The Talkie
Thursday, October 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள் ட்ரெண்டு கொட்டாய்

 ட்ரெண்டு கொட்டாய் 16 –  தேசுலாவும் தேன்மலர்கள்

The Talkie by The Talkie
October 1, 2026
in ட்ரெண்டு கொட்டாய், தொடர்கள்
A A
0
 ட்ரெண்டு கொட்டாய் 16 –  தேசுலாவும் தேன்மலர்கள்
Share on WhatsappShare on FacebookShare on Twitter
ரமேஷ் வைத்யா

பக்கத்து மாநிலமென்றால் கேரளாதான் நமக்குச் சொந்தம் போலிருக்கிறது. ‘செந்தமிழ் கொடுமலையாளம்’ என்கிற பழஞ்சொல் நினைவுக்கு வருகிறது. கர்நாடகா ஒன்றுவிட்டது மட்டும்தான்; சொந்தமாகத் தெரியவில்லை. ஆந்திராதான் ஒன்றுவிட்ட சொந்தமாகத் தெரிகிறது. 

மேலே சொன்ன அத்தனையும் சினிமா மட்டுமே தொடர்பானவை. 

அதிக எண்ணிக்கையில் மலையாளப் படம் பார்த்திருக்கிறேன். மலையாளத்திலேயே பார்த்திருக்கிறேன். ஒருவேளை தமிழில் டப்பிங் செய்யப்பட்ட வடிவில் பார்த்திருந்தால், ‘சிறைச்சாலை’ பார்த்ததுபோல் மொழி புரியாமல் அவதிப்பட்டிருக்கக்கூடும். ‘இல்லாத்ததை சொல்லாத்தடி ஓலவாயி…’ என்பது போல் இருந்திருக்கும். 

சுந்தரத் தெலுங்குப் படங்கள் மட்டும்தான் – எண்ணிக்கை அளவில் – மொழிமாற்றத்தில் வந்து என் மனதில் நின்றவையாக உள்ளன. 

டப்பிங் என்ற ஒன்று உண்டு; ஒரு மொழியில் படத்தை எடுத்து முடித்துவிட்டு, பிற்பாடு குரல் ஒலிகளை மாத்திரம் வேறு மொழியில் பதிவு செய்யலாம் என்பதெல்லாம் தெரியாத பருவத்தில் டப்பிங் என்றே தெரியாமல் பார்த்த படங்கள் இன்னும் அந்நியமின்றி நினைவிலாடுகின்றன. 

மொழி பேதம் அறியா முன்னம், நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி, ரெங்காராவ், வுப்பலதடியம் நாகையா இவர்களையெல்லாம் சித்தப்பா, அத்தை, தாத்தா, பெரிய தாத்தா என்று நினைத்து ரசித்தோம். பிற்பாடு உண்மை தெரிந்தபிறகு மிஸ்ஸியம்மா ஜெமினி கணேசனைக்கூட ஆந்திராக்காரர் என்று சந்தேகிக்க வேண்டிவந்தது. 

அவரை விடுங்கள், அக்கினேனி நாகேஸ்வரராவ் என் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டாரே, தேவதாஸ் வேடத்தில்…

வங்காளப் படைப்பாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயாவின் காவியப் படைப்பை, தெலுங்கு இயக்குநர் வேதாந்தம் ராகவையா படம்பிடிக்க தமிழனான நான் டென்டு கொட்டாய் மணலை விழிநீரால் நனைத்தது நடந்தது. 

ஒருவனுக்குக் காதல் தோல்வி நேர்ந்ததில் எட்டு வயசான எனக்கென்ன கொள்ளை வந்தது அழுது கரைய என்று யோசித்தால்தான் அந்தப் படம் காதலைத் தாண்டி ஏதேதோ விஷயங்களை – துக்கங்களை – பாகுபாடுகளை – அறிமுகப்படுத்தியது என்று இப்போது புரிகிறது. பின்னாளில் நான் வர்க்கப் பார்வைகொள்ள இந்தப் படமும் ஒரு சிறு விதையை எனக்குள் தூவியிருக்கலாம். ஆதிநாராயணராவின் இசை அப்படியே இருக்க தெலுங்கின் சாரல் பட்ட தமிழ்ச் சொற்கள் காலத்தால் அழித்துவிட முடியாத சோக ஞாபகத் தழும்புகளாக நிலைத்துவிட்டன. 

