பாஸ்கர் சக்தி
`ஆர் பார்’ (1954)
`மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55’(1955)
`சி ஐ டி ‘(1956),
`ப்யாஸா’(1957)
அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிகளைக் குவித்தார் குருதத். இதில் சிஐடி அவரது தயாரிப்பு , மற்ற மூன்று திரைப்படங்களிலும் ஹீரோவும், இயக்குநரும் அவரே.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் , `காகஸ் கே பூல்’ (காகிதப் பூக்கள்) இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாக அதனை பெரும் பொருட்செலவில் உருவாக்கினார் குருதத்.
`காகஸ் கே பூல்’ படத்தின் கதை ஒரு திரைப்பட இயக்குநரின் துயர் மிகுந்த வாழ்வைப் பேசிய கதை. அதனைக் கிட்டத்தட்ட குருதத்தின் சொந்தக்கதை என்கிற பேச்சும் அப்போது அடிபட்டது. இப்போதும் கூட அந்தப் படத்தைப் பார்க்கையில் குருதத்தின் வாழ்வுக்கும் , அந்தத் திரைப்படத்தின் கதாநாயகனான டைரக்டர் சுரேஷ் சின்ஹாவுக்கும் உள்ள ஒற்றுமைகளை உணர முடிகிறது.
சுரேஷ் சின்ஹா ஒரு வெற்றிகரமான டைரக்டர். அவனது மனைவி பெரும் பணக்கார வீட்டு செல்லப்பெண். மாமனார் கர்வம் கொண்ட,, மேட்டுக்குடி மனோபாவம் கொண்ட மனிதர். சினிமாத் துறையை அசிங்கம் பிடித்த ஒன்றாகக் கருதுபவர். எனவே மனைவி சுரேஷ் சின்ஹாவை விட்டு பிரிந்து வாழ்கிறார். மகள் பம்மி ஒரு உயர்தர கான்வென்டில் படிக்கும் டீன் ஏஜ் பெண்.
தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுரேஷ் டெல்லியில் தற்செயலாக சாந்தியை ( வஹீதா ரஹ்மான்) சந்திக்கிறார். மழையில் நனைந்து நடுங்கும் அவளுக்கு தனது கோட்டை கொடுத்து விட்டு மும்பை சென்று விடுகிறார். அனாதையான சாந்தி வேலை தேடி மும்பை வந்தவர் , கோட்டில் இருந்த விசிட்டிங்க் கார்ட் மூலம் விலாசம் அறிந்து அந்த கோட் டை திருப்பிக் கொடுக்க ஸ்டுடியோவிற்கு வருகிறார். தற்செயலாக ஷூட் செய்து கொண்டிருக்கும் கேமராவில் அவர் பதிவாகி விடுகிறார். தான் இயக்கும் தேவதாஸ் படத்தில் பார்வதி பாத்திரத்துக்கு நாயகியைத் தேடிக்கொண்டிருக்கும் சுரேஷ், இவள்தான் அதற்கு பொருத்தமானவள் என்று சாந்தியைத் தேர்வு செய்கிறார். படம் வெற்றியடைகிறது. சாந்தி புகழ் பெற்ற நட்சத்திரமாகிறாள். இதனிடையே ஒரு விபத்தில் கை உடைந்த சுரேஷை பராமரிக்கிறாள் சாந்தி. தனிமையில் வாடும் இந்த இரண்டு ஆத்மாக்களுக்குமிடையில் ஒரு நேசம் உருவாகிறது. அதனை இருவருமே மனரீதியாக உணர்கிறார்கள்.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள். அது ஒரு ப்ளடோனிக் லவ் ஆகவே இருக்கிறது.
ஆனால் பத்திரிகைகள் இதனை விதவிதமாக எழுத, பள்ளியில் படிக்கும் சுரேஷின் மகள் பம்மி அங்கிருந்து ஓடி வந்து சாந்தியை சந்திக்கிறாள். தனது தந்தையுடன் பழக வேண்டாம் என்று சாந்தியிடம் அழுகிறாள். மனமுடைந்த சாந்தி, புகழின் உச்சியில் இருக்கும் தனது நட்சத்திர அந்தஸ்தைக் கூட துச்சம் என நினைத்து விலகிச் சென்று ஒரு கிராமத்தில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள்.
