அபுல்கலாம் ஆசாத்
மக்கள் திலகம் எம்ஜியாருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் அவர்களின் நினைவாக இந்திய அரசு தபால் தலை வெளியிட்டிருப்பது அனைவரும் அறிந்தது. அந்தத் தபால் தலைகளில் அவர்கள் இருவருடைய படங்கள் மட்டும் இடம்பெற்றிருக்கும். சில திரை ஆளுமைகளுக்காக வெளியிடப்பட்ட தபால் தலைகள், அவர்கள் திரையில் ஏற்ற புகழ் பெற்ற கதாபாத்திரங்களும் சேர்த்து இணைக்கப்பட்டதாக இருக்கும். ராஜ் கபூருக்கு அவருடைய மேரா நாம் ஜோக்கர் திரைப்படப் பாத்திரமும் ஆவாரா கதாபாத்திரமும், பிரித்விராஜ் கபூருக்கு மொகல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் அக்பரும் அவருடைய பட்டான் நாடகக் கதாபாத்திரமும் இருக்கின்றன. மீனா குமாரிக்கு பாக்கீஸாவின் சாஹிப்ஜான் பாத்திரமும், நூத்தனுக்கு சுஜாதா கதாபாத்திரமும், சாவித்திரிக்கு அவர் நடித்த புராணப் படங்களின் ஒரு கதாபாத்திரமும் இருக்கின்றன.
போலவே, வி. சாந்தாராமுக்கு அவர் தயாரித்து, இயக்கி, நடித்த ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’ திரைப்படத்தின் கதாநாயகன், ஜெயிலர் ஆதிநாத் பாத்திரம் இருக்கும்.
வி. சாந்தாராம், இந்தியத் திரையுலக ஆளுமைகள் வரிசையில் முக்கியமான பெயர். ராஜ்கமல் கலாமந்திர் என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்திரண்டில் தொடங்கியவர். 1946இல், அவர் நடித்து இயக்கிய ‘த ஜர்னி ஆஃப் டாக்டர் கோட்னிஸ்’ திரைப்படம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் ராஜ்கமல் கலாமந்திரால் தயாரித்து வெளியிடப்பட்டது.
தொடர்ந்த வெற்றிகளுக்குப் பின் 1955இல் கதக் நடனக் கலைஞர் கோபி கிருஷ்ணா கதாநாயகனாகவும், வி. சாந்தாராமின் மனைவி சந்தியா கதாநாயகியாவும் நடித்த திரைப்படம் ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ சாந்தாராமின் இயக்கத்தில் ராஜ்கமல் தயாரிப்பாக வெளியானது. அது நான்காம் ஃபிலிம் ஃபேர் விருதுகளில் சிறந்த திரைப்பட, சிறந்த இயக்குநர், சிறந்த கலை அமைப்பு, சிறந்த ஒலியமைப்பு என நான்கு விருதுகளைப் பெற்றது. இந்தியத் திரை உலகில் வி. சாந்தாராமின் பெயர் நிரந்தர இடத்தைப் பெற்றது. ஜனக் ஜனக் பாயல் பாஜே (1955) அதன் இசைக்காகவும் கதக் நடனத்துக்காகவும் பாராட்டப்பட்டது.
‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’யில் கோபி கிருஷ்ணா மூலம் திரையில் கதக் ஒலித்தது. அதற்கு ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின், அதே ‘ராஜ் கமல்’ என்னும் பெயரைத் தாங்கிய நிறுவனத்தின் ‘விஸ்வரூபம்’ (2013) திரைப்படத்தில், பண்டிட் பிர்ஜு மகராஜின் நடன அமைப்பில் தமிழ்த் திரையில் கதக் ஒலித்தது.
