ஆனந்த் குமரேசன்
குழந்தைகளுக்கான திரைப்படம் என்பது எது?
பெரியவர்கள் பார்க்கிற எல்லாப் படங்களும் குழந்தைகள் பார்க்கக் கிடைக்கின்றன. இந்தியாவில் U சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிற படங்களைக் குழந்தைகள் காணலாம் என்பது நடைமுறை. ஆனால் பெரும்பாலான படங்களில் அதன் உள்ளடக்கம் [content] குழந்தைகளின் மனவளர்ச்சியைத் தாண்டியவையாக இருக்கின்றன. பெரியவர்கள் பார்க்கிற படங்களை, குழந்தைகள் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும். நாம் திரைப்படங்கள் குறித்து அவர்களோடு உரையாடுவதும் இல்லை என்கிற சூழலில், சரிவரப் புரிந்துகொள்ளாமல் உள்வாங்கப்படுகிற காட்சிகள் – அவை உருவாக்குகிற அர்த்தங்கள் மற்றும் நம்பிக்கைகள் குழந்தைகளின் சிந்தனை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
யார் குழந்தைகள்? 18 வயதுக்குக் கீழிருக்கும் எல்லோருமே குழந்தைகள்தான். அதிலும் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களுடைய மூளையின் வளர்ச்சிக்கு ஏற்ப படங்கள் காண்பிக்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகளில் இதுதான் நடைமுறை. ஆறு வயதுக்கு மேல்தான் திரையரங்குகளுக்குக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட வேண்டும்.
பிறந்ததிலிருந்தே ஸ்மார்ட்ஃபோன் வழியாக நாம் குழந்தைகளுக்கு ‘காட்சிகளை [Visuals]’ அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். எது உண்மை , எது பொய் எனப் பிரித்தறிய முடியாத குழந்தை மனத்தில் இந்தக் காட்சிகள் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் பொருட்படுத்துகிறோமா? 0-6, 6-12, 13-18 என்கிற பதின் பருவம் என குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பொதுவாகப் பிரிக்கின்றனர். 6 வயதுக்கு மேல்தான் ஒரு குழந்தை இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. 12 வயதுக்கு மேல் பதின்பருவத்தில், இந்த உலகில் தங்களுடைய இடம் என்ன, என்ன செய்ய விருப்பம் இருக்கிறது போன்ற சிந்தனைகளுக்கு ஆட்படுகின்றனர்.
ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பார்க்கக்கூடிய ஒரு ஆங்கிலத் திரைப்படம் INSIDE OUT (2015). இது animation திரைப்படம்தான். ஆனாலும் ’வயது’ குறிப்பிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் age restriction தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது. குழந்தைகளின் மனவளர்ச்சியைப் பொறுத்து அவர்கள் பார்க்கக்கூடிய திரைப்படங்கள் முறைப்படுத்தப்படுகின்றன.
ஒரு குழந்தையை அணுகுவதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை இப்படம் தோற்றுவிக்கிறது. எனில் அது எப்படி என்பது நமக்கு முதலில் தெரிய வேண்டும். அதற்கு நம்மைப் பற்றி நமக்குத் தெரிய வேண்டும். நாம் எப்படிச் சிந்திக்கிறோம், என்ன பேசுகிறோம், எப்படி நடந்து கொள்கிறோம் என்பது தெரிய வேண்டும். குழந்தைகள் நாம் சொல்வதைக் காட்டிலும் நம்முடைய நடவடிக்கைகளைத்தான் உன்னிப்பாகக் கவனித்துப் பின்பற்றக்கூடியவர்களாக இருக்கின்றனர். மேலும், நாம் எந்த உணர்ச்சிகளை மதிக்கிறோம் அல்லது அவமதிக்கிறோம் என்பதும் நமக்குத் தெரிய வேண்டும். பொதுவாக, புரிந்துகொள்ள முடியாத ஒருவரைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் ‘அவர் தலைக்குள்ள என்னதான் ஓடுதோ?’ எனச் சொல்வது உண்டு. நமது தலைக்குள் என்ன ஓடுகிறதோ, அதுதான் மற்றவர் தலைக்குள்ளும் ஓடும். நமது ‘தலைக்குள் என்ன?’ என்பது பாடமாகவே கற்றுத்தரப்பட வேண்டியது. அதுவே இங்கே சுவாரஸ்யமான படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் உட்பட பல விருதுகளை இது வென்றுள்ளது. மேலும் தத்துவ சஞ்சிகையான Film and Philosophy இத்திரைப்படத்தை ஆகச் சிறந்த அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்றாக அங்கீகரித்திருக்கிறது.