சாந்தி போன பின்னர் கோர்ட்டின் மூலமாக சுரேஷின் மகளை சுரேஷின் மனைவியும், மாமனாரும் பிரித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். மனதுக்கு துணையாக வந்த சாந்தியையும், செல்ல மகளையும் பிரிந்த சுரேஷ் குடிக்கு அடிமையாகிறார். டைரக்ஷனில் கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து அவரது இரண்டு திரைப்படங்களும் தோல்வியை சந்திக்கின்றன. அவமானத்துக்கு உள்ளாகிறார். முழுக் குடிகாரனாகி திரை உலகை விட்டு வெளியேறி அலைகிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பை அளிக்க திரையுலகம் தயாராக இல்லை. அவரது சொத்துகளை இழக்கிறார். வீடு ஏலம் போகிறது.
புகழ் மங்காமல் இருக்கும் சாந்தியை கம்பெனி திரும்பவும் நடிக்க அழைக்கிறது. சுரேஷ் இயக்கினால் தான் நடிப்பதாக சாந்தி கூற கம்பெனி சம்மதிக்கிறது. சாந்தி சுரேஷை தேடிச் செல்கிறாள். படம் இயக்க வருமாறு அழைக்கிறாள். ஆனால் சுயமரியாதை மிகுந்த சுரேஷ் அந்த அழைப்பின் பின்னால் இருக்கும் கருணையை புரிந்து கொண்டு, தன்மானத்துடன் அந்த அழைப்பை நிராகரிக்கிறார்.
தன் காதலனை முழுவதும் புரிந்து கொண்ட சாந்தி அதனை ஏற்றுக்கொண்டு கிளம்புகிறாள். அதன் பின் சாந்தி தனது நடிப்பைத் தொடர சுரேஷ் ஒரு தெரிந்தவனின் கேரேஜில் அடைக்கலாமாகிறார். மேலும் நலிவடைகிறார். தன் மகளுக்கு திருமணமாகி விட்டதை அறிகிறார். ஒரு திரைப்படத்தில் பிச்சைக்காரன் வேஷத்துக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக செல்கிறார். அவரது காட்சியில் பிரதான ஹீரோயினாக சாந்தி இருக்க இவரால் நடிக்க இயலவில்லை. துரத்தப்படுகிறார். இவரை அடையாளம் கண்டு கொண்டு இவர் பின்னால் ஓடி வரும் சாந்தியிடமிருந்து விலகி ஓடுகிறார்.
இதுவரை கதை ஃப்ளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது. துவக்கக் காட்சியில் ஸ்டுடியோவுக்குள் நுழைந்து மேலே ஏறி அமர்ந்திருக்கும் இவர் பார்வையில் இந்த முழுக்கதையும் விரிந்த பின்னர் தள்ளாடியபடி கீழே இறங்கியவர் அங்கிருக்கும் டைரக்டர் நாற்காலியில் அமர்ந்து உயிரை விடுகிறார்.
உணவு இடைவேளைக்குப் பின் வரும் படப்பிடிப்புக்குழுவினர் , இயக்குநர் சேரில் இவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதில் ஒரு தொழிலாளி இவரை அடையாளம் கண்டு சின்ஹா சார் என்று சொல்ல இன்னொருவன் , “ ஷுட்டிங்க் டிஸ்டர்ப் ஆயிடக் கூடாது. இன்னிக்கு ஹீரோயின் கால்ஷூட் கடைசி நாள். சீக்கிரம் க்ளியர் பண்ணுங்க” என்கிறான். படம் முடிகிறது.
(இந்தப் படத்தின் கதை கிட்டத்தட்ட குருதத்தின் சொந்த வாழ்க்கையை ஒத்திருந்தது. குருதத் ஒரு பெரிய இயக்குநர். வஹிதா ரஹ்மான் அவர் அறிமுகம் செய்த ஹீரோயின். அவரை முன்னிட்டு குருதத்துக்கும் அவர் மனைவி கீதா தத்துக்குமிடையே பிரச்சினைகள் வெடித்தன. குருதத் தன் மனைவியையும் , பிள்ளைகளையும் பிரிந்து தனிமையில் வாடினார். அதிகமாகக் குடித்தார். அகாலமாக மறைந்தார்.)
