ஜா.தீபா
மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமாகிவிட்டார். ஜெயலலிதா, சரோஜாதேவி, சாவித்திரி என இவர்களுக்கெல்லாம் மூத்தவர் இவர். வி.என் ஜானகி நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே பெயருடன் நடிக்க வந்தததால் பெயர்க்குழப்பம் இருந்தது. இவர் தெலுங்கில் அறிமுகமான படம் சௌகார். அதுவே இவரது பெயருக்கு முன்பாக நிலைகொண்டுவிட்டது. மற்ற நடிகைகளுக்கு வாய்த்திராத வாழ்க்கையும், கதாபாத்திரமும் இவருக்குக் கிடைத்திருக்கின்றன.
பதினைந்து வயதாக இருக்கும்போது வானொலி நாடகத்தில் இவருடைய குரலைக் கேட்ட இயக்குநர் B.N ரெட்டி குரலிலேயே இத்தனை அற்புதமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இந்தப் பெண்ணுக்குள் நிச்சயம் ஒரு நடிகை இருந்தாக வேண்டும் என்று நினைத்து ஜானகியின் வீட்டாரிடம் நடிக்ககக் கேட்டிருக்கிறார். ஜானகிக்கு சந்தோசம் தான். வீட்டார் பயந்திருக்கிறார்கள். சினிமா தனக்கானது இல்லை என்று முடிவுக்கு ஜானகியும் வந்திருக்கிறார். உடனுக்குடன் திருமணமும் நடந்திருக்கிறது.
ஓரளவு வசதி கொண்ட குடும்பம் ஜானகியுடையது. திருமணத்துக்குப் பின் வறுமையை மட்டுமே பார்த்திருக்கிறார். அப்போது தான் எல்.வி பிரசாத் இயக்கத்தில் ‘சௌகார்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. உடனே சம்மதித்திருக்கிறார். அப்போது அவருக்கு வயது 19. குழந்தை பிறந்திருந்தது.
சௌகார் படத்தில் இவருக்கு கலகலப்பான நாயகி வேடம். முதல் படம் போல அல்லாமல் வெகு யதார்த்தமாக நடித்திருப்பதை இப்போது பார்த்தாலும் புரிந்து கொள்ள முடியும். யார் இந்தப் பெண் என்று கேட்கும் அளவுக்கு வெகு இயல்பாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இந்தப் படம் என்.டி. ஆருக்கும், ஜானகிக்குமே முக்கியப் படமாக அமைந்திருந்தது. மார்கஸ் பார்ட்லே ஒளிப்பதிவு, எல்.வி பிரசாத் இயக்கம் என அந்தக் கால நவீன பாணி கதை சொல்லல் முறையில் உருவாகியப் படம்.
தமிழில் வளையாபதி என்கிற படத்தில் அறிமுகமாகிறார். சௌகார் என்றாலே அழுது கொண்டே இருக்கும் கதாபாத்திரம் என்பதான நினைவு வருமளவுக்கு தொடர்ந்து சோக சித்திர கதாபாத்திரங்களே கிடைத்து வந்தன. குடும்பப்பாங்கான பெண்ணா… கூப்புடுங்கப்பா சௌகாரை எனுமளவுக்கு பொருந்திப் போனவர்.
சோக கதாபாத்திரங்கள் என்றாலும் கூட, சில படங்களில் தன்னுடைய மற்றொரு பரிணாமத்தைக் காட்டியிருக்கிறார். தாதா மிராசி இயக்கத்தில் புதிய பறவை படத்தில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்று புருவத்தைத் தூக்கி வசீகரிக்கும் கண்களால் பாடல் பாடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இயக்குநர் தாதா மிராசியே கூட சௌகாருக்கு இந்த வேடம் பொருந்தாது என்று மறுத்தவர் தான். சிவாஜி கணேசனும், புதிய பறவை படத்தின் வசனகர்த்தாவான ஆரூர்தாஸும் தான் சௌகார் கச்சிதமாக பொருந்துவார் என்று வாதாடியிருக்கிறார்கள். யாருமற்ற நாயகன் தனக்கான பெண் இவள் தான் என்று நம்பி முடிவு செய்யும் வகையில் ஒரு பெண் இருக்க வேண்டும் அதை பார்வையாளரும் நம்ப வேண்டும் என்று எடுத்த முடிவாக இருக்கும். ஏனெனில் படம் பார்க்கும் எவரும் சௌகார் ஜானகியை அடக்க ஒடுக்கமான பெண்ணாகவே நினைத்திருப்பார்கள். அதற்கடுத்து வரும் காட்சிகளில் மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து ஆடிக்கொண்டே வீடு வந்து சேரும் ஒரு பெண்ணாக பார்வையாளர்கள் சௌகார் ஜானகியை கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இது தான் சிவாஜி கணேசனின் மனதிலும் தோன்றியிருக்க வேண்டும். புதிய பறவை படம் ஹிட் என்பதோடு இன்று வரை சௌகாரின் பெயர் சொல்லும் படமாக இருக்கிறது.
