The Talkie
Saturday, August 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள் குரு தத் 100

குருதத் 100 தொடர் வெற்றிகளும், தோல்வியின் துவக்கமும்

The Talkie by The Talkie
August 1, 2026
in குரு தத் 100, தொடர்கள்
A A
0
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon பாஸ்கர் சக்தி

  நமது சினிமாக்களில் வரும் க்ளைமாக்ஸ்களைப் பற்றி யாராவது தனியாக ஆய்வு செய்தால் தவிர்க்க முடியாத  க்ளைமாக்ஸ் காட்சி ஒன்று மறுபடி மறுபடி வரும்.  ரயில்வே ஸ்டேஷன் அல்லது ஏர்போர்ட்டில் காதலனோ அல்லது காதலியோ, இல்லாவிட்டால் கணவனோ அல்லது மனைவியோ,  வெளியூர் அல்லது வெளிநாடு கிளம்பத் தயாராக இருப்பார்கள். அவர்கள் கருத்து வேறுபாட்டாலோ, ஒத்து வராது என்கிற எண்ணத்தாலோ இல்லை சந்தர்ப்ப சூழ்நிலையாலோ….என்னமோ  ஒரு காரணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.  அதனை முன்னிட்டு தம் ஜோடியைத் துறந்து பறந்து செல்லவோ, அன்ரிசர்வ்ட் பெட்டியில் தொங்கிச் செல்லவோ தயாராக இருக்கையில் …..

கரெக்டாக அந்த நேரத்தில், அதுவரை தன் துணையைப் புரிந்து கொள்ளாத அந்த இணையருக்கு  அவனைப் பற்றிய  எல்லா உண்மைகளும் ( ?! ) தெரிந்து போய், “ அடாடா இப்பேர்ப்பட்ட ஒரு ஆளை நாம மிஸ் பண்ணிட்டோமே? மை  காட்..” என்று கிளம்பி சம்பந்தப்பட்ட விண்ணூர்தி நிலையத்துக்கோ, புகை வண்டி நிலையத்துக்கோ விரைந்து வருவார்கள். அங்கே விமானமோ , ரயிலோ கிளம்பத் தயாராகி ஒலி பெருக்கி பயணிகளை அழைக்கும். இங்கே இந்த இணையர் ஏறி வரும்  வாகனமோ மெதுவாக நகர்ந்து செல்ல, சீக்கிரம் சீக்கிரம்  என்று இவர்கள் பதட்டமாக, ஆடியன்ஸும் கூடச் சேர்ந்து பதட்டமடைவார்கள். கிளம்பத் தயாராகும் நபரை இப்போது விட்டால் எப்போதுமே பார்க்க முடியாதோ? ( என்னமோ அவரு செவ்வாய் கிரகத்துக்குப் போற மாதிரி ) என்கிற ஒரு மனநிலையை பார்வையாளருக்கு உருவாக்கி,  பதட்டத்தை ஏற்படுத்தும் இந்த பரபர  சிச்சுவேஷன் க்ளைமாக்ஸுக்கு லட்டு மாதிரி இருக்கும்.  ஒரு வழியாக வண்டி கிளம்பும் முன் ஓடி உருண்டு, முட்டி மோதி இந்த ஓடி வந்த துணை , அவனையோ, அவளையோ சந்தித்து இருவரும் சிரித்து அணைத்து மகிழ ….

இந்தக் காட்சியை நிறையப் படங்களில் பார்த்திருப்போம்.  `மௌன ராகம்’  க்ளைமாக்ஸ் ஒரு உதாரணம்.  இது போல பல படங்கள் உண்டு.

மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55 எனும் குருதத்தின் படம் 1955 இல் வெளியானது. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் மேலே சொல்லி இருப்பதுதான்.  பல விஷயங்களில் முன்னோடியாக இருந்து பலரை இன்ஸ்பைர் செய்த குருதத் இந்த க்ளைமாக்ஸை அந்தக் காலத்திலேயே வைத்திருக்கிறார்.  ( அனேகமாக அவர்தான் முதலில் இதை துவங்கி வைத்தவர் என்று தோன்றுகிறது )