குருதத்தின் சிறந்த திரைப்படங்களில் சிறப்பானதாக இன்று சொல்லப்படும் திரைப்படம் `காகஸ் கே பூல்’
அந்தக் காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் வெளிநாடுகையில் போடப்படுகையில் அதில் தவறாது குறிப்பிடப்படும் திரைப்படமாக `காகஸ் கே பூல்’ இருக்கிறது. இன்றும் இது ஒரு கல்ட் மூவி. க்ளாசிக் என்று கொண்டாடப்படுகிறது. குருதத்தின் திரைப்படங்களில் டெக்னிகலாக மிகச் சிறந்த திரைப்படம் இதுவே என்றும் சொல்லப்படுகிறது. இப்போது பார்த்தாலும் , காட்சி ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் நம்மை வியக்க வைக்கிற ஒரு திரைப்படமாக இது இருக்கிறது.
ஆனால் இந்தத் திரைப்படம்தான் குருதத்தை நொறுக்கிப் போட்ட திரைப்படம். மிகப் பெரிய பொருளாதார நஷ்டத்தை இந்தத் திரைப்படம் குருதத்துக்கு ஏற்படுத்தியது.

முதல் சினிமாஸ்கோப் திரைப்படம். மிகப்பெரிய செட்டுகள் , பொருட்செலவு என்று அந்தக் காலத்திலேயே மிகவும் செலவு செய்து இந்தப் படத்தை உருவாக்கினார் குருதத்.
இந்தப் படத்தின் மீது குருதத்துக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. ஒரு ஆழமான திரைப்படம், அதன்பின் ஒரு கமர்ஷியல் என்டெர்டெயினர் என்று மாறி மாறி எடுக்கும் திட்டத்தில் இருந்தவர் குருதத். ஆனால் ` ப்யாஸா” அடைந்த வெற்றி குருதத் மனதில் ஒரு நம்பிக்கையை விதைத்தது. அதைப் போன்ற இன்னொரு திரைப்படத்தை மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொண்டு வெற்றி பெற வைப்பார்கள் என்கிற நம்பிக்கையில் அவர் `காகஸ் கே பூல்’ படத்தை எடுக்க முடிவு செய்தார்.
ஆனால் ஆரம்பத்திலேயே சில மாற்றுக் கருத்துகள் எழுந்தன. திரையுலகைச் சேர்ந்த ஒரு டைரக்டரின் துயரக் கதைக்கும், வெகு ஜனத்துக்கும் என்ன சம்பந்தம்? சாதாரண ஜனங்களின் மனதில் திரை உலகைப் பற்றி இருக்கிற பிம்பம் வேறு. அப்படி இருக்க ஒரு இயக்குநரின் குடும்ப உறவுச் சிக்கலையும், மனப்போராட்டங்களையும் அவர்கள் உணர்ந்து கொள்ளவோ, ஏற்கவோ வாய்ப்பில்லை என்கிற கருத்துகளை குருதத்தின் நண்பர்கள் சொன்னார்கள்.
இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன் இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னார்,” இந்தக் கதை கிட்டத்தட்ட உன் சொந்த வாழ்க்கையைப் போல இருக்கிறது. இதனை நீ எடுக்க வேண்டாம்” என்றார். குருதத் அதனை ஏற்கவில்லை. எஸ்.டி.பர்மனுக்கும் ,குருதத்துக்கும் கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்தத் திரைப்படத்துக்குப் பின்னர் எஸ்.டி. பர்மன் குருதத் படங்களுக்கு இசை அமைக்கவில்லை.
திரைப்படத்தின் ஷுட்டிங் துவங்கியது. ஆறு ஏழு ரீல்கள் வரை ஷூட் செய்யப்பட்ட பின் குருதத் அந்த சில ரீல்களை மட்டும் முக்கியமான சிலருக்கு போட்டுக்காட்ட ஏற்பாடு செய்தார். அதனை பார்த்த அனைவரிடமும் ஒரு இறுக்கம் நிலவியது.
வி.கே. மூர்த்தியிடம் குருதத் கேட்டார். படம் எப்படி ? நீ என்ன நினைக்கிறாய்?
