ஆதி தாமிரா
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தற்போதைய தமிழக முதல்வர், நடிகர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தின் போது, என்டிடிவி நிருபர் ஒருவர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஓர் இளைஞன் எவ்விதக் கூச்சமுமின்றி, ஓர் ஒட்டகத்தைப் போன்ற டான்ஸ் மூவ்மெண்டில் ஆடிக்கொண்டே, அந்த நிருபரையும் தொல்லை செய்துகொண்டிருந்தான். ஓர் உதாரணத்துக்காக இதைச் சொன்னேன், நீங்கள் இதைப்போல நூற்றுக்கணக்கான விடியோத் துணுக்குகளைப் பார்த்திருக்கலாம். அப்படியான மனநிலைக்குப் பெயர்தான் வைப் (Vibe), அதாவது பரவசம்! இந்த பரவச மனநிலை என்னவெல்லாம் செய்யும்?
ரஜினிகாந்த், விஜய், அஜித்தின் படங்கள் வெளியாகும் நாட்களின் முதல் நாள் தியேட்டர் அட்டகாசங்களை நேரில் பார்த்திருக்கிறீர்களா? ஒருபுறம் கட்-அவுட்டுகளுக்கு மாலை மரியாதை, பட்டாசு வெடிப்பு என கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தால், இன்னொரு புறம் பூசணிக்காய் உடைப்பு, ஆரத்தி எடுப்பு என சம்பவங்கள் தூள் பறக்கும். சிலர் கோவில்களில் பால்குடங்கள் ஏந்தி வருவார்கள். அவர்களின் கட்-அவுட்டுகளுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கும். பால் என்பது ஊட்டச்சத்து மிக்க ஓர் உணவு. வறுமைக்கோட்டுக்குக் கீழே கோடிக்கணக்கானோர் வாழும் நம் நாட்டில், பாலுக்குத் தவிக்கும் குழந்தைகளின் பசியை உணராமல், ஓர் உன்னதமான உணவைத் தெருவில் கொட்டிப் பாழடிப்பார்கள். அதுவே ஒரு ரசிக மனம் இந்தச் சமூகத்துக்குத் தரும் துயரத்தின் உச்சம்! ஆனால், இவையெல்லாம் நாம் மட்டும்தான் செய்கிறோமா?
இந்தக் காரியங்களெல்லாம் இன்று நேற்றல்ல, சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மௌனப்படங்கள் கோலோச்சிய காலத்திலேயே, ரூடால்ஃப் வாலண்டினோ (Rudolph Valentino) எனும் ஹாலிவுட் நடிகர் ரசிகர்களைப் பித்து நிலைக்குக் கொண்டுபோயிருந்தார். 1926-ல் தனது 31-வது வயதில் அவர் மறைந்தபோது, சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் திரண்டனர். சில பெண்கள் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இவரைப் போலவே உலகளவில் ரசிகர்களை நிலைமறக்கச் செய்த நட்சத்திரங்கள், கலைஞர்கள் ஏராளமிருக்கிறார்கள். அதிலும் ஜேம்ஸ் டீன் (James Dean), மர்லின் மன்றோ (Marilyn Monroe), புரூஸ் லீ (Bruce Lee), எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley), ஜான் லெனன் (John Lennon) போன்று இளவயதிலேயே இறந்த உச்ச நட்சத்திரங்களின் தாக்கம் மிக அதிகமானது. 24 வயதே ஆன ஜேம்ஸ் டீன் ஒரு கார் விபத்தில் பலியான செய்தி வெளியானதும், அமெரிக்க இளைஞர்கள் மத்தியில், அதற்கு முன்பு வரலாறு காணாத ஒரு பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான அவரது காரின் உதிரிபாகங்கள் ஏலமிடப்பட்டன. அவை சாபத்தை தாங்கிக்கொண்டிருந்ததாக பெரும் வதந்திகளும் நீண்ட நாட்களுக்கு உலவிக்கொண்டிருந்தன. பீட்டில்ஸ் (Beatles) குழுவின் நாயகன் ஜான் லெனன், அவரது ரசிகர் மார்க் டேவிட் (Mark David Chapman) என்பவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டது உலகையே உலுக்கிய விரும்பத்தகாத ஒரு நிகழ்வு. ரசனையின் உச்சகட்டமான ஆதிக்க மனநிலை (Possessiveness)யில் சிக்கி, மனப்பிறழ்வுக்கு ஆளாகி இப்படிச் செய்திருக்கிறான் அந்த ரசிகன். மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்வுகளில், உணர்வுக் கொந்தளிப்பில் (Ecstasy) கூட்டம் கூட்டமாக மயங்கி விழுந்திருக்கிறார்கள்.