 கதாநாயகனும், நாயகியும் சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் செய்து கொண்டு தம்பதிகளாகி விடுகின்றனர். ஆனால் மனைவி கணவனை வெறுக்கிறாள்.  ஆனால் அந்தக் கணவன், மனைவியை உளமாரக் காதலிக்கிறான். அந்தக் காதலை ஒரு கட்டத்தில் மனைவியும் உணர்கிறாள். கணவனின் நல்ல குணத்தை அறியும் மனைவியும் அவனை நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் சொல்லும் சந்தர்ப்பம் அமையவில்லை.  இதனிடையே இவர்களுக்கு விவாகரத்து கிடைத்து விடுகிறது.  கணவன் அவளிடமிருந்து பிரிந்து வெளியூர் சென்று விட முடிவெடுத்து கிளம்பிச் சென்று விடுகிறான். கணவனின் நற்குணங்களை அறிந்து தான் அவனை பிரிந்திருக்க முடியாது என்று உணரும்  மனைவி க்ளைமாக்ஸ் பரபரப்புடன் ஓடிப்போய் ரயில்வே ஸ்டேஷனில் கணவனைக் கட்டிக் கொண்டு ஐ லவ் யூ என்கிறாள்.

மேலே சொன்ன கதைச்சுருக்கம் மௌனராகம் படத்தினுடையது போல் தோன்றுகிறதா? உண்மை. ஆனால்  அதற்கு முற்பட்ட இன்னொரு உண்மை எதுவெனில்  மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55 படத்தின் கதையும் இதுதான். சிற்சில மாற்றங்கள் உண்டு. மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55 படத்தின் க்ளைமாக்ஸில் ஏர்போர்ட்.  மௌனராகத்தில் ரயில்வே ஸ்டேஷன். மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55 படத்தில் மதுபாலா திருமணம் செய்து கொண்டால்தான் உயிலின்படி அப்பாவின் சொத்து கிடைக்கும் என்கிற நிபந்தனை . எனவே மதுபாலாவின் அத்தை சும்மானாச்சுக்கும் ஒரு   திருமணம் செய்து கொண்டு, சொத்தை அடைந்ததும் அந்த திருமணத்தை விவாகரத்து   செய்து விடலாம் என்று கிரிமினலாக யோசிக்கிறார்.  ஏழையான குருதத்துக்கு ஒரு வேலை தருவதாகச் சொல்லி, அவரை இந்த  போலித் திருமணத்தை செய்து கொள்ளச் சொல்கிறார்.  கூலியாக நல்ல பணம் தருவதாகச் சொல்கிறார்.  இதனைக் கேட்டு கோபமடையும் குருதத்,  .”இது என்ன கேவலமான யோசனை? பணத்துக்காக நான் என்னை இப்படி விற்க முடியாது “” என்று மறுக்கிறார்.   ஆனால்  தான் மணக்க வேண்டியது மதுபாலாவை என்று தெரிந்ததும் உடனே  ஒத்துக் கொள்கிறார். காரணம் ஏற்கனவே மதுபாலாவை ஓரிடத்தில் பார்த்து கண்டதும் காதல் வயப்பட்டு அவளை எண்ணி உருகிக் கொண்டிருக்கிறார். 

(தன்னை மிகவும் பாதித்த இயக்குனர் என்று மணிரத்னம் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். காட்சி அமைப்புகளில் மட்டுமல்ல. கதையிலும் பாதிப்பு இருந்திருக்கிறது )

மேலே சொன்ன க்ளைமாக்ஸ் மட்டுமல்ல. நம்முடைய சில திரைப்படங்களில் கதாநாயகியர் கொஞ்சம் அதிகமான அப்பாவித்தனத்துடன்,  கள்ளமற்று, ஏறக்குறைய லூஸ் மாதிரி இருக்கும் நல்லவளான ஹீரோயின். ( உடனடியாக நினைவுக்கு வருபவர் சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா )    கதாபாத்திரத்துக்கும்  மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55 படத்தின் நாயகியான மதுபாலாதான் முன்னோடி.

மதுபாலா அக்காலகட்டத்தின் பேரழகி. மூர்த்தியின் கேமராவில் அவர் தேவதையாக மின்னினார். களங்கமற்ற, அப்பாவித்தனம் நிறைந்த அழகும், திறமையும் கொண்ட மதுபாலாவை இந்தப்படத்தில் மிகச் சரியாக உபயோகித்திருந்தார் குருதத். 