மூர்த்தி யோசித்து விட்டுச் சொன்னார் “ இது ரொம்ப அழகான ஒரு திரைப்படமாக வரும். ஆனால் இந்தப் படத்தில் உனக்கு ஒரு நயாபைசா கூட கிடைக்காது “
இதனைக் கேட்டு குருதத் யோசனையுடன், “ என்ன நீ இப்படிச் சொல்கிறாய்?”
இந்தப் படம் பார்வையாளர்களைக் கவராது , இது அந்தக் காலத்துக்கு பொருத்தமான படம் அல்ல என்று மூர்த்திக்குத் தோன்ற அவர், “ இப்போதும் ஒன்றும் ஆகி விடவில்லை. நாம் கதையில் சில மாற்றங்களைச் செய்யலாம்.கொஞ்சம் நகைச்சுவை சேர்க்கலாம். பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் விதமான மாற்றங்களை முயன்று பார்க்கலாம்” என்று சொல்ல யோசித்த குருதத் அதனை உறுதியாக மறுத்தார்.
“வேண்டாம். எதையும் மாற்ற வேண்டாம். இந்தப் படம் நான் எப்படி திட்டமிட்டேனோ, அப்படியே வரட்டும். அதனால் என்ன நிகழ்ந்தாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ள நான் தயார்”
அதுதான் குருதத். சில முடிவுகளை எடுத்து விட்டால் அதில் உறுதியாக இருந்து விடுவது அவரது இயல்பாக இருந்தது. இதே குருதத் பல நேரம் பணம் போட்டு ஷுட் செய்த ரீல்களை தூக்கிப் போட்டு பல படங்களை `ட்ராப்’ செய்தும் இருக்கிறார். ஆனால் `காகஸ் கே பூல் ‘ படத்தைப் பொறுத்த அளவில் அவர் மிகவும் பிடிவாதமாக அதனை செய்தே தீருவது என்கிற மனநிலையில் இருந்திருக்கிறார்.s
‘காகஸ் கே பூல்’ படம் ரிலீஸ் ஆனது. மிகப் பெரிய ஃப்ளாப்…படுதோல்வியை படம் சந்தித்தது. அதன் ப்ரிவியூவுக்கு வந்த பலரும், இந்தப் படத்தை நீங்கள் எடுத்திருக்க வேண்டாம் என்று சொன்னார்கள். பத்திரிகைகள் நிர்த்தாட்சண்யமாக படத்தை திட்டித் தீர்த்தன.
குருதத் ஒரு ஓரமாக அமர்ந்து ஒரு ஷோவை பார்த்தபடி இருந்தார். கீழே பார்வையாளர்கள் படம் சரியில்லை என்று கத்திக்கொண்டிருந்தார்கள். அவரது உதவி இயக்குநர் குருதத்திடம் செல்ல, குருதத் அவரிடம் சொன்னார், “ இந்தப் படம் குறைப்பிரசவக் குழந்தை ஆகி விட்டது “
மனம் உடைந்து குருதத் இதனை சொன்னார். இந்த திரைப்படத்தில் ஒரு காட்சி வரும், சுரேஷ் சின்ஹா தனது சினிமாவை பால்கனியில் இருந்து பார்ப்பார். படம் நன்றாக இல்லாததால் சினம் கொண்ட பார்வையாளர்கள் அவர் மீது செருப்பை வீசுவார்கள். ‘ காகஸ் கே பூல்’ திரைப்படம் பார்த்து கொந்தளித்த சில பார்வையாளர்கள் திரையின் மீது செருப்பை வீசியதாகவும், அதனை குருதத் பார்த்து மனம் நொந்ததாகவும் மூர்த்தி தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
ஆனால் இன்றும் `காகஸ் கே பூல் ‘ திரைப்படம் அதன் சிறப்புகளுக்காக கொண்டாடப் படுகிறது. அந்தக் காலகட்டத்தில் இருந்த திரைப்படத் துறை. அதில் பிரதானமாக விளங்கிய ஸ்டுடியோ கலாச்சாரம் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கான ஒரு ஆவணமாக இருக்கிறது.ஒர இயக்குநருக்கு இருக்கக் கூடிய மரியாதை. ஸ்டுடியோவில் திரைப்படங்கள் உருவான விதம் , பிரமாண்டமான ஃப்ளோர்களின் அமைப்பு எல்லாமே சிறப்பாக பதிவாகியுள்ளன.
