The Talkie
Tuesday, September 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home ஆளுமைகள்

இளையராஜா 50

The Talkie by The Talkie
September 1, 2026
in ஆளுமைகள்
A A
0
இளையராஜா 50
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon கணேஷ் சுப்ரமணி

அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும், காதலுணர் பொழுதுகளிலும் நினைவுகூர் தருணங்களிலும் இளையராஜா என்றும் தேவையானவராக இருக்கிறார்.

இளையராஜாவின் இசை வரலாறு என்பது திரையிசையின் வரலாறுதான். இவரை மையப்புள்ளியைக் கொண்டுதான் முன்னும் பின்னுமான இசை வரலாற்றை எழுத முடியும். தமிழ்த்திரையிசையின் தொடக்க காலககட்டமான முப்பது மற்றும் நாற்பதுகளில் சினிமா இசை என்பது கர்னாடக இசை மரபும் நாடக இசைப் பாணியும் கலந்த ஒன்றாகவே இருந்தது. இதில் பாடகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஐம்பதுகளில்தான் இது மாற்றம் பெறுகிறது. இந்துஸ்தானி இசையும், மேற்கத்திய இசையும் தமிழ்த் திரையிசையில் கலந்து ஒரு புதிய இசைப்பாணி உருவானது. இதனை உருவாக்கியதில் எஸ்.வி.வெங்கட்ராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, டி.ஜி.லிங்கப்பா போன்ற இசையமைப்பாளர்களின் பங்கினை மறக்க முடியாது. என்றாலும் எம்.எஸ்.விஸ்வநாதனும் கே.வி.மகாதேவனும்தான் இந்த இசைப்பாணியைப் பெருமளவு வளர்த்தவர்கள். அவர்களுக்கு முன்னரே இந்த இசைப் பாணி இந்தியில் அறிமுகமாகி வளர்ந்திருந்தது. அதைத் தமிழுக்கேற்ப அவர்கள் மெருகேற்றித் தந்தார்கள்.

தமிழுக்கான தனித்ததொரு இசை வடிவம் இளையராஜாவுக்குப் பின்னரே உருவாகிறது. அதற்கு முன்னர் சராசரியாக மூன்றரை நிமிடங்கள் இருந்த பாடல்களை நான்கரை நிமிடங்களாக அவர் மாற்றினார். அவருக்கு முன்னர் ஒரு பாடலில் இடம்பெறும் சரணங்களின் எண்ணிக்கையில் நிலைத்தன்மை இருந்ததில்லை. ஒன்று முதல் நான்கைந்து சரணங்கள் வரை அமைக்கப்பட்டிருக்கும். இளையராஜா இரண்டு சரணங்கள் என்பதை standardise செய்தார். அதே போல் இரண்டு சரணங்களுக்கும் தனித்தனியான இடையிசை (interlude) அமைக்கும் பாணியை உருவாக்கினார்.

இளையராஜா அறிமுகமான எழுபதுகளில் தமிழ்த்திரையிசையில் ஒரு பெரிய தேக்கம் நிலவியது. எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் போன்ற பெரும் இசையமைப்பாளர்களின் தலைசிறந்த பாடல்கள் வெளிவந்த காலமாயினும், ஏதோவொரு மாற்றத்துக்காகத் தமிழ்க்காதுகள் காத்திருந்தன. அன்னக்கிளி மூலம் அந்தக் காத்திருப்பு நிறைவுக்கு வந்தது. அதில் தொடங்கிய பெருவெள்ளம் அடுத்த இரு பத்தாண்டுகளுக்குப் பாய்ந்தது. நிறைய படங்களுக்கு இசையமைத்தார். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டன.

தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் அவருடைய இசைக்காகக் காத்திருந்தனர். மோகன், ராமராஜன் போன்ற நாயகர்கள் உருவாகி வளர்ந்தது இளையராஜாவால்தான். பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்களின் வளர்ச்சியில் இவருடைய பாடல்களுக்குப் பெரும்பங்கு உண்டு. எம்.ஜி.ஆர் – சிவாஜிக்குப் பிறகு எண்பதுகளில் ரஜினி – கமல் எனும் இருநிலை நாயகப் பிம்பம் உருவானதில் இளையராஜாவுக்கு முக்கியப்பங்கு உண்டு. பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் பாடல்களை நம்பியே படம் எடுத்து வெற்றியும் பெற்றார்கள். தமிழ் சினிமாவில் இசையால் தனிப்பெரும் ராஜ்ஜியம் ஒன்றை அவர் உருவாக்கியிருந்தார். கதைகளுக்கு ஏற்ற வகையில் இசை என்பது மாறி, அவருடைய இசைக்கு ஏற்ப படங்களின் கதைகள் வடிவமைக்கப்பட்டன. நிறைய படங்களில் நாயகன் அல்லது நாயகி பாடகராக இருப்பது போல் பார்த்துக் கொண்டார்கள். மைக் மோகன் மட்டுமின்றி முன்னணி நடிகர்கள் எல்லோருமே பாடகர் வேடம் ஏற்றுப் பாடித் தீர்த்தார்கள். ‘தனிக்காட்டு ராஜா’, ‘போக்கிரி ராஜா’, ‘ராஜாதி ராஜா’, ‘ராஜா ராஜாதான்’, ‘ராஜா கைய வெச்சா’, ‘ராசாவே உன்னை நம்பி’, ‘ராஜா சின்ன ரோஜா’ என்று (அவர் இசையமைக்காத படங்கள் உட்பட) படத் தலைப்புகளில் ராஜா எனும் சொல் இடம்பெற்றது. அக்காலகட்டத்தில் வெளிவந்த நிறைய படங்களில் ஹீரோ பாத்திரத்தின் பெயர் ‘ராஜா’ என்றே வைக்கப்பட்டது. இந்த ட்ரென்ட் எல்லாம் தொன்னூறுகளுக்குப் பின்னர்தான் மறைந்தது.

தமிழ் சினிமா இசையின் பொற்காலம் என்றால் அது எண்பதுகள்தான். இந்தப் பொற்காலம் தனியொரு மனிதனால் நிகழ்ந்தது என்பதே அதிசயம்தான். இக்காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்–கணேஷ், கங்கை அமரன், சந்திரபோஸ், டி.ராஜேந்தர் என்று பலரும் இசையமைத்தாலும் இந்தப் பொற்கால இசையின் மையமாக ஓர் ஆலமரத்தைப் போல் இளையராஜா இருந்தார். நாயகர்களைப் புகழ்ந்து புனையப்பட்ட பாடல்களுக்கு மத்தியில் இளையராஜாவைப் புகழ்ந்து பாடல்கள் எழுதப்பட்டன. 

  • இசைக்கென இருக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் அமைப்பேன் நான்..
  • ‘ஊரெங்கும் போகும் உன் ராகங்களே..’
  • ‘ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு..’
  • ‘நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா..’
  • ‘புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே..’
  • ‘ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது..’
  • ‘எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே..’
  • ‘இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே..’
  • ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே..’
  • ‘ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்ல..’
  • ‘இந்த ராசாவ நம்பி வந்த யாரும் மோசமே போகப் போறதில்ல..’
  • ‘அதுக்காகத்தானே இசை அவதாரமாய் நான் பொறந்தேன்னு பூலோகம் பாராட்டுமே..’
  • ‘இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான்..’

என்று எண்ணற்ற பாடல்கள் ராஜாவின் புகழ்பாடின. அவர் இசையமைக்காத படத்திலும் கூட (சோலையம்மா) அவரின் புகழ் பாடும் பாடல் இடம்பெற்றது. மக்கள் கைதட்டி அவற்றை ஏற்றனர். ‘இளையராஜாவின் ரசிகை’ என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவானது. வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இப்படி நிகழ்ந்ததில்லை; நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. டைட்டிலில் அவருடைய பெயருக்கு முன்னால் புதுப்புது பட்டங்கள் இடம்பெற்றன. ராகதேவன், மேஸ்ட்ரோ, இசைக்கோ, இசைஞானி (பார்த்திபன் ஒரு படத்தில் இசை அல்லது இளையராஜா என்று டைட்டில் போட்டார்) என்றெல்லாம் பலப்பல பட்டங்கள் அவரைத் தேடி வந்தன. இவற்றுக்கெல்லாம் தான் தகுதியானவர் என்பதைத் தன் இசையால் அவர் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருந்தார்.

