பாஸ்கர் சக்தி
குருதத் இயக்கிய முதல் படமான ‘பாஸி’ வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின் இயக்கிய ‘ஜால்’ சுமாராகத்தான் போனது. முதல் படத்தின் கதாநாயகன் தேவ் ஆனந்த்தான் இதிலும் ஹீரோ. முதல் இரண்டு படங்களிலும் சின்னதாக ஒரு காட்சியில் வந்து போனார் குருதத்.
குருதத்திடம், “நீ ஹீரோ மாதிரிதான் இருக்கிறாய்? எதற்காக உன் படங்களில் வேறு ஆட்கள் நடிக்க வேண்டும்? நீயே ஹீரோ ஆகி விடு” என்று சொன்னவர் வி.கே.மூர்த்தி. குருதத் முதலில் அதை ஏற்கவில்ல. ‘ஜால்’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் ஷீட்டிங்கில் “ஒரு சிறிய மீனவன் வேடத்தை நீயே பண்ணு” என்று மூர்த்தி சொல்ல, குருதத் அந்த வேடத்தில் நடித்தார்.
ஆனால், தான் இயக்கிய மூன்றாவது படமான ‘பாஸ் ( Baaz)’ திரைப்படத்தில்தான் கதாநாயகன் ஆனார்.
ஆனால் இந்தத் திரைப்படம் குருதத்துக்குக் கசப்பான படமாக இருந்தது. இந்தப் படத்தை அவர் நடிகை கீதாபாலியின் அக்கா ஹரிதர்ஷன் கவுர் என்பவருடன் இணைந்து தயாரித்தார். நிறைய தலையீடுகளும் இடையூறுகளும் இருந்தன. படத்தின் வசனகர்த்தா சர்ஷார் சைலானி என்பவருடன் குருதத்துக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு வந்து விவாதங்கள் சூடாகின. சர்ஷார் சைலானி என்பவர் அக்காலத்திய மேடை நாடகப் பாணியில் எழுதிய வசனங்கள் குருதத்துக்கு உவப்பாக இல்லை. குருதத் இளைஞர். சிந்தனையில் நவீனமானவர். வசனங்கள் சுருக்கமாகவும் இயல்பாகவும் இருக்கவேண்டும். நகைச்சுவையும் சுவாரஸ்யமும் வேண்டும் என்று விரும்பினார். நீள நீளமான நாடகப் பாணி வசனங்களை அவரால் ஏற்க இயலவில்லை.
(இந்த படப்பிடிப்பின் போதுதான் அப்ரார் ஆல்வியை குருதத் கண்டுபிடித்தார்.)
ஒரு வழியாக எல்லாவற்றையும் கடந்து ` பாஸ்’ ( Baaz) திரைப்படம் வெளியானது.
படம் அட்டர் ஃப்ளாப். குருதத்தின் படங்களிலேயே மோசமானது என்று சொல்லப்படும் திரைப்படம், அவர் கதாநாயகனாக திரையில் தோன்றிய ` பாஸ்’ ( Baaz) திரைப்படம்தான். இப்படி ஒரு வரவேற்பை குருதத் எதிர்பார்த்திருக்கவில்லை. படம் குறித்த விமர்சனங்களும் படத்தையும், குருதத்தின் இயக்கத்தையும், அவரது கதாநாயக முயற்சியையும் கிழித்துத் தொங்கவிட்டன.
மனம் புண்பட்டுப் போனார் குருதத். இந்த க்ராஃப் மிகவும் சோர்வு தருவதாக இருந்தது. முதல் படம் வெற்றி. அடுத்த படம் சுமார். மூன்றாவது படம் படுதோல்வி. அதில் தான் கதாநாயகன் வேறு .
இனியும் தான் கதாநாயகனாக நடிக்கத்தான் வேண்டுமா? என்கிற குழப்பத்தோடு அப்ரார் ஆல்வியிடம் இதைப் பற்றிக் கேட்க, அப்ரார் சமாதானத் தொனியில், “ உனக்கு நல்ல ஃபோட்டோஜெனிக் முகம்” என்று சொல்ல, பதிலுக்கு குருதத், “அதுல கொஞ்சமாவது நடிப்பு வருதா?” என்று கேட்டிருக்கிறார்.
