The Talkie
Thursday, July 2, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் இந்தியத் திரைப்படங்கள்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

The Talkie by The Talkie
July 2, 2026
in இந்தியத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon அபுல்கலாம் ஆசாத்

அது நடனமாதர் வீதி, அங்கு இருக்கும் ஒவ்வொரு மாளிகையிலும் நடனம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கதாநாயகியும் நடனமாடுகிறாள். அவள் நடனமாடும் அரங்கில் இருந்து கேமரா அவள் நடனத்தையும், வீதியையும், அருகருகே இருக்கும் மாளிகைகளின் கூடங்களையும் காட்டுகிறது. திரையில் காணும் அடுத்தடுத்த மாளிகைகளின் கூடங்களிலும் வெவ்வேறு மங்கையர் நடனம் ஆடுகின்றனர். வீதிகளில் மக்கள் நடக்கின்றனர். ஒரு கோணத்தில் கதாநாயகியையும் சேர்த்து ஆறு பெண்கள் வெவ்வேறு மாளிகையின் கூடங்களில் நடமாடுவர்.

அனைத்தையும் காட்டும் கேமரா கதாநாயகியின் மீதிருக்கும் முதன்மை நிலையை மாற்றாது. அவள் சுழன்று ஆடுவதும், ஒலிக்கும் பாடலும், அவளைச் சீண்டும் கனவான்களும், பார்வையாளனின் கவனத்தில் இருக்க, பின்னணியில் மேற்சொன்ன கூடங்களும் வீதியும் இருக்கும். அத்தனை நடிகர்களையும் அரங்க நிர்மாணத்தையும் இசையையும் நடனத்தையும் ஒருங்கிணைத்து அப்படியொரு காட்சியை கிட்டத்தட்ட 1960களில் வண்ணத்தில் படமாக்கிய நுட்பத்தைப் பாராட்டலாம்.

பாக்கீஸா திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘இன்ஹீ லோகோனே லேலீனா துப்பட்டா மேரா’ என்னும் அந்தப் பாடல் காட்சி கலையமைப்புக்கும் ஒருங்கிணைப்புக்கும் பாடத்திட்டமாக வைக்கக்கூடிய அளவுக்கு நுட்பமான காட்சி. 1972ஆம் ஆண்டின் ஃபிலிம் ஃபேர் விருதினை அது கலை இயக்கத்துக்காகவோ டைரக்‌ஷனுக்காவோ பெற்றது. 1960ல் படமாக்கமும் 1972ல் வெளியிடப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது என்பது குழப்பத்தைத் தரலாம். பாக்கீஸா பல குழப்பங்களுக்கு இடையில் பல ஆண்டுகளாகப் படப்பிடிப்பைக் கண்ட திரைப்படம்.

உருது மொழியில் ‘தவாயிஃப்’, தமிழில் கணிகை, courtesans. இந்தித் திரையில் கணிகையின் வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்ட திரைப்படங்கள் நூற்றுக்கும் மேல் வெளியாகியுள்ளன.

Dancing with the nation – Courtesans in Bombay Cinema – by Ruth Vanitha என இந்தித் திரையில் இடம்பெற்ற கணிகையர் கதாபாத்திரங்கள் தொடர்பான ஆய்வு நூல் ஒன்றும் வெளிவந்துள்ளது. இந்திய வரலாற்றிலும், இந்திய விடுதலைப் போராட்டத்திலும், இந்தியப் பிரிவினையிலும் கணிகையரின் பங்களிப்பு உள்ளது. நேற்றைய திரைப்படம் மொஹல்-ஏ-ஆஸம் (1960) (கதாபாத்திரம்: அனார்கலி) முதல் இன்றைய திரைப்படம் பேகம் ஜான் (2017) (கதாபாத்திரம்: பேகம் ஜான்) வரையில் கணிகையரின் கதை வரலாற்றுடன் இணைக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான தொலைக்காட்சித் தொடர் ஹீரா மண்டி (2024) கணிகையர் வாழ்வைக் கதைக்களனாகக் கொண்டது. நடிகை ரேகாவின் ‘உம்ராவ் ஜான்’ (1981) கதையமைப்பும் இதுதான். உம்ராவ் ஜான் – முதலில் நாவலாக வெளிவந்தது. உருதுவில் மீர்ஸா ஹாதி ருஸ்வா எழுதிய நாவல், ஆங்கிலத்தில் குஷ்வந்த் சிங்காலும், எம்.ஏ. ஹுசியனியாலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

இப்படியான கணிகையர் கதைக்களன் வரிசையிலும் இந்தித் திரையில் ‘பாக்கீஸா’வுக்கும் முக்கியமான இடம் உள்ளது.
நர்கீஸ் கணிகை, நர்கீஸின் சகோதரியும் கணிகை, சகோதரியிடம் வளரும் குழந்தை சாஹிப்ஜானும் கணிகையாகவே வளர்கிறாள். பாக்கீஸா – களங்கமற்றவள். நர்கீஸ் களங்கமற்றவள் என்பது எந்த அவையில் நிரூபணமாகும் என்பதைச் சுற்றி நகரும் கதை.

