The Talkie
Monday, June 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள்

ஆர் பி சௌத்ரி –  இயக்குனர்களின் புது வசந்தம்

The Talkie by The Talkie
June 1, 2026
in கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள்
A A
0
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon பாஸ்கர் சக்தி

1990 ஆம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு அன்று, தமிழ்நாட்டில் 14 திரைப்படங்கள் வெளியாகின. 80, 90களில் எல்லாம் அப்படித்தான். தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்கள், விசேஷ தினங்களில் பல படங்கள் ரிலீஸ் ஆகும். கமல், ரஜினி, சத்யராஜ், பாக்யராஜ், பிரபு, ராமராஜன், கார்த்திக் என்று அப்போதிருந்த பல ஹீரோக்களின் படங்களும்  ஒரே நாளில் களத்தில் இறங்கும். அதில் சிறந்தது ஜெயிக்கும். இப்போது போல ஒரே ஒரு பெரிய ஹீரோவின் படம்தான் எல்லாத் தியேட்டரிலும் ஓடும்; அந்தப் படத்தைத்தான் நாம் பார்க்க வேண்டும்; வேறு சாய்ஸே இல்லை எனும் கொடுமை எல்லாம் அப்போது இல்லை. ஒரு நேர்மையான போட்டி இருந்தது. மக்கள் நல்ல படம் எது என்று தேர்ந்தெடுத்து வெற்றி பெறவைத்தார்கள். எனவே மக்களுக்குப் பிடித்த மாதிரிப் படம் எடுக்க இயக்குனர்களும் ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் மெனக்கெட்டார்கள். `நாங்கள் போடுகிற படத்தைப் பாருங்க. நாங்க கொடுக்கிற பாப்கார்னைத் தின்னுங்க’ எனும் அநியாயம் இல்லாத காலம் அது.

அப்படி 90ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டன்று  வெளியான படங்களில்  பாக்யராஜ் இயக்கிய அவசர போலிஸ் 100, பார்த்திபன் இயக்கிய பொண்டாட்டி தேவை, சத்யராஜ் நடித்து ஏவிஎம் தயாரித்த உலகம் பிறந்தது எனக்காக, ராமராஜன் நடித்த தங்கத்தின் தங்கம், விசு இயக்கிய வரவு நல்ல உறவு  போன்ற படங்கள் இருந்தன. அவற்றுடன் களம் கண்ட  சிறிய  திரைப்படம்தான் புது வசந்தம். விக்ரமன் இயக்கிய முதல் படம். ஆர்.பி. சௌத்ரி தயாரித்த முதல் தமிழ்த் திரைப்படம். ( அதற்கு முன் அவர் ஓரிரு மலையாளப் படங்களைத் தயாரித்திருந்தார்).

அதனுடன் வெளியான அத்தனை ஸ்டார் நடிகர்கள், புகழ் பெற்ற இயக்குனர்களின் படங்களையெல்லாம் முந்திக்கொண்டு ஓடு ஓடு என்று ஓடி பெரும் வெற்றி பெற்றது புது வசந்தம். திரையிட்ட இடங்களிலெல்லாம் ஆரவாரம் கிளம்பியது. 16 வயதினிலே, ஒருதலை ராகம்  அடைந்த வெற்றிகளைப் போல இன்னொரு வெற்றி புது வசந்தத்தின் வெற்றி. அது தமிழ் சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்டைத் தொடங்கிவைத்தது.

அன்று தொடங்கி அடுத்த இருபது ஆண்டுகளும் ஆர். பி. சௌத்ரி எனும் தயாரிப்பாளரின் பெயர் தமிழ்த் திரை உலகின் தவிர்க்க இயலாத பெயராக இருந்தது. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் சினிமாக் கனவுடன் இயக்குநர் ஆவதற்குக் கிளம்பி வந்த எண்ணற்ற  இளைஞர்களின் நம்பிக்கையாக சௌத்ரி இருந்தார். அவரது சூப்பர் குட் ஃபிலிம்ஸில் எளிதாக அணுகிக் கதை சொல்ல முடியும். கதை சரியாக இருந்தால்  நிச்சயம் வாய்ப்புக் கிடக்கும் என்கிற நம்பிக்கை கோடம்பாக்கம் உதவி இயக்குனர்கள் மத்தியில் இருந்தது.

