The Talkie
Wednesday, May 13, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள்

 ஸ்டார்ட் கேமரா 08  எம். கர்ணன்

The Talkie by The Talkie
January 28, 2026
in தொடர்கள், ஸ்டார்ட் கேமரா
A A
0
start camera-08
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon அகிலா ஸ்ரீதர்

பைக்கில் வேகமாக  செல்லும் ஹீரோவைத் துரத்திக் கொண்டு, எதிரிகள் பத்து பதினைந்து பைக்குகளில் பாய்ந்து செல்கிறார்கள். அந்த பரந்த நிலப்பரப்பில் பைக்குகள் சீறிப் பாய்வதையும், சுற்றி சுற்றி சண்டையிடுவதையும் கேமரா துல்லியமாக காட்டுகிறது.

 மலைகளிலிருந்து தடதடவென பைக்குகள் இறங்குகின்றன, ஹீரோ தனது பைக்கில்  ஒரு கால்வாயைத் தாண்டி பறந்து செல்கிறார். தன்னை நெருங்கும் எதிரியோடு பைக்கை ஓட்டிக் கொண்டே சண்டையிடுகிறார். இரு பைக்குகளும் அருகருகே ஓடிக் கொண்டேயிருக்க, அவர்கள் பைக்கின் மேலேறி நின்று சண்டையிடுகின்றனர்.

இது அஜீத் நடித்த திரைப்படக் காட்சி என்று நினைத்திருப்பீர்கள். இல்லை.   இந்தக் காட்சிகள் 1975ல் வெளிவந்த “எங்க பாட்டன் சொத்து” திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் எம். கர்ணன். இத்திரைப்படத்தின் இயக்குநரும் இவரே.

இதே படத்தில் இன்னொரு காட்சியில் பனிமலையில் ஐஸ் ஸ்கேட்டிங் செய்தபடியே சேஸிங், பாலைவனத்தில் ஒட்டகத்தில் சேஸிங் காட்சி, ஆற்றில் சிங்கத்துடன் கட்டிப் புரண்டு சண்டை, காட்டில் குதிரைகளில் சேஸிங் காட்சி, கார்களோடு சேஸிங் காட்சி என ஐந்திணை நிலங்களையும் தனது ஒரே படத்தில் காட்சிப்படுதிதியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கர்ணன்.

இந்தக் காட்சிகள் எல்லாம் அப்போதைய சினிமா ரசிகர்களுக்குப் புதுமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தன.

உணர்வுப்பூர்வமான குடும்பத் திரைப்படங்களை ஸ்டூடியோவிற்குள்ளேயே செட் அமைத்து படமெடுப்பது என்றிருந்த காலகட்டத்தில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மேற்கத்திய கௌபாய் வகைத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ஒளிப்பதிவாளர் எம். கர்ணன்.  வித்தியாசமான கேமரா கோணங்கள் இவரது தனிச்சிறப்பு. 

இவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவே விரும்பினார்.  ஆனால் திரையுலகில் நடிப்பவர்களும், பணியாற்றுபவர்களும் அதிகளவில் வசித்த, அனைவர்க்கும் கனவு உலகமாக இருந்த  கோடம்பாக்கத்தில் கர்ணன் குடியிருந்தார். அந்த சினிமாவின் காற்று இவர் மேலும் வீசியதில் சினிமாவில்  அவருக்கு ஆர்வம் உண்டானது. .

முதன்முதலில் மொழி மாற்றம் செய்ய  டப்பிங் உத்தியைக் கண்டுபிடித்த சவுண்ட் இஞ்சினியர் சீனிவாச ராகவனுக்குச் சொந்தமான ரேவதி ஸ்டூடியோவில் தான்  அப்ரண்டிஸ் உதவி ஒளிப்பதிவாளாராக வேலைக்குச் சேர்ந்தார் கர்ணன். அங்கிருந்த தலைமை ஒளிப்பதிவாளர் என்.சி. பாலகிருஷ்ணன் தான் இவருக்குப் பயிற்சி அளித்தவர். இவர் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரைப்படம் ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.” இங்கு  பி.எஸ். ரங்கன், பி.என்,ராய், வின்சென்ட் என பிரபல ஒளிப்பதிவாளர்களுடன் வேலை செய்தார்.

W.R. சுப்பாராவிடம் உதவியாளராகப் பணி புரிய வேண்டுமென்பதற்காக ரேவதி ஸ்டூடியோவிலிருந்து விலகி பரணி ஸ்டூடியோவில் ஒளிப்பதிவாளராகச் சேர்ந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என சுப்பாராவ் ஒளிப்பதிவு இயக்குநராக பணியாற்றிய பல படங்களில் கர்ணன் கேமராவை இயக்குபவராக இருந்தார்.  போர்க்கள காட்சிகளை சிறப்பாக எடுக்க அங்கே தான் கற்றுக் கொண்டார். அப்போதே கர்ணனின் திறமையை வியந்த பி.ஆர்.பந்துலு தனது படங்களில் தொடர்ந்து கர்ணனுக்கு  வாய்ப்பு கொடுத்தார்.

karnan

இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமான முதல் படம் “சாரதா” இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கர்ணன்.  ஒரு விபத்தில் ஆண்மையை இழத்து விடும் கணவன், தன் மனைவிக்கு மறுமணம் செய்து வைக்கிறார் என்று அந்தக் காலத்தில் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாகக் கூடிய கதையை மிகத் துணிச்சலாக கே.எஸ்.ஜி இயக்கினார். உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்திருந்த அப்படத்துக்கு தன் ஒளிப்பதிவின் மூலம் உயிரூட்டினார் கர்ணன்.