நர்கீஸ், மிகச்சிறந்த நாட்டியப்பெண். பொன்னிறக் கூந்தலுடைய அவளது மனதில் இடம்பெற்ற ஆண், ஷஹாபுத்தீன். கணிகை வாழ்விலிருந்து விடுவிப்பதாகச் சொல்லி நர்கீஸைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான் ஷஹாபுத்தீன். ஷஹாபுத்தீனின் தந்தைக்கு நவாபியக் குலப்பெருமை உண்டு. அது ஷஹாபுத்தீன் – நர்கீஸ் காதலை ஏற்க இடம்தரவில்லை.

‘ஒரு கணிகையை வீட்டுக்கு அழைத்து வர உனக்கு எப்படித் துணிவு வந்தது?’ என அவர் கேட்க,

‘அப்படிச் சொல்லாதீர்கள். அவள் இப்போது இந்தக் குலத்தின் மருமகள்’ என ஷஹாபுத்தீன் வாதாட,

‘இந்தக் கடைவீதிப் பேச்சு வேண்டாம். அவள் மருமகளல்ல, நீ செய்த பாவம்’ எனத் தந்தை மறுக்கிறார்.

இந்த உரையாடல்களால் மனம் உடைந்த நர்கீஸ் அங்கிருந்து ஓடுகிறாள். பல்லக்குத் தூக்கிகளிடம் காசுகொடுத்து ஒரு பாழடைந்த ஒரு சுடுகாட்டில் தன்னை இறக்கிவிடச் சொல்கிறாள். அங்கேயே தனியாக வாழ்கிறாள். ஷஹாபுத்தீன் அவளைத் தேடி அலைகிறான், அவள் கிடைக்கவில்லை.

தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரத்தில் முதன்மைப் பாத்திரங்களுள் ஒருவர் மாதவி. சிலப்பதிகாரமும் பாக்கீஸாவும் இன்னொரு புள்ளியிலும் இணைகின்றன.

சிலப்பதிகாரத்தில் வெளித்தோற்றத்தில் ஒன்றுபோல இருந்த இரண்டு சிலம்புகள் நீதி வழுவவும், நீதி கிடைக்கவும் வைத்த காரணிகளுள் ஒன்றாகச் செயல்பட்டன. பாக்கீஸா திரைப்படத்தின் கதையை எழுதிய கமால் அம்ரோஹி சிலப்பதிகாரம் படித்திருப்பாரோ என்னவோ, கதையின் முக்கியத் திருப்பத்தில் ஒரே மாதிரியான இரண்டு தங்கக்காப்புகள் நர்கீஸை அடையாளம் காண உதவுகின்றன.

கோப்பெருந்தேவியின் தொலைந்த சிலம்பைப் போலவே இருந்த கண்ணகியின் சிலம்பு சந்தையில் விற்பனைக்கு வந்ததும், அது அரசியின் சிலம்பெனத் தவறாக அடையாளம் காட்டப்பட்டதால் நெடுஞ்செழியனின் அவையில் நீதி வழுவியது. பின்னர் கண்ணகி அவைக்கு வந்து புறத்தோற்றத்தில் ஒன்றாக இருப்பினும் உள்ளிருக்கும் பரல்கள் வெவ்வேறெனச் சிலம்பை உடைத்து நிரூபித்த பின், கண்ணகிக்கு நியாயம் கிடைத்தது.

