The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home ஆளுமைகள்

காற்றையும் ஓவியமாக்கியவர் – அகிரா குரோசவா

The Talkie by The Talkie
November 1, 2026
in ஆளுமைகள்
A A
0
Akira kurosawa
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ராஜா.ஆர்

அகிரா குரசோவாவின் ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு, முதலில் நினைவில் நிற்பது அதன் கதை அல்ல.

மழையில் ஓடும் மனிதர்கள் !

காற்றில் துடிக்கும் கொடிகள். !.

பனிமூட்டத்திலிருந்து மெதுவாக வெளிப்படும் உருவம்!

தூசியில் மூழ்கும் போர்க்களம்!

திடீரென்று திரையை நிரப்பும் சிவப்பு!

உரையாடல் இல்லாமலேயே மனத்தில் நீண்ட நேரம் ஒலிக்கும் ஒரு இசை !. குரசோவாவின் சினிமா இப்படித்தான் நினைவில் மீண்டும் உருவாகிறது.

அவர் கதையைச் சொன்ன இயக்குநர் மட்டுமல்ல; காட்சியைச் சிந்தித்த இயக்குநர். அதைவிட முக்கியமாக, காட்சியை கேமரா முன் வருவதற்கு முன்பே மனக்கண்ணில் பார்த்த கலைஞர்.அவருடைய இளமை ஓவியத்துடன் தொடங்கியது. பின்னர் திரைப்படம் அவருடைய ஊடகமாக மாறியது. ஆனால் ஓவியர் அவருக்குள் மறையவில்லை. அவர் கேமராவுக்குள் சென்றார். நிறங்களுக்குள் மீண்டும் தோன்றினார். காட்சித் திட்ட வரைபடங்களில் (Storyboard) தன்னைத் தொடர்ந்து வரைந்தார். இயற்கையை வெறும் பின்னணியாகப் பார்க்க மறுத்தார். இசையை காட்சியின் அடிமையாக இருக்க விடவில்லை.

அதனால் குரசோவாவின் சினிமாவை “அழகான காட்சிகள்” என்று மட்டும் சொல்வது அவரது கலைச் சிந்தனையைச் சிறிதாக்கிவிடும்.

அவருடைய காட்சி அழகாக இருப்பதற்கு முன்பே அது சிந்திக்கப்பட்டது. ஓவியரின் கண் கேமராவுக்குள் வந்தபோது குரசோவா திரைப்பட இயக்குநராக மாறுவதற்கு முன்பு ஓவியராக வேண்டும் என்று விரும்பியவர். அந்த ஓவியப் பயிற்சி அவரது காட்சிப் பார்வையின் அடித்தளமாக இருந்தது. திரைப்படத்திற்குள் வந்தபோதும் ஓவியம் அவரை விட்டுச் செல்லவில்லை. திரைக்கதையில் எழுதப்பட்ட ஒரு காட்சி, படப்பிடிப்புத் தளத்தில் உருவாகும் முன்பே அவரது மனதில் உருவமாக மாற வேண்டியிருந்தது. அதனால்தான் அவர் தனது திரைப்படங்களுக்கான காட்சித் திட்ட வரைபடங்களைத் தானே வரைந்தார்.

கேகெமுஷா (Kagemusha) உருவாகும் காலத்தில் அவர் வரைந்த ஓவியங்களும் காட்சித் திட்டங்களும், திரைப்படம் உருவாகும் முன்பே அதன் உலகத்தை அவர் எவ்வளவு விரிவாகக் கற்பனை செய்திருந்தார் என்பதை காட்டுகின்றன.

Akira kurosawa

ட்ரீம்ஸ் (Dreams) படத்திற்கான நூற்றுக்கணக்கான வரைபடங்கள் பின்னர் உடைகள், அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு, குறிப்பாக நிறத் தேர்வு ஆகியவற்றுக்கான வழிகாட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டன. அவர் ஓவியத்தை கேமராவால் பதிவு செய்யவில்லை.