தன்னுடைய பாடல்களுக்குப் பொருத்தமான பாடகர்களை அவர் தேர்ந்தெடுப்பது வியக்க வைக்கும் ஒன்று. வேறு பாடகரை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அத்தனை கச்சிதமான தேர்வுகளாக அவை இருந்தன. பெரும்பாலும் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், ஜானகி, சுசீலா போன்ற பாடகர்கள் அவருடைய மெட்டுக்களுக்குக் குரல் தந்தார்கள். என்றாலும் இளையராஜாவின் இசைக்கு மட்டுமேயான பிரத்யேகக் குரல்களாக இல்லாத பொதுமைத் தன்மை அவர்களிடம் இருந்தது. அதாவது அவர்களுடைய குரல்கள் எல்லா இசையமைப்பாளர்களின் பாணிக்கும் பொருத்தமானவையாக இருந்தன. தன்னுடைய இசைக்கெனவேயான தனிப்பட்ட குரலுக்கான தேடல் இளையராஜாவிடம் இருந்தது. எண்பதுகளில் உமா ரமணன், ஜென்சி, ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன் போன்றவர்களை அவர் அப்படி உருவாக்கினார். அதே போல் தொண்ணூறுகளில் மனோ, அருண்மொழி, மின்மினி, சுவர்ணலதா போன்றவர்களைத் தன்னிசைக்கான தனித்த குரல்களாக அவர் உருவாக்கினார்.

தான் இசையமைத்த படங்களின் தகுதியைக் கடந்து செல்லக் கூடிய இசையையும் பாடல்களையும் அவர் தந்தார். சிறிய, பெரிய படங்கள் என்றெல்லாம் பாராமல் எல்லாவற்றுக்கும் உயர்தரமான – பல நேரங்களில் உலகத்தரமான – இசையை அவர் கொடுத்தார். திரைக்கதையை உள்வாங்கி பாடல்களை உருவாக்குவதில் அவரின் ஆற்றல் மிகப்பெரியது. அதாவது பாடலைக் கேட்கும் போதே திரைக்கதையின் கூறுகளை உணர முடிகிற அற்புதத்தை அவர் பல படங்களில் சாதித்துக் காட்டினார். ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ‘பாசமுள்ள பாண்டியரு’ பாடல் இன்றளவும் புகழ்பெற்ற ஒன்று. ஊர் மக்கள் மகிழ்ச்சியாகப் பாடும் ஒரு கொண்டாட்டப் பாடல்தான் அது. அதற்குத் தேவையான உற்சாகமும் துள்ளலும் அதில் சரியாக இருக்கும். ஆனால் சரணத்தில் மனோ, சித்ராவின் குரல்களுக்குப் பின்னணியில் வரும் கோரஸ் ஆலாபனையில் மெல்லிய சோகம் இழையோடும். கொண்டாட்டமான பாடலில் எதற்காக இந்த சோகத்தைக் கொண்டு வருகிறார் என்ற கேள்விக்கான பதில் திரைக்கதையில் இருக்கிறது. படத்தில் அந்தப் பாடல் முடிந்ததும் அந்தக் கொண்டாட்டத்தில் இருந்த பலரும் கொல்லப்பட்டு இறந்து போகிறார்கள். அந்தச் சோகத்தைப் பாடலிலேயே கொண்டு வந்தது ராஜாவின் திரைக்கதை குறித்த நுண்ணிய பிரக்ஞை. இது போல பல பாடல்களைச் சொல்ல முடியும். காதலர்கள் பாடும் அழகான டூயட் பாடல்களுக்குள் மெலிதான சோகத்தைக் கலந்திருப்பார். இதற்கான காரணத்தைத் தேடிப் பார்த்தால் திரைக்கதையில் அந்தக் காதலர்கள் பிரிவையோ, இழப்பையோ சந்திப்பவர்களாக இருக்கும். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘மதுர மரிக்கொழுந்து வாசம்’ (எங்க ஊரு பாட்டுக்காரன்), ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ (கோபுர வாசலிலே) போன்ற பாடல்களைச் சொல்லலாம். ஜேசுதாஸின் குரலில் இயல்பாகவே இழையோடும் மெல்லிய சோகத்தைத் தன் பாடல்களில் மிகச்சரியாகப் பயன்படுத்தினார்.

