கிருஷ்ணப்ரசாத்
மற்றவர்களை அழிக்கவேண்டுமென மனிதர்கள் துடிப்பதற்கு காரணம் வெறுப்பு மட்டுமேயல்ல, தாங்களே ஏற்றுக்கொள்ள முடியாத தங்களைப் பற்றிய ஏதோ ஒரு உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாலேயே அவர்களை அழிக்கத் துணிகிறார்கள் என்ற தத்துவத்தை பேசும் திரைப்படம்.
க்ளெர் டெனிஸ் இயக்கத்தில் 1999 வருடத்தில் வெளியான பிரெஞ்சு திரைப்படம் BEAU TRAVIAL. உடல்களின் அசைவுகளைக் கொண்டு ஆதிக்க உணர்வுகளின் உளவியலை ஆழமாகப் பேசும் மாஸ்டர்பீஸ். ஹெர்மன் மெல்விலின் Billy Budd நாவல் தான் BEAU TRAVIAL படத்தின் அடிப்படை. ஜிபூட்டி பாலைவனத்தின் பின்னணியில் பிரெஞ்சு படையினரின் வாழ்க்கையை விவரிக்கும் படம். வியர்வை வழியும் ஆண்களின் இராணுவப் பயிற்சிகளை ஒருவித பாலே நடனத்தைப் போன்ற கவித்துவக் காட்சிகளாக எடுத்துக்காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆக்னெஸ் கொடார்.
செர்ஜன்ட் கலூப் மார்சேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக அமர்ந்து தன் நினைவுக் குறிப்புகளை எழுதும்போது, ஜிபூட்டியில் ஒரு பிரெஞ்சு ராணுவ வீரனாகத் தான் கழித்த காலத்தை நினைவுகூர்ந்து பார்ப்பதுடன் தொடங்குகிறது. இது நினைவுகள் வார்த்தைகளாகவும், வார்த்தைகள் காட்சிகளாகவும் மாறும் ஒரு விவரிப்பு. தனது புரட்சிகரமான அழகியலை எடுத்த எடுப்பிலேயே முதல் காட்சிகளில் இருந்தே நிறுவுகிறது படம். மக்கள் நெரிசல் மிகுந்த ஒரு ரயில், பாலைவனத்தின் வழியே அசைந்து செல்கிறது, பின்னர் திடீரென அது கிளப்பிச் செல்லும் மஞ்சள் நிறப் புழுதி, கைவிடப்பட்ட டாங்கிகள் மற்றும் மனித உடல்களின் நிழல்கள் போன்ற காட்சிகளுக்கு மாறுகிறது. அந்த அசைவுகள் ராணுவப் பயிற்சி என்பதை விட தியானம் செய்வது போலத் தோன்றுகின்றன. அதற்குப் பிறகு, ராணுவ வீரர்கள் ஒரு ஆன்மீகப் பயிற்சியில் கண்களை மூடியபடி இருக்கும் காட்சிகள் வெளிப்படுகின்றன.
பிரெஞ்சு வெளியுறவுப் படையில் பணியாற்றிய அதிகாரி கலூப், ஜிபூட்டி பாலைவனத்தில் தனது படை வீரர்களுடன் கழித்த நாட்களை மார்சேயில் இருந்தபடி நினைவுகூர்வதே இப்படத்தின் கதை. கலூப்பின் வாழ்க்கை மிகவும் கட்டுக்கோப்பாகவும், ஒழுக்கமாகவும் இருக்கிறது. ஆனால், அந்தப் படைப்பிரிவில் ஸாங்தேன் என்ற புதிய இளம் வீரர் இணைந்த பிறகு, கலூப்பின் மனதில் பொறாமை விதைக்கப்படுகிறது. தனது மேலதிகாரியான கமாண்டண்ட் புருனோவிடம் அவன் காட்டும் நெருக்கத்தையும் எதிர்வினையாக கமாண்டண்ட் அவரிடம் காட்டும் அன்பையும் கண்டு கலூப் பொறாமை கொள்கிறான். இந்தக் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவன் ஸாங்தேனை பழிவாங்கத் துடிக்கிறான். என்ன நடக்கிறது என்பது திரைக்கதை.