ஓவியத்தின் சிந்தனையை கேமராவின் இயக்கமாக மாற்றினார்.

இதுதான் குரசோவாவின் தனித்துவத்தின் முதல் அடுக்கு.

மழையை வரைவது என்றால் என்ன?

குரசோவாவின் திரைப்படங்களில் மழை வெறும் வானிலை அல்ல. செவன் சாமுராய் (Seven Samurai) படத்தின் இறுதிப் போரைக் கற்பனை செய்தால் இதை உணரலாம். மழை பெய்கிறது; நிலம் சேறாகிறது; குதிரைகள் வழுக்குகின்றன; மனிதர்கள் ஓடுகிறார்கள்; உடல்கள் விழுகின்றன. போரின் குழப்பத்தை உரையாடல் விளக்க வேண்டியதில்லை. மண்ணும் மழையும் உடல்களின் இயக்கமும் அதைச் சொல்கின்றன.

குரசோவாவின் திரைப்படங்களில் மழை, காற்று, பனிமூட்டம், வெப்பம் ஆகியவை மனநிலை, செயல் தீவிரம், கதாபாத்திரங்களின் உளவியல் ஆகியவற்றை உருவாக்கும் சக்திகளாக மாறுகின்றன

இயற்கை அங்கே கதையின் வெளியே நிற்பதில்லை!.

அது கதையின் இன்னொரு உடலாகிறது!.

கேமரா அழகைத் தேடவில்லை; இயக்கத்தைப் புரிந்துகொள்கிறது!

குரசோவாவின் கேமரா அசைவுகளைப் பார்த்தால், கேமராவை அவர் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.

ஒரு நடிகன் நகரும்போது கேமரா நகர்கிறது; அவன் நிற்கும்போது கேமராவும் நிற்க வேண்டும் என்ற அவரது இயக்குநர் சிந்தனை இதற்குச் சான்று. இல்லையெனில் பார்வையாளரின் கவனம் நடிகனிடமிருந்து கேமராவுக்குத் திரும்பிவிடும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். (akirakurosawa.info)

இந்த எளிய கொள்கைக்குள் ஒரு பெரிய கலைக் கருத்து இருக்கிறது: தொழில்நுட்பம் தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடாது; காட்சியின் உயிரை வெளிப்படுத்த வேண்டும்.

குரசோவாவின் கேமரா தீவிரமாக இயங்கினாலும், அதன் இயக்கம் பெரும்பாலும் காட்சியின் இயற்கையான ஓட்டத்தோடு கலந்துவிடுகிறது. செவன் சாமுராய்: மழையை மீண்டும் நடிக்க முடியாது. செவன் சாமுராய் படத்தின் இறுதிப் போரில் மழை, சேறு, குதிரைகள், மனிதர்களின் வேகம் ஆகியவை மீண்டும் மீண்டும் ஒரேபோல் உருவாக்க முடியாதவை என்பதை குரசோவா அறிந்திருந்தார். அதனால் ஒரே நேரத்தில் மூன்று கேமராக்களைப் பயன்படுத்தினார். ஒவ்வொன்றுக்கும் வேறுபட்ட பணி. ஒன்று முதன்மைக் காட்சியைப் பிடிக்கும்; இன்னொன்று வேகமான இயக்கங்களைப் பின்தொடரும்; மூன்றாவது எதிர்பாராத தருணங்களைப் பதிவு செய்யத் தயாராக இருக்கும்.

இது வெறும் தொழில்நுட்பத் தீர்வு அல்ல.

இயற்கையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாதபோது, கேமராவைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்ற கலைஞரின் முடிவு.

அதனால்தான் அந்தப் போர் இன்றும் உயிரோடு இருக்கிறது. அது ஒழுங்குபடுத்தப்பட்ட நடனம் அல்ல; மழைக்குள் சிதறிய மனிதர்களின் உண்மையான குழப்பம்.

