The Talkie
Thursday, July 2, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள்

கரு உரு 02

The Talkie by The Talkie
July 2, 2026
in தொடர்கள்
A A
0
கரு உரு 02
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon நாராயணி கண்ணகி

அண்மையில் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது. தான் தயாரித்த இரண்டு நிமிட ரீல்ஸ்களைக் காட்டினார். எல்லோருக்கும் தெரிந்த பழமையான சிறார்கள் கதைகளை, தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய பார்வையில்  AI மூலம் தயாரித்து இருந்தார். அதில் ஒன்று. தொப்பி வியாபாரி மரத்தடியில் அயர்ந்து தூங்கினார். விழித்துப் பார்த்தால் கூடையில் ஒரு தொப்பியும் இல்லை. அதிர்ச்சியடைந்த வியாபாரி சுற்றிலும் தேடிவிட்டு அண்ணாந்து மரத்தைப் பார்க்கிறார். மரத்தில் உட்கார்ந்திருக்கும் குரங்குகள் தொப்பிகளை அணிந்திருக்கின்றன.

வியாபாரி “உங்களைப் பற்றி எங்க தாத்தா சொல்லி இருக்கிறார். அந்தத் தொப்பிகளை எப்படிப் பெறுவதென்ற வித்தை எனக்குத் தெரியும்” என்று சொல்லிக் கொண்டே தன் தலையில் இருந்த தொப்பியை எடுத்து தரையில் வீசுகிறார். அவர் வீசியதைப் போலவே குரங்குகளும் தொப்பிகளை வீசி விடும் என்று நினைக்கிறார். ஆனால் ஒரு குரங்கு ஓடி வந்து அவர் வீசிய தொப்பியையும் எடுத்துக் கொண்டு போய்விடுகிறது. “என்ன தொப்பி வியாபாரி, நீங்க இந்த டெக்னிக்கை செய்வீங்கன்னு எங்க தாத்தாவும் சொல்லி இருக்கிறார்” என்று சொல்லி குரங்குகள் சிரிக்கின்றன.

இந்த இரண்டு நிமிட ரீல்ஸைப் பார்த்துவிட்டு அவரைப் பாராட்டினேன். அதோடு திருத்தங்களையும் சொன்னேன் “நல்லா இருக்கு சார்! ஒரு கதையைப் புதுசா மாற்றும்போது மற்ற விசயங்களையும் மாற்றலாமே… தொப்பிகளுக்கு பதிலாகக் குடைகள், அல்லது கூலிங் கிளாஸ் இப்படி இருக்கலாமே?” என்றேன்.

“இல்லை சார். தொப்பியே இருந்தால்தான் பார்க்கிறவங்க அந்தப் பழைய கதையோட கனெக்ட் ஆவாங்க” என்றார்.

“அப்படி இல்லைங்க சார். எல்லாத்தையும் சேஞ்ச் பண்ணலாம். மரத்துக்குப் பதிலா குன்றுகளைக்கூடக் காட்டலாம்” என்றேன்.

“எல்லாவற்றையும் சேஞ்ச் பண்றீங்க சரி. குரங்குக்கு பதிலா வேற அனிமல் சேஞ்ச் பண்ண முடியுமா?” என்று மென்சிரிப்போடு கேட்டார். கேலியாகவும் இருந்தது.

யோசித்தேன்! “முடியும் சார்! குரங்குக்கு பதிலா காக்கா இருக்கட்டும்” என்று சொல்லி என்னை அறிவாளியாக எண்ணிப் பார்த்தேன்.

“கனெக்ட் ஆகாது சார். மனுசன் மாட்டிக்கிற தொப்பியைக் குரங்கு மாட்டிக்கும். காக்கா எப்படி மாட்டும்?”

நாக்கைக் கட்டெறும்பு கடித்த மாதிரி இருந்தது.

– இதுதான் கதை விவாதத்தின் சாம்பிள்!

இரண்டு நிமிடங்கள் வரும் ரீல்ஸுக்கே விவாதம் பண்ணுவதன் மூலம் புதிய வடிவங்களைக் கொடுக்க முடிகிறது என்றால் இரண்டு மணி நேரம் ஓடும் திரைப்படத்திற்குக் கதை விவாதம் செய்வதன் மூலம்தான் புதிய வடிவத்துடன் செம்மைப் படுத்த முடியும். லாஜிக் என்று சொல்லப்படும் காரண காரியத்தை நேர்த்தி செய்ய முடியும்.

நண்பர் சொன்னார் “இப்போது மக்கள் ரீல்ஸ்தான் அதிகமாகப் பார்க்கிறார்கள். ரெண்டு நிமிடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.”