சாந்தாராமிடம் கதையின் மையக் கருவியாகவும், கமலிடம் கதையிலிருந்து பிரிக்க முடியாத கலை வெளிப்பாடாகவும் கதக் அமைந்துள்ளது. இரண்டு ராஜ் கமல் (ராஜ்கமல் கலாமந்திர், ராஜ் கமல் இண்ட்டர்நேஷனல்) நிறுவனங்களில் 58 ஆண்டுகள் இடைவெளியைக் கண்டு ‘கதக்’ நடனம் இடம்பெற்றது வரலாறு.
ஜனக் ஜனக் பாயல் பாஜேவுக்குப் பின் சாந்தாராமின் இயக்கத்தில் வெளிவந்தது ‘தோ ஆங்க்கேன் பாரா ஹாத்’- இரு கண்களும் பன்னிரு கைகளும்.
அந்த இரு கண்கள் குற்றவாளிகளைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் மனிதனைப் பார்க்கும் ஒரு நல்ல உள்ளத்தின் கண்கள். அந்த இரு கண்களிலும் கருணை மட்டும் அல்ல காவலும் இருந்தது, பொறுமை மட்டும் நல்வழிகாட்டும் நோக்கும் இருந்தது.
பன்னிரு கைகளும் முதலில் இரத்தக்கறை படிந்தவைதான். அப்படித்தான் ஒவ்வொரு கையும் இரத்தக் கறையுடன் திரையில் அறிமுகமாகும். ஆனால், கறைகளை உள்ளத்தாலும் கழுவிவிட்டு அக்கரங்கள் உழைப்பதற்கும் பிரார்த்தனைக்கும் உயரும் நிலையை எட்டுகின்றன. அவற்றை அந்த நிலைக்கு உயரவைப்பதற்கு அந்த இரண்டு கண்கள் போதுமானதாக இருக்கின்றன.
எது குற்றவாளியை மாற்றும்? தண்டனையா? மறுவாழ்வா?
குற்றமே தொழிலாகக் கொண்டவர்க்கு தண்டனையால் மட்டும் திருந்தும் வாய்ப்பு கிடையாது. மறுவாழ்வு மட்டுமே குற்றவாளியின் மனதை மாற்றும்.
எது குற்றவாளியின் மனதை மாற்றும்? அச்சமா? பொறுப்பா?
அச்சப்படுபவரால் திட்டமிட்டக் குற்றங்களைச் செய்ய இயலாது. அந்த கணத்தின் கோபத்தில் அல்லது தவறுதலாகச் செய்யும் குற்றங்களை வேண்டுமானால் அச்சமுள்ளவர் செய்யலாம். திட்டமிட்டக் குற்றங்களைச் செய்வது அச்சப்படுவோர்க்கு சாத்தியமில்லை. எனவே, தண்டனையால் அச்சமூட்டினால் குற்ற நினைப்புள்ள குற்றவாளி திருந்த வாய்ப்பில்லை. ஆனால், அச்சத்துக்குப் பதிலாகக் குற்றவாளியின் மனதில் சமூகப் பொறுப்புணர்வை ஊட்டினால், அவர் திருந்துவதற்கு வாய்ப்பு அதிகம்.
மனதுக்குள் மாற்றம் நடக்கவில்லையெனில் சிறைச்சாலை எப்படிக் குற்றவாளியின் மனதை மாற்றும்?
இப்படியான உளவியல் சமூகவியல் சிந்தனைகளின் அடிப்படையில் உருவான ஆய்வு முயற்சியைத் தழுவி உருவானது தோ ஆங்க்கென் பாரா ஹாத்தின் கதை. அது ஒரு உண்மை நிகழ்வைத் தழுவி எழுதப்பட்ட கதை.