பாடலின் முன்னிசையுடன் (prelude) துருத்தலின்றி பல்லவியை இணைப்பதும், பல்லவியின் கடைசி வார்த்தையுடன் இடையிசையை இணைத்து அதன் முடிவிலிருந்து சரணத்தைச் சரியாகத் தொடங்குவதில் அவருக்கு இணையாக இந்தியத் திரையிசை வரலாற்றிலேயே யாரும் இருந்ததில்லை. இந்த நுணுக்கமான இசைக் கோர்ப்பில் அவருக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களுக்கு முன்னோடியாகவும் அவரே திகழ்கிறார்.

பல்லவிக்கு முன்னால் இடம்பெறும் தொகையறா எனப்படும் முன்னிசைக் குறும்பாடல்களை அவர் திறம்படக் கையாண்டிருக்கிறார். என்றாலும் அவரைப் போலவே பல இசையமைப்பாளர்களும் அதில் கரைகண்டிருக்கிறார்கள். ஆனால் அவரின் பாடல்களில் மிகப்பெரும் தனித்துவமாக அவரின் இடையிசைக் குறும்பாடல்களைச் (interlude lyrics) சொல்லலாம். இதில் யாருமே அவரைப் பின்பற்றவில்லை; அல்லது பின்பற்றி வெற்றிகாணவில்லை. பாடல்களின் இடையிசைக்கு (பெரும்பாலும் இரண்டாவது இடையிசை) நடுவில் ஏதாவது நாட்டுப்புற, நாடோடிப் பாடல்களைச் சிறிய இசைத் துணுக்காகச் சேர்த்திருப்பார். ‘சந்தைக்கு வந்த கிளி’ (தர்மதுரை) எனும் பாடல் பொங்கல் விழாவுக்குத் தொடர்பேயில்லாத பாடல் என்றாலும் அதன் இடையிசையில் வரும் ‘வந்தது வந்தது பொங்கலென்று’ எனும் குறும்பாடலால் இன்றுவரை பொங்கல் விழாக்களில் இசைக்கப்படுகிறது. ‘கடலில எழும்புற அலைகளை கேளடி’ (செம்பருத்தி) பாடலுக்கு நடுவில் ‘குடிசைக்கு குலவிளக்கு வேணுமுன்னு’ என்று வரும் நான்கு வரித் துணுக்குப் பாடலைக் கேட்க அத்துணை அற்புதமாக இருக்கும். இதெல்லாம் எப்படி நிகழ்கிறது? இது இயக்குனரின் விருப்பமாகவோ அல்லது பாடலாசிரியரின் தேர்வாகவோ இருக்கும் என்று தோன்றவில்லை. இளையராஜாவின் படைப்பூக்கத்தால் நிகழும் அதிசயம்தான் இதெல்லாமும்.

இளையராஜா இசையமைத்த ஒவ்வொரு படத்திலும் உணர முடிகிற ஒரு விதத் தனிச்சுவை (flavour) மற்றொரு அதிசயம். காதல், சோகம், வருணனை, கொண்டாட்டம், தத்துவம், நகைச்சுவை என்று பலதரப்பட்ட பாடல்கள் ஒரே படத்தில் இடம் பெற்றாலும், அததற்குரிய உணர்வுகளை அவை கொண்டிருந்தாலும் அவற்றிற்கு இடையில் ஒருவித தனிச்சுவையை நம்மால் உணர முடியும். அந்தப் படத்துக்கு மட்டுமேயானதாக அது இருக்கும். ‘பதினாறு வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வெளிவந்த, கிராமியக் கதைக்களம் கொண்ட, ஒரே இயக்குனரின் படங்கள்தான். ஆனால் பதினாறு வயதினிலே பாடல்களில் தெரியும் தனிச்சுவை கிழக்கே போகும் ரயில் பாடல்களில் இருக்காது. அததற்கு என்றேயான தனியாரு ப்ளேவரைத் தந்திருப்பார். ஒவ்வொரு படத்திற்கும் இதை எப்படிக் கொண்டு வருகிறார் என்பது அவர் மட்டுமே அறிந்த ‘ராஜ’ ரகசியம். இசையில் காலத்தை உறையச் செய்யும் அற்புதத்தை அவர் நிகழ்த்தினார். என்பதுகள் மற்றும் தொன்னூறுகளில் காலங்களில் வாழ்ந்தவர்களின் நினைவுகூர்தலுக்கும், அந்த வாழ்க்கையை மீளுருவாக்கம் (reconstruction) செய்யும் படைப்பளிகளுக்கும் இளையராஜாவின் இசைதான் எப்போதும் reference. நிறைய கவிஞர்கள் இளையராஜாவைப் பற்றி தற்போதும் கவிதைகளும், கவிதை நூல்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மந்திரவாதியைப் போல் காலத்தை இசையில் கட்டி வைத்திருக்கிறார்.