மன உளைச்சல்களைத் தாண்டி பெரும் பொருளாதார நஷ்டமும் ஏற்பட்டுவிட்டது. எனவே தயாரிப்பு கம்பெனியிலிருந்து ஹரிதர்ஷன் கவுர் விலகிக்கொண்டார். அவரது ஷேரை மனைவி கீதா உதவியுடன் பணம் புரட்டி குருதத் வாங்கிக் கொண்டார். ‘குருதத் சினிமா’ கம்பெனி உருவானது.
தோல்வியிலிருந்து மீண்டெழும் உத்வேகத்துடன் குருதத் தயாரானார். அப்ரார் ஆல்வி முதல் முறையாக குருதத்துக்கு வசனம் எழுத உள்ளே வந்தார்.
`ஆர் பார்’ படம் தயாரானது.
தயாரிப்பு , இயக்கம் குருதத். ஆனால் சென்ற படம் கொடுத்த அனுபவமோ என்னவோ, கதாநாயகனாக நடிக்க குருதத்துக்கு தயக்கம் இருந்தது. மீறி நடித்தார். சில ரீல்கள் ஷூட் பண்ணப்பட்ட பிறகு சில டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் அந்த ரீல்களைக் காட்டினார். அதனைப் பார்த்த அவர்கள் குருதத் ஹீரோ ரோல் பண்ணுவதை அவ்வளவு சிலாகிக்கவில்லை. உடனே குருதத் நடிகர் ஷம்மி கபூரை அணுகி அந்தப் படத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஷம்மி கபூர் இவர் நடித்த காட்சிகளைப் பார்த்து விட்டு, “இந்தப் பாத்திரத்துக்கு என்னைவிட நீங்கள்தான் பொருத்தம். நீங்களே நடியுங்கள்” என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லை. ` பாஸ்’ ( Baaz) திரைப்படம் தந்த கசப்புகளை, ஓர் உதறு உதறி உதிர்த்துவிட்டு சவாலை ஏற்றுக்கொண்டு ‘ஆர் பார்’ படத்தின் கதாநாயகனாக குருதத் நடிக்கத் தொடங்கினார். கதாநாயகியாக ஷ்யாமா நடித்தார்.
‘ஆர் பார்’ திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு வி.கே.மூர்த்தியும் குருதத்தும் எப்படிப்பட்ட படத்தை அடுத்து பண்ணலாம் என்கிற விவாதத்தில் ஈடுபட்டபோது வி.கே. மூர்த்தி தெளிவாகச் சொல்லி இருக்கிறார். மூர்த்தி எப்போதுமே மனதில் இருப்பதைப் பட்டென்று சொல்லக் கூடியவர். மிக வெளிப்படையான மனிதர். அவர் குருதத்திடம், ”இத பாரு, சீரியஸான படம் எதுவுமே இப்போதைக்கு வேண்டாம். கமர்ஷியல் பொழுது போக்காக ரெண்டு மூணு படம் பண்ணுவோம். அதன் பிறகு நமக்குப் பிடித்த கம்பீரமான படங்களைத் தயாரிப்போம்” என்று சொல்லிவிட்டார். மிகச் சரியான வழிநடத்தலாக அது அமைந்தது. முந்தைய படத்தின் தோல்வி மற்றும் கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து குருதத்தை மீட்டெடுக்கத் தேவை உடனடியாக ஒரு கமர்ஷியல் சக்ஸஸ்.
`ஆர் பார்’ ஒரு பக்கா கமர்ஷியல் கதை. சிறையிலிருந்து வரும் விளிம்பு நிலை மனிதனான ஹீரோ ஒரு கார் கெராஜின் ஓனர் மகளான ஹீரோயினைக் காதலிக்கிறான். இவர்களது காதலை ஹீரோயினின் தந்தை ஏற்கவில்லை. ஹீரோவுக்கு சில நிழல் உலகக் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது. அங்கே இருக்கும் கேபரே டான்ஸர், ஹீரோவைக் காதலிக்கிறாள். ஹீரோவின் மனமோ அவளை ஏற்கவில்லை. எனவே டான்ஸர் வில்லத்தனம் செய்கிறாள். ஹீரோயின் கடத்தப்படுகிறாள். இறுதியில் தீயவர்களை அழித்து ஹீரோயினைக் காப்பாற்றிக் கை பிடிக்கிறார் ஹீரோ குருதத்.