இந்தப் படத்தை இயக்கிய வேதாந்தம் ராகவையாதான்தான் இயக்கினாரா என்ற ஐயத்தை எழுப்பிய பால நாகம்மாவையும் பார்த்தேன். 

இது இன்னும் நினைவில் நிற்க எனக்குப் பிரத்தியேகக் காரணம் உண்டு. அப்போது நான் படித்த பெரியகுளம் விக்டோரியா மெமோரியல் பள்ளியில் ஷிஃப்ட் சிஸ்டம் கொண்டுவந்திருந்தார்கள். தினமும் காலையில் மாத்திரமே வகுப்புகள் இருக்கும். மதியம் அடுத்த ஷிஃப்ட் மாணவர்கள் வந்துவிடுவார்கள். வீட்டுக்குத் தெரியாமல் ஜெயா தியேட்டரில் மேட்னி ஷோ பாலநாகம்மா படத்துக்கு போய்விட்டேன். பள்ளி முடிந்து விளையாடிவிட்டு வந்தது போல் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தால் அம்மா தயாராகி நின்றார். அக்கம்பக்கத்துப் பெண்களோடு பாலநாகம்மா படத்துக்குப் போகத் தயாராகி. பக்கத்து வீட்டுப் பெண்கள் வற்புறுத்தினார்களாம். ஊருக்குப் போயிருக்கும் அப்பாவுக்குச் சொல்லாமல் போய்விட்டு சட்டென்று வந்துவிடலாம் என்று திட்டம். திருடனைத் தேள் கொட்டியது, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருப்பது போன்ற க்ளிஷேக்களை இங்கே போட்டுக்கொள்ளலாம். போய்த்தான் ஆகவேண்டும். போனேன். ஆறுமணி ஆட்டம். அதே படம் இரண்டாம் முறையாக. 

வாழ்வின் தற்செயல்கள் நம்ப முடியாதவை. படம் முடிந்து ஏதோ கைக்குக் கிடைத்த காய்கறியை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால், அப்பாவின் அக்கா வீட்டு வாசலில் குதிரை வண்டியோடி காத்திருந்தார். பாலநாகம்மா படத்துக்குப் போகத்தான் எங்களைக் கூப்பிட வந்திருந்தார். ‘இப்பத்தான் பாத்துட்டு வர்றோம்’ என்று சொல்ல முடியாத உறவு. செகண்ட் ஷோவுக்கும் போயே தீரவேண்டும். பாலநாகம்மாவை ஒரே நாளில் மூன்று ஷோவும் பார்த்தவன் நான் என்ற விஷயம் அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்திருந்தால் எனக்கு விழா எடுத்திருப்பார்கள். சோஷியல் மீடியா இல்லாத காலம் என்பதால் எனக்கு ஒரு விழா இல்லாமற்போனது.  

அது மந்திரஜாலப் படமாக இருந்தது. அறிமுகமில்லாத நடிகர் நடிகைகளால் புது உலகத்துக்குள் புக முடிந்ததொரு அனுகூலம். ஆனாலும் ஒரே நாளில் மூன்று முறை பார்க்க முடியாது. இரண்டாம் ஆட்டத்தில் பாதியில் நான் உறங்கிவிட்டேனென்றாலும் அப்படத்தை இரண்டரை முறை பார்த்ததே சாதனைதான். 

அங்கே ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. பாலநாகம்மாவை இயக்கிய வேதாந்தம் ராகவையா பெயர் போஸ்டரில் இடம்பெற்றிருந்தால் அப்படத்துக்குப் போவது எனக்குப் பழக்கமாகிவிட்டது. மேசக்கிஸ்ட் டெண்டன்சியா என்னவென்று தெரியவில்லை.

மணாளனே மங்கையின் பாக்கியம் படத்துக்குப் போனது இயக்குநருக்காகத்தான். ஜெமினி இருந்தது போனஸ். பாடல்கள் டபுள் போனஸ்.  

