பாஸ்கர் சக்தி
‘காகஸ் கே பூல்’ திரைப்படத்தின் தோல்வி குருதத்தின் மனதில் ஏற்படுத்திய சந்தேகமும், மனவேதனையும் ஒரு கலைஞனுக்கு நேரக்கூடாதவை. தனது கணிப்பு பொய்யாகிப் போன ஏமாற்றம் அல்ல குருதத்துடைய வலி. ஒரு கமர்ஷியல் படம் ஃப்ளாப் ஆகி இருந்தால் குருதத் இந்த அளவுக்கு உடைந்திருக்க மாட்டார். ஆனால், `காகஸ் கே பூல்’ அவர் தன் மன உணர்வுகளோடு நிகழ்த்திய ஒரு துயர் மிகுந்த உரையாடல். எல்லா விதமான லௌகீக அங்கீகாரங்களும், பெயரும் , புகழும் கிடைத்தும் கூட தன் மனம் நாடுகிற ஒரு அன்பு கிடைக்காத துயரம் வெகு ஆழமானது. அந்தத் துயரை, ஒரு கலைஞனுக்கு நேர்கின்ற மன உளைச்சலை அவர் இத்திரைப்படத்தில் காட்டினார். அதனை மிகுந்த கலைநயத்துடனும், நேர்மையுடனும் திரைப்படமாக்கியிருந்தார். ஒரு சினிமாவாக அது தன்னளவில் சிறப்பாக வர வேண்டும் என்று பெரும் பொருட்செலவு செய்தார். அதன் உருவாக்கத்தின் போது வந்த மாற்றுக்கருத்துகள், விமர்சனங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் அவர் செய்த படம்,’காகஸ் கே பூல்’
அது ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டதும், தன்னையே ரசிகர்கள் நிராகரித்ததாக அவர் உணர்ந்தார். பால்கனியில் இருந்து அவர் பார்த்துக்கொண்டிருக்க, திரையின் மீது ரசிகர்கள் செருப்பை வீசிய சம்பவம் அவரது மென்மையான மனதை எவ்வளவு புண்படுத்தியிருக்கும் என்பதை உணர முடிகிறது.
எனவே முழுக்க கைவிடப்பட்ட மனநிலையில் அவர் சொன்ன ஸ்டேட்மென்ட்தான், “இனி நான் படம் இயக்கப் போவதில்லை “என்கிற அந்த ஸ்டேட்மென்ட்.. சில நேரங்களில் சில வார்த்தைகள் பலித்து விடுகின்றன.
குருதத் சொன்ன இந்த வார்த்தையும் பலித்து விட்டது. அதன் பின் அவரது தயாரிப்புகளில் பாடல்களை மட்டும் அவர் இயக்கினார். ஹீரோவாக நடித்தார். ஆனால் முழுமையாக ஒரு படத்தை அதன்பின் அவர் இயக்கவேயில்லை.
`காகஸ் கே பூல் ‘ திரைபடத்தின் தோல்வி மனரீதியாக அவரை பாதிப்புக்கு உள்ளாக்கியது மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பெரும் வீழ்ச்சியின் விளிம்பில் நின்றார் குருதத். அவரது கம்பெனியின் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே சிக்கல் ஏற்பட்டது.
அப்ரார் ஆல்வி குருதத் கம்பெனியில் மாதாந்திரமாக நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அவரிடம், `கம்பெனியின் நிதிநிலையை உத்தேசித்து உங்களுக்கு சில காலம் மாதாந்திர சம்பளம் வழங்க இயலாது.நீங்கள் வெளிக்கம்பெனிகளுக்கு வேண்டுமானால் படம் பண்ணிக் கொள்ளலாம்,’ என்று கடிதம் தரப்பட்டது. அப்ரார் அதனை ஏற்றுக் கொண்டு வேறு கம்பெனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கதை வசனம் எழுதப் போய் விட்டார்.
