The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள் ட்ரெண்டு கொட்டாய்

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

The Talkie by The Talkie
November 1, 2026
in ட்ரெண்டு கொட்டாய், தொடர்கள்
A A
0
Trend-kottaai
Share on WhatsappShare on FacebookShare on Twitter

ரமேஷ் வைத்யா

ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நமக்குத் தோன்றுவது எப்படி? ஃபேஸ்புக்கில் வரும் செய்திகள். வெள்ளி ரிலீஸ். சனி சக்சஸ் மீட். ஞாயிறு வசூல் சாதனைக் கணக்கு. திங்கள் சமூக நலத்திட்ட உதவிகள்…

என் சிறு வயதில் சினிமா பற்றிய தகவல்கள் தெரியவந்ததே வித்தியாசமாக இருந்தது. 

மாட்டு வண்டியில் பாட்டுச் சத்தம் கேட்கும். ஓடி வந்து பார்த்தால் நோட்டீஸ் விநியோகிப்பார்கள். மிகவும் மட்டமான காகிதம். கலர் கலர் காகிதம். மாட்டுப் பாட்டு வண்டியிலிருந்து வீசிக்கொண்டே போவார்கள். நாங்கள் அந்த நோட்டீஸ்களைப் பொறுக்கியபடியே பின்னால் ஓடுவோம். அதிக எண்ணிக்கையில் நோட்டீஸ் சேர்த்தால் பெரிய ஆள். ஒரு முறை தரித்திரத்தில் ரோஸ் கலர் நோட்டீஸ் மட்டும் கொஞ்சமாக அடித்திருந்தார்கள் போலும். எனக்குக் கிடைக்கவே இல்லை. அது துயரம் இல்லை. எங்கள் ஹெட்மாஸ்டர் மகன் ரெண்டு ரோஸ் நோட்டிஸ் சம்பாதித்துவிட்டான். ஹெட்மாஸ்டர் சும்மாதான் அந்த வேலைக்கு வந்திருந்தார். வீடு தோட்டம் நிலபுலன் எல்லாம் வைத்திருந்தார். இந்தப் பையனின் அண்ணன் ராலே சைக்கிள்கூட வைத்திருந்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் இவனைப் பெரிய ஆள் என்று நினைத்திருந்தேன். கொஞ்சம் மரியாதையாகவே நடந்துகொள்வது. நோட்டீஸ் விவகாரத்தில்தான் அவன் பெரும் பிச்சைக்காரப் பயல் என்று தெரியவந்தது. ரெண்டில் ஒரு நோட்டீஸை நான் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் காலில் விழுந்தும் அவன் தரவே இல்லை. வந்த வெறுப்பில் என் கையில் இருந்த மற்ற நோட்டீஸ்களை எல்லாம் தீ வைத்துக் கொளுத்திவிடலாம் என்றுகூடத் தோன்றியது. 

மாட்டுவண்டி தவிர இரு புறமும் சாய்வாக ரெண்டு தட்டிகளைக் கட்டி அதில் போஸ்டர் ஒட்டி பேண்டு வாத்தியக் குழுவினர் பாட்டு வாசித்துக்கொண்டே வந்தும் நோட்டீஸ் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் நோட்டீஸ் சேகரிக்கும் ஆர்வம் குன்றியிருந்தது. 

அதன் பிறகு வேறு ஊருக்குப் போனோம். பெரியகுளம். அங்கேதான் முதன் முதலாகக் குதிரை வண்டி பார்த்தேன். குடியேறிப் போகும்போதே பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்குக் குதிரை வண்டியில்தான் போனோம். ‘சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ; ஜல்தீ போவோம் சலோ சலோ; அந்திப் பொழுதே ஆகும் முன்பே அன்பைக் காணலாம்….’ 