“ஆமாம் சார்! ரெண்டு நிமிட ரீல்ஸை அதிகமாகப் பார்க்கிறார்கள். ஆனால், நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியானால் ஒரு நாளைக்கு எத்தனை இரண்டு நிமிடங்கள்? திரைப்படம் என்பதும் ரீல்ஸ்களின் தொகுப்புதான் சார்! அற்புதமான அறுபது ரீல்ஸ்களை இணைத்து விட்டால் அந்தத் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறுகிறது” என்றேன்.

எந்தப் படத்தில் ரீல்ஸ் பார்ப்பதைப் போல் ஒவ்வொரு காட்சியும் பிரமாதமாக அமைகிறதோ அந்தத் திரைப்படங்களை மக்கள் நிராகரிக்க மாட்டார்கள். பெரிய அளவில் வெற்றி பெற வைப்பார்கள்.

நீங்களே யோசித்துப் பாருங்கள் ஒவ்வொரு காட்சியும் மிகவும் சிறப்பாக அமைந்த திரைப்படங்களைப் பட்டியல் இடுங்கள்.

பருத்தி வீரன், துப்பாக்கி, ரமணா, இந்தியன், பாட்ஷா போன்ற படங்களில் எந்தக் காட்சியைத் தனியாக வெட்டிப் பார்த்தாலும் ரசிக்கும்படி இருக்கும். இவை பெரிய நடிகர்களின், பெரிய இயக்குநர்களின் திரைப்படங்கள்.

பல இயக்குநர்களின் முதல் படங்கள் சிறிய பட்ஜெட்டில் எடுத்ததாக இருந்தாலும் ரசிக்கும்படியான காட்சிகளால் நல்ல திறப்பைக் கொடுத்துள்ளன. கோலமாவு கோகிலா, அட்டகத்தி, வெண்ணிலா கபடிக் குழு, எம்(டன்)மகன், சென்னை-28… இப்படி நிறையத் திரைப்படங்களைச் சொல்லலாம். ஆனாலும் வெறும் காட்சிகள் மட்டுமே திரைப்படமாகிவிடாது. அந்தக் காட்சிகள் மையக் கதையைச் சிதைக்காமல், உணர்வுகளை மழுங்கடிக்காமல், தனிப்பட்ட காட்சியும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். அதே வேளை ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.

சரி, என் கதை விவாத அனுபவங்களுக்கு வருகிறேன். அனுபவங்கள் எதுவாக இருந்தாலும் அப்படி ஒன்றை அனுபவிக்காதவர்களின் பார்வைக்கு புதியதாகக் காட்டும். கடலையும் கடலலைகளையும் முதல் முறையாகப் பார்ப்பவர்களுக்கும் நூறாவது முறையாகப் பார்ப்பவர்களுக்கும் வேறுபாடு உள்ளது.

இதுவரை கதை விவாதத்தில் பங்கு பெறாதவர்களுக்கு இந்த அனுபவங்கள் நுழைவாயிலாக இருக்கும்.

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு கனவுத் தொழிற்கலைஞர்களுடன் கதையுரையாடும் என் ட்ரிப் ஆரம்பித்தது. கடைசியாக முப்பத்தாறு தேதிகளுக்கு முன்பு ஒரு கதை விவாதத்தில் பங்கேற்றேன். கடைசியை முதலில் வைக்கலாமா அல்லது ஆரம்பத்தையே ஆரம்பத்தில் வைத்து ஆரம்பிக்கலாமா? என்று நானே நானுக்குள்ளே விவாதம் பண்ண…

போன மாசம் ஒரு டைரக்டர் போன் பண்ணி “ஃபிரீயா இருந்தா நாளைக்குச் சென்னை வாங்க” என்றார். (ஃப்ரீயான்னா ஃப்ரீயாதான். பணம் கேட்கமாட்டேனென்று அவருக்குத் தெரியும்) கூப்ட்டதுமே சென்ட்ரல் இறங்கி. மெட்ரோவில் ஏறி வ.பழனியில் இறங்கி. AD தம்பி ஒருவரின் பைக்கில் ஏறி ஆபீஸில் இறங்கிவிடுவேன் என்பதும் வழக்கம்! வழக்கம் போல்!

ஓட்டலில் தற்காலிகமாக ரூம் எடுத்து உதவி இயக்குநர்களோடு தங்கி இருந்த (உதவாத) இயக்குநர். நேரத்தைக் கீழே இறைக்காமல் “சார்! எனக்கு ஹீரோவும் ஹீரோயினும் மீட் பண்ற ஸீன் ரொமான்டிக்கா வேணும். ஃபர்ஸ்ட் மீட்! அது அவங்க லைஃப்ல மறக்க முடியாததா இருக்கணும். அவங்க லைஃப்புல மட்டுமில்ல ஆடியன்ஸாலயும் மறக்க முடியாததா இருக்கணும்” என்றார்.