இயற்கை: பின்னணியிலிருந்து கதாபாத்திரமாக

குரசோவாவின் திரைப்படங்களில் இயற்கை மனிதர்களைச் சுற்றி நிற்கும் பின்னணி அல்ல. ஸ்ட்ரே டாக் (Stray Dog) படத்தின் வெப்பம் நகரத்தின் மூச்சுத்திணறலை உருவாக்குகிறது. செவன் சாமுராய் படத்தின் மழை போரின் உடலை மாற்றுகிறது. த்ரோன் ஆஃப் ப்ளட் (Throne of Blood) படத்தின் பனிமூட்டம் மனிதன் தனது விதியைப் பார்க்க முடியாத நிலையை உருவாக்குகிறது. ரன் (Ran) படத்தின் காற்று, புகை, மேகம் ஆகியவை அரச குடும்பத்தின் சிதைவையே நிலப்பரப்பில் எழுதுகின்றன.  ரன் படத்தில் அதிகாரத்தின் மையமாக இருந்த அரண்மனையும் இறுதியில் இயற்கையின் பரந்த வெளியில் ஒரு சிறிய பொருளாகிவிடுகிறது.

ஒரு அரசன் தனது உலகத்தை ஆள முடியும் என்று நினைக்கிறான். காற்று அவனைப் பொருட்படுத்துவதில்லை. இந்த இடத்தில்தான் குரசோவாவின் இயற்கைப் பார்வை ஒரு தத்துவமாக மாறுகிறது.

துர்கெனெவிடமிருந்து (Ivan Turgenev)  கற்ற இயற்கையின் ஒலி

Akira kurosawa

இயற்கையைப் பற்றிய குரசோவாவின் உணர்வு ஓவியத்திலிருந்து மட்டும் வரவில்லை. இலக்கியமும் அதனை வடிவமைத்தது. இவான் துர்கெனெவின் இயற்கை வர்ணனைகள் தன்னை ஆழமாகப் பாதித்ததாக குரசோவா தனது சுயசரிதை எழுத்துகளில் நினைவுகூர்கிறார். பருவங்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், இலைகளின் ஒலியால் கூட உணர முடியும் என்ற அந்த உணர்வு அவரைத் தொட்டது.

இதில் ஓவியமும் இசையும் சந்திக்கின்றன!.

ஓவியர் நிறத்தைப் பார்க்கிறார்!.

இசைக்கலைஞர் ஒலியைக் கேட்கிறார்!.

குரசோவா இரண்டையும் ஒரே காட்சியில் அனுபவிக்க முயன்றார்!.

அதனால் அவரது மரங்கள் வெறும் மரங்களாகத் தெரியவில்லை. காற்றில் அவை ஒலியாகின்றன; மழையில் நிலம் ஒரு இசைக்கருவியாகிறது; பனிமூட்டம் காட்சியின் ஆழத்தையே மாற்றுகிறது இசை காட்சியைப் பின்பற்ற வேண்டியதில்லை.

குரசோவாவின் இசைப் பயன்பாட்டின் முக்கியத்துவம், “நல்ல இசையைப் பயன்படுத்தினார்” என்பதில் இல்லை. சோகமான காட்சிக்கு சோகமான இசை என்ற நேரடியான பொருத்தத்தை அவர் கடந்து செல்ல விரும்பினார். ஃபுமியோ ஹயசாகா (Fumio Hayasaka) உடனான பணிக்குப் பிறகு, இசையும் காட்சியும் ஒன்றுக்கொன்று எதிரொலிக்கும் எதிர்முரண் இசை அமைப்பை (Counterpoint) அவர் முக்கியமாகக் கருதத் தொடங்கினார். காட்சியை விளக்குவதற்குப் பதிலாக, இசை அதன் மறுபக்கமாக நிற்க முடியும்.

