The Talkie
Thursday, July 2, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள்

காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

The Talkie by The Talkie
July 2, 2026
in கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள்
A A
0
காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ஆதி தாமிரா

ஏதோ ஒரு சேனலில் ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்க யாருமில்லாவிட்டாலும், அதைக் கேட்க நானும் என் மனைவியும் இருந்தோம்.

“ஆம்ப்ளேங்கனா ஸும்மா நெஞ்ச நிமித்திகிட்டு, கையை வீசிகிட்டு கம்பீரமா நடக்கணும். பொம்ப்ளேங்கன்னா இப்டி தலையை குனிஞ்சிகிட்டு, அடக்கமா இருக்கணும், வர்ட்டா”

என்றொரு தத்துவத்தை விஜயசாந்தியைப் பார்த்து உதிர்த்துவிட்டு ரஜினிகாந்த் நகர்ந்து செல்கிறார். அது அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த எங்கள் இருவரின் காதுகளிலும் விழுந்தது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அது வேறு யாரோவாக இருந்திருந்தால், அந்த வசனங்கள் எங்கள் காதுகளில் விழாமல் போயிருக்கலாம். விழுந்திருந்தாலுமே அது எங்கள் சிந்தனைக்கு எட்டாமல் போயிருக்கும். ஒரு வசீகரமான ஸ்டார் பேசுவதால்தான் அதற்கு அந்த முக்கியத்துவம். நம்மையறியாமலேயே நமக்குள் கொண்டு சேர்க்கப்படுகிறது. அதனால்தான் அந்தக் காலை அவசரத்தில் பீரோவை நோண்டிக்கொண்டிருக்கும் என் மனைவியிடமும், போனில் ஈபி பில் கட்டிக் கொண்டிருக்கும் என்னிடமும், எங்களை அறியாமலேயே வந்தடைந்துவிட்டது. அதனால்தான் அந்தப் பார்வை. என் மனைவியின் முகத்தில் ஒரு கேலிச்சிரிப்பு இருந்ததாய்க் கூட தோன்றியது எனக்கு.

இத்தனைக்கும் அந்தப் படத்தில் விஜயசாந்தியின் கதாபாத்திரம், தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று வருந்திய தன் தகப்பனே வெட்கப்படும்படியாக, நன்கு படித்து, தான் நிர்வகிக்கும் நிறுவனத்தை இந்தியாவிலேயே சிறந்த நிறுவனமாக வளர்த்தெடுத்தவர். ஐயாயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபர். அது மட்டுமல்ல, அவரது வீட்டில் சமையல் பணியாளராக இருக்கும் மனோரமாவை தன் சொந்த அம்மாவாகவே மதித்து அன்பு செலுத்துகிற அழகான கதாபாத்திரம்! அவரைப் பார்த்துதான் இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறார் ரஜினிகாந்த். சொன்னது போலவே, பிறகு அவரையே மணமுடித்து, திருத்தி, எம்டி பணியை குஷ்பூவிடம் ஒப்படைக்கவும் வைத்துவிட்டு, வேலைக்குப்போகும் புருசனுக்கு காலையில் சாப்பாடு கட்டிக்கொடுத்து, கொண்டையில் பூத்துவாலை துண்டு சுற்றியபடி, டாட்டா காண்பிக்கும்படியும் செய்துவிடுவார். இந்தப் படம் அப்போது நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. பேருந்தில் செல்கையில் தியேட்டர் வாசலில் ஒட்டப்பட்டிருந்த 150ஆவது நாள் போஸ்டர் இன்னும் எனது நினைவிலேயே இருக்கிறது.