AD க்கள் இயக்குநரையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.

ஒரு நிமிடம் கண்களை அகல விரித்து, ஜில் ஏசியைப் பார்த்தவாறு யோசித்தேன். இதுவரை நான் பார்த்த திரைப்படங்களில் அப்படி ஒரு மறக்க முடியாத காட்சி ஞாபகத்திற்கு வருகிறதாவென்று. யோசித்தால், ஆமாம் யோசித்து பார்த்தால் மட்டுமே ஹீரோ ஹீரோயின் சந்திக்கும் காட்சிகள் ஞாபகத்திற்கு வந்தன. அலைகள் ஓய்வதில்லை, மெல்லத் திறந்தது கதவு, நாயகன், ஒரு தலை ராகம், மௌனராகம் போன்ற படங்களை நினைவுக்குக் கொண்டு வந்தேன். காதல் கோட்டையில் காதலர்கள் சந்திக்கும் காட்சி மட்டுமே உடனடியாக ஞாபகத்திற்கு  வந்தது. அதிலும் க்ளைமாக்ஸ் சந்திப்பு சரசரவெடி! படத்தின் வெற்றிக்கே ஹீரோ ஹீரோயின் சந்திப்பைக் காரணமாகச் சொல்லலாம். இருவரும் இணைவார்களா, மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் படம் முழுவதும் காய்ச்சலடிக்க வைத்தன.

இயக்குநர் “சார்! காதலன் பாத்தீங்களா?” என்றார்.

“பார்த்தேன் சார்! கண்ணாடி பஸ். பிரபுதேவா ஹீரோ! நக்மா ஹீரோயின்!”

“அந்தப் படத்துல ஹீரோவும் ஹீரோயினும் மீட் பண்ற ஸீன் ஞாபகம் இருக்கா?” என்றார்.

கொஞ்சம் யோசித்தேன். பாடல்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தன.

‘கோழிக்குஞ்சு தேடி வந்த கோபாலா..’ தெலுங்கு தேச ஆற்றோரத்தில் ஆட்டம்.

‘முக்காலா முக்காபுல்லா லேலா’ கிராஃபிக்ஸ் துள்ளல்

‘பேட்ட ராப்! பேட்ட ராப்! சைதாப்பேட்ட. குரோம் பேட்ட..’ ஸ்பிரிங் எகிறல்.

‘கொல்லயில தென்னை வைத்து குருத்தோலை பொம்மை செஞ்சி..’ நேரடியாக மனப்பரப்பில் வீசிய தென்றல்.

– உண்மையில் எனக்கு ஸ்விட்ச்சை தட்டினதும் மின்விசிறி சுற்றுகிற மாதிரி, ஸ்விட்ச்சை தட்டினதும் விளக்கு எரிகிற மாதிரி, ஸ்விட்ச்சை தட்டினதும் தொலைக்காட்சி ஓடுகிற மாதிரி, காதலன் என்றதும் பாடல்கள்தான் ஞாபகத்திற்கு வந்தன. ஏ.ஆர்.ரகுமானின் வித்தைகள் காரணம்!

இயக்குநரே சொன்னார் “காலேஜ் பங்ஷனுக்கு கவர்னரை அழைக்க பிரபுதேவாவும் வடிவேலுவும் கவர்னர் பங்களா போறாங்க. அப்பதான் கவர்னர் மகள் நக்மாவும் கான்ஸ்டபிள் மகனான பிரபுதேவாவும் மீட் பண்றாங்க…”

“ஆமா சார். ஞாபகம் வந்துடுச்சு. ரெண்டு பேரும் வழுக்கி விழுவாங்க..”

“என்னங்க சாதாரணமா ரசன இல்லாம, பக்கத்து வீட்டு ஆன்ட்டி வழுக்கி விழுந்த மாதிரி சொல்றீங்க..?” என்று சிரித்தார்(கள்). இயக்குநர் என்பவர் ஒருவர் அல்ல, அவர் உதவி இயக்குநர்களின் சேர்க்கை. அவர் சிரித்தால் அவர்களும் சேர்ந்து ‘கொல்’லெனக் கொல்வார்கள். “நக்மாங்க, நக்மா!” மயக்கத்தோடு சொன்னார்.

“தமிழ் சினிமாவுல யாருமே வைக்காத ஸீன். ஏன், உலக சினிமாவுலயே யாரும் வைக்காத ஸீன்!” அவர் சொல்லும் விதத்தில் வெண்ணெய் உருகியது.

இயக்குனர் சாதாரண சங்கதியைப் பெரிதாகச் சொன்ன மாதிரித் தெரியவில்லை. பேடு வைத்து பெரிய விஷயமாகச் சொன்னார்.