திரையில் ஒருவர் அமைதியாக இருக்கலாம்; இசை அவனுக்குள் நடப்பதைச் சொல்லலாம். அல்லது காட்சி பயங்கரமாக இருக்கலாம்; இசை அதற்கு மாறாக ஒரு விசித்திரமான அமைதியை உருவாக்கலாம். இந்த முரண்பாடுதான் குரசோவாவின் இசையை அலங்காரத்திலிருந்து காட்சியின் சிந்தனையாக உயர்த்துகிறது.

கேமரா இயங்குவதற்கு முன்பே ஒலி

குரசோவா ஒலி மற்றும் இசையைப் படப்பிடிப்புக்குப் பிறகு சேர்க்கப்படும் அலங்காரமாகக் கருதவில்லை. இசை, ஒலி விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனை படப்பிடிப்புக்கு முன்பே தொடங்க வேண்டும் என்ற அவரது அணுகுமுறை, காட்சியின் ஒலியுலகையும் காட்சியமைப்பின் ஒரு பகுதியாகவே கருதியதை காட்டுகிறது. 

ஒரு கதாபாத்திரம் திரையில் இல்லாவிட்டாலும், அவருக்கான இசை அவருடைய இருப்பை நினைவூட்டலாம். ஒரு இடத்தைப் பார்க்காமலேயே அதன் ஒலியால் உணர முடியும். இதுதான் சினிமாவின் தனிச்சிறப்பு.

ஓவியம் கண்களைப் பிடிக்கிறது.!

இசை காதுகளைப் பிடிக்கிறது!.

சினிமா இரண்டையும் ஒரே நேரத்தில் பிடிக்கிறது!.

ரஷோமோன்: உண்மை எங்கே இருக்கிறது?

ரஷோமோன் (Rashomon) படத்தின் பல்வேறு பார்வைக் கோணங்கள் உண்மை பற்றிய கேள்வியை எழுப்புகின்றன. ஒரே நிகழ்வை பலர் பல விதமாகச் சொல்கிறார்கள். நினைவு, பயம், வெட்கம், சுயநலம் — ஒவ்வொன்றும் உண்மையை மாற்றுகின்றன.ரியூனோசுகே அகுதகவாவின் (Ryunosuke Akutagawa) இரண்டு கதைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் குரசோவாவை உலக சினிமாவின் முக்கிய இயக்குநராக சர்வதேச அளவில் நிலைநிறுத்திய படைப்புகளில் ஒன்று.

ஆனால் அதன் காட்சியமைப்பின் ஆழம் கதைக் கட்டமைப்புக்கு அப்பால் செல்கிறது. காட்டின் ஆழம், சூரிய ஒளியின் தீவிரம், மனித முகங்களின் மாறுபாடு — இவை அனைத்தும் உண்மை பற்றிய கேள்வியை காட்சியாக்குகின்றன. குரசோவாவிடம் காட்சி எப்போதும் பதில் அல்ல. சில நேரங்களில் அது இன்னொரு கேள்வி.

த்ரோன் ஆஃப் ப்ளட்: பனிமூட்டத்துக்குள் மறையும் மனிதன்

ஷேக்ஸ்பியரின் மக்பெத் கதையை ஜப்பானிய வரலாற்று மற்றும் நாடக மரபுகளோடு இணைத்த த்ரோன் ஆஃப் ப்ளட், குரசோவாவின் காட்சிச் சிந்தனையின் முக்கியமான படைப்பு. அதில் பனிமூட்டம் இயற்கைக் காட்சி மட்டும் அல்ல.  அது விதியை மறைக்கும் திரை.

வாஷிசு செல்லும் பாதை தெளிவாகத் தெரியவில்லை. அவன் முன்னால் என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது; கடந்த பாதையும் மறைந்து விடுகிறது. அதிகாரத்தைத் தேடி செல்லும் மனிதன், இறுதியில் தனது பாதையையே இழக்கிறான்.பனிமூட்டத்தில் தோன்றி மறையும் மனித உருவங்கள், நிலப்பரப்பும் மனித மனமும் ஒன்றாகக் கலக்கும் குரசோவாவின் காட்சியமைப்பை வெளிப்படுத்துகின்றன.