இப்படிக் கதைகளை இதற்குப் பிறகும் ரஜினிகாந்த் முயற்சி செய்துகொண்டுதான் இருந்தார். அவர் மட்டுமல்ல, 80, 90களில் கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் அனைவருமே, இதே கதையமைப்பில் படங்கள் பண்ணிக்கொண்டுதான் இருந்தார்கள். நன்கு படித்த, வேலைக்குப் போகிற, மாடர்ன் பெண்களை கல்யாணம் செய்து கொண்டு, அவர்களைத் திருத்தி சமையல் கட்டுக்குள் அனுப்புவதையே வாழ்க்கையின் லட்சியமாகக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

சகலகலா வல்லவன் படத்தில், தன் தங்கையை வன்புணர்வு செய்த குற்றவாளியிடமே போய், அவன் காலில் விழுந்து அவளைத் திருமணம் செய்துகொள்ளும்படி கமல்ஹாசன் கெஞ்சுவார். அதற்கு அவன் மறுத்து அவரை அவமானப்படுத்தி துரத்தி விட்டுவிடுவான். அந்த படம் வெளியான ஆண்டு 1982. ஏறத்தாழ அதே சமயத்தில்தான் தமிழ்நாட்டில் ’தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (TNCDW)’ தொடங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் மீது திணிக்கப்படும் போலி கற்பிதங்களிலிருந்து அவர்களை மீட்டு, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தி, பெண்களுக்கான பொருளாதார விடுதலையைச் சாத்தியப்படுத்தும் அடிப்படை நோக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. இந்தியாவில் சட்டத்திருத்தங்களை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க வழக்குகளில் ஒன்று மகாராஷ்ட்ராவில் நடந்த ‘மதுரா பாலியல் வன்கொடுமை வழக்கு (Mathura Rape Case)’! இவ்வழக்கில் 1979ல், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்துடனேயே (Consensual) குற்றம் நடந்தது என்று சொல்லி, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கொடுமையான தீர்ப்பால், இந்தியாவெங்கும் பெண்ணுணர்வாளர்கள் கொதித்தெழுந்து பாலியல் குற்றங்களுக்கான சட்டங்களே அடுத்த சில ஆண்டுகளில் மாற்றியமைக்கப்பட்டன.

ஆனால், திரையிலோ கமல்ஹாசன், தங்கச்சியை வன்புணர்வு செய்தவனையே அவளுக்குக் கல்யாணம் செய்துவைத்து, அவளது கற்பைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருந்தார். அதிலும், அதற்காக அவர் கையிலெடுக்கும் வழிமுறைகளெல்லாம் இன்னும் காமெடியாக இருக்கும். மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு வந்து, இழுத்து இழுத்து ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டு அண்ணனும், தங்கையும் வருவார்கள். வில்லனும் வில்லனின் தங்கையும் அந்த டிராப்பில் மயங்கி விழுந்துவிடுவார்களாம். வில்லன் விழுந்தாலும் பரவாயில்லை. அவர் தங்கை என்ன செய்தார்? படித்த, மாடர்ன் பெண்ணாக சுடிதார் போட்டுக்கொண்டு கார் ஓட்டிக்கொண்டிருந்த அவரை ஏமாற்றி, பின்னர் திருத்தி, சுங்குடிச்சேலை கட்டிக் கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்துத்தான், தங்கைக்கு நேர்ந்த அநீதிக்குப் பழி தீர்ப்பார் ஹீரோ. பிரமாதம்!

இப்படி ஏராளமான தமிழ்ப் படங்கள், பெண் விடுதலை, கல்வியின் முக்கியத்துவம், வர்க்கப் போராட்டம் இவற்றையெல்லாம் பற்றிச் சிறிதும் முற்போக்காகச் சிந்திக்காத படங்கள். பதிலாக சாதிப் பெருமிதம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றைத் தூக்கிப்பிடித்த படங்கள் ஏராளம். வைதேகி காத்திருந்தாள், சின்னக் கவுண்டர், நாட்டாமை, எஜமான் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்! நான்கு நல்ல படம் வருகையில் இப்படி ஒன்று வருவது இயல்புதான் என்று கொள்ளவும் வழியில்லை. இவையெல்லாம் தமிழ்நாடே பார்த்துக் கொண்டாடிய, பெருவெற்றி பெற்ற வெள்ளிவிழாப் படங்கள் என்பதுதான் குறிப்பிடத்தகுந்தது! இப்போது பார்த்தால், இவை நமக்கு சிரிப்பை ஏற்படுத்துகின்றன, எரிச்சலை உண்டாக்குகின்றன, தர்மசங்கடப் படுத்துகின்றன.