சிவாஜி கணேசனுடன் சௌகார் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்றிருக்கிறது. உயர்ந்த மனிதன் படத்தைத் தான் இந்த வரிசையில் முதலில் வைக்க வேண்டும். இதற்கு முன்பாக ‘பார் மகளே பார்’ , ‘ப்டிக்காத மேதை, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ போன்ற படங்களில் எல்லாம் கணவர் சொல் கேட்டு நடக்கும் மனைவியின் கதாபத்திரம். படிக்காத மேதை படம் தான் சிவாஜியுடன் சௌகார் இணைந்த முதல் படம். வறுமையின் உணர்வைத் தெரிந்த ஒரு கதாநாயகி வேண்டும் என்று நினைத்து சௌகாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த மூன்று படத்துக்கும் நேர் எதிரான ஒரு கதாபாத்திரம் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில். கணவர் மீது அதீத உடைமையுணர்வு கொண்டிருக்கும் அமர்த்தலான ஒரு பெண். சமீபமாக வெளிவந்து அதிகம் பேசப்பட்ட Obsession படத்தின் ஆதி கால வெர்ஷன் இந்தப் படம். முழு படமும் சௌகாரின் கதாபாத்திரம் மீதே கட்டமைக்கப்பட்டிருக்கும். நுனிநாக்கு ஆங்கிலமும், பட் பட்டென்று பேசும் குணமும், பணக்கார கௌரவமும் கொண்ட ஒரு பெண். இதோடு அப்பாவித்தனத்தையும் கலந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இவர் நடித்த அத்தனை படங்களிலும் இவருடைய கதாபாத்திரத்துக்கு அதிகமான அழுத்தம் இருக்கும். இவரைச் சுற்றியே கதை நிகழும். ‘பார் மகளே பார்’ படத்தில் கணவருக்குத் தெரியாமல் ரகசியம் பாதுகாப்பது, பாக்கியலட்சுமியில் கணவர் முன்பாக விதவைப் பெண்ணாக வாழ்வது என ஒவ்வொன்றுமே கனமான பாத்திரங்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எல்லா மொழிககளிலும் சரளமாகப் பேசத் தெரிந்தவர். எத்தனை நீளமான வசனங்கள் கொடுத்தாலும் அதனை ஏற்ற இறக்கத்தோடு எந்த மொழியிலும் பேசிவிடுவார் என்பது இவரது சிறப்பு. படிக்க விருப்பப்பட்டு படிக்க முடியாமல் போனவர்களுக்குள் ஒரு ஏக்கம் இருக்கும். கல்வி இல்லாததால் எதையும் கற்றுக் கொள்ளும் துடிப்பு வாய்க்கும் இதனை எம்ஜிஆர், சிவாஜி, கமல், ஜெயலலிதா போன்றவர்களிடம் பார்க்க முடியும். தங்களுக்கு எதுவும் தெரியாமல் இருந்திடக்கூடாது என்பதில் இவர்களுக்கு இருக்கும் அக்கறையும் வேகமுமே இவர்களை வழிநடத்தியிருக்கிறது. இதே வேகத்தை சௌகார் ஜானகியிடம் பார்க்கலாம். கல்லூரிப் படிப்பை முடிக்கமுடியாமல் போனதால் உலகத்தில் இருந்து கற்றுக் கொள்கிறேன் என நாடு நாடாகச் சுற்றியவர். ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தையும் கற்றுக் கொள்ள நினைத்தவர். அதனாலேயே பரந்துபட்ட பார்வை கொண்டிருந்தார். கதாநாயகி என்பதைக் கடந்து குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் தான் இன்னும் தன்னை விதவிதமாக முன்னிறுத்த முடியும் என்று புரிந்து கொண்டார்.
