நாராயணி கண்ணகி
பெரும்பாலான திரைக்கதை உற்பத்தி ஆகும் ஃபேக்டரி எப்படி இருக்கும்?
அதற்கு முன்பாக நீங்கள் வேறு எந்தெந்த ஃபேக்டரிக்குள் நுழைந்து பார்த்திருக்கிறீர்கள்? யோசித்துப் பாருங்கள். என் இளம் வயதில் சிறிய குளிர்பானம் தயாரிக்கும் ஃபாக்டரியைப் பார்த்திருக்கிறேன். சோப்பு ஃபேக்டரி பார்த்திருக்கிறேன். இரண்டும் நுரை பொங்கும் தயாரிப்புகள்.
பீடி ஃபேக்டரி, ஊதுபத்தி ஃபேக்டரி பார்த்ததுண்டு. இரண்டுமே புகைவதுதான். பீடிப் புகை எமனுக்காகவும், ஊதுபத்திப் புகை கடவுளுக்காகவும். எந்த ஃபேக்டரியாக இருந்தாலும் எந்திரங்கள் இயங்கும், அல்லது எந்திரங்களை போல் மனிதர்கள் இயங்குவார்கள்.
திரைக்கதை உற்பத்தி செய்யப்படும் ஃபேக்டரி வேறு விதம். அறை முழுதும் மெத்தைகள் விரித்திருப்பார்கள். உருளை உருளையான தலையணைகள் அடுக்கி வைத்திருப்பார்கள். முன்னொரு காலத்தில் காங்கிரஸ் அலுவலகங்கள் அப்படித்தான் இருந்தன. அதே காலத்தில் அடகு வியாபாரிகளான மார்வாடிகளின் (சேட்டு) கடைகளும் அப்படிதான் இருந்தன. எளிய மக்கள் மரத்தடியிலும் கட்டாந்தரையிலும் கல் குட்டையிலும் களத்து மேட்டிலும் உட்கார்ந்து பேசுவார்கள். நடுத்தர மக்கள், வீட்டுத் திண்ணையிலும் கோயில் படிகளிலும் பஞ்சாயத்து ஆலமரத்தடி நிழல் மேடையிலும் உட்கார்ந்து பேசுவார்கள்.
முதலாளிகளால் மட்டுமே திரைப்படத்திற்கு முதலீடு செய்ய முடியும். அதிலும், நட்டத்துக்குத் துணிந்த பணக்காரராக இருக்க வேண்டும். திரைப்படம் தயாரித்து லாபம் பார்த்தவர்களின் எண்ணிக்கையைவிட நட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். பணக்காரர்கள் சூதாட்டத்திலேயே முதலீடு செய்து ஏழையாவார்கள். குதிரைப் பந்தயத்தில் மூதாதையர் சேர்த்து வைத்துவிட்டுப் போன சொத்துக்களை மொத்தமாக இழந்து பிச்சை எடுப்பார்கள்.
அவர்கள் திரைப்படத்திற்கு முதலீடு செய்து ஏதோ காரணங்களால் தோற்பதை நல்லதாகவே கருதலாம். அப்படி, தோல்விக்கும் நட்டத்துக்கும் பயந்து யாரும் திரைப்படம் தயாரிக்க முன்வராமல் இருந்திருந்தால் திரைத்துறை என்கிற கனவுத் தொழிற்சாலை இருந்திருக்காது. இப்போது அந்தத் தொழிற்சாலையை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.
அதி முக்கியமாக, திரைத்துறை இல்லையென்றால் தமிழ்நாடு முதல்வர்கள் இல்லாமல் கஷ்டப்படும்.