இந்தப் படங்களெல்லாம் வெளியாவதற்கு முன்பாகவே பல தசாப்தங்களாக முற்போக்குச் சிந்தனைகள் தமிழில் பேசப்பட்டிருக்கின்றன. 70களில் அவள் ஒரு தொடர்கதை, அவள் அப்படித்தான் போன்ற பல படங்கள் வந்திருக்கின்றன. அதுவும் அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதா ஒரு வேலைக்குச் சென்று கஷ்டத்திலிருக்கும் குடும்பத்தைக் காப்பாற்றுவார், அவ்வளவுதான். அதற்கே, அவர் பெரிய செக்கிழுத்த செம்மலைப்போலக் காட்சிப் படுத்தப் படுத்தப்பட்டிருப்பார். அதிலும் வேலை என்றால் சாதாரணமானதா… தொப்புள் தெரியச் சேலை, கையில்லாத ஜாக்கெட், காதுவரை கண்ணோவியம், மார்பகங்களை வெறிச்சிடும் ஆடவர்கள், கவர்ச்சியாகப் பேசி கார்களில் லிஃப்ட் கேட்டு வேலைக்கும் போகும் பெண்கள் என்றெல்லாம் காட்சிகள் இருக்கும். அதையெல்லாம் பார்த்தால் அன்றைய எந்தப் பெண்ணுக்குத்தான் தானும் படித்து, வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்க முடியும்? இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். அது ஆண்களைப் போல சாதாரண ஒரு பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. அவள் ஒரு தொடர்கதையின் ஆரம்பக் காட்சிகளையெல்லாம் இன்றைய பெண்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?

அதற்கும் முன்பாகப் போனால், 1940களிலேயே சபாபதி, நாம் இருவர் போன்ற படங்களில் மிக முற்போக்கான பெண்கள் கதாபாத்திரங்களைப் பார்த்திருக்கிறோம். சபாபதி (1941) ஒரு முழு நகைச்சுவைப் படமென்றாலும், அதில் பெண்கள் படித்தவர்கள், தோழியரோடு வெளியே தெருவுக்குத் தனியே சுதந்திரமாகப் போய் வருபவர்கள், கார் ஓட்டுவார்கள், கணவரிடம் இணையாகப் பேசிப் பழகுவார்கள், கணவரைக் கேலி செய்வார்கள், பள்ளித் தேர்வில் தோல்வியடையும் கணவர்களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து வெற்றிபெறச் செய்விப்பார்கள் என்றெல்லாம் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. அதையெல்லாம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லாமல், அப்படியே பழைமைச் சாக்கடையில் ஊறிக்கிடக்கும் சுகத்தைத்தான் தமிழ் சினிமா மிகவும் விரும்பியிருக்கிறது. அதைத்தான் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் வெளியாகி சக்கைப்போடு போட்ட தமிழ்ப்படங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

இப்படியான படங்களையெல்லாம் கூட்டுச்சேர்த்து சபையொன்றை உருவாக்கி, அதன் தலைமைப் பீடத்தில் ஒன்றை உட்கார்த்தி வைத்து அழகு பார்க்க வேண்டுமானால், அப்படியொரு படம் இருக்கிறது. அதுதான் சின்னத்தம்பி (1991)! இன்றிலிருந்து 35 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியாகியிருக்கிறது. காட்சிக்குக் காட்சி பிற்போக்குத்தனங்கள் நிறைந்த இப்படியான ஒரு படத்தைச் சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்காது.

