்மிதா அயிட்டம் டேன்ஸ் நடிகையாகவே வாழ்வை முடித்துக் கொண்டார். அயிட்டம் டேன்ஸ் ஆட மட்டும் தகுதி கொண்டிருந்தவர்கள் கதாநாயகிகளாக நடித்தார்கள். பெரும்பாலான திரைக்கதைகளில் ஹீரோயின்களுக்கு வேறு வேலைகள் எதுவும் கிடையாது. ஹீரோக்கள் சமூக விரோதிகளோடு ஃபைட் செய்து விட்டு வந்ததும் ஒரு அயிட்டம் டேன்ஸ் போடுவது மட்டுமே வேலை. ஒரே இரண்டு மூன்று அயிட்டமும் உண்டு. 

சில நல்ல திரைப்படங்களை வெளியிட்டு அது ஓடாமல், ஒரு குத்துப் பாடலை இணைத்த பிறகு ஓடி இருக்கின்றன. மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படத்தில் அப்படி சேர்க்கப்பட்டது தான் “வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்.”

அதன் பிறகு மிஷ்கினின் அடுத்தடுத்த படங்களில் “கண்ணதாசன் காரைக்குடி..”யும், “கத்தாழ கண்ணால குத்தாத”யும் இடம் பிடித்தன. அவர் பெரிதாக வென்ற பிறகு அயிட்டம் ஸாங் சமாச்சாரத்தை டைவர்ஸ் செய்தார்.

பாட்டைப் போட்டு பாடாய் படுத்துவதில் டி.ராஜேந்தருக்கு போட்டி டி.ராஜேந்தர்தான். ஓப்பனிங்கில் இருந்து என்டு வரை ஒன்பது பாட்டுகளைப் போட்டுத் தள்ளிவிடுவார். அற்புதமான பாடல்களும் உண்டு. டிஆர் வசனம் பேசினாலே எதுகையும், மோனையும் மயிர் கூச்செரியும். பாடல் விசயத்தில் சொல்லவே வேண்டாம். ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தில் ஒரு ஓப்பனிங் ஸாங். ப்ளஸ் டூ பாஸாகும் மாணவர்கள், கொண்டாட்டமாக “இனிமேல் காலேஜிதான் கட்டடிப்போம்.. காதலிப்போம்..” என்று பேசிக் கொள்வார்கள். அப்புறம் என்ன அந்த வசனங்களே பாடல் வரிகளாக அவதாரம் எடுக்கும். “கட்டடிப்போம், கட்டடிப்போம் காலேஜிக்கு.. காதலிப்போம், காதலிப்போம் மேரேஜிக்கு… அய்யய்யோ ஆத்தா.. முறைச்சி பாத்தா..” இதுதான் ஓப்பனிங் ஸாங். தத்துவமாகும், தேசப் பற்றாகவும், அரசியலாகவும், சங்கீதமாகவும், கலையாகவும், நடனமாகவும் தொடங்கிய தொடக்க பாடல். இப்படியும் மாற்றத்திற்கு பலியானது. 

இயக்குனர் பாலச்சந்தரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பாடல்களில் தொடங்கும், கதாபாத்திரங்கள் பாடகர்களாகவே இருப்பார்கள். பாடல்களே  கதாபாத்திரங்களாக அமைந்து விடுவதும் உண்டு. 

‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் தொடங்கும் பாருங்கள் ‘என்ன சத்தம் இந்த நேரம்! உயிரின் உயிராய்..’ பாடல்! முதல் முறையாக காண்பதை விட இரண்டாம் முறை, மூன்றாம் முறை காணும் போது பாடல் வரிகளும், கேமிரா பிடித்த காட்சிகளும், காதலர்களாக நடித்த நடிகர்களின் பார்வைகளும், உடல் அசைவுகளும் பிரமிக்க வைக்கும். இந்தப் படத்திற்கு இதைவிட சூப்பரான ஆரம்பம் யோசிக்க முடியுமா என்று யோசித்தால், யோசிக்க முடியாது. இந்தப் பாடலே இல்லாமல் இருவரும் தற்கொலை முயற்சி செய்தால் எப்படி இருக்கும்? ஒரு தற்கொலை ஸீனே தற்கொலைச் செய்து கொண்ட மாதிரி இருக்கும். 