பாக்கீஸா திரைப்படத்தில் நர்கீஸின் தங்கக்காப்பை விற்பதற்காக ஒரு கிழவி எடுத்து வருகையில், நர்கீஸின் சகோதரி அதை அடையாளம் காண்கிறாள். இது எங்கள் நகை எனத் தன் கையில் அணிந்திருக்கும் காப்புடன் அதை ஒப்பிடுகிறாள். கிழவி, இது இன்னொரு பெண்ணின் நகை எனச் சொன்னதும், நர்கீஸின் சகோதரி, ‘அந்த இன்னொரு பெண்ணின் தலைமுடி பொன்னிறமாக இருக்குமா?’ என வினவுகிறார். கிழவி ‘ஆம்’ எனச் சொல்லி, அந்த இன்னொரு பெண் கடந்த பத்து மாதங்களாக சுடுகாட்டில் வசிப்பதாகச் சொல்கிறாள். உடனே, சகோதரி கிழவியை அழைத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு ஓட, அங்கு நர்கீஸ் இறந்துகிடக்கிறாள். அவள் அருகில், அவளுடைய பெண்குழந்தை அழுதுகொண்டிருகிறது. பெண்குழந்தையை நர்கீஸின் சகோதரி எடுத்துச்சென்று வளர்க்கிறாள்.

அந்தப் பெண்குழந்தை சாஹிப்ஜான் என்னும் பெயரில் நர்கீஸின் சகோதரியிடம் வளர்கிறாள். தன் தாயைப் போல இசையிலும் நாட்டியத்திலும் சிறந்து விளங்குகிறாள். அவளை அடைவதற்கு நகரத்தின் நவாப்களுக்குள் போட்டியே நடக்கிறது. அவரவர் தங்கள் பரிசுப்பொருள்களை அனுப்புகின்றனர்.

கணிகையர் வாழ்க்கை திரைப்படங்களில் சொல்லப்படுவது பொதுத்தன்மை. அதில் சிறப்புத்தன்மையாக பாக்கீஸா கொண்டிருப்பது என்னவென்றால், கணிகையைத் தன் குடும்பத்தில் ஏற்பது, வசனங்களால் மட்டும் நிகழ்வது அல்ல. கேளிக்கையின் நிமித்தமும், தங்களுடைய பணம், ரசனை, பெருமைகளைக் காட்டும் நிமித்தமுமாகக் கணிகையர் வீதிக்குச் செல்லும் நவாப் பரம்பரையினர், கணிகையை மருமகளாக ஏற்கவேண்டுமென்றால், தங்கள் குலப்பெருமையை ஒதுக்கிவிட்டுக் கணிகையரின் வீதிக்கு முறைப்படிச் சென்று பெண் கேட்கவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது.

இன்றைய காலகட்டத்தில் இந்த முடிவின் தாக்கம் பெருமளவில் இல்லாததாகத் தோன்றலாம். ஆனால், அன்றைய நர்கீஸும் ஷஹாபுத்தீனும் வாழ்ந்த காலகட்டத்திலும், பாக்கீஸா வெளியான காலகட்டத்திலும், நவாபைப் பெண்கேட்டுக் கணிகையர் வீதிக்குச் செல்லவைத்தது புரட்சிகரமான முடிவு.

நர்கீஸாகவும், சாஹிப்ஜானாகவும் நடித்தவர் மீனா குமாரி. மஹ்ஜபீன் பானு என்னும் இயற்பெயருடைய இவருடைய கணவர் கமால் அம்ரோஹி. கமால் அம்ரோஹிதான் பாக்கீஸாவின் இயக்குநர். தன் மனைவிக்காகத் தானே கதையெழுதி, இயக்கித் தயாரித்தார். தன் மனைவி மீனா குமாரியின் நடிப்பாற்றல் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படவேண்டுமென நினைத்தார். வசனங்களும், படத்தில் இடம்பெற்ற கவிதைகளும் மீனா குமாரியை மையமாக வைத்தே அமைந்தன. மீனா குமாரி – கமால் அம்ரோஹி காதல் கதை இடையிலேயே முற்றுப்பெற்றது. காலத்தின் கட்டாயமாக இருவரும் மணவிலக்கும் பெற்றனர். நிஜ வாழ்க்கையில் அவர்கள் பிரிந்தாலும், பாக்கீஸ் திரைப்படத்தைப் பொருத்த அளவில் மீனா குமாரி நடிகையாகத் தொடர்ந்தார், கமால் அம்ரோஹி படத்தை இயக்கி முடித்தார்.

மஹ்ஜபீன் பானு என்னும் மீனா குமாரி, ‘நாஸ்’ (Naaz) எனும் புனைபெயரில் உருதுவில் கவிதைகள் எழுதினார். பின்னாளில் அவர் ஏற்ற தனிமை வாழ்வின் பிரதிபலிப்பாக அவருடைய கவிதைகள் தனிமையையும் சோகத்தையும் பாடின.

