ரமேஷ் வைத்யா
‘ராத்திரி நேரத்தில் ராட்சஸப் பேய்களின் ஸ்டார் வார்ஸ்
திரும்பிப் பார்
ஆத்திரம் கொண்டன அதிசயப் பிராணிகள் ஸ்டார் வார்ஸ்
நெருங்கிப் பார்
திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்’
என்று பாட்டுப் பார்க்கும்போது, வயதுக்கு வந்துவிட்ட வயது. ராட்சஸன் வேறு பேய் வேறு என்று நினைத்திருக்க, இது ஏதோ ராட்சஸப் பேய் போலிருக்கிறது என்று பார்த்தாலும், சும்மா வீடியோ கேம்ஸ் பார்ப்பது போல்தான் காட்சி இருந்தது. பயமெல்லாம் இல்லை.
ஆனால், பேய்க்கு நடுங்கி, ஆனால், ஆசைப்பட்டு காசு களவாண்டுகூட பேய்ப் படங்கள் பார்த்த காலம் ஒன்றும் இருந்தது.
நினைவு தெரிந்து குலை நடுங்கியது ஒரு படம். இங்கிலீஷ். ஈவில் டெட். எங்கள் ஊருக்கு அப்போது வீடியோ ப்ளேயர் அறிமுகம் ஆகியிருந்தது. ஊருக்கு என்றால் ஊரில் ஒருவர் வைத்திருப்பார். அதை வைத்து சிறிய அளவில் சினிமா தியேட்டரே நடத்தினார்கள். மெயின் பஜாரில் ஒரு கடை வாசலில் முக்காலி போர்டு ஒன்று இருக்கும். அதில், இன்று வெள்ளை ரோஜா என்று அறிவிப்பு காணப்படும். நேரத்தை ஒட்டிப் போனால், ரெண்டு ரூவாய் வாங்கிக்கொண்டு உள்ளே விடுவார்கள். அப்போது ஏசி தியேட்டரின் டிக்கெட்டே மூன்று ரூபாய்தான். ஆனால், இதில் பிரத்தியேகமாக நமக்காகப் படம் போடுகிறார்கள் என்ற ஃபீலிங் கிடைக்கும். டிவியில்தான் படம் ஓடும். இடைவேளையில் அட்டகாசமான டீ வேறு கொடுப்பார்கள். மதுரை, கம்பத்தில் ரிலீஸ் ஆகி தேனிக்கு வராத படமாக இருக்கும். அதைப் பார்த்துவிட்டு வருவோம்.
இது வீடியோ கேஸட் ப்ளேயர் என்றால் என்னவென்றே தெரியாத காலம். கூடிய சீக்கிரத்திலேயே நான்கைந்து பேர் வீடியோ ப்ளேயர் வாங்கிவிட்டார்கள். அவர்கள், குறிப்பாக, பாட்டை காலி ஆடியோ கேஸட்டுகளில் ரெக்கார்டு செய்து தெரும் ரெட்கார்டிங் சென்டர் கடைக்காரர்கள். அதை வாடகைக்கு விட ஆரம்பித்தார்கள். நாள் வாடகை. கூடவே வீடியோ கேஸட்டும் வாடகைக்கு எடுக்க வேண்டும்.
ஒருவன் வீட்டில் பெரியவர்கள் ஊருக்குப் போய்விட வீட்டில் அவன் மட்டும்தான். நண்பர்கள் நாலைந்து பேர் சேர்ந்து வீடியோ ப்ளேயர் வாடகைக்கு எடுக்கத் திட்டமிட்டோம். அப்படி எடுத்த படம்தான் ஈவில் டெட். அதைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம் இருந்தது. தூர தேசமான சென்னையில் எக்ஸார்சிஸ்ட், ஓமன் போன்ற படங்கள் வந்து சக்கைப்போடு போடுகின்றன என்ற தகவலை விகடன், குமுதத்தில் வாசித்துத் தெரிந்துகொண்டிருந்தோம். எக்ஸார்சிஸ்ட் படத்தைத் தனியாக தியேட்டரில் உட்கார்ந்து பார்த்து முடித்துவிட்டால், (உயிரோடு வெளியே வந்தால்) ஒரு பவுன் மோதிரம் பரிசாகக் கொடுக்கிறார்களாம் என்ற வதந்தியெல்லாம் உலவியது.