அது நூறு சதவீதம் உண்மை. தமிழ் சினிமாவில் பாரதிராஜா உருவாக்கிய அலையில் பல இளைஞர்கள் கனவுடன் சென்னைக்கு ஓடி வந்து இயக்குனரானது போல் , விக்ரமனின் புது வசந்தம் திரைப்படத்தின் வெற்றியும், சௌத்ரி அவர்களின் சூப்பர் குட் ஃபில்ம்ஸ் கொடுத்த நம்பிக்கையும் ஏராளமான புதிய  இயக்குனர்களையும், நடிகர்களையும் தமிழ்த்  திரையுலகிற்கு அளித்தது.

புது வசந்தத்தின் வெற்றி ஒரு உண்மையை  உணர்த்தியது. பெரிய நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும்கூட, வித்தியாசமான நல்ல கதையை சரியாகச் சொன்னால் படம் வெற்றி பெறும் என்பதே அது. எனவே தங்களது கதையின் மேல் நம்பிக்கை வைத்த இயக்குநர்கள் சௌத்ரியை அணுகினார்கள்.

ஆர். பி .சௌத்ரி அவர்களிடம் ஒரு அலாதித் திறமை இருந்தது. ஒரு கதையைக் கேட்டு அதனை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடும் திறமை. ஒரு முறை ஒரு கதையைக் கேட்டு அது சரியாக வரும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டால் அதன் பின் அவர் அனாவசியமாக எதிலும் தலையிட மாட்டார். ஏனெனில் வெல்ல வேண்டும் என்கிற தவிப்புடனும் துடிப்புடனும் வரும் இயக்குனர்கள் அதனை சரியாகச் செய்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட நூறு படங்களைத் தயாரிப்பது என்பது நிச்சயம் ஒரு இமாலய சாதனை. விக்ரமன் தொடங்கி, கே. எஸ் ரவிகுமார், சசி, எழில், லிங்குசாமி, ராஜகுமாரன், பிருந்தாசாரதி என்று பலரை இயக்குனராக அறிமுகம் செய்தார் ஆர்.பி. சௌத்ரி.

வலுவான கதை, ஓரளவு அறிமுகமான நடிகர்கள், எளிய – இனிய இசை,  கதைக்குத் தேவையான பட்ஜெட், குறிப்பிட்ட நாள்களில் முடிக்கும் படப்பிடிப்பு, அதற்கான சரியான திட்டமிடல்… இவைதான் சூப்பர் குட் படங்களின் வெற்றிக்கான ஃபார்முலா. அது மட்டுமில்லை, பெண்கள், குழந்தைகள் என்று குடும்பத்தோடு பார்க்கும்படியான அம்சங்களுடன் கூடிய கதைதான் அவரது தேர்வாக இருந்தது.

மிகுந்த வியப்பளிக்கும் ஓர் அம்சத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி 90களின் இறுதி வரை தமிழ்த் திரையுலகின் இசைச் சக்ரவர்த்தியாக இருந்தவர் இளையராஜா.             ( 90களில் ரஹ்மான் வந்துவிட்ட போதிலும் இளையராஜாவின் இசை வெற்றி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது)  கோவைத் தம்பி என்று ஒரு தயாரிப்பாளர் இருந்தார். அவரது படங்களில் இளையராஜாவின் இசைதான் பிரதானம். அனேகமாக மோகன் நடிப்பார். ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், கே. ரங்கராஜ் போன்ற இயக்குனர்கள் இயக்குவார்கள். அவரது படங்களின் பாடல்களும், படமும் பெருவெற்றி பெற்றவை. காரணம்  இளையராஜா. அவரது படங்கள் மட்டுமல்ல, ராமராஜன், ராஜ்கிரண் உள்ளிட்ட பெரும்பாலானோரின் படங்களின் வெற்றியை ராஜாவின் இசை படம் ரிலீஸாகும் முன்பே உறுதி செய்து விடும். அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களின் வெற்றிக்கு இளையராஜா எனும் மந்திரச் சொல் பெரும் காரணமாக இருந்தது.

ஆனால் ஆர்.பி. சௌத்ரி , இத்தனை படங்களைத் தயாரித்தவர், ஒரு படத்திற்குக்கூட இளையராஜாவின் இசையைத் தேடவில்லை. எஸ். ஏ. ராஜ்குமார், சிற்பி, தேவா ஆகிய இசையமைப்பாளர்களை வைத்தே பல வெற்றிகளை அடைந்தார். பெரிய தயாரிப்பாளராக உயர்ந்தார். இதற்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டா என்று தெரியவில்லை . ஆனாலும் இது ஓர் ஆச்சரியம்தான்.