‘மாசிலா இதயமேவிட வாராய்

மதுநிலை தவழ்ந்திடும் புதுநிலை பாராய்

மதுநிலை தவழ்ந்திடும் புதுநிலையால்

மன ஊஞ்சலாடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய்…

தேசுலாவுதே தேன்மலராலே 

மின்னுவதேனோ 

மேகராஜன் சுகமேவிடத் தானோ

தேசுலாவுதே தேன்மலராலே…’ 

என்று, அழகிய ஹம்சாநந்தியையே பயப்படும்படியான கணக்கு வழக்குகளுடன் கண்டசாலாவும் சுசிலாவும் பாடி தமிழ்த் திரையில் நிலைக்க முடிந்தது ம.ம.பாக்கியம் போன்ற படங்களால் சாத்தியப்பட்டது. 

கறுப்பு வெள்ளைக் காலம் கடந்துபோக, கலரிலும் தெலுங்குப் படப் படையெடுப்பு வேகம் குறையவில்லை. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்துப் படங்கள் பத்துப் பைசாப் பிரயோசனமில்லாதவையாக இருந்தன. தமிழ் சினிமா சாம்ராஜ்யத்தில் மந்திரக்கோலோச்சினார் விட்டலாச்சார்யா. ஜெகன்மோகினி, மாயமோதிரம் போன்ற படங்கள் நினைவில் உள்ளன. நரசிம்மராஜு என்னும் பெயருடைய நாயக நடிகரும் தமிழில் மார்க்கெட் வைத்திருந்தார் என்ற வரலாற்றை உருவாக்கிய காலம். நம்ம பசங்களிடம் கேட்டால், ஜெயமாலினி பெயரைத்தான் சொல்வார்கள். இவர்கள் புண்ணியத்தில் பொம்மை வித்தைகள் பார்த்து என் பொழுது போனது. 

அடுத்த கட்டமாகத்தான் மீடியமான தரத்தில் உள்ள படங்களும் ஸ்ட்ராங் தரத்திலான படங்களும் நம் மாநிலத்துக்கு வந்து மகிழ்வித்தன. 

பெரியகுளம் ரஹீமில் பார்த்த ‘சங்கராபரணம்’ அவை அனைத்திலும் தலையாயது. இது டப்பிங் பட வரிசையில் வருமா என்று உங்களில் யாருக்கேனும் சந்தேகம் வருகிறதா? பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படம் டப் ஆகி வந்தது. நான் ஆவலோடு எதிர்பார்த்தது, பாடல்கள் டப் செய்யப்பட்டிருக்கின்றனவா… இல்லை. அட, நமக்கேதாவது தொடர்பு இருந்திருந்தால் நானே பாடல்களைத் தமிழ்ப்படுத்தியிருப்பேன். தெலுங்குப் பாடல்களை அப்படியே வைத்திருந்தார்கள். பெரியகுளத்தில் பார்த்ததென்று நான் சொல்வது முதல் ரவுண்டு ரிலீஸை. 

படத்தின் சிறப்புக்கு முன்னதாக பட வெளியீட்டைப் பற்றிய அந்தக் காலக் கதைகளைப் பார்க்கலாம். தெலுங்கில் ஓடிய படம் சங்கராபரணம். தமிழ் நடிகை மனோரமா அப்படத்தைப் பார்த்துக் கரைந்துபோயிருக்கிறார். தமிழில் டப் செய்து வெளியிடப் படத்தை வாங்கிவிட்டார். நண்பர்களிடம் படத்தைப் போட்டுக்காட்ட, அவர்கள் ஒருமித்த குரலில், ‘படம் தேறாது. இத்தோடு விட்டால் போட்ட காசு போச்சு. டப்பிங் செய்தால் அதுவும் போகும்’ என்று சொன்னார்கள். படம் கொஞ்ச காலம் பெட்டியிலேயே இருந்திருக்கிறது. பிறகு மொழி மாற்றாமல் அப்படியே வெளியிட்டார் மனோரமா. ஆஹா… புரியாத தெலுங்கிலேயே படம் பிய்த்துக்கொண்டு ஓடியது. மொழி முழுவதுமாகப் புரிய வேண்டியதில்லை என்பதை உணர்த்தியது. 