இந்தத் திரைப்படத்தின் ஹீரோவாக கொண்டாடப்படுகிறவர் ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்தி. , அதில் `வக்னே கியா’ பாடலில் அவர் செய்திருக்கும் ஒரு பீம் லைட் ஒளிப்பதிவு இன்றும் திரைப்பட உலகினரால் கொண்டாடப்படுகிற ஒன்று.
அந்தக் காட்சியே கவிதை போன்ற ஒன்று. சுரேஷ் ( குருதத்) செட்டுக்குள் வருவார். அங்கு யாருமில்லை என்று நினைத்திருந்தால், அங்கு ஏற்கனவே சாந்தி ( வஹிதா ரஹ்மான்) வந்து அமர்ந்து ஒரு ஸ்வெட்டரைப் பின்னிக்கொண்டிருப்பார்.
“ என்ன சாந்தி, சீக்கிரமே வந்துட்டே?”
“ நீங்களும்தான் சீக்கிரமே வந்திட்டீங்க”
“பழக்கம். எப்பவும் சீக்கிரமே வந்திருவேன்”
“தெரியும்”
“ ஓ…வேற என்னவெல்லாம் தெரியும்?”
“ ( உங்களைப் பற்றி) எல்லாமே தெரியும்”
(படத்தில் இருவருக்குமான காதல் உணர்த்தப்படும் கவிதை போன்ற காட்சி இது.. “ நாம் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறோம். அதுதான் பிரச்சினை” என்று சுரேஷ் சின்ஹா ஓரிடத்தில் சொல்வார்.)
தொடரும் உரையாடலில்,
“ இந்த ஸ்வெட்டரை யாருக்காகப் பின்னுகிறாய்?”
“ஒருத்தருக்காக”
“அந்த ஒருத்தர் ஆணா, பெண்ணா?”
“ ஆண்” ( இதனைச் சொல்கையில் வஹிதாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி )
“இந்த பெரிய உலகத்தில உனக்காக யாருமே இல்லைன்னு சொன்னியே? இது யாரு”
“என்னைப் போல ஒருத்தர். ரொம்ப தனியான ஒரு ஆள்”
(தாய் தந்தையற்ற அனாதை சாந்தி (வஹிதா ரஹ்மான்), மனைவியையும், மகளையும் பிரிந்து தனிமையில் உழல்பவர் சுரேஷ் சின்ஹா (குருதத்) )
இதனைக் கேட்டதும் சுரேஷ் சட்டென்று நகர்ந்து போய் தனது பைப்பை பற்ற வைக்க முயல, அவரது பைப்பை பற்ற வைக்கிறாள் சாந்தி.
“உனக்கு ஒரு வேளை தெரியாமலிருக்கலாம் சாந்தி. எனக்கு திருமணமாகி விட்டது “
“ எனக்குத் தெரியும்”
ஒற்றை வார்த்தையில் சாந்தி பதிலளிக்க, அமைதியாக நிற்கிறார் சுரேஷ்.
இருவரும் ஒருவரை ஒருவர் மிக நன்றாக புரிந்து கொண்ட அந்த இருவரும் அமைதியாக நிற்க பாடல் துவங்குகிறது.
“வக்னே க்யா’ எனும் அந்தப் பாடல் இந்திப்பட உலகில் சாகாவரம் பெற்ற பாடல்.
இன்பம் நிறைந்த வேதனைக்குள் வாழ்க்கை நம்மை அழைத்துச் செல்கிறது.
இனி நீயாக நீயும் இல்லை
நானாக நானும் இல்லை
என்று துவங்கும் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை இப்போதும் அனைவரும் வியக்கிறார்கள்.