இது ஒரு சாதாரண கமர்ஷியல் கதைதான். ஆனால் குருதத், வி.கே.மூர்த்தி, அப்ரார் ஆல்வி ஆகிய மூவர் கூட்டணி இந்தப் படத்தை வெகு சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் உருவாக்கியது. இந்தப் படத்தில்தான் அப்ரார் ஆல்வி முதல் முறையாக குருதத்துக்கு வசனம் எழுதினார். ( திரைக்கதை- நபேந்து கோஷ்).
அப்ரார் ஆல்வி அதுவரை எழுதப்பட்டு வந்த வசனங்களின் தன்மையை மாற்றினார். அது வரையில் வசனம் எழுதிய எழுத்தாளர்களின் மொழியையும் மனப்பாங்கையுமே கதாபாத்திரங்கள் பிரதிபலித்தன. ஆனால் அப்ரார் வேறு விதமாக யோசித்தார். ஒரு திருடன், ஒரு டாக்ஸி ட்ரைவர், பேப்பர் போடுபவன், ஒரு கிரிமினல், ஒரு மெக்கானிக், ஒரு நடனக்காரி இப்படி பல்வேறு பட்ட பாத்திரங்கள் எப்படி ஒரே விதமான மொழியைப் பேச முடியும்? ஒவ்வொரு பாத்திரமும் அந்தப் பாத்திரத்தின் தன்மை, பின்னணி, வாழ்க்கைச் சூழலில் இருந்து பேசுவதுதான் இயல்பாக இருக்கும் என்று கருதினார். அதன்படியே வசனங்களை அமைத்தார். அவர் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார், “கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே அப்போதைய சினிமா வசனங்கள் எனக்கு எரிச்சலூட்டியிருக்கின்றன. எல்லாப் பாத்திரங்களும் வசனகர்த்தாவின் மொழியையே பேசிக்கொண்டிருந்தன. பாத்திர வார்ப்புகளுக்குப் பொருத்தமற்ற எழுத்து மொழியையே அவை பேசின. ஒருவேளை நமக்கு சினிமாவில் எழுத வாய்ப்புக் கிடைத்தால் பாத்திரம் இயல்பாகப் பேசுவது போல் எழுத வேண்டும் என்று நான் நினைத்தேன். அவன் படித்தவனா? கிராமத்தானா? பணக்காரனா? குஜராத்தியா, பஞ்சாபியா, உ.பியைச் சேர்ந்தவனா? என்கிற அவனது பிரத்யேகத் தன்மையை வசனங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். `ஆர் பார்’ திரைப்படத்தில் வசனங்களில் நவீனத்தன்மையை நாங்கள் கொண்டு வந்தோம். குருதத் எனக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தார். ஒவ்வொரு பாத்திரமும் அதன் இயல்புத் தன்மையில் பேசியது. ஹீரோ காலு மத்தியப் பிரதேசத்து ஆள். அதிகம் படிக்காதவன். கேரேஜ் ஓனர் ஒரு பஞ்சாபி. அவர்களை அவர்களது இயல்பான மொழியில் பேசுவதாக அமைத்தேன். அவர்கள் பேச்சைக் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கினேன்.”
குருதத் இந்தத் திரைப்படத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களையும் சுவாரஸ்யமாக, அதனதன் இயல்போடு உருவாக்கினார். ஹீரோயினாக ஷ்யாமா நடித்தார்.
ஓ.பி.நய்யாரின் இசையில் எட்டுப் பாடல்கள். அவற்றில் ஏழு பாடல்களை கீதா தத் பாடினார். எட்டுப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆயின. குருதத் பாடல்களைப் படமாக்குவதில் தன் நிபுணத்துவத்தை இந்தப் படத்திலும் நிரூபித்தார்.