கைக்குழந்தையுடன் கதாநாயகியாக நடிக்க வந்தவர். அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்து கொள்ள உதவ யாருமிலாமல் தானே அவர்களைப் பார்த்துக் கொண்டு நடிக்கவும் செய்திருக்கிறார் என்பதெல்லாம் சாதனை தான். அடிக்கடி அவர் கூறுவது “மேடு பள்ளங்களை வாழ்க்கையில் அதிகம் சந்தித்திருகிறேன்” என்பது. அது என்னவாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால், தன தொழிலில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகளைக் கொண்டு வராதவர் என்று பெயர் பெற்றிருந்தார். தயாரிப்பாளர்களின் நடிகையாக எப்போதும் இருந்திருக்கிறார். அதனாலேயே தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம், வாகினி என தயாரிப்பு நிறுவனங்கள் இவரை அணுகியிருக்கின்றன.
கே.பாலச்சந்தருக்கு முன், பின் என சௌகார் ஜானகியின் திரைப்பட வாழ்க்கையை நாம் பார்க்க முடியும். பல நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை கே.பாலசந்தருக்கு உண்டு. அதே போல, ஒரு கலைஞருக்குள் இருக்கும் யாரும் அறிந்திடாத திறமையைக் கண்டுணரவும் அவரால் முடிந்திருக்கிறது. அதற்கு ஒரு சாட்சி சௌகார் ஜானகி. கே.பியின் நாடகங்கள் பலவற்றிலும் தொடர்ந்து நடித்து வந்தவர் சௌகார். இத்தனைக்கும் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர். நாடகங்களில் நடிக்க அத்தனை விருப்பம் கொண்டிருந்தார். ‘எதிர்நீச்சல்’ ‘பாமா விஜயம்’ இவையெல்லாம் நாடகமாகியிருக்கும்போது அதில் நடித்தவர். சௌகார் ஜானகியால் நகைச்சுவைப் பாத்திரத்தில் முத்திரை பதிக்க முடியும் என நம்பியவர் கே.பி. எல்லாவற்றையும் சினிமாவோடு இணைத்துப் பேசும் எதிர்நீச்சலில் பட்டுவாக அவர் நடித்தது காலத்துக்கும் நிற்கும்.
காவியத்தலைவி படம் கே.பி இயக்கியது. அந்தப் படத்தின் நாயகியாக நடிப்பதற்கு துணிச்சல் வேண்டும் என்று அந்தக் காலகட்டத்தின் பத்திரிகைகள் சொல்லியிருந்தன. எந்த வேடத்தையும் ஒதுக்காமல் அதற்கு ஏற்ற மாதிரி தன்னைப் பொருத்திக் கொண்டார் சௌகார்.
இரு கோடுகள், காவியத்தலைவி, பாமா விஜயம், எதிர்நீச்சல் என எல்லாவற்றையும் மிஞ்சிய ஒரு படம் தில்லுமுல்லு. ‘அலாதி கேரக்டர்’ என்று நாகேஷின் சொல்லில் அறிமுகமாகும் கேரக்டர். “என்ன பேப்பர்ல உன்னைப் பத்தின கிசுகிசுவே காணோம்..கல்யாணம் பண்ணிட்டியா?” என்று வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார். இந்தப் படத்தில் சௌகார் ஜானகி வந்த பிறகு இன்னும் சுவாராஸ்யம் கூடும். எத்தனை முறை பார்த்தாலும் அலுப்புத் தந்திராத நடிப்பு அவருடையது.