ஒரு சிறந்த தயாரிப்பாளருக்கு இருக்க வேண்டிய குணாம்சங்கள் முழுமையாக அமையப் பெற்றவர் ஆர்.பி. சௌத்ரி. புதிய திறமைகளை இனங்காணுதல், புதியவர்களின் மீது நம்பிக்கை வைத்தல், அவர்களை சுதந்திரமாக இயங்க அனுமதித்தல், சமயங்களில் அவர்கள் சறுக்கினாலும் அதனைப் புரிந்துகொண்டு கைதூக்கி விடுதல் ஆகிய நற்குணங்களை அவர் கொண்டிருந்தார். அதே சமயம் ஒரு வெற்றிகரமான வியாபாரிக்கு உரிய திட்டமிடலும் கணக்கிடலும், இதற்கு இவ்வளவு செலவு செய்வதுதான் சரி என்கிற கச்சிதமான செயல்பாடும், அனாவசிய ஆடம்பரங்களைத் தவிர்த்த எதார்த்த அணுகுமுறையும் அவரது பலம்.

இன்றைய தமிழ் சினிமாவுக்குத் தேவை இன்னொரு ஆர். பி .சௌத்ரி.

விக்ரமன் எனும் திறமைவாய்ந்த ஓர் இளைஞனின் முதல் படமான புது வசந்தம்தான் ஆர்.பி. சௌத்ரி எனும் தயாரிப்பாளருக்கும், சூப்பர் குட் என்கிற பேனருக்கும் ஒரு புகழ் பெற்ற தொடக்கத்தைக் கொடுத்தது. அவரோடு நெருங்கிப் பழகியவர், அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் இயக்குநர் விக்ரமன்.

அவரிடம் மறைந்த ஆர்.பி. சௌத்ரி பற்றி உரையாடினேன். தனது நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

குறிப்பிட்ட காலம் தமிழ் சினிமாவை ரூல் பண்ணியவர் அவர். அது          எப்படி சாத்தியமாச்சு?

விக்ரமன் : நல்ல ஸ்டோரி நாலெட்ஜ் உள்ளவரு. காமெடியை நல்லா எஞ்சாய் பண்ணுவாரு. நல்ல ம்யூசிக் டேஸ்ட் உண்டு. என் படம் எதுக்குமே பெரிசா ஷூட்டிங் அவரு வந்ததே இல்லை. ஆனா சாங் ரெகார்டிங். ரீ ரிகார்டிங் வந்து உட்காருவாரு. அவருக்கு ம்யூசிக் ரொம்பப் பிடிக்கும்.

அவருடைய வெற்றிக்குக் காரணம்னு நீங்க எதை நினைக்கிறீங்க?

விக்ரமன் :  நிறைய இருக்கு. முதல் விஷயம் ஸ்டோரி நாலெட்ஜ் . ஒரு கதையைக் கேட்ட மாத்திரத்தில் அதோட நிறைகுறைகளை அவரால கணிச்சிட முடியும், அந்தக் கதை எந்த அளவுக்கு ஆடியன்ஸோட கனெக்ட் ஆகும்னும் ஜட்ஜ் பண்ணிடுவாரு. அது மட்டுமில்லாம அவருக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு. அவர்கிட்ட முதல்ல  ஒண்ணை சொல்லிட்டு நீங்க அப்புறம் மாத்த முடியாது. அவரை ஏமாத்தவே முடியாது. “முதல்ல கதை சொன்னப்பம் ஒரு சீன் சொன்னீங்களே? அதை ஏன்  எடுக்கலை?”ன்னு கரெக்டா கேப்பாரு. ஒரு உதாரணம் சொல்றேனே… சூர்யவம்சம் படம் கதை எல்லாம் சொல்லி ஷூட்டிங் போயாச்சு. அதில செகண்ட் ஹாஃப்ல சரத்குமார் பெரிய பணக்காரர் ஆயிருவாரு. அப்போ   ப்ரியா ராமன் அவர்கிட்ட வந்து, தன்னோட கஷ்டத்தைச் சொல்லி தன் கணவருக்கு வேலை கேப்பாங்க. அப்ப தேவயானி ஒரு பேப்பர் வெயிட்டை சுத்திகிட்டே, ”காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா?“ அப்படின்னு சொல்வாங்க. இந்த சீன் எல்லாம் ஷூட் பண்ணி படம் எல்லாம் முடிஞ்சது. ஆனா சூர்யவம்சம் ஃபர்ஸ்ட் காபி மூணே கால் மணி நேரம் இருந்துச்சு. அதனால இந்த சீனை எல்லாம் நீளம் அதிகம்னு கட் பண்ணிட்டேன். அது மட்டுமில்லை… “காதலா , காதலா, காதலின் சாரலா“ பாட்டைத்தான் முதன் முதல்ல ரெகார்ட் பண்ணோம். அது கொஞ்சம் ஸ்லோ சாங். இன்டர்வெல் முன்னாடி வருது.  அது படத்தைக் கொஞ்சம் தொய்வாக்கிடும், எல்லாரும் தம் அடிக்கப் போயிருவாங்கன்னு  எனக்குத் தோணுச்சு. அதனால அந்தப் பாட்டையும் நான் ஷூட் பண்ணவே இல்லை.

