The Talkie
Tuesday, September 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home கட்டுரைகள்

யதார்த்த முகம்

The Talkie by The Talkie
September 1, 2026
in கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள்
A A
0
யதார்த்த முகம்
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon கா.ரபீக் ராஜா


அது தமிழ்சினிமா பல புதிய சோதனைகளுக்கு தன்னை உட்படுத்திய காலம். குறும்படமெடுத்தவர்கள் சினிமாவில் கோலோச்சிய நேரம். ஊருக்கு ஊர், பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்து என ஒரு சினிமா முழு ஷார்ட் பிலிம் எனப்படும் குறும்படங்களை எடுத்துக் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அது பார்க்கவே கொடூரமாக இருந்தாலும் அது ஒரு சாகசமாக அறியப்பட்டது. களம் கிடைக்காத வெறியில் காய்ச்சிய திரை காவியங்களை யூடியூபில் ஏற்றி தள்ளிக்கொண்டிருந்தது தமிழ்ச் சமூகம். நாங்களும் தமிழ்ச் சமூகத்தை பிள்ளைகள் தானே? எடுத்தோம் ஒரு குறும்படம். மிக பிரமாதமாக இல்லாவிட்டாலும் பார்க்கும்படி இருந்தது. 

எங்கள் இயக்குநர் மோகன்குமார் தீர்மானமாக இருந்தார், “அடுத்து படம் தான்டா பண்ணனும். இது பிலிம் காலமில்ல! டிஜிட்டல் காலம். அதாவது நம்ம காலம். ஓர்ருவா இருந்தா போதும். நம்ம வெளிய வந்துடலாம். என்ன சொல்றீங்க!” என்றார். 

எங்கள் ஊரில் சினிமாவில் வேலை செய்த சில உதவி இயக்குநர்கள் இருந்தார்கள். அவர்கள் எட்டாம் கட்ட, ஒன்பதாம் கட்ட இயக்குநராக வேலை செய்த படங்களுக்கு உள்ளூர் தியேட்டர் முன்பாக பிளக்ஸ் வைத்து நின்றார்கள். பத்துக்கு எட்டு பிளக்ஸ் எட்டு ஆசை என்பதை விட உதவி இயக்குநர் எனும் வார்த்தை போதை தரக்கூடியதாக இருந்தது. 

அது பேஸ்புக் தொடங்கிய காலம். பெண்கள் படம் தாங்கிய எல்லா முகநூல் கணக்குகளுக்கும் வணக்கம் வைத்து நலம் விசாரிக்கும் வழக்கம் இருந்தது. விசாரிப்புக்கு பதில் ஏதேனும் வந்தால் மறுநொடியே காதல் சொல்லப்படும் மரபு இருந்தது. சினிமா வாய்ப்பு தேடும் ஆட்கள் அங்கு சரமாரியாக புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்கள். அப்படிதான் எனக்கு தேனியை சேர்ந்த அஜய் அறிமுகமானான். புகைப்படத்திலேயே ஏழடி இருந்தான். வசீகரமாகவே இருந்தான். எதிர்கால திட்டங்களுக்கு நடுவே ஒரு குறும்படம் எடுக்கும் முயற்சியில் எங்கள் இயக்குநர் மோகன்குமார் இருந்தார். அதற்கு வாட்டசாட்டமான உடலும் தேவைப்பட்டது. அஜய் அப்பொழுது எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். ஏதோ கோவிலுக்கு வரும் வழியில் காரில் வந்து சந்தித்து விட்டு போனார். பணக்காரானா, ஏழையா என கண்டுபிடிக்காதாபடி இருந்தது அவனது தோற்றம். அவனது சித்தப்பா ஒருவர் ஒரு கட்டப்பஞ்சாயத்து கட்சியின் பொறுப்பில் இருந்தார். அவரது சிபாரிசின் அடிப்படையில் அஜய் ஒரு உப்புமா படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து அந்தப்படம் உள்ளூரில் வற்புறுத்தல் காரணமாக பல காட்சிகள் ஓடியது. 

நேரம் எங்களை ஒன்று சேர்த்தது. இயக்குநர்  மோகன்குமாரிடம் பேசி ஒரு குறும்படத்தில் நடிக்க அஜய் ஒப்புக்கொண்டார். அஜய்யை இயக்குநர் மோகன்குமாருக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த குறும்படத்தில் அஜய்யின் நடிப்பு, இயக்குநரிடம் காட்டிய பணிவு எல்லாவற்றையும் தாண்டிய ஹீரோ முகம் எங்கும் கிடைக்காதது எனும் முடிவுக்கு வந்திருந்தார். 

இயக்குநர் சென்னை செல்வதும் தயாரிப்பாளர்கள் பார்த்து கதை சொல்வதுமாய் இருந்தார். அவரது கதை சொல்லும் யுக்தி சாதாரண காட்சியை கூட தரமான BGM-முடம் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் அனுபவத்தை கொடுத்தது. எந்த பெரிய இயக்குநரிடம் மட்டுமல்ல பெயருக்கு கூட எந்த இயக்குநரிடம் வேலைசெய்ததில்லை என்பதை அவர் கர்வத்துடன் சொல்லி வந்தார். அனுபவமில்லாமல் எப்படி படம் எடுப்பாய் என்ற கேள்விக்கு தான் எடுத்த குறும்படங்களை போட்டுக் காட்டி பணமிருந்தால் இன்னும் செய்வேன் என மிகுந்த தன்னம்பிக்கையுடன் டேபிளை குத்துவார். 