அப்போதெல்லாம் பாடல்களை எடுப்பதற்கென்று இருந்த ஃபார்முலாவை குருதத் படத்தின் பாடல் காட்சிகள் மீறின. உதாரணமாக ஹீரோவும், ஹீரோயினும் முதல் முதலில் சந்திக்கும் காட்சி. வழக்கம் போல மோதலில் தொடங்குகிறது. ரோட்டில் ஹீரோ நடந்து வர, காருக்கடியில் படுத்து ரிப்பேர் பார்க்கும் ஹீரோயின் கால் அவனை தடுக்கி விடுகிறது. காலைப் பிடித்து இழுத்தால் அது ஒரு பெண். ஒரு சிறிய உரசல். அப்போது சட்டென்று பாடல் தொடங்குகிறது. (கபி ஆர் கபி பார் எனும் பாடல்) பாடலை, தெருவில் இருக்கும் சிறுவர் சிறுமியரும் அருகே கட்டட வேலை செய்யும் சித்தாள் பெண்களும் பாடுகின்றனர். இந்த மாதிரியான பாடல் தொடக்கமும்,பிரதான கதாபாத்திரங்கள் அல்லாத வந்து போகும் பாத்திரங்கள் பாடலுக்கு வாயசைப்பதும் எல்லாம் வெகு புதுமையான அம்சங்கள்.
வி.கே. மூர்த்தியின் கேமரா இந்தப் படத்தில் செய்திருக்கும் ஜாலங்கள் வெகு அருமையாக இருக்கும். நேரடியாக முகங்களைக் காட்டாமல், முன்னால் ஒரு சிறிய இடைஞ்சலை, காட்சித் தொந்தரவை நமக்கு அளிப்பார். அந்தப் பாணி, காட்சிக்கு அழகு சேர்ப்பதாக இருக்கும். மேலே சொன்ன பாடலின் தொடக்கத்தில் தெருவில் ஹீரோ நடந்து வருகையில் மாடியில் ஒரு வீட்டில் இருக்கும் மரச்சட்டங்கள் நிழலாக இருக்க, அந்த கறுப்பு மரச்சட்டங்களின் இடையே கேமரா பயணிக்க, தெருவில் ஹீரோ நடந்து வருவது காட்டப்படும். அதே போல் கேரேஜில் இடம் பெறும் பாடல் காட்சியில் காருக்குள் கேமரா இருக்க கார் ஜன்னல், கண்ணாடி வழியே ஹீரோ, ஹீரோயின் காட்டப்படுவார்கள். கேபரே டான்ஸர் ஆடும் சூப்பர் ஹிட் பாடலான, “பாபுஜி தேரே சல்னா” எனும் பாடல் காட்சியில் மாடியில் கேமரா இருக்கும். குருதத் கையிலிருக்கும் பொட்டலத்திலிருந்து எதையோ கொறித்தபடி பாரினுள் நுழைவார். மாடியிலிருக்கும் சட்டங்கள் ஒரு அழகான ஃப்ரேம் போலிருக்க அதன் மையத்திலிருந்து குருதத் மேலே ஆடும் டான்ஸரைப் பார்ப்பார். அந்த பார் டான்ஸ் காட்சி முழுக்கவே கறுப்பு வெள்ளையின் சிற்சில வேறுபாடுகளை மூர்த்தி அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார்.
படம் வெளியானது. படமும் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆயின. மிகவும் வெற்றிகரமாக ஓடியது ’ஆர் பார்’. மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்ட, இயக்கப்பட்ட கமர்ஷியல் படம் என்று பத்திரிகைகள் கொண்டாடின. குருதத்தின் இயக்கத்தைப் பத்திரிகைகள் பாராட்டின.
முதல் படத்தில் வென்று அடுத்தடுத்த இரண்டு படங்களில் சறுக்கிய குருதத்தின் க்ராஃப் சடசட என்று மேலேறியது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட குருதத்தின் வாழ்க்கைத் தரம் சட்டென்று உயர்ந்து சிறப்பான நிலையை அடைந்தது.