இங்கே இயற்கை கதாபாத்திரத்தின் மனதை பிரதிபலிப்பதில்லை!.

இயற்கையே அவனுடைய மனநிலையாகிறது!.

நிறம் வந்தபோது ஓவியர் மீண்டும் தோன்றினார்!

நீண்ட காலம் கருப்பு-வெள்ளைத் திரைப்படங்களில் பணியாற்றிய குரசோவாவிடம் நிறம் வந்தபோது, அது வெறும் தொழில்நுட்ப மாற்றமாக இல்லை.

டோடெஸ்கா-டென் (Dodes’ka-den) அவரது முதல் வண்ணத் திரைப்படம். அதில் நிறம் இயற்கையை நகலெடுப்பதற்காக அல்ல; தனித்தனி மனநிலைகளையும் சமூகச் சூழல்களையும் உருவாக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது.

சிவப்பு வெறும் சிவப்பு அல்ல!.

நீலம் வெறும் நீலம் அல்ல!.

மஞ்சள் ஒரு மனநிலையாகிறது!.

இதுதான் ஓவியர் குரசோவா மீண்டும் கேமராவுக்குள் நுழையும் தருணம்!.

ட்ரீம்ஸ்: வரைந்த உலகத்துக்குள் நடந்து செல்வது

Akira kurosawa

ட்ரீம்ஸ் (Dreams) குரசோவாவின் ஓவிய மனதை மிக நேரடியாக வெளிப்படுத்தும் திரைப்படம்.

கனவு மற்றும் நிஜம் ஒன்றுக்குள் ஒன்று கரையும் இந்தப் படத்தில், உலகத்தைப் பதிவு செய்வதற்குப் பதிலாக அவர் அதை மறுபடியும் வரைந்தார். வின்சென்ட் வான் கோ (Vincent van Gogh) தோன்றும் பகுதி இதற்கு சிறந்த உதாரணம்.

மனிதன் ஓவியத்துக்குள் செல்கிறான்!.

ஓவியத்தின் நிறங்கள் உயிர்பெறுகின்றன!.

கனவு ஒரு காட்சியாக மட்டும் இல்லாமல் ஒரு இடமாக மாறுகிறது!.

குரசோவாவின் வரைபடங்கள் ட்ரீம்ஸ் படத்தின் உடைகள், அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு, நிறத் தேர்வு ஆகியவற்றுக்கான வழிகாட்டிகளாக இருந்தன. அதனால் அந்தப் படத்தைப் பார்க்கும்போது நாம் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோமா, அல்லது ஒரு ஓவியரின் கனவுக்குள் நடக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

ரான்: நிறத்தின் வழியாகப் பேரழிவைப் பார்ப்பது

ரான் (Ran) குரசோவாவின் வண்ண உலகின் உச்சங்களில் ஒன்று. ஷேக்ஸ்பியரின் கிங் லியர் கதையை பதினாறாம் நூற்றாண்டு ஜப்பானியச் சூழலில் மறுவடிவமைத்த இந்தத் திரைப்படம், அதிகாரம், துரோகம், போர், குடும்பச் சிதைவு ஆகியவற்றை ஒரு பேரழிவின் காட்சியாக மாற்றுகிறது.

மஞ்சள்!.

சிவப்பு!.

நீலம்!.

புகை!.

கருப்பு!.

அவற்றுக்கிடையே ஓடும் மனிதர்கள்!.

போரின் போது நிறங்கள் அதிகாரத்தையும் பிரிவையும் குறிக்கின்றன. ஆனால் போர் முன்னேறும்போது அந்த ஒழுங்கும் சிதைகிறது.