ஒரு வருடக்கடைசியில் அஜய் சித்தப்பா திடீரென தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அஜய் என்னையும் இயக்குநரையும் வைத்து ஒரு ரகசியம் சொன்னான், “சித்தப்பா லம்ப்பா ஒரு அமௌன்ட் வச்சிருக்கார். நீங்க மட்டும் அவரை அசரடிக்கிற கதை மட்டும் சொல்லி ஓகே பண்ணிட்டா போதும். ரெண்டு வரைக்கும் பணம் எறக்க ரெடியா இருக்கார். சீக்கிரம் ஒரு கதையை பிடிச்சு. அதை பவுண்டட் ஸ்கிரிப்ட்டா கொண்டு வாங்க!” என்றான். என்ன ஏது? என்றெல்லாம் கேட்க யாருக்கும் கேள்வி எழவில்லை. யாருக்கும் கிடைக்காத சினிமா அதிஷ்டம் இது; காரைக்குடியில் ஒரு சினிமா உதயமாகிறது எனும் கற்பனையின் கீழ் மிதந்தோம். உச்சமாக தான் நடத்திக் கொண்டிருந்த ஒரு குறு நிறுவனத்தை இயக்குநர் மோகன்குமார் அதை ஒரே இரவில் துச்சமென தூக்கி எறிந்தார். 

எங்கள் குழுவில் இயக்குநருக்கு கீழ் ஆறுபேர் இருந்தோம். சந்துரு காரைக்குடி அருகில் இருக்கும்  கல்லல் கிராமத்தை சேர்ந்தவர். அவர் அதிஷ்டவசமாக ஆறு படங்களில் வேலை செய்தவர். துரதிஷ்டவசமாக எந்த படமும் வெளியாகவில்லை. சினிமாவுக்கு முயற்சி செய்பவர் என்றாலும் உள்ளூரில் சினிமா பேச ஒரு அதிகாரபூர்வ குழு இருப்பதால் யாரிடமோ விசாரித்து எங்களிடம் சேர்ந்து கொண்டார். நான் கொஞ்சம் எழுதுவேன் என்பதால் நானும் ஒரு உதவி இயக்குநர். பாரி எனும் நாற்பதுக்கு மத்தியில் இருந்த ஒடிசலான தேகம் கொண்டவர் ஒரு சந்தானம் படத்தில் பணியாற்றியவர். ராம்நாட்டுகாரர். சந்துரு ரூம் மெட் என்பதால் எங்களுடன் சேர்ந்து கொண்டார். அவரின் உதவி இயக்குநர் அடையாள அட்டையை அடிக்கடி எங்களுடன் காட்டி அது தொடர்பான ஏதேனும் ஒரு தகவலை சொல்வார். அடுத்து நோவா உள்ளூர் போட்டோகிராபர் ஒளிப்பதிவாளர் லட்சியம் எங்களோடு இணைந்து கொண்டார். கடைசியாக தான் வந்தார், ஆறுமுகம் சார்! உள்ளூர் ஜவுளிக்கடை அதிபர். சினிமா அதிகம் பார்க்க மாட்டார். சினிமா வேலை தெரியாது. ஆனால் சினிமாவில் வேலை பார்க்க ஆசைப்பட்டார். மணிரத்தினம் எடுத்த அஞ்சலி படத்தை பார்த்து மிகவும் உணர்ச்சி உந்தப்பட்டு தற்கொலைக்கு முயன்று பின் இது சினிமா காதல் என்பதை அறிந்து ஒரு குறும்பட படப்பிடிப்பில் எங்களுடன் நட்பானார். இது தவிர்த்து நடிகர் ஆசையில் அபினன் என்பவன் வந்தான். 

மேற்கண்ட குழுதான் கதை எங்கள் இயக்குநர் மோகன்குமார் தலைமையில் கதை விவாதம் செய்தது. Pre production செலவு இயக்குநர் மோகன்குமார் அவர்களே! எல்லோரும் அவரவர் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு வந்தார்கள். நான் மத்திய நெடுஞ்சாலை துறையின் கன்சல்டன்ட் அலுவலகத்தில் வேலை பார்த்தேன். எங்கள் டீம் லீடரிடம் ராஜினாமா கடிதத்தை நீட்டினேன். அவர் ஆந்திராகாரர் என்றாலும் நன்றாய் தமிழ் பேசுவார். 

“என்ன இது?”

“Resignation letter ஸார்!”

“எதுக்கு வேலைய விட்டு போற?”

“சினிமாவுக்கு போறேன்!” என்றதும் அவர் சாய்ந்திருந்த இருபதாயிரம் மதிப்புள்ள exicutive சேரில் இருந்து முன்னால் வந்தார். 

“சினிமாவா? யூ மீன் தியேட்டர் சினிமா?” என்றார். 

ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டு ஆகவேண்டியதை பார்க்காமல் இதென்ன கேள்வி மேல் கேள்வி என கடுப்பு வந்தது. என்றாலும் அவர் ஆர்வமாக கேட்டதால் பொறுமையாக பதில் சொன்னேன். 

