The Talkie
Tuesday, September 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள் ட்ரெண்டு கொட்டாய்

ட்ரெண்டு கொட்டாய் 15 – சினிமா மன்னர்கள்

The Talkie by The Talkie
September 1, 2026
in ட்ரெண்டு கொட்டாய், தொடர்கள்
A A
0
ட்ரெண்டு கொட்டாய் 15 – சினிமா மன்னர்கள்
Share on WhatsappShare on FacebookShare on Twitter

ரமேஷ் வைத்யா


ஏதோ ஒரு பேட்டியில் எப்போதோ கமல் ஒரு விஷயம் சொல்லியிருந்தார். ட்ரேட்மார்க் கமல் குசும்பு. உண்மை போலத் தோற்றமளிப்பதும்கூட. “ஆத்திகத்தைப் பரப்ப சரஸ்வதி சபதம் வந்தது. நாத்திகத்தைப் பிரசாரம் செய்ய ரத்தக் கண்ணீர் வந்தது. இரண்டு படங்களுமே பெருவெற்றி பெற்றவை. ஆனால், சரஸ்வதி சபதத்தைப் பார்த்து, ‘என்னடா, கடவுள்களே இப்படி அடித்துக்கொள்கிறார்களே’ என்று பலர் நாத்திகரானதாகத் தகவல். ‘பகுத்தறிவு பேசியவன் கடைசியில் குஷ்டரோகம் வந்து சாகிறானே’ என்று ரத்தக் கண்ணீர் பார்த்து ஆத்திகரானார்களாம்.” 

புன்னகைத்தபடியே யோசிக்க வேண்டிய விஷயம்தான். 

இதே போல மன்னர் படங்கள், மன்னர்கள் உலாவிய வரலாற்றுப் படங்கள் என்னை மாற்றினவா என்பதும் யோசிக்கத்தக்கதே.

நான் பிறந்து முதன் முதலாகப் பார்த்த படங்களே ‘கௌரவம்’, ‘பூக்காரி’ என சமூகப் படங்களாக அமைந்துவிட்டன. சரித்திரப் படம் எப்போது அறிமுகமாயிற்று?

எஸ்வி ரங்காராவ் நடித்த பால நாகம்மா, கணவனே கண்கண்ட தெய்வம், கலர்க் காலம் தொடங்கியபிறகு டப் ஆகிவந்த நரசிம்ம ராஜுவின் மாய மோதிரம் ஆகிய படங்கள் ஆரம்பமாக இருக்கலாம்.   

நினைவுகள் கூடி வந்த பிறகு ரசித்துப் பார்த்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று சொல்லலாம். எம்ஜியார், கலைச்செல்வி + தங்கச்சிலை ஜெயலலிதா நடித்தது. படம் பார்க்கும்போது ஜாலியாக இருந்ததே தவிர, படத்தைப் பார்க்க தியேட்டருக்குள் போவது இப்போது நினைத்தாலும் அவஸ்தை தரக்கூடிய அனுபவம்தான். 

அப்போது நாங்கள் சில்லமரத்துப்பட்டியில் இருந்தோம். அங்கே ஒரு டென்டு கொட்டாய். பழையது. இப்போது யோசிக்கும்போது பெயர்கூட நினைவில் வராத அளவுக்குப் பழையது. அங்கே வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்பெஷல் திரையிடல் நடக்கும். என்ன ஸ்பெஷல்? ஒரு டிக்கெட்டில் மூன்று படங்கள். அந்த ஒரு டிக்கெட்டே 25 காசுதான். எட்டேகால் காசுக்கு விடிய விடியப் படம் காட்டியிருக்கிறான் பாருங்கள்… இவ்வளவு சல்லிசு டிக்கெட் என்பதாலும், வைகுண்டத்துக்குப் போகப் புண்ணியம் சேர்த்துக்கொள்ளும் வெறியாலும் அத்தனை ஜனமும் டூரிங் டாக்கீஸில் அம்மிவிட்டது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் கோட்டாவில் உள்ளே நுழைந்துவிட முடிந்தது. நுழைந்தாலும் அன்றே வைகுண்டப் பதவி கிட்டிவிடுமோ என்று ஐயுறத்தக்க அளவில் மூச்சுத் திணறும் நெரிசல்தான். டென்டுக் கொட்டாயின் பாதகங்களில், முன்னால் இருப்பவன் தரை மணலைக் கூட்டிப் போட்டு உயரமாய் உட்கார்வது. சின்ன இடைவெளி கிடைத்தாலும் வெற்றிலை எச்சிலைத் துப்பிவைப்பது ஆகியவை அடங்கும். இந்த இம்சைகளை மீறியும் ஆயிரத்தில் ஒருவன் நன்றாய் இருந்தது. 