ஃபர்ஸ்ட் காப்பியை சௌத்ரி சார், ஃப்ரண்ட்ஸ்கூட சுப்ரகீத்னு ஒரு தியேட்டர்… அதுல பாத்தாரு. படம் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. சார் ஏற்கெனவே டபுள் பாஸிட்டிவ் பாத்திருக்காரு. அவரு பாத்தப்போ ப்ரியா ராமன் வேலை கேக்கிற சீன் இருந்துச்சு. இப்ப நீளத்துக்காக நான் ட்ரிம் பண்ணி இருந்தேனா… என்கிட்ட, ”அந்த ப்ரியா ராமன் வேலை கேக்கற சீன் ஏன் இல்லை?” அப்படின்னாரு. ”ஃபுட்டேஜ் அதிகமா இருக்குன்னு கட் பண்ணிட்டேன் சார்” னு சொன்னேன். அதுக்கு சொன்னாரு, “இந்தப் படம் நாலு மணி நேரம்னாலும் தாங்கும்.  ஷோலே படம் எல்லாம் அப்பவே மூணு மணி நேரம். ஜனங்க பாக்கலையா? கண்டிப்பா அந்த சீனை வைங்க” அப்படின்னு சொல்லிட்டாரு.  சரின்னு அந்த சீனை வைச்சேன். அப்போ ஆஸ்கார் ரவிச்சந்திரன், “அந்த காதலா காதலா சாங் ஏன் படத்துல வைக்கலைன்னு  கேட்டாரு. லெங்த் அதிகமா இருக்குன்னு சொன்னப்போ, “அந்த சாங் வைச்சா படம் இன்னும் நல்லா இருக்கும்னு சொன்னாரு. (சூர்யவம்சம் படத்தோட சென்னைப் பகுதி உரிமையை  ஆஸ்கார் ரவிசந்திரன்தான் வாங்கி இருந்தாரு). சௌத்ரி சார் என்னை கூப்பிட்டு, ”டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் ரொம்ப ஹேப்பி. அவங்களே அந்தப் பாட்டை வைக்கச் சொல்றாங்க. நீங்க போய் நல்லா ரிச்சா ராஜஸ்தான் பேலஸ்ல போய் அந்த சாங்கை எடுங்கன்னு சொன்னாரு.  ஆனா நான் என்ன நினைச்சேன்னா, அந்த சாங்குக்கு ஆடியன்ஸ் எந்திரிச்சு போயிருவாங்க… அதுக்கு எதுக்கு தேவை இல்லாம செலவு பண்ணனும்னு ராஜஸ்தான் போகாம பெங்களூர்ல போயி, மூணு நாள் எடுக்க வேண்டிய சாங்க்கை ரெண்டு நாள்லயே எடுத்துட்டு வந்துட்டேன்.

அவரோட நெருங்கிப் பழகினவர் நீங்க, அவர்கிட்ட உங்களுக்கு       ரொம்பப் பிடிச்ச குணம் என்ன?   