இருவரும் சந்திக்கும் ஆரம்பக் காட்சியே வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு டென்னிஸ் வீரனின் மீது க்ரஷ் கொண்டு அலையும் பணக்காரப் பெண்ணான மதுபாலா, அவன் விளையாடும் மேட்ச்சைப் பார்க்க வீட்டுக்குத் தெரியாமல் வந்திருப்பார். அவளைத் தேடி வரும் அத்தையின் பி ஏ யிடமிருந்து தப்ப வேண்டி கேலரியின் கம்புகளுக்கிடையே இறங்கித் தப்ப முயல்வார். அப்போது தன் செருப்புகளை முதலில் கழற்றி கீழே போடுவார். அது கேலரியின் கீழே படுத்திருக்கும் குருதத் மீது விழும்.

ஹீரோவின் முதல் காட்சியிலேயே ஹீரோயின் செருப்பு தன் முகத்தில் விழ அறிமுகமாவார் குருதத். அவள் அடுத்து கீழே இறங்கி ஸாரி ஸாரி என்று பதற , அவள் முகத்தில் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்ப்பார். முதல் பார்வையிலேயே காதல். அவள் போன பின்னரும் பித்துப் பிடித்தது போலிருப்பார். ஒரு டீக்கடையில் அமர்ந்திருப்பார். மனதில் அவள் முகம். அப்போது வரும் நண்பன் ஜானிவாக்கர் இவரிடம் பேச்சுக்கொடுக்க பதிலே பேசாமல் அவள் நினைவாகவே இவர் இருக்க, ஜானி குழப்பத்துடன் “என்னாச்சு உனக்கு ?” என்று கேட்க, சட்டென்று பாட ஆரம்பிப்பார்.பாடல் துவங்கும்.  ஆம். அதுவரை ஹீரோவுக்கு டயலாக் எதுவும் இல்லை. பாடலில்தான் அவர் துவங்குவார்.

கேலரியின் மீது மதுபாலா வருகையில் மூர்த்தியின் கேமரா கோணங்கள் வெகு சிறப்பாக இருக்கும். கேலரியில் அமர்ந்திருக்க்கும் மனிதர்கள். அவர்களது கால்கள் , பின் பகுதிகள் என்று மிக வித்தியாசமான கோணத்தில் காட்சியமைப்பு இருக்கும்.

சாதாரணமான  காட்சியைக் கூட தாங்கள் படமாக்கும் விதத்தில் வெகு சிறப்பான ஒன்றாக மாற்றும் வித்தையை குருதத்தும், மூர்த்தியும் அறிந்திருந்தார்கள். தனது கூர்மையான , நகைச்சுவை தெறிக்கும் வசனங்களை அப்ரார் ஆல்வி வழங்க, ஒவ்வொரு காட்சியும் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது.

`தண்டி ஹவா’ எனும் பாடல் முழுக்க ஒரு நீச்சல் குள லொகேஷனிலே எடுக்கப்பட்டது. குருதத் பாடல்களை படமாக்குவதில் இணையற்றவர்.. இந்தப் பாடலுக்கு நீச்சல் குள லொகேஷனை தீர்மானித்து ஷூட்டிங்க் துவங்கியது. பாடலின் துவக்கத்துக்கான ஷாட் எது என்பதற்கான தேடலை குருதத் துவங்கினார். வ்யூ ஃபைன்டரை வைத்தபடி எல்லாப் பக்கமும் யோசித்தார். அங்குமிங்கும் போய் ஒவ்வொரு கோணமாக அவரும், மூர்த்தியும் டிஸ்கஸ் செய்தார்கள். ஆனால் குருதத்துக்கு எதுவுமே திருப்தி அளிக்கவில்லை. மதியம் ஆனது, மாலை ஆனது. ஷூட்டிங்க் நடக்காமல் ஒட்டுமொத்த யூனிட்டும், ஆர்ட்டிஸ்ட்களும் காத்திருந்தனர். கடைசி வரை  ஒரு நல்ல துவக்க ஷாட் பிடிபடாததால் அன்று ஒரு ஷாட் கூட எடுக்காமல் `பேக் அப்’ செய்தார் குருதத்.  அதுதான் அவரது இயல்பு. பணச்செலவு குறித்தோ , நேரம் குறித்தோ கவலையே பட மாட்டார். தான் செய்கிற வேலை  தன்னை முதலில் முழுகையாக திருப்தி செய்ய வேண்டும் என்பதே அவரது இயல்பாக இருந்தது. 