இத்தனை பொருளாதார நெருக்கடியிலும்,. அடுத்து நாம் வண்ணப்படங்கள் எடுக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்பத்தை மூர்த்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கம்பெனி செலவில் தனது கேமராமேன் மூர்த்தியை ஐரோப்பாவுக்கு அனுப்பினார் குருதத். புகழ் பெற்ற `கன்ஸ் ஆஃப் நவரோன்’ திரைப்படம் அப்போது கிரீஸ் நாட்டில் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தது. மூர்த்தி அங்கு சென்றார். குருதத் மூர்த்தியை அனுப்புகையில் மூர்த்தி சொன்னார்.
“ ஏற்கனவே கம்பெனில பணமில்லை. இந்த நிலைமையில எதுக்கு என்னை செலவு பண்ணி அனுப்பணும்” என்று மூர்த்தி தயங்க , குருதத் `பரவாயில்லை’ என்று அவரை அனுப்பி வைத்தார்.
இப்போது அடுத்த படத்தை ஆரம்பித்து கம்பெனியின் நிதிநிலையை சீராக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் உடனடியாக தனது அடுத்த தயாரிப்பை ஆரம்பித்தார் குருதத்.
`சௌத்வின் கா சாந்த்’ (Chaudhvin Ka Chand) திரைப்படம் தயாரானது.. அது இஸ்லாமிய வாழ்வியலைப் பின்னணியைக் கொண்ட திரைப்படம் . ஸாகிர் உஸ்மானி என்பவர் எழுதிய கதையினை குருதத் வாங்கினார். அதனை இஸ்லாமிய வாழ்க்கையை அறிந்த ஒருவர்தான் இயக்க வேண்டும் என்று இயக்குனர் சாதிக் என்பவரை தேர்ந்தெடுத்தார். இயக்குனர் சாதிக் ஏற்கனவே படங்கள் இயக்கியவராக இருந்தாலும், அப்போது மார்க்கெட்டில் வெற்றிகரமாக இல்லாத ஒரு இயக்குனர். எனவே அவர் வேண்டாம் என்று வழக்கம் போல சிலர் குருதத்திடம் சொன்னார்கள். ஆனால் குருதத் வழக்கம் போல அதனை ஏற்கவில்லை. சாதிக்கின் திறமை மீது நம்பிக்கை வைத்தார் குருதத்.
இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மனுடன் ஏற்கனவே முரண்பாடு. எனவே இசையமைப்பாளராக ரவி பணியாற்றினார்.
குருதத்தின் வெற்றிக் கூட்டணியின் மிக முக்கிய தளகர்த்தர்களான வி.கே.மூர்த்தி. அப்ரார் ஆல்வி, எஸ்.டி.பர்மன் மூவரும் இல்லாமலேயே களம் கண்டார் குருதத். அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலையில்? பெரும் பொருளாதாரத் தோல்வி மற்றும் மன உளைச்சலுக்கு நடுவே `சௌத்வின் கா சாந்த்’ படத்தை உருவாக்கினார்.
`காகஸ் கே பூல்’ படம் வெளிவந்து தோல்வி அடைந்து எட்டு மாதங்கள் கழித்து அடுத்த படமான `சௌத்வின் கா சாந்த்’ ரிலீஸ் ஆனது.
படம் வெற்றி ! …வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல. குருதத் தயாரித்த படங்களிலேயே மிக அதிக வசூல் செய்த படமாக `சௌத்வின் கா சாந்த்’ வசூலை வாரிக்குவித்தது.
படுதோல்வியில் இருந்து எண்ணி எட்டே மாதங்களில் மீண்டு எழுந்தார் குருதத்…அதுவும் சராசரி வெற்றி அல்ல.. இமாலாய வெற்றி..
பணம் கொட்டியது. கம்பெனி பணியாளர்களுக்கு போனஸுடன் சம்பளத்தை அள்ளி வழங்கினார் குருதத்.