ஏ சென்டர்களில் வசூலைக் குவித்தாலும் குக்கிராமமான பெரியகுளத்தில் நான் அந்தப் படத்தைப் பார்க்கப் போனபோது கூட்டம் குறைவுதான். இடைவேளை வரைக்குமே படம் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. அப்போது பக்கத்து ஊர்த் தேனி சுந்தரம் தியேட்டரில் ‘அலைகள் ஓய்வதில்லை’ சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தது. நான் பெரியகுளத்தில் இடைவேளையில் கத்தினேன். ‘இந்தத் தங்கத்தைப் பாக்காம வாடி ஏங்கப்பக்கெழங்கப் பாக்குறாங்க…’ இந்த ஆவேசம், என்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்வதற்கே என்று இப்போது புரிகிறது. கர்நாடக இசையின் எல்லையை மிகப் பெருமளவு விஸ்தரித்தது இந்தப் படம்.

‘மெரிசே மெருபுலு முரிசே பெதவுல 

சிறுசிறு நவ்வுலு காவோலு

உரிமே உருமுலு சரிசரி நடனல 

சிரிசிரிமுவ்வலு காவோலு

பரவஸான சிரசூகங்க

தரகுஜாரெனா சிவகங்கா

நாகானல ஹரி முனுகங்கா’

என்று தமிழ்க்கிராமச் சிறுவனொருவன் அந்நிய பாஷையில் சிவனைக் கூப்பிடும் அதிசயம் நடந்தது. ‘கலா தபஸ்வி’ கே.விஸ்வநாத் என் பிரிய இயக்குநராகிவிட்டார்.

அவருடைய ஒரு படத்தையாவது நான் ஒரு தடவை பார்த்ததோடு நிறுத்தியதே இல்லை. உங்களில் சிலரும் அப்படி இருக்கக் கூடும். 

சாகர சங்கமம் என்னும் தெலுங்குப் படம், சலங்கை ஒலியாக வந்த நம் பால்யத்தை நாம் மறக்க ஏலுமா? 

‘கலையாத நினைவுதான்

விலகாத உறவுதான்

சிதையேறும் போதிலும்

மறையாத பந்தம்

விலகாது நண்பனே 

நமதான ஸ்நேகம்…’

ஷைலஜாவுக்கு ஆடிக்காட்டிவிட்டு தண்ணியடிக்க வந்துவிடும் கமலை சரத்பாபு கடிந்துகொண்டு, ‘இந்த நிமிஷத்துலேருந்து ஒனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என்று போகும்போது, கமல் கேரக்டர் பாடும் பாட்டு இது. 

இன்றும் நட்பால் நெகிழ்கையில் என் உதடுகள் அனிச்சையாய் உச்சரிப்பவையாக அமைந்துவிட்ட வரிகள். 

சங்கராபரணத்தின் ‘ப்ரோச்சேவாரெவருரா’ பாடலை வேறொரு பாகவதர் பாடும் காட்சியைப் போலவே சலங்கை ஒலியின் ‘வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே’ பாட்டுக்கு சினி டான்ஸ் மாஸ்டர் அசைவுகள் அமைக்கும் காட்சியும் மறக்காது. மொத்தப் படமுமே ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நினைவில் நிற்பதுதான்.

அதே போல சிப்பிக்குள் முத்து. தமிழ்நாட்டில் கே.விஸ்வநாத்துக்கு ஒரு ரசிகர் இருந்தார் என்றால் என்னைச் சொல்லலாம். ஆனால் அப்போது மன்றம் வைக்கும் எண்ணம் வந்திருக்கவில்லை.

இந்தப் படங்களைத்தான் ஸ்ட்ராங் தரமுள்ள படங்கள் என்றேன். 