பொதுவாக உண்மைக் கதைகள் படமாக்கப்பட்டால், அவற்றின் மூலம் குறிப்பிடுவதில்லை என்னும் குற்றச்சாட்டு உண்டு. சில ‘நன்றி மறந்த செயல்’களின் கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தத் திரைப்படத்தைப் பொறுத்த வரையில், பெயர் காட்டுகையில் ‘நன்றி’ தெரிவிக்க அனுமதி கேட்டு உண்மையான கதாநாயகரை சாந்தாராம் அணுகிய போது, அவர் நன்றி தேவையில்லையென மறுத்திருக்கிறார். ‘மறுப்பை மீறி என் பெயரைத் திரைப்படத்தில் வெளியிட்டால், வழக்குத் தொடுப்பேன்’ என்றும் எச்சரித்திருக்கிறார்.
இந்திய விடுதலைக்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் இருந்த அவுந்த் அரசு இந்தியாவுடன் இணைவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பின், 1948இல் அவுந்த் அரசு இந்திய அரசுடன் இணைகையில் கைதிகளுக்கு யார் பொறுப்பு என்னும் நிர்வாகச் சிக்கல் எழுந்துள்ளது. அப்போது கைதிகளைத் தன் பொறுப்பில் ஏற்றுத் திறந்தவெளி சிறைச்சாலையை முயற்சி செய்தவர் மோரிஸ் ஃப்ரெட்மேன் என்னும் சுவாமி பரத்தானந்தா. கிரெடிட்சில் நன்றியறிவிப்புக்கு அவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் திரைச்செய்தியாக இணையத்தில் அது நிரந்தரம்.
திரைப்படத்தில் தன்னைக் கொல்ல வரும் கைதியை மன்னிக்கும் குணம் உள்ளவராக ஜெயிலர் ஆதிநாத்தின் அறிமுகம் நடக்கிறது.
மோரிஸ் ஃப்ரெட்மெனின் திறந்தவெளிச் சிறைச்சாலை அணுகுமுறை கொலைக் குற்றவாளிகளின் தன்மையை மாற்றுமா? உளவியல் அடிப்படையில் குற்றங்களை விரும்பிச் செய்பவருக்கும், தொடர்ந்த பண்படுத்தல், சிந்தனை மாற்றம், மனப்பிணி நீக்கற் பயிற்சிகளை மேற்கொள்ளல் போன்றவற்றால் குற்றங்களைக் குற்றமெனக் காணும் மனப்பக்குவத்தை உண்டாகலாம். இது ஆய்வுக்கூட முடிவு என்றாலும், நடைமுறையில் கொலைக் குற்றவாளிகள் திருந்துவார்களா என்னும் ஐயத்துடன்தான் ஆதிநாத்தின் தனிப்பட்ட பிணையில் அரசு கைதிகளைத் திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு அனுமதிக்கிறது.
குற்றவாளிகளை அன்பால் திருத்துவதன் சோதனை முயற்சியாக ஆறு கைதிகளை ஆதிநாத் பிணைவிடுப்பில் – தன் சொந்தப் பொறுப்பில் வெளியே அழைத்து வந்து, அவர்கள் உழைத்துப் பிழைக்க வழி செய்கிறார். தங்கள் இயல்பு குணத்தை மாற்றிக் கொள்ளாமல் குற்றவாளிகளும், அவர்களை மன்னிக்கும் குணத்தை மாற்ற விரும்பாத அவரும் தொடர, அவர்கள் அறுவரையும் ஆதிநாத்தின் சாந்தமான கண்கள் கட்டிப்போடுகின்றன.
இரண்டு கண்களும் குற்றவாளிகளின் பன்னிரு கைகளும் கதையை நகர்த்திச் செல்கின்றன.
ஒரு பாழடைந்த வீட்டையும் அதைச் சுற்றி இருக்கும் தரிசு நிலத்தையும் ஆதிநாத் கைதிகளின் மறுவாழ்வுக்காகத் தேர்ந்தெடுக்கிறார். வீட்டில் அவர்களுடன் தங்கி, அவர்களை நிலத்தில் முட்புதர்களை அகற்றி, சமன்படுத்து, நீர் பாய்ச்சி, உழவு செய்து விளை நிலமாக்குகிறார். தொடக்கத்தில் முரண்டு பிடிக்கும் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக ஆதிநாத்தின் அன்புக்குக் கட்டுப்பட்டு மனம் மாறுகின்றனர். நிலம் பண்பட்ட விளைநிலமாகி விளைச்சல் காண்கிறது. மகிழ்ச்சியை அனைவரும் கொண்டாடுகின்றனர். ஆடிப் பாடுகின்றனர்.