“ஹீரோ தரை வழுக்கி தரையில் மல்லாக்க விழுவான். பெரிய பெரிய (வார்த்தையில் சொல்வதோடு மட்டுமின்றி டைரக்டர் கை விரல்களை விரித்தும் காட்டுகிறார்) மார்புகளோட ஹீரோயின் ஓடி வந்து வழுக்கி ஹீரோ மேல விழுவாங்க. ஹீரோ, ஹீரோயினோட ரெண்டு மார்பையும் ரெண்டு கையால பிடிச்சுப்பார்!” (இயக்குனரின் மொழியை அப்படியே பயன்படுத்தவில்லை. அது மட்டமான சரோஜாதேவியாக இருந்தது. அல்லது சரோஜாதேவியின் மொழி பரவாயில்லை என்பதாக இருந்தது.) “அதே மாதிரி எனக்கு ஒரு ஸீன் வேணும்.”

சொன்னதோடு நிற்காமல் காதலன் படத்தின் அந்தக் குறிப்பிட்ட காட்சியை அவரின் செல்போனிலிருந்து காட்டினார். அந்தக் காட்சி சில நொடிகள்தான் இடம் பெற்றுள்ளது. நான் தியேட்டரில் பார்க்கும்போது. தவற விட்டிருக்கிறேன். ஏன் ரசிகர்கள் நக்மாவுக்கு கோயில் கட்டவில்லை என்பது தெரியவில்லை. பிரபுதேவா வழுக்கி தரையில் விழுகிறார். நக்மா பிரபுதேவா மேல் விழ வருகிறார். அவரைத் தாங்கிப் பிடிப்பதற்காக பிரபுதேவா இரண்டு கைகளையும் உயர்த்துகிறார். பிரபுதேவாவின் இரண்டு கைகளிலும் நக்மாவின் இரண்டு மார்பகங்கள்! (ஏண்டா இங்கே சொல்றேன்னு என் மேல கோபம் வருதா?) சென்சார் சர்டிபிகேட்டோடு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்! எண்பது, தொண்ணூறுகளில் வெளிவந்த மலையாளப் படங்களில் சென்சாருக்குப் பின் பிட்டு சேர்ப்பார்களே அப்படி சேர்த்தது அல்ல. (கேமிரா மேதை கர்ணன் இயக்கிய திரைப்படங்களிலும் சென்சாருக்கு பிறகு ஒரிஜினல் ஹீரோ, ஹீரோயினை வைத்தே பிட்டு மாதிரியான அயிட்டங்களை சேர்த்திருப்பார்கள். கதாநாயகி ரவிக்கை இல்லாமல், கண்ணாடி போன்ற உடையணிந்து ஆற்றில் நீராடுவார். சுழலில் மாட்டிக் கொள்வார். ஒரு பக்கம் முதலை. இன்னொரு பக்கம் சிறுத்தை! கதாநாயகன் தென்னக ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் போராடி கதாநாயகியைக் காப்பாற்றுவார். தமிழ் சினிமாவைத்தான் காப்பாற்ற முடியாமல் போனது. கதாநாயகியை அவர் காப்பாற்றும் வரை ரவிக்கை இல்லாமல்தான் போராடிக் கொண்டிருப்பார். ஜெய்சங்கர் காப்பாற்றியதும் காதல் புரொட்யூசாகிவிடும்! அதுவும் ஹீரோ, ஹீரோயின் முதல் சந்திப்புதான்.)

“சார்! ஏன் அப்படி ஒரு ஸீன் வேணும்?” என்றேன்.

“காதலன் படம் வந்தப்போ அந்த ஸீன் பெரிசா கவனிக்கப்படல. அப்போ பிரபுதேவா டான்ஸர்தான். ரொமான்டிக் ஹீரோ கிடையாது. இப்ப பிரதீப் ரங்கநாதன் மாதிரி ஹீரோவுக்கு வெச்சோம்னா நல்லா ரீச் ஆகும்” என்றார்.

எனக்கு மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படமான சித்திரம் பேசுதடி படத்தில் வரும் ஹீரோ ஹீரோயினின் முதல் சந்திப்பு ஞாபகம் வந்தது. ரொம்பவும் பிடித்த காட்சி. “சார்! டைரக்டர் ஷங்கர் அந்த மாதிரி வெச்சா ஏத்துக்குவாங்க. அவர் மவுண்ட் ரோட்ல ஒரு பையனை நிர்வாணமா ஓட வைப்பார். ஜனங்கள் ஏத்துப்பாங்க. நாம அதை விட்டுட்டு வேற நல்ல ஸீன் வைக்கலாமே?”