// நடைதளர்ந்தவர் யாரோ
பாலைமணலில் வந்திருக்கக்கூடும்
இல்லையேல்
புயலில் யார் இப்படித் தீபமேற்றுவர் //

// தொடக்கம் இருக்கும் முடிவு வராது
என் கதையில்
அந்தப் பெயர் எழுதப்படும் வரை //

போன்றவை மீனா குமாரி என்னும் நாஸின் தனிமைக் கவிதைக்கு எடுத்துக்காட்டுகள். அவருடைய மறைவுக்குப் பின்னர்தான் அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியானது. ‘தனிமை நிலவு’ என்னும் பெயரில் குல்ஸார் அதனை வெளியிட்டார்.

பாக்கீஸா வெளியான சில நாள்காளிலேயே மீனா குமாரி மரணம் அடைந்தார். அதற்குப் பின் இருபது ஆண்டுகள் கடந்து கமால் அம்ரோஹி மரணம் அடைந்தார். அவருடைய உடல் மீனா குமாரியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. காதல், திருமணம், பிரிவு என அவர்கள் வாழ்க்கை இருந்தாலும், அவர்கள் கவித்துவமாக அருகருகில் மீளாத்துயிலில் இருப்பதாகக் கொள்ளலாம்.

பாக்கீஸாவில் குறிப்பிடத்தக்க இன்னொன்று அதன் உடையலங்காரங்களை அமைத்தவர் மீனா குமாரி. அது திரைப்படத்தில் பதிவாகியுள்ளது. பதிவாகாத செவிவழிச் செய்தியாக, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற நகைகளுள் சில மீனா குமாரியின் நகைகள் என்றும் சொல்வார்கள்.

மீனா குமாரியின் கால்களின் எழிலைச் சொல்லும் வரிகளும் வசன கவிதையும் பாக்கீஸாவில் இடம்பெற்றது. இரயில் பெட்டியில் பயணம் செய்யும் இன்னொரு பயணி உறங்கிக்கொண்டிருக்கும் சாஹிப்ஜானின் (மீனா குமாரி) பாதங்களைப் பார்த்து, ‘உங்கள் பாதங்கள் அழகியவை. இவற்றைத் தரையில் வைத்து அழுக்காக்காதீர்’ என எழுதிவைத்துவிட்டுச் செல்வார். பிறகு விபத்தில் படகு விபத்தில் சிக்கும் மீனா குமாரியைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச் செல்பரும் அந்தப் பயணிதான்.

கதையமைப்பு நீண்டதாகச் சிக்கல்கள் நிறைந்ததாகத் தோன்றும். நர்கீஸும் சாஹிப்ஜானும் அவர்கள் இருந்த கணிகையர் இல்லத்தின் முக்கியமான நாட்டியப் பெண்ணாக இருப்பினும் அவர்கள் இருவரும் தங்கள் மனதை இழப்பது அங்கு வந்து செல்லும் கனவான்களிடம் அல்ல; மாறாக அந்த இடத்துக்குத் தொடர்பில்லாதவர்களிடம்தான் மனதை இழந்தனர்.

ரசிகர்களுக்குத் தகவல் தெரிந்து முதன்முதலாக நடனத்துக்கு ‘டூப்’ போட்ட திரைப்படம் பாக்கீஸா. படப்பிடிப்புக் காலகட்டத்தின் பிற்பகுதியில் கமால் அம்ரோஹி – மீனா குமாரி பிரிவும், அதன் பின்னர் மீனா குமாரி நோய்வாய்ப்பட்டதும் படப்பிடிப்பு தடைப்பட்டதும் அன்றைய காலகட்டச் செய்திகள். அதில் ஒரு பாடலில் நடனக் காட்சிகளைப் படமாக்கம் செய்யவேண்டிய நேரத்தில் மீனா குமாரியின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. அவரால் நடனம் ஆட இயலவில்லை. அவருக்குப் பதிலாக இன்னொருவரை நடனமாட வைத்துக் காட்சிகளை எடுத்திருக்கின்றனர்.

இதில் உத்தியாக அந்தப் பாடலைத் தொடங்கும்போது மீனா குமாரி முகத்திரையை விலக்கி முகத்தைக் காட்டிவிட்டு மீண்டும் முகத்தைத் திரையிட்டு மறைத்து ஆடத்தொடங்குவதாக இருக்கும். அப்படி செய்தது ‘டூப்’ போடுவதற்கு வசதியாக இருந்ததாம். உடல் நலமின்றி இருந்தாலும், அந்த நடனத்தை ஆடுவதற்காக பத்மா கன்னா என்னும் நடிகைக்கு மீனா குமாரி பயிற்சி அளித்திருக்கிறார். பத்மா கன்னா தமிழ்த் திரைக்கு அறிமுகமானவர். ராஜா (1972) திரைப்படத்தில் ‘நான் உயிருக்குத் தருவது விலை’ என்னும் களியாட்டப் பாடலுக்கு நடனம் ஆடியவர்.