காதல், அன்பு, பாசம், சோகம், கோபம், கொண்டாட்டம் என்று எல்லாவித உணர்வுகளையும் ராஜாவின் பாடல்கள் அழகாக வெளிப்படுத்தினாலும், காமத்தை அவரளவுக்கு பேரழகியல் உணர்வுடன் தந்தவர்கள் யாருமே இல்லை. இலை மறை காயாக இல்லாமல் அதே நேரம் விரசம் எனும் எல்லைக்குள் சென்று விடாமலும் தன் பாடல்களில் காமத்தைப் பக்குவமாக அவர் அணுகியிருக்கிறார். ஆண், பெண் வேறுபாடின்றி வெளிப்படையாகவும் சில நேரங்களில் ரகசியமாகவும் ரசிக்கும் வகையில் அவர் உருவாக்கிய பாடல்கள் எண்ணற்றவை. ‘நான் பூவெடுத்து’ (நானும் ஒரு தொழிலாளி), ‘நிலா காயுது’ (சகலகலா வல்லவன்), ‘காத்து காத்து’ (என் புருசந்தான் எனக்கு மட்டும்தான்), ‘நடுச் சாமத்துல’ (திருமதி பழனிச்சாமி), ‘தானா வந்த சந்தனமே’ (ஊரு விட்டு ஊரு வந்து), ‘மணக்கும் மல்லிகை’ (ரிக்சா மாமா), ‘வருது வருது’ (பிரம்மா) ‘மாசி மாசம்’ (தர்மதுரை) போன்றவை சில சான்றுகள்.

ராஜாவின் இசையை மூன்று கட்டங்களாகப் பார்க்கலாம். இதில் முதல் கட்டம் எழுபதுகளின் பிற்பாதியிலிருந்து எண்பதுகளின் பிற்பாதி வரையிலானது. இது அவரின் இசை தொடக்கத் தளத்திலிருந்து மேலெழும்பி விண்ணில் பாய்ந்த காலகட்டம். தனக்கெனவே தனியான ஒரு பாணியை அவர் உருவாக்கினார். அது தமிழ்த் திரையிசைக்கென்றேயான தனித்த பாணியாகவும் உருவானது. அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த கர்னாடக இசைப்பாணி, மெல்லிசைப் பாணி, மேற்கத்திய இசைப்பாணி போன்றவற்றுடன் நாட்டுப்புற இசைப்பாணியைச் சரியான விகிதத்தில் கலந்து தமிழ் நாட்டு ரசிகர்களின் உணர்வுகளை நேரடியாகத் தொட்டார். இயக்குனர்களின் படைப்பு நோக்கையும் திரைக்கதையின் போக்கையும், காட்சிகளின் அழுத்தத்தையும் புரிந்து கொண்டு அதைச் சரியாக அல்லது அதற்கும் மேலாக இசையில் வடித்துத் தந்தார். இக்காலகட்டத்தில் அவர் இசையமைத்த கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களுமே வெற்றி பெற்றன. இளையராஜா காப்பியடித்த பாடல்கள் என்று தற்போது சில பாடல்களைச் சிலர் குறிப்பிட்டு விமர்சிக்கிறார்கள். அவை எல்லாமே இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த பாடல்கள்தான். இணையத் தொழில்நுட்பம் இல்லாத அக்காலகட்டத்தில் அவர் கேட்டு வியந்த பாடல்களையும் இசைக் கோர்வைகளையும் தமிழ் ரசிகர்களுக்குத் தர வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்திருக்க வேண்டும். மற்றவர்களின் பாடல்களைக் காப்பியடிக்க வேண்டிய இசை வறட்சி அவருக்கு இருக்கவில்லை.