விளைச்சல் கண்டு ஆடிப்பாடிக் களித்துப் பின்னர், உள்ளூர்ச் சந்தையில் தங்கள் விளைச்சலைக் கைதிகள் விற்கச் செல்கின்றனர். அவர்களுடைய காய்கறிகள் விலையாவதைக் காணும் மற்ற உள்ளூர் வியாபாரிகள் பொறுமுகின்றனர். அவர்களின் வியாபாரத்தைக் கெடுக்க நினைக்கின்றனர்.
திரை வில்லத்தனத்துக்கென்றே அமைக்கப்படும் ஒரு கதாபாத்திரம் கைதிகளையும் ஜெயிலரையும் காய்கறி வியாபாரத்திலிருந்து அகற்ற நினைக்கிறது.
கிளைக்கதையாக, சம்பா – கதாநாயகி (சந்தியா) அறிமுகமாகிறார். இத் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் சந்தியாவும் சாந்தாராமும் நிஜவாழ்க்கையில் கணவன் – மனைவி. பொம்மை செய்து விற்கும் கிராமத்துப் பெண்ணாக சம்பா அறிமுகமாகி, கைதிகளுடன் சகோதரி போன்ற உறவை உறுதிப்படுத்துகிறார். ஜெயிலரிடம் அவருக்கு மனச்சாய்வு ஏற்படுகிறது. கடைசிக் காட்சியில் ஜெயிலர் இறந்ததும் தன் கைவளையல்களை சுவற்றில் அறைந்து சம்பா உடைத்துக்கொள்வார்.
கதையின் ஓட்டத்தில் கைதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் ஜெயிலர் ஆதிநாத்திடம் தங்களை முழுமையாக ஒப்படைக்கின்றனர். ஒரு கைதியால் ஆதிநாத்தைக் கொலை செய்ய முடியவில்லை – கீழ்ப்படிகிறார். இன்னொரு கைதி தனது குழந்தைகளுக்காக ஆதிநாத்திடம் பணிகிறார். அனைவரும் பணிந்து, வெற்றிகரமாக விளைச்சல் நடந்து வியாபாரம் செழிக்கத் தொடங்கும் நேரத்தில் வில்லனின் சூழ்ச்சி அனைவரையும் மதுவில் மயங்கச் செய்கிறது.
அவர்களுடைய தோட்டத்தை முற்றிலும் வில்லன் அழிக்கிறான். காளையை ஏவி, போதையில் கிடக்கும் கைதிகளைக் கொல்ல நினைக்கிறான். முயற்சி தோல்வியடைகிறது. எழுதாத திரைச்சட்டத்தின்படிக் கடைசியில் வில்லனைக் காவல் துறை கைது செய்கிறது.
கைதிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஆதிநாத் காளையால் தூக்கி வீசப்பட்டு இறக்கின்றார். அவர் இரண்டு வரிகள் வாசித்த இறைவணக்கம் ‘ஏ மாலிக் தேரே பந்தே ஹம்’ பாடலைப் பாடச்சொல்கின்றனர். அவருடைய ஆன்மா சாந்தியடைய சம்பா அப்பாடலைப் பாடுகிறாள்.