இன்றும் குழந்தைகளுக்குத் தாலாட்டுப் பாடலாக பலரும் ஒலிக்க விடும் ‘அத்தைமடி மெத்தையடி” என்ற பாடல் “கற்பகம்” திரைப்படத்தில் நேர்த்தியான ஒளியமைப்போடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தன் அண்ணனின் குழந்தையை தன் குழந்தை போல் வளர்க்கும் கே.ஆர்.விஜயா குழந்தைக்குப் பால் புகட்டி முடித்தவுடன் பாடல் துவங்கும். மேலே ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறியின் நிழல் சுற்றி வர, படுக்கையில் குழந்தையுடன் இருக்கும் கே.ஆர்.விஜயா பாடத் தொடங்குவார்.

மகிழ்ச்சியான மனநிலையைப் பிரதிபலிக்கும்படி அவரின் முகத்துக்கு பிரகாசமான லைட்டிங்கும், பின்னணி முழுவதும் இருளாகவும் இருக்கும்படி ஒளியமைப்பு இருக்கும். கே.ஆ.விஜயா பாடும்போது அவர் கண்களில் மட்டும்  ஒரு சிறு ஒளி மின்னுவது போல் அமைத்திருப்பதன் மூலம் அவருடைய தாய்மைக் குணத்தைக் காட்டியிருப்பார்,  இதே பாடல் பிற்பகுதியில் சாவித்ரி பாடும் போது சாவித்ரியின் தவிப்பையும், அவருடைய துயரமான சூழ்நிலை வெளிப்படும்படியாகவும் ஒளியமைப்பு செய்திருப்பார்.

இந்தப் படத்தில் பேசப்பட்ட பாடல் “மன்னவனே அழலாமா”. இப்பாடல் முழுவதும், இறந்த தன் மனைவி கே.ஆர்.விஜயாவை ஜெமினி கணேசன் நினைத்துப் பார்ப்பதாக அமைந்திருக்கும்.  கே.ஆர்.விஜயா ஆவி போல் வானத்திலிருந்து பாடுவார். கீழே வருவார். இவர் கண் முன் தோன்றி மறைவார். இந்த தந்திரக் காட்சிகளைச் சிறப்பாக எடுத்திருப்பார்.

அதேபோல், துவக்கத்திலேயே  “ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இது தான் முதலிரவு” என்ற பாடலில்,  கே.ஆர். விஜயாவைக் கிண்டல் செய்து பாடியிருப்பார் சாவித்திரி. ஆனால் கே.ஆர்.விஜயா இறந்ததும், ஜெமினியைத் திருமணம் செய்யும் சாவித்திரி, அன்றிரவு அவரை நினைத்துப் பார்க்கும் போது,  முன்பு பாடிய காட்சி இம்போஸிங்காக வந்து வந்து போகும். ரங்காராவுக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சாவித்திரி ஊற்றும்போதும்,  ரங்காராவ் தன் பெண்ணை நினைத்துப் பார்க்க, கே.ஆர். விஜயாவின் உருவம் வந்து மறைந்து போகும்.

ரங்காராவும், ஜெமினி கணேசனும், சாவித்திரியும் ஜெமினி கணேசனும், உரையாடும் காட்சிகளில் அவர்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்றபடி ஒரு பக்கம் ஒளியாகவும், மறுபக்கம் நிழலாகவும் காட்சிபடுத்தியிருப்பார்.

இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் படங்கள் உணர்ச்சிகரமான காட்சிகள் நிறைந்த குடும்ப படங்கள் என்பதால், அந்த உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் மென்மையான ஒளியமைப்பை பயன்படுத்தியிருப்பார். கே.ஆர்.விஜயாவின் அறிமுக காட்சியில், அவரின் நல்ல குணத்தைக் குறிக்கும் வகையில், தேவதையைப் போல அவர் தெரிய வேண்டுமென்பதற்காக, லென்ஸின் முன்னால் டிஃப்யூசர் ஃபில்டர்களைப் பயன்படுத்தி காண்பித்திருப்பார்.

‘கற்பகம்’ படத்தில் கர்ணன் ஒரு ஒளிப்பதிவாளராக நிழல்களை விட ஒளியை அதிகம் கொண்டாடினார். கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும், பாசத்தையும் திரையில் கொண்டு வர அவர் இந்த நுட்பங்களைக் கையாண்டார்.