அதில் சுரேஷ், சாந்தி இருவருக்கிடையே ஒரு தெய்வீக ஒளி மேலிருந்து விழுகிறது. இருவரது உடல்களும் நின்ற இடத்தில் நிற்க இருவரது ஆன்மாக்களும் அந்த ஒளியில் சென்று இணைகின்றன என்பது போன்ற ஒரு காட்சியமைப்பு அந்தப் பாட்டில் நிகழ்த்தபட்டிருக்கிறது. மனங்களால் மட்டுமே இணைய முடிகிற ஒரு பிணைப்பை, காட்சி ரூபமாக நிகழ்த்திக் காட்டிய ஒரு மேஜிக் ஆக அந்தக் காட்சி இன்றும் பேசப்படுகிறது. விதவிதமான விளக்கங்கள் அந்தக் காட்சியின் மீது சொல்லப்படுகின்றன. டெக்னிகலாக அந்தக் காட்சியை விதந்தோதிப் புகழ் பாடாத கேமராமேன்களோ , இயக்குநர்களோ இல்லை. அப்படியான ஒரு அருமையான காட்சி அது.
இப்படி இன்று கொண்டாடப்படுகிற திரைப்படம்தான் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது என்பது மிகப்பெரிய முரண்.
`காகஸ் கே பூல்’ அந்தக் காலகட்டத்தின் சிந்தனைப் பரப்பை விஞ்சிய அடுத்த காலகட்டத்துக்கான திரைப்படம் என்பது ஒரு கருத்து. 1959 இல் வெளியாகி தோல்வி அடைந்த அந்தப் படம் 1970 இல் மறுமுறை திரையிடப்பட்ட போது ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றது. அனைவரும் கொண்டாடினர். வெளிநாட்டில் ரெட்ரோஸ்பெக்டிவ் திரையிடலில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது ‘காகஸ் கே பூல்’
இந்த இடத்தில் ஒரு வினோதத்தை சொல்லியாக வேண்டும். குருதத்தின் `ப்யாஸா” படத்தின் கதை , ஒரு கவிஞன் தன் மரணத்துக்குப் பின் கொண்டாடப்படுவதை மையமாகக் கொண்டது. அதுதான் குருதத்துக்கு இந்தப் படத்தில் நிகழ்ந்தது.
இந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்ட பல காட்சிகள் குருதத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்தன.
ஒரு விதத்தில் இந்தப் படம் குருதத் தனக்குத்தானே பாடிக்கொண்ட அறம் என்று தோன்றுகிறது. பல திரைப்படங்களை எடுத்து இது சரியாக வராது என்று தூக்கிப் போட்ட குருதத் இதனை பிடிவாதமாக எடுத்தே தீருவேன் என்று எடுத்தார். அதன் விளைவு எப்படி இருந்தாலும் சரி என்று சொன்னார்.
விளைவுகள் மிக மோசமாக இருந்தன. பல லட்சங்கள் நஷ்டம். ஸ்டுடியோவை நடத்துவதற்கே சிரமப்படும் அளவுக்கு இழப்பு. ஆனால் அவை எல்லாவற்றையும் விட பேரிழப்பு ஒன்று நிகழந்தது.
அது குருதத்துக்கு தன் மீது ஏற்பட்ட சந்தேகம். நம்பிக்கைக் குறைவு….அத்தனை அருமையான திரைப்படங்களை எடுத்த இயக்குநர். மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55 ஐயும், ப்யாஸாவையும் எடுத்த குருதத்… பாடல் காட்சிகளை படமாக்குவதில் தன்னிகரற்று விளங்கிய கலைஞன் மனம் உடைந்து சொன்னார்.
“எனக்கு டைரக்ஷன் தெரியலை. நான் தோத்துட்டேன். ஜனங்கள் என்னை நிராகரிச்சுட்டாங்க. இனிமேல் நான் படம் டைரக்ட் பண்ண மாட்டேன்.
எவ்வளவு வேதனை இது ! எத்தனை பெரிய அவலம் இது ? எந்த அளவுக்கு மனம் புண்பட்டிருந்தால் அவர் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும்.
குருதத் தான் நிராகரிக்கப்பட்டதாக உணர்ந்தார். ரசிகர்கள் தன்னை கைவிட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.
அவர் வாயிலிருந்த வந்த வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமா உண்மையாகி விட்டன.
அந்தக் கலைஞன் அப்போதே மானசீகமாக விடை பெறத் தயாராகி விட்டான் என்று தோன்றுகிறது.
`காகஸ் கே பூல்’ எனும் காவியம்தான் டைரக்ஷன் குருதத் என்று டைட்டில் கார்டு வந்த கடைசிப் படம்.
( தொடரும் )