“பாருங்க என் படத்துக்கு அப்படித்தான் வேணும். ரெண்டு பேருக்கும் ஒரே ஸீன்ல லவ் பத்திக்கணும். மார்பை பிடிச்ச ஒருத்தன எந்தப் பொண்ணாவது மறுப்பாளா? லவ் சப்ஜெக்ட்டா இருந்தா பத்து ஸீனுக்கு இழுக்கலாம். க்ரைம் சப்ஜெக்ட்! ஒரே ஸீன்ல லவ் போர்ஷன் முடிஞ்சிடணும்” என்றார்.

தலையை நன்றாகவே ஆட்டினேன். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ கோமாளி வேஷம் போட்டால் குரங்கு பல்டி அடித்துத்தானே ஆக வேண்டும்?

துரித உணவாகச் சொன்னேன் “சார்! ஹீரோ ஒரு காருக்கு கீழே படுத்துட்டு சர்வீஸ் பார்க்கிறார்.”

“ஒருத்தன் ஒரு காருக்கு அடியிலதான் சர்வீஸ் பாக்க முடியும். ஆனா, என் ஹீரோ  மெக்கானிக் இல்லையே”

“ஹீரோதானே சார்! அவருக்கு உலகத்துல இருக்கிற அத்தனை சர்வீசும் தெரியும். தெரியணும். நடு வழியில் கார் நின்னு போயிட்டதா வெச்சுக்குங்க. இல்லை. ஏத்துக்க முடியலன்னா காருக்கு அடியில் வில்லன் வெச்ச டைம்பாம்மை எடுக்கிறார்னு வெச்சுக்குங்க. காருக்கு அடியில் ஹீரோ டைம்பாம் எடுக்கிறார் ஹீரோயின் காருக்கு முன்னாடி நின்னு லேப்டாப்பை காருக்கு மேல வெச்சிட்டு வில்லன்களோட வாகனங்கள் எந்த திசையில் போயிட்டு இருக்குன்னு பாக்கறாங்க. எதிர்பாராத விதமாக கார் தன்னால மூவ் ஆகுது. ஹீரோயின் பேலன்ஸ் தவறி விழறாங்க. கார் மூவ் ஆயிட்டதால காருக்கு அடியில் படுத்திருந்த ஹீரோ மேல ஹீரோயின் விழறாங்க அவர் ரெண்டு கையால…” என்று டம்மியாக ஒரு காட்சி சொன்னேன். கதை விவாதத்தில் டம்மியாக டம்மியாக என்றுதான் காட்சியை சொல்வார்கள். இயக்குனர் ஓகே சொல்கிற வரைக்கும் அது டம்மிதான். ஒரு காட்சி இயக்குனருக்குப் பிடிக்க வேண்டும். அதுவரைக்கும் விவாதக் குழுவில் இருப்பவர்கள் யோசித்து யோசித்து காட்சிகளைச் சொல்வார்கள். அந்தக் காட்சிகள் புதியதாக அமைவது அபூர்வமாகவே இருக்கும். ஏற்கெனவே பல திரைப்படங்களில் வந்து கவனம் ஈர்த்த காட்சிகளைத்தான் கொஞ்சம் மாற்றிச் சொல்வார்கள்.

அன்றும் உதவி இயக்குநர் ஒருவர் சொன்னார். அண்ணாமலை படத்தில்  குஷ்பு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருப்பார் ரஜினி பார்த்து விடுவார்! (ஹுரோயின் ஆடையில்லாமல் குளித்தார் என்பதாகவும் ஹீரோ எதேச்சையாகப் பார்த்து பயந்துவிட்டார் என்பதுமாக நகைச்சுவை + கிளாமர் சேர்த்து ஹீரோ, ஹீரோயின் முதல் சந்திப்பை வைத்திருப்பார்கள். (கடவுளே… கடவுளே…)

இன்னொரு மூத்த இயக்குநர் “தலைவர் பண்ணாத புரட்சியா? ஆயிரத்தில் ஒருவனிலேயே கிழிச்சித் தொங்கவிட்டாரே… புரட்சித்தலைவி இளவரசியா நடிப்பாங்க. தலைவர் அடிமை. இளவரசி வலம் வரும்போது. பெரிய மரம் சாயும். மரம் தலைவியின் மேல் விழுந்தால் என்ன ஆவது? தலைவர் பக்கத்தில் இருக்கும்போது அது எப்படி நடக்கும்?  அம்மாம்பெரிய மரத்தை, தலைவர் முதுகுல தாங்கிக்குவார். கீழே தலைவி. மேல தலைவர்! மரம் அழுத்தும்போது தலைவர் தலைவியின் மேல் படுப்பார். கஷ்டப்பட்டு தண்டாலெடுத்து மேலெழுவார்.” இந்தக் காட்சியை மூத்த இயக்குநர் எப்படி பலான மொழியில் சொன்னார் என்பதைக் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

எனக்கு பாகுபலி படத்தில் ஹீரோயின் தடுக்கி விழும்போது ஹீரோ மென்னிடையில் கை வைத்து தாங்கிப் பிடிப்பாரே அந்தக் காட்சியின் அழகு பிடித்திருந்தது.