குருதத்துடன் இணைந்த முதல் படத்திலேயே அப்ரார் ஆல்வி தன்னை நிரூபித்தார். ஓர் இயக்குனருக்கு சரியான எழுத்தாளர் அமைவது மிகவும் முக்கியமானது. அப்ரார் ஆல்வி கருத்துகளில் மிகவும் உறுதியாக நிற்பவர். குருதத்துடன் சரிக்குச் சரி வாதிடுபவர். பல நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில், தான் சொல்வதுதான் சரி என்று இவரும் குருதத்தும் மிகவும் உஷ்ணமாக விவாதிப்பார்கள். பார்ப்பவர்களுக்கு, ‘இதோடு எல்லாம் முடிந்தது.’ என்று தோன்றும். ஆனால் குருதத், அப்ரார் இருவரிடமும் உள்ள சிறந்த குணம் என்பது இருவரும் தத்தம் கருத்துகளுக்காக வாதிடுவார்கள். அந்த விவாதத்தில் யாராவது ஒருவர் எதிராளியின் கருத்தை ஏற்கக் கூடிய புள்ளி இருந்தால், அதனை எந்த வித ஈகோவும் இன்றி, `நீ சொல்வது சரிதான். யூ ஹேவ் எ ரைட் பாய்ன்ட்’ என்று சொல்லி உடனே விவாதத்தை முடித்துக்கொண்டு உடனே சகஜமாகி விடக்கூடியவர்களாக இவருவரும் இருந்தனர். ஒரு படைப்பாளியாக குருதத்துக்கு தான் சொல்லும் எல்லாவற்றுக்கும் சரி என்று தலையாட்டாமல், தன் கருத்தில் உறுதியாக இருக்கும் அப்ராரின் இயல்பும், மேற்கொண்ட பணியின் மீது அவருக்கிருந்த ஈடுபாடும், கமிட்மென்ட்டும் மிகவும் பிடித்திருந்தது.
ஒரு முறை அவரிடம் இரண்டு வசனகர்த்தாக்கள் போய், நாங்களும் அப்ராருடன் இணைந்து எழுதுகிறோம் என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு குருதத் சொன்ன பதில், ”வேண்டாம். எனக்கு அப்ரார் மட்டுமே போதும். அவனுக்கென்று சில சிந்தனைகள் இருக்கின்றன். அவன் ஆமாம் சாமி போடுபவன் கிடையாது.”
ஆனால், ஒரு நபருக்கு அப்ராரை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் தயாரிப்பாளர் கே.கே.கபூர் என்பவர். அப்ராரின் சில தலையீடுகள் சினிமாவின் கமர்ஷியல் வெற்றியைப் பாதிக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. குருதத்தின் சிந்தனைகள் மீது அப்ரார் செல்வாக்குச் செலுத்துவதை அவர் விரும்பவில்லை. அப்ரார் மீது கடுப்புடனேயே இருந்தார்.
`ஆர் பார்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து என்ன ப்ராஜெக்ட் செய்யலாம் என்கிற துடிப்புடன் குருதத் இருக்க அடுத்த படத்திற்காக கதை விவாதம் தொடங்கியது. கபூரின் பங்களாவில்தான் விவாதம். குருதத், தயாரிப்பாளர் கபூர் இவர்களுடன் எழுத்தாளர் அப்ரார்.
குருதத் அடுத்த படத்திற்கென தன் மனதிலிருந்துக்கும் கதையை விவரித்தார்.
“ஹீரோ ஒரு கடத்தல்காரன், அவனது இடத்திற்கு வரும் இரு சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களுக்கு அடைக்கலம் தரும் ஹீரோ, ஹீரோயினது வழிகாட்டலால் மனம் மாறி அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உதவுகிறான்…”
அப்ராருக்கு சுத்தமாக இது பிடிக்கவில்லை. மறுபடியும் கடத்தல்காரன் கதை, அவனது மறைவிடம்! அப்ரார் ஏமாற்றத்துடன் உறுதியாக தலையசைத்து மறுக்கும் தொனியில், “இந்த கடத்தல்காரன் கதைகளை விட்டு நீங்க வெளியில வரவே மாட்டீங்களா?“
கேட்டுக்கொண்டிருந்த கபூருக்குக் கோபம் வந்துவிட்டது. “குருதத் கிட்ட இருந்து ஜனங்க இது மாதிரிதான் எதிர்பார்க்கிறாங்க. ஒரே விதமா கதை பண்றதுல என்ன தப்பு? ஹிட்ச்காக் தன்னோட கேரியர் முழுக்க க்ரைம்தானே பண்ணாரு?”
