க.சீ சிவகுமார்
கண்டசாலா- இந்தப் பெயரில் பாரம்பரிய நெல் ரகமும் இருக்கிறது. சொல் ரகமும் இருக்கிறது.வட வேங்கடம் தமிழ்கூறு நல்லுலகத்தின் எல்லையாய் இல்லாது போய்விட்டபடியினால் பாடகரை யாரும் வெங்கடேஸ்வரராவ் என்று கூறுவதுமில்லை. வெறும் கண்டசாலா மாத்ரமே. அந்நியப்பட்ட ஆனாலும் அந்நியோன்யமான வேறு ஏதோ ஒரு முக்கியமான தூதன் நமக்காகப் பாடுகிறார் என்கிற உணர்தலையும் புரிதலையும் அவரது குரல் தமிழ் மாந்தரிடையே ஏற்படுத்தியது. கான கந்தர்வுடு என அவர் தெலுகில் அறியப்பட்டாலும் தமிழில் அவர் கந்தர்வன் அல்ல. கன்னட,தெலுகு,மலயாளத்தில் அறியப்படுவது போல தமிழில் கந்தர்வம் புழங்குதளத்தில் அர்த்தம் கொள்ளாமற் போய்விட்டது. இடையில் ஒரு திருட்டுக் கால் சேர்ந்து நமக்கு காந்தர்வ மணம்தான் : காந்தர்வக் குரல்தான்.
பத்தாம் வகுப்பு கோடை விடுமுறைக்காலமாயிருந்த காலம் அது. எங்கள் வீட்டுக்கு க.பரமத்தி ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி என்றொருவர் வந்திருந்தார். வாழ்ந்துகெட்டுப்போனவர்கள் வந்துபோகிற இடமாக எங்கள் திண்ணை இருந்தது. வந்து சந்திக்கும் மனிதராக என் அப்பா இருந்தார்.
மனிதன் நாயைக் கட்டிப்பிடிப்பதற்கு முன் எவ்வளவோ பேரைச் சந்திக்கக்த்தான் வேண்டியிருக்கிறது.
மீசை துளிர்ப்பதற்கு முன்பே பருக்கள் துளிர்த்துவிட்ட என்னிடம் வேலுச்சாமி ‘’தேவதாஸ் பாத்திருக்கியா?’’ என ஆரம்பித்தார். தேவதாஸ் படம் பற்றியும் உலகே மாயம் பாடல் பற்றியும் மாய்ந்துமாய்ந்து பேசிவிட்டு இரண்டு மூன்று நாட்கள் கழிந்து பரமத்தி போய்விட்டார். உலகே மாயம் என்னைக் கவர்ந்ததுக்குக் காரணம் ஒன்பதாம் வகுப்புப் பிராயத்தில் சித்தர் பாடல்களும் பட்டினத்தார் பாடல்களுமாக அலைந்தது காரணமாயிருக்கலாம்.
நகைக்கடை தண்டபாணியிடம் போய், ‘’ஏங்க இந்த கண்டசாலாங்கறது…?’’ என்றதும் அவர் கணமும் தாமதிக்காமல் உலகே மாயம் மற்றும் முத்துக்கு முத்தாக இரண்டையும் நேஷனல் பானாசோனிக்கில் ஒலிக்கவிட்டார். தண்டபாணி. அவர்களுக்கு. தாய்மொழி தெலுங்கு ஆகையால் கண்டசாலாவின் மீதும் கொள்ளைப் பிரியம். அது, அவர் எம்.கே.டி மீது வைத்த பிரியத்தினும் அரை மாற்றோ ஒரு கேரட்டோ கூடக் குறைவில்லாதது.
சின்ன தாரபுரம் பள்ளிக்கு பதினொன்னாம் வகுப்புக்குப் போக ஆரம்பித்து, காலாண்டுக்கு கொஞ்சம் முன்னோ பின்னோ ஞாபகமில்லை. வடக்கிலிருந்து பஸ்ஸில் வருகிற பையனொருவன் ‘’ டேய் கொடுமுடியில தேவதாஸ் படம் போட்டுருக்காண்டா!’’ எனத் தகவல் சொன்னான். எத்தனை பேரிடம் தேவதாஸைப் பற்றிப் பேசியிருந்தால் இது சாத்தியமாகியிருக்கும் என இப்போது நினைத்தால் மலைப்பாய் வியப்பாய் சிரிப்பாய் இருக்கிறது. அங்கிருந்து கொடுமுடிக்கு நாற்பது கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம். தாடியில்லாத சின்னத் தேவதாஸாகவே பாவித்து மனதால் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு ஒரு பார்வதியுமில்லை- தாடியுமில்லை- குதிரை வண்டியுமில்லை. ஸ்கூல் பையை மாணவர் விடுதி இலவச ஆஸ்டலில் நண்பர்கள் வசம் கொடுத்துவிட்டு கொஞ்சம் கடன் வாங்கிக்கொண்டு கொடுமுடிக்கு பேருந்து ஏறிவிட்டேன். இரவுகளில் நான் இல்லாவிட்டால் ‘நேத்து எங்கே போனே?’ என்று தகவலுக்காகக் கூடக் கேட்காத பிரபஞ்ச சுதந்திரம் வீட்டில் அப்போது இருந்தது எனக்கு.