திரைப்படங்களில் ஹீரோயினின் முகத்தைப் பார்த்தாலே ஹீரோவுக்குள் காதல் விளைந்துவிடும்படியான காட்சிகளே அதிகமாக வெளிவந்துள்ளன.

ரன் படத்தில் ஹீரோவுக்கு ஹீரோயினைப் பார்த்ததும் காதல் வந்துவிடும். ஆனால் அதில் அவர் வெளிப்படுத்தும் வசனம் புதுசு! ‘யூத்’தர்களை சிலிர்க்க வைத்தது.

பல படங்களில் “இதெல்லாம் ஒரு மூஞ்சி, அய்யோ” என்று ஹீரோயினைக் கலாய்த்துக்கூடக் காதல் செய்திருக்கிறார்கள்.

இன்னும் இயக்குநரைத் திருப்திப்படுத்தும் காட்சி கிடைக்கவில்லை. அவ்வபோது போனில் கேட்பார். “யோசிக்கிறேன் சார்” என்பேன்.

சில இயக்குநர்கள் அப்படித்தான் எவ்வளவு அற்புதமான காட்சிகளைச் சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தான் நின்ற இடத்திலேயே நிற்பார்கள்.

०००

தொண்ணூறில் (என்னூரோ. குன்னூரோ அல்ல) முதன் முதலாக ஒரு இயக்குநர் கதை விவாதத்திற்கு வரமுடியுமா? என்று நான்கைந்து கார்டு போட்டார். (இது போஸ்ட் கார்டு! கடைசி வரை அவர் டைட்டில் கார்டில் பேரைப் போடவில்லை.) ஒரு வாரஇதழ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதால், என் சிறுகதையோடு, என்னைப் பற்றி சிறு குறிப்போடு முகவரியையும் பிரசுரம் செய்திருந்தார்கள். இந்தக் கதையை எதுக்கு வுட்றனென்றால் ‘சினிமா டைரக்டருக்கு எப்படி முகவரி கிடைத்தது?’ என்ற பாயின்ட்டைப் பிடித்துவிடுவீர்கள் என்றுதான். கதை விவாதத்தில் மிக முக்கியமானது இது போன்ற கேள்விகள்தான்.

இக்காலத்தில் நம்மைப் பயன்படுத்தி கொண்டிருக்கும் பேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர் எதுவும் அக்காலத்தில் இல்லை. ஆதலினாலே போஸ்ட் கார்டிலேயே நான் பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டிய இடம், நடந்து வரவேண்டிய தூரம், இடதில் எங்கெங்கே வளைய வேண்டும், வலதில் எங்கெங்கே வளைய வேண்டும் என்று (கூகிளில்லா) மேப் வரைந்து அனுப்பி இருந்தார். நான் இப்போது போலவே (கூகிள் மேப்பை நம்புவதில்லை) போஸ்ட் கார்டு மேப்பை நம்பாமல் கடைசியாக அவர் சந்திக்க வேண்டிய இடமாக ஒரு டீக்கடையின் பெயரைச் சொல்லி இருந்தார். அந்த டீக்கடையின் பெயரை மட்டுமே சொல்லி வழி கேட்டு அடைந்தேன்.

-நேரடியாக கதை விவாதத்திற்குள் வராமல், இந்தத் தகவல்கள் எல்லாம் தேவையா என்கிற கேள்வி உங்களுக்கு வருகிறது அல்லவா? எனக்கும் நல்லா வருகிறது. நான் முதன் முதலில் திரை உலகில் கால் வைப்பவன். எப்பேர்ப்பட்ட கனவுகளோடு. ஆசைகளோடு போயிருப்பேன் என்று யூகித்து கொள்ளுங்கள். அடுத்த பாக்யராஜ் நான்தான் என்கிற நினைப்போடல்லவா போனேன். சத்தியமாக பாலசந்தராகவோ பாரதிராஜாவாகவோ ஆகும் எண்ணம் துளியும் இல்லை. ஏனெனில் அவர்கள் ஹீரோவாக நடிக்கவில்லை. பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம். இயக்கம் எல்லாம் பார்த்து கொண்டு கதாநாயகனாக நடித்தார். ஆதலினால் வந்தா (பாக்ய)ராஜாவாகத்தான் வருவேன் என்று போனேன்.