பாடல்களுக்கு இசையமைத்த பின் இசையமைப்பாளர் குலாம் மொஹம்மத் இறந்துவிட, பின்னணியும் தொடக்க இசையும் நௌஷாதால் பதிவு செய்யபட்டன.

கதையமைப்பு நீண்டதாக சிக்கல் நிறைந்தது.

நர்கீஸின் மகள் சாஹிப்ஜானும் கணிகையாக வளர்ந்து பெயர் பெறுகிறாள். அவளுடைய பாதங்களை இரயில் பயணத்தில் கண்ட ஒருவர் வசனகவிதை எழுதிச் செல்கிறார். சாஹிப்ஜானைத் தங்களுடைய ஆசைநாயகியாக வைத்துக்கொள்ள கனவான்களுக்குள் பணப்போட்டி நடக்கிறது. அவளுக்கு அதில் எந்த விருப்பமும் இல்லாவிட்டாலும் அவளால் எதுவும் செய்ய இயலாது.

நடக்கின்ற போட்டியில் வலிவான நவாப் சாஹிப்ஜானைத் தனியாகப் படகில் அழைத்துச் செல்கிறார். படகு விபத்துக்கு உள்ளாகிறது. சாஹிப்ஜான் பிழைக்கிறார். சாஹிப்ஜானை விபத்திலிருந்து காப்பாற்றியவர் இரயிலில் பாதங்களைப் பார்த்து வசன கவிதை எழுதியவர். அவருடைய மாமாதான் ஷஹாபுத்தீன், அதாவது சாஹிப்ஜானின் அப்பா, நர்கீஸின் காதலர்.

இத்தனை சிக்கலான கதையமைப்பில், சாஹிப்ஜான் – நர்கீஸின் மகள், வசன கவிதை எழுதிய சலீமைக் காதலித்துப் பிரிகிறார். படத்தின் முடிவு நெருங்க நெருங்க மாபெரும் முடிச்சாக சலீமின் திருமணத்தில் சாஹிப்ஜான் நடனம் ஆட அழைக்கப்படுகிறாள். அந்த நடனம்தான் மேற்சொன்ன ‘டூப்’ ஆடிய நடனம்.

சுருக்கமாகச் சொல்லும்போது அதிக ஈர்ப்பில்லாத காதல் – பிரிவு கதையைப் போல் தோன்றினாலும் பாக்கீஸாவை செவ்வியல் தன்மைக்கு உயர்த்துவது அதனுடைய உயர்வான காட்சியமைப்புகளும், கணிகையர் வாழ்க்கையைச் சொல்லும் முயற்சியும், இசையும், பாடல்களும், நடிப்பும், அனைத்துக்கும் மேலாக கடைசிக்காட்சியில் கணிகையர் தெருவுக்குக் கனவான்களைப் பெண் கேட்க அனுப்பும் காட்சியும்.

இந்தியில் அன்றைய தேவதாஸாக (1955) இருக்கட்டும், இன்றைய கலங்காக (2019) இருக்கட்டும், கணிகையர் தொடர்பிலிருக்கும் பெரிய மனிதர்கள் கணிகையர் மீது காதலே கொண்டிருந்தாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தைத் தங்கள் வாழ்வில் தந்த கதையமைப்பு இல்லை. செவ்வியல் தன்மையுடன் வெளிவந்த உம்ராவ் ஜானில்கூட (1981) கணிகைக்கான சமூக அங்கீகாரம் கிடைக்கும் கதையமைப்பு இல்லை. பாக்கீஸாவில் மட்டும்தான் அந்த அங்கீகாரம் வாதாடிப் பெறப்படுகிறது. கடைசிக் காட்சியில் நர்கீஸின் சகோதரி ‘ஷஹாபுத்தீன்’ என உரத்த குரலில் அழைத்து, ‘உன் மன்னிப்பை ஏற்க முடியாது’ எனச் சொல்லும் காட்சி உணர்வுமயமாகவும் பெண்ணுரிமை பேசுவதாகவும் அமைந்திருக்கும்.

இதன் பாடல்கள் அனைத்தும் காவியத் தன்மைகொண்டவை.