அவர் அனைத்தையும் கேட்டுவிட்டு, “வாழ்நாள் முழுக்க சினிமா எடுக்க போறீங்களா? இல்ல எத்தனை மாசம் schedule போட்டிருக்கீங்க?” என்றான். கேள்வி கடுப்பாக இருந்தாலும் அதன் அர்த்தம் அப்பொழுது புரியவில்லை.

நான், “மூணு மாசம்” என்றேன்.

“அப்புறம்?”

“அப்புறம், அடுத்த படம்!”

அவர் சிரித்து விட்டு சொன்னார். உனக்கு மூணுமாசம் லீவ். ஒரு மாசம் சம்பளம் வந்துரும். மிச்ச ரெண்டு மாசம் லீவுக்கு ஒரு டாக்டர் certificate வாங்கிக் குடு!” என்றார். மூணு மாசம் கழிச்சு சென்னையில் இருப்போம். அதை எதுக்கு இவரிடம் சொல்ல வேண்டும் எனும்  விடுதலை உணர்வுடன் விடைபெற்றுக்கொண்டேன். கிளம்பும் பொழுது சொன்னார். “எனக்கும் சினிமா interest இருக்கு. but not a easy business. ஷூட் நடக்கும்போது சொல்லு வந்து வேடிக்கை பாக்கிறேன்!” என்றார். 

காரைக்குடியின் ஒரு ஒதுக்குபுற அறையில் கதை விவாதம் நடந்தது. மொத்தம் இருபது நாள். இரவு விவாதம் நடக்கும். பகல் அதை சீனாக டைப் செய்யும் பணி. இடையிடையே அஜய் எங்களை வந்து பார்த்து கதை குறித்து கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தான். சீக்கிரம் தயார் செய்து தருமாறு அவசரம் வேறு. நாங்கள் வெறித்தனமாக வேலை செய்தோம். ஜவுளிக்கடை அதிபர் இரவில் கடையை பூட்டிவிட்டு எங்களுக்கு சில்லறை வேலை செய்தார். இடையிடையே ஏதோ ஐடியா சொல்ல முயலும் போதெல்லாம் அசல் சினிமாகாரர்களிடம் மூர்க்கமாக வார்த்தையால் தாக்கப்பட்டார். வயதும், மரியாதை குறைவு கருதி மறுநாள் வர விவாதத்திற்கு வர மாட்டார் என நினைப்போம். முதல் ஆளாக கையில் ஸ்நாக்சுடன் எங்களுக்காகக் காத்திருப்பார். 

இயக்குநர் மோகன்குமார் எங்களை பேசவிட்டு அதில் இருக்கும் லாஜிக் குறையை சரியாக கண்டறிந்து சொன்னார். அவர் மீது எல்லோருக்கும் இயக்குநர் எனும் மரியாதை வந்தது. மிகுந்த நட்புடன் நடத்தினார். மது தவிர்த்து நாங்கள் கேட்கும் அனைத்து வசதியும் செய்து கொடுத்தார். இருபது நாளில் அவர் சில லட்சங்களை இழந்திருந்தார். அஜய் எல்லாம் சரியானதும் செலவு செய்த பணத்தை வாங்கிதருவதாக கூறினான். இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது இயக்குநர் மோகன்குமார் தீவிரமாக செலவு கணக்கை எழுதிக் கொண்டிருப்பார். 

ஒரு நல்ல நாளில் ஸ்கிரிப்ட் முடிந்தது. நன்றாக வந்ததா? இல்லையா என தெரியாமல் முடித்ததே ஒரு சாதனையாக கருதினோம். அதை பிரிண்ட் செய்து ஒரு தடிமனான புத்தகமாக வந்தது. அதை பிறந்த குழந்தை போல மகிழ்ச்சியுடன் தூக்கி மகிழ்ந்தோம். script முடிந்த செய்தி அஜய்க்கு சொன்னதும் மிகவும் மகிழ்ந்தான். சித்தப்பாவிடம் சொல்லி ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்வதாக சொன்னான். மேலும் நாம் நிச்சயம் படம் பண்ணுவோம். இந்த மீட்டிங், ஸ்கிரிப்ட் எல்லாமே ஒரு பார்மாலிட்டி என்றான். உதவி இயக்குநர் குழு மகிழ்ச்சியாக இருந்தது. 

தயாரிப்பாளரும் அஜய் சித்தப்பாவுமான செல்வம் ரிச் அவர்களை சந்திக்க நாள் வந்தது. வளசரவாக்கம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து “செல்வம் ரிச் புரொடக்ஷன்” என போர்டு எழுதி  சமீபத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்ட களை தெரிந்தது. வரவேற்பறையில் பெரிய சோபா. இயக்குநர் மோகன்குமார் பள்ளி சிறுவர்கள் இன்பச் சுற்றுலா போல அனைவரையும் அழைத்து சென்றார். ஜவுளிக்கடை அதிபர் முதன்முறையாக சென்னை பார்த்த பிரமிப்பில் இருந்து மீளாதவராக படம் எடுக்க வந்திருப்பதை மறந்துவிட்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு மற்றும் விஜயகாந்த கட்சி அலுவலகம் குறித்து பேசிக்கொண்டு வந்தார். 