ரஜினிகாந்த் அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ படமும் பாடலில்தான்  தொடங்கும் ‘ஏழுஸ்வரங்களில் எத்தனைப் பாடல்?’ இந்தப் பாடல் ஸ்வரங்களை மட்டும் குறிப்பிடாமல் காணும் மனிதர்களிடம் கிடைக்கின்ற உளவியல் மாறுபாடுகளையும் சொல்லும். 

சும்மா ஒரு பொழுதுபோக்கு பாடலில் தொடங்கலாம் என்று இந்தக் காலத்தில் அடி பொளி பொழிகிறார்கள். இசை அடிகளுக்கு பேரே மரண அடியாம், ரண அடி என்றும் சொல்லலாம். பாலச்சந்தர் படங்களில் மனிதர்களின் மாறுபட்ட அவதானிப்புகளையும், அவலங்களையும், அவதிகளையும், இரட்டை உறவுகளையும், ரெண்டு பட்ட உறவுகளையும், வறண்ட அன்பையும், முரண்டு பிடிக்கும் காமத்தையும் காட்டுவார். 

கமல் நடித்த ‘மன்மத லீலை’யிலும் ஆரம்பப் பாடல் உண்டு. தியாகராஜ பாகவதரின் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’வை சின்ன பிட்டாக போட்டு ஆரம்பிப்பார். கமல்ஹாசன் ஒரு குதிரையில் உட்கார்ந்திருக்க, அந்தக் குதிரை பின்னால் ஓடும். குதிரை பின்னால் ஓடும் கற்பனையும், அதைப் படமாக்கிய விதமும் சாதாரணமானதல்ல பாலச்சந்தர் போன்ற மேதைகளால் மட்டுமே முடியும். இதற்காக எத்தனை நாட்கள் யோசித்து இருப்பார்? குதிரை பின்னால் ஓடுமா? சாத்தியமா? சாத்தியம்தான்! அப்படி ஒரு சிந்தனை தோன்றுவதுதான் அற்புதம்! 24 மணி நேரமும் ‘இந்திந்த காட்சிகளை எப்படி வைக்கலாம்?’ என்று யோசித்து கொண்டே இருக்கும் புத்திக்கு மட்டுமே அற்புதங்கள் கிடைக்கும். 

கமலை சுமந்து கொண்டு குதிரை முன்னால் ஓடுகிற மாதிரி படம் பிடித்து விட்டு, அந்த ஃபிலிமை ரிவர்ஸில் ஓட வைக்கலாம், அல்லது ஒரு வாகனத்தில் குதிரையை ஏற்றி விட்டு, குதிரை மேல் கமல்ஹாசனை உட்கார வைத்து விட்டு, வாகனத்தை ரிவர்ஸில் ஓட வைத்து எடுக்கலாம். எப்படியோ, கிராஃபிக்ஸ் என்ற நுட்பம் வருவதற்கு முன்பே நுட்பமாக எடுக்கப்பட்ட காட்சி! அதன் பிறகு ‘மன்மதலீலை மயக்குது ஆளை’ ஆரம்பிக்கும். 

‘மன்மத லீலை’யில் பாலச்சந்தர் கையாண்ட நுட்பத்தை கிராஃபிக்ஸ் வந்த பிறகு கமல் ஹாசன் ‘மன்மத அம்பு’ படத்தின் பாடல் காட்சியில் பாடி எடுத்திருப்பார் “நீ..ல.. வா..ன..ம்.. நீ..யு..ம்.. நா..னு..ம்.. க ண் க ளே பா சை யா ய்.. கை க ளே.. ஓ சை யா ய்.. வை ய மே.. கோ யி லா ய்.. வா ன மே வா யி லா ய்..”என்ற இந்தப் பாடலுக்கு ஹீரோவும், ஹீரோயினும் உட்கார்ந்து இருக்கும் மகிழுந்து பின்னாலேயே போய்க் கொண்டு இருக்கும். ஆனால் இது ஆரம்ப காட்சி அல்ல. 