“கை கொடுத்த தெய்வம்” படத்தில், தன் கணவனின் நண்பரை சகோதரனாக ஏற்றுக் கொண்டு மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வதையும், ஊரார் அவர்களைத் தவறாக பேசும்போது அதைப் பொருட்படுத்தாது நட்பின் மேன்மையைப் போற்றும் கணவனின் கதாபாத்திரத்தையும், அதே கதாபாத்திரம் வெகுளித்தனமான தன் தங்கையை ஊரார்  தவறாகப் பேசுவதால் ஊரை விட்டு ஓடி வந்தவனாகவும் முரண்பாடுகளோடு மிகச் சிறப்பாக சித்தரித்திருக்கிறார் கே.எஸ்.ஜி.  இத்தகைய ஆழமான கதைக்கு கதாபாத்திரங்களோடு நகர்ந்து கொண்டே கதையைக் காட்சிப்படுத்திற கர்ணனின் ஒளிப்பதிவு துணை புரிந்திருக்கிறது.

சிவாஜி கணேசனும், சாவித்திரியும் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே அவளின் அப்பாவித்தனம் வெளிப்படும் வகையில், இயற்கையான ஒளியை முகத்தில் விழச் செய்து ஒரு ஓவியம் போன்ற உணர்வைத் தந்திருப்பார், ஸ்டூடியோ செட்டுகளில் எடுக்கப்படும் படங்களில் கதையை மீறி உள்ளே ரசிகர்களைக் கொண்டு செல்ல திறமை வேண்டும். பட்டர்ஃபிளை நிழல் என்று சொல்லப்படுகிற கதாநாயகியின் மூக்கின் கீழ் விழும் நுண்ணிய நிழலை கட்டமைப்பது சிரமமான காரியம். அதை கே.ஏஸ். கோபாலகிருஷ்ணனின் படங்களில் கர்ணன் செய்திருக்கிறார்.

சிவாஜியின் நடிப்பிற்கேற்ப, முக்கியமான கட்சிகளில் அவருடைய முகபாவனைகளும், உடலசைவும் வெளிப்படுபடி குளோசப் காட்சிகளை அதிகமாக வைத்திருப்பது ஒளிப்பதிவாளராக கர்ணனின் நுட்பத்தைக் காட்டுகிறது. இதற்கு உதாரணமாக, வடமாநிலத்தில் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு சோறு கிடைக்காமல் தவிக்கும் சிவாஜி, தன் முன்பு சோறு சாப்பிடும் பெண்ணை பார்த்து ஏங்கி நிற்கும் காட்சியையும், கே.ஆர்.விஜயாவிற்கு சோறு சமைக்க கற்றுத் தரும் இடத்தில் சிவாஜியின் அபாரமான நடிப்பையும் சொல்லலாம். வேறு மாநிலங்களில் நம் உணவு கிடைக்காமல் தவிக்கும் அனைவரும் தங்களைப் பொருத்திப் பார்க்கும் காட்சியை, கர்ணன் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்.

கர்ணன் ஒளிப்பதிவாளராக பணி புரிந்த படங்களில் பாடல்களை அவர் காட்சிப்படுத்தும் விதம் மற்றுமொரு சிறப்பம்சம்., “சிந்துநதியின்மிசை நிலவினிலே” பாடலை அவர் காட்சிப்படுத்திய விதத்திலும், சிவாஜியின் முகபாவனைகளாலும்  இன்றும் அப்பாடல் கிளாஸிக்காக விளங்குகிறது.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்திற்காக லொகேஷன் பார்க்கச் சென்ற பி.ஆர். பந்துலு எதிர்பாராத விதமாக மரணமடைய, எம்.ஜி.ஆரே அத்திரைப்படத்தின் டைரக்‌ஷன் பொறுப்பை ஏற்றார். அப்போது அத்திரைப்படத்தின் முக்கியமான போர்க்களக் காட்சிகளைக் காட்சிப்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பை கர்ணனை நம்பி ஒப்படைத்தார்.  எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த படம் இது.   எம்.ஜி.ஆர்  தனது “நீதிக்குத் தலைவணங்கு” படத்தின் சண்டைக் காட்சிகளையும் கர்ணனை வைத்து தான் எடுத்தார்..

கௌபாய் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட இவர் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மாறினார். இவருடைய முதல் கௌபாய் படம். “எதற்கும் துணிந்தவன்’ குதிரை சேஸிங்கை இவருக்கு இணையாக படம் பிடிக்க எவருமில்லை என்பார்கள். குதிரைகளில் வேகமாக வருவதை வைட் ஆங்கிளில் அந்த நிலப்பரப்போடு சேர்ந்து காட்சிபடுத்துவதோடு, வேகமாக ஓடும் குதிரையின் கால்களையும், அதன் மீதிருக்கும் ஹீரோவையும் மாற்றி மாற்றி காட்டுவார்.   தரையில் குழி பறித்து கேமராவை வைத்து லோ ஆங்கிள் ஷாட்களை எடுப்பார். கேமராவைக் கையில் ஏந்திக் கொண்டே சண்டைக் காட்சிகளில் எல்லா பக்கமும் சென்று படம் பிடிப்பார்.

குதிரைகள் ஓடும் வேகத்துக்கு இணையாக கேமராவையும் ஒரு வாகனத்தில் வைத்து அதிவேகமாக நகர்த்துவார். இடையில் சட்டென்று குதிரையின் முகத்துக்கோ அல்லது ஹீரோவின் கண்களுக்கோ ஜூம் செய்வார்.