தமிழில், ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்’ என்னும் வாலியின் பாடல், ஒளிவிளக்கு திரைப்படத்தில் இடம்பெற்றது, திரைப்பாடல் என்னும் அளவில் நிற்காமல், மக்கள் ஆண்டவனிடம் தங்கள் விண்ணப்பத்தை உருகி வைக்கக்கூடிய பாடலாகவும் நிலைபெற்றது. இந்தியில் அத்தகைய நிலைத்த இடத்தைப் பெற்ற ‘ஏ மாலிக் தேரே பந்தே ஹம்’ என்னும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் தோ ஆங்கேன் பாரா ஹாத். வசந்த் தேசாயின் இசையில், லதா மங்கேஷ்கரின் குரலில், பரத் வியாசின் வரிகளில் நிலைபெற்ற இறைவணக்கப் பாடலாகிவிட்டது.
தோ ஆங்க்கேன் பாரா ஹாத் தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ (1975) என எடுக்கப்பட்டது. இந்தியில் ஒலித்த கைதிகளின் மகிழ்ச்சிப் பாடல் பதினெட்டு ஆண்டுகள் கழித்துத் தமிழில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ பாடலாக ஒலித்தது. பாவேந்தரின் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ பாடல் இதற்கு முன்பு சந்திரோதயம் (1966) திரைப்படத்திலும் ஒலித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற மொழித் திரைப்படங்கள் எம்ஜியாருக்காகத் தமிழாக்கம் செய்யப்படும்போது சில மாறுதல்களைக் காணும். பாடல்களின் தன்மை முற்றிலும் எம்ஜியாருக்கு ஏற்றபடி மாற்றப்படும். கதையமைப்பிலும் மாற்றங்கள் நடக்கும்.
‘ஜீனே கி ராஹ்’ என்னும் இந்திப் படம் தமிழில் ‘நான் ஏன் பிறந்தேன்’ என எம்ஜியாருக்காக மாற்றம் பெற்றது. இந்தியில் கதாநாயகன் – ஜிதேந்திரா ஊருக்குள் வருகையில் அவர் அந்த ஊரின் இயற்கையைக் கண்டு ரசித்துப் பாடும் பாடல் இடம் பெற்றது. ‘ஆனே சே உஸ்கி ஆயி பஹார்’ என வசந்தத்தைப் பாடி வரவேற்று ரசிக்கும் பாடல். தமிழில் எம்ஜியாருக்காக ‘நான் என் பிறந்தேன்’ எனக் கொள்கை விளக்கப் பாடலாக உருவெடுத்தது. ஜான். எஃப். கென்னடியின் ‘Ask not what your country can do for you – ask what you can do for your country’ என்னும் வாசகத்தை, ‘நாடென்ன செய்தது உனக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு / நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு’ என வாலி எழுதினார். இந்தியில் இயற்கையைப் பாடிய பாடல் தமிழில் கொள்கையைப் பாடியது.
இந்தியில் தர்மேந்திரா, ராஜேந்திர குமார், சாயிரா பானு நடித்த ‘ஆயே மிலன் கி பேலா’ தமிழில் ‘ஒரு தாய் மக்கள்’ (எம்ஜியார், முத்துராமன், ஜெயலலிதா) என எடுக்கப்பட்டது. அதில் பிறந்தநாள் பாடலில் சாயிரா பானு மட்டும் நடனம் ஆடிப் பாடும் ‘தும்கோ ஹமாரி உமர் லக் ஜாய்’ பாடல் தமிழில் எம்ஜியாரும் முத்துராமனும் பாட ஜெயலலிதா நடனம் ஆட ‘பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று’ என ஆண்கள் இருவர் பாடும் பாடலானது.
எம்ஜியாருக்காக நடக்கும் இந்த மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. அவை எம்ஜியாராக்கம் (MGRisation) என்னும் நதியில் நீராடித்தான் வெளியேறும்.
‘தோ ஆங்க்கேன் பாரா ஹாத்’தும் ‘பல்லாண்டு வாழ்க’வாக உருவெடுத்த போது முக்கியமான ஒரு மாற்றத்தைப் பெற்றது. இந்தியில் ஜெயிலர் ஆதிநாத் (சாந்தாராம்) இறந்துவிடுவார், தமிழில் ஜெயிலர் ராஜன் (எம்ஜியார்) இறக்கமாட்டார்.