‘அவர்கள்’ திரைப்படத்தில் ஒரு பொம்மையிலிருந்து கதையைத் தொடங்குவார் இயக்குனர் சிகரம். பொம்மை இப்படி பேசும். ‘இயக்குனர் பாலச்சந்தர் ஒரு புதுமுகத்தை இந்தப் படத்தில் அறிமுகம் செய்கிறார். அது வேறு யாருமில்லை, நான்தான்’ என்று பொம்மை பேசும். ‘என் கூட வேற யார் யார் நடிச்சிருக்காங்க தெரியுமா? முதலில் இந்தப் படத்தின் கதாநாயகியை பார்ப்போம்’ என்று பேசும். எல்லா கேரக்டர்களையும் பொம்மை அறிமுகம் செய்யும். இந்த பொம்மை பிறகு பாடும். 

‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற நினைக்கும் போதெல்லாம் இனிக்கும் படத்தின் ஆரம்ப காட்சியில் பொம்மைக்கு பதிலாக கமல்ஹாசனே இசைக் கச்சேரி மேடையில் ஒவ்வொரு கேரக்டரையும் ஹாஸ்யத்துடன் அறிமுகம் செய்து விட்டு, கமல்ஹாசன் வடிவத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் பின்னால் ஒளிந்து கொண்டு, தன்னைத்தானே அறிமுகம் செய்வார். பிறகு பாட வருவார் ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்! ராத்திரிகள் வந்து விட்டால், சாத்திரங்கள் ஓடி விடும்.” பார்வையாளர் இடத்தில் சில கதாபாத்திரங்கள்! முக்கியமாக கதாநாயகி. எனக்கு இந்தக் காட்சி மட்டும் அபூர்வ ராகங்களின் மாடர்ன் நீட்சியாக தோன்றியது. 

இந்தப் படத்தை பொறுத்தவரை பாடல் அவசியமாகும். கமல் இசைக்குழு நடத்துபவர். படம் முழுவதும் பாடலும் கதாபாத்திரம் என்பதால் பாடலில் தொடங்குவது அவசியமாகி விட்டது. 

புது வசந்தம்! புதிய புதிய இயக்குனர்கள் களத்தில் இறங்குவதற்கு முன்னோடியாக இருந்த இயக்குனர் விக்ரமனின் முதல் படம், முதல் படத்தின் முதல் காட்சியும் பாடல்தான் அதுவும் “முதல் முதலா.. முதல் முதலா பாடும் பாட்டு..” என்றே தொடங்கும். 

தேசிய விருது பெற்ற ‘காதல் கோட்டை’ திரைப்படத்தில் எடுத்ததுமே பாடல்தான், டைட்டில் ஷாங்! கதைக்கு பாடல் அவசியம் இல்லை. ஆனால் காதல்தான் கதையின் ஒன் லைன் என்பதால் காதலைப் புகழ்ந்து தள்ளுகிற ஒரு பாடலை காமரசம் ததும்ப கொடுத்திருந்தார். ‘காலமெல்லாம் காதல் வாழ்க! காதலென்னும் தேவன் வாழ்க! காதலே நிம்மதி! கனவுகளே அதன் சன்னதி’

டைட்டில் ஸாங் முடிந்ததுமே கதாநாயகியின் சர்டிபிகேட் அடங்கிய ஹேண்ட் பேக்கை ஒரு திருடன் திருடிக் கொண்டு போவான். உடனே இரயிலிலும், பிளாட்பாரத்திலும் ஆட்டம் பாட்டம். இரயில் நிலையத்தில் தொடங்கி, இரயில் நிலையத்தில் முடியும் கதை என்பதால் ஒரு இரயில்வே நடைபாதையில் படம் பிடித்து இருப்பார்கள். “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா.. என்னப் பாக்காம போறாளே சந்திரிகா! கண்ணு அழகு கண்ணு…” 

ஒரு பாடலை படம் பிடிக்கவே வெளிநாடுகளுக்கு போன கலாச்சார நோய் இன்னும் குணமாகவில்லை. ‘கனவுப் பாடல்’ என்கிற கதைக்கு தேவையற்ற பிசாசு திரையுலகை ஆண்டுக் கொண்டிருக்கிறது. 