ஸாங்தேனின் வருகைக்குப் பின், அந்தப் பாலைவன முகாம் ஒரு மௌனமான போர்க்களமாக மாறுகிறது. கலூப் அவனைக் கவனிக்கும் ஒவ்வொரு கணமும் ஒரு கத்தி முனையின் மீதான பயணத்தைப் போன்றிருந்தது. மற்ற வீரர்கள் அவனது தலைமைக்குக் கீழ்ப்படிவது வெறும் அதிகாரத்திற்குப் பணிந்துதானே தவிர மனிதனாக இல்லை என்பதை, ஸாங்தேனின் முகத்தில் இருக்கும் இயல்பான புன்னகை அவனுக்குத் துல்லியமாக உணர்த்துகிறது.

முதன்மைக் கதாபாத்திரமான கலூப், இளம் வீரன் ஸாங்தேன் மீது கொள்ளும் விவரிக்க முடியாத பொறாமை, அடக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை ஈர்ப்பு மற்றும் அதிகாரப் போட்டி ஆகியவை படத்தின் மையக்கதைக்களமாக நகர்கிறது. வார்த்தைகளை விட பாலைவனத்தின் பரந்த வெறிச்சோடிய நிலப்பரப்பின் மௌனம். குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சியில் வரும் நடனம், கலூப்பின் இராணுவக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, தனது உண்மையான சுயத்தை நோக்கித் தவிக்கும் ஒரு மாபெரும் ஆன்மீக விடுதலையின் குறியீடாக முடிகிறது. இயக்குனர் க்ளெர் டெனிஸ் ராணுவப் பயிற்சிகளை ஒரு அழகான நடனமாக மாற்றியமைத்துள்ளார். அங்கு செய்யப்படும் ஒவ்வொரு அணிவகுப்பும் ஒருங்கிணைந்த அசைவுகளும் போருக்கான தயாரிப்பாகத் தெரியாமல், மனதிற்குள் அடக்கப்பட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே தெரிகின்றன. கதையின் நாயகனான கலூப் மன ரீதியான வீழ்ச்சியால் வேட்டையாடப்பட்ட ஒரு மனிதனாகவே தன் கதையைக் கூறுகிறான்.
பிரெஞ்சு ராணுவ வீரர்களின் சீருடைக்குத் தரப்படும் அதே முக்கியத்துவத்தை, அவர்களின் தோலின் நிறத்திற்கும், தசைநார்களின் அசைவிற்கும் கேமரா கோணங்கள் வழங்குகின்றன. நிலப்பரப்பின் வறட்சியும், மனித உடல்களின் வெதுவெதுப்பும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் ஒரு விசித்திரமான காட்சி மொழியை கொடார் அங்கே சாத்தியப்படுத்தியுள்ளார்.
வெறிச்சோடிய பாலைவனம் ஒரு உணர்ச்சிப் பூர்வமான நிலப்பரப்பாகச் செயல்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட அமைப்புகளுக்குள் இருக்கும் ஆண்மை என்பது, வலிமையால் உருவாகாமல் உணர்ச்சிகளை அடக்குவதன் மூலமே தக்கவைக்கப்படுகிறது என்பதை இந்த திரைப்படம் உணர்த்துகிறது. இயக்குனர் டெனிஸின் மிகக் குறைவான வசனங்கள், பார்ப்பவர்களை உடல் அசைவுகளை வைத்தே காட்சிகளை ஒரு கதையாகப் புரிந்து கொள்ள வைக்கின்றன. தொடக்கக் காட்சிகளிலிருந்தே, உண்மையான போர்க்களம் மனிதனின் உள்மன உலகம்தான் என்பதை அறிவிக்கிறது ‘போ த்ரவை’. மனதிற்குள் நிலவும் வெளிப்படுத்த முடியாத ஏக்கம், வெளியில் இருக்கும் எந்தவொரு எதிரியையும் விட மோசமான போரை நடத்துகின்றன என்பதை படம் நிறுவுகிறது. பிரெஞ்சு ராணுவப் பிரிவு என்பது பாலைவனத்தில் ஆண்கள் மட்டுமே வாழும் துறவற ஒழுக்கம் கொண்ட ஒரு மடாலயம் போன்றது என்பதை ஆரம்பக்காட்சிகளிலேயே உணர்த்திவிடுகிறது இந்தத் திரைக்கவிதை.