கங்கா படத்தில் குதிரையோட்டி வரும் காட்சிகளில் தரையில் கேமராவை வைத்து அதன் தூசியும் புகையும் கேமராவில் தெறிப்பது போல படமாக்கியிருப்பார்.

“எதற்கும் துணிந்தவன், காலம் வெல்லும், கங்கா, ஜக்கம்மா, எங்க பாட்டன் சொத்து, ஜம்பு: என இவர் எடுத்த படங்கள் அனைத்துமே,  எதிரிகளால் கொல்லப்பட்ட தன் குடும்பத்தினரின்  மரணத்துக்காக எதிரிகளைப் பழி வாங்கும் ஒரே விதமான கதைகள் தான்.  இந்தப் படங்களில் புல்லட்டுகளுடனான ஜாக்கெட், துப்பாக்கி, நீண்ட தொப்பி, நெற்றியை சுற்றியிருக்கும் வளையம், ஹிப்பி மாதிரியான ஹேர்ஸ்டைல் என ஹீரோவை வித்தியாசமான உடைகளோடு காண்பித்திருப்பார்.  ஒரு படம் வணிகரீதியாக வெற்றி பெறுவதற்கு கவர்ச்சியான காட்சிகள் முக்கியம் என்று கர்ணன் நம்பினார். அதனால் இவருடைய படங்களில் ஹீரோயின்கள் ஆற்றிலோ, கடலிலோ குளிக்கும் காட்சிகளும், பெரிய அலைகளில் மாட்டி தவிக்கும் காட்சிகளும் கட்டாயமாக இடம் பெற்றிருந்தன.

இவர் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் கடலுக்கடியில் நடக்கும் சண்டைக் காட்சி உண்டு  இதற்காக ஒரு கண்ணாடிப் பெட்டியை நீர் புகாதவாறு செய்து, அதற்குள் கேமராவை வைத்தார். நடிகர்களை அந்தப் பெட்டியின் முன்பு சண்டையிட வைத்தார். பெரிய கண்ணாடிகளைப் பயன்படுத்தி சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து தண்ணீருக்குள் வெளிச்சத்தைக் கொண்டு வந்தார். காட்சிகள் மங்கலாகத் தெரியாமலிருக்க, லென்ஸுக்கும், கண்ணாடிக்கும் இடையே உள்ள தூரத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டார்.

இன்றிருக்கும் கிராபிக்ஸோ, நவீன கேமராக்களோ இல்லாத அந்தக் காலத்தில் இது ஒரு தொழில்நுட்ப புரட்சியாக கருதப்பட்டது.

இந்தப் படத்திற்காக ஆப்பிரிக்க காடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் இயற்கைக் காட்சிகளையும், பரந்த காடுகளையும், விலங்குகளையும் அழகியலோடு படமாக்கினார்.  தனது லென்ஸ் வித்தையால் சிங்கம், புலி போன்ற விலங்குகளோடு நடிகர்கள் மிக நெருக்கமாக இருப்பது போல் காண்பித்தார்.

அக்காலத் தமிழ்ப்படங்களில் கேமரா ஓரிடத்தில் நிலையாக இருக்கும். ஆனால் கர்ணன் தனது  கேமராவை 360 டிகிரியில் சுழல விட்டு அந்த நிலப்பரப்புகளின் பிரம்மாண்டத்தைக் காட்டினார்.  அவரது கேமரா வெறும் காட்சிகளை மட்டும் பதிவு செய்யாமல் கதையோடு இணைந்து நகர்ந்தது.  

ஒரு சண்டைக் காட்சியில் பத்து வெவ்வேறு கோணங்களில் கேமராவை வைத்து, அதை மிக வேகமாக வெட்டி இணைப்பதில் சிறந்தவர். அதனாலேயே இன்றைய ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்.

குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்டமான காட்சிகளை எடுப்பதில் அவர் வல்லவர். “பணம் குறைவாக இருக்கலாம், ஆனால் என் கேமரா கோணங்கள் அதை ஈடுகட்டும்” என்பது அவரது தாரக மந்திரம்.

கங்கா  படத்தில் ஒரு முக்கியமான காட்சி, பாலைவனப் பின்னணியில் சூரியன் மறையும் வேளையில் படமாக்கப்பட்டது.  நாயகன் ஜெய்சங்கர் குதிரையில் அமர்ந்து ஒரு குன்றின் மீது மெதுவாக நகர்வார். அப்போது ஒளிக்கு நேர் எதிரே கேமராவை வைத்து, நாயகனையும் குதிரையையும் வெறும் கறுப்பு நிழல் உருவங்களாக காட்டியிருப்பார்.

