The Talkie
Saturday, August 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home கட்டுரைகள் உலகத் திரைப்படங்கள்

The Odyssey – கூடடையும் கலை

The Talkie by The Talkie
August 1, 2026
in உலகத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
The Odyssey – கூடடையும் கலை
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon சி.சரவணகார்த்திகேயன்

என் பார்வையில் மஹாபாரதத்துடன் ஒப்பிடுகையில் ராமாயணம் ஒரு படி சுவாரஸ்யம் குறைந்த கதை. இங்கே அவற்றின் கவித்துவம், தத்துவம் உள்ளிட்ட ஆழ விஷயங்களைப் பேசவில்லை. மேலோட்டமாக கதை என்கிற அளவில் மட்டும் ஒப்பிட்டுச் சொல்கிறேன்.

காரணம் மஹாபாரதம் அடிப்படையில் அடர் குற்றப் புனைவு, எனவே இயல்பிலேயே ஏராளமான சதிகள், நிறையக் கிளைக் கதைகள், உடன் பல சிடுக்குகள். ராமாயணம் ஒப்பீட்டளவில் நேரடியான கதை. குற்றத்தை ஒட்டியே அதன் மையம் என்றாலும் அதில் பாவங்கள் நிரம்பியிருக்கவில்லை. இன்னொன்று ராமாயணத்தில் கெட்டவர் குறைவு, நல்லவருக்கும் கெட்டவருக்கும் இடையேயான குணமுடையோரும் அரிது. மஹாபாரதம் நேர் மாறானது. சுவாரஸ்ய வித்தியாசத்துக்கு இதெல்லாம் காரணங்களாக இருக்கலாம்.

போலவே, கிரேக்கக் காவியங்களான‌ ஹோமரின் இலியட் மற்றும் ஒடிஸி இவ்விரண்டை எடுத்தாலும் இதே வித்தியாசம் இருப்பதை உணர முடியும் – ஒடிஸி இலியட்டை விட ஒரு படி சுவாரஸ்யம் குன்றியதே. இரண்டுமே ட்ராய் யுத்தம் என்ற ஒரே கதையின் இரண்டு வெவ்வேறு பகுதிகளையே பேசுகிறது. ஆனால் இலியட் அந்த‌ யுத்தத்தைப் பேசுகிறது; ஒடிஸியஸ் யுத்தத்துக்குப் பிறகான வீடு திரும்பலைப் பேசுகிறது. எனவே இயல்பாகவே இலியட்டின் கை சுவாரஸ்யத்தில் ஓங்கி விடுகிறது. அப்படி இயல்பிலேயே ஊனமுடைய‌ ஒரு காவியத்தை க்றிஸ்டோஃபர் நோலன் மாதிரியான அற்புதர் தேர்ந்தெடுக்கும் போது அவர் அதை மெருகேற்றி மேலேற்றுவார் என எதிர்பார்ப்பு உண்டாகத்தான் செய்யும்.

The Odyssey படத்தில் அது நிகழவே இல்லை என்பதே படம் தரும் ஏமாற்றத்தின் மூலம்!

இதற்கு முன்பே ஒடிஸி காவியத்தை நேரடியாகக் குறைந்தது மூன்று படைப்புகளில் எடுத்திருக்கிறார்கள். 1954ல் வந்த Ulysses திரைப்படம், 1997ல் வந்த The Odyssey என்ற குறுந்தொடர், 2024ல் வந்த The Return என்ற படம் (நான் இவற்றில் ஏதும் காணவில்லை). யாவற்றையும் கடந்து உயர்ந்து நிற்கும் படைப்பே நோலனிடம் எதிர்பார்க்கப்பட்டது.