வெளிநாட்டிலிருந்த மூர்த்திக்கு, “ பணம் பற்றி கவலை வேண்டாம். இங்கே படம் சூப்பர்ஹிட் , எனவே கலர் தொழில்நுட்பத்தை நன்றாக கற்றுக்கொண்டு வரவும்” என்று தகவல் சொல்லப்பட்டது.
`சௌத்வின் கா சாந்த்’ திரைப்படத்தின் கதை ஒரு முக்கோண ஃபார்முலா காதல் கதைதான். இனிய பாடல்களோடு, சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட கதையாக இருந்ததால் பிய்த்துக்கொண்டு ஓடியது. `காகஸ் கே பூல்’ படத்தின் தோல்வி ஏன் என்று கேள்வி எழுப்பினால் `சௌத்வின் கா சாந்த்’ படத்தின் இமாலய வெற்றிதான் அதற்கான பதில் என்று பொருள் கொள்ளலாம்.
பொருளாதாரம் மீண்டது. அது வரையிலும் இல்லாத அளவுக்கு வருமானம் கொட்டியது. ஆனால் இன்னொரு புறம் குருதத்தின் உள்முகமான வீழ்ச்சி தீவிரமாகிக்கொண்டே சென்றது. உற்சாகமான நண்பர்களின் ஒன்று கூடல்கள், அரட்டைகள், பார்ட்டிகள் எல்லாவற்றிலும் குருதத் தனித்திருந்தார். அவரது குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களும், பிரச்சினைகளும் அவரை உள்ளுக்குள் அரித்தன. அதனை மறக்க மதுவை நாடினார். பல நேரங்களில் மதுவின் அளவு மிக அதிகமானது.
மனநெருக்கடியிலிருந்து தப்பிக்க அவர் காலையில் அதிசீக்கிரமே ஸ்டுடியோவுக்குச் செல்வதும், வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொள்வதுமாக இருந்தார்.
மூன்று விதமான வாழ்வினை அவர் ஏக காலத்தில் வாழ்ந்தார். திரைப்பட உருவாக்கம், அதன் வெற்றி தோல்வி , அதில் காட்டிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் ஒருபுறம். மறுபுறம் குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள், அது கொடுத்த மன உளைச்சல் ஆகியவை. மூன்றாவதாக எல்லாவற்றிலிருந்தும் தப்புவதற்கு தேர்ந்தெடுத்த போதை, தனிமை, தன்னை அதில் மூழ்கடித்தல் என்று ஒரு கடும் மனநெருக்கடி கொண்ட உள்முகமான வாழ்க்கை என்று மூன்று விதமாகப் பிளவுபட்ட ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.
அதன் ஒரு பகுதியாக அடுத்த படமான, `சாஹிப், பீபி அவுர் குலாம்’ திரைப்படத்தை துவங்கினார். பிமல் மித்ரா எழுதிய `சாஹிப், பீபி அவுர் குலாம்’ எனும் வங்க நாவலின் உரிமையை வாங்கிய குருதத், அப்ரார் ஆல்வியிடம் அதனை திரைக்கதையாக மாற்றச் சொன்னார். பிமல் மித்ராவும், அப்ரார் ஆல்வியும் இரண்டு மாதங்கள் அமர்ந்து ஸ்க்ரிப்ட் வேலையை செய்தனர். பக்காவாக ஸ்க்ரிப்ட் தயாரானது. குருதத்தின் படங்களிலேயே ஷுட்டிங்கிற்கு முன்னர் முழுமையான ஸ்க்ரிப்ட் தயாரானது `சாஹிப், பீபி அவுர் குலாம்’ படத்திற்குத்தான்.
அந்த இரண்டு மாதமும் இவர்களிருவரும் ஸ்க்ரிப்ட் பண்ணிக்கொண்டிருக்கையில் குருதத் அங்கு வந்து உடன் இருப்பார். அவரை பிமல் மித்ரா கவனித்தபடி இருந்தார். அவர் ஒரு எழுத்தாளர். குருதத் மறைந்த பிறகு அவருடன் தான் கழித்த நாட்கள் பற்றி எழுதி இருக்கிறார். அதில் குறிப்பாக குருத்தின் தூக்கமின்மை பற்றி `sleepless’ என்ற தலைப்பிலேயே எழுதி இருக்கிறார். பிமல் மித்ரா நள்ளிரவில் தூங்கப் போவார். ஆனால் குருதத் விடியற்காலம் நாலு ஐந்து மணி வரை தூங்காமலேயே இருப்பார்.