ஜிபூட்டியின் கரடுமுரடான எரிமலைப் பாறையை எதுவுமே இல்லாத ஒரு வெறிச்சோடிய நிலப்பரப்பாக நாம் காண்கிறோம். வெள்ளை உப்பளங்கள் நம் கண்களை வந்து உறுத்தும். படத்தின் மிக முக்கியமான பகுதி ராணுவ வீரர்களின் காலை நேர உடற்பயிற்சி. வெள்ளை நிற அண்டர்வேர்களை மட்டும் அணிந்துகொண்டு ஆண்கள் மேலாடை இல்லாமல் பாறைகளின் மேல் ஒரே சீராக உடற்பயிற்சி செய்கிறார்கள். கேமரா ஒரே இடத்தில் நிலையாக நிற்காமல் நகர்ந்து வீரர்களின் உடலை வருடுகிறது. வேர்வை சிந்தும் உடல்களுக்குப் பின்னால் அது மெதுவாகப் பின்தொடர்கிறது. புஷ்-அப்கள், லஞ்சஸ்கள், உடலை நீட்டி மடக்குதல் என இவையாவும் மனதைத் தூய்மைப்படுத்தும் சடங்குகள் போன்றவொரு உணர்வைத் தருகின்றன. இந்த காட்சிகளை வடிக்கையில் எந்த ஒரு ராணுவ முரசுகளையும் இயக்குனர் டெனிஸ் ஒலிப்பதிவிற்கு பயன்படுத்தவில்லை. சீரான மூச்சுக்காற்றுக்கும், பூட்ஸ் காலணிகளுக்கும் கீழே கூழாங்கற்கள் நசுங்கும் உராய்வு சத்தம் மட்டுமே நமக்குக் கேட்கிறது.
வீரர்களின் உடலே ஒரு இசைக்கருவியாக மாறுகிறது. வலியை விரும்பும் ஒழுக்கத்தின் இசை இப்படித்தான் இருக்குமா என்ற எண்ணத்தை நமது மனதிற்குள் எழுப்புகிறது.
கமாண்டன்ட் கலூப்பின் பின்னணிக் குரல் பல காட்சிகளில் நமக்குக் கேட்கிறது. உணர்ச்சியற்ற ஒரு ராணுவப்பதிவின் புத்தக இலக்கணத்தோடு அது இருக்கிறது. அவனது குரலின் தன்மையைக் கவனித்துப் பார்த்தால் தன் உணர்ச்சிகளை மிக ஆழமாகப் புதைத்து, இறுகிப் போய்விட்ட ஒரு மனிதனின் குரலாக இருக்கிறது. வீரர்களைத் தனது உடைமை போலக் குறிப்பிடுகிறான். ஆனால், கேமரா அவனை அம்பலப்படுத்துகிறது. அவனது குரல் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும்போது, கேமராவோ ஒரு வீரனின் முதுகெலும்பு வளைவு, கழுத்தில் மின்னும் வேர்வை, இளமை ஆகியவற்றின் மேல் நீடிக்கிறது. அவனது குரல் ஒழுக்கம் என்று சொன்னாலும் திரைப்படக்காட்சியோ அதை காமம் என்று சொல்கிறது.
இந்த உடற்பயிற்சிகள் யாவும் அவர்களின் உடலை வலுவாக்குபவை அல்ல, மாறாக அவர்களின் ஆன்மாவை ஒடுக்குவதற்காகக் கலூப் வகுத்த விதிகள். வீரர்கள் ஒருவரையொருவர் தாங்கிப் பிடிக்கும் அந்தத் தருணங்களில், ராணுவ விதிகளையும் தாண்டிய ஒரு ஆழமான தோழமையும், பகிரப்படாத பாசமும் வெளிப்படுவதை கேமரா நுணுக்கமாகப் படம்பிடிக்கிறது; இதைக் காணும் கலூப்பின் நெஞ்சு அசெளகரியத்தால் நிறைகிறது.
திரைப்படத்தின் படத்தொகுப்பு இந்த உளவியல் போராட்டத்திற்கு மற்றொரு பரிமாணத்தைத் தருகிறது. எடிட்டர் நெல்லி குவெட்டியர், நேர்க்கோட்டில் அமையாத ஒரு எடிட்டிங் பாணியைப் பயன்படுத்தியுள்ளார். கலூப்பின் மார்சே நகரத்தின் தனிமை, ஜிபூட்டி பாலைவனத்தின் கடந்த காலம், மற்றும் கிளப் ஒன்றில் நடக்கும் நடனக் காட்சிகள் என இவையாவும் ஒன்றிற்குள் ஒன்று அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன. பின்னணியில் கேட்கும் பெஞ்சமின் பிரிட்டனின் ‘பில்லி பட்’ ஓபரா இசை, ராணுவ விதிகளின் இறுக்கத்திற்கு ஒரு காவியத் தன்மையைக் கொடுக்கிறது. வழக்கமான மிலிட்டரி படங்களைப் போல வசனங்களின் மூலம் கதையை நகர்த்தாமல், மௌன இடைவெளிகள் மற்றும் இசையின் தாளலயம் மூலமாகவே இயக்குனர் டெனிஸ் காட்சிகளைக் கடத்துகிறார்.