கொடிகள் காற்றில் துடிக்கின்றன!.

அரண்மனை எரிகிறது!.

மனிதர்கள் சிதறுகிறார்கள்!.

ஒரு காலத்தில் உலகை ஆட்சி செய்தவன், அதே உலகின் பரந்த நிலப்பரப்பில் தனியாக நிற்கிறான். ரன் படத்தின் சில முக்கியமான காட்சிகளில் குரசோவா ஒலியைப் பின்வாங்கி தோரு தகெமிட்சுவின் இசைக்கு இடம் கொடுக்கிறார். இதனால் பேரழிவு இன்னும் பெரிதாக உணரப்படுகிறது.

இங்கே நிறமும் இசையும் ஒன்றையொன்று விளக்கவில்லை!.

அவை ஒன்றாகச் சேர்ந்து அழிவின் உணர்வை உருவாக்குகின்றன!

.

டெர்சு உசாலா: மனிதனின் அளவைச் சுருக்கும் நிலப்பரப்பு

டெர்சு உசாலா (DersuUzala) குரசோவாவின் இயற்கைப் பார்வையின் மற்றொரு முக்கிய வடிவம். விளாடிமிர் ஆர்சென்யெவின் (Vladimir KlavdiyevichArsenyev,) எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில், டெர்சு இயற்கையுடன் மோதுவதில்லை; அவன் அதற்குள் வாழ்கிறான்.

ஒரு பெரிய நிலப்பரப்பில் ஒரு சிறிய மனித உரு!.

உறைந்த ஏரி!.

பனி!.

காற்று!

தொலைவில் உதிக்கும் சூரியன்!.

Akira kurosawa

இவற்றின் நடுவே மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை படம் உணர்த்துகிறது.குரசோவாவின் மனிதநேயம் இங்கே வேறு வடிவம் பெறுகிறது.

மனிதன் உலகின் மையம் அல்ல!.

அவன் உலகின் ஒரு சிறிய பகுதி!.

ஆனால் அந்தச் சிறிய மனிதனின் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கிறது.

பார்வையின் தூரம்

குரசோவாவின் சினிமாவில் “தூரம்” ஒரு முக்கியமான கலைக்கருவி.

மிக அருகில் பார்த்தால் முகம் கிடைக்கிறது. சற்று தொலைவில் பார்த்தால் உடல் கிடைக்கிறது. இன்னும் தொலைவில் சென்றால் அவன் வாழும் உலகம் கிடைக்கிறது. அதற்கும் அப்பால் சென்றால் — அவன் அந்த உலகில் எவ்வளவு சிறியவன் என்பது தெரிகிறது. இந்தத் தூர மாற்றம் அவரது மனிதநேயத்தோடும் தொடர்புடையது.

ஒரு மனிதனை முகத்தில் மட்டும் பார்த்தால் அவனுடைய துயரம் தெரியும். அவனை நிலப்பரப்புக்குள் வைத்துப் பார்த்தால், அவனுடைய துயரத்தோடு உலகின் அமைதியும் தெரியும்.

குரசோவா இந்த இரண்டையும் இணைத்தார். அதனால் அவரது மனிதநேயம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனிதநேயம் அல்ல; மனிதனுக்கும் இயற்கைக்கும், அதிகாரத்திற்கும் வரலாற்றிற்கும் இடையிலான உறவைப் பற்றிய சிந்தனை.

திட்டமிடுதலும் எதிர்பாராததையும் சமநிலைப்படுத்திய இயக்குநர்

குரசோவா மிகத் துல்லியமாகத் திட்டமிடும் இயக்குநர். ஆனால் அவரது திரைப்படங்களின் உயிர் அந்தத் திட்டத்தில் மட்டும் இல்லை.

மழை எப்படிப் பெய்யும்?

காற்று எப்போது கொடியைத் திருப்பும்?

குதிரை எந்தத் திசையில் ஓடும்?