பிமல் மித்ரா தாங்க முடியாமல் குருதத்திடம் கேட்கிறார், “ஏன் இப்படி தூங்காமலேயே இருக்கீங்க? என்ன காரணம்?”
“தெரியலை. குழப்பமான எண்ணங்கள் என்னை தூங்க விடறதில்லை”
“ அப்படி என்ன குழப்பமான எண்ணங்கள்?”
“என் சினிமா பத்தின பேச்சுகள், பிள்ளைகள் பற்றிய சிந்தனைகள்,அப்புறம் குழப்பமான யோசனைகள், அவையெல்லாம் அர்த்தமற்றவை”
“தூங்குவதற்கு முன் ஒன்று முதல் நூறு வரை எண்ணுங்களேன்”
“ அதெல்லாம் செஞ்சு பார்த்தாச்சு”
“ தலையணை இல்லாம தூங்கிப் பாருங்களேன்.”
“ அதையும் செஞ்சாச்சு”
“ராத்திரி முழுசுமே தூங்காம இருந்தால் அடுத்த நாள் ரொம்ப கஷ்டமா இருக்காதா?”
“ அது எனக்கு பழகிடுச்சு”
தூங்காமல் இருக்கும் குருதத், பகலில் அமைதியாக, ஒரு விதத்தில் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருப்பதை பிமல் மித்ரா எழுதி இருக்கிறார். பிமல் மித்ராவிடம்,” எனக்கு பைத்தியம் பிடிக்கப் போகிறது பிமல் பாபு “ என்று அடிக்கடி சொல்வாராம் குருதத்.
இந்த மனநிலையில் குருதத் இருந்த போதுதான் `சாஹிப், பீபி அவுர் குலாம்’ திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் உருவானது.
அந்த ஸ்க்ரிப்ட் உருவானதும், குருதத் ஒரு புதுமையான வேலையை செய்தார். ஒட்டுமொத்த ஸ்க்ரிப்ட்டையும் வசனங்களோடு , சரியான பாவங்களோடு அப்ரார் ஆல்வியை பேசச் சொல்லி , அதனை ஒரு ரெகார்டிங்க் தியேட்டரில் வைத்து குரல் பதிவு செய்தார். ஒட்டுமொத்த திரைப்படத்தின் கதை- வசனமும் அப்ரார் ஆல்வியின் குரலில் சரியான ஏற்ற இறக்கங்களுடன் ஒரு ஒலிச்சித்திரமாக பதிவு செய்யப் பட்டது.
ஸ்க்ரிப்ட் முழுமையாக உருவாகி விட்ட நிலையில் குருதத்தே அந்தப் படத்தை இயக்குவார் என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்க, தான் அந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்று குருதத் சொன்னார். ஏன் என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில், “ எனக்கு டைரக்ஷன் மட்டுமல்ல, டைரக்ஷன் செய்வதற்கு என்னவெல்லாம் தேவை என்பதும் தெரியும். இப்போது எனக்கு இருக்கின்ற மனநிலையிலும், உள்ளச் சோர்விலும் எவ்வளவு பெரிய மாஸ்டராக இருந்தாலும் ஒருவர் படம் இயக்க முடியாது”
குருதத்துக்கு பதிலாக யார் இயக்குவது?