அந்தக் காலத்தில் பிரபா ஒயின்ஸ் போலவே பிரபலமடைந்திருந்த ஒரு டீக்கடையில் இயக்குநரைச் சந்தித்தேன். வார இதழில் க/வெ புகைப்படம் வந்திருந்ததால் பார்த்ததும் “வாங்க நாராயணி” என்றார். அந்தத் தேநீர்க் கடை பூங்காவைப் போலிருந்தது. குட்டியான மரங்களும், ஆங்காங்கே குடை போன்று வடிவமைக்கப்பட்ட சின்னச் சின்னக் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் இருந்த குடைக் குடிலுக்குக் கீழே எனக்காக ஒரு நாற்காலியை நீண்ட நேரமாகக் கைப்பற்றி வைத்திருந்தார். நாங்கள் பேசுவது வேறு யாருக்கும் கேட்கக் கூடாது என்றோ, வாஸ்து பார்த்தோ அந்த மூலையை தேர்ந்தேடுத்து இருந்தார். எல்லா இயக்குநர்களும் படம் வெளிவருவதற்கு முன்பு எந்த விதத்திலும் கதையும் கதை சம்பந்தப்பட்ட எதுவும் லீக்காகி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பார்கள். என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான கதை, திரைக்கதை கொண்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

நான் இயக்குநர் எதிரே உட்காரத் தயங்கி நின்றேன். அப்புறம் மிரட்டி உட்கார வைத்தார். டீ குடித்தோம். தலை நகரத்தில் தேநீர் தேவாமிர்தமாக இருக்கும் என்ற கிராமத்து நினைப்பு உடைந்தது.

“இப்போ இறங்கினீங்களே. அதே இடத்திலே நின்னா பிராட்வேயில இருந்து பஸ் வரும். அங்கேயே பஸ் ஏறிக்கலாம். வழி தெரிஞ்சாச்சு இல்லையா?” என்றார்.

நான் திரும்பிப் போகும் பிளாக் & வொயிட் எண்ணத்தோடு வரவில்லை. பாக்யராஜ் ஆகிவிடும் கலர்ஃபுல் தாவணிக் கனவுகளோடு அல்லவா வந்தேன். சோக வாத்தியம். சொக வாத்தியம் ரீ ரெக்கார்டிங் ஒரு சைட்ல போகட்டும்.

இயக்குநர் எல்லாப் பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றிப் பார்த்தார். இவர் சொல்லும் கதையை வெளியாள் யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை காட்டினார். சினிமா உலகிற்குள் புதியதாக நுழைந்தவன் என்பதால் அந்த மீட்டிங் முழுவதுமே அவர் அப்படிப் பார்ப்பது விசித்திரமாகப் பட்டது. “ராமராஜன் சார் கிட்ட ஒரு லைன் சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஸ்கிரிப்ட் முடிச்சு எடுத்துட்டு வந்துடச் சொன்னார்.” பெருமையாகச் சொன்னார்.

எனக்கு எந்த ரியாக்ஷன் காட்டவும் தெரியவில்லை.

“என்னா ராமராஜன் சார்னு சொல்றேன் முகத்துல சந்தோஷமே கானோம்?” என்றார்

எனக்கு வராது என்பதை அறிந்து கதையைச் சொல்ல ஆரம்பித்தார் “ஹீரோ(ரா ரா)வுக்கு ரெண்டு அக்கா. ஒரு அக்கா பெரிய பணக்காரனோட மனைவி. இன்னொரு அக்கா சாதாரண விவசாயியோட மனைவி. ரெண்டு அக்காவுக்கும் ஆளுக்கொரு பொண்ணு! ராராவுக்கு ரெண்டு ஜோடி! ஒரு ஹீரோயின் கனகா. இன்னொரு ஹீரோயின் கவுதமி! (சும்மா பேச்சுக்கு). ரெண்டு பேருமே ஹீரோவை விழுந்து விழுந்து லவ் பண்றாங்க. (ஜனங்களும் விழுந்து விழுந்து பாப்பாங்க.) ஆளுக்கு ரெண்டு டூயட் வெச்சுடலாம். ஒரு பேத்தாஸ். ஒரு தத்துவப் பாட்டு”

“நான் பாட்டும் நல்லா எழுதுவேண்ணா.”

“வேணாம், வேணாம். நானும்தான் எழுதுவேன். நாம கிரியேட்டிவ் ஒண்ணுல நிக்கலாம். நாலு படத்துக்குக் கூட இருங்க. அப்புறம் நானே உங்களுக்கு ராமராஜன் சார் கால்ஷீட் வாங்கி தர்றேன்.”

மறுபடியும் தேநீர். மறுபடியும் கதை.