அவருடைய இசையின் இரண்டாம் கட்டம் எண்பதுகளின் பிற்பாதியிலிருந்து தொண்ணூறுகளின் முற்பாதி வரையிலானது. இது பழமையும் நவீனமும் கலந்து நிதானமாக இயங்கிய காலகட்டம். யாரும் அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அவர் அமர்ந்திருந்த காலம். அவருடைய graph உச்சத்தில் இருந்தது. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருடைய இசைக்காகத் தவமிருந்த காலம். அவரும் அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்து கொண்டிருந்தார். ஆனால் அப்பாடல்களில் பெரும்பாலும் அவர் மட்டுமே இருந்தார். இயக்குனர்கள் தங்கள் கதைக்குப் பொருத்தமான இசையை அவரிடம் விளக்கிச் சொல்லிக் கேட்டுப் பெறுவதற்குத் தயங்கினர். இக்காலகட்டத்தில் பாடலாசிரியர்களின் முக்கியத்துவத்தையும் அவர் குறைத்தார். அவர் உருவாக்கிய மெட்டுக்களை வார்த்தைகளால் நிரப்புவது (filling) மட்டுமே அவர்களின் வேலையாக இருந்தது. அதாவது பாடல் வெற்றி பெற தன்னுடைய இசை மட்டுமே போதும். பாடல் வரிகள் அத்துணை முக்கியமில்லை என்பதான உணர்வு அவரிடம் இருந்ததை அக்காலகட்டப் பாடல்களைக் கேட்டால் உணர முடியும். பாடலாசிரியர்களும் அதைப் புரிந்து கொண்டு வெற்று வார்த்தைகளால் மெட்டுக்களை நிரப்பினார்கள். ராஜாவின் இசையால் அவையும் புகழ் பெற்றன.

தொன்னூறுகளின் தொடக்க காலத்தில் இசையமைப்பில் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. பாடல் வரிகள், இசைக் கோர்ப்புக்கு இணையாக சப்தக் கலவையின் தரம் முக்கியமானதாக மாறியது. ரகுமானின் வருகையோடு தொடங்கிய இந்தப் பாணி பெரிதாக வளர்ந்தது. இளையராஜாவின் இசையில் அவருடைய மகன் கார்த்திக் ராஜாவின் பங்களிப்பு அதிகளவில் இருந்தது. தொன்னூறுகளின் பிற்பாதியில் அவரின் இசைப் பாணி மாறத் தொடங்கியது. சப்தக் கலவைக்கு (sound mixing) அவர் அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினார். வாத்தியக் கருவிகளின் பயன்பாட்டைக் குறைத்து நவீன தொழில்நுட்பத்துடன் எலக்ட்ரானிக் சிந்தசைசர் மூலம் உருவாக்கப்படும் சத்தங்களின் ஆதிக்கம் அவருடைய இசையில் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு முன்னர் அவருடைய இசையில் இருந்த எளிமை சட்டென்று மறைந்தது. இதற்குக் கார்த்திக் ராஜா காரணமாயிருக்கலாம். தொன்னூறுகளின் இறுதிக்குப் பின்னர் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களைக் கார்த்திக் ராஜா இசையமைத்த பாடல்களுடன் ஒப்பிட்டால் இதை உணரமுடியும். இளையராஜாவுடைய இசையின் இயல்புக்கு மாறானதாக இந்தப் பாணி இருந்ததால் மக்களுடன் எளிதாக connect ஆகாத பாடல்களாக அவை இருந்தன. இதனால் அவை ஹிட்டாவது குறைந்தது. அவருடைய graph சரியத் தொடங்கியது. அதற்காகவே காத்திருந்தது போல் பல இயக்குனர்கள் மற்ற இசையமைப்பாளர்களைத் தேடிச் சென்றனர். 