விக்ரமன் :படைப்பாளிக்கு அவர் கொடுக்கிற சுதந்திரம்தான். அவர் ஒரு முறை கதை கேட்டுட்டு அது பிடிச்சுப் போச்சுன்னா அதுக்கப்புறம் முழு சுதந்திரம் கொடுத்திருவார். என்கிட்ட மட்டுமில்லை. அவர்கிட்ட படம் பண்ண எல்லா இயக்குநர்கள் கிட்டயும் அப்படித்தான். அவர்கிட்ட சொல்லி ஓகே பண்ணின ஒண்ணை மாத்தினா மட்டும்தான் அவருக்குப் பிடிக்காது. பூவே உனக்காக படத்தில கதை சொல்லும்போது ரெண்டு விதமான க்ளைமாக்ஸ் சொன்னேன்.  நான் சொன்னதில அவருக்கு அந்த ஹேப்பி வெர்ஷன்தான் பிடிச்சிருந்தது. அது என்னன்னா விஜயை ரெண்டு குடும்பமும் ஏத்துகிட்டு மகிழ்ச்சியாப் பாடற மாதிரி ஒரு க்ளைமாக்ஸ். அதுக்கான பாட்டும்கூட ரெகார்ட் பண்ணி வைச்சிருந்தேன். அந்த க்ளைமாக்ஸதான் சாருக்குப் பிடிச்சது. இப்ப படத்தில உள்ள க்ளைமாக்ஸ் சாருக்குப் பிடிக்கலை.  என்கிட்ட என்ன சொன்னாருன்னா, “படம் பூரா ஜாலியா கதை சொல்லிட்டு கடைசில எதுக்கு சோகம்? படத்தை சந்தோஷமா முடிங்க அப்பதான்  ‘ஹம் ஆப்கே ஹைன் கௌன்’ மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்“ அப்படின்னு சொன்னார். நான் அவர்கிட்ட “இல்லை சார், கடைசியில ஒரு மெல்லிய சோகமான டச் இருந்தா நல்லா இருக்கும் சார்“ அப்படின்னு வாதம் பண்ணேன். அவரு ஏத்துக்கலை. நான் என்ன பண்ணேன்? கொஞ்சம் பேட்ச் ஒர்க், ஒரு பாட்டுக்கான லீட் இதையெல்லாம் எடுக்கும்போது ஹீரோ விஜய் முதற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆர்ட்டிஸ்ட் எல்லாரையும் வர வைச்சு , படபடன்னு ஒரு மணி நேரத்தில இப்ப இருக்கற க்ளைமாக்ஸை எடுத்துட்டேன். அதுக்கு ஆர்.ஆர். உள்பட எல்லாமே பண்ணி ரெடியா வைச்சிருந்தேன். படம் முடிச்சு சார் ஷோ பாக்கறாரு.. ஹேப்பி வெர்ஷன் க்ளைமாக்ஸ் இருக்கற படத்தை பார்த்துட்டு வெளியில வந்து, “நல்லா இருக்கு. படம் நல்லாப் போகும்”னு சொல்லிட்டு கிளம்பப் போனவர் கிட்ட தயங்கித் தயங்கி, ”சார் இன்னொரு க்ளைமாக்ஸும் நான் வைச்சிருக்கேன்” என்று சொன்னதும் அவர் முகம் மாறிடுச்சு, “எந்த க்ளைமாக்ஸு?” என்று கேட்டார். “அதான் சொன்னேனே சார். அந்த சோக க்ளைமாக்ஸ்” என்றதும் கோபம் வந்துவிட்டது. “அதுதான் எனக்குப் பிடிக்கலைன்னு நான் சொன்னேன். அதை நீங்க ஷூட் பண்ணதே தப்பு, அதை ரெடி பண்ணதும் தப்பு. அதை என்கிட்டயே வந்து பாருங்கன்னா எப்படி? அந்த க்ளைமாக்ஸ் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குதுன்னா உங்க வீட்டில கொண்டு போய்  வைச்சு போட்டுப் பாத்துக்கங்க” அப்படின்னு சொல்லிட்டு கார்ல ஏறிக் கிளம்பிப் போயிட்டார். நான் விடலை…ஆட்டோவில அவர் பின்னாலயே போனேன். சூப்பர்குட் ஆஃபீஸ்ல போய் அவரு இறங்கினாரு. நான் அவர்கிட்ட போய்  சொன்னேன், “சார்  இந்தப் படமே நீங்க எனக்காகத்தான் எடுக்கறீங்க.  இது என்னோட லைஃப் சார். நீங்க  நிறையப் படம் எடுத்துட்டு இருக்கீங்க. இனிமேலும் எடுப்பீங்க. இந்தப் படம் ஓடலைன்னா என்னோட கேரியர் முடிஞ்சிரும் சார். அடுத்து படமே வராது. இப்படி ஒரு சூழ்நிலையில ஒரு தப்பான க்ளைமாக்ஸை நான் சஜஸ்ட் பண்ணுவேனா?” அப்படின்னு சொன்னேன்.  இப்படி சொன்னதும் என்னையே பாத்தாரு. . யோசிச்சாரு. அப்புறம் சொன்னாரு. “சரி, உங்களுக்கு அவ்வளவு கான்ஃபிடன்ஸ் இருக்குன்னா ஒண்ணு  பண்ணுங்க. இன்னிக்கு நைட் ஒரு ஷோ, அந்த க்ளைமாக்ஸை  வைச்சு அரேஞ்ச் பண்ணுங்க. உங்க ஃபேமிலி, ஃப்ரண்ட்ஸ் மட்டும் பாக்கட்டும். அவங்க ஃபீட்பேக் என்னன்னு நாளைக்கு என்கிட்ட சொல்லுங்க” அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டார். அதே மாதிரி அன்னிக்கு நைட் பத்து மணிக்கு ஒரு ஷோ போட்டேன். என் ஃபேமிலி, நடிகர் முரளியோட ஃபேமிலி எல்லாம் வந்தாங்க. ஆனா நான் எதிர்பாராத விதமா விஷயம் லீக் ஆகி டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் , மீடியேட்டர்ஸ் நிறையப் பேரு ஷோவுக்கு வந்துட்டாங்க. எனக்கு பயமாயிருச்சு. ஒருவேளை இவங்களுக்குப் படம் பிடிக்கலைன்னா நெகடிவ் டாக் வந்துருமேன்னு ரொம்ப பதட்டமாயிட்டேன். ரொம்ப நெர்வஸா வெளியில வெயிட் பண்ணிட்டு இருந்தேன். படம் பாத்துட்டு வந்த எல்லாரும் என்னைக் கட்டிப் பிடிச்சு கண்கலங்கி “படம் பிரமாதம்”னு சொன்னாங்க.