தயாரிப்பாளர் அறை முதல் மாடியில் இருந்தது. அஜய் எங்களை பார்ப்பதும் மேல் மாடிக்கு போவதுமாய் இருந்தான். நாங்கள் தயாரிப்பாளரை முதன் முதலாக பார்க்கும் ஆவலில் இருந்தோம். அவர் வரும் பொழுது எப்படி எழுந்து மரியாதை செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தோம். தயாரிப்பாளர் மாடியில் இருந்து படியில் நிதானமாய் இறங்கி வந்தார். நல்ல உயரம், அதற்கேற்ப பருமன், வெள்ளை தாடி, கையில் பெரிய காப்பு என தயாரிப்பு வம்சத்தின் கடைசி வாரிசு போல மின்னினார். ராம்நாட்டுகாரர் அவரை பார்த்து, “இவருக்கு நம்ம கதையில் ஒரு வில்லன் ரோலுக்கு சரியா இருப்பார்” என்றார். 

முழுமையாக படியில் இருந்து இறங்காமல் எங்கள் அனைவருக்கும் ஒரு வணக்கம் வைத்தார். அனைவரும் மெய் சிலிர்ந்து வணக்கம் வைத்தோம். ஷங்கர் படத்துக்கு கூட பைனான்ஸ் பண்ணும் திராணி கொண்டவர் என நம்பினோம். இயக்குநரை மட்டும் மேலே அவரது அறைக்கு அழைத்தார். இயக்குநர் மோகன்குமார் ஸ்கிரிப்ட்டை குழந்தை போல தூக்கிச் சென்றார். ஆரம்ப காரணகர்த்தா எனும் நன்றியில் அவரது சித்தப்பாவுக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்ய அஜய் என்னையும் மேலே அழைத்தான். 

.

.நானும் இயக்குநரும் தயாரிப்பாளர் அறைக்கு சென்றோம். அறை பிரமாண்டமாக இருந்தது. அவரது வலது பக்கம் ஒரு வாஸ்து மீன் வலம் வந்து நொந்து கொண்டிருந்தது. அஜய் இயக்குநரையும் என்னையும் அறிமுகம் செய்து வைத்தான். இரண்டுக்கும் ஒரே வார்த்தையாக, “குட் குட்” என்றார். பெரிய படிப்பில்லாதவர் என அஜய் சொன்னது நினைவுக்கு வந்தாலும் குட் சொல்ல என்ன படிப்பு வேண்டியிருக்கிறது? என அமைதியாக அவரது அசைவுகளை கவனித்தேன். இயக்குநர் கதையை சொன்னார். முழு நீள படத்தையும் ஓட்டினார். எனக்கு அது ஏழாவது முறை என்பதால் தூக்கம் வந்தது. வாஸ்து மீன் வேறு பக்கம் நீந்திக் கொண்டிருந்தது. கதையை கேட்டுக் கொண்டிருந்தவர் இடையிடையே ரெண்டு போன் அட்டன்ட் செய்தார். Script புத்தகத்தை தூக்கி எடைப்பார்த்து வைத்தார். பின் இரண்டு பக்கம் படித்துவிட்டு கீழே வைத்தார். சுமார் ஒரு மணிநேரம் கதை சொல்லிவிட்டு இயக்குநர் அவரை பார்த்தார். அவர் முகத்தில் திருப்தி. “சூப்பர் பண்ணலாம்!” என்றார். அஜய் என்னையும் இயக்குநரையும் மகிழ்வுடன் பார்த்தான். 

“ரெண்டு  கோடியில் முடிச்சிடலாம் தானே? அப்புறம் ஏதும் செலவு வந்துடாதே?” என தயாரிப்பாளர் செல்வம் ரிச் சொல்லும் பொழுது எங்கள் இயக்குநருக்கு ஆனந்தக் கண்ணீர்! அவரை கைத்தாங்கலாக நானும் அஜய்யும் அழைத்து வந்தோம். மாடிப்படியில் இருந்து இறங்கி வந்த எங்களை கீழிருந்த உதவி இயக்குநர் படை ஏக்கமாக பார்த்தது. இயக்குநர் அங்கிருந்தபடி வெற்றிக் குறியீடு காட்டினார். எங்கள் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு மயிர்கூச்சரியும் காட்சி இல்லை. 

எங்கள் குழு காரைக்குடி திரும்பும் வரை அதை பற்றி பேசிப்பேசியே தலை வலித்து திருச்சியில் தூங்கினோம். பத்து நாட்கள் ஓடியது. Pre production பணத்தை போட்டு விடுவதாக சொன்ன தயாரிப்பாளரின் வார்த்தைக்கு இணங்க இயக்குநர் எந்நேரமும் அலைபேசி வாங்கி வரவு செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். செலவு இரண்டரை லட்சம். அதற்கு காற்றில் கணக்கு போட்டு காத்திருந்த நாட்களில் l எங்களுக்கும் சோறு போட்டார். தின்ற சோற்றுக்கு கதையை மெருகு செய்வதாக கூறி பிரியாணி, புரோட்டா, இரவில் ஐஸ்கிரீம் என பெரிய வீட்டு கல்யாண விருந்துக்கு வந்த மமதையில் இருந்தோம். 