அன்றாட வாழ்விலிருந்து விலகியிருக்கும் அதீத கற்பனைகளால் கட்டமைக்கப்படுகிற கதைகள், பார்வையாளரை ’ஒரு சிந்திக்கக்கூடிய மனிதராக’ திரையிலிருந்து விலக்கி வைக்கிறது. மாறாக இந்தத் திரைப்படம் நம்மை நாம் கவனித்துப் பார்க்க உந்துகிறது.
திரைப்படங்கள் குறித்த இயக்குநர் பீட்டருடைய பார்வை இவ்வாறாக இருக்கிறது. ‘மக்கள் ஒரு படம் பார்க்கப் போகும்பொழுது, திரையில் தங்களைப் பற்றிய ஏதோ ஒரு அனுபவத்தைக் காண விரும்புகிறார்கள். அவர்கள் கற்றுக்கொள்ள வருவதில்லை. எனவே நான் எப்போதும் பிரசங்கம் செய்வது போலவோ அல்லது ஒரு கருத்துத் திணிப்பை முன்வைப்பது போலவோ அவர்களை உணர வைக்க விரும்பவில்லை’ என்கிறார்.
இயக்குநர் பீட்டர் தன்னுடைய சிறு வயதில் ஒரு introvertஆக இருந்திருக்கிறார். சராசரிக்கும் அதிக உயரம் கொண்டவர். பருவமடைதலின்போது அவருடைய குரல் சற்று கரடுமுரடாக மாற, சக மாணவர்களின் கேலிக்கும் ஆளாகியிருக்கிறார். தத்துவம் பயின்றிருக்கிறார். நுண்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். Pixar animation studioவில் animator ஆகப் பணிபுரிந்திருக்கிறார். மேலும் உலகப் புகழ் வாய்ந்த Hayao Miyasakiன் தேர்ந்த கலைநுட்பத்திற்கு ரசிகர்.
இத்திரைப்படம் சொல்லுகிற கதையைப் போலவே, இத்திரைப்படம் உருவான காரணமும் சிந்தனைக்கு உரியது. அது திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் நம்பப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிற நம் மனநிலையை அசைக்கக் கூடியது.
இக்கதைக்கான கரு, கதாசிரியர் மற்றும் இயக்குநரான Pete Docterக்கு 2009ல் உருவாகிறது. தன்னுடைய மகள் வளர வளர அவளுடைய நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கிறார். அவள் அமைதியானவளாகவும் , ஒதுங்கி இருப்பவளாகவும் மாறியிருக்கிறாள். ‘அவளுக்கு உள்ளே என்ன நடக்கிறது?’ என்கிற கேள்வி எழவே, அதைக் கதையாக உருவாக்க, தன் இணை இயக்குநரைச் சேர்த்துக் கொள்கிறார். தங்களுடைய வாழ்வனுபவங்களின் அகத்தூண்டலில் இருந்தே எழுதத் தொடங்கியிருக்கின்றனர். பல தரப்பட்ட பார்வைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, கதை உருவாக்கத்தின் போது பாதிக்குப் பாதி பெண்கள் இடம் பெற்றிருக்கின்றனர். மேலும் psychologists மற்றும் neuroscientistsகளை சந்தித்துக் கலந்தாலோசிக்கிறார். இந்த research and development process ஐந்தரை வருடங்களுக்கு நீடிக்கிறது. மனம் குறித்த துல்லியமானக் காட்சியமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இவ்வளவு நிதானமும் கவனமும் அர்ப்பணிப்பும் வேண்டி நிற்கின்றன குழந்தைகளுக்கான திரைப்படங்கள். பல நிலைகளைக் கடந்து PIXAR தயாரித்த இத்திரைப்படம் 2015ல் வெளியானது.