பொருளாதார அதிபதிகள், அல்லது பணம் திரட்டும் வித்தைகள் கொண்டவர்கள், அல்லது கடன் பெறும் கலை அறிந்தவர்கள், அல்லது பணம் படைத்தோர் குழுவை உருவாக்க வல்லோர் தயாரிப்பாளர் ஆனார்கள். ஆனால் பணம் மட்டும் இருந்தால் போதாது. மற்ற எல்லாத் துறைக்கும் பண அறிவு மட்டும் போதுமானது. பணியாளர்கள் மட்டும் போதும். திரைத்துறைக்கு பணமும் உடல் உழைப்பும் தவிர, கதை அறிவு அவசியம். பணக்காரர்கள் கதை அறிவை உற்பத்தி செய்யும் இடம் மெத்தை விரித்ததாக இருந்தது. அந்தப் பணக்காரர்களிடம் உட்கார்ந்து கதை சொல்லும் இயக்குனர்கள் ஏழையாளாக இருப்பினும் மூளையாளாக இருந்ததால் மெத்தையில் உட்கார இடம் கிடைத்தது.
இப்போது கதை விவாதங்களில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பங்கேற்பதில்லை. இயக்குனரும் துணை இயக்குனர்களும் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். அவர்களோடு விவாதத்திற்கு அவ்வபோது எழுத்தாளர்களையும் அழைப்பது உண்டு. பெரும்பாலான மூத்த எழுத்தாளர்கள் திரைப்படம் பார்ப்பதில்லை. திரைப்படம் பார்த்து, ரசித்து, விமர்சனம் எழுதும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு திரைக்கதை தெரிவதில்லை. திரைப்படத் துறையில் இருப்பவர்களைவிட சிறப்பாக திரைக்கதை, வசனம் படைக்கும் எழுத்தாளர்கள் உண்டு.
முதல் காட்சி
இங்கே முதல் காட்சி என்று நான் சொல்வது, first show அல்ல, first scene. தமிழில் ஒரு திரைப்படத்தில் குறைந்தபட்சம் நாற்பது காட்சிகள் இடம் பெறுகின்றன. அதிகபட்சமாக 200 காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால் அறுபது காட்சிகளில் இருந்து நூறு காட்சிகளுக்குள் இருந்தால் நல்லது. ஒரு காட்சி அரை நிமிடத்தில் இருந்து, ஐந்து நிமிடங்கள் வரை இருக்கும். இப்போது எல்லாம் ஒரேயொரு சண்டைக் காட்சியே இருபது நிமிடம் வருகிறது. படத்தில் மூன்று சண்டைக்காட்சிகள் இருந்தால் போதும், ஒரு மணி நேரம் ஓடி விடும். அந்தக் காலத்தில் சண்டைக்காகவே எடுக்கப்பட்ட படங்களில், படம் முழுவதும் சண்டைக் காட்சிகள் இருந்தாலும், ஒரு சண்டைக் காட்சி ஐந்து நிமிடங்களில் இருந்து பத்து நிமிடங்கள் வரைதான் இருக்கும்.
கிரிக்கெட், கபடி, கால்பந்து, குத்துச் சண்டை போன்ற – விளையாட்டுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட – படங்களில் மையமாகச் சொல்ல வேண்டிய விசயம் குறிப்பிட்ட விளையாட்டுதான். அந்த விளையாட்டை மையமாக வைத்துக் காட்சிகள் அமைப்பார்கள் என்றாலும் அதற்குள் சண்டையை வைப்பார்கள்.
படங்களில் சண்டைக் காட்சிகள் போல்தான் பாடல் காட்சிகளும் கதைக்கு தேவையில்லை என்றாலும், சம்பந்தமே இல்லை என்றாலும் பாடல் காட்சிகள் இருக்கும்.
தமிழ்த் திரைப்படங்களில் முதல் காட்சி பெரும்பாலும் எழுபது சதவீதம் ஆடல், பாடல்களில் தொடங்குகின்றன. இருபது சதவீதம் சண்டைக் காட்சிகளில் தொடங்குகின்றன. அல்லது பாடலுக்கான லீடாகவோ, சண்டைக்கான லீடாகவோ தொடக்கக் காட்சிகள் உள்ளன.