‘சின்னஞ்சிறிய கிளி பேசும்

கன்னங்கரிய குயில் கூவும்  

பறவை இனங்கள் துதி பாடும்

பாவை எனக்குத் துணையாகும்’ என்று பூங்கொடி ஜெயலலிதா ஆடும்போது இன்பமாக இருந்ததென்னவோ மறுக்க முடியாது. அடிமைகளை தலா நூறு பொன்னுக்கு வாங்கியதைத் தவிர அந்தப் படத்து ராஜா வேறு வேலை செய்தது எதுவும் நினைவில் இல்லை. ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிகத் திறமைசாலிகள் ஆனால் வாய்தான் காதுவரை நீள்கிறது’ என்கிற வசனம் பிற்காலத்தில் மீம் டெம்ப்லேட் ஆகும் என்று அப்போது தெரியவில்லை. 

அந்த நேரத்தில் தெரியாத இன்னொரு விஷயம் இதே பெயரில் இன்னொரு படம் வரும் என்பதும், அதில் ‘வாங்கோள், சாப்பிடுங்கோள்’ என்று, எஞ்சியிருக்கும் சோழர்களின் அரசனான பார்த்திபச் சோழன் பேசுவான் என்பதும்.

அது கிடக்கட்டும். இந்தக் கால வரிசை மாறி பார்க்க நேர்ந்த ஒரு மன்னர் படம் ‘அசோக் குமார்’. இல்லை, கதாநாயக நடிகர் பெயர் அசோக் குமார் அல்ல. படத்தின் பெயர் அது. 

சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரும் (குணாளன்) பிற்கால சூப்பரோ சூப்பர் ஸ்டாரான எம்ஜியாரும் (மஹீந்த்ரன்) சந்தித்துக்கொள்ளும் உணர்ச்சி மிகுந்த காட்சி, இன்னும் நினைவில் நிற்கிறது.   

குணாளனுக்கு அசோக மன்னன் ஒரு லிகிதம் எழுதச் செய்கிறான்.

குணாளனுக்கு, 

உன் குற்றத்தை நானும் திஸ்யரட்சதையும் ஹ்ருதயபூர்வமாக மன்னித்துவிட்டோம்

என்று எழுதி, கையெழுத்திட்டு அனுப்புகிறான்.

ஆனால் என்ன செய்ய… விதி என்று ஒன்று உள்ளதே… அதற்கு உதடுகளும் உள்ளனவே… அந்த உதடுகளை விரித்து விதி சிரிக்கின்றது.

குணாளனைத் தங்க வைத்திருக்கும் மஹீந்த்ரனுக்கு அந்த லிகிதம் போய்ச் சேரும்போது அதில் என்ன காண்கிறது தெரியுமா? அதைப் படித்துவிட்டு சூட்டுக்கோல் தயாரிக்க உத்தரவும் இட்டுவிட்டுப் புலம்புகிறன் மஹீந்த்ரன்.

“இது பயங்கரமான கட்டளை. திஸ்யரட்சதையின் தூண்டுதலால்தான் இந்த சண்டாளத்தனமான ஆக்ஞை. இதில் நானும் பங்கெடுத்துக்கொள்வதா? என் மனசாட்சி என்னை வதைக்கிறதே…”

இதையெல்லாம் பார்த்துவிட்டு குணாளன் விசாரிக்கிறான்.

“மஹீந்த்ரா, ஏன் பேச மாட்டேனென்கிறாய்? யாருக்காவது தண்டனை விதிக்கப்போகிறாயா?”

ஓலையை நீட்டுகிறான் மஹீந்த்ரன்.

அதில்,

தக்ஷசீல நிர்வாகி மஹீந்த்ரனுக்கு, என் தேசப்ரஷ்ட ஆக்ஞையை மீறி குணாளன் உன்னுடன் அங்கு இருந்துவரும் குற்றத்திற்காக இந்தக் கடிதம் கண்ட க்ஷணமே பழுக்கக் காய்ச்சின இரும்புக் கோல்களால் அவன் கண்களைக் குருடாக்கித் துரத்திவிடு. இதை நிறைவேற்றத் தவறினால் உன்னையும் உன் கீழுள்ளவர்களையும் உயிருடன் எரித்துச் சாம்பலாக்கிவிடுவேன்

என்று எழுதியிருக்கிறது.

“இத்தனை காலம் உயிருக்கும் மேலாக மதித்துக் காப்பாற்றி வந்த கண்களை நான் இழப்பதா? மஹீந்த்ரா, நீ என் கண்களைக் குருடாக்கப்போகிறாயா?” என்று கேட்கிறான். 