குதிரைகள் ஓடி வரும்போது, கேமரா குதிரையின் கால்களுக்கு மிக அருகில் இருக்கும். குதிரையின் குளம்புகள் மண்ணைத் தட்டிச் சிதறச் செய்வது திரையில் நேராகத் தெரியும்.  இது  படம் பார்ப்பவர்களுக்கு தாமும் அந்த ஓட்டத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

சண்டைக் காட்சிக்கு முன்னதாக, நாயகனின் கண்களை மட்டும் மிக நெருக்கமாக திரையில் காட்டுவார். அந்தக் கண்களில் தெரியும் கோபமும், உறுதியும் அந்தச் சண்டையின் தீவிரத்தை உணர்த்திவிடும்.  வில்லன் வரும் காட்சிகளில், அவரது முகம் முழுவதையும் காட்டாமல், கண்களை மட்டும் ஒளியில் காட்டிவிட்டு மற்ற பகுதிகளை இருளில் வைத்திருப்பார்.  இது அந்தப் பாத்திரத்தின் மீதான அச்சத்தை ரசிகர்களுக்குத் தந்தது.  குகைக்குள் நடக்கும் காட்சிகளில் ஒற்றைத் தீப்பந்தத்தின் ஒளியை வைத்து அவர் செய்த மாயாஜாலங்கள் குறிப்பிடத்தக்கவை.

கர்ணன் ஒரு படத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அந்த நிலப்பரப்பை பலமுறை சுற்றிப் பார்த்து, எந்த திசையில் சூரியன் உதிக்கிறது, எந்த நேரத்தில் நிழல் நீளமாக விழுகிறது என்பதைக் கணக்கிட்டே தனது படப்பிடிப்புத் தளத்தை அமைப்பார்.  

ஒரு ஒளிப்பதிவாளராக அவருக்குக் காட்சி மொழியின் வலிமை தெரியும். எனவே, இயக்குநராக மாறியபோது அநாவசியமான நீண்ட வசனங்களைக் குறைத்து, காட்சிகளின் மூலமே கதையை நகர்த்தினார்.  இயக்குநராக அவரின் தனிச்சிறப்பு, ‘கேமரா பிளேஸ்மென்ட்’.  ஒரு பாத்திரத்தின் குணாதிசயத்தை விளக்கப் பத்து வரிகள் வசனம் தேவையில்லை; ஒரு குறிப்பிட்ட ‘லைட்டிங்’ அல்லது அந்தப் பாத்திரம் நிற்கும் விதத்தைக் காட்டினாலே போதும் என்பதை தான் இயக்கிய படங்களில் நிரூபித்தார். இது அவரது படங்களுக்கு ஒரு  சர்வதேச தரத்தைத் தந்தது.  இவரே இயக்குநராகவும் இருந்ததால், சண்டைக் காட்சிகளில் என்ன தேவை என்பதை  சண்டைப் பயிற்சியாளருக்கு துல்லியமாகச் சொன்னார்.

ஒளிப்பதிவு செய்யும் போதே அதன் எடிட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பவராக கர்ணன் இருந்தார். குறிப்பாகச் சண்டைக் காட்சிகளில், ஒரு வினாடிக்கும் குறைவான நீளம் கொண்ட பல ஷாட்டுகளை இணைப்பார்.  ஒரு துப்பாக்கி சுடப்படும்போது, சுடுபவரின் கண் – துப்பாக்கி முனை – குண்டு பாயும் இடம் என மூன்றையும் மிக வேகமாக மாற்றி மாற்றிக் காட்டி படம் பார்ப்பவர்களிடம் ஒரு படபடப்பை உருவாக்கினார்.

கர்ணன் இயக்கிய படங்களில் ‘ஜம்ப் கட்ஸ்களும்,’ வேகமான நகர்வுகளும் அதிகம் இருக்கும்.  காட்சிகளைப் படமாக்கும்போதே, அது எடிட்டிங் டேபிளில் எப்படி இணைய வேண்டும் என்பதைத் திட்டமிடுவார். இதனால் அவரது படங்களில் தேவையற்ற காட்சிகள் இருக்காது. தனது படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நீளமான காட்சிகளாக எடுப்பார். அவரது எடிட்டிங் பாணி சண்டைக்காட்சிகளை மிக வேகமாகவும், விறுவிறுப்பாகவும் மாற்றி விடும்.

கனமான மிஷெல் கேமராக்களை விட, கையடக்கமான  கேமராக்களையே வெளிப்புறப் படப்பிடிப்புகளில் அதிகம் பயன்படுத்தினார். இது அவருக்குக் கேமராவைத் தோளில் சுமந்து கொண்டு குதிரைகளுக்கு அருகிலேயே ஓடிப் படமாக்க உதவியது.

குதிரை ஓடும் வேகத்திற்கு இணையாக கேமராவையும் நகர்த்தி திரையில் ஒரு வேகம் குறையாத சாகச அனுபவத்தை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தந்தார்.

சண்டைக் காட்சிகளில் பிரம்மாண்டத்தை உணரவைக்க, வைட் ஆங்கிள் லென்ஸ்களையும், நாயகனின் வீரத்தை அல்லது வில்லனின் பயங்கரமான முகத்தைக் காட்ட டெலிஃபோட்டோ லென்ஸ்களையும் பயன்படுத்தி, காட்சிகளின் ஆழத்தை மாற்றியமைத்தார்.

ஒரு காட்சியில் வில்லன் பதுங்கியிருப்பதைச் சொல்ல வசனம் தேவையில்லை; சுவரில் விழும் அந்தப் பாத்திரத்தின் நீண்ட நிழலே ஆபத்தை ரசிகர்களுக்கு உணர்த்தி விடும் என்கிற புரிதல் அவருக்கு இருந்ததால்,  அதற்கேற்ப காட்சிகளை அமைத்தார்.

வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், கதையின் தீவிரத்தைச் சொல்லும் ஒரு கருவியாகவே அவருடைய லொகேஷன்கள் இருந்தன. நிலப்பரப்பின் பிரம்மாண்டத்தைக் காட்ட ‘சினிமாஸ்கோப்’ பாணியில் அகலமான காட்சிகளைப் படமாக்க அதற்குத் தகுந்த லென்ஸ்களைத் திறம்படப் பயன்படுத்தினார்.  அந்த நிலப்பரப்பின் கரடுமுரடான தன்மையைச் சண்டைக் காட்சிகளுடன் இணைத்து அசலானதொரு மேக்கிங் ஸ்டைலைக் கொண்டு வந்தார்.

கர்ணனின் முத்திரை என்பது திடீர் ‘ஜூம்’. சண்டைக் காட்சிகளின் போது தூரத்தில் இருக்கும் எதிரியின் துப்பாக்கியையோ அல்லது நாயகனின் கண்களையோ சட்டென்று ஜூம் செய்து காட்டுவார். இது அந்த காலத்துத் தமிழ்ப் படங்களில் மிகவும் புதுமையாக இருந்தது.

தயாரிப்பாளராகவும் இருந்ததால், குறைந்த செலவில் எப்படி உலகத்தரம் வாய்ந்த காட்சிகளைத் தரலாம் என்பதில் அவர் ஒரு முன்னோடியாக இருந்தார். இயற்கை ஒளியையே அதிகம் பயன்படுத்தினார்.

கர்ணன் தனது படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். ஒரு காட்சியைத் திரையில் எப்படிப் பார்க்க விரும்புகிறாரோ, அதற்காகப் பல மணிநேரம் காத்திருந்து சரியான ஒளி வரும்போது மட்டுமே படமாக்குவது அவர் வழக்கம். இதனால்தான் அவரது படங்கள் பல வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் ஒரு தனித்துவமான “லுக்” உடன் இருக்கின்றன. படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும், அதே சமயம் கட்டுக்கோப்பாகவும் இருந்தார்.

பெரும்பாலும் வெள்ளை வேட்டி மற்றும் முழுக்கைச் சட்டை அணிவதைத்தான் வழக்கமாகக் கொண்டிருந்தார். தோளில் ஒரு துண்டு இருக்கும்.  இயக்குநர் நாற்காலியில்” அமர்ந்து உத்தரவிடுவதை விட, கேமராவுக்குப் பின்னால் நின்று வேலை செய்வதையே அவர் அதிகம் விரும்பினார்.

,“தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்” என்ரழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கருக்கும்,  கர்ணனுக்கும் இருந்த நட்பு ஆத்மார்த்தமானது.  “குதிரை வேகமாக ஓட வேண்டும் என்பதற்காக நான் கேமராவைத் தூக்கிக்கொண்டு ஜீப்பில் துரத்தும்போது, அவர் உயிரைப் பணயம் வைத்து குதிரையை ஓட்டுவார்” என்று ஒரு பேட்டியில் ஜெய்சங்கரைப் பற்றி கர்ணன் குறிப்பிட்டுள்ளார்.

  “ஜெய்சங்கர் கால்ஷீட் கொடுத்தால் போதும், நான் பாதி படத்தைத் தயாரித்து முடித்துவிடுவேன். அவர் எதற்கும் முகம் சுளிக்காதவர்” என அவரது எளிமையையும் பாராட்டியுள்ளார்.  “கர்ணனின் கேமராவுக்கு முன்னால் நின்றால், நான் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்  போலவே உணர்கிறேன்” என்று ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.. கர்ணன் பயன்படுத்திய ‘லோ-ஆங்கிள்’ ஷாட்டுகள் நடிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான பிம்பத்தைத் தந்தன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு கர்ணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படம்  “பொல்லாதவன்:.  லஷ்மி குதிரை வண்டியில் செல்லும்போது அது மிக வேகமாக மலைப்பாதையில் விரைந்தோட, லஷ்மி பயந்து வண்டியிலேயே மயக்கம் போட்டு விழுந்து விட, அவரைக் காப்பாற்ற குதிரையின் அருகில் காரில் வேகமாக வரும் ரஜினியையும் மாற்றி மாற்றிக் காண்பித்து ரசிகர்களின் பதட்டத்தை அதிகரித்த காட்சி, கர்ணனின் தனித்துவமான பாணியிலமைந்த ஒன்று.. அத்திரைப்படத்தின் மர்மத்தைக் கூட்ட அந்த பெரிய மாளிகையின் படிக்கட்டுகளை ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்தியிருப்பார்.