ஒரு மனிதன் எப்போது தடுமாறுவான்?

இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. குரசோவா இந்த எதிர்பாராத தருணங்களுக்கு தனது திட்டத்துக்குள் இடம் விட்டார். அதனால்தான் அவரது படங்களில் கட்டுப்பாடும் உயிரோட்டமும் ஒன்றாகத் தெரிகின்றன.

கணிதத்துக்குள் இயற்கையை அனுமதித்த இயக்குநர் அவர்.

பல கலைகளின் சந்திப்பில் உருவான சினிமா

ஓவியம், இசை, இலக்கியம், நாடகம், இயற்கை, புகைப்படம் — இவை அனைத்தும் குரசோவாவின் சினிமாவில் இருக்கின்றன. ஆனால் அவரது சினிமா இவற்றின் கூட்டுத்தொகை அல்ல.

ஓவியத்தின் நிலைத்த காட்சியை அவர் இயக்கமாக்கினார்!.

இசையின் காலத்தை காட்சிக்குள் கொண்டு வந்தார்!.

நாடகத்தின் உடல் மொழியை கேமராவின் பரப்போடு இணைத்தார்!.

இலக்கியத்தின் சிந்தனையை காட்சிப் படிமமாக மாற்றினார்!.

இயற்கையின் மாற்றத்தை கதையின் ஒரு பகுதியாக்கினார்!.

இவற்றை ஒன்றாகச் சேர்த்தபோது உருவானது வேறொரு கலை — சினிமா.

இதனால்தான் குரசோவாவின் காட்சிகள் சில நேரங்களில் ஓவியமாகத் தெரிகின்றன; அடுத்த கணம் இசையாகின்றன; பிறகு உடல் இயக்கமாகின்றன; இறுதியில் மனிதனின் விதியைப் பற்றிய கேள்வியாக மாறுகின்றன.

மனிதனும் உலகமும்

குரசோவாவின் திரைப்படங்களில் மனிதன் பெரும்பாலும் ஒரு நெருக்கடிக்குள் இருக்கிறான்.

அவன் அதிகாரத்தை விரும்புகிறான்.

உயிர்வாழ முயல்கிறான்!.

தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறான்!.

காதலிக்கிறான்!

பயப்படுகிறான்!.

தவறுகிறான்!.

சில நேரங்களில் மாறுகிறான்!.

ஆனால் அவனைச் சுற்றிய உலகம் அவனுடைய விருப்பப்படி மாறுவதில்லை.

மனிதன் முக்கியமானவன்.

ஆனால் உலகின் மையம் அல்ல.!

அவன் போராடுகிறான்; இயற்கை தொடர்கிறது.!

அவன் அரண்மனை கட்டுகிறான்; காற்று அதைத் தாண்டிச் செல்கிறது.!

அவன் அதிகாரத்தை நிரந்தரமாக்க முயல்கிறான்; வரலாறு அதை இடிக்கிறது.!

இந்த உணர்வு இகிரு (Ikiru) முதல் டெர்சு உசாலா, ரான் வரை பல வடிவங்களில் திரும்பி வருகிறது. ஆனால் குரசோவா மனிதனை இகழ்வதில்லை. மாறாக, மனிதன் இவ்வளவு சிறியவன் என்பதை உணர்ந்த பிறகும் அவன் எப்படி வாழ்கிறான் என்பதில்தான் அவருடைய ஆர்வம்.

காற்றை ஓவியமாக்கிய கேமரா

Akira kurosawa

குரசோவாவின் சினிமாவைத் திரும்பிப் பார்த்தால், மழையும் காற்றும் நிறமும் இசையும் தனித்தனி கூறுகளாகத் தெரியவில்லை. அவை ஒரே காட்சிச் சிந்தனையின் வெவ்வேறு வடிவங்கள்.

ஓவியர் குரசோவா நிறத்தைத் தேர்ந்தெடுக்கிறார்!.