ஒரு 19 ஆம் நூற்றாண்டு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும், நினைவு, அடையாளம் மற்றும் பாலியல் உணர்வுகளை முற்றிலும் காட்சி மொழியின் மூலமாக இந்த திரைக்கதை ஆராய்கிறது. கலூப்பினுடைய மனதை அரிக்கும் உள்மன உணர்வுகளுடன் படம் தொடங்குவதால் அவனது குரல், இந்தத் திரைப்படத்தை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக மாற்றுகிறது. கடுமையான ராணுவ ஒழுக்கத்திற்கும், அடக்கப்பட்ட தனிப்பட்ட மனப் போராட்டத்திற்கும் இடையே உள்ள பதற்றத்தை அந்த குரல் நிறுவுகிறது. வெயில் சுட்டெரிக்கும் பாலைவனமான ஜிபூட்டியின் நிலப்பரப்பில், பிரெஞ்சு ராணுவப் பிரிவு ஒரு கூட்டு நடன மேடையாக சித்தரிக்கப்படுகிறது. அந்த நிலத்திற்கு அவர்கள் ஒவ்வொருவரும் அந்நியமாக இருக்கிறார்கள். எல்லாராலும் விரும்பப்படும் புதிய வீரனான ஸாங்தேனின் வருகை, இந்த பலவீனமான சமநிலையைக் குலைக்கிறது. இவனுடைய வருகை கலூப்பிற்குள் ஒரு ஆத்திரத்தை கிளப்பிவிடுகிறது. ஆராய்ந்து பார்க்கப்படாத கட்டுப்பாடு எப்படி ஒரு மனிதனை அவனிடமிருந்தே அந்நியப்படுத்துகின்றன என்பதை சில காட்சிகள் காட்டுகின்றன.
பிரெஞ்சு மிலிட்டரி சிஸ்டம், மனித உணர்ச்சிகளை முற்றிலும் உறைந்து போகச் செய்யும் ஒரு குளிர்சாதனப் பெட்டி மாதிரி இயங்குகிறது. மிலிட்டரி விதிமுறைப்படி தண்டனை என்பது ஒரு மெஷின் புரோகிராம் மாதிரி நடக்க வேண்டும், ஆனால் ஸாங்தேன் அங்கே பாமர உணர்வு என்கிற வைரஸைப் புகுத்துகிறான். கலூப்பிற்கு ஏன் கோபம் வருகிறது என்றால், ஸாங்தேன் காட்டும் அந்த அன்பு, தார்மீக ரீதியாகத் தன்னைவிட உயர்ந்த இடத்தில் அவனை வீரர்களுக்கிடையே உட்கார வைக்கிறது என்பதை அவனுடைய மனது உணர்ந்து விடுகிறது. ஸாங்தேன் எந்தவொரு பயமும் இல்லாமல் வாழ்கிறான் என்பதுதான் அவன் மீதான கலூப்பின் வெறுப்பிற்கு ஆழமான காரணம். ஒரு சிறந்த போர்வீரனாக மாறுவதற்காக கலூப் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டிருக்கிறான். அவன் விதிகளைப் பின்பற்றுகிறான், தன் உணர்ச்சிகளை மறைக்கிறான், தன் உடலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான், கடுமையான ஒழுக்கம்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது என்றும் நம்புகிறான். ராணுவப் படை இல்லையென்றால் தான் யார் என்பதே அவனுக்குத் தெரியாது. ஆனால் ஸாங்தேனோ, அதே விதிகளைப் பின்பற்றியபடியே தன் மனிதத்தன்மையையும் தக்கவைத்துக் கொள்கிறான். அவன் மற்றவர்களுக்கு இயல்பாக உதவுகிறான், எளிதாகப் புன்னகைக்கிறான், தன் அகச் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்கிறான். இது கலூப்பிற்குள் ஒருவித அசெளகரியத்தை உண்டாக்குகிறது.