அன்றைய நாளில் முன்னணியில் இருந்த கைஃபி ஆஸ்மி, கைஃப் போபாலி, மஜ்ஜூரூஹ் சுல்தான்பூரி போன்ற கவிஞர்களைப் பாடல் எழுத வைத்த கமால் அம்ரோஹி, தானும் இப்படத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். // இமைகளால் பந்தலிடுவேன் (பல்கோன்கா ஷாமியானா) // என்னும் வரிகள் கமால் அம்ரோஹியின் பாடல், ‘மௌசம் ஹை ஆஷியானா’ பாடலில் இடம்பெற்று, காலம் கடந்து இன்றைக்கும் புதிதாக நிலைத்திருக்கிறது

சல்தே சல்தே:
கனவான்களுக்கு இடையில் நடந்த போட்டியில், நவாப்தான் சாஹிப்ஜானை நெருங்கமுடியும் என்பது முடிவாகிறது. சாஹிப்ஜானுக்காக நவாப் மிகப்பெரிய, மிக அழகிய தரை விரிப்பை அனுப்புகிறார்.

கணிகையர் இல்லத்தில் மட்டுமல்ல அன்றைய காலகட்டத்தில் திரையில் அந்த விரிப்பைக் கண்டு ரசிகர்களும் வியந்தனர். நாட்டிய மேடையாக இல்லாமல் நவாபிற்கு மட்டும் தனியாக சாஹிப்ஜானை நடனமாடப் பணிக்கின்றனர். எப்படியும் தான் தோற்கப்போகிறோம் என்பது அவளுக்கும் தெரிகிறது. அவளை நவாப் பாடச் சொல்கிறார், அவள் இரயிலில் சந்தித்தவனை நினத்துப் பாடுகிறாள்.

// யாரோ என்னை எதேச்சையாக சந்தித்தான் (சல்தே சல்தே யூன்ஹி கோயி மில்கயாதா) // எனத் தொடங்குகிறாள். காமம் மட்டுமே தெரியும் நவாபுக்கு அவள் தன்னைப் பாடுவதாகத் தோன்றுகிறது. ஆனால் அவள் இரயில் கவிஞனைப் பாடுகிறாள். பாடலின் முடிவில் கேட்கும் இரயில் ஒலி, பாடல் முடிந்ததும் திரையில் கேட்கிறது. அவள் மாடத்திற்கு ஓடி வந்து தொலைவில் நிற்கும் இரயிலைப் பார்க்கிறாள்.

கைஃபி ஆஸ்மி எழுதிய அழகிய பாடல் இது.

இன்ஹீ லோகோனே:
சல்தே சல்தே அமைதியான இசைப் பின்னணியில் ஒலிக்கு ‘கதக்’ நாட்டியப் பாடலென்றால், இது தபேலா உருளும் தாளங்கூட்டி ஒலிக்கும் ‘முஜ்ரா’ (கணிகையர் நடனம்) பாடல். இதனுடைய பாடல் வரிகள் கிராமியப்பாணியில் அமைந்திருக்கும்.

மேரா சாயா (1966) என்னும் திரைப்படத்தில் ‘ஜும்கா கிராரே’ என ஒரு கிராமியப் பாடல் உள்ளது. ஆஷா போஸ்லே பாடியிருப்பார், சாதனா நடனமாடியிருப்பார். அதில் ஒரு கிராமத்துப் பெண் பரேலி கடைவீதியில் தன் ஜிமிக்கி கீழே விழுந்ததை விதவிதமாகப் பாடுவார். சில ஆண்டுகளுக்கு முன்னால் இணையத்தில் வைரலான ஜிமிக்கி கம்மலுக்கு மின்பே ஜிமிக்கி இந்தியா முழுதும் ஒலித்தது இந்தப் பாடலில்தான்.

‘ஜும்கா கிராரே’யின் நடனம் வீதியில், ‘இன்ஹீ லோகோனே’யின் நடனம் கணிகையர் மாளிகையில் கூடத்தில்.

// இங்கிருப்பவர்கள் என் மேலாடையை வாங்கினர் // எனத் தொடங்கி, பிடித்து இழுத்தனர், எடுத்தனர், பிடித்தனர் என ஒவ்வொரு அடியின் கடைசியிலும் இயைபை மாற்றி மாற்றி அப்பாவித்தனம் கலந்த களியாட்டச் செய்தியை அறிவிக்கும் பாடல். அதனுடைய இசை இன்றைக்கும் புதிதாக இருக்கும். முஜ்ரா பாடல்களின் வரிசையில் முக்கத்தர் கா சிக்கந்தரில் (1978) ரேகாவின் ‘சலாமே இஷ்க்’ பாடலுடன் போட்டியிடும் அளவுக்கு 1972லேயே வெளிவந்த பாடல் இது.