இப்படியாக ரசிகர்கள் தன்நிலை இழப்பதும், தங்களை மாய்த்துக்கொள்வதும், அவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்கள், இறுதி ஊர்வலங்கள் போன்ற கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைவதும் உலகளாவிய அளவில் மிகவும் சகஜமானது.
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தித் திரையுலகில், 1950க்குப் பின்னர் திலிப்குமார், ராஜ்கபூர், ராஜேஷ் கன்னா போன்ற நட்சத்திரங்கள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்தனர். ராஜேஷ் கன்னா இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர். 1960கள் அவரது உச்சமாக இருந்தது. வட இந்தியாவில் அவர் ஏற்படுத்திய தாக்கம் ஒரு ‘கூட்டு வெறிநிலையாகவே’ (Mass Hysteria) மருத்துவர்களால் விவரிக்கப்பட்டது. பெண் ரசிகர்கள் அவர் சென்ற காரின் டயர்களில் படிந்திருந்த மண்ணை எடுத்துத் தங்கள் நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டனர். அவருக்கு ரத்தத்தால் கடிதங்கள் எழுதினார்கள்.
அதே காலகட்டத்தில் ஆந்திராவில் என்.டி. ராமராவும், தமிழ்நாட்டில் எம்ஜியாரும் அப்படியான நிலையை ரசிகர்களிடையே உருவாக்கினார்கள். என்.டி.ஆர், ஆந்திர மக்களால் கடவுளாகவே பார்க்கப்பட்டார். அவர் திரையில் கிருஷ்ணராகவோ, ராமராகவோ வரும்போது மக்கள் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி தியேட்டரைக் கோயிலாக்கினார்கள். 1970-களின் இறுதியில் அவர் அரசியலுக்கு வந்தபோது, ரசிகர்கள் தங்கள் கைகளை அறுத்துக் கொண்டு ரத்தத் திலகமிட்டனர். ஏறத்தாழ சினிமாவிலும், அரசியலிலும் அதே போன்றதொரு தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினார் எம்.ஜி.ஆர். குறிப்பாக, 1967ல் நடிகர் எம்.ஆர்.ராதாவால், எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நிகழ்வின் போது தமிழகமே போர்க்களமானது. மதுரையில் ஒரு ரசிகர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை அரசு பொது மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அழுதனர். எம்.ஆர்.ராதாவின் வீடு மற்றும் அவர் நடித்த நாடகங்கள் நடந்த தியேட்டர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 1987-ல் எம்.ஜி.ஆர் மறைந்த போது சுமார் 30-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியிலும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்தனர். அவரது இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக இருந்தது. அதில் ஏற்பட்ட நெரிசலிலும், வன்முறையிலும் சிக்கி பலர் காயம்பட்டனர்.

கன்னடத்திலும், நடிகர் ராஜ்குமார் இப்படியான குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தினார். 2006 ராஜ்குமார் மாரடைப்பால் காலமான போது, 2 ரசிகர்கள் தற்கொலை செய்துகொண்டனர். பெங்களூரு நகரமே கலவர பூமியானது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்தப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றும் கலவரத்தில் 8 ரசிகர்கள் உயிரிழந்தனர்.
இவர்களுக்குப் பிறகான காலகட்டமான, 80, 90களில் இந்தியில் அமிதாப் பச்சனும், தெலுங்கில் சிரஞ்சீவியும், தமிழில் ரஜினிகாந்தும் ரசிகர்களின் மனங்களை மயக்கி, முழு ஆளுமையைச் செலுத்தும் அளவில் வளர்ந்து வந்தார்கள். 1982ல் அமிதாப் பச்சனுக்கு ‘கூலி’ படப்பிடிப்பின் போது நடந்த விபத்து, இந்திய ரசிக வெறியின் (Fan Frenzy) முதல் பெரும் வெளிப்பாடாக அமைந்தது. அந்த விபத்தில் அமிதாப் பச்சனுக்குக் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையிலிருந்தார். இந்தியா முழுவதும் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் அவருக்காகச் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன. சில ரசிகர்கள் அவர் பிழைக்க வேண்டும் என்பதற்காக, அவர் குணமடையும் வரை உண்ணாவிரதம் இருப்பது, நேர்த்திக்கடன்கள் செலுத்துவது எனத் தீவிரமாகச் செயல்பட்டனர்.