அடுத்த நாள் காலை அதே நீச்சல் குளம். யூனிட் வந்து இறங்கியது. இன்று வியூஃபைன்டரில் தேடிய குருதத்துக்கு அவர் மனதைக் கவரும் கோணம் உடனே கிடைத்து விட்டது. அவ்வளவுதான். பர பர என்று இயங்கினார் குருதத். வெகு வேகமாக அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இரண்டே நாட்களில் முழுப்பாடலையும் எடுத்து முடித்து விட்டார் குருதத்.  பாடல் காட்சியில் முதல் ஷாட் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் குறிப்பாக இருந்தார். 

`தண்டி ஹவா ‘ பாடல் யூ ட்யூப்பில் இருக்கிறது. அதன் முதல் ஷாட்டையும், முழுப்பாடலையும் பார்த்தால் குருதத்தின் அழகுணர்ச்சியும், திறமையும் விளங்கும். ஒரு சில பெண்கள், ஒரு சில குடைகளை வைத்துக் கொண்டு , பாடலின் மெல்லிய இசைக்கேற்ற , அழகிய அசைவுகளுடன் , மதுபாலாவின் வசீகரமான அழகுடன்  அந்தப் பாடல் காட்சி இன்றைக்கும் மெருகு குலையாத புதிய அழகுடன் காலத்தை வென்று நிற்கிறது.

அந்தக் காலகட்டத்தில் மிக வித்தியாசமான கதையமைப்புடன், கச்சிதமான காட்சிகளுடன், கூர்மையான வசனங்களோடு வெளியான மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55 திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது. காதலும், நகைச்சுவையும் கொண்ட மிகவும் ஜாலியான ஒரு பொழுதுபோக்குப் படமாக அனைவராலும்  கொண்டாடப்பட்டது . அப்போதைய திரைப்படங்களின் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படமாக மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55 ஐ உருவாக்கினார் குருதத்.  

இப்போது பார்த்தாலும் ஃப்ரெஷ்ஷான ஒரு திரைப்படமாக  இருக்கின்ற மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55. வெளியானதும் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைப் பெற்றது. குருதத் மிகவும்  ஸ்டைலிஷ் ஆன, நீட் ஆன ஒரு காதல் காமெடிப் படத்தைக் கொடுத்திருக்கிறார் என்று பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின. 

`ஆர் பார்,’ அடுத்து `மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55’ என்று அடுத்தடுத்து இரண்டு படங்களும் வெற்றி பெற்று வசூலைக் கொடுக்க இந்தித் திரையுலகின் மிக முக்கியமான இடத்தை குருதத் அடைந்தார். தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ என்று மூன்று வகையிலும் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றார் குருதத்.

`ஆர் பார்’ , `மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55’ ஆகிய இரண்டு படங்களின் வெற்றியிலும் அப்ரார் ஆல்வியின் எழுத்து முக்கிய பங்கு வகித்தது. அவரது புதுமையான காட்சியமைப்புகளும், வசனங்களும் குருதத்தின் நவீன சினிமாவுக்கு பக்கபலமாக அமைந்தன. இருவரும் மிகவும் மனம் ஒத்த நண்பர்களாகவும் இருந்தனர். இறுதி வரையிலும்.

இடையில் ஒரே ஒரு முறை ஒரு சம்பவம் நிகழ்ந்தது.  அப்ரார் ஆல்வி யை வேறு ஒரு கம்பெனி தன் படத்துக்கு எழுதச் சொன்னது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.  ஆனால் ஏதோ ஒரு மனச்சங்கடத்தால் அதனை குருதத்திடம் சொல்லாமல் அந்தக் கம்பெனிக்கு எழுதினார். அதன் காரணமாக கொஞ்ச நாட்களாக குருதத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லவில்லை. 

குருதத்துக்கு இந்த விஷயம் தெரிய வந்து விட்டது. மனமுடைந்து போனார் குருதத். ஏனென்றால் அப்ரார் ஆல்வியை கண்டுபிடித்து எழுத வைத்து, வாய்ப்புக் கொடுத்து அவரை உருவாக்கியவரே அவர்தான். அப்படிப்பட்ட தன்னிடம் சொல்லாமல், தன் அனுமதியைப் பெறாமல் வேறு ஒரு கம்பெனிக்கு அப்ரார் ஆல்வி எழுதுகிறார் என்ற விஷயம் குருதத்தை மிகவும் காயப்படுத்தி விட்டது. 