மூன்றாம் கட்டம் இரண்டாயிரத்துக்குப் பிந்தைய இருபத்தோராம் நூற்றாண்டுக் காலம். இன்று இசைக் கோர்வையைப் பின்னுக்குத் தள்ளி சத்தங்களால் இடத்தை நிரப்பும் பாணிக்குத் திரையிசை நகர்ந்துள்ளது. இன்று இசைக் கலைஞர்களே தேவையில்லாத நிலை உருவாகி, எந்திரங்கள், கணினி வழியாக உருவாக்கப்படும் இசைத் துணுக்குகளைக் கோர்த்து பாடல்கள் உருவாக்கப்படுகின்றன. இப்பாடல்களுக்கு ஆயுட்காலம் (validity) குறைவு. வாத்தியக் கருவிகளிலிருந்தும், கலைஞர்களிடமிருந்து உருவாகாத இந்தப் பாடல்கள் எவ்வளவு ஹிட்டானாலும் சில மாதங்களில், சில வாரங்களில் காணாமல் போய் விடுகின்றன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இளையராஜா இசையமைத்த பாடல்களும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். என்றாலும் மேற்சொன்ன மூன்று காலகட்டங்களிலுமே இளையராஜா இருக்கிறார்; இசைக்கிறார். ஆயிரம் படங்களைத் தாண்டி ஐம்பதாண்டுகளைத் தாண்டி அவரின் இசைப்பயணம் தொடர்கிறது என்பதே யாரும் நிகழ்த்த முடியாத மாபெரும் சாதனை. திரையிசை மட்டுமின்றி ‘How to name it’, ‘Nothing but wind’, ‘India 24 Hours’, ‘The music messiah’ போன்ற தனியிசை ஆல்பங்களும், சிம்பொனி இசையும், ‘ரமண மாலை’, ‘திருவாசகம்’ போன்ற பக்திப் பாடல்களும் அவருடைய சாதனைப் பட்டியலில் வரிசை கட்டி நிற்கின்றன.

கருப்பு வெள்ளை காலத்திலிருந்து இன்று வரை கொண்டாடப்படுகிறவராக ராஜா இருக்கிறார். இன்றைய தலைமுறையும் அவரை ரசிக்கிறார்கள்; வியக்கிறார்கள். உண்மையில் தற்போதைய தமிழ்த் திரையிசை இளையராஜாவைக் கடந்து சென்று விட்டது. ஆனால் இன்றும் அவருடைய பழைய பாடல்களுக்குப் புதிய ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் அவருடைய பாடல்களையும் பின்னணி இசையையும் வியந்து விவாதிக்கிறார்கள். ‘ரேடியோவை கண்டுபிடித்தது மார்கோனி, அதைக் கேட்க வைத்தது இளையராஜா’, ‘ஒரு ஊருல ஒரு ராஜா – இன்று வரை அவர்தான் ராஜா’ என்றெல்லாம் இன்றும் கவித்தனத்துடன் அவரைச் சிலாகிக்கிறார்கள். அவருடைய அரிதான பாடல்கள் தேடிப் பிடித்து கேட்கப்படுகின்றன. ஷார்ட்ஸ், ரீல்ஸ்களிலும் அவருடைய இசை உணர்வுகளைக் கிளர்த்துகிறது. புதிய படங்களிலும் அவருடைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது சரியாகச் செய்யப்படும் போது சில நேரங்களில் படத்தின் வெற்றிக்கே காரணமாக அமைகிறது. உதாரணமாக, ‘சுனோ ரீட்டா’ (ஜானி) பாடலை கார்த்திக் சுப்புராஜ் ‘ரெட்ரோ’ படத்தில் மிகச்சரியாகப் பயன்படுத்தியிருந்தார். படு சுமாரான ‘இதயம் முரளி’ படத்தில் இடம்பெற்ற ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ பாடல்  பாடல் அந்தப் படத்தின் உணர்வியல் தளத்தை வேறு நிலைக்குக் கொண்டு செல்வதாக இருந்தது. ஐம்பதாண்டுகளைக் கடக்கும் அவரின் இசை அடுத்த ஐம்பதாண்டுகளைக் கடந்தும் கேட்கும். அநேகமாக தற்போதைய சினிமா ஆளுமைகளில் இன்னும் ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் ஞாபகத்தில் வைத்திருக்கப் போகும் ஒரே பெயர் ‘இளையராஜா’ என்பதாகத்தான் இருக்கும்.

Author Image

கணேஷ் சுப்ரமணி

உதவிப் பேராசிரியர். எழுத்தாளர்.கட்டுரையாளர்

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
இளையராஜா 50

இளையராஜா 50

September 1, 2026
யதார்த்த முகம்

யதார்த்த முகம்

September 1, 2026
கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

September 1, 2026
நினைவஞ்சலி – சௌகார் ஜானகி

நினைவஞ்சலி – சௌகார் ஜானகி

September 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
இளையராஜா 50

இளையராஜா 50

September 1, 2026
யதார்த்த முகம்

யதார்த்த முகம்

September 1, 2026
கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

September 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?