இதில் இருக்கும் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், இது கிராமியப் பாடலாக ஒலிப்பதால், பாக்கீஸாவுக்கு முன்பே அது பாடப்பட்டுவிட்டதாகச் சொல்பவர்களும் உண்டு. இருப்பினும் இதன் பாடலாசிரியர் – மஜ்ரூஹ் சுல்தான்பூரி, இசையமைப்பாளர் – குலாம் மொஹம்மத் என ஆவணப்படுத்தப்பட்டது பாக்கீஸாவில்தான்.

மௌஸம் ஹை ஆஷிக்கானா:
மேலே குறிப்பிட்ட // இமைகளால் பந்தலிடுவேன் // என்னும் வரி இடம்பெற்ற பாடல், இயக்குநர், தயாரிப்பாளர் கமால் அம்ரோஹியே எழுதியது.

// பருவகாலம் இதயத்துடன் இணைந்திருக்கிறது
மனமே எங்கிருந்தாவது அவனைத் தேடிக்கொண்டுவா // என எழுதியிருப்பார். அப்பொழுதுதான் அவள் தன் வாழ்க்கையில் பெரிய இக்கட்டிலிருந்து வெளிவந்திருப்பாள், சுதந்திரமாக உணர்வாள், இரயில் பயணியை நெருங்கிவிட்டதாகவும் உணர்வாள், அப்பொழுது ஒலிக்கின்ற இந்த வரிகள் அம்ரோஹி தேர்ந்து எழுதியவை.

ஒருவேளை தன் வாழ்க்கை மீண்டும் சுழலுக்குள் சிக்கிவிடுமோ என்னும் அச்சமும் அவளுக்கு இடையிடையே தோன்றுகிறது. பருவகாலம் இதயத்துடன் இணைந்திருந்தாலும், கார்மேகங்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன என்றும் தன் நிலையைப் பாடுகிறாள்.

// கார்மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன
அவை என்னைத் தீண்டலாம்
அஞ்சுகிறேன்
மழையின் மீது என்ன நம்பிக்கை
அது எப்போதும் என்னை வீழ்த்தலாம் //

உருதுக் கவிதைகளுக்கே உள்ள இயைபில் விளையாடும் உத்தியை இதிலும் அம்ரோஹி சிறப்பாகக் கையாண்டிருப்பார். ‘ஆஷிக்கானா’ என்னும் சொல்லின் இயைபாகவே சரணங்களின் கடைசிச் சொல் அமைந்திருக்கும். இப்படிப் பாடல்களை அமைத்து, சரணம் முடிந்ததும் பல்லவியைச் சொல்லும்போது இணையும் இயைபு பாடலுக்குச் சுவை சேர்க்கும்.

கமால் அம்ரோஹி, கனவு கண்ட இயக்குநர் மட்டுமல்ல நல்ல கவிஞரும்.

முழுத் திரைப்படமும் காதல், பிரிவு, சமூகத்தின் மீதான கேள்வி, ஆணாதிக்கம், கணிகை எனக் காதலாகவும் காத்திரமாகவும் மாறி மாறி நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் நகைச்சுவையாக தபால் துறையை அம்ரோஹி இழுத்திருப்பார்.

பாழடைந்த சுடுகாட்டுக்குச் செல்லும் நர்கீஸ், ஷஹாபுத்தீனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அது பணியாளரின் அசட்டையால் தேங்கிவிடுகிறது. ஆண்டுகள் கழித்து ஷஹாபுத்தீன் தன் வாழ்க்கையில் நர்கீஸ் வந்துபோனதை மறக்கும் நேரத்தில் நர்கீஸ் எழுதிய பழைய கடிதம் அவர் கைக்குக் கிடைக்கிறது. அரங்கமே அமைதியாக இருக்கையில் இந்தக் கடிதம் வந்து சேர்ந்ததும், அது நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் அரங்கில் சிரிப்பொலி எழுந்தது. சாதாரணமாக வந்துபோகும் காட்சிகளும் அதன் முன் நடந்த நிகழ்ச்சிகளால் ஆழமாகி ரசிகனை அடைகின்றன.