நோலனின் படம் 2017ல் வெளியான எமிலி வில்சன் என்ற பெண்ணின் ஆங்கில ஒடிஸி மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. நோலனின் முந்தைய படமான ஓப்பன்ஹெய்மர் American Prometheus என்ற புத்தகத்தை ஒட்டி எடுக்கப்பட்டது போல். (ஆனால் எமிலி படம் பற்றிய‌ தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். The Odyssey மறுபடியும் ஹோமரின் காவியம் நோக்கி வெகுஜனத் திரளை இழுத்து வருவதற்காக‌ கொண்டாடலாம் என ஒப்புக் கொள்ளும் அவர் ஆனால் இதன் எந்தப் பகுதியையும் தான் எழுதியிருந்தால் வெட்கப்பட்டிருப்பேன் என்று கடுமையாகவே சொல்லியிருக்கிறார்.)

சமீப காலமாகவே நோலன் தன் வழக்கமான மிகுபுனைவுப் படங்களிலிருந்து விலகி வேறு பாணிப் படங்கள் செய்ய ஆரம்பித்திருந்தார். அதாவது தன் சொந்த விஞ்ஞானப் புனைவு, சூப்பர் ஹீரோ கதைகளை எடுக்காது வரலாறு சார்ந்தோ புராணம் சார்ந்தோ படங்கள். Dunkirk (2017), Oppenheimer (2023) வரிசையில் The Odyssey (2026) மூன்றாவது படம்.

ஆனால் முதலிரு படங்களில் இருந்த நோலனின் முத்திரை அவ்வளவாக மூன்றாவதில் இல்லை. The Odyssey படம் மிக அற்புதமாக ஹோமரின் காவியத்தை பிரம்மாண்டமாக‌க் காட்சி ரூபத்தில் புதிய தலைமுறையினருக்குக் கடத்துகிறது என்பதில் ஐயமே இல்லை. அவ்வகையில் இது புவியில் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம்தான்.

ஆனால் அதை மட்டுமே செய்கிறது. அதில் நோலனின் உள்ளீடுகள், பாணி என‌ அதிகம் இல்லை. ஹோமரை முன்னால் தள்ளி விட்டு நோலன் பின்னால் மறைந்து கொள்கிறார். அதனால்தானோ என்னவோ துல்லியமும் நேர்மையுமாக‌ “Written for the screen and directed by” என்று க்றிஸ்டோஃபர் நோலன் பெயரை இறுதி டைட்டில் கார்டில் போடுகிறார்கள்.

இதனால் படம் ஒரு மாதிரி குழந்தைகளுக்கான நேரடிப் புராணக் கதை சொல்லலாக இருக்கிறது. ஒடிஸி காவியத்தின் நேரடிக் கதை தாண்டி உள்மடிப்புகளோ, தத்துவக் கேள்விகளோ அறவே இல்லை. அக்காவியத்தை மிக அழகான காட்சிகளுடன் அறிமுகம் செய்து கொள்ளப் படம் பார்க்கலாம். மற்றபடி, ஆழமோ, ஆச்சரியங்களோ கூட இல்லை. அதனால் படம் பற்றி ஒரு வரி விமர்சனம் கேட்டால் “Good but not great” எனக் கூறலாம்.

திரைக்கதையில் நோலனின் வழக்கமான ஜாலச் சிடுக்குகள் உண்டா? ஓரளவு மட்டும் உண்டு எனலாம். அதற்கு முதலில் கதையை அறிமுகம் செய்து கொள்ளலாம். ஒடிஸியஸ் வீட்டை / நாட்டை நீங்கி இருபது வருடங்கள் கழித்தே மீண்டும் வருகிறான். அதில் முதல் பத்து வருடம் ட்ராய் யுத்தம். அடுத்த மூன்று வருடம் நாடு திரும்பும் முயற்சியில் நிகழும் அமானுஷ்யக் கடற்பயண அலைக்கழிப்புகள், இறுதி ஏழு வருடங்கள் கேலிப்ஸோ என்ற தேவகன்னிகையின் ஆசையினால் ஒரு தீவில் கைதியாக. படம் அவன் தீவில் கைதியாக இருக்கும் இறுதி ஆண்டுகளில் ஆரம்பிக்கிறது. அதாவது கிட்டத்தட்ட உச்சக்காட்சிக்கு அருகே. வெவ்வேறு ஆட்களின் வழி முன்கதை துண்டு துண்டாக முன்பின்னாக மாற்றி மாற்றிச் சொல்லப்படுகிறது. அது இயல்பாகவே ஒரு நான்-லீனியர் தன்மையை அளித்து விடுகிறது. அப்படி ஒரு குறைந்தபட்ச அளவில் மட்டும் காலத்தைக் கலைத்துப் போடும் நோலனின் திரைக்கதை விளையாட்டு இதில் வருகிறது. ஆனால் இதெல்லாம் இன்றைய இந்திய மசாலா சினிமாக்களில் கூட பின்பற்றப்படும் உத்திதான் என்பதை உணரலாம்.