அஜித்குமார் இங்கே குறிப்பிடப்பட்ட பிற நடிகர்களிலிருந்து சற்றே வேறுபட்டுத் தெரிகிறார். அவர் திரையில், பிறர் செய்யும் அதே வேலையைச் செய்துகொண்டிருந்தாலும், இதற்குப் பின்னாலிருந்த சமூக ஆபத்தை முன்னுணர்ந்தவராகவும், அதை விரும்பாதவராகவும் இருக்கக்கூடும் என்று நாம் கணிக்க முடிகிறது. திரையில் அவர்களுக்குத் தேவையான போதையை மறுக்காமல் வழங்கும் அஜித், திரைக்கு வெளியே அவரால் இயன்றவரை அதை உடைக்க முயன்றுகொண்டே இருக்கிறார். ஒருகாலத்தில் இதை உணர்ந்த கமல்ஹாசன் அவரது ரசிகர்களை நற்பணி மன்றங்களாகத் திசை திருப்பினார். ஆனால், தனது ரசிகர்கள் பொதுமக்களுக்கும், மற்ற நடிகர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதையும், அவர்கள் அரசியல் ரீதியாகத் திசைமாறுவதையும் கவனித்த அஜீத், 2011ல், அவரது ரசிகர் மன்றங்களை முற்றிலுமாகக் கலைத்தார்.
ஏன் சினிமா இத்தனை ஆற்றல் மிகுந்ததாக இருக்கிறது? முன்னதாக, சினிமாவின் நோக்கங்கள்தான் என்ன?
கதை சொல்லல் (Storytelling) : மனிதர்கள் தங்களின் குகை வாழ்க்கையின் போதே, ஓவியங்கள் வரைந்ததற்கும், நெருப்பைச் சுற்றி அமர்ந்து கதைகள் பேசிக்கொண்டதற்கும் என்ன அடிப்படை நோக்கம், தேவை இருந்ததோ, அதுவேதான் இப்போதைய சினிமாவின் அடிப்படை நோக்கமாகவும், தேவையாகவும் இருக்கிறது. கதைகளும், கேளிக்கைகளும் மனிதனின் ஆதாரத் தேவை. மனிதன் தனது அனுபவங்களை, உணர்ச்சிகளை, கனவுகளை ஒரு காட்சிக் மொழியாக மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு கலை. சினிமா அப்படியான ஒரு கலை! ஒரு நல்ல சினிமா, தான் சொல்ல வந்த கதையின் மூலம் பார்ப்பவரின் மனதோடு ஒரு உரையாடலை நிகழ்த்த முயல்கிறது.
உணர்வுகளின் வடிகால் (Catharsis):. நிஜ வாழ்வில் நம்மால் வெளிப்படுத்த முடியாத அடக்கப்பட்ட உணர்ச்சிகளை; அழுகை, பயம், கோபம், காதல் போன்றவற்றை திரையில் இருக்கும் கதாபாத்திரங்கள் வழியாக அனுபவித்து, அதன் மூலம் நிம்மதியைப் பெறுவது கதார்சிஸ் எனப்படுகிறது. வாழ்வின் சலிப்புகளிலிருந்தும், அன்றாடப் போராட்டங்களிலிருந்தும் ஒரு மனிதனை இரண்டு மணிநேரம் விடுவித்து, அவனை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்கிறது சினிமா. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஒரு ரசிகனுக்குத் மன நிம்மதியும், பாரம் குறைந்த உணர்வும் ஏற்படுமேயானால் அதுவேதான் சினிமாவின் உண்மையான நோக்கம்.
ஆனால், சினிமாவின் இந்த உன்னதமான நோக்கங்கள் எப்போது, எப்படி தடம் மாறுகின்றன? அந்த இடம் மிகவும் நுட்பமானது. உணர்வுகளின் வடிகால் எனும் தத்துவமே, போதையாக மாறி நிற்கும் போது, சிந்தனையை அழிக்கும் முதல் வேலை தொடங்கிவிடுகிறது. அன்றாட கவலைகளிலிருந்து ஒரு சிறு விடுப்பு எடுப்பது ஆரோக்கியமானதுதான். ஆனால், திரையில் காட்டப்படும் பிரம்மாண்டமான, சாத்தியமில்லாத கற்பனை உலகமே உண்மை என்று அதிலேயே மூழ்கிவிடும் போது ஒரு ரசிகன் வீழத் தொடங்குகிறான்.