அடுத்த நாள் காலையில நான் போறதுக்கு முன்னாடியே சௌத்ரி சாருக்கு தகவல் போயிருச்சு. நான் போனதும், ”உங்க ஜட்ஜ்மென்ட்தான் ஜெயிச்சுது. அதையே வைச்சுக்கலாம்” அப்படின்னு சொன்னாரு.

அவருக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது? இயக்குனர்- தயாரிப்பாளர் உறவுதானா? இல்லை அதைத் தாண்டியதா?

விக்ரமன் : எனக்கும் அவருக்கமான ரிலேஷன்ஷிப், ப்ரொட்யூசர்-டைரக்டர் ரிலேஷன்ஷிப் இல்லை. ஒரு அப்பா-மகன் உறவு மாதிரிதான் இருந்தது. பல நேரங்கள்ல கோவிச்சுக்குவார். அப்புறம் அவரே கூப்பிடுவார். அதே போல் நான் அவர்கிட்ட உரிமையோட சண்டை போடுவேன். ரொம்ப ஆத்மார்த்தமான, உன்னதமான உறவு அது. ஒரு விஷயம் சொல்லணும்… அவருக்கு சூர்யவம்சம் பார்ட் டூ எடுக்கணும்னு ரொம்ப ஆசை. ஏன்னா அவரோட கேரியர்லயே பெரிய ஹிட் சூர்யவம்சம்தான். படமா வந்தப்பவும் ஹிட். அதுக்கப்புறம் ரீமேக் பண்ணபோது எல்லா மொழிகளிலயும் ஹிட். அதன் பிறகு டெலிவிஷனிலும் பல முறை போட்டாலும் பெரிய டிஆர்பி வரும். சோனி டிவியில சூர்யவம்சம் ஹிந்தி பெரிய ஹிட். யூட்யூபிலும் அப்படித்தான். சூர்யவம்சத்தைப் பல மொழிகளிலும் கிட்டத்தட்ட எண்பது கோடிப் பேர் பார்த்திருக்காங்க. அதனால அவருக்கு சூர்யவம்சம் 2 பண்ணணும்னு ஆசை. அதை நான்தான் பண்ணனும்னும் ஆசை. என்னைக் கூப்பிட்டுப் பேசினாரு. ஆனால் நான், “சூர்யவம்சம் கதை முடிஞ்சிருச்சு சார். அதை மறுபடி பண்ணினால் சரியா வராது” அப்படின்னு மறுத்துட்டேன்.  ஆனாலும் அவர் அந்த ஐடியாவை விடலை. சூப்பர் குட் ஃபில்ம்ஸின் நூறாவது படமா அது இருக்கணும்னு ஆசைப்பட்டார். அதனோட பார்ட் டூ ஸ்க்ரிப்டை எழுதச் சொல்லி சிலரிடம் சொல்லி இருக்கார். என்னையும் எழுதச் சொன்னார். மறைந்த ஈரோடு சௌந்தர்கூட ஒரு முழு ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கார்.