ஒரு முகூர்த்த நாளில் சென்னைக்கு அழைப்பு வந்தது. இயக்குநர் முக்கியமான ஆட்களை மட்டும் அழைத்து போனார். கழன்று கொள்ளும் மனநிலையில் இருந்த என்னை கட்டாயமாக அழைத்து சென்றார். குழுவாக சென்ற கொண்டாட்டம் எங்கள் இருவருக்கும் இல்லாமல் மௌனமாக நடந்தோம். தயாரிப்பாளர் செல்வம் ரிச் களையிழக்காமல் இருந்தார். மிகவும் சிரித்து பேசினார். பின் சொன்னார், “உயிரே போனாலும் இந்த படம் கண்டிப்பா பண்ணுறோம். ஆனா சின்ன சேஞ்ச் இருக்கு. நீங்க ஒரு இருபது லட்சம் போட்டு ஸ்டார்ட் பண்ணுங்க. சரியா ஷூட்டிங் நடக்குற  மூணாவது நாள் உங்களுக்கு எல்லா பணமும் உங்களுக்கு வந்துரும். அப்புறம் படத்தை நான் டேக் ஓவர் பண்ணிடுவேன். இது சினிமா! இதுமாதிரி சில விஷயங்கள் நடக்கும். அதை நம்பிக்கை இல்லேன்னு எடுத்துக்க கூடாது. உங்க திறமை மேல நம்பிக்கை வச்சு பண்ணுங்க. அப்புறம் என்னோட அண்ணன் மகனை வச்சு எடுக்கிறீங்க. அதுனால கண்டிப்பா உங்களை கை விட மாட்டேன். சோ, உங்க திறமை மேல வச்சு தைரியமா ஸ்டார்ட் பண்ணுங்க!” என்றார். மாடியில் இருந்து இறங்கி வந்தோம். அந்த பதினேழு படிகள் மிகுந்த தூரமாக இருந்தது. பந்தாவாக இருந்த சோஃபாவில் உட்கார்ந்து அரை மணிநேரம் பேசாமல் அமர்ந்திருந்தோம்.  

ஊர் வந்தோம். காலையில் உதவி இயக்குநர்கள் தயாராக இருந்தனர். இயக்குநர் நடந்த விவகாரங்களை சொல்லி தான் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக சொன்னார். ஆம், தன் பணத்தில் படம் தொடங்குவது என்று! 

தயாரிப்பாளர் தொடர்ந்து இயக்குநருடன் தொடர்பில் இருந்தார். பலனாக 90களில் ஒரு பெரிய இயக்குநரின் இணை இயக்குநராக வேலை பார்த்த ஒருவரை உதவியாக அனுப்பி வைத்தார். தவிர அவர் சார்பில் ஒரு புரொடக்ஷன் மேனேஜர். 

இணை இயக்குநர் தீவிரமாக வேலை பார்த்து இயக்குநருடன் ஷூட்டிங் Schedule அமைத்து கொடுத்தார். ஒளிப்பதிவாளர் அஜய் நண்பர் ஒருவர். பல கன்னட படங்களில் ஒளிப்பதிவு செய்த தஞ்சாவூர் தமிழர். இசை நிறைய ஆல்பம் பாடலுக்கு இசையமைத்த இளைஞர் ஒருவரை நியமித்தோம். அவர் ஒரு அஜித் ரசிகர். நாலு வருடங்களுக்கு முன்பு அஜித் பற்றி ஏதோ எழுத அவர் என்னை “நட்பு இல்லை” செய்தார். இப்பொழுதும் அஜித் நடித்தால் முதல்நாள் காட்சியில் காணலாம். எடிட்டிங் இப்பொழுதும் பெரிய எடிட்டராக இருக்கும் ஒருவரை பிடித்து கமிட் செய்தோம். 

எல்லோரையும் கமிட் செய்தாகிவிட்டது. அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். இயக்குநரின் மனைவி நூறு சவரன் நகையுடன் வந்தவர். உதவி இயக்குநர் எங்களின் முதல் பணி ஆளுக்கு ஒரு ஐந்து சவரன் நகையுடன் வங்கி வாசலில் அடகு வைக்க நிற்பதுதான். இயக்குநர் மோகன்குமாரை எல்லோரும் டைரக்டர் ஸார் என்றதும் எங்களுடன் அதிகம் பேசுவதை தவித்துக் கொண்டு எந்த நேரமும் யோசனையில் இருந்தார். 

நடிகர்களை அவசர அவசரமாக கமிட் செய்தோம். அவர் ஒரு இரண்டு, மூன்று படங்களை இயக்கியவர். பின் நடிகராக மாறியவர். இப்பொழுது உயிருடன் இல்லை. அவரை புரொடக்ஷன் மேனேஜர் வாயிலாக பேசி கமிட் செய்தோம். நாளொன்றுக்கு இவ்வளவு என கறாராக பேசினார். மூன்று நாட்கள் சம்பளத்தை அட்வான்சாக கொடுக்க வேண்டும் என்றார். அட்வான்ஸ் போடுவதற்குள் பணம் போட்டாச்சா? போட்டாச்சா? என படுத்தி எடுத்தார். இதனைக்கும் அகிர்மெண்ட் கூட போடவில்லை. பணம் போட்ட விசயத்தை கூறியதும், “வீட்டுக்கு சோபா வாங்க பணம் தேவைப்பட்டதால் தான் அவசரம் காட்டினேன். தவறாக கருத வேண்டாம்!” என வருத்தம் கோரும் விதமாய் பேசினார். 

ஹீரோ பிரெண்ட் வேடத்திற்கு வெற்றிமாறன் படத்தில் துணை நடிகராக இருந்தவரை கமிட் செய்தோம். ஒரு தொகை அட்வான்ஸ் போட்டோம். ஷூட்டிங் நாள் நெருங்கி வந்ததால் பம்பரமாக வேலை செய்தோம். லோக்கல் பர்மிஷன், நகராட்சி அனுமதி, காவல்துறை அனுமதி என வேலை புதிதாக இருந்தது. அனைத்துக்கும் காசு நீராவி போல பறந்தது. 