ரைலி [Riley] என்கிற 11 வயதுச் சிறுமியைப் பற்றிய கதை இது. கதை நடக்கிற இடம் அவளுடைய ’மனம்’. ஆம் !
அவளுடைய பிறப்பிலிருந்து படம் தொடங்குகிறது. இப்படத்தில் இரண்டு வெளிகள் [Spaces] காட்டப்படுகின்றன.
ஒன்று, அவளுடைய புற உலகம். அப்பா, அம்மா, வீடு, பள்ளிக்கூடம், சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பொதுவாக நம் எல்லோருடைய கவனமும் குவிக்கப்படுகிற வெளி அது.
மற்றொன்று, அவள் தலைக்குள் இருக்கிற தனித்துவமான அக உலகம். அப்படி ஓர் உலகம் இருப்பதே நாம் அறியாதது. நாம் பார்த்திராதது. அதை நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதைக் காணும்பொழுது மனம் என்பது எத்தனை பிரமாண்டமான அமைப்பு என்பதை நம்மால் உணர இயலும்.
இயக்குநர் பீட்டர் தன்னுடைய நேர்காணல் ஒன்றில், ‘இதுவரை திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்ட எல்லா Setகளையும் விட, மனித மனத்தைக் காட்சிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த Setதான் மிக மிகப் பெரியது’ என்கிறார். ஆஸ்கர் விருது வென்றிருக்கிற Production Designer Ralph Eggleston, தான் பணிபுரிந்த திரைப்படங்களிலேயே நீண்ட காலத்தையும் கடின உழைப்பையும் கோரிய படமாக இதைக் குறிப்பிடுகிறார்.
இவ்வளவு மெனக்கெடல்களுக்குப் பின் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற இந்த அக உலகம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதுதான் நம்மை வழிநடத்துகிறது. அதைப் பல்வேறு departmentகளாகப் பிரித்துக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.
மனித உணர்ச்சிகள் கதாப்பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ரைலியின் தலைக்குள் இருக்கிற ’தலைமைச் செயலகத்தில்’, joy [மகிழ்ச்சி] sadness [சோகம்] disgust [அருவருப்பு] fear [பயம்] anger [கோபம்] ஆகிய EMOTIONS [உணர்ச்சிகள்] வாழ்கின்றன. அதில் குறிப்பாக ’மகிழ்ச்சி’. ரைலி எப்பொழுதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என விரும்புகிறாள். அவளே ரைலியின் அக உலகத்தில் முதன்மையான உணர்ச்சியாகத் திகழ்கிறாள். ’மகிழ்ச்சி’ முடிந்தவரை ’சோகம்’ ரைலியை அண்டாமல் பார்த்துக்கொள்கிறாள்.
ஒவ்வோர் உணர்ச்சிக்குமே மிக அவசியமான குணநலன்கள் இருக்கின்றன. இந்த அடிப்படையான உணர்ச்சிகள்தான் குழந்தைகளின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றன.
மகிழ்ச்சி
எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்கக்கூடியது. சவால்களைக் கூட வாய்ப்புகளாகப் பார்க்கக்கூடியது.
சோகம்
தன்னையே புரிந்துகொள்ள முடியாத குழப்பத்திலேயே இருக்கிறது. மற்ற உணர்ச்சிகளுக்கும் சோகத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் முக்கியமான மாற்றங்களுக்கு சோகம் காரணமாய் இருக்கிறது.