நாங்கள் கேட்டபோது ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக ஈவில் டெட்தான் கிடைத்தது. இருப்பதை வைத்து சந்தோஷப்படுவோம் என்ற தத்துவக் கண்ணோட்டத்தில் வாங்கிவந்தோம். போட்டால்… பயங்கரம். முதலில் ஒரு பேய் வரும்வரைதான் கொஞ்சம் அறுவையாக இருந்தது. முதல் பேய் வந்து அது கடிக்க மற்றொருவன் பேயாகிவிட்டான். அவனிடம் கடிபட்டு இன்னொருத்தி மேலும் பேயானாள். பிற்காலத்தில்தான் அது சாதாரணப் பேயில்லை, பேயின் உட்பிரிவான ஸோம்பியின் ஒன்றுவிட்ட Deadites என்று தெரியவந்தது. எனக்கு ஸோம்பி பிடிக்கும் என்பதால் அப்படியே வைத்துக்கொள்வோம். ஒரு ஸோம்பியைப் பார்த்து பயந்து ஓடினால், தரைப் பகுதியின் மரச் சட்டங்கள் விலகி, கீழே இருந்து தலை நீட்டும் மற்றொரு ஸோம்பி காலைக் கடிக்கும். ஓடுபவன் இப்போது புது ஸோம்பி ஆகிவிடுவான். இப்படி நினைக்காத ஆளெல்லாம் ஸோம்பிப் பேய் ஆகிவிடுவார்கள். சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பான், திடீரென்று கோரைப்பல் நீண்டு கடித்து வைப்பான். அறிவாளியான சைக்கியாட்ரிஸ்ட்டாக இருப்பான். அவனும் கடிபட்டு ஸோம்பியாகியிருப்பான்.
நான் தற்போதைய (2026) தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உருவகமாகச் சொல்கிறேனென்றுதானே நினைத்தீர்கள்… கிடையாது, ஈவில் டெட் கதையைத்தான் சொல்கிறேன்.
என்னதான் இருந்தாலும் மண்ணின் மைந்தனாக உணரும் எனக்கு தமிழ்ப் பேய்களே பிரியப்பட்டவை. அதனால், தியேட்டர் தேடிப்போய்ப் பார்த்துவிடுவது. உயர்நிலைப் பள்ளிக்கும் வந்தாயிற்று என்பதால், காலையும் மதியமும் முதல் பீரியட் முடிந்ததும் குண்டோட்டம் குதிரோட்டமாக ஓடி தியேட்டர் தியேட்டராகப் படம் பார்ப்பது வாலாயமாகிவிட்டிருந்தது.
13ம் நம்பர் வீடு என்று போஸ்டர் பார்த்தோம். பாழடைந்த பங்களா. வெளியே பாழடைந்த மரம். அதில் ஊஞ்சலாடும் ஒரு பாழடைந்த சிறுமி. ஈர்த்தது. உள்ளே போய் செட்டில் ஆனோம். எதிர்பாராத திருப்பம். ஜெய்சங்கரும் நிழல்கள் ரவியும் லீட் ரோல்கள். அண்ணன் தம்பி. இவர்கள் ஒரு பங்களாவை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். பழைய பங்களாவை எழவு இவர்கள் புதிதாக வாங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஓராளின் போட்டோவைப் பார்த்து சகோதரர்களின் அம்மா பேசுகிறார்: “என்னங்க, உங்களுக்கு வாழ்க்கைப் பட்டு ஒரு நாள்கூட நான் சந்தோஷத்தை அனுபவிக்கல. ஆனா உங்களோட வாழ்ந்ததுக்கு அடையாளமா ரெண்டு குழந்தைகளைக் குடுத்துட்டுப் போயிட்டீங்க.”
இந்த வசனம்தான் அப்போது புரியவில்லை. இப்போதும் புரியவில்லை. புரியாததிலேயே ரெண்டு வெரைட்டி.
ஜெய்சங்கர் ஸ்ரீப்ரியா கல்யாண வாழ்வும், நிழல்கள் ரவி சாதனா காதல் கதையுமே ரொம்ப நேரம் வருவதால், நம் தலையெழுத்து பேய்க்காக எல்லாம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.