காஷ்மீரின் தால் ஏரியில் “பொல்லாதவன்” படத்துக்காக ரஜினியை வைத்து கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார் கர்ணன். புதுவிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக, படகில் வைத்தே சண்டைக் காட்சிகளை எடுத்தார்கள். இந்தி துணை நடிகர்களை வைத்து அந்த சண்டைக் காட்சி  விறுவிறுப்பாக எடுத்து முடிக்கப்பட்டதோடு, அனைவருக்கும் திருப்தியாகவும் அமைந்தது

அப்போதுதான் கர்ணன் பதறினார். அவர் அணிந்திருந்த விலை உயர்ந்த தங்கச் சங்கிலி ஏரியில் விழுந்துவிட்டது!  தண்ணீரில் சன்டைக்காட்சிகளை படமாக்கும் ஆர்வத்தில் கர்ணன் அதைக் கவனிக்கவில்லை.  பிறகுதான் பார்த்திருக்கிறார்.  விலைமதிப்பற்றது என்பதோடு, அவருக்கு ராசியான சங்கிலி என்பதால் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்  கர்ணன்.

படப்பிடிப்பு முடிந்து கிளம்பி எல்லோரும் டெல்லிக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சென்னை வர வேண்டும். டெல்லி வந்ததும், முதல் வேலையாக என்ன, ஏதென்றே சொல்லாமல் கர்ணனை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார் ரஜினி.  நேராக புகழ் பெற்ற நகைக்கடைக்கு அழைத்துச் சென்று, ஏற்கனெவே கர்ணன் அணிந்திருந்தது போலவே சங்கிலி ஒன்றை வாங்கி பரிசளித்துவிட்டார் ரஜினி. கர்ணன் மறுத்தும் விடவில்லை. ரஜினி இப்படி செய்வார் என்று கர்ணன் நினைக்கவே இல்லை. எதிர்பாராமல் தொலைந்த தனது சங்கிலி திடீரென்று கிடைத்துவிட்டதில் சென்ட்டிமெண்ட்டாக கர்ணனுக்கும் மகிழ்ச்சி.

இந்த விஷயம் தெரிந்தவுடன்,  தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனும், முக்தா ராமசாமியும் நெகிழ்ந்து போய்விட்டார்கள். உடனடியாக அவர்கள் ரஜினியிடம், “படத்தை தயாரிப்பாளர்கள் நாங்கள் தான். ஆகவே,  நாங்கள்தான் சங்கிலி வாங்கித்தரவேண்டும். அதற்கான பணத்தை பிடியுங்கள்” என்று பணம் கொடுக்க முன்வந்தனர்.

ரஜினி  வாங்க மறுத்தார். இவர்கள் பிடிவாதம் பிடிக்கவே.. “இங்கே வேண்டாம் சென்னை வந்ததும் வாங்கிக்கொள்கிறேன்” என்றவர், கடைசி வரையிலும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளவேயில்லை.

திரு, சொர்ணவேல் எழுதிய “ஆளுமைகள் எனும் ஆடி”  என்ற புத்தகத்தில், ஒளிப்பதிவாளர் பி.என். சுந்தரம், ஒரு பேட்டியில் கர்ணன் பற்றி சில முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்:

“கர்ணனின் முக்கியமான பாணி நீண்ட சண்டைக்காட்சிகளும், அகல கோணங்களும் கொண்டு காட்சிப்படுத்துவது. வணிக சினிமாவிலேயே, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ‘கர்ணன் ஷாட்டுகள்” என்று பிரத்யேகமாக தெரியும் விதத்தில், வண்டிக்கடியில் தொங்கிக் கொண்டு சக்கரத்தின் வழியே ஷாட் வைப்பதிலிருந்து பல புதுமையான கோணங்கள் வழி தன்பிரத்யேகத்தன்மையைப் பதிவு செய்திருப்பார். 

அது தூங்கிக் கொண்டிருக்கும் வணிக சினிமாவை சில சமயங்களில் உலுப்பி எழுப்பியது. ரிஃப்:ளெக்சிவ்வாக கர்ணனின் செய்முறை நம் கவனத்தை ஈர்த்தது. சிறு வயதில் நானும் கர்ணனும் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். ஒன்றாகத் தொழில் கற்றிருக்கிறோம்.

மாருதிராவ் “அந்த நாளை” இயக்கிக் கொண்டிருந்தபோது, 1954ல் கிருஷ்ணன்–பஞ்சு, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் “இரத்தக் கண்ணீரை” ரேவதி, நரசு ஸ்டூடியோக்களில் படமாக்கிக் கொன்டிருந்தனர். அதில் ஆர்.ஆர்.சந்திரன் சார் தான் ஒளிப்பதிவாளர். நான் முதல் அஸிஸ்டெண்ட், கர்ணன் இரண்டாவது அஸிஸ்டெண்ட், ஆர்.ஆர்.சந்திரன் சாரிடமிருந்தும், அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் ஏ.கே. சேகரிடமிருந்தும் நிறைய விஷயங்கள் நானும், கர்ணனும் கற்றுக் கொண்டோம். அதன் உச்ச அடையாளமாக கர்ணனின் ‘கை கொடுத்த தெய்வம்” படத்தின் ஒளிப்பதிவைச் சொல்வேன்.

அவர் இயக்கிய கௌபாய் படங்களில், வித்தியாசமான உடையலங்காரத்தோடு, மேக்கப்போடு நெடுநேரம் ஒரே ஷாட்டில் சண்டைக் காட்சியை கோரியோகிராஃப் செய்ய மெனக்கெடுகிறார். வைட் ஆங்கிள் லென்ஸில் அவரது நெடுநேர ஆட்ட த்திற்கேற்ப கேமரா முன்னிகழும் நிகழ்சிசிகளை ஒரு நவீன கூத்தாக வடிவமைக்கிறார்.  