கோபம்
எப்பொழுதும், எல்லாம் ரைலிக்கு நியாயமாய் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இல்லையெனில் உடனடியாக தன் கொந்தளிப்பை வெளிப்படுத்திவிடுகிறது.
அருவருப்பு
எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறது. ரைலி மனதோ உடலோ பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் தீவிரத்துடன் இருக்கிறது. அதீத கவனத்துடன் இருக்கிறது. ரைலியின் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
பயம்
இதன் நோக்கம் ரைலியைப் பாதுகாப்பது. ஆபத்துகள் அண்டவிடாமல் பார்த்துக்கொள்வது.
இவர்கள் எல்லோருக்கும் ஒரு பணியகம் [console] இருக்கிறது. அதை இந்த உணர்ச்சிகள் கையாளுகின்றன. அவற்றின் வெளிப்பாடுதான் ரைலியின் நடவடிக்கைகள் [behavior].
இந்த உணர்சிகளைக் கிளறுகிற எல்லா அனுபவங்களும், நினைவுகளாக [memories] சேகரிக்கப்படுகின்றன. அவை ஒவ்வோர் இரவிலும், நீண்ட கால நினைவு அடுக்குகளுக்கு [long-term memory] அனுப்பப்படுகின்றன. அதில் முக்கியமான நினைவுகள் [core memories] அவளுடைய ஆளுமையை [personality] தகவமைக்கக் கூடியதாக இருக்கின்றன.
ரைலியைப் பொறுத்தவரை அவளுடைய ‘ஆளுமையைக் கட்டமைக்கிற’ முக்கியமான ஐந்து நினைவுகளாக,
[விளையாட்டு] பனிச்சறுக்குஹாக்கி விளையாட்டில் கிடைக்கிற மகிழ்ச்சி,
[பெற்றோரின் அன்பு] பெற்றோருடன் சேர்ந்து செய்து மகிழும் குறும்பு,
[நேர்மை] இயல்பாகவே குழந்தைகளுக்குப் பொய் சொல்லத் தெரியாது – அது அவர்கள் கற்றுக்கொள்வதுதான்,
[நட்பு] மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள கிடைக்கக்கூடிய நண்பர்கள், மற்றும் [குடும்பம்] குடும்ப அமைப்பு உருவாக்கித் தந்திருக்கிற நிம்மதி.
ரைலியின் பதினொன்றாவது வயதில், அவள் வாழ்வின் முதல் பெரும் சவாலை எதிர்கொள்கிறாள். தந்தையின் பணி நிமித்தமாக ஊர் விட்டு ஊர் மாற வேண்டியதாகிறது. அது உருவாக்குகிற நெருக்கடிகள். புதிய பள்ளி. புதிய சூழல். புதிய நண்பர்கள். இவை எல்லாம் சேர்ந்து பள்ளியின் முதல் நாளில் சோகம் ஆதிக்கம் செலுத்த, அது ஒரு முக்கிய நினைவாக [core memory] மாறிவிடும் என்கிற சூழலில், அதை மகிழ்ச்சி தடுக்க நினைக்க, சோகமும், மகிழ்ச்சியும் சேர்ந்தே தலைமைச் செயலகத்திலிருந்து தவறுதலாக வெளியே வந்து விடுகின்றனர். ஆக, எஞ்சியிருக்கிற உணர்ச்சிகளான பயம், வெறுப்பு, கோபத்தின் பிடியில் ரைலி மாட்டிக்கொள்கிறாள். இதனால் பெற்றோருடனான உறவில், நட்பில் என எல்லாவற்றிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மகிழ்ச்சியும் சோகமும் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு வரும் முயற்சியை மேற்கொள்கின்றனர்.