ஓரிரு பெயர்களை பரிசீலித்து விட்டு அதெல்லாம் சரி வராத நிலையில், அப்ரார் ஆல்வி தான் இயக்க வேண்டும் என்று குருதத் முடிவு செய்தார். ஒருநாள் அப்ரார் ஆல்வியின் வீட்டுக்கு வந்தார். இருவரும் மது அருந்தியபடியே பேசுகையில் `நீதான் இந்தப் படத்தை இயக்கப் போகிறாய்’ என்று குருதத் சொல்ல, அப்ரார் ஆல்வி முடியவே முடியாது என்று மறுத்தார்.
“ஏன் முடியாது? ஒட்டுமொத்த ஸ்க்ரிப்டையும் நீ எழுதி இருக்கிறாய். அதனை அப்படியே திரையில் காட்டு. அவ்வளவுதான்”
என்று குருதத் சொல்ல அப்ரார் ஆல்வி சிரித்தபடி , “ நீ எமோஷனலா பேசறே…இது சரியா வராது. சொல்லப் போனா இதை நீ பேசலை. உள்ளே போயிருக்கும் சரக்கு பேச வைக்கிறது.:?”
அப்ரார் இப்படிச் சொன்னதும், குருதத் முகம் சுருங்கிப் போனார். கொஞ்ச நேரம் பேசாமலிருந்து விட்டு வெளியேறி விட்டார்.
ஆனால் அவரது தீர்மானம் மாறவில்லை.
ஒரு நாள் அப்ராரை ஆஃபிசுக்கு வரச் சொன்னார். அப்ராரும் போனார்.
“ இத பாரு, நான் இப்ப குடிக்கலை. ஓகே? இப்ப சொல்லு. என்னோட படத்தை நீ டைரக்ட் பண்றியா?”
கொஞ்சம் யோசித்து விட்டு அப்ரார் சொன்னார்,, “ என்னால முடியும்னு நீ நினைச்சா நான் பண்றேன்”
உடனிருந்த இன்னொரு நண்பர் சொன்னார், “இது ரொம்ப கஷ்டமான சப்ஜெக்ட். இதை அப்ரார் ஹேண்டில் பண்றது கஷ்டம்… முதல் பட டைரக்ஷன். கொஞ்சம் லைட்டா, காமெடியா ஈஸியான ஒரு சப்ஜெக்ட்னா பரவால்லை”
குருதத் இடைமறித்து சொன்னார், “ நோ நோ. அப்ரார் இதை பிரமாதமா பண்ணுவான். நான் உறுதியாச் சொல்றேன்”
தனக்கு தன் மீதிருந்த நம்பிக்கையை விட, குருதத் தன் மீது வைத்த நம்பிக்கை அதிகம் என்று அப்ரார் உணர்ந்தார். இதனை அவரே எழுதி இருக்கிறார்.
எனவே அப்ரார் ஒத்துக்கொண்டார். இயக்குனர் முடிவானதும் நடிகர் தேர்வு. குருதத்தின் முந்தைய சில படங்களுக்கு நடந்தது போலவே இந்தப் படத்திலும் நடந்தது. ஹீரோவான பூத்நாத் கேரக்டருக்கு சசிகபூரைத்தான் முதலில் முடிவு செய்தார் குருதத். கதை கேட்க வருவதாகச் சொன்னார் சசிகபூர், இவர்கள் காத்திருந்தார்கள் . சொன்ன நேரத்துக்கு மேல் மூன்று மணி நேரமாகியும் அவர் வரவில்லை. குருதத் எரிச்சலடைந்தார். கதை கேட்க வருவதற்கே இப்படி மூன்று மணிநேரம் நம்மை காக்க வைக்கிறார். இவரை வைத்து இந்த ப்ராஜெக்டை பண்ணுவது கஷ்டம் என்று முடிவு செய்தார். பூத்நாத் கேரக்டரை குருதத்தே செய்வது என்று முடிவானது. அது ஒரு சிறந்த முடிவு. பூத்நாத் கேரக்டருக்கு குருதத் வெகு கச்சிதமாகப் பொருந்தினார்.