கர்ணன் இயக்கிய திரைப்படங்களில் நிறைந்திருந்த கவர்ச்சி காட்சிகளினால், அதிலிருந்த அழகியலுக்குப் போதிய கவனம் பெறாமல் போய்விட்டது.

ஸ்டூடியோ சார்ந்த மைய நீரோட்ட சினிமாவிற்கும், பொதுவாக அதற்கு வெளியே லொகேஷனில் அதிகம் ஷூட் செய்யப்பட்ட ஒரு சிறிய பட்ஜெட் வேற்று சினிமாவிற்கும் பாலமாக கர்ணன் இருந்தார் என்பது தமிழ் சினிமா சரித்திரத்தில் முக்கியமானது.”

எங்க பாட்டன் சொத்து, எதற்கும் துணிந்தவன் என கர்ணன் இயக்கிய படங்களில் நடித்த நடிகர் சிவக்குமார் கர்ணன் பற்றி கூறியது:

“பீமன் மாதிரி இருப்பார் கர்ணன். தனது அவ்வளவு பெரிய உருவத்தை ஒரு அம்பாசிடர் காரின் டிக்கியில் புதைத்துக் கொண்டு கேமராவை ஆபரேட் செய்வார். லைட்டிங் பற்றிக் கவலைப்படவே மாட்டார். எல்லா ஒளிப்பதிவாளர்களும் லைட்டிங் மீட்டரைக் கையில் வைத்துக் கொண்டு அளவு பார்க்க, கர்ணன் அதையெல்லாம் வைத்துக் கொள்ளாமல் உத்தேசமாக கண்ணில் பார்த்தே படமெடுப்பார்.

எதற்கும் துணிந்தவன் படத்தில்  நானும், ஜெயயலஷ்மியும் இரண்டு வெள்ளைக் குதிரைகளில் ஒரு டூயட் சாங் பாட வேண்டும்.  அந்தக் குதிரைகள் மேல் நாங்கள் உட்கார்ந்து கொண்டு ஓட்டுவதல்ல சீன். ஓடிக் கொண்டிருக்கும் குதிரை மீது நின்று கொண்டே பாடிப் போக வேண்டும்.  

அதற்கு ஸ்டண்ட் மேன் ஒருவரை ஹீரோயினுக்கு டூப்பாகப் போட்டு லாங் ஷாட்டில் எடுக்கும்போது, அவர் குதிரையிலிருந்து தவறி கீழே விழுந்து பலமாக அடிபட்டு விட்டது. அவர் உயிரோடு இருப்பாரா என்று அனைவரும் பயந்த போது, அடுத்த நாளே அவர் பழையபடி நடிக்க வந்து விட்டார். இப்படி மிகவும் பயங்கரமான, ரிஸ்க்கான ஷாட்களை எடுப்பவர் கர்ணன்,

அவர் அபாரமான கேமராமேன். கடின உழைப்பாளி. சுத்தமான மனிதன். டீடோட்டலர். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்.”

கர்ணன் உருவாக்கிய பல தொழில்நுட்ப மாற்றங்கள் தான் அவரை ஒரு சாதாரண ஒளிப்பதிவாளராகவோ, இயக்குநராகவோ மட்டுமல்லாமல் ஒரு “விஷுவல் டைரக்டராக” தமிழ் சினிமாவில் தனித்து நிற்கச் செய்தன. தான் இயக்கிய திரைப்படங்களில் கதையை விட தொழில்நுட்ப அம்சங்களுக்கும் சண்டைக்காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, வணிகரீதியாகப் பெரும் வெற்றிகளைப் பெற்றவர். 

பல புதுமைகளை பரிசோதித்து முன்னோடியாக இருந்தவர் கர்ணன்.  கதாநாயகர்கள், இயக்குநர்களின் பெயர்களே அதிகம் அறியப்பட்ட காலகட்டத்தில், கேமராமேதை கர்ணன் என்று பத்திரிகைகளில் குறிப்பிடும் வகையில் ஒரு ஒளிப்பதிவு இயக்குநராக தன் பெயரை நிலைநிறுத்தியவர் கர்ணன்.

Author Image

அகிலா ஸ்ரீதர்

மொழிபெயர்ப்பாளர். உதவி இயக்குநர். எழுத்தாளர். ஆங்கிலப் படங்களுக்கான வசனங்களை சப்டைட்டில் செய்யும் பணியிலும் இருக்கிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
start camera-08

 ஸ்டார்ட் கேமரா 08  எம். கர்ணன்

January 28, 2026
gurudutt-05

வாழ்வில் வந்த இரு தேவதைகள் #05

January 28, 2026
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026
bella darr

பேலா டார் – காட்சியை அனுமதித்தவர்

January 24, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
start camera-08

 ஸ்டார்ட் கேமரா 08  எம். கர்ணன்

January 28, 2026
gurudutt-05

வாழ்வில் வந்த இரு தேவதைகள் #05

January 28, 2026
table top-4-5

டேபிள் டாப் 04 & 05

January 24, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?