கடுமையான ஒழுக்கத்திற்கு கருணையை கொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை ஸாங்தேனின் நடத்தை நிரூபிக்கிறது. கலூப்பால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், அதை ஒப்புக்கொண்டால் தான் வாழும் இந்தச் சிறையைத் தானே கட்டிக்கொண்டேன் என்பதை அவன் ஒப்புக்கொள்ள வேண்டிவரும். அதனால், தன்னை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக, தான் எதையெல்லாம் இழந்துவிட்டோம் என நினைவூட்டும் அந்த மனிதனையே நீக்க முயல்கிறான். உண்மையில், கலூப்பிற்குள் இருக்கும் பயம்தான் அவனது எதிரி.
ஒரே ஒரு கணம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், இந்த ராணுவச் சீருடைக்குக் கீழே தனக்கென்று எதுவுமே மிஞ்சியிருக்காது என்பதைத் தான் கண்டுகொள்ள நேரிடுமோ என்கிற பயமே அவனது எதிரி. மற்ற வீரர்களைப் போல கலூப் ராணுவப் பாசறையில் வாழவில்லை என்பதை டெனிஸ் நமக்குக் காட்டுகிறார். அவன் ஒரு சிறிய வெள்ளை நிற அறையில் வாழ்கிறான். அது ஒரு சிறையைப் போலவே உள்ளது. தனக்குள் உருவாகும் குழப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், தன் சுற்றுப்புறத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு இடமாக அவன் அதை வைத்திருக்கிறான். கலூப்பின் தனிமையின் பாரத்தை இத்திரைப்படம் நம்மை உணர வைக்கிறது. மற்றவர்கள் உணவையும் சிரிப்பையும் பகிர்ந்து கொள்ளும்போது அவன் தன் அறையில் தனியாக அமர்ந்திருக்கும் விதம், அவர்கள் மீதான அவனது அதிகாரம் என்ற போர்வையில் பெயரிடப்பட முடியாத ஏதோவொரு ஏக்கம் தான் என்பதை உணரவைக்க முயல்கிறார் இயக்குனர்.
உள்மனப் போரை வெளிப்படுத்த இயக்குனர் டெனிஸ் மிகச் சிறிய அசைவுகளையே பயன்படுத்துகிறார். கலூப் மிகுந்த கவனத்துடன் தன் கத்தியை தீட்டும் விதம், ஸாங்தேன் புன்னகைக்கும்போது அவனது தாடை இறுக்கமடையும் விதம், ஸாங்தேனின் பெயரை அவன் சொல்லும்போது அவனது குரல் ஒரு கிசுகிசுப்பாகக் குறையும் விதம். ஒரு தளபதி தனது ஒழுக்கத்திற்கும் கடமைக்கும் இடையே வாழ்ந்துகொண்டு திடீரென்று அந்த ஒழுங்கையே அர்த்தமற்றதாக மாற்றிய மனிதனை அழிக்க வேண்டும் என்ற தூண்டுதலுக்கு இடையே சிக்கி, உள்ளுக்குள் உடைந்து நொறுங்குவதை அப்பட்டமாக படம்பிடித்திருக்கும் இயக்குனரின் உலகத்தர இயக்கத்தை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.
ஸாங்தேன், வீரர்களுக்கு உதவுவதையும், அவர்களது தோள்களை உண்மையான அன்போடு தொடுவதையும் ஒரு ஓரத்திலிருந்து கவனிக்கும் கலூப்பின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவனது அந்த அசைவற்ற நிலை பல கதைகளைப் பேசுகிறது. ஏனெனில், இந்த மனித நேயத்தின் வெதுவெதுப்பில் அவனால் ஒருபோதும் பங்கெடுக்க முடியாது, தூரத்திலிருந்து அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்ற இயலாமை அவனது பொட்டில் அடிக்கிறது. இந்த இடத்தில் தான் கதை பொறாமை என்னும் நஞ்சிற்குள் ஆழமாக ஊடுருவுகிறது. ஸாங்தேன் அந்தப் படைப்பிரிவோடு மிக கச்சிதமாகப் பொருந்திப் போவதையும், தான் ஓரங்கட்டப்படுவதையும் கலூப் கவனித்துக் கொண்டிருக்கிறான். சிறிய தண்டனைகளுடன் தன் வன்மத்தைத் தொடங்குகிறான். அந்த இளம் வீரனின் நற்பண்பையே அவனுக்கு எதிராகப் பயன்படுத்தி அவனை உடைப்பதற்கான ஒரு திட்டமாக அதை மாற்றுகிறான். ராணுவம் எவ்வாறு மனிதர்களை எந்திரங்களாக மாற்றுகிறது என்பதையும், அன்பு என்ற பிணைப்பிற்கான ஏக்கம் அவர்களுக்கு ஆபத்தானதாக மாறும் வரை எவ்வாறு சீருடைக்குள் மறைக்கப்படுகின்றன என்பதையும் இத்திரைப்படம் காட்டுகிறது.