“பணக்கார அக்காவின் கணவருக்கு கிராமத்து ஹீரோ ராமராஜனைப் பிடிக்காது. ‘பட்டிக்காட்டான் வந்துட்டான் பாரு. டேய் நீ என்னை மாமான்னு கூப்பிடாத. சார்னு கூப்பிடு’ன்னு சொல்வாரு. விவசாயி அக்காவின் கணவருக்கு ஹீரோவை ரொம்பப் பிடிக்கும். ரெண்டு அக்கா வீட்லயும் ராமராஜன் சோறு தின்ற ஸீன் இருக்கு.”

“சாப்பாட்டு ராமன் சிவாஜி போல் சோத்தை அள்ளிக் கொட்டிக்கிற ஸீன்ஸ் இருக்குது. ரிக்ஷாக்காரன் எம்ஜிஆர் போல் லவ் டூயட்டுகளும் இருக்குது.”

மற்றும் பிற சுருங்கச் சொல்கிறேன் -இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள். பணக்கார மாமாவின் பணத்தைக் கொள்ளையடிக்கும் கோட் சூட் போட்ட வில்லன் + அடியாட்கள்! அந்த வில்லன்கள் பணக்கார மாமாவை கடத்தி கொண்டு போய்க் கட்டிவைத்து அவரின் சொத்துக்களைப் பறிப்பதற்காகக் கையெழுத்து கேட்கிறார்கள். பணக்கார மாமாவின் உயிரையும் பணத்தையும் ஹீரோ காப்பாற்றுகிறார். (பைக் சாகசத்துடன் சண்டைக்காட்சி.)

இன்னொரு விவசாய மாமாவின் வில்லன் வேட்டி, சில்க் ஜிப்பா அணிந்த கிராமத்துப் பண்ணையார். அவர் மாமாவின் விவசாய நிலங்களை அபகரிக்கப் பார்க்கிறார். ஹீரோ வில்லன் + அடியாட்களுடன் பெரிய ஸ்டன்ட் போட்டு (அங்கே பைக் சண்டை என்றால் இங்கே டிராக்டர் சண்டை. குறுக்கே பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஆடுகளும் மாடுகளும் ஓடும்) விவசாய மாமாவையும் நிலங்களையும் காப்பாற்றுவார். ஹீரோன்னா வேற புண்ணாக்கு என்ன இருக்கு?

இரண்டு அக்காக்களையும் மாமாக்களையும் சொத்துகளையும் காப்பாற்றியாகிவிட்டது. இரண்டு ஹீரோயின்களில் யாரைத் திருமணம் செய்வார்? ஒரு ஹீரோயினைத் திருமணம் செய்கிறார் என்றால் இன்னொரு ஹீரோயின் என்ன ஆகிறார்?

“கண்ணகி, (நான்தான்), இதுதான் கதை. எனக்கு அறுபது ஸீன் வேணும். கூடவே கவுண்டமணி செந்தில் காம்பினேஷன்ல காமெடி ட்ராக் இருக்குது. அதுக்கும் ஏதாவது முடிஞ்சா ஸீன்ஸ் யோசி. வாழப்பழ ஜோக் மாதிரி புதுசா யோசி!” என்றார்.

அவரோடு ஒரு மணி நேரம் டீக்கடையில் கதை கேட்டேன். நடிகர் ராமராஜனுக்கு கதை தைப்பதற்கும், அவருக்கு கலர் சட்டை எழுதுவதற்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை என்பது புரிந்தது!

ஆனாலும் இயக்குநருக்கு நம்பிக்கை இருந்தது. கதை பழையது என்றாலும் ஒரு எழுத்தாளன் ஏதாவது புதுமையான காட்சிகளைக் கொடுப்பான் என்று. கதை உறுதியான பிறகு அதை ஒன்றும் செய்ய முடியாது. திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கலாம். கதாபாத்திரங்களின் அறிமுகம், காதல், பாசம், சோகம், பிரச்சனைகள், முடிச்சு, சென்டிமென்ட், காமெடி, காமெடி, சண்டைக்கான சூழல், பாடலுக்கான சூழல், இழுத்து உட்கார வைக்கும் முதல் காட்சி, எதிர்ப்பார்ப்பைத் தூண்டும் இடைவேளை, எழுந்து கைகளைத் தட்ட வைக்கும் க்ளைமாக்ஸ்! இத்தனை சங்கதிகளும் உருவாகும் களம்! கதை விவாதம்!

– அடுத்தடுத்த ஸிட்டிங்கில்

Author Image

நாராயணி கண்ணகி

ஸீரோ டிகிரி நாவல் விருதாளர். வாதி, அலர், தப்பு ஆகிய நாவல்களின் ஆசிரியர். திரைக்கதை உருவாக்கத்தில் பங்கெடுப்பாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
ட்ரெண்டு கொட்டாய் 13

ட்ரெண்டு கொட்டாய் 13

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026
காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

July 2, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?