கொடுமுடியில் முதல் ஆட்டமும் இரண்டாம் ஆட்டமும் அடாது பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்ட் வந்தவனை யூனிஃபார்மோடு படம் பார்க்க வந்தமைக்காக ஏட்டையா ஒருவர் திட்டினார். அவர் அறைந்தபோது விலகிக்கொண்டேன். அப்புறம் அவர் ஏனோ தேர்டு டிகிரியைக் கைக்கொள்ளாமல் கொஞ்ச நேரம் கழித்து எஸ்.ஐ யிடம் ஒப்படைத்தார். தேவதாஸ் படத்துக்காக பஸ் ஏறி வந்த பாலகன் , எஸ்.ஐயாவுக்குள் பார்வதி இல்லாவிட்டாலும் சாவித்திரியையாவது நினைவூட்டியிருக்கவேண்டும். டீ வாங்கித்தந்து நல்லவிதமாய் அனுப்பிவைத்தார். (கே.பீ.எஸ் தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்ததால் சுந்தராம்பாளின் அருள் கூடக் காப்பாற்றியிருக்கலாம் என்னை)
உலகே மாயத்துக்கும் துடுக்குத் தேவதாஸுக்கும் அததற்குத் தக பாட்டெழுதிய உடுமலை நாராயண கவியை வியக்கவே வேண்டும். இது போதாதென துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதேவும்.
அஞ்சல் தலையில் வர பொருண்மையுடையவரேதான் நம் பூளவாடிப் புலவர் உடுமலை நாராயண கவி.ஒரு கவிஞன் அஞ்சல் தலையில் வருவது அதிசயம். இந்த மாய உலகத்தில் விசித்திரம் என்னவென்றால் அந்தக் கவிஞரும் அஞ்சல் தலையில் வந்திருக்கிறார் கண்டசாலாவும் அஞ்சல் தலையில் வந்திருக்கிறார்.
கான கந்தர்வம், படங்களுக்கு இசையமைப்பாளராய் இருந்து நான்கு மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பணியாற்றியது ஆகியவை மட்டும் அஞ்சல் த்லைக்குக் காரணமல்ல என நினைக்கிறேன்.
கண்டசாலா, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்குகொண்டு பதினெட்டு மாதங்கள் சிறை சென்றவராயிருந்திருக்கிறார். தன் முயல்வாகவே இசைக் கல்லூரியில் சேர்ந்து இன்னல்கள் கடந்து தன்னைத் தகவமைத்த அவரது வாழ்வின் தேர்வும் ஞானமும் அவருக்கும் அகிலத்துக்கும் ஒருசேர கொடையாகின்றன.
குண சுந்தரி காலகட்டத்திலேயே அவர்து வரவு தமிழுக்கு நிகழ்ந்துவிட்டது. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா – ‘ ‘மஞ்சள் மகிமை’ ( தெலுங்கில் கேட்க வேண்டும் நீங்கள் இதை) பாடல் கேட்கப்படும்போது மனம் கொள்ளும் உற்சவம் அலாதியானது. அன்றைய கட்டத்தில் ஆகாய வீதியில் விமானங்களின் எண்ணிக்கை மட்டும் அதிகமாக இருந்திருந்தால் கண்டசால தந்திருக்கும் பாடல் எண்ணிக்கை கணிசமானதாயிருந்திருக்கும்.
ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது(எங்க வீட்டு மகாலட்சுமி) செய்யடா செய்யடா செய்யடா… ஜல்சா (அலிபாபாவும் 40….) சுய நலம் பெரிதா? பொது நலம் பெரிதா? (யார் பையன்), இன்னும் திருட்டு ராமன், மாயா பஜார் என சில படப் பாடல்கள் மறக்க இயலாததாயுள்ளன.