அந்த ஊரில் வெள்ளி தோறும் படம் மாற்றும்போது குதிரை வண்டியில் மைக் செட் கட்டிக்கொண்டு வந்து விளம்பரம் செய்வதை விரிந்த விழிகளோடு பார்த்தேன். அதில் அநேகமாக என் முதல் கதாநாயகனைப் பார்த்தேன் என்று கொள்ளலாம். ‘பேரன்பு மிக்க பெரியோர்களே தாய்மார்களே, பூக்களில் சிறந்தது மல்லிகை, கட்டடங்களில் சிறந்தது தாஜ்மகால், வண்டிகளில் சிறந்தது ஏரோப்பிளேன், அது போல் தியேட்டர்களில் சிறந்த ரஹீம் தியேட்டரில் இன்று முதல் தினசரி மூன்று காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது நடிகர் திலகம் ஜிவாசி கணேசன், கவர்ச்சிக்கு இலக்கணம் வகுத்த ஜுசாதா ஆகியோரின் நவரச நடிப்பில் அந்தமான் காதலி அந்தமான் காதலி அந்தமான் காதலி… காணத் தவறாதீர்கள். கண்டு களிக்கத் தவறாதீர்கள்…’ என்று அந்தக் கதாநாயகன் அறிவித்துப் போவது எனக்கு ஒரு மன்னனின் நகர்வலம். (இரண்டாம் மூன்றாம் அந்தமான் காதலிகள் எதிரொலி எஃபெக்டை அவராகக் கொடுத்தது என்பதை நான் வளர்ந்து புரிந்துகொண்டேன்.) 

அப்போதே ஒரு லட்சியம் என் மனதில் குடியேறியது. ‘கஷ்டப்பட்டுப் படித்து இவர் போல் ஆக வேண்டும்.’ டேல் கார்னிகி, எம்.ஆர். காப்மெயர் போன்றோர் சொல்வதெல்லாம் பொய்யே அல்ல. நானே சாட்சி. அடுத்து வந்த பத்தாண்டுகளுக்குள் என் லட்சியம் நிறைவேறியது. லட்சியத்துக்காக – வழக்கம் போல – நான் எந்த முயற்சியும் செய்யாதபோதும்! 85ஆம் வருஷமாக இருக்கலாம். முதல் பீரியடோடு பள்ளியிலிருந்து சினிமாப் பார்க்கக் கிளம்பிவிட்டேன். அல்லிநகரம் பாத்துமா தியேட்டர் வாசலில் அலங்கரிக்கப்பட்ட அம்பாசடர் கார் ஒன்று நின்றிருந்தது. கால வளர்ச்சி. இது சினிமா விளம்பர கார். அதன் தலையில் விஜயகாந்த், நளினி நடித்த ‘சந்தோஷக் கனவுகள்’ பட போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது. காரின் பின் சீட்டில் சிம்ம நாதம் எழுப்பும் மைக் செட் உட்கார்ந்திருந்தது. அதில் ஊதி ஊதி மைக் டெஸ்டிங் செய்துகொண்டிருந்தார் ஓராள். என் லட்சியமே மறந்து நான் ஏதோ யோசனையில் அதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘வர்றியாடா’ என்றார். இப்போதைய டெக்னாலஜியில் நிஜமாக மைக்கிலேயே எக்கோ எஃபெக்ட் வந்து, ‘டா டா டா’ என்றது. வாய் நிறைய இளிப்போடு வண்டியில் ஏறிக்கொண்டேன். காரையெல்லாம் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. நல்ல மெத் மெத்தில் உட்கார்ந்துகொண்டேன். இந்த அதிர்ச்சியையே செரிக்கத் திணறிக்கொண்டிருந்தபோது அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார் அந்த ஆள். ‘என்னடா, மைக்ல பேசணுமா?’

என் இளிப்பின் பரப்பளவு அதிகரித்தது. பிறகென்ன வண்டி கிராமம் கிராமமாகப் போக, நான் அதிகாரப்பூர்வமல்லாத அறிவிப்பாளனாகிப் போனேன். பால்யத்தில் பார்த்து வியந்து மனதிலேற்றிய அறிவிப்புக் கலை என்னைக் கைவிடவில்லை. என் கிரியேட்டிவிடியையும் சேர்த்து, ‘நகரில் சிறந்ததாம் அல்லிமாநகரிலே, பாத்துமா தியேட்டரிலே…’ என்று ஆரம்பித்ததுமே அதட்டி தடுத்தாட்கொண்டார் அந்தாள். ‘சும்மா அல்லிநகரம் பாத்துமா தியேட்டரில்னு சொன்னாப் போதும்.’ 