இந்த நிலை எந்த இடத்தில் தொடங்குகிறது? ரசிகனுக்கு முன்னதாகவே அந்த நட்சத்திரத்தின் புகழ்போதையிலிருந்தே தொடங்கிவிடுகிறது இது. பணம், புகழ், அதிகாரம் என்பவை மிக மோசமான போதையை ஏற்படுத்த வல்லன. அதில் முதலில் அந்த நட்சத்திரம் வீழ்கிறான். அதைத் தக்கவைத்துக்கொள்ள, ரசிகனையும் அதே நிலையில் வைத்திருக்க விரும்பும் அவனது ஆசையில், அது இன்னும் வலுப்பெறுகிறது. அங்கே சினிமாவின் நோக்கம் மாறிவிடுகிறது. கதை சொல்லல் என்பதே கருத்துத் திணிப்பாக உருவெடுக்கிறது. அதற்காகப் புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் கூர்தீட்டப்படுகின்றன.
மனிதர்கள் பலவீனமாவர்கள். ஏனெனில், நிஜ வாழ்க்கை பெரும்பாலான மனிதர்களுக்கு அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. அலுவலகம், கடன், குடும்பப் பொறுப்பு, தோல்வி, சமூக அச்சம் என சுமையானதாக இருக்கிறது. இவற்றுக்கு நடுவே, ஒரு ஹீரோ மட்டும் எப்போதும் தோற்பதில்லை. யாராலும் அவமானப்படுத்த முடியாத மனிதராக இருக்கிறார். ரசிகன், திரையில் அந்த ஹீரோவைப் பார்க்கவில்லை. தன்னையே அவராக உணர்கிறான். அது ஒரு பொய்மைத் தோற்றம் (ideal version) என்பதை ஏற்க அவன் விரும்புவதில்லை. மனித சமூகத்துக்கு எப்போதுமே கூட்டு உற்சாகம் (collective excitement) தேவைப்படுகிறது. விளையாட்டு, மதம், பண்டிகைகள், அரசியல் போலவே சினிமாவும் ஓர் உணர்வுப்பூர்வமான சமூகக் கூடல்தான். அதனால்தான் FDFS கொண்டாட்டங்கள், உயிர்ப்போடு இருக்கின்றன. அவை ஒரே உணர்ச்சியின்பால் பலர் ஒன்றிணைந்து கூடிமகிழும் திருவிழாக்கள்.
இன்றைய நவீன தொலைதொடர்புக் காலம், சோஷியல் மீடியா வளர்ச்சி, ஒரு ரசிகனை, அவ்வளவு எளிதாக திரையரங்கோடு விட்டுவிடுதில்லை. இசை கலந்த துணுக்குகள் (Reels) எனும் புதிய வடிவம் ரசிக மனங்களில் ஒருவிதமான எக்ஸ்டஸியை உருவாக்குகிறது. எளிய மனங்கள் வைப் (Vibe) எனும் சிறையில் சிக்கிக்கொள்கின்றன. தொடர்ந்து இந்த ரீல்ஸ்கள் மூலமாக ஆன்லைனில் சிக்க வைக்கப்படுகிறான் தியேட்டர் ரசிகன். படம் வராத நாட்களிலும், இவ்வாறான ரீல்ஸ்கள் மூலமாக ரசிகர்கள் நடிகரைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வீடியோக்களில், கதை இருக்காது. கருத்து இருக்காது. சில சமயம் வசனமே கூட இருக்காது. வெறும் புகைப்படமோ, செயற்கையான நகர்வுகளோதான் இருக்கும். அதைச் சுற்றி இசை மூலமாக ஒரு உணர்ச்சி கட்டமைக்கப்படுகிறது. ஒரு சாதாரண காட்சியைக்கூட பின்னணி இசை ஆற்றல் மிக்கதாக ஆக்கிவிடும். சினிமா எப்போதுமே இசையின் மூலமாக உணர்ச்சிகளோடு விளையாடும் கலை. ஆனால், சோஷியல் மீடியா அதைக் குறுங்காட்சிகளாக உடைத்துப் போட்டுவிட்டது. முன்பு மூன்று மணி நேரம், ஒரு கதைப் பின்னணியோடு உருவாக்கிய உணர்வெழுச்சியை, இப்போது முப்பது விநாடி ரீல்ஸ்களில் உருவாக்கிவிட முடிகிறது.