.

இந்த நிலையில் தயாரிப்பாளர் செல்வம் ரிச் எங்களை தொடர்பு கொண்டு அவருக்கு தெரிந்த புரொடக்ஷன் ஆட்கள், வாகனம், கேமரா, லைட்டிங் அனைத்துக்கும் ஏற்பாடு செய்தார். அதற்கும் அட்வான்ஸ் போடுவதற்குள் இயக்குநர் மோகன்குமார் மனைவி சில நகைகளை இழந்தார். 

அஜய்க்கு நாயகியாக ஒரு  இயக்குநர் & நடிகரின் மகளை கமிட் செய்தோம். நடிகரின் மனைவியும் நடிகைதான். கதை பிடித்தால் தான் நடிப்பேன். என நடிகையும் ஹீரோயின் அம்மாவுமான அவர் உறுதியாக இருந்தார். இயக்குநர் உள்ளே உட்கார்ந்து கதை சொல்வதை வெளியே போர்டிகோவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். பலருக்கு கதை சொல்லியதால் இயக்குநர் மோகன்குமார் அதில் இன்னும் நெளிவு சுழிவுகளை கற்று தேறினார். கதையில் வாகனம் வருவதெல்லாம் இவர் வாயில் வாகனம் ஓட்டினார். வில்லன் போல சிரித்தார். நாயகி போல வெட்கம் காட்டினார். ஹீரோ போல கர்ஜனை செய்தார். சீன் பை சீனாக விவரித்து இரண்டு மணி நேர கதையை இரண்டரை மணிநேரமாக சொல்லியதில் நடிகைக்கு ஏக திருப்தி. அந்த இடத்திலேயே கதைக்கு ஓகே சொல்லி அப்பொழுதுதான் எல்லோருக்கும் டீ கொடுத்தார்கள். சினிமாவில் அனாவசியமாக யாருக்கும் டீ கொடுக்க மாட்டார்கள் என்பது அப்பொழுதான் விளங்கியது. அவரது மேனேஜரிடம் சம்பளம் பேசப்பட்டு ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அந்த நடிகையை யாரும் பார்க்கவில்லை. அதுதான் எங்களின் கடைசி சந்திப்பு என அறிந்திருக்கவில்லை. 

ஊரில் ஒரே பரபரப்பு. பொங்கல் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பம் என்று போஸ்டர் டிசைன் ஆரம்பித்தது. தயாரிப்பாளர் அங்கிருந்து இயக்குநர் மோகன்குமார் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அது அன்லிமிடெட்  இல்லாத காலம் என்பதால் ஒருநாளைக்கு முன்னூறு ரூபாய்க்கு இருவரும் பேசினார்கள். 

எல்லாம் தயார். மெஸ் சாப்பாடு ஏற்பாட்டை எனக்கு தெரிந்த இடத்தில் பேசி அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட ஆட்கள் தங்க பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு ஹோட்டல் புக் செய்யப்பட்டது. ஷூட்டிங் நாள் வந்தது. 

நல்லதொரு மங்களகரமான நாளில் சென்னையில் இருந்து அவுட்டோர் யூனிட் ஆட்கள் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக காணப்பட்டனர். கிட்டத்தட்ட அனைவரும் ஏதோ ஒரு படத்தில் முகம் காட்டியவர்களாக இருப்பார்கள் என்றே தோன்றியது.

 பார்ப்பதற்கு சென்னையின் இரண்டாம் கட்ட அடியாள் போல் இருந்தவர்தான் புரடக்சன் எக்சிகியூட்டிவ். சினிமா என்கிற ஜிகினா லேசாக விலகிய உணர்வு. “எல்லாம் பல்கா இருக்கானுங்க. பட்ஜெட்ல இன்னொரு கோடி கூடுனாலும் கூடும். சோறு போட்டு மாளாது போலேயே” என்றான் எங்களில் ஒரு உதவி இயக்குனர் ஒருவன். 

மறுநாள் நல்லதொரு நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கப் போகும் கொஞ்ச நேரத்திற்கு முன்பாக யூனிட் ஆட்களுக்கு சிற்றுண்டி பரிமாறப்பட்டது. “என்னடா கேசரி குலைஞ்சு போய் இருக்கு எவன்டா மெஸ் இன்சார்ஜ்?” முதல் கலகக்குரல் ஒலித்தது. உதவி இயக்குனர் பணியோடு மெஸ் இன்சார்ஜ் எனும் கூடுதல் பொறுப்பு வகித்த என்னை தூரத்தில் இருந்த இரண்டு லைட்மேன்கள் கை காட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். மெதுவாய் பதுங்கி விடலாமா என இருந்தது.