திரைப்படத்தின் இறுதிக் காட்சியாக அந்த ஆறு கைதிகளையும் நீதிமன்றம் விடுதலை செய்த அறிவிப்பு கிடைத்தும் அவர்களால் அந்த நிலத்தை விட்டுவிட்டு வீட்டுக்குச் செல்ல இயலவில்லை. ஆதிநாத்தின் கண்கள் அவர்களைக் கட்டிப்போட்டு அங்கேயே இருக்கச் செய்கின்றன. “எங்களை எப்போதும் பாபுஜி சாந்தமான கண்களுடன் பார்த்துக்கொண்டே இருக்கிறார்” எனச் சொல்லி வானத்தில் ஆதிநாத்தின் கண்களைக் காட்டுவதுடன் திரைப்படம் நிறைவு பெறுகின்றது.
குற்றவாளிக்குத் தண்டனையாக இன்னொரு வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதும், தண்டனையென்பதால் ஏற்றுக் குற்றவாளி மனமில்லாமல் உழைப்பதும், பின்னர் தண்டனை வாழ்க்கையில் கிடைக்கும் மனநிறைவு அவருக்கு இன்னொரு பாதையைத் திறப்பதும், இதற்குப் பின்னர் சில திரைப்படங்களில் இடம்பெற்றன. அந்த வகையில் மறுவாழ்வைத் தண்டனையாகத் தரும் திரைப்படங்களின் முன்னோடி இதுதான்.
‘துஷ்மன்’ (1971) திரைப்படமும் இப்படியான மாறுபட்ட கோணத்தில் குற்றவாளிக்குத் தண்டனை தருகின்ற கதையைக் கொண்டது. மதுவருந்திவிட்டு லாரி ஓட்டி ஒரு குடும்பத் தலைவன் மீதும் அவனுடைய மாட்டின் மீதும் லாரியை ஏற்றிக் கொன்றுவிடும் ஓட்டுநருக்குத் தண்டனையாக அவன் அந்தக் குடும்பத்தை உழைத்துக் காப்பாற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு சொல்கிறது. கற்பனைக் கதையாக இருப்பினும், ராஜேஷ் கன்னாவுக்கு இருந்த நட்சத்திர மதிப்பும் சந்தையும் கதையமைப்புடன் சேர்ந்து, இசை பாடல்கள் என துஷ்மனை வெற்றிப் படமாக்கின. தமிழில் அது நீதி (1972) என நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியானது.
அந்தந்த காலகட்டத்தின் சமூகம் குற்றவாளிகள் திருந்துவதற்கு மாறுபட்ட தண்டனை அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பதை மனதளவில் ஏற்று தோ ஆங்க்கேன் பாரா ஹாத்தை வெற்றிப்படமாக்கினர். இந்தியத் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க இயலாத படமாகவும் அது நிலைபெற்றது.
சிறையிலிருந்து வெளியேறித் தங்குமிடத்துக்கு வந்த பின், அடுத்த நாள் அவர்களின் பெயர்களை ஆதிநாத் கேட்கிறார். அவர்கள் பதில் சொல்லாமல் சுவரில் படிந்திருக்கும் விளக்குக்கரியில் தங்கள் உள்ளங்கைகளைத் தேய்த்து வெள்ளை மேஜை விரிப்பில் அடித்துத் தங்கள் ரேகைகளைப் பதிவு செய்கிறார்கள். ‘நாங்கள் ஓடிவிட்டால் தேடுவதற்குப் பெயரைவிட எங்கள் கைரேகைகள் பொருத்தமானவை’ எனத் திமிராகப் பதில் சொல்கின்றனர். ‘வயலில் வேலை செய்யும்போது அழைப்பதற்காகத்தான் பெயரைக் கேட்கிறேன், ஓடினால் பிடிப்பதற்கு அல்ல’ எனச் சொல்லி அவர்களுடைய பெயரைக் கேட்கையில், முதல் பெயராக அவர்கள் தங்கள் கைதி எண்ணைச் சொல்கின்றனர். அதையும் மறுத்து வற்புறுத்திக் கேட்க ஒவ்வொருவராகப் பெயர் சொல்லக் கடைசிக் கைதி, ‘ஒருவேளை என் பெயர் கேஷவாக இருக்கலாம்’ என்கிறார்.