பத்து சதவீதம் மட்டுமே நேரடியாக கதைக்குத் தொடர்புடைய சம்பவம் ஒன்று முதல் காட்சியாக வைக்கப்படுகிறது.
ஆரம்ப காலத் திரைப்படங்களில் பாடல்களால் மட்டுமே கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பாதிப்பு திரையுலகை விட்டுப் போகவே இல்லை. நம்பும்படி இல்லாவிட்டாலும், மக்களின் வாழ்வில் அப்படி ஒரு பாடலும், அப்படி ஒரு சண்டைக் காட்சியும் இல்லாவிட்டாலும் திரைப்படங்களில் கெட்டியாக இடம்பிடித்துவிட்டன.
பழைய திரைப்படங்களில் பாடல் காட்சிகள் எவ்வாறு இடம் பெற்றன என்றால்.. மன்னர்களோ ஜமீன்தார்களோ பெரும் செல்வந்தர்களோ கேளிக்கையாக நடன நிகழ்வைக் கண்டுக் களிப்பார்கள். அது முதல் காட்சியாக இருக்கும்.
சண்டைக் காட்சிகளும் அப்படித்தான். இரு நாட்டு மன்னர்களுக்குள் போர் நடக்கும், இந்தப் பக்கம் ஆயிரம் வீரர்கள், அந்தப் பக்கம் ஆயிரம் பேர் நின்று போர்புரிவார்கள். வாள், ஈட்டி, வில் அம்பு என்று ஆயுதங்கள் கொண்டு போராடுவார்கள்.
கடவுளே அவதாரம் எடுத்தால்கூட ஆயிரம் அடியாட்களோடு (துணை நடிகர்களோடு) ஒற்றை ஆளாக நின்று யுத்தம் புரிய மாட்டார். இரசாயன கொத்து குண்டு வீசி லட்சம் பேரையும் கொன்று குவித்துவிட முடியும், அது வேறு.
ஆனால், இப்போதைய திரைப்படத்தில் ஒரே ஹீரோ கடுமையான ஆயுதங்கள் வைத்திருக்கும் ஆயிரம் எதிரிகளை தனி ஆளாகப் போரிட்டு ஜெயித்துவிடுவார். எப்படி சாத்தியம் என்று கோடிக்கணக்கான மக்களில் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். சினிமா வெறும் பொழுது போக்கு என்று ஆன பிறகு கேள்வி கேட்க வேண்டியது இல்லை. ஆனால் ஒரு கதாநாயகனால் ஆயிரம் வில்லன்களோடு எதிர்த்துப் போரிட முடியும் என்று நம்புகிறார்கள். அதனால் 99% சதவீத ஹீரோயிச (ஆக்சன் சப்ஜெக்ட்) திரைப்படங்களின் ஓப்பனிங் ஸீன் ஹீரோ ஜெயிக்கும் ஒரு சண்டைக் காட்சியுடன் தொடங்குகிறது. அல்லது சண்டை போடுவதற்கான காரணத்தோடு தொடங்குகிறது.
படத்தில் நூறு காட்சிகள் எப்படியாவது இருக்கலாம், முதல் காட்சி முக்கியமானது இல்லையா?
கதை விவாதத்தில் ஓர் இயக்குநர் நீண்ட காலம் மண்டையை உடைத்துக்கொண்டு யோசிப்பது முதல் காட்சிக்காகத்தான். அசத்தலான, இயக்குநருக்கு பிடித்த ஒரு காட்சி கிடைத்துவிட்டால் அடுத்தடுத்த காட்சிகள் வேகமாகக் கிடைத்துவிடும்.