 குருதத்தின் மனவேதனை பெரும் கோபமாக மாறியது. நிர்வாக மேலாளரான நண்பர் குருசாமியிடம் ஒரு கடிதம் தயார் பண்ணச் சொன்னார். 

“உங்களது சேவை இனிமேல் குருதத் ஃபில்ம்ஸுக்கு தேவையில்லை. இன்று முதல் நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகிறீர்கள் “ என்பது மாதிரியான ஒரு கடிதம்.  அன்று ஸ்டுடியோவுக்கு வந்த அப்ரார் ஆல்வியிடம் இந்தக் கடிதம் கொடுக்கப்பட , அப்ராரால் இதனை நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு கடிதமா? என்று அதிர்ச்சியுடன் , மனம் கலங்கி குழம்பி நின்றவர் , குருதத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்ப , ஷாட்டில் இருந்த குருதத்  அதனை முடித்து விட்டு அப்ரார் ஆல்வியிடம் வந்தார்.

கோபத்தையும், வருத்தத்தையும் மறைத்துக் கொண்டு கிண்டலான தொனியில், “ அடடே,  ஒரு வழியா இங்க வர்றதுக்கு உனக்கு நேரம் கிடைச்சிருச்சு போல?” என்று சொல்ல,

“ஆமா, வந்தேன். வந்த இடத்தில இப்படி ஒரு லவ் லெட்டரை குடுத்திருக்கே?”

குருதத் கோபத்துடன் சொன்னார், “ உனக்கு சம்பளம் போதலைன்னா என்கிட்ட கேட்டிருக்கலாமே? எதுக்கு வேற கம்பெனிக்கு எழுதப் போகணும்?”

அதற்கு அப்ரார் சொன்னார், “ நான் ஒண்ணும் பிச்சைக்காரனில்லை . நீதான் புரிஞ்சுகிட்டு இருக்கணும். மனுஷனோட தேவைகள் அதிகரிக்குது இல்லையா?”

அதுவரை கோபமாக இருந்த குருதத்தின் கோபம் சட்டென்று காணாமல் போனது. நேராக அப்ராரிடம் வந்து அவரிடமிருந்து அந்தக் கடிதத்தை வாங்கிக் கிழித்துப் போட்டார்.

“இங்கியே வேலை செய். நான் பாத்துக்கறேன்” 

அதுதான் குருதத்தின் மனம். அவரது கவனக்குறைவை உணர்ந்து உடனே தன் நிலையை விட்டு கீழிறங்கி, அப்ராரின் மனக்குறையை உணர்ந்து அதனை உடனே சரிசெய்து தன்னோடு இணைத்துக் கொண்டவர் குருதத். அந்தக் கோபமான கடிதத்தின் ஆயுள் வெறும் இரண்டு மணி நேரம்தான் என்று எழுதி இருக்கிறார் அப்ரார் ஆல்வி.

கலைமனம் கொண்டவர்களின் இயல்பு இதுதான். கொந்தளிப்பதும், அடங்குவதும் வெகு சகஜமாக நடக்கும். வேண்டியவர்களிடம் உரிமை பாராட்டும். அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் ஏங்கும். குருதத் மென்மையான மனம் கொண்ட படைப்பாளி. கலைஞன்.

1954 இல் `ஆர் பார்’ , 1955 இல் `மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55’ இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து குருதத் தயாரித்து ராஜ் கோஸ்லா இயக்கிய சி.ஐ.டி படமும் மிகப்பெரிய வெற்றி. 

அடுத்து 1957 இல் வெளியானது `ப்யாஸா’. இன்று வரை குருதத்தின் பெயரை உரக்கச் சொல்லும் திரைப்படம். எவர்க்ரீன் க்ளாஸிக்.

அடுத்தடுத்த வருடங்களில் இப்படி தொடர் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்தார் குருதத்.

ஆனால் வாழ்க்கை அப்படியே நகர்வதில்லை. ஒரு புறம் குருதத்தின் அகச்சிக்கல்கள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. 