அதைத் திருத்திக்கொண்டேன். ஆனால், சந்தோஷக் கனவுகள் என்கிற படத்தின் பெயரை மட்டும் கல்யாணக் கனவுகள் என்றே கடைசி வரை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ஆள் ரெண்டு முறை ‘சந்தோசக் கனவுகள்றா’ என்று திருத்தினார். நான் மறுபடியும் அப்படியே சொல்ல, ‘ஏல, கல்யாணத்துக்கும் சந்தோசத்துக்கும் என்னடா சம்பந்தம்?’ என்று கேட்டார். அந்தக் கேள்வியின் அர்த்தம் அப்போது எனக்கு விளங்கவில்லை. அவர் அனவுன்சர் உருவில் வந்த சித்தர் போல. என் லட்சியத்தைக் கைகூட்ட வந்த சித்தர்.

ஐந்தாறு மணி நேரம் காரில் சுற்றி மீண்டும் தியேட்டருக்கே வந்து சேர்ந்தோம். அங்கே தியேட்டர் மேனேஜர் நின்றிருந்தார். ‘ஏப்பா, யூனிஃபார்மோட இந்த வேல பாத்துக்கிருக்க… உருப்படுற யோசன இல்லையா?’

இன்றைக்கு, முக்காலமுணர்ந்த சித்தர்கள் பலரைப் பார்க்கும் யோகம் போல எனக்கு. ‘அட்வைஸ் குடுக்குறானுகன்னுதான் ஸ்கூல் கட் அடிச்சுட்டு இங்க வந்தேன்’ என்று நினைத்திருக்கும்போதே, ‘படம் பாத்துட்டுப் போ…’ என்றார். அதாவது என்ட்ரி ஃப்ரீ. அப்போது அதை என் உழைப்புக்கான சம்பளம் என்று நினைத்தேன். படம் பார்க்கும்போது என் தப்புக்கான தண்டனை என்று புரிந்தது. ஆர்.சி.சக்தியின் கருத்துகள் எல்லாம் புரியும் வயதில்லையே…

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க… எனக்கு சினிமா பார்க்கும் ஆர்வம் வந்ததற்கு அடிப்படைக் காரணமாகப் பாட்டுக் கச்சேரிகளைத்தான் சொல்ல வேண்டும். நீங்கள் பெரிய பெரிய சபாக்களில் பார்த்த கச்சேரிகளையெல்லாம் கற்பனை செய்துகொண்டுவிடாதீர்கள். கிராம, சிறுநகர கோயில் திருவிழாக்களில் சினிமாப் பாட்டுப் பாடுவார்களே அந்தக் கச்சேரியைச் சொல்கிறேன். என் அல்ப வாழ்வின் மிக முக்கிய அல்ப அம்சமாக இந்தப் பாட்டுக் கச்சேரிகள் அமைந்தது ஒரு விசித்திரம். 

எந்தக் கச்சேரி கேட்டாலும் என் கிரியேட்டிவிடி ஊற்றெடுக்கும். பாட மாட்டேன். கதையோ கவிதையோ குறைந்த பட்சம் வேற்றூர் நண்பனுக்கு ஒரு கடிதமோ எழுதியே ஆகவேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். அப்படி எழுதிய படைப்புகள் அனைத்தும் அந்த வயதிலிருந்தே பிரசுரம் ஆக ஆரம்பித்தன என்பதும் விசேஷம். 