விஜயின் துப்பாக்கி படத்தில் அப்படித்தான். பாடலுக்காகவே இராணுவ வீரர்கள் வந்த இரயிலின் இஞ்சின் பழுதாகி ஒரு அழகான இடத்தில் இரயில் நிற்கும். ‘இராணுவ வீரர்கள் விடுமுறையில் வீட்டிற்கு வருவதற்கு எல்லாம் தனி இரயில் விடுகிறார்களா?’ என்று கேட்க கூடாது. ‘சுத்தி ஒரு கூட்டம். வெட்ட வெளி ஆட்டம்! சுத்தி மேகக் கூட்டம், லீவு வுட்டா ஓட்டம்!’ முதல்வரின் பாட்டும், டேன்சும் அமர்களமா இருந்ததா? அதுதான் முக்கியம். 

கூடவே இரயில் நிலையத்தில் படம் எடுத்தால் அந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்பது தமிழ்த் திரையுலகின் சென்டிமென்ட்! ‘ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு ரயிலே.. கலக்குது பாரு ஸ்டைலே..’ என்று பாட்டுக்காக இரயில்வே ஸ்டேஷன் ஸ்பாட்டையே வைப்பார்கள். 

ஷங்கர் எப்படி பிரமாண்டமான இயக்குனர் என்று பெயர் எடுத்தார்? பாடல் காட்சிகளில் பணத்தை கொட்டிதான்.. சாலையில் படம் வரைவது, மலைக்கு பெயிண்ட் அடிப்பது, மலையையே எரிய வைப்பது, கண்ணாடியில் பேருந்து உருவாக்குவது. உலகில் உள்ள உலக அதிசயங்கள் முன்னால் உலக அழகியை ஆட வைப்பது என்று பாடல் காட்சிகளில் மட்டும் பிரமாண்டங்களை கூடுதலாக கொட்டி பேரெடுத்தார். 

இயக்குனர் இமயத்தின் படங்களைப் பேசாமல் விட்டால், பாவச்செயலாகி விடும். பாரதிராஜாவின் படங்களில் முதலில் அவரின் குரல்தான் மணியோசையாக ஒலிக்கும். ‘என் இனிய தமிழ் மக்களே..’ என்று. அவரின் முதல் அவதாரமான 16வயதினிலே படத்தில் டைட்டிலிலேயே பாடல்தான் ‘சோளம் வெதைக்கையிலே சொல்லி புட்டு போன புள்ள… சோளம் வெளைஞ்சி காத்து கெடக்குது… சோடிக்கிளி எங்க கெடக்குது…  சொன்ன சொல்லு என்ன ஆச்சு..’

தமிழ் திரைப்படத்தின் அணையாச்சுடர் உதிரிப்பூக்கள் திரைப்படமும் டைட்டில் ஷாங்கில்தான் தொடங்குகிறது. ‘ஏய் இந்தப் பூங்காற்று.. சின்ன பூவோட நீராட்ட..’ என்று. 

இயக்குனர் அமீர் நிறையப் படங்கள் இயக்காவிட்டாலும் பருத்தி வீரன் வெற்றி பத்து படங்கள் வெற்றி பெற்றதற்கு சமம்! அதன் ஆரம்பமே அமர்களமான திருவிழா! ஆட்டம், பாட்டு என்று கும்மாளமாக இருக்கும். “பரம சைனா எங்க ஊரு.. பக்கம் வந்தா சிங்கப்பூரு.. வாருக்காக பயந்து நாங்க.. வந்த இடம் இந்த ஊரு…”