பேயின் அடிப்படையாக அடிக்கடி ஒரு பொம்மையைக் காட்டினார்கள். அது நவீன கவிதைத் தொகுப்பின் அட்டைப்படமாக வைத்துக்கொள்ளத் தக்கது என்றுதான் தோன்றியது. லலிதகுமாரி பேய்க் கடாட்சத்தோடு வந்து போனாள்.
பேயினால் ஏற்பட்ட திகிலெல்லாம் என் அபிமான நாயகன் நிழல்கள் ரவி சண்டை போடும் காட்சியால் சமாதானமாகிவிட்டது.
பேய்ப் படங்களில் நிலைக்கண்ணாடி ஒரு ஸ்தாவர ஜங்கம ப்ராப்பர்ட்டி. கண்ணாடியில் பேய் பிரதிபலிப்பதும் திரும்பிப் பார்த்தால் மறைந்துவிடுவதுமாக திகில். பேயோட்டி வந்து சேர எடுத்துக்கொள்ளும் நேரத்தில் நிலைக் கண்ணாடிகளை ஒழித்துவிட்டால், பேயை ஓட்டிவிடலாம் என்று தோன்றியது.
தலைவன் ரஜினி என்பதால் ஆயிரம் ஜென்மங்கள் படத்துக்குக் கூடுதல் ஆர்வம். எப்படிப்பட்ட பேய் என்றாலும் அவர் கந்துகந்தாகப் பிய்த்து எறிந்துவிடுவார் என்று தெரிந்தாலும் சும்மாப் பார்ப்போமே என்று ஒரு தோணல். அந்தப் படத்தின் பேய்க் காட்சிகளைவிட, அண்ணன் தங்கை பாசக் காட்சியே நினைவில் நின்றது.
அண்ணன் ரஜினி ஃப்ளைட்டில் இருந்து இறங்கி ஸ்டெயிலாக கைவீசி நடந்து வருகிறார். அதன் பிறகு ஸ்டெயிலாக காரில் ஏறி வீட்டுக்கு வருகிறார். தங்கச்சி லதா ஆசையாக அண்ணனை வரவேற்கிறாள். நேராக டைனிங் டேபிளில் போய் உட்காரும் அண்ணன் ரஜினி: “வாய்க்கு ருசியா சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு தெரியுமா?” என்று ஏங்குகிறார். அப்போது தங்கை லதா சொல்கிறாள்: “அதாண்ணே உங்களுக்குப் பிடிச்ச இட்லியும் மிளகாய்ப்பொடியும் பண்ணியிருக்கேன்.”
வசனகர்த்தாக்களிலேயே சிறந்தவரைத்தான் ரஜினி படத்துக்குப் போடுவார்கள்.
பேய்களின் வெற்றியைப் பொறுத்து பேய் சீஸன் மிளிரும்.
ஆயிரம் ஜென்மங்கள், வா அருகில் வா, மை டியர் லிசா என்று எங்கள் பேய் யாத்திரை தொடர்ந்தது. சிறிய இடைவெளிவிட்டு சாக்லேட் பாய் மோகன், முகத்தைச் சிதைத்துக்கொண்டு ‘உருவம்’ படத்தில் மிரட்டினார்.
பழைய காலத்தில் பார்த்த ப்ளாக் அண்ட் வைட் ‘யார் நீ’ படத்தில் எல்லாம் பாடல்களும் மிரட்டின. பேய்ப்பாட்டு என்பது தனித்த ஒரு ஜாதி. என்னதான் கேவலமான பிறவிகளாக இருந்து கீழ்த்தரமான வேலைகளைச் செய்தாலும் குரலினிமையில் அவற்றை அடித்துக்கொள்ள முடியாது.
கோரமான பேய்களோடு மாரடித்து முடித்து வயதான கால கட்டத்தில்தான் ராகவா லாரன்ஸ், சுந்தர் சி மகானுபாவர்கள் எழுந்து வந்தார்கள். அழகிய, கிளர்ச்சியூட்டும் பேய்கள் உலா வந்தன. பொழுதுகள் சிரிக்கச் சிரிக்கப் போயின.
பிழைத்துக் கிடந்தால், காஞ்சனா 42டிலோ, அரண்மனை 45திலோ நான் நகைச்சுவை ட்ராக் எழுதுபவனாக இருக்கலாம். இப்போதே பேய்க் காமெடி யோசிக்க வேண்டும்.