முதல் காட்சியிலேயே அபத்தம் தொடங்கிவிடும். ஜமீன்தார் வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஒரு வேலைக்காரன் அந்தச் செய்தியை கூக்குரலிட்டு ஊருக்கே அறிவிப்பான். ஊர் மக்களெல்லாம் வந்து வாசலில் ஒன்றுகூடுவார்கள். குழந்தையை வாழ்த்த வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தால், வாசலில் வைக்கப்பட்டிருக்கும் இலவச வேட்டி சேலையை வாங்கிக்கொண்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று பார்த்தால், குழந்தையின் அப்பா, அம்மா, உறவினர், மூத்தோர் என யாருமே அங்கே இருக்கமாட்டார்கள். அந்தக் குழந்தையின் அண்ணன்களான மூன்று சிறுவர்கள்தான் இருப்பார்கள். அவர்களும் தங்கையின் ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்தச் சோதிடன் அவர்களுக்கும் மேல்! உங்கள் தங்கை, பின்னாளில் உங்கள் வாக்கை மீறித்தான் கல்யாணம் செய்துகொள்வாள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான். அதிர்ச்சியடைந்த அந்த முட்டாள்கள், தங்கையை இனி எந்த ஆண்களும் பார்க்கவே கூடாது, பள்ளிக்கூடமும் வீட்டுக்குள்தான் என்று முடிவு செய்து விடுவார்கள். பின்னாளில் அவளைக் கோவிலுக்குக் கூட்டிப்போனால்கூட ஊருக்குள் தண்டோரா போடுவார்களாம். ஊரிலிருக்கும் ஆண்களனைவரும் வீட்டுக்குள் போய் ஒளிந்துகொள்ள வேண்டுமாம்! தங்கையின் மீதுதான் அந்த அண்ணன்களுக்கு எத்தனை பாசம், நம்பிக்கை, நல்லெண்ணம்!

இன்னொரு பக்கம் ஹீரோ பிரபு. தொடக்கக் காட்சியில், வில்லன்களின் தேங்காய்ச் சிதறல் ஒன்று நெற்றியில் பட்டு மனோரமா, ‘அம்மா’ என்றலற, பிரபு வில்லன்களைப் போட்டு துவைத்து எடுத்துவிட்டு, ‘அடிபட்டவுடன் அம்மா என்று நீயே உன் அம்மாவைக் கூப்பிட்டாயே அம்மா, என் அம்மா உனக்கு அடிபட்டால் எனக்கு ரத்தம் கொதிக்காதா அம்மா’ என்று வியக்கியானம் வேறு கொடுப்பார். அவர்தான் மனநலம் சற்றே குன்றியவராம். ஆனால், கவிஞர் வாலியின் திறனோடு கூடிய இலக்கியத் தரமான பாடல்களையெல்லாம் இட்டுக்கட்டிப் பாடுவாராம். அடுத்தக் காட்சியிலேயே பிரபுவுக்கு, ராதாரவி அண்ட் பிரதர்ஸ் வீட்டுக்குள்ளேயே வேலை போட்டுக்கொடுக்க, அந்த மகிழ்ச்சியில் அவர் கோவிலுக்குப் போய்விட்டு வந்து, குஷ்பூவுக்கே நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டுவிடுவார். அவரை விடுங்கள், மனநலமில்லாதவர். குங்குமம் எப்பேர்ப்பட்ட உன்னதமான பொருள்; அதை ஓர் ஆடவன், ஒரு பெண்ணில் நெற்றியில் வைக்கலாமா? கதை முடிந்தது, குஷ்பூவுக்குக் காதல் வந்துவிட்டது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல ஒரு கிளைமாக்ஸ் காட்சி. பிரபு-குஷ்பூ செய்த காதல் பொறுக்கமுடியாத அண்ணன்கள் வெள்ளைச்சேலையில் இருக்கும் கைம்பெண்ணான மனோரமாவை ஒரு தூணில் கட்டிவைத்திருப்பார்கள். பெண்ணென்றும் பாராமல் வெளுக்கப்போகிறார்கள் போல என்று நாம் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தால், நல்லவேளையாக அப்படியொன்றும் நடக்கவில்லை. மாறாக அவரது வெள்ளைச்சேலையில், குங்குமத்தையும், மஞ்சளையும் கரைத்து ஊற்றி, நெற்றியில் பொட்டு வைத்து, தலையிலும் பூச்சூடி விடுவார்கள். அதாவது அடிப்பதை விடவும் கொடுமையான தண்டனையைத் தருகிறார்களாம். ஊர்ப்பெண்களெல்லாம் ‘அச்சச்சோ’ என்று புலம்பி நிற்க, அருகிலிருந்த அய்யனார் சாமியே ஆடிப்போய்விடும் அந்தக் காட்சிக்கு! என்னே ஓர் உயரிய சிந்தனை!