“இளவரசே, கடமைக்குத் தங்களுக்கு அர்த்தம் தெரியாதா? ஆனால், என் கடமையை நினைக்கும்போது என் உடலெல்லாம் துடிக்கிறதே…”

“கடமை… ஆம்… எய்தவன் இருக்க அம்பைக் குறை கூறுவதில் ப்ரயோஜனம்…? ஆ… இரும்பு… இதற்கு இதயம் எங்கிருந்து வரும்?” என்றெல்லாம் பலவாறாக ஏங்குகிறான் குணாளன்.

மஹீந்த்ரனோ, “இளவரசே, என் கைகளால் இந்தப் பாதகத்தைச் செய்ய மாட்டேன்” என்று இரங்குகிறான். 

ஆனாலும்… ஆனாலும்… குணாளன் என்ன செய்தான் தெரியுமா? அந்த இரும்புச் சூட்டுக்கோலைப் பிடுங்கி தன் கண்களைத் தானே குத்திக்கொள்கிறான். 

அந்தக் காட்சியைப் பார்த்து என் மனமும் இரங்கிவிட்டது.

அப்பேர்க்கொத்த மஹீந்த்ர எம்ஜியார், பின்னாளில் மன்னனாக மன்னாதி மன்னனாகக் கொடி கட்டியும் குதிரைகள் மேல் ஏறியும் பறந்த பல படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்க நேர்ந்தது. 

மர்மயோகி நினைவுக்கு வருகிறது. அதிலும் ஒரு பன்ச் வசனம். ‘குறி வைத்தால் தவற மாட்டேன். தவறுமானால் குறி வைக்க மாட்டேன்.’ இதைத்தான் பலரும், ‘கரிகாலன் குறி வைத்தால் தப்பாது. தப்பினால் குறி வைக்க மாட்டான்’ என்று பாட பேதத்தோடு பிரபலமாக்கினார்கள். குறி வைத்து எய்த பிறகுதானே தப்பிற்றா இல்லையா என்றே தெரியும்? 

அதற்குப் பிறகு பார்த்த எம்ஜியார் ராஜப் படங்களிலெல்லாம், விசிலடித்துத் தூள்கிளப்பும் காட்சிகள்தான். தீ பறக்கும் வசனங்களை ரசிக்கத் தெரியாத சிறு வயதில் என்னைக் கவர்ந்தது, எம்ஜியாரின் ஆடையலங்காரம். என்னமோ இப்போது லெக்கின்ஸ் என்கிறீர்களே… அதை அறிமுகப்படுத்தியவர் என்னைப் பொறுத்தவரை எம்ஜியார்தான். லெக்கின்ஸ் மேலே குட்டை கவுன் என்பதும் நான் முன்னர்க் கண்டறியாதது. கவுன் பறக்க அவர், அசோகனையும் நம்பியாரையும் வாள்முனையில் பந்தாடுவது கண்கொள்ளாக் காட்சி. 

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் வேறு யாரோதான் மன்னர். ஆனால், கதையில் மன்னாதி மன்னராக இருந்தது பொன்மனச் செம்மல்தான். அந்தப் படத்தில் கேட்ட மந்திரம் மறக்காது. ‘அண்டா கா கஸம் அபூ கா ஹுக்கும் திறந்திடு சீசேம்’. இதைத் தப்புத் தப்பாகச் சொல்லி பள்ளிக் காலங்களில் நாங்கள் பல கதவுகளைத் திறக்க முயன்றிருக்கிறோம். 

மதுரை வீரன் கதையிலும் மன்னர் யாரோதான். ஆனால், செருப்புத் தைக்கும் மனிதன் நாயகனாக வந்த படம் என்பதன் பெருமை அதைப் பார்த்த காலத்தில் புலப்படவில்லை.  

அடுத்த கட்ட நடிகர்களின் ராஜாப் படங்கள் வந்தால் தவறாமல் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தோம். ‘சிவகங்கைச் சீமை’ பட போஸ்டரே நாடியைத் துடிக்க வைக்க வல்லதாக இருந்தது. எஸ்எஸ் ராஜேந்திரன் தொடங்கி எல்லோருக்கும் பெரிய பெரிய மீசை. ‘சிவகங்கை மீசைன்னு பேர் வச்சிருக்கலாம்டா’ என்று சிரித்தோம். நல்ல படம் என்றாலும் அந்தக் கால வசூல் அளவுகோல்களின்படி அது தோல்விப்படம். 

நளினமான ஜெமினி ராஜாவின் படங்களும் உண்டு. படத்தில் மன்னனாக ஜொலித்ததை விட நடைமுறையில் காதல் மன்னனாக அதிகம் ஸ்கோர் செய்தது வரலாறு. வீர அபிமன்யூவில் அந்த நளின அழகை ரசித்துக்கொண்டிருக்கையில், எதிர்பாராத போனஸாக ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் உனைத்தேன் என நான் நினைத்தேன்’ என்கிற காலத்தைத் தாண்டிய பாட்டும் கிடைத்தது. 