மணிரத்னம் படங்களுக்கு இந்திய அளவில் தனி இடம் உண்டு. உலக அளவிலும் பேசப்பட்டவர் அவருக்கு கிடைத்தது மரியாதையான இடமும் கூட. அவரின் படங்களும் பாடலோடுதான் லோடாகும் என்றாலும், பாடலுக்கு முன்பாக அவர் வைக்கிற சுச்சுவேசன் ரசிகர்களை விமானத்தில் ஏற்றி உட்கார வைக்கிற மாதிரி, மேகத்தில் ஏற்றி உட்கார வைக்கும். வானவில்லின் மீது உட்கார வைக்கும். நேராக நம் இதயத்திற்கே நம்மை கொண்டு வந்து சேர்க்கும். 

நாயகன் திரைப்படத்தின் ஆரம்ப காட்சியைப் இங்கே ஒரு முறை பார்ப்போம். 

ஒரு சின்னப் பையன் ஒரு போலீஸ் அதிகாரியைக் கத்தியால் குத்தி விட்டு ஓடுவான். அவனைப் போலீஸ் துரத்தும். அங்கே ஆரம்பிப்பார் மணிரத்னம், இல்லை, இல்லை இளையராஜா! இல்லை, இல்லை மணி ரத்னம். இல்லை,இல்லை இளையராஜா! “தென்பாண்டி சீமையில.. தேரோடும் வீதியில.. மான் போல வந்தவன யார் அடிச்சாரோ.. யார் அடிச்சாரோ.. விளையும் பயிரே அழுவாத.. அழுதா மனசு தாங்காதே..”

விரிவாக (தலைமறைவாக இருக்கும் ஒரு தீவிரவாதியை அவனுடைய சிறுவயது மகனை வைத்தே பிடித்த காவல் துறை அதிகாரி என்கவுண்டர் செய்து விடுவார். தந்தை கொல்லப்படும்போது, அவரின் தோளில் இருப்பான் மகன்! 

தந்தையின் சிதை எரிகிறது. சிறுவன் கொள்ளி வைத்து விட்டு சிதையின் முன்பு நின்றிருக்கிறான். சுற்றிலும் போலீஸ்காரர்களும் நின்றிருக்கிறார்கள். மணிரத்னம் படமே என்றாலும் அங்கே எதற்காக போலீஸ்காரர்கள் நிற்கிறார்கள், அவர்கள் என்ன உறவினர்களா? என்று கேள்வி கேட்கக் கூடாது. அந்தச் சின்னப் பையன் ஆவேசத்துடன் ஒரு போலீஸ்காரர் கையில் இருந்த துப்பாக்கி பேனட்டை (கத்தி) (துப்பாக்கியில் சொருகி இருக்கும் கத்தி இழுத்தால் வந்து விடுமா?) பிடுங்கி தந்தையைக் கொன்ற அதிகாரியைக் குத்தி விட்டு ஓடுவான். 

தளபதி படத்திலும் அழுத்தமான ஒரு காட்சியை வைத்து விட்டு இளையராஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவார். 

கல்யாணம் ஆகாமலேயே ஒரு பெண் பிள்ளையைப் பெற்று விடுவாள். அதை கூட்ஸ் வண்டியில் போட்டு விடுவாள். (நவீன குந்தி) பிறகு பதறி அழுவாள். 

“சின்னத் தாயவள் பெற்ற ராசாவே.. முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே..” மனசு கனத்து விடும். 

மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில் ஓப்பனிங் ஸாங் நாயக பாத்திரத்தை புகழ்கின்ற மாதிரியும், நாயகனின் வீரதீர கதையைச் சொல்கிற மாதிரியும் பாடல் அமைந்திருந்தது. “காட்டுவழி போற புள்ள கவலைப்படாத, காட்டுபுலி வழி மறைக்கும் கலங்கி நிக்காத மம்பட்டியான் பேர சொன்னா மல ஒதுங்கும் பாரு..”

நான்கு கமல்ஹாசன்கள் நடித்த மைக்கேல் மதன காமராசன் படத்தில் “கதை கேளு கதை கேளு மைக்கேல் மதன காமராசன் கதையை நீயும் கேளு” என்று நீளும். 