ஒரு வழியாக சமாளித்து படப்பிடிப்பு தொடங்கியது. இலகுவான வசனமில்லா காட்சிகள், மற்றும் நாயகன் நடப்பது, ஓடுவது என்று காட்சிகள் படமாகியது. ஒரு பெரிய இயக்குநரிடம் இணை இயக்குநராக இருந்த ஒருவர் உடன் இருந்தது, சற்று வசதியாகவே இருந்தது. கடைசி நேரத்தில் உதவி இயக்குநர்களாக வந்த உள்ளூர்வாசிகள் அட்மாஸ்பியர் மற்றும் பொதுமக்களை விரட்டப் பயன்பட்டனர். காட்சிகள் எங்கள் ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் எடுக்கப்பட்டது. லோக்கல் குடிகாரர்கள் தொல்லைகள், தெரிந்தவர்களின் கேள்விகள் என ஒரு வழியாக முதல்நாள் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

படப்பிடிப்பில் என்னோடு எட்டு பேர் உதவி இயக்குநராக இருந்தோம். மிகவும் சோர்வாக இருந்தது. அடுத்த நாள் காட்சி பற்றிய விவாதத்திற்கு இயக்குநர் அவரது அறைக்கு அழைக்கும் போதே, ஒரு உதவி இயக்குநர் தம்பி அப்பாவுக்கு முடியவில்லை என்று விடுமுறை கேட்டான். அவன் அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆனதை இயக்குநரிடம் சொல்லவில்லை. அடுத்த நாள் காட்சிக்கு டாஸ்மாக் செட்டு போட பணம் வேண்டுமென்று ஒரு உதவி கலை இயக்குனர் வந்து சொல்லி விட்டுப் போனார். இருந்த களைப்பில் அவன் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் போல இருந்தது. வேறுவழியில்லாமல் பழைய அட்டைப் பெட்டியை தேடி ஒரு பழைய இரும்புக் கடையில் தஞ்சம் புகுந்து மது பாட்டில் அடைக்கும் பெட்டியாக பார்த்து தேடினோம். பழைய இரும்புக்கடை தூசிகள் சோர்வாக கிடந்த எங்கள் மூக்கில் இரக்கம் காட்டாமல் ஏறியது.

இரவு பத்து மணிக்கு ரூமிற்கு செல்லும்போது புரடக்சன் எக்சிகியூட்டிவ் நைட்டு சிக்கன் கிரேவி பண்ணச் சொல்லுங்க என்று போனில் சொன்னார். கிரேவியில் விஷம் வைக்கலாமா என யோசனை வந்தது. தயாரிப்பு தரப்பில் இருந்து வந்த புரடக்சன் மேனஜர் யூனிட் ஆட்களுக்கு பேட்டா பணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார். இயக்குநருக்கு போன் அடித்து விஷயத்தை சொன்னோம். சோர்வாக இருந்தவர், நைட்டு ஏதாவது அடகுக்கடை இருக்குமா என்று விசாரித்தார். சினிமாவில் இயக்குநரே தயாரிப்பாளராக இருந்தால் என்னாகும் என்பது புரிந்தது.

நான்காவது நாளில் தயாரிப்பாளர் பணம் கொடுத்தும் இயக்குநர் வேலையை மட்டும் நிம்மதியாகப் பார்க்கலாம் என்பது இயக்குநர் மோகன்குமார் அவர்களின்  நம்பிக்கை. அப்படி இப்படியுமாக மூன்றாவது நாள் ஷூட்டிங் இறுதிப் பகுதியில் இருந்தோம். இயக்குநர் தனது ஒட்டுமொத்த சேமிப்பையும் கரைத்திருந்தார். யூனிட் ஆட்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் வாங்கப் பணம் கேட்டு நின்றிருந்தார் புரடக்சன் எக்சிகியூட்டிவ். பணம் இல்லாவிட்டால் நூறு இனிப்பு போண்டா, எண்பது பஜ்ஜி வாங்கி வந்து கொடுங்கள் என்றார்.

மூன்றாம் நாள்  ஷூட்டிங் முடிந்து இயக்குநர் பேக்அப் சொல்லவில்லை. எல்லோரும் கிளைமேக்ஸ் மூடில் இருந்தோம் . யூனிட்டில் வேலை பார்த்த ஆட்களுக்கு அன்று பேட்டா கொடுக்க வேண்டும். இயக்குநர் தான் உருவாக்கிய கதையை மறந்து இவர்களை சமாளிக்க ஒரு கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். மெஸ்ஸில் இருந்து மளிகைப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று கோரிக்கையை இயக்குநரிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 

மறுநாள் காலை ஆறு மணிக்கு தயாரிப்பாளருக்கு இயக்குனர் போன் போட்டார். அவரிடம் இருந்து பதிலில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சரியாக ஐந்தாவது நிமிடம் அவருக்கு அழைப்பு வந்தது. தயாரிப்பாளரிடம் இருந்து அல்ல, யூனிட் ஆட்கள் தங்கியிருக்கும் லாட்ஜ் நிர்வாகத்திடம் இருந்து!

மீண்டும் தயாரிப்பாளருக்கு போன் அடித்தால் ஸ்விட்ச் ஆப். யூனிட் வண்டிகளுக்கு டீசல் போட வேண்டும், பணம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஹீரோ அஜய் கதவைத் தட்டினார்.

”ஸார் எங்க சித்தப்பா, இந்த படத்தை ட்ராப் பண்ணச் சொல்லிட்டார்!” என அதுவரை பார்த்த அஜய் அப்பொழுது புதிதாக சொன்னான்.

இயக்குநர் முகத்தைப் பார்க்க எங்கள் யாருக்கும் தெம்பில்லை.

‘என்னப்பா, இன்னும் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணலையா?’ – இது உள்ளூர் லொக்கேஷன் மேனேஜர்.