The Odyssey படம் இரு ட்ராக்குகளில் பயணிக்கிறது. ஒன்று ஊர் திரும்பும் ஒடிஸியஸின் கதை, மற்றது கிரேக்கத்தில் அவன் வருகையை எதிர்நோக்கி காத்திருப்போரின் கதை (பெரும்பாலும் இதாகாவிலும் கொஞ்சம் ஸ்பார்டாவிலும் நடப்பது). இதில் ஒடிஸியஸின் கதை வெறுமனே அவனது படை வழியில் காணும் தீவுகளில் அமானுஷ்ய ஆட்களிடம் சிக்கிக் கொள்வதும் அதிலிருந்து தப்பிப்பதுமாக நகர்கிறது. அவற்றில் பெரும்பான்மை என்னை ஈர்க்கவில்லை. கிரேக்கக் கதையில்தான் காவியத்தின் சாரமும் உயிர்ப்பும் நிலவுகிறதெனச் சொல்வேன். ஒடிஸியஸின் மனைவி பெனலோப்பி, அவனது மகன் டெலமக்கஸ், ஒடிஸியஸின் விசுவாசியான பார்வையற்ற பன்றி மேய்ப்பன் யூமேயஸ், ஒடிஸியஸ் இல்லாததால் பெனலோப்பியை மணம் முடிப்பதன் மூலம் இதாகாவின் அரியணையை ஏறலாம் எனத் திட்டமிட்டு அங்கே பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேலான முறை மாப்பிள்ளைகள் (அதில் ஆன்ட்டினுவஸ் முக்கியமானவன்).

நோலனின் முந்தைய படமான‌ Oppenheimer-க்கும் The Odyssey-க்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்பதால் இப்படம் அதன் தர்க்கத் தொடர்ச்சி என்கிற பார்வை முன்வைக்கப்படுகிறது.

இரண்டிலுமே நாயகன் ஓர் அழிவுச் செயல்பாட்டிற்கு காரணகர்த்தாவாக இருக்கிறான். ஓப்பன்ஹெய்மரில் அணுகுண்டுத் தயாரிப்பு; தி ஒடிஸியில் ட்ராய் போரின் மரக்குதிரை யோசனை. இரண்டுமே போரில் பெரும் அழிவை உண்டாக்குகிறது. சொல்லப் போனால் அந்த ஒரு நிகழ்வு மட்டுமில்லாது அது உலகிற்கான அழிவைத் தொடக்கி வைக்கிறது. அதன் நிமித்தம் அந்த நாயகர்கள் குற்றவுணர்வு கொள்கிறார்கள். ஆனால் வித்தியாசம் உண்டு – ஓப்பன்ஹெய்மர் நிஜமாகவே தன் கண்டுபிடிப்பின் நிமித்தம் குற்றவுணர்வு கொண்டார். ஒடிஸியஸ் தன் போர்ப் பங்களிப்பிற்காகக் குற்றவுணர்வு கொண்டதாக ஹோமர் முதல் எங்குமே குறிப்பில்லை என்பதே என் புரிதல். எனவே அது நோலனின் பார்வைதான். அதாவது சமகால அறங்களை ஒரு பழங்காலக் கதையின் மீது ஏற்றிக் கூறுவது. இது படைப்பாளியின் சுதந்திரம்தான். (நான் எழுதிய ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு நாவலின் பாத்திரங்கள் சமத்துவம், சமூக நீதி எல்லாம் பேசியது அந்த வகையில்தான்.)