தயாரிப்பாளர்களிடம் இயக்குநர் கதை சொல்லும்போது முதல் காட்சியை நிச்சயமாகச் சொல்லிவிட்டுதான் முழுக் கதையைச் சொல்வார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு சில இயக்குநர்கள்(?) எப்படிச் சொல்வார்கள் என்றால்…
“நெற்றியிலிருந்து ஒரே ஒரு துளி ரத்தம், சிவப்பா, மணி மாதிரி வெளியே எட்டிப் பார்க்கும். அந்த ரத்தத் துளி அப்படியே இறங்கி வர்றதை ஸ்லோ மோசன்ல காட்டுவோம். நெற்றி, கண்ணு, கன்னம், கழுத்து, மார்பு, இடுப்பு, முழங்கால், பாதம்னு ஒரு ரத்தத் துளி இறங்கி வர்றதை காட்றோம். ரத்தத்தை மட்டும் காட்டல. அதோட சேர்த்து ஹீரோவோட உருவத்தையும் உச்சியில் இருந்து பாதம் வரைக்கும் காட்றோம். அதுக்குப் பின்னாடிதான் ட்விஸ்ட் இருக்கு. அடியாளோட மூஞ்சில ஹீரோ வேகமா குத்து விடறார், வாயில இருந்து ரத்தம் குபீர்னு கொட்டுது. அடியாள் ஹீரோவோட கால் பக்கத்துல விழறான். ரத்தம் தரையில் பரவுது. அதுக்குப் பிறகுதான் ஹீரோவோட நெற்றியிலிருந்து வந்த ஒரு துளி ரத்தம் தரையில் விழும். எப்படி? சூப்பர் இல்லை? ஹீரோ உடம்புல இருந்து ஒரு சொட்டு ரத்தம் தரையில் விழறதுக்குள்ள, அடியாள் உடம்புல இருந்து மொத்த ரத்தமும் வெளியே வந்துருச்சு. அடிச்ச அடியாளே தரையில் விழுந்துட்டான்…”
“ஹீரோ பைக்குல வந்துட்டு இருக்கார். ஒரு இடத்துல வில்லனும் அடியாட்களும் அவரைச் சுத்தி வளைச்சிடறாங்க. ஹீரோ, மத்தியில் மாட்டிக்கிறார். சுற்றி நின்னுட்டு இருக்கிற அடியாட்கள் ஏகே 47 எடுத்துச் சுட ஆரம்பிக்கிறாங்க. குண்டுகள் பாய்ந்து வருகின்றன. ஹீரோ குண்டைவிட வேகமா செயல்படறார். நூற்றி இருபத்தைந்து கிலோ எடை கொண்ட பைக்கை சாதாரணமாகக் கையில் தூக்கிச் சுற்றுகிறார். ஏகே 47 துப்பாக்கிகளில் இருந்து பறக்கும் குண்டுகள் எதுவும் ஹீரோ மீது விழுவதில்லை. எல்லா குண்டுகளும் பைக்கின் மீதே விழும். அடியாட்களின் துப்பாக்கிகளில் இருந்து மொத்த குண்டுகளும் தீர்ந்துவிடும், ஹீரோ பைக்கை அடியாட்கள் மீது வீசி எறிவார். பிறகு ஏகே 47 துப்பாக்கிகளில் இருந்து விழுந்த ரவைகள் தரையில் விழுந்து சிதறி கிடக்கும் குண்டுகளை கைகளில் அள்ளி அடியாட்கள் மீது வீசுவார். அடியாட்கள் அடிபட்டு சுருண்டு விழுவார்கள்.”
இது போன்று நூற்றுக்கணக்கான காட்சிகளைச் சொல்வேன். எதுவும் சொந்தக் கற்பனை அல்ல. சத்தியமாக இயக்குநர்கள் சொன்னவைதான்.