திறந்தவெளியில் கைதிகளுடன் நடக்கும் இந்தத் தொடக்க உரையாடல் விரியப்போகும் கதைக்குச் சரியான குறியீடுகளையும் போக்கையும் கொண்டு ஆதிநாத்தின் ‘ஏ மாலிக் தேரே பந்தே ஹம்’ பாடலுடன் தொடங்கும்.
இடையில் கைதிகள் தப்பித்து ஓடுவதும், கைதிகள் தப்பிய குற்றத்துக்காகப் பிணையாக ஆதிநாத் சிறை செல்ல ஆயத்தமாக இருப்பதும் நிகழும். ஆனால், தப்பிக்கும் கைதிகள் கோயிலில் சாமிச் சிலையின் கண்களில் ஆதிநாத்தின் கண்களைக் காண்கின்றனர். ஆதிநாத்தின் கண்களில் வெளிப்படும் சாந்தியையும் கருணையையும் அவர்கள் கடவுள் சிலையின் கண்களிலும் காண்கின்றனர். தப்பிக்கும் எண்ணத்தைக் கைவிட்டுத் தானாக நிலத்துக்குத் திரும்புகின்றனர்.
சில ஆளுமைகள் சில கதாபாத்திரங்களை ஏற்கும்போது அதன் கனம் கூடுகிறது. சாந்தாராம் தன்னுடைய திரைப்படங்களின் வழியாக சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்துத் தனக்கென ஒரு பாணியை முதல் படத்திலிருந்து நிரூபித்துப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்துக்குப் பின் ராஜ்கமல் கலாமந்திர் என்னும் நிறுவனத்தைத் தொடங்குகிறார். அது முன்னணித் திரைத் தயாரிப்பு நிறுவனமாக நிலை பெறுகிறது. அதனுடைய வெற்றிப் பட வரிசையில் தோ ஆங்க்கேன் பாரா ஹாத்தும் இணைகிறது. சாந்தாராமின் வெற்றிப்பட வரிசையும் அவருடைய திரைப்படத்தில் சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் வெளிப்படும் தன்மையும் சேர்ந்து, ஆதிநாத் கதாபாத்திரத்தின் கனத்தைக் கூட்டின.
முதல்நாள் கைதிகளுடன் உரையாடலைத் தொடங்குவதற்கு முன் நடக்கும் இறைவணக்கத்தில் ஆண் குரலில் நிறையும் ‘ஏ மாலிக் தேரே பந்தே ஹம்’மின் பக்திக் குரலும் சூழலும் அந்தக் கதாபாத்திரத்தின் மீது மதிப்பை உண்டாக்கின. கைதிகளுக்கு அவர்களுக்கே தெரியாமல் விடுதலைக்கு விண்ணப்பிப்பதும், குழந்தைகளை உடன் வைத்துக்கொள்ள ஒரு கைதிக்கு அனுமதி அளிப்பதை நியாயப்படுத்துவதும், சந்தைக்குச் சென்று காய்கறிகளை விற்றுவரக் கைதிகள் வேண்டிக் கேட்கும்போது நம்பிக்கையுடன் அவர்களை அனுமதிப்பதுமாக அந்தப் பாத்திரம் பார்த்துப் பார்த்துக் கருணையாளராகச் செதுக்கப்பட்டது.