இயக்குநர் குரசோவா மனிதனின் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்!.

கேமரா குரசோவா இயக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறது!.

இசையை அறிந்த குரசோவா ஒலிக்கும் அமைதிக்கும் இடையிலான தூரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்!.

இயற்கையை உணர்ந்த குரசோவா காற்றையும் மழையையும் காட்சிக்குள் அனுமதிக்கிறார்!. அவை ஒன்றாகச் சேர்ந்தபோது ஒரு தனித்துவமான சினிமா மொழி பிறக்கிறது!

அந்த  மொழியில் மழை வெறும் மழையல்ல!.

காற்று வெறும் காற்றல்ல!.

நிறம் வெறும் நிறமல்ல!.

இசை வெறும் இசையல்ல.!

அவை மனிதனுடைய நிலையின்மையைச் சுற்றி உருவாகும் ஒரு பெரிய காட்சிச் சிந்தனையின் பகுதிகள். குரசோவாவின் திரைப்படங்களில் மனிதர்கள் வந்து செல்கிறார்கள்.

அரண்மனைகள் எழுகின்றன, எரிகின்றன.

படைகள் உருவாகின்றன, அழிகின்றன!.

காதல்கள் தொடங்கி முடிகின்றன!.

அதிகாரம் கைகளிலிருந்து கைகளுக்குச் செல்கிறது!

.ஆனால் காற்று தொடர்ந்து வீசுகிறது!.

மழை தொடர்ந்து பெய்கிறது!.

பனிமூட்டம் தொடர்ந்து நிலப்பரப்பை மறைக்கிறது.!

சூரியன் தொடர்ந்து உதிக்கிறது அதனால் குரசோவாவின் சினிமாவின் ஆழமான கேள்வி, “மனிதன் என்ன செய்கிறான்?” என்பதோடு முடிவதில்லை.

அதன் பின்னால் இன்னொரு கேள்வி:?

மனிதன் மறைந்த பிறகும் இந்த உலகம் எப்படித் தொடரும்? அதற்குப் பதிலாக குரசோவா ஒரு தத்துவ உரையை வைக்கவில்லை. ஒரு காட்சியை வைத்தார்.

தொலைவில் ஒரு சிறிய மனித உருவு!.

அதைச் சுற்றி அளவில்லாத நிலப்பரப்பு.!

மேலே நகரும் மேகங்கள்!.

அதன் மீது வீசும் காற்று.!

பின்னணியில் மெதுவாக ஒலிக்கும் இசை!.

பிறகு கேமரா அசையாமல் நிற்கிறது!

மனிதன் மட்டும் நகர்கிறான்.!

அந்த நொடியில் ஓவியமும் இசையும் இயற்கையும் சினிமாவும் ஒன்றாகின்றன!.

அங்கேதான் அகிரா குரசோவாவின் கலை இருக்கிறது!.

அவர் காற்றை கேமராவால் பதிவு செய்யவில்லை!.

காற்றுக்குள் மனிதனை வரைந்தார்!.

அதனால்தான் குரசோவாவின் திரைப்படம் முடிந்த பின்னரும் காட்சி முடிவதில்லை. திரை இருளாகிவிட்டாலும், அந்தக் காற்று தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கிறது.

அந்தக் காற்றுக்குள், ஒருகாலத்தில் ஓவியராக இருந்த ஒரு மனிதனின் கண் இன்னும் கேமராவை வழிநடத்திக்கொண்டிருக்கிறது.

அந்தக் கேமரா — காற்றை ஓவியமாக்கிய கேமரா.!

Author Image

ராஜா.ஆர்

ஓவியர், வரலாறு, சினிமா தொல்பொருள் துறைகளில் ஆர்வம் கொண்டவர். கவிஞர், கட்டுரையாளர்

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Guru dutt

குருதத் 100 #11 காலங்கள் மாறும், சாம்ராஜ்யங்கள் சரியும்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?