இந்த வகைமைகளில் நிறையத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நம் ஆக்சன் ஹீரோக்கள் இப்படித்தான் வேண்டும் என்று கேட்பார்கள் போலும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணீர் சிந்த வைக்கும் திரைப்படங்கள் அதிகமாக வெளிவந்தன. வீட்டில் அழ முடியாத பெண்கள், அழுதே தீர வேண்டும் என்ற துயரத்தில் தகித்த பெண்கள் தியேட்டரில் வந்து விழி மழை பொழிந்தார்கள். அவர்களுக்காகக் கதை உருவாக்கிய இயக்குனர்கள் முதல் காட்சியிலேயே கிளிசரின் டேங்கர்களை இறக்கினார்கள்.
கணவனைப் பறிகொடுத்து விட்டு, உறவுகளால் கைவிடப்பட்டு, இரண்டு பிள்ளைகளோடு பரிதாபமாக நிற்கும் மனைவி. முந்தானையைப் பிழிவதற்கு கியாரன்ட்டியான ஓப்பனிங்.
அழுகைக்காகக் குழந்தைகளைச் சாகடித்துவிட்டு பெற்றோர்களைக் கதற விட்ட முதல் காட்சி உண்டு.
ஆசையாக, செல்லமாக வளர்த்த பெண், காதலனுடன் ஓடிப் போனது கூட ஒரு காலத்தில் கண்ணீர்க் கதைதான்.
மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து, செதுக்கிய முதல் காட்சியும் உண்டு. கே.பாக்யராஜின் ‘ஒரு கை ஓசை’ திரைப்படத்தில் கதாநாயகன் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றன. அதன் பிறகுதான் பல இயக்குநர்கள் கவனத்தை ஈர்க்கும் காட்சிகளுக்காக மெனக்கெட்டார்கள்.
ஹீரோ, தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துவிடுவார். ரயில் வேகமாக வரும். ரசிகர்களுக்குப் படபடப்பு அதிகமாகும். கிட்டே நெருங்கி வர வர படபடப்பு எகிறும். ரயிலானது ஹீரோ படுத்திருந்த தண்டவாளத்தில் போகாமல் பக்கத்து ட்ராக்கில் போகும்.
அடுத்ததாக மரத்தில் கயிறு கட்டி ஸ்டூல் மேல் ஏறி நிற்பார். கழுத்தில் கயிற்றை மாட்டி, சுருக்கு வைத்து கொண்டு, ஸ்டூலை உதைப்பார். தொங்கி விடுவார் என்று பார்த்தால், மரக்கிளை உடைந்து கீழே விழுந்து விடுவார்.
மூன்றாவதாக ஒரு முயற்சி செய்வார், இடுப்பில் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிப்பார். கிணற்றில் தண்ணீர் இருக்காது, எழுந்து நடந்து வருவார்.
‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ படத்தில் ஓர் இளம் பெண் வேகமாக ஓடி வருவாள். பதற்றமான காட்சியாக இருக்கும். ஓடி வந்து கிணறு ஒன்றில் எகிறிக் குதிப்பாள். ரசிகர்கள் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று நினைப்பார்கள். ஆனால் அவள் தோழிகளோடு ஜாலியாக நீச்சல் அடித்து விளையாடுவாள்.
அதிகமான திரைப்படங்களின் முதல் காட்சி பக்தி பொங்குவதாக இருக்கும். கோயிலில் பூசாரி, சாமிக்கு தீப ஆராதனை காட்டி “நல்லா மழை வரணும், நாடு செழிப்பா இருக்கணும்” என்று வசனம் சொல்வார். சினிமா பூசாரிகளின் நிரந்தரமான வசனம் இதுதான்.
வீடாக இருந்தால் குடும்பத் தலைவி சாமி அறையில் மணியாட்டி பூஜை செய்து விட்டு, தீப ஆராதனைத் தட்டுடன் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தீபாராதனை காட்டுவார்.
எடுத்த எடுப்பிலேயே திருவிழாவையோ சாமி ஊர்வலத்தையோ காட்டுவது உண்டு.