கண்டசாலா பாடிய உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் பாடல்களில் ’கள்வனின் காதலி’ படப்பாடலும் அடக்கம். கள்வனின்றிக் கொள்ளை ஏது? பாரசீகக் கவி உமர் காயமின் பொருண்மையடக்கத் தமிழ் வடிவம் – ‘வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ .படத்தில் பாடுவோர் கண்டசாலாவும் (ஆகா) பானுமதியும்.
மெட்டினை உத்தேசித்தோ பாட்டினையும் படத்தினையும் துட்டினையும் உத்தேசித்தோ அந்தப் பாடல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்டிருக்கவில்லை. தேசிகருக்கு சினிமா பார்க்கும் பழக்கமும் இல்லை. இந்தப் படத்துக்கான சந்திப்புகளை ஒட்டித்தான் சிவாஜி கணேசனைக் காட்டி அருகில் இருந்தவர்களிடம் கவிமணி, ‘’ இவரு யாருங்க?’’ எனக் கேட்டிருக்கக்கூடும்.
தன்னைத் தெரியாமல் தமிழ்நாட்டில் ஒரு ஆள் இருக்கிறார் என்பது தெரிந்ததும் செவாலியே ஆன்மீகத் தளத்தில் ஒரு அங்குலமாவது உயர்ந்திருப்பார் என நினைக்கிறேன்.
கண்டசாலாவில் உங்களுக்குப் பிடித்த பாடல் என்ன என்று இலங்கை மற்றும் தமிழகப்பண்பலைகளின் புகழ்பெற்ற நேயரான பொள்ளாச்சிவாழ் கொண்டேகவுண்டன் பாளையம் எஸ்.முத்துக்குமாரை வினவினேன்.
அன்புச் சகோதரர்கள் படத்திலிருந்து ‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக’ என்னும் பாட்டைச் சொன்னார். அவருக்கு அவரோடு சேர்த்து ஐந்து சகோதரங்கள் . இந்தப் பாடலின் விசேஷம் என்னவென்றால் என்னைப்போல் ஒரு சகோதரன் முதல் ஏழெட்டுச் சகோதரர்கள் உள்ளவர் வரை அனைவருக்கும் மற்றும், சகோதரர்கள் இல்லாதவர்களுக்கும் கூடப் பிடித்துப்போகும்.
குளிர்கால இரவின் காய்ச்சல்காரன் போர்வை தேடுகிற ஆதுரம் நாடும் ஒரு பாவமும் கனத்த கண்ணியமான செருக்கும் ஒருங்கே அமைந்த பாடல். (ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா). அன்புச் சகோதரர்கள் படத்தில் எஸ்.வி. ரங்காராவ் தன் ஜகோதரர்களை (ஜெய் சங்கர்.மேஜர்.எஸ்.ராஜன், ஏவியெம்.ராஜன்) அருகில் வைத்துக்கொண்டு பாடும் பாடல். குரல்வழியாக நின்றுதரித்த சகோதர சகோதரப் பாச மலர் இது. (வாழ்வில் வாங்குப்பட்டு நொம்பலப் பட்டவர்கள் பாச மலர் அல்லடா சாப மலர் என்றும் கூறலாம் . மலர் மலரேதான்)
நகைக்கடை தண்டபாணிக்கு மூன்று தம்பிகள். நான்கு கால் மண்டபம் போன்ற அவர்கள் ஒவ்வொருத்தர் பற்றியும் சுவாரசியமாக எழுத சம்பவங்கள் வைத்திருப்பவர்கள். தண்டபாணி அவர்களுடன் ஒரு அந்திப் பொழுதில் பள்ளி மாணாக்கனாகப் பேசிக்கொண்டிருக்கையில் அவர் இப்படி அருளினார். (அப்போதைக்கு எனது வாழ்வாம்சப்படி தெலுங்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள ஐந்து ஆண்டுகள் பாக்கியிருந்தன.)
’கண்டசாலான்னா என்னன்னு தெரியுமா? கண்டம்னா தெரியுமல்ல… தொண்டை. நீலகண்டன்னெல்லாம் பாட்டுக் கேட்டுருக்கீல்ல? கண்ட சாலான்னா குரல்களின் சக்கரவர்த்தின்னு அர்த்தம்.’
Ghanta வை கண்டமாக்கி (kant(h)a) குரல் என்று மொழி பெயர்த்தது கூடப் பரவாயில்லை. ‘சாலா’ வுக்கு சக்கரவர்த்தி என்று சொன்னார் பாருங்கள். என்னதான் செய்வது?
‘’தண்டபாணி அவர்களே! உங்க பொய் எனக்கு ரொம்ப்போப் பிடிச்சிருக்கு!’’