ஆனால் அசோகர் கலிங்கப் போரின் இறுதியில் மனம் மாறியதை ஒத்த ஒடிஸியஸின் மன மாற்றம் ஹோமரின் காவியத்துக்குப் பொருந்தி வரவில்லை. முக்கியக் காரணம் படத்தில் ட்ராய் போருக்குப் பின் ஊர் திரும்பும் பத்தாண்டுப் பயணத்தில் ஒடிஸியஸ் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபடவே செய்கிறான் (அது தற்காப்பிற்காக என்றாலும் கூட). இன்னும் சொன்னால் பாலிஃபீமஸிடமிருந்து தப்பிய பிறகும் அவனது கண்களில் அம்பெய்கிறான் ஒடிஸியஸ். அது அவனது குற்றவுணர்வோடு பொருந்தவே இல்லை.

அதனால் இறுதியில் ஜனநாயகன் பாணியில் “One last time” என்று சொல்லி இதாகாவுக்கு வந்து விட்டு சுயதண்டனையாக‌ மனைவியோடு தேசாந்திரம் போவதும் ஒட்ட‌வில்லை. அது ஏதோ மீண்டும் ஒரு தேனிலவுக்குக் கிளம்பிப் போகும் எண்ணத்தையே அளித்தது.

ஹோமரின் ஒடிஸிக்கும் இந்து அல்லது இந்திய இதிகாசங்களுக்குமான ஒற்றுமைக‌ள் முன்பே பரவலாகப் பேசப்பட்டதுதான். The Odyssey பார்ப்பவர்களுக்கு ராமாயணத்துடன் இரண்டு முக்கிய ஒற்றுமை தென்படும்: ஒன்று நெடுங்காலம் கணவனைப் பிரிந்தாலும் மனைவியின் மாறாத விசுவாசம், நம்பிக்கை – பெனலோப்பி பாத்திரம் அவ்வகையில் சீதைதான். இரண்டு சரியான‌ கணவனைக் கண்டறிய பிரத்யேக‌ வில்லில் நாணேற்றி அம்பு எய்யும் போட்டி – ஒடிஸியஸ் பாத்திரம் அந்த அடிப்படையில் ராமனை ஒத்தது.

ஓப்பன்ஹெய்மரில் பகவத் கீதையைக் கொண்டு வந்தார், இதில் ராமாயணத்தைக் கொண்டு வந்திருக்கிறார் நோலன் என்பதாக சங்கிகள் புளகாங்கிதமடையக்கூடும்.

எனக்குத் தனிப்பட்டு பெனலோப்பியின் பாத்திரம் மிகப் பிடித்தது. இருபது ஆண்டுகள் சபலமுறாமல் கணவனின் வருகைக்காகக் காத்திருப்பவள். இத்தனைக்கும் ஒடிஸியஸே போருக்குப் போகும் போது தான் திரும்பாவிடில் அவள் நாட்டின் நன்மை நிமித்தம் வேறு மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிப் போயிருக்கிறான். ஆனாலும் அவள் தன்னை மணக்க முற்படும் நூறு ஆண்களையும் ஒதுக்கி விட்டு தனித்தே வாழ்கிறாள்.

அதில் அவளது பாத்திர வார்ப்பு நம் கண்ணகி, சீதை இரண்டையுமே நினைவூட்டுகிறது. “சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் / நிறைகாக்கும் காப்பே தலை” என்கிற‌ திருக்குறளே உயிர் பெற்று திரையில் இறங்கி வந்தது போல் கிரேக்கக் கற்புக்கரசி எனச் சொல்லத்தக்க ஆளுமையாக பார்வையாளர்கள் மனதில் நிறைகிறாள் பெனலோப்பி.

மூன்று முக்கியக் காட்சிகள் அவளது காத்திருப்பின் உன்னதத்தை உணர்த்துகின்றன. ஒன்று மகன் டெலமக்கஸ் அவளை வேறு மண‌ம் செய்து கொள்ளக் கேட்கும் போதான உரையாடல், அடுத்து ஆன்ட்டினுவஸ் தன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டு நிகழ்த்தும் உரையாடல், இறுதியில் பிச்சைக்காரன் வேடத்தில் ஒடிஸியஸ் திரும்பி வந்து ஒடிஸியஸைப் பார்த்திருப்பதாகச் சொல்லி அவளுடன் மேற்கொள்ளும் உரையாடல்.