என்ன சொல்லுங்கள், ராஜா என்றால் தவிர்க்க முடியாத ஒரு நடிகர், நடிகர் திலகம்தான். சும்மாவே, ‘ஐயாவோட நடையைப் பாரு ராஜ நடை’ என்ற வசனத்துக்குப் பொருத்தமாக இருப்பார். அவரது படங்களும் புதிய வரலாற்றுக் காலத்தை நம் முன் விரித்தன. 

முதல் 70 எம்எம் படம் என்கிற விளம்பரத்தோடு வந்த ராஜராஜசோழன் படத்தில் அன்னாரின் கம்பீரம் புதிதாக இருந்தது. ஓய்வறியாச் சுறுசுறுப்போடு செதுக்கிக்கொண்டிருக்கும் சிற்பி உமிழ எச்சில் கும்பா பிடிக்கும் காட்சியிலிருந்தே சிவாஜி ராஜா சூடு பிடிப்பார். ‘தென்றலோடு உடன்பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள் அவள் தென்மதுரைக் கோவிலிலே சங்கம் வளர்த்தாள்’ என்று, பாடகருக்கு வரிகள் கொடுக்கும் ராஜரீகம் பயங்கரம். சோழமன்னன் மதுரைப் பாண்டியப் பெண்ணைப் புகழ்கிறானே என்கிற சந்தேகமும், ஏதாவது அலையன்ஸ் பார்ப்பாராயிருக்கும் என்ற சமாதானமும் அப்போது எங்களுக்கிடையில் பேசப்பட்டன. 

குறுநில மன்னனான கட்டபொம்மன் பெரும் சாம்ராஜ்யாதிபதி போன்ற பிம்பத்தைப் பெற்றது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தால். அடேங்கப்பா, வசனங்கள். 

ஆனால் ஒன்றை மறுக்க முடியாது. செயற்கையாக இருந்தாலும் ராஜா ராணிப் படங்கள் செந்தமிழுக்குச் செய்த சேவை அது. எழுத்துத் தமிழ் மறந்துபோய்விடாமல் நிலைக்க அவைதாம் உதவின. 

அந்த வசனங்களைத் தீக்கங்காக எழுதிய வசனகர்த்தா, தமிழ்நாடு என்னும் மாநிலத்துக்கே ராஜாவாக ஆன சரித்திரத்தையும் பார்த்தோம். 

சமூக மாற்றத்தில் சரித்திரப் படங்கள் வழக்கொழிந்தன. காமெடிக்காக, பாட்டில் மட்டும் ராஜா ராணி வேஷம் போட்டு வந்தார்கள். கனவு ராஜாங்கம். 

ரொம்பக் காலம் கழித்து ‘யாத்திசை’ என்ற ஒரு மன்னர் படம் வந்தது. மேலே சொன்ன அத்தனை படங்கள் காட்டிய வரலாற்று உலகத்துக்கும் மாறாக ஒரு புதிய வரலாற்றுப் பின்புலத்தைக் காட்டியது. யதார்த்தம் எப்படி இருக்கும் என்று நாம் கற்பனை செய்ய உதவியது. தமிழ் மன்னர்களின், டெய்லர் இல்லாக் காலத்து ஆடைகள் எப்படி இருக்கும் என்று காட்டியது. மொழி பேசப்பட்ட விதத்தைப் புதுமையாகச் சொன்னது. சுருக்கமாக, கொஞ்சம் நிஜமாக இருந்தது. 

நிஜத்துக்கான மதிப்பு என்ன என்பது நாமறிந்ததே. படம் தோற்றது. இருக்கட்டும். மறுபடி உண்மையை முயலும் கவிஞர்கள் வருவார்கள். நிஜத்துக்குப் பக்கத்தில் படங்கள் வரும். காத்திருப்போம்.

Author Image

ரமேஷ் வைத்யா

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர். சிறார் இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ ‘அபாயப்பேட்டை’ போன்றவை அதிகம் கவனம் பெற்ற புத்தகங்கள்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
குருதத் 100 #09 – காலம் கடந்து மனம் வீசிய காகிதப் பூ

குருதத் 100 #09 - காலம் கடந்து மனம் வீசிய காகிதப் பூ

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
இளையராஜா 50

இளையராஜா 50

September 1, 2026
யதார்த்த முகம்

யதார்த்த முகம்

September 1, 2026
கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

September 1, 2026
நினைவஞ்சலி – சௌகார் ஜானகி

நினைவஞ்சலி – சௌகார் ஜானகி

September 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
இளையராஜா 50

இளையராஜா 50

September 1, 2026
யதார்த்த முகம்

யதார்த்த முகம்

September 1, 2026
கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

கடலினிற் பிரிக்கமுடியாத அலை – கண்டசாலா வெஙகடேஸ்வர ராவ்

September 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?