மளிகைப் பொருட்கள் வராததால் மெஸ் சாப்பாடு வரவில்லை.

படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தால் இன்னும் சிக்கலில் மாட்டுவோம் என்பது உரைத்தது.

இயக்குநர் குரலுக்குக் காத்திருந்தோம்

‘என்ன ஸார் பண்ணலாம்?’

அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மறுபடியும் ஒரு மொபைல் அழைப்பு.

“ஸார், பெட்ரோல் பங்க்ல இருந்து பேசுறோம். யூனிட் வண்டிக்கு டீசல் அடிச்சதுக்கு இருபதாயிரம் பாக்கி இருக்கு. ஓனர் அமௌன்ட் கேக்குறார்!”

இயக்குநர் மோகன்குமார்  முகத்தை தெம்பில்லாமல் பார்த்தோம். இதற்கிடையில் சூழல் புரியாமல் நடிக்க  வாய்ப்பு கேட்டு உள்ளூர் ஆட்கள் அழைப்பு வேறு விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. 

இயக்குநர் மோகன்குமாரை பார்த்தோம். அவர் யாரிடமோ பேசி ஒரு பணக்கட்டு ஒன்றை கொண்டு வந்தார். லோக்கல் மெஸ், பெட்ரோல், ரூம் வாடகை என எல்லாம் சரி செய்யப்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்படுவதாக அறிவித்தார். காரணம் முடிவு எடுக்க தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் சினிமா எனும் முதலை பணத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. 

ஹீரோ பிரெண்ட் தவிர அட்வான்ஸ் கொடுக்கபட்ட எந்த நடிகர், நடிகையும் காரைக்குடி மண்ணில் கால் வைக்கவில்லை. ஹீரோ பிரெண்ட்டை இரவு சென்னை பேருந்தில் ஏற்றி விட்டோம். மூன்று நாட்கள் நட்பாக பேசிய அவர் பணம் இல்லாமல் படப்பிடிப்பு நின்றதில் இருந்து சரமாரியாக ஏச தொடங்கினார். “பணம் இல்லாட்டி ஏண்டா படம் எடுகிறீங்க?” எனும் அவரது கேள்வி சம்பந்தபட்டவரை சென்றடையவில்லை. 

சினிமா அலுவலகம் பக்கம் நான்கு நாட்கள் யாரும் போகவில்லை. யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. கற்பனை உலகத்தில் இருந்து எதார்த்த உலகத்திற்கு வர மேலும் மூன்று நாட்கள் பிடித்தது. வெளியூரில் இருந்து சினிமா வேலை பார்க்க வந்தவர்களை திருப்பி ஊருக்கு அனுப்ப பட்ட வேதனைகள் வேறு ரகம். ஸார், ஸார் என வாயார அழைத்த வாய்கள் இயக்குநரை ஒருமையில் விளித்தது. இயக்குநர் மனைவியின் அடகு வைத்த நகைகளுக்கு இன்றும் வட்டி கட்டிக்கொண்டு தான் இருக்கிறார். கணக்குபடி எப்படியும் ஒரு இருபது, இருபந்தந்து லட்சம் இருக்கும். அதற்கு மேலேயும் இருக்க வாய்ப்புகள் அதிகம். 

எங்கள் மீது நிறைய தவறுகள் இருந்தன. சினிமா உருவாக்கத்தை சினிமா பார்ப்பது போன்ற கொண்டாட்ட அனுபவமாய் இருக்கும் என்பது எங்கோ எங்கள் புத்தியில் ஆழமாய் உட்கார்ந்திருந்தது. தவிர இயக்குநரை எல்லோரும் இயக்குநரே என அழைத்த அந்த மந்திர வார்த்தை இரவு அடகுக்கடை வரை இட்டுச்சென்றது. 

ஒரு இருபது நாட்கள் கழித்து வேலையில் சேர்ந்தேன். ஆந்திரக்காரார டீம் லீடர், “என்ன சீக்கிரம் வந்துட்ட ரொம்ப சின்ன படமா?” எனக்கேட்டு சிரித்தார். அதிலிருந்து இரண்டு வருடம் சினிமா பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தேன். இப்பொழுது இயக்குநர் மோகன்குமார் தான் ஏற்று நடத்தி வந்த நிறுவனத்தை மீண்டும் நடத்தி வருகிறார். நானாவது இரண்டு வருடங்களுக்கு பின் சினிமா பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அவர் இப்பொழுது வரை சினிமா பார்ப்பதில்லை.

Author Image

கா.ரபீக் ராஜா

காரைக்குடியை சேர்ந்தவர். சமூகவலைத்தளம் மற்றும் பிற தளங்களில் எழுதி வருபவர். சிறுகதை, நாவல், கட்டுரை தொகுப்பு என எட்டு படைப்புகள் வெளிவந்துள்ளது.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
இளையராஜா 50

இளையராஜா 50

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
இளையராஜா 50

இளையராஜா 50

September 1, 2026
யதார்த்த முகம்

யதார்த்த முகம்

September 1, 2026
கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

September 1, 2026
நினைவஞ்சலி – சௌகார் ஜானகி

நினைவஞ்சலி – சௌகார் ஜானகி

September 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
இளையராஜா 50

இளையராஜா 50

September 1, 2026
யதார்த்த முகம்

யதார்த்த முகம்

September 1, 2026
கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

September 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?