ஒன்றில் ஒடிஸியஸ் வந்தாக வேண்டும் என்ற பெனலோப்பியின் உறுதியும், அடுத்ததில் அவன் வராவிட்டால் என்ன செய்வது என்கிற தடுமாற்றமும், மூன்றாவதில் அவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையும் தெரிகிறது. தன்னை மணக்க அழுத்தம் தருபவர்களைத் தாமதப்படுத்த தன் வயதான‌ மாமனார் இறந்தால் உடலைச் சுற்றப் பயன்படுத்த உடை நெய்யும் வேலையைச் செய்து முடித்து வருவதாகச் சொல்லி ஒவ்வொரு இரவும் தான் நெய்ததைத் தானே பிரித்து விடுகிறாள். இறுதியில் ஒடிஸியஸ் திரும்பி விட்டான் என்ற சந்தேகத்தில் அவனால் மட்டுமே செய்ய முடிந்த அம்பெய்தல் போட்டி அறிவிக்கிறாள்.

அதாவது அவளது நடவடிக்கை எல்லாமே ஒடிஸியஸை மட்டும் தன்னுள் அனுமதிப்பதை நோக்கியே இருக்கிறது. அதற்காக அடங்கலும் சீறலுமாக‌ சிந்தித்துச் செயல்படுகிறாள்.

பள்ளியில் ஆறாம் வகுப்பிலோ என்னவோ எனக்கு ஒடிஸியஸ் அறிமுகம் (தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன்). ஒற்றைக் கண் ராட்சசனிடம் (பாலிஃபீமஸ்) தன்னை “Nobody” என்று அறிமுகப்படுத்திக் கொள்வதன் மூலம் அவனைத் தாக்கி விட்டுத் தப்பிப்பான். பிறகு ஒடிஸியஸ் யோசனைப்படி பெரிய மரக் குதிரை என்ற யுத்தகள உத்தி மூலம் ட்ராய் நகருக்குள் கிரேக்கப் படைகள் நுழையும் பகுதியும் பள்ளியில் பாடமாக இருந்தது. அந்த இரு காட்சிகளுமே இந்தப் படத்தில் இருக்கின்றன‌. சமயோஜிதம்தான் ஒடிஸியஸின் அடையாளம். அதோடு தன்முனைப்பும் இதில் அவன் அடையாளமாக வெளிப்படுகிறது. ஆனால் இதில் ஒடிஸியஸ் பாத்திரம் சற்று டொங்கலாகவே இருந்தது எனச் சொல்வேன்.

ஏழு வருடங்கள் மாயத் தாமரையினால் தன்பழைய நினைவுகளை இழந்து தேவநங்கை கேலிப்ஸோவுடன் தீவில் தனித்து மகிழ்ச்சியாக வாழ்ந்த போதும் தான் வீட்டில் மனைவி, மக்கள் என யாரையோ விட்டு வந்திருக்கிறோமோ என்ற சந்தேகம் அவனுக்கு விலகவே இல்லை. இறுதியில் அவன் அத்தீவிலிருந்து புறப்பட‌ எத்தனிக்கையில் கேலிப்ஸோ கேட்கிறாள்: “இத்தனை மகிழ்ச்சியான வாழ்வை விடுத்து ஏன் வேறொன்றைத் தேடிப் போக நினைக்கிறாய்?” அதற்கு அவன் “எனில் இது நிஜமாகவே மகிழ்ச்சியான வாழ்வு இல்லை என்று அர்த்தம்”. அது ஒன்றே நம் மனதில் நிற்கும் ஒடிஸியஸின் ஒரே பார்வை.