தனக்குப் பிடித்த நடிகர் திரையில், ஓர் அதிரடியான பின்னணி இசையோடு, கம்பீரமாக ஸ்லோ மோஷனில் நடப்பதையும், புகைப்பதையும், பார்க்கும்போது, ஒரு ரசிகனுக்குள் ‘அட்ரினலின்’ (Adrenaline) வெள்ளம் பாய்கிறது. அவனால் தப்பவே முடிவதில்லை, அத்தோடு ஐக்கியமாகிவிடுகிறான். இவன் சாதாரண மனிதன் அல்ல- என்ற மாயை தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த நடிகரின் பலமும், அழகும் தனக்கே உரியது போன்ற ஒரு மாய உணர்வை (Parasocial Interaction) ரசிகன் அடைகிறான். ரசிகர்கள் ‘பார்வையாளர்கள்’ (Spectators) எனும் இடத்திலிருந்து ‘பங்குதாரர்களாக’ (Participants) மாற்றப்படுகின்றனர். அந்த நடிகரின் வெற்றி தோல்வியைத் தன் சொந்த வெற்றி தோல்வியாகப் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அதன் மூலம் நிஜ வாழ்க்கையின் அவனது தோல்விகள் அல்லது சலிப்புகளிலிருந்து எளிதில் தப்பிப்பதாக நினைக்கிறான். வீழ்ந்துவிடுகிறான்.
இந்த வீழ்ச்சியிலிருந்து எப்படித்தான் மீள்வது?
ரசிகர்கள் தங்களுடைய நட்சத்திரங்களை மட்டுமல்ல, சக மனிதர்களைப் புரிந்துகொள்வதிலிருந்து அதைத் தொடங்க வேண்டும்.
The color of truth is gray. – Andre Gide
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கிடே, உண்மை எப்போதும் கருப்பாகவோ, வெண்மையானதாகவோ இருப்பதில்லை, மாறாக சாம்பல் நிறமாகயிருக்கிறது என்கிறார். இதிலிருந்து இன்னோர் அடிப்படையையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும். எந்த மனிதனும் சரி முழு நல்லவனாகவோ, முழு கெட்டவனாகவோ இருக்க முடியாது, இரண்டுக்கும் இடைப்பட்டவனாகவே இருக்கிறான். நாம் பெற்ற பிள்ளைக்கும், நமைப் பெற்ற தாய்க்குமே இவ்விதி பொருந்தும். மனிதர்கள் சாம்பல் நிறத்தானவர்கள்தான். யாரும் இங்கே தேவதூதனில்லை எனும் உண்மையை, அது அவர்களின் ஆதர்ஸமான நட்சத்திரங்களுக்கும் பொருந்தும் என்பதை அவர்கள் உணரவேண்டும். அவர்களின் உள்நோக்கங்களைச் சந்தேகிக்க வேண்டும், சிந்திக்க வேண்டும்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே. ஒரு நடிகரின் நடிப்பை ரசிக்கலாம், பிடித்திருந்தால் அவரின் நடையுடை பாவனையைப் பின்பற்றலாம். ஆனால், அவருக்காகத் தன் நேரத்தையும், நிம்மதியையும் இழப்பது சரியல்ல எனும் முதிர்ச்சி வரவேண்டும். நிழலோடு போர் புரியும் மனிதர்களைப் போல பிம்பங்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறது ஒரு ரசிக மனம். விடுதலை என்பது தியேட்டரின் இருளில் இல்லை, நமது சுயசிந்தனையின் வெளிச்சத்தில் இருக்கிறது. நட்சத்திரங்கள் தொலைவில்தான் இருந்தாக வேண்டும். சினிமா ஆபத்தான ஒன்றல்ல. ஆனால், சினிமாவை விட பெரிய வாழ்க்கை ஒன்றில்லை என்று நம்பத் தொடங்கும் மனநிலையே ஆபத்தானது. ஒரு நல்ல படமும், நல்ல நட்சத்திரமும் நம்மை வாழ்க்கைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, வாழ்க்கையிலிருந்து தப்பிக்கும் வழியைக் காட்டுவதாக இருந்துவிடக்கூடாது.