பாக்கீஸா தொடர்பான கதைகளும் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. சிலவற்றை உறுதிப்படுத்தலாம், சிலவற்றை ‘காரில் சென்றுகொண்டிருந்த போது’என்னும் முன்னனுப்பல் செய்திகளைப் போலக் கடக்கவேண்டும்.

சலீமாக (இரயில் பயணி) நடித்தவர் ராஜ் குமார். சாஹிப்ஜான் யாராக இருப்பினும் அவருக்காக வாதாடுவதும், சமூக அங்கீகாரத்த்தை ஒதுக்கி அவருடன் வாழ நினைப்பதும், பின்னர் சூழலால் வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு சம்மதிப்பதும் சலீம் கதாபாத்திரமும் சாஹுப்ஜானுக்கு இணையாக எழுதப்பட்டது. இரயில் பயணியாக, தான் பார்த்த சாஹிப்ஜானின் கடந்தகால வாழ்கையைத் தெருவில் கேள்விப்பட்டதும் உண்டாகும் அதிர்ச்சியும், அவளுக்காகக் குடும்பத்தினருடன் வாதாடும் அணுகுமுறையும் மாறிவரும் அன்றைய இளைஞர்களின் சமூகப்பார்வையையும் சலீம் கதாபாத்திரத்தில் விளக்கப்பட்டன.

சாஹிப்ஜானின் கடந்தகால வாழ்க்கையை மறந்து இன்னொரு வாழ்க்கையில் அவள் பெயரை பாக்கீஸா என மாற்றுவதும் சலீம்தான். பள்ளிவாசலில் திருமண ஒப்பந்தத்திற்காக சாஹிப்ஜானின் பெயர் கேட்கப்படும்போது, அவள் தயங்குவாள். அப்போது ‘களங்கமற்றவள்’ (பாக்கீஸா) என அவளுக்கு இன்னொரு பெயரைச் சூட்டுகிறான்.

மேற்சொன்ன ‘இன்ஹீ லோகோனே’ பாடலில் துள்ளலுடனும் உற்சாகத்துடனும் காணப்படும் அதே கணிகையர் வீதி, அதே காமிரா கோணம், கடைசிக் காட்சியில் ஷஹாபுத்தீனும் உடலை நான்கு பேர் சுமந்து வருவதும், சலீம் மாப்பிள்ளை ஊர்வலமாக வருவதும் காட்டப்படும். பின் அதே வீட்டிலிருந்து மீண்டும் ஷஹாபுத்தீனின் உடல் சுமந்து செல்லப்படுவதும் சலீம் பாக்கீஸாவைத் திருமணம் செய்து அழைத்துச் செல்லப்படுவதும் அதே கோணத்தில் காட்டப்படும்போது, அதைப் பார்த்தபடி தூணைப் பிடித்துக்கொண்டு நவாப்ஜான் (நர்கீஸின் சகோதரி) நிற்பதும் நினைவில் நிற்கும் காட்சிகள்.

பாக்கிஸா என்றால் பாடல்களும் காதலும் நினைவுக்கு வருவது போல், ‘ஷஹாபுத்தீன்’ என உரத்த குரலில் அழைத்து, ‘உன் வீட்டின் முற்றத்தில் உன் மகளே நாட்டியக்காரியானாள் பார்த்தாயா?’ என உறுமி, உண்மையை நடுக்கூடத்தில் உடைக்கும் நவாப்ஜானின் தீர்க்கமும் நினைவுக்கு வரும். குழந்தையாக இருந்த சாஹிப்ஜானை வளர்த்தது முதல் அவள் பாக்கீஸாவாகித் திருமணம் நடக்கும் வரையில் அவளுக்குப் பாதுகாப்பாக இருந்து, கடைசிக் காட்சியில் தனியாக நவாப்ஜான் நிற்கும் காட்சியும் நினைவுக்கு வரும். களங்கமற்றவள் என அவளுக்குப் பெயர் சூட்டியது சலீம், அதை உலகத்துக்கு நிரூபித்தது நவாப்ஜான்.

இந்தியத் திரையுலகில் களங்கமற்ற ‘பாக்கீஸா’வின் சலங்கை ஒலியும், நவாப்ஜானின் தீர்க்கமான குரலும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Author Image

அபுல்கலாம் ஆசாத்

ஸீரோ டிகிரி இலக்கிய விருதுப் போட்டியில் நெடும், குறும்பட்டியல்களில் இடம்பெற்றவர்.’கடற்கழியோடி’ நாவலுக்கு முதல் பரிசு வென்றவர். நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026
காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

July 2, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?