அவ்வப்போது தோன்றி ஒடிஸியஸுக்கு நட்பார்ந்த ஆலோசனை அருளும் கிரேக்கக் கடவுள் அத்தீனா பாத்திரமும் வலுவானதாகத் தோன்றவில்லை. ஹெலன் பாத்திரம் படத்தில் காட்டப்பட்டது பற்றி இரண்டு உறுத்தல்கள் எனக்குண்டு. ஹெலன் அன்றைய தேதியில் உலகத்தின் சிறந்த பேரழகி எனச் சொல்லப்படுபவள். கடத்தப்பட்ட அவளை மீட்கும் நிமித்தம்தான் ட்ராய் யுத்தம் நடக்கிறது. அப்படிப்பட்ட‌ ஹெலனின் சகோதரி க்ளைடெம்நெஸ்ட்ரா அவளைப் போல அச்சு அசலாக இருப்பதாக‌க் காட்டப்படுகிறது. அப்புறம் ஹெலனின் அழகுக்கு என்ன பிரத்யேகத்தன்மை இருக்கிறது! இது முதலாம் உறுத்தல். அடுத்தது ஹெலன் பாத்திரத்துக்கு கருப்பின நடிகையைப் போட்டிருக்கிறார் நோலன். அழகென்பது நிறம் சார்ந்தது அல்ல என்ற நவீன உலகின் கருத்தாக்கத்தை அடிக்கோடிடும் அவரது முயற்சி எனப் புரிந்து கொள்ள முடிகிறது. அதில் தவறில்லை. ஆனால் கூடுதல் அழகுடைய கருப்பின நடிகை ஒருவரைப் போட்டிருக்கலாம். படத்தில் அவளைக் காட்டி “The face that launched a thousand ships” என்று சொல்வது எடுபடவில்லை.

பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்த மூவரும் ஒப்பன்ஹெய்மருக்காக‌ ஆஸ்கர் பெற்றவர்கள். அவை மூன்றும் இதில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. நடிப்பில் எனக்கு பெனலோப்பியாக நடித்த ஆன்னி ஹேத்தவேதான் பிடித்தது. அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் பாத்திர வார்ப்புக்காக ஆஸ்கர் கிட்டும் வாய்ப்புண்டு.

The Odyssey படத்தை இதற்கெனப் பிரத்யேகமாக‌த் தயாரித்த‌ ஐமேக்ஸ் கேமெராவில் எடுத்திருக்கிறார்கள். பொதுவாகப் படங்களில் சில காட்சிகளை மட்டும் ஐமேக்ஸில் ஒளிப்பதிவு செய்வது வழக்கம். முன்பு நோலன் எடுத்த படங்களில் கூட அப்படித்தான். ஆனால் இந்தப் படத்தை முழுமையாகவே ஐமேக்ஸிலேயே எடுத்திருக்கிறார் நோலன்.

அதுவும் 15 perforation (துளைகள்) கொண்ட horizontal 70mm படச்சுருளைப் பயன்படுத்தி ஒளிப்பதியப்பட்டது. இன்றைய தேதியில் திரைப்படத்துக்கான உச்சபட்ச ஒளிப்பதிவுத் தரம் இதுவே. இதில் ஒளிப்பதியப்பட்ட படம் 1.43:1 aspect ratio-வில் இருக்கும், தரம் 16K முதல் 18K வரை போகும். இப்படி எடுத்த படத்தைப் பார்க்க இதை அப்படியே காட்ட வல்ல தரமான திரையரங்குகள் அவசியம் – இவற்றை 15/70mm IMAX திரையரங்குகள் என அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றில் பார்க்கையில் மேலே முதல் கீழே வரை முழுக்கத் திரை நிரம்பி அசல் immersive experience கிட்டும். உலகில் இத்தகு படச்சுருள் பயன்படுத்தும் IMAX 70mm திரையரங்குகள் சுமார் நாற்பது இருக்கின்றன‌ – எல்லாமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில்; ஒன்று ஆஸ்திரேலியா. இந்தியாவில் அஹமதாபாத் சயின்ஸ் சிட்டியில் IMAX 70mm திரையரங்கு உண்டு. ஆனால் அங்கே கல்வி குறித்தான படங்கள் மட்டுமே திரையிடப்படுகின்றன. இந்தியாவில் The Odyssey படத்தை அதன் அசல் அனுபவத்தில் காணவே முடியாது. ஆறுதலாக 1.90:1 ரேஷியோவில் காணலாம் (நான் அப்படித்தான் கோரமங்களா பிவிஆர் அரங்கில் IMAX XT LASER-ல் பார்த்தேன்).