காலங்காலமாகத் தான் கடைப்பிடித்து வரும் கடுமையான ஒழுக்கத்தால் சாதிக்க முடியாத ஒரு தார்மீக உயர்வை ஸாங்தேன் மிக எளிதாகத் தன் அன்பின் மூலம் அடைந்துவிடுகிறான். அவனையே அவனுக்கு நினைவூட்டும் ஒரு கண்ணாடியாக ஸாங்தேன் இருப்பதால் அந்தப் பிம்பத்தை உடைக்க கலூப் வன்முறையைக் கையில் எடுக்கிறான். ஸாங்தேனை அழிப்பதன் மூலம் தான் வாழும் இந்த எந்திரத்தனமான வாழ்க்கையே சரியானது என்று தனக்குத்தானே நிரூபித்துக் கொள்ளப் பார்க்கிறான்.
கலூப்பின் ராணுவச் சீருடை அவனுக்கு ஏற்கனவே தயாராக வடிவமைக்கப்பட்ட ஒரு அடையாளத்தைத் தருகிறது. அவன் எப்படி நிற்க வேண்டும், எப்படி நகர வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அவனது வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை எல்லாம் அவனுக்கது சொல்லிக் கொடுக்கிறது. இந்த விதிகளைப் பின்பற்றும் வரை, தான் உண்மையில் யார் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமே அவனுக்கு ஏற்படவில்லை. ஆனால் ஸாங்தேனுக்கோ இத்தகைய தற்காப்பு எதுவும் தேவைப்படவில்லை. அவனது அடையாளம் அவனுக்குள்ளிருந்து வருகிறது, அவனது சீருடையிலிருந்து அல்ல. இந்த வித்தியாசம்தான் கலூப்பிற்குள் அகப் போராட்டத்தை உருவாக்கியிருக்கிறது.
ஒழுக்கத்தையும் அடையாளத்தையும் குழப்பிக் கொண்டோமோ என்பதை அவன் உணரத் தொடங்குகிறான். தான்தான் அந்தச் சீருடையை ஆள்வதாக அவன் நினைக்கிறான், ஆனால் அந்தச் சீருடைதான் அவனை ஆள்கிறது. கலூப் பல வருடங்களாக அணிந்திருக்கும் முகமூடியைச் ஸாங்தேன் தற்செயலாகக் கழற்றிவிடுகிறான். அந்த முகமூடியில் ஒருமுறை விரிசல் விழத் தொடங்கியதும், கலூப்பால் அந்தச் சிதைவைத் தடுக்க முடியவில்லை. அவன் ஸாங்தேனை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்த முயல்கிறானோ, அந்த அளவுக்கு அவன் தன் மீதான கட்டுப்பாட்டையும் இழக்கிறான். கலூப்பின் மிகப்பெரிய இழப்பு அவனது வேலையோ அல்லது அவனது பதவியோ அல்ல. ஒரு போர்வீரனாக மாறுவதற்கு முன்பாகத் தான் யார் என்பதை அவன் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் அவனது இழப்பு.
அந்த வன்முறை வெளியேறுவதற்குக் ஒரு சிறிய விரிசலுக்காகக் காத்திருக்கிறது. வீரர்கள் அணிவகுத்துச் செல்கிறார்கள், உண்கிறார்கள், உறங்குகிறார்கள், இதையே மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். இந்தத் தொடர் மறுநிகழ்வு அவர்களின் தனிப்பட்ட ஆசைகளையும் பயங்களையும் அழித்து, அவர்களை ஒரு கீழ்ப்படியும் எந்திரமாக மாற்றியிருக்கிறது. ஆனால் கேமராவோ, அந்த எந்திரம் தோற்கும் தருணங்களைப் படம்பிடிக்கிறது. மிக நீண்ட நேரம் நிலைத்து நிற்கும் ஒரு பார்வை, கடந்து செல்லும்போது உரசும் ஒரு தோள், சற்றே கூடுதல் வெதுவெதுப்பைக் கடத்தும் ஒரு சிரிப்பென. வீரர்கள் ஒரு சிறிய நெருப்பைச் சுற்றி அமர்ந்து கதைகளைப் பேசுகிறார்கள். ஸாங்தேன் அங்கே தன்னிச்சையாகச் சிரிக்கிறான். கலூப்போ அந்த நெருப்பு வெளிச்சத்திற்கு அப்பால் இருக்கும் இருட்டில் நின்றபடி அந்த சிரிப்பை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனது முகம் பாதி வெளிச்சத்திலும் பாதி இருட்டிலும் மறைந்திருக்கிறது. அந்த வெதுவெதுப்பிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற தூண்டுதலுக்கும், அதை எப்படிச் செய்வது என்பதைத் தான் எப்போதோ மறந்துவிட்டோம் என்ற யதார்த்தத்திற்கும் இடையே அவன் சிக்கித் தவிக்கிறான். படத்தின் சோகம் இந்த காட்சியில் தான் ஒரு தெளிவான வடிவத்தைப் பெறுகிறது. இயக்குனர் டெனிஸ் இந்த காட்சியை இயக்கிய என் மனதை உலுக்கிவிட்டது.