திரைப்படத்தின் உச்சக்காட்சியில் கைதிகளை போதைக்கு உள்ளாக்கி உறங்கவைத்து, காளையை அவர்கள் மீது ஏவிவிடுவது கட்டுப்படுத்தப்படாத வன்முறையின் குறியீடாகப் பதிவாகிறது.
குற்றவாளிகள் மனம் திருந்துவதை ஏற்காத சமூகம் என்றைக்கும் நம்மில் ஒரு பகுதியாக இருக்கத்தான் செய்யும். போலவே, வணிகத்தில் போட்டிக்கு வருபவர்களை எப்படியும் அழிக்கவேண்டும் என்னும் எண்ணமும் நமது சமூகத்தின் ஒரு பகுதியில் இருப்பதை மறுக்க இயலாது. குற்றவாளிகளைத் திருத்தவும் அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் எப்படி முயற்சி செய்தாலும் அதை ஏற்காதவரும் சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருப்பர்.
அவர்கள் மாற்றங்களை சமூகத்தின் முன்னேற்றமாகப் பார்ப்பதினும் தங்களுடைய இருப்புக்கும் கொள்கைக்கும் எதிராகவே பார்க்கின்றனர். தங்களுடைய சொல்லுக்கு அந்த மாற்றங்கள் கட்டுப்படவில்லையென்றால், வன்முறையை ஏவிவிடவும் அவர்கள் தயங்குவதில்லை. கைதிகளை முட்ட வரும் காளை வன்முறையின் குறியீடு. தொடர்ந்து சாந்தத்தையும் கருணையையும் வெளிப்படுத்திச் செதுக்கப்பட்ட ஆதிநாத் உச்சக்காட்சியில் கைதிகளைக் காப்பாற்றக் காளையுடன் மோதித் தன் உயிரைத் தியாகம் செய்கிறது.
ஆதிநாத்தின் மரணத்துடன் திரைப்படம் கதைப்படி முடிந்தாலும், லதா மங்க்கேஷ்கரின் குரலில் ‘ஏ மாலிக் தேரே பந்தே ஹம்’ பாடல் முடியும் வரையிலும், கைதிகளின் விடுதலை அறிவிக்கப்பட்ட பின்பும் அவர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்லாமல் பாபுஜி என அவர்களால் அழைக்கப்பட்ட ஆதிநாத்தின் கனவான அந்த ஆசாத் நகரை மீண்டும் உருவாக்க அங்கேயே தங்குவார்கள் என்னும் வசனத்துடன் முடிகிறது.
மனதில் அமைதியை உண்டாக்கும் பாடலும், சன்னலிலிருந்து எங்களைப் பார்த்த பாபுஜியின் கண்கள் இப்போது விண்ணில் கலந்துவிட்டன என்னும் வசனமும் கதையை முடிப்பது ரசிகனைக் கனத்த இதயத்துடன் அரங்கிலிருந்து வெளியேறச் செய்யும். காவல்துறைக்கு ஜெயிலர், அதிகாரிகளுக்கு ஆதிநாத், கைதிகளுக்கும் சம்பாவுக்கும் பாபுஜி என மூன்று நிலைகளிலும் தன் இருப்பை நிரூபித்து திரை ரசிகனின் மனதிலும், இந்தியத் தபால் தலையிலும் நிரந்த இடத்தைப் பெற்றது அந்தக் கதாபாத்திரம்.
கோல்டன் குளோப் விருது, சிறந்த திரைப்படத்துக்கான இந்திய அரசின் விருது, பெர்லின் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் ‘வெள்ளிக் கரடி’ சிறப்புப் பரிசு, பன்னாட்டுக் கத்தோலிக்கத் திரை நிறுவன விருது என இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விருதுகள் பெற்ற ‘தோ ஆங்க்கேன் பாரா ஹாத்’ இந்தியத் திரை ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய திரைப்படம்.