The Odyssey படம் வெவ்வேறு வகைத் திரையரங்குகளில் எப்படி இருக்கும் என வேறுபாடு உணர அவர்களே வகை செய்திருக்கிறார்கள்: https://www.odysseymovie.com/explore-formats/.

ஐமேக்ஸ் படச்சுருள் ஓட்டும் திரையரங்க ப்ரொஜெக்டர் கருவிகளில் அதிகபட்சமாக‌ 11 மைல் நீளப் படச்சுருளைத்தான் ஓட்ட முடியும். அதாவது அதிகபட்சம் மூன்று மணி நேரப் படம்தான் அதில் காட்ட முடியும். எனவே அதற்குள் படத்தை அடக்க முயன்றிருக்கிறார் நோலன் – The Odyssey படத்தின் இறுதி வடிவம் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் ஓடுகிறது.

பலரும் ஒடிஸியஸ் பிச்சைக்காரனாக ஊர் திரும்பி வில்லில் நாண் பூட்டி பல துளைகள் வழியே சரியாக அம்பெய்யும் காட்சியைச் சிலாகிக்கிறார்கள். அது கருத்தளவில் மயிர் கூச்செரியச் செய்யும் வல்லமை கொண்டதுதான். ஆனால் காட்சிப்பூர்வமாக சாதாரண அளவிலேயே இருந்தது. ராஜமௌலி மாதிரியான ஒருவரின் இன்மையை உணர்த்தியது!

நோலனின் Insomnia, Interstellar, Oppenheimer படங்களில் இருந்த மானுட உணர்வுகளும், Memento, Inception, Dunkirk படங்களில் இருந்த திரைக்கதை நுட்பமும் இதில் கிடையாது. ஆகவே, இதை நோலனின் ஆக பலவீனமான படமாகவே அடையாளப்படுத்த முடிகிறது.

க்றிஸ்டோஃபர் நோலன் ரசிகர்களுக்கு ஏமாற்றமும் சாதாரண ரசிகர்களுக்கு நிறைவும் அளிக்கும் படம் The Odyssey. இதில் ஆச்சரியம் அல்லது முரண் என்னவென்றால் நோலன் படங்களில் இந்த விஷயம் தலைகீழாகத்தான் இதுவரை நடந்திருக்கிறது என்பதுதான்!

மாபெரும் உழைப்பைக் கோரிய The Odyssey படத்துக்குப் பின் மூன்றாண்டுக‌ள் ஓய்வை அறிவித்துள்ளார் க்றிஸ்டோஃபர் நோலன். மீண்டும் வருகையில் அவர் மீண்டு வரட்டும்!துக்குப் பின் மூன்றாண்டுக‌ள் ஓய்வை அறிவித்துள்ளார் க்றிஸ்டோஃபர் நோலன். மீண்டும் வருகையில் அவர் மீண்டு வரட்டும்!

Author Image

சி. சரவணகார்த்திகேயன்

சிறுகதையாசிரியர். நாவலாசிரியர், கட்டுரையாளர், திரைப்பட ஆய்வாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

ஜானகி - நம் வாழ்வின் ஒலித்தடம்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

August 1, 2026
The Odyssey – கூடடையும் கலை

The Odyssey – கூடடையும் கலை

August 1, 2026

ஆதிக்க உணர்வின் உளவியல்

August 1, 2026

இரு கண்களும் பன்னிரு கைகளும்

August 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

August 1, 2026
The Odyssey – கூடடையும் கலை

The Odyssey – கூடடையும் கலை

August 1, 2026

ஆதிக்க உணர்வின் உளவியல்

August 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?