இவரளவுக்கு வேறெந்த நடிகையும் தனியாக நின்று போராடியதில்லை என்றே திரைத்துறையில் சொல்லப்படுகிறது. ஒளி விளக்கு படத்தில் எம்ஜிஆர், சௌகார் ஜானகி, ஜெயலலிதா நடித்திருக்கிறார்கள். சௌகாருக்குத் தான அதில் முக்கிய கதாபாத்திரம். கதையே அவரைச் சுற்றித் தான். படத்தின் டைட்டிலில் எம்ஜிஆருக்கு அடுத்து கதாநாயகி பெயர் வரவேண்டும். அதில் தனது பெயர் தான் முதலில் வரவேண்டும் என்று ஜெயலலிதா சொல்ல அதை மறுத்திருக்கிறார் சௌகார். சீனியாரிட்டி என்று ஒன்று தமிழ் சினிமாவில் உண்டு. அதன்படி என்னுடைய பெயர் தான் முதலில் வரவேண்டும் என்று சொல்ல, ஜெயலலிதா பிடிவாதமாக இருந்திருக்கிறார். எம்ஜிஆருக்கு அடுத்து ஜெயலலிதாவின் பெயர் தான் வந்தது. இந்தச் சம்பவத்தினால் நாற்பது ஆண்டு காலம் ஜெயலலிதாவும் சௌகார் ஜானகியும் பேசிக்கொள்ளவில்லை. இதோடு எம்ஜிஆர் முன்பாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததால் பாதி படபிடிப்பு நடந்த ஒரு படத்தில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார். பிற்காலத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் அவருக்கு சிநேகமான போதும் இதனால் அவருக்கு சில பாதிப்புகள் வந்திருக்கின்றன.
சௌகார் ஜானகியின் நேர்காணல்களில் ஒரு விஷயத்தைப் பார்க்க முடியும். அவர் ஒரு ஸ்க்ரிப்ட்டினை எப்படி உள்வாங்குகிறார் என்பதைப் பேசியிருக்கிறார். பேப்பர் (ஸ்க்ரிப்ட்) இல்லாமல் ஷூட்டிங் போவதென்பது என் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாதது. ஒருகதையைச் சொல்லும்போதே இயக்குநர் எதற்காக இந்த வசனத்தை, காட்சியை வைத்திருக்கிறார் என்பது புரிந்து விடும். அப்படி புரிகிறது என்றால் தான் நாம் நடிகை. அதை உள்வாங்கி யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அதோடு பொருந்த முடியும் என்றும் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஒரு படத்துல எவ்ளோ வலுவா இருக்காங்களோ அப்பத் தான் படம் நல்லா இருக்கும் என்றும் 75 ஆண்டு கால அனுபவத்தினை அவர் சொல்லிக் கொண்டே இருந்தார்.
நடிக்க வந்த புதிதில் மூன்று பிள்ளைகள் படத்தின் தெலுங்கு படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்திருக்கிறார். இரண்டாவது குழந்தை பிறந்த நேரம் என்பதோடு வறுமையும் சேர்ந்து கொள்ள பலவீனமாக இருந்த சௌகாரை அழைத்து ஜெமினி ஸ்டுடியோ நிறுவனர் எஸ்.எஸ் வாசன் சொன்னதை கடைசி காலம் வரைக்கும் கடைபிடித்திருக்கிறார். நடிக்க வர்ந்துவிட்டால், ஒரு கலைஞர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பலவீனம் கூடவே கூடாது. அது தொழிலுக்கு நாம் தரும் மரியாதை என்று சொல்ல அப்போது இருந்து தன் உடல் நலன் குறித்த அக்கறையை அவர் விடவில்லை. அறுபது கிலோ எடை தான் தனக்கு உகந்தது என்று தெரிந்து கொண்டு கடைசிவரை அதே எடையில் வாழ்ந்திருக்கிறார். கட்டுப்பாடான உணவுப் பழக்க வழக்கம், அமைதியான வாழ்க்கை என ஒரு வாழ்க்கை முறையினை கொண்டிருந்தார்.
பத்மஸ்ரீ, நந்தி விருது, கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். 75 ஆண்டுகாலங்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தவர் என்கிற இவரது சாதனையை இப்போது வரை யாரும் முறியடிக்கவில்லை. ஏழு தலைமுறையினருடன் நடித்திருக்கிறார்.
சினிமாவின் ஒரு தலைமுறையினுடைய கடைசி பிரதிநிதி. 94 வயதில் பழுத்த இல்லை உதிர்வது போல சென்றிருக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்
.