`ப்யாஸா’ வின் வெற்றி குருதத்தை சிகரத்தின் மேலே தூக்கி வைத்தது. அது வரை க்ரைம் த்ரில்லர், ரொமான்டிக் காமெடி என்று ஹிட்களை கொடுத்த குருதத்தால் ஒரு க்ளாஸிக் திரைப்படத்தை கொடுக்க முடிந்ததும், அது பாக்ஸ் ஆஃபிஸிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதும் அத்தனை பேரையும் வியக்க வைத்தது. 

குருதத் தனது அடுத்த திரைப்படத்துக்கு தயாரானார்.  

வி. கே. மூர்த்திக்கும், குருதத்துக்குமான உறவு மிகவும் அருமையான  ஒன்று. இருவருக்கும் செட்டில் பல சமயம் கருத்து வேறுபாடு ஏற்படும். அப்போது குருதத்துக்கு இணையாக மூர்த்தியும் கோபமாகப் பேசி விடுவார். ஒரு நாள் குருதத் , குருசாமியை அழைத்துச் சொன்னாராம், “ இந்த மூர்த்திக்கு என் மேல் கோபம் வந்தால் தனியாக என்னை கூப்பிட்டு திட்டச் சொல்லு. என்ன இருந்தாலும் செட்டில் நான் டைரக்டர். என்னை எல்லார் முன்னாடியும் கோபிக்கறது சரியில்லைன்னு சொல்லு”.

பல நேரங்களில் மூர்த்தி லைட் பண்ண லேட் ஆனால் குருதத் கத்துவார். மூர்த்தி டென்ஷனாவார். ஷூட்டிங்க் முடிந்ததும் குருதத் மூர்த்தியிடம், “ லேட் ஆக , லேட் ஆக செலவு அதிகமாகுது மூர்த்தி, டைமுக்கு முடிக்கறதுக்காகத்தான் நான் அப்படி சொல்றேன்” என்று சொல்கையில் மூர்த்தி , “ எனக்கு நான் ஒழுங்காக லைட்டிங்க் செய்து படமெடுக்க அவகாசம் வேணும் ?’ என்பார்.  அப்படிப் பட்ட ஒரு விவாதத்தின் போது குருதத் மூர்த்தியிடம் சொன்னார். “ மூர்த்தி , நீ ஒரு அற்புதமான கேமராமேன் னு எனக்குத் தெரியும். உன்னோட கேமரா திறமையைக் காட்டறதுக்காகவே நான் ஒரு படமெடுக்கறேன். அந்தப் படத்தில் உன்னை அவசரப்படுத்தவே மாட்டேன். லேட் ஆகுதுன்னு கத்த மாட்டேன். உனக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன் சரியா?” என்றார். சரி என்றார் மூர்த்தி.

குருதத் சொன்ன சொல் தவறாதவர். அப்படி அவர் மூர்த்தியிடம் சொன்ன வார்த்தையை உண்மையாக்கி எடுக்கப்பட்ட படம்தான்            ` காகஸ் கே பூல் ‘இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாக அதனை உருவாக்க முடிவு செய்தார் குருதத்.

`ப்யாஸா’ வில் தன் கலையை நிரூபித்த குருதத் `காகஸ் கே பூல்’ திரைப்படத்தில் இன்னும் கலை உச்சத்தைத் தொட்டார்.

`காகஸ் கே பூல் ‘ இன்று வரை பேசப்படுகின்ற ஒரு காவியத்  திரைப்படம்.

ஆனால் அதுதான் குருதத் இயக்கிய கடைசிப் படம் .

ஒரு விதத்தில் அது குருதத்தின் வீழ்ச்சியைப் பேசிய படம். 

குருதத்தின் வீழ்ச்சியை துவக்கி வைத்த படம்.

                                                                                            ( தொடரும்)

Author Image

பாஸ்கர் சக்தி

திரைப்பட இயக்குநர். எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post

ட்ரெண்டு கொட்டாய் - பேயாட்டம்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

August 1, 2026
The Odyssey – கூடடையும் கலை

The Odyssey – கூடடையும் கலை

August 1, 2026

ஆதிக்க உணர்வின் உளவியல்

August 1, 2026

இரு கண்களும் பன்னிரு கைகளும்

August 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

August 1, 2026
The Odyssey – கூடடையும் கலை

The Odyssey – கூடடையும் கலை

August 1, 2026

ஆதிக்க உணர்வின் உளவியல்

August 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?