நான்தான் அதைப் பண்ணணும்ங்கிற அவரோட விருப்பத்தை எனக்கு ஃபோன் செய்த அவரோட உறவினர் ஒருத்தர் எங்கிட்ட சொன்னார். சார் ராஜஸ்தான் கிளம்புவதற்கு முன்னர் மூன்று ஸ்க்ரிப்ட்களை எனக்கு அனுப்பினார். அவர் ராஜஸ்தானிலிருந்து திரும்புவதற்குள் நான் மூன்று ஸ்க்ரிப்ட்களையும் படித்துவிட்டு, சார் வந்தவுடன் அவரை சந்திக்க வேண்டும். அவர் அடுத்த நாள் சென்னை வருவதாக இருந்தது. அதற்குள் நான் இரண்டு ஸ்க்ரிப்ட்களை படித்து முடித்துவிட்டு மூன்றாவது ஸ்க்ரிப்ட்டையும் பாதி படித்துவிட்டேன்.

அப்போது எனக்கு ஒரு ஃபோன் வந்தது. நம்பி என்பவர் பேசினார். அவர் சௌத்ரி சாருக்கு ஒரு வேலையாக  ஃபோன் செய்திருக்கிறார்.  மறுமுனையில் எடுத்தவர் இந்தியில் பேசி இருக்கிறார். ஆக்சிடென்ட், ஆக்சிடென்ட் என்று சொல்லி இருக்கிறார்.  நம்பிக்கு இந்தி தெரியாது. யாராவது தமிழ் தெரிஞ்ச ஆளிடம் கொடுங்க என்று இவர் சொல்ல  ஒரு தமிழ் தெரிந்த ஆள் பேசி இருக்கிறார். “இது ஹைவேஸ் சார். ஒரு ஆக்சிடென்ட் நடந்திருக்கு. முன் சீட்ல இருந்தவர் இறந்துட்டாரு.. இப்போ ஆம்புலன்ஸுக்காக வெயிட் பண்றாங்க” என்று தகவல் சொல்லி இருக்கிறார்.

நம்பி இதை என்கிட்ட சொல்லிட்டு சொன்னார், “எப்பவுமே சௌத்ரி சார் முன் சீட்லதான் உக்காருவாரு. சீட் பெல்ட் போட மாட்டாரு. எனக்கென்னமோ  அது சார்தானோன்னு சந்தேகமா இருக்கு” என்று சொல்ல மனசு பதறியது. 

அதன் பின் எனக்கு வரிசையாக ஃபோன்கள் வரத் தொடங்கியது. சௌத்ரி சாரோட மறைவு உறுதியானது.

எனக்கு ஒரு சின்ன வேதனை என்னன்னா, மூணு ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்துட்டு ராஜஸ்தான் போனவர் ஒரு ஃபோன் போட்டு, என்னப்பா அதை படிச்சியான்னு கேட்டிருக்கலாம். கேக்கலை. இல்லை நானாவது ஃபோன் போட்டு அதைப் பத்தி  பேசி இருக்கலாம். நான் அவர் ஆசைப்பட்ட மாதிரி அதைப் பண்ணுவோம். நாமளே அதுக்கான கதையை எழுதிடலாம் அப்படிங்கற மனநிலையிலதான் இருந்தேன். அதான் நாளைக்கு வந்திருவாரில்லை… வரவும் நேர்லயே பேசிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிருச்சு. ரொம்ப வருத்தம். வேதனை. இழப்பு. அவரைப் பத்தியும் அவரோட இழப்பைப் பத்தியும் நான் என்ன சொல்ல முடியும்? அவரு இல்லைன்னா நான் இல்லை.”

Author Image

பாஸ்கர் சக்தி

திரைப்பட இயக்குநர். எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post

பணிமூப்பும் ஓய்வூதியமும்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

மைக்கேல் – குழந்தைமையின் ஆன்மிகம்

June 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?