அநியாயத்துக்கு ரொம்பவும் சென்டிமென்ட் கொண்டவர்கள் பெரும்பாலான இயக்குநர்கள். முதல் காட்சியில் கோயில், மசூதி, சர்ச் மூன்றையும் வஞ்சனை இல்லாமல் காட்டிவிடுவார்கள்.
“வெற்றி… வெற்றி” என்ற சொல், எப்படியாவது முதல் காட்சியில் வருகிற மாதிரி வைப்பார்கள். ஆமாங்க, நிசமாத்தான் சொல்றேன், வாத்தியார் எம் ஜி ஆரே “வெற்றி வெற்றி” என்றுதான் ஓடி வருவார்.
டிப்ஸ்
நிறையக் கதைகளை கேட்டதாலும், விவாதம் செய்ததாலும் புதியதாக கதை விவாதத்தில் பங்கேற்கப் போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். எல்லோரும் என்ன நினைத்து கொள்கிறோம்? நம்ம கிட்ட இருக்கிற உலகின் சிறந்த கதையை டைரக்டர் கேட்டா உடனே வாங்கிவிடுவார் என்று.
உங்களிடம் அதிரிபுதிரியாய் ஒரு கதை இருக்கிறது.
இதுவரை யாருமே சொல்லாத கதை அது.
அஜித் கேட்டார்னா அசந்துடுவார்.
விஜய் சேதுபதி கேட்டார்னா வியந்து போவார்.
தமிழ்ல மட்டுமில்லை தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் அத்தனை மொழியிலும் படம் அள்ளிட்டு ஓடும்.
யாருமே யூகிக்க முடியாத க்ளைமேக்ஸ்.
இந்த சூப்பரான உங்க கதையை மூட்டை கட்டி வீட்லயே ஒரு பரண்ல போட்டுட்டுப் போயிருங்க.
கதை விவாதம் செய்யும் போது,
நம்ம கதையை இயக்குநர் கேட்டார்னா அவர் வெச்சிருக்கிற மொக்க கதையைக் கடாசிட்டு உங்க அதி சூப்பரான கதைய கொண்டாடுவார்னு நினைச்சிங்கன்னா… ம்ஹூம்.
ஒரு அம்மாவோட குழந்தை கறுப்பா அசிங்கமா இருக்கு. இன்னொரு குழந்தை சிவப்பா அழகா லட்சணமா இருக்கு.
அம்மா எந்தக் குழந்தையைக் கொஞ்சுவாங்க?
அவங்கவங்க குழந்தையை அவங்கவங்க அம்மா கொஞ்சுவாங்க.
அதான் எதார்த்தம்.
உங்களைக் கதை விவாதத்துக்குக் கூப்பிட்டது அவர் வைத்திருக்கும் கதயை மெருகேற்றுவதற்கு.
அதனால் இயக்குநர் கதை சொல்லும்போது அவர் சொல்லும் கதை சூப்பர், செம, ஆஹா ஓஹோ என்று நினைத்தால் மட்டுந்தான், அந்தக் கதையை ஆகச் சிறந்த கதையா மதித்தால் மட்டுந்தான் அந்தக் கதை விவாதத்தில் நீங்கள் பங்கேற்பது புண்ணியம்.
ஒன்று கதைக்குள் நீங்கள் வந்துவிட வேண்டும். இல்லை, கதை விவாதத்தை விட்டுப் போய்விட வேண்டும்.
ஒரே ஒரு பொய்.
‘செம கத சார்! ராத்திரி பூரா தூக்கமே வரல. கதை மனசுலயே ஓடிட்டு இருந்துச்சு… அப்புறம் சார், சித்தாவுல ஒரு ட்ரீட்மென்ட். ஊருக்கு போறன் பதினஞ்சு நாளாகும்’ என்று சொல்லிவிட்டு நின்றுவிட வேண்டும்.
ஒரே ஒரு பொய்க்குள் நாலைந்து பொய்கள் இருக்கு பார்த்தீர்களா?