சின்னக் கவுண்டர் படத்தில் ஹீரோவை வானளவு புகழும் “சுத்தி போட வேணுமய்யா சின்னக் கவுண்டரே..” பாடல்! 

எஜமான் படத்தில் “எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்…” பாடல்! 

நாட்டாமை படத்தில் “நாட்டாமை காலு பட்டா நல்ல வெள்ளாம வெளையுமடி.. நாட்டாமை கையசைச்சா மாசம் நாலு மழ பெய்யுமடி..” பாடல்! 

இது நாயக பிம்பத்தை உயர்த்தி கட்டும் பாடல்கள். 

ராஜ்கிரண் படங்கள், ராமராஜன் படங்கள், கஸ்தூரி ராஜா படங்கள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் ஆரம்ப காட்சி என்பது இளையராஜாதான். கதையைப் பிடிப்பதற்கு முன்பு இளையராஜாவைப் பிடித்த காலம் அது. ராகதேவா டேட் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறார் தேனிசை தென்றல் தேவா! என்று ஓடிய காலம்! 

நீங்கள் கேள்வி கேட்பீர்கள் “ஆரம்ப காட்சி பாட்டுதான் என்று முடிவு செய்யும் அரைத்தமாவுலகில் கதை விவாதம் புரிவதற்கு அப்படி என்ன தேவை இருக்கிறது என்று. 

பெருந்தேவை இருக்கிறது. ஒரு சில கதைகளில் எந்தப் படத்தையும் மாட்ட முடியாத தேவையில்லாத ஆணியாக பாடல் இருக்கலாம், ஆனால் சில நல்ல கதைகளில் மொத்த கதையையும் பிரேம் போட்டு மாட்ட கூடிய ஆணியாக பாடல் இருக்கும். ஒரு ஆரம்ப பாடலிலேயே ஹீரோவின் படிப்பு, வேலை, குடும்பம், குணம், பொருளாதார வசதி சொல்லி விட முடியும். காட்சியாக காட்டி விட முடியும். பெரும்பாலான ஆரம்பப் பாடல் காட்சியை ஆரம்பத்தில் எடுக்க மாட்டார்கள். படம் மொத்தமும் எடுத்து முடித்த பிறகு கடைசியாக ஆரம்பப் பாடலை முடிவு செய்வார்கள். அப்படி கடைசியாக ஆரம்பப் பாடலை உருவாக்கும் போது, இரண்டு மணி நேரம் ஓடுமளவிற்கு எடுத்த படங்களில் இருந்து ட்ரைலர் போல இரண்டு நிமிடங்களுக்கு வெட்டி வெட்டி சேர்க்கலாம். 

சரி, கதை விவாதம் எப்படி ஆரம்பிக்கிறது என்றால், பாடலில் ஆரம்பிக்க மாட்டார்கள். முதலில் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைத்து விட வேண்டும் என்று அடித்து கொள்வார்கள். அதுதான் கிடைக்காது. ஒரு காட்சிக்காக நூறு காட்சியை யோசிப்பார்கள். கடைசியாக எதையும் தீர்மானிக்க முடியாமல் பாடலை வைத்து விடுவார்கள். 

எத்தனை விதமாப் பண்றாங்கன்னு ஒரு பட்டியல் போட்டோம்னா

_ஒரு பட்டியலும் போட முடியாது.

ஒவ்வொரு கதை விவாதமும் ஒவ்வொரு வகை_அதுவே ஒரு கதை.