கலூப் தன் கைப்பட எழுதும் நாட்குறிப்பின் ஒவ்வொரு வரியிலும் அதிகாரப்பூர்வமான பொய்களை கொண்டு தன் வன்மத்தை நியாயப்படுத்த முயன்றாலும் அவனது நடுங்கும் விரல்கள் அவனுக்குள் இருக்கும் பயத்தையே காட்டுகின்றன. அந்தப் பாலைவனத்து நெருப்பு வெளிச்சத்திற்கு வெளியே இருட்டில் நிற்கும் கலூப் உண்மையில் ஒட்டுமொத்த மனித சமூகத்திலிருந்தே அந்நியப்பட்டு நிற்கும் ஒரு ஆத்மாவை போன்ற எண்ணத்தை உருவாக்குகிறான்.
எல்லையற்ற கடலைப் பார்ப்பது ஸாங்தேனுக்குள் இருக்கும் சாகாத சுதந்திரத்தின் அடையாளம் என்றால், தன் அறையில் பூட்ஸ்களைத் துடைப்பது கலூப் தனக்குத்தானே விதித்துக் கொண்ட வாழ்நாள் சாபம். இறுதியில் ஸாங்தேனின் உடலைத் தண்டிக்கப் பயன்படுத்துகின்ற கலூப் பயன்படுத்தும் மிலிட்டரி சடங்குகள் யாவும் அவனுக்குக் கிடைக்காத உன்னதமான அன்பையும் சுதந்திரத்தையும் வன்முறையாக மாற்ற நினைப்பது அவனது மனதின் பரிதாபகரமான மனப்பிறழ்வு நிலை.
சரியான நேரத்திற்கு எழுவது. பூட்ஸ்களைப் பாலிஷ் செய்வது. உடலை வறுத்திக் கொள்வது. கட்டளைக்குக் கீழ்ப்படிவது. சிந்தனையை விட செயல்களே வலிமையானதாக மாறும் வரை, ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வது. ஒரு போர்வீரனுக்கு இது பயனுள்ளதுதான் ஏனென்றால், போர்க்களத்தில் ஒரு நொடித் தயக்கம் கூட ஆபத்தானது. ஆனால், இந்த வாழ்க்கை முறையே தனது ஒட்டுமொத்த அடையாளமாக மாறிவிட்டால் என்னவாகும் என்ற கேள்வியை இத்திரைப்படம் எழுப்புகிறது. தனக்கு என்ன வேண்டும், தான் எதை நேசிக்கிறோம் அல்லது எதற்கு அஞ்சுகிறோம் என்ற கேள்விகளைக் கலூப் தனக்குள்ளே கேட்பதை மெல்ல நிறுத்திக் கொள்கிறான். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இனி முக்கியமில்லை. ஏனெனில், அவனுக்கான அடுத்த உத்தரவு எப்போதும் ஏதோவொரு காத்துக்கொண்டிருக்கிறது.