`சாஹிப், பீபி அவுர் குலாம்’ படப்பிடிப்பு துவங்கியது. குருதத் தன்னுடைய அகநெருக்கடிகளை மறக்கும் விதமாக முழுமையாக படப்பிடிப்புத் தளத்திலும், நடிப்பிலும் தன்னை மூழ்கடித்துக் கொண்டார். அப்போது ஒரு துயர சம்பவம் நிகழ்ந்து.
குருதத் தின் தந்தை திடீரென்று மரணமடைந்தார். காய்ச்சல் போன்ற ஒரு சாதாரண உடல் உபாதைக்கான சிகிச்சையின்போது போடப்பட்ட ஊசி மருந்து அலர்ஜி ஆகி அவர் இறந்து விட்டார்.
குருதத்தின் தந்தை இலக்கிய ஈடுபாடு கொண்டவர். எழுதியுமிருக்கிறார். ஆனால் அவர் வாழ்க்கை போராட்டம் நிறைந்த ஒன்று. லௌகீகமாக அவர் வெற்றி பெறவில்லை. குருதத் அப்படி அல்ல. அவர் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றவர். ஆனால் நிம்மதியிழந்த ஒரு ஆத்மாவாகவே குருதத் இருந்தார். `லௌகீக வெற்றி ஒன்றும் அவ்வளவு முக்கியமானதில்லை’என்று ஒரு கட்டத்தில் அவர் சொன்னதற்கு அவர் மனதில் நிலவிய நிம்மதி இன்மையே காரணம்.
ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த குருதத்தை தந்தையின் திடீர் மரணம் வெகுவாக பாதித்தது.
மற்றொரு சிக்கலும் தீவிரமாகிக் கொண்டிருந்தது. கீதா தத்துக்கும், குருதத்துக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்தது. கீதா இவர்களது வீட்டை விட்டுக் கிளம்பி தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
பத்திரிகைகள் குருதத் வஹீதா ரஹ்மான் இருவருக்கிடையிலான உறவு பற்றி தினம் தினம் எழுதிக் கொண்டிருந்தன. அப்போது வஹிதா ரஹ்மானின் அக்காள் கணவர் ஒரு காரியம் செய்தார். குருதத் முஸ்லிமாக மாறப் போவதாகவும், வஹிதா ரஹ்மானை மணம் செய்யப்போவதாகவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது நல்ல வேளையாக கீதாதத் ஊரில் இல்லை. லண்டன் சென்றிருந்தார்.
இந்த அறிவிப்பு வந்ததும் குருதத் மிகப் பெரும் பதட்டத்துக்கு ஆளானார். தனது கட்டுப்பாட்டை மீறி சில விஷயங்கள் நடப்பதாக உணர்ந்தார். இவற்றை எல்லாம் எப்படிக் கையாள்வது என்று அவருக்குப் புரியவில்லை.
இவை எல்லாம் நிகழ்கையில் `சாஹிப், பீபி அவுர் குலாம்’ ஷூட்டிங்க் தொடர்ந்து நடந்தபடி இருந்தது. அப்ரார் ஆல்வி படத்தை இயக்கினாலும் கூட குருதத் இயக்கத்தின் போது முழுமையாக உடனிருந்தார். பாடல் காட்சிகளை அவரே இயக்கினார்.
ஆனால் மனைவியின் விலகல் , வஹிதா குருதத் பற்றி வந்த செய்திகள், தந்தையின் திடீர் மரணம் எல்லாமும் சேர்ந்து அவரை மிகப்பெரும் மனநெருக்கடியில் தள்ளின.
`ப்யாஸா’ உருவாகிக் கொண்டிருந்தபோது தன் முதல் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட குருதத். இந்தத் திரைப்படத்தின் போது மறுபடியும் அதனை செய்யத் துணிந்தார்.
முப்பத்து எட்டு தூக்க மாத்திரைகளை விழுங்கி இரண்டாவது முறையாக தன் வாழ்வை முடித்துக் கொள்ள முயற்சித்தார் குருதத்.
அவரது இரண்டாவது தற்கொலை முயற்சி அது.
( தொடரும்)