மகிழ்ச்சி மற்றும் சோகத்தின் பயணத்தில் மனவுலகத்தின் கூறுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீண்டகால நினைவு அடுக்குகள் [long-term memory], கனவுகளை உருவாக்குகிற தொழிற்சாலை [dream factory], நினைவுத் தொடர் [train of thoughts] கற்பனை நிலம் [imagination land] abstract கூடம், உண்மைகளும் கருத்துகளும் [facts and opinions] ஆழ்மனம் [sub-conscious] தீவிரமான பயங்கள் [darkest fears] inductive reasoning, dejavu, language processing, critical thinking மற்றும் மறந்து போன விஷயங்களின் ‘நினைவுக் கிடங்கு ஆகியவற்றை கடக்கின்றனர். ரைலியின் குழந்தைப் பருவ ’கற்பனை நண்பனின்’ உதவியோடு மகிழ்ச்சி தப்பித்து மீண்டும் தலைமைச் செயலகத்தை வந்தடைகிறாள்.
இந்தப் பயணத்தில் ’மகிழ்ச்சி’ ஒரு முக்கியமான விஷயத்தை உணர்கிறாள். உறவுகள் பலப்பட சோகம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை. கோபம், பயம் மற்றும் அருவருப்பு மூன்றும், ‘தான் ஊர் மாறி வந்ததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்’ என்கிற முடிவுக்கு ரைலியை வர வைத்து, வீட்டை விட்டு வெளியேற வைக்கின்றன. சரியான நேரத்தில் அவளிடம் சோகம் வந்தடைய, தன் முடிவை மாற்றிக் கொள்கிறாள். மீண்டும் பெற்றோருடன் சேருகிறாள்.
இந்தத் திரைப்படம் நம் கவனத்தைக் குவிக்கிற இடம் முக்கியமானது. எப்பொழுதும் சந்தோசமாக இருப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும் எனச் சொல்லப்பட்டுக் கொண்டே இருப்பதால் மற்ற உணர்ச்சிகளுக்கு உண்டான உரிய மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. தேவையில்லாத உணர்ச்சி என ஒன்றும் இல்லை. அது சோகம் என்றாலும்கூட. அனைத்து உணர்ச்சிகளுமே நம்மை நமக்குத் துல்லியமாகக் காட்டுகின்றன. அதை உணர்ந்து நம்முடைய நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக்கிற ’அதிகாரம்’ நம்மிடம்தான் இருக்கிறது. அதுதான் ’சிந்திக்கும் திறன்’.
ரைலி எதிர்கொண்ட சவால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு வேறு வேறு விதங்களில் உள்ளன. உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில்தான் குழந்தைப்பருவம் இருக்கிறது என்பதை உணர்ந்து, அவர்களைக் கவனத்துடன் அணுக வேண்டியது உடன் இருக்கும் பெரியவர்களுடைய பொறுப்பு.
இதைக் குழந்தைகளுக்கான படம் என குறுக்கி விடக்கூடாது. இது பெரியவர்களுக்கான படமும்தான் என நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்படத்தைக் காணுகிற ஒரு adult அதற்குப் பின் குழந்தைகளைப் புரிந்துகொள்வதில் முன்னேற்றம் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் நம்முடைய நடத்தையிலும் , நாம் நம்மைப் புரிந்து வைத்திருக்கிற தொனியிலும் கூட ஆரோக்கியமான மாற்றம் நிகழலாம்.
Core memories என்கிற concept, Gen Z தலைமுறையினரின் சொல்லாடல்களுக்குள் சென்று சேர்ந்தது. போதிய அறிவியல் ஆதாரங்கள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையிலும், பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் முக்கியமான நினைவுகளின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினர்.
படத்தின் முடிவில், ரைலியின் தலையினுள் உள்ள ஐந்து உணர்ச்சிகளுடைய ‘பணியகம்’ மேலும் விரிவான அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இன்னும் சில புதிய உணர்ச்சிகள் சேருகின்றன. PUBERTY [பருவமடைதல்] என்கிற ஓர் எச்சரிக்கை மணி இடம்பெற்றிருக்கிறது.
ஒன்பது வருடங்கள் கழித்து 2024ல் INSIDE OUT 2 வெளியானது.