இவ்வாறே நம் சினிமாவில் காதல் காட்சிகள் காலத்தால் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. காதலுக்கும், ஸ்டாக்கிங்குக்குமான வரையறைகள் திருத்தப்பட்டுள்ளன. நகைச்சுவை திருத்தப்பட்டுள்ளது. உடல் தோற்றத்தை, நிறத்தை, மாற்றுத்திறனை வைத்து கேலி செய்வது குறைந்திருக்கிறது. பெண்களை, திருநங்கையரை அவமதிப்பது மாறியிருக்கிறது. சமூகமாக சற்றே முற்போக்காகியிருக்கிறோம்.

நல்ல கதைகளுக்கு எப்போதுமே வயதாவதில்லை. மாறாக சிந்தனையால் வயதாகிப்போன பழங்கதைகளுக்கும், அவற்றைச் சொல்லும் விதங்களுக்கும்தான் வயதாகிவிடுகின்றன. சினிமா என்பது வெறும் கதை சொல்லும் ஊடகம் மட்டுமே அல்ல. அது சமகாலத்து மக்களின் சிந்தனைகளையும், பழக்கவழக்கங்களையும் சேர்த்துச் சேமித்து வைக்கும் ஒரு டைம் கேப்சூலாகவும் (Time Capsule) இருக்கிறது. ஆனால், அவையெல்லாம் காலத்தால் எளிதாக மாற்றியமைக்கப்படுபவை. அதனால்தான் இன்று பல படங்களும் முழுமையாகவோ பகுதிக் காட்சிகளாகவோ நம்முன் அபத்தமாகி நிற்கின்றன.

காட்சியமைப்புகளால், கதை சொல்லும் முறைமைகளால், ரசனைக் குறைபாடுகளால், தொழில்நுட்பப் போதாமையால் காலத்துக்கு ஒவ்வாமல் இன்று வெளுத்துப் போயிருக்கும் படங்களை நாம் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், பிற்போக்குத்தனங்களால், சிந்தனைத் தளைகளைக் கொண்டிருந்த காரணத்தால், காலத்தால் Fadeout செய்யப்பட்டிருக்கும் படங்கள் நிச்சயமாய் நம் கேலிக்குத்தான் ஆளாகும். அதில் வியப்பேதுமில்லை! இந்த சினிமாக்கள் கட்டமைத்த பிம்பங்களை மீறி, நிஜ வாழ்வில் பெண்கள் பொருளாதார சுதந்திரத்தையும் சட்ட ரீதியான பாதுகாப்பையும் சிந்தனை வளர்ச்சியையும் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் இந்தக் காட்சிப்பிழைகள்தான் நகைப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இன்னும் இப்படியாகவே இது தொடரட்டும். தங்கத்தைப் போல மின்னிய படங்கள், இப்போது பித்தளையாய்க் கருத்துப் போயிருக்கின்றன. காலமெனும் உரைகல் தன் வேலையைச் சரியாகவே செய்திருக்கிறது.

Author Image

ஆதி தாமிரா

எழுத்தாளர், சினிமா ஆர்வலர், ‘ஆவலாதி’, ‘ஒரு சர்வீஸ் எஞ்சினியரின் வாக்குமூலம்’ ஆகிய நாவல்கள் வெளியாகியிருக்கின்றன.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026
காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

July 2, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?