அப்ரார் மறுத்தார். “ஹிட்ச்காக் ஒரு விதிவிலக்கு. விதிவிலக்குகள் விதியை உறுதிப்படுத்துகின்றன (exceptions prove the rule) அப்படின்னு சொல்வாங்க. வித விதமான சப்ஜெக்ட்டுகளை கையாண்டு ஜெயிச்ச வேற பல டைரக்டர்களை நான் உதாரணம் காட்ட முடியும்.”
எழுத்தாளன், தயாரிப்பாளரை இவ்வளவு கடுமையாக மறுத்துப் பேசுவதெல்லாம் அபூர்வமாக நிகழும் ஒரு விஷயம். கபூரின் எரிச்சல் அதிகமானது. இவர்களது விவாதத்தின்போது மிகவும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த குருதத் சொன்னா, “அப்ரார் சொல்வதுதான் சரி.”
கபூரின் கோபம் இன்னும் அதிகமாகிவிட்டது. இந்த எழுத்தாளன், குருதத்தை கெடுக்காமல் விடமாட்டான் போல என்று அவருக்குத் தோன்றிவிட்டது. எனவே அடுத்த விவாதங்களுக்கு அப்ரார் வேண்டாம் என்று குருதத்திடம் கண்டிப்பாகச் சொல்லிவிட, தயாரிப்பாளர் பேச்சை மீற முடியாத சூழலில் குருதத் இருந்தார். எனவே அப்ரார் அடுத்தடுத்த விவாதங்களில் பங்கு பெறவில்லை.
கொஞ்ச நாட்கள்தான் இப்படிப் போயின. ஒரு நாள் காரில் வந்த குருதத், அப்ராரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். அவர் முகம் சிவந்திருந்தது. கடும் கோபத்தில் இருந்தார். என்ன விஷயம்? என்று அப்ரார் கேட்க, தனக்கும் கபூருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை சுருக்கமாகச் சொன்னார்.
“அவர் தயாரிப்பாளராக இருக்கலாம். ஆனால் எனது படைப்பு சுதந்திரத்தில் தலையிடும் உரிமை அவருக்கில்லை.”
உக்கிரமாக ஏதோ விவாதம் நடந்திருக்கிறது என்று அப்ராருக்குப் புரிந்தது.
கொஞ்ச நேரம் கழித்து குருதத் கேட்டார், “நீதான் ரைட்டர்னு சொல்றியே? ஸ்க்ரீன்ப்ளேயா டெவலப் பண்றதுக்கான ஐடியா ஏதாச்சும் கைவசம் இருக்கா?”
அப்ரார், ‘மாடர்ன் மேரேஜ்’ என்று ஒரு நாடகம் எழுதி இருந்தார். அதிலிருந்து ஒரு சீனை சொன்னார். அதில் வரும் ஹீரோயின் பாத்திரம் குருதத்துக்குப் பிடித்திருந்தது. கொஞ்சம் முட்டாள்தனத்துடன் கூடிய ரசிக்கத்தக்க ஹீரோயின் பாத்திரம். அதனை மையமாக வைத்துக் கதை பண்ண முடியுமா? என்று கேட்க அப்ரார் முடியும் என்று சொன்னார்.
“உடனே எழுத ஆரம்பி” என்றார் குருதத். அவர் பார்த்த திரைப்படமான Come, live with me என்கிற படத்தின் சில அம்சங்களையும் இந்த ஸ்க்ரிப்டில் சேர்க்கச் சொன்னார்.
அப்ரார், சரி என்றார். எழுதத் தொடங்கினார்.
இந்தக் கூட்டணியின் அடுத்த வெற்றிப் படம் ஆரம்பம் ஆயிற்று.
(தொடரும்)