ஸாங்தேன் வருகிறான். அவனும் இதே கவாத்துப் பயிற்சிகளைத்தான் செய்கிறான், ஆனால் அவன் உணர்வு ரீதியாக ஒருபோதும் அடைபட்டுப் போவதில்லை. காயமடைந்த ஒரு சக வீரனுக்கு, யாரையும் கவர வேண்டும் என்ற எண்ணமில்லாமல் அவன் இயல்பாக உதவுகிறான். புகழ்ச்சியை எதிர்பார்க்காமல் கடினமாக உழைக்கிறான். கலூப்பால் இதைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. ஏனென்றால், ஒரு சிறந்த போர்வீரனாக மாற வேண்டுமென்றால் தன் மனிதத்தன்மையின் ஒரு பகுதியைத் தியாகம் செய்தே தீர வேண்டும் என்று அவன் நம்புகிறான். ஆனால் ஸாங்தேனோ அதற்கு நேர்மாறானதை நிரூபிக்கிறான். இந்த ராணுவம் உடலை வடிவமைக்கலாமே தவிர, மனதின் நெகிழ்வுகளை அழிக்கமுடியாது என்பதை அவன் காட்டுகிறான். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது கலூப்பிற்கு தாங்க முடியாத பாரமாக இருக்கிறது. அதனால், தன்னை நோக்கி கேள்விகளை எழுப்புவதற்குப் பதிலாக, அவன் ஸாங்தேனை நோக்கிக் கேள்விகளை எழுப்புகிறான். அந்த ஒரே ஒரு தவறுதான், அவனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மெதுவாகச் சிதைத்து அழிக்கிறது.
கலூப்பாக நடித்திருக்கும் டெனிஸ் லாவந்த், தன் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல், தன் உடல் அசைவுகள் மற்றும் இறுக்கமான பார்வையின் மூலமாகவே ஒரு மனிதனின் உள்மனச் சிதைவை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். அவருக்கு நேர்மாறாக, ஸாங்தேனாக வரும் க்ரேகோயர் கொலின், தளர்வான உடல்மொழியுடனும், தடையற்ற அசைவுகளுடனும் விடுதலையின் வடிவமாகத் திகழ்கிறார். நடன அமைப்பாளர் பெர்னார்டோ மாண்டெட் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட வீரர்களின் ஒவ்வொரு அசைவும், நடிப்பையும் தாண்டி காட்சிகள் யாவும் ஒரு தூய்மையான நடனமாக மாறியிருப்பது இயக்குனரின் அசாத்திய உருவாக்கத்திற்குச் சான்று.
சார்ஜென்ட் கலூப் தன் சீருடையையும், ராணுவ விதிகளையும் மட்டுமே தன் அடையாளமாகக் கொண்டு ஒரு போலிக் கோட்டையைக் கட்டியிருந்தான். ஆனால், ஸாங்தேனுடைய இயல்பான வசீகரமும், மனிதநேயமும், சுதந்திரமும் கலூப்பின் தற்காப்பு முகமூடியை அப்பட்டமாகக் கிழித்துக் காட்டுகின்றன. பாலைவனத்தின் பரந்த வெற்றுச் சூனியம் என்பது, உண்மையில் எதையும் உணர மறுத்துத் வறண்டுபோன கலூப்பின் இதயத்தின் பிரதிபலிப்புதான். இறுதியில், ராணுவச் சீருடை இல்லாத அவனது எஞ்சிய வாழ்க்கை அவனுக்கு ஒரு பெரும் தண்டனையாக மாறுகிறது. விதிகளாலும் அதிகாரத்தாலும் ஒரு மனிதன் தன் உடலைக் கட்டுப்படுத்தலாமே தவிர, தனக்குள் தகிக்கும் அசல் மனித உணர்வுகளையோ, பாலியல் ஒடுக்குமுறையையோ, அன்பிற்கான ஏக்கத்தையோ ஒருபோதும் கொன்றுவிட முடியாது என்ற இருத்தலியல் உண்மையை இத்திரைப்படம் கவித்துவமாக உணர்த்தி முடிகிறது. ‘போ த்ரவை’ என்றால் அழகான உழைப்பு என்று அர்த்தம். இத்திரைப்படத்தின் சூழலில் இந்தத் தலைப்பு ஒரு முரண்நகை. பாலைவன வெயிலில் வீரர்கள் செய்யும் மிகக் கடுமையான, சோர்வூட்டும் உடற்பயிற்சிகளையும் கவாத்துகளையும் பார்ப்பதற்கு ஒரு நடனம் போல ‘அழகிய உழைப்பாக’ டெனிஸ் காட்சிப்படுத்தியிருப்பார். உண்மையில் அவை கடின உழைப்பு.
இறுதியில், ராணுவச் சடங்குகள் யாவும், ஒரு மனிதனின் ஆன்மாவைத் தின்றுதீர்த்த வெற்றுச்சடங்குகளாக மட்டுமே எஞ்சிநிற்கின்றன.