டீ கடை எதிரில் நின்று கொண்டு தேவதூதுவர்கள் யாரேனும் இறங்கி வந்து டீ வாங்கி தருவார்களா என்று காய்ந்த உதடுகளோடு காத்திருந்த காலைகளில் கதை விவாதம் நடப்பதுண்டு. எனக்குத் தெரிந்த இயக்குனர் ஒருவருக்கு நன்றாக பாட வரும். எனக்கு டீ கடையில் உட்கார்ந்தோ, நின்றோ சத்தமாக பேசுவது பிடிக்காது. அந்த இயக்குனருக்கு மெதுவாத பேச வராது. இந்த சிச்சுவேசனுக்கு பாட்டு இப்படி இருக்கணும், அந்த சிச்சுவேசனுக்கு பாட்டு அப்படி இருக்கணும்.. என்று சத்தமாகவே பாடுவார். அவரிடம் ஆலோசனைகள் கேட்டு பாடல் காட்சி வைத்த பெரிய இயக்குனர்கள் உண்டு. ஆனால் அவர் ஒரு படமோ, ஒரு பாடல் காட்சியோ இயக்கவில்லை. ‘வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை, புத்திசாலி மனிதர்கள் ‘வெற்றி’ காண்பதில்லை’ என்பதும் எல்லோரும் அனுபவிக்கும் சொத்துதானே? 

கதை லீக் ஆகிவிட கூடாது என்று பெரும்பாலான இயக்குனர்கள் டீ கடையில் கதை பேச மாட்டார்கள். ஆனால் பெரும்பாலும் டீ கடையில்தான் கதை பேசுவார்கள். ஆரம்ப நிலையில் வாய்ப்பு தேடும் இயக்குனர்களுக்கு பெரிய பெரிய ஓட்டல்களில் ரூம் போட வசதிகள் ஏது? டீக்கடையில் டீ யைக்

ஊட்டி கொடைக்கானல் பாண்டிச்சேரி மகாபலிபுரம் போன்ற இடங்களில் ரூம் போட்டும் நடக்கும். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அந்தமான், ஆஸ்திரேலியா அமெரிக்கா பறந்து சென்று விவாதம் நடப்பதும் உண்டு. அப்படி வெளி நாடுகளில் ரூம் போட்டு பேசி கிராமியப் படங்களை எடுத்திருக்கிறார்கள். கிராமியச் சூழலில் பேசி உருவாக்கிய கதைகளை பெரும் நகரங்களில் எடுத்திருக்கிறார்கள். 

திருப்பதி, திருச்செந்தூர், சீரடி, புட்டபர்த்தி என்று இறையூர்கள் சென்று அறை எடுத்து பக்தியுடன் கதை அலசுவதும் உண்டு. அது பகுத்தறிவு போதிக்கும் படமாக மாறியதும் உண்டு. 

சிவன் பார்க், நடேசன் பார்க், கடற்கரை போன்ற பொழுது போக்கிடங்களிலும் கதை பேசுவதுண்டு

தயாரிப்பாளர் வீடு எடுத்து அதை அலுவலகமாக்கி கொடுத்து அலுவலகத்தில் பேசுவதும் உண்டு. இதுதான் முறையான கதை விவாதம். 

மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு ‘பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ அதே ஜனகராஜ் சந்தோஷத்தோடு ஃபிகர்களை தள்ளிட்டு வரமாதிரி ஃப்ரண்ட்ஸாரை தள்ளிட்டு வந்து கதவை கெட்டியா மூடி கதயடிக்கிறதும் உண்டு! இப்படி ஒவ்வொரு விவாதமும் ஒவ்வொரு வகை. 

டீக்கடை முன்பு தெருவில் நின்று பேசின கதை சூப்பர் டூப்பர் ஹிட்டானதும் உண்டு. அமெரிக்காவில் ரூம் போட்டு அமைத்த கதை அட்டர் ப்ளாப்பானதும் உண்டு. எங்கு பேசினால் என்ன? நல்ல கதைக்கு நல்ல பாட்டு அமைவது நல்ல ஜோடி அமைவது போல்தான். 

இப்போது இந்த விவாதமும் உங்களின் வெற்றிக்கானதுதான்.. 

விவாதிப்போம்!

Author Image

நாராயணி கண்ணகி

ஸீரோ டிகிரி நாவல் விருதாளர். வாதி, அலர், தப்பு ஆகிய நாவல்களின் ஆசிரியர். திரைக்கதை உருவாக்கத்தில் பங்கெடுப்பாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026
கரு உரு 05

கரு உரு 05

October 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?