மீடியம் காலத்தில் மீடியம் படங்களில் முன்னிலை வகித்தது ‘இதுதாண்டா போலீஸ்’. தலைப்பே சும்மா அதிர்ந்தது. படமும் அதிரடிதான். பார்த்த அதிர்ச்சியில் நாயகன் ராஜசேகரை கை தட்டிப் பாராட்டிய போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இந்தக் கட்டுரை வரிசையில் பெரியகுளம் என்றும் தேனி என்றும் ஊர்களைச் சொல்கிறேன் அல்லவா… இந்த இரண்டுக்கும் நடுவில் இருக்கும் லட்சுமிபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த ராஜசேகர். ‘அட நம்மூர்க்காராள்றா.’ அதிர்ச்சி தீரவில்லை, இவர் எம்பிபிஎஸ் டாக்டர். ‘மதுரைக்காரய்ங்களா இருந்தா இந்நேரம் மன்றம் வச்சிருப்பாங்க்யெடா.’ ‘லட்சுமிபுரத்துல வச்சிட்டாங்க்யெடா.’ ‘அப்பொ சர்றா.’

தொடர்ந்து தெலுங்கு காவல்துறைப் படங்கள் தமிழுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயின. 

தூக்கிச் சாப்பிட வந்தது ‘வைஜெயந்தி ஐபிஎஸ். 

மெல்லியலாள் என்று வர்ணிக்கத்தக்க ஹீரோயின் விஜயசாந்தி. எனக்கெல்லாம் ரொம்பப் பிடித்த அழகு. பள்ளிக்குக் கட்டடித்த காலைக் காட்சி வரிசையில் ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ என்று ஒரு திராபைப் படத்தைப் பார்த்திருந்தேன். அதில் நாயகனோடு விஜயசாந்தி கபடி ஆடும் காட்சி ஒன்றை வைத்திருப்பார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். பின்னாளில் விஜயை முன்னிறுத்த எடுத்த ‘ரசிகன்’ போன்ற சி க்ரேடு சாஃப்ட் போர்னோ காவியங்களின் ஒத்திகை போல இருந்த காட்சி.

ஆனால், வைஜெயந்தி ஒரு போலீஸ் ஆஃபீசர். எந்த ரவுடியாக இருந்தாலும் மல்லுக்கட்டியே பிடிப்பார். பெண்களை அழைத்துவர பெண் போலீஸ் என்று இப்போது இருக்கும் நியதி, ஆண்களை ஆண் போலீஸ் தான் சண்டை போட்டுப் பிடிக்க வேண்டும் என்று அப்போது இருந்திருந்தால் விஜயசாந்தி போலீஸாக வென்றிருப்பாரா என்பது சந்தேகம்தான். 

ச.ஒலி, சி.முத்து போன்ற படங்கள் கொடுத்த கமல்ஹாசன் ‘இந்திருடு சந்திருடு’ போன்ற மசாலா வெரைட்டி காட்டவும் தயங்கவில்லை. அந்தப் படத்தில் ‘ஜெயலலிதா’ என்ற நடிகையின் அழகு எனக்குப் பிடித்திருந்தது, அதை நான் ரெண்டாம் முறை பார்க்கக் காரணம்.

இவ்வாறான வரலாறு ‘பாகுபலி 1, 2’களில் வந்து கரை சேர்ந்தது. 

இப்போது ஓட்டீட்டீ வந்த பிறகு, மொழித் தடை என்பது அறவே அழிந்திருக்கிறது. நடிகர்கள் அறிமுகமில்லாதவர்கள் என்பதும் குறையாகத் தெரியவில்லை. நேரடித் தமிழ்ப்படமான ‘மொதராத்திரி’ பார்த்தேன். ரெண்டு பேரைத் தவிர வேறு யாரும் பரிச்சயமானவர்கள் இல்லை. டப்பிங் படங்களையும் அப்படி நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். 

ஓட்டீட்டீ வருகை பல நல்ல படங்களுக்கான வாய்ப்பைத் திறந்துவிட்டிருக்கிறது என்பதில் மகிழ வேண்டியதுதான். 

தொடரும்

Author Image

ரமேஷ் வைத்யா

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர். சிறார் இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ ‘அபாயப்பேட்டை’ போன்றவை அதிகம் கவனம் பெற்ற புத்தகங்கள்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
 ட்ரெண்டு கொட்டாய் 16 –  தேசுலாவும் தேன்மலர்கள்

பாலுமகேந்திராவின் நெஞ்சிலாடும் கோலங்கள் – 2

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026
கரு உரு 05

கரு உரு 05

October 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?