கச்சேரி நடக்கிறது என்றால் காலையிலிருந்தே பரபரப்பாகத் திரிவேன். மாலை ஆறு மணிக்கெல்லாம் ஸ்தலத்துக்குப் போய்விடுவேன். எட்டரை ஒன்பது மணிக்கு மேல்தான் கச்சேரி கோஷ்டி மெல்ல மெல்ல மேடையேறும். கொடுத்த காசுக்கு ரெண்டு மணி வரை பாட்டுக் கேட்பார்களே… 

ஸ்ருதி சேர்ப்பதற்காக அவர்கள் ஙொய்ங் ஙொய்ங் என்றும் டும் டுப் என்று எழுப்பும் ஒலிகளெல்லாம் தேனாகப் பாயும். அதெல்லாம் மனத் திருவிழா. ஒரு வழியாகக் கச்சேரி ஆரம்பிப்பார்கள். ‘ஆயர்பாடி மாளிகையில்’ ஸ்டார் பாடகருக்கு. இது நன்றாக இருந்தால் அந்த நிகழ்ச்சியில் எஸ்பிபி பாட்டுகள் அதிகம் இருக்கும். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்றால் பழைய பாட்டுகளின் ஆதிக்கம் என்று புரிந்துபோகும். 

வீட்டில் ரேடியோ கிடையாது. டேப் ரெக்கார்டரைப் பற்றி யோசனைக்கே இடமில்லை. இங்கேதான் நாங்கள் பாட்டுக் கேட்டு மகிழ வேண்டும். இந்த நிலையில் இவர்கள் எப்படி பாடிப் பழகுகிறார்கள் என்றெல்லாம் யோசித்ததுண்டு. 

நன்றாகப் பாடுகிறார்களா, இசை நன்றாகப் போடுகிறார்களா என்றெல்லாம் கவனிக்க நமக்குக் கூறு பத்தாத்து. அதனால் சைடு லைட்ஸைப் பார்த்து ரசிப்பதுதான். ‘கிட்டு’ என்று ஒரு பாடகர் சூப்பர் ஸ்டார். டோப்பாவும் வைத்துக்கொண்டு அவர் மேடையேறி மைக் பிடித்தாலே விசில் பறக்கும். டீயெம்மெஸ், திருச்சி லோகநாதன், மலேசியா வாசு போன்றவற்றைக் கூட்டி மூன்றால் வகுத்த ஒரு குரல். பாட்டால் இல்லாவிட்டாலும் பண்ணும் பந்தாவால் எங்கள் மனதைக் கவர்ந்திருந்தார். 

ஒரு முறை வாத்தியக்காரர்கள் உருக்கமாக முன்னிசையை வாசித்து நிறுத்த ‘எங்கே நிம்மதி’ என்று எடுக்க வேண்டிய கிட்டு ஏதே யோசனையில் விட்டுவிட்டார். அவ்வளவுதான்… வாத்தியக்காரர்கள் அனைவரும் நிறுத்திவிட்டு இவர் மேல் பாயப் போக, இவர், மைக்கைத் தட்டி ஹலோ ஹலோ ஹலோ என்றார். ஏதோ மைக்தான் வேலை செய்யாததைப் போல பாவலா. ‘ஏ நீ பாடுய்யா. மேடையில ஒனக்கு என்ன நெனப்பு’ என்று மைக்கை அணைக்காமலேயே கத்தினார்கள். நான் பார்த்த முதல் நாயக பிம்பச் சரிவாக அதுதான் இருக்கும். 

இன்னொரு கச்சேரி, வாழ்வா சாவா குழப்பத்தில் நடந்தது. குழப்பம் எனக்கு மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவருக்கும். எது என்ன? ஸ்கைலேப் பூமி மீது விழப்போகிறது. அதுவும் இந்தியா மீது என்று செய்தி பரவியிருந்தது. ஸ்கைலேப் கோளாறாவதற்கு முன்னதாகவே வத்தலக்குண்டு வளர்மதி குழுவினரின் கச்சேரி நிச்சயிக்கப்பட்டு விட்டது. நாமும் பாட்டுக் கேட்கத் தயாராகிவிட்டோம். வேறென்ன செய்வது? பாட்டுக் கேட்டுக்கொண்டே மகிழ்ச்சியாகச் சாவோம் என்று போய்விட்டோம். ‘எஸ்பிபியின் எதிரொலி’ சோமு என்பவர், ‘செங்கரையான் தின்னுருக்க நாயமில்ல’ என்று பாடுகையில் ஸ்கைலேப் மறந்தது. 

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பழைய பாடல்கள்தான் அது போன்ற கச்சேரிகளில் பெரும்பான்மையாக இடம் பெறும். நல்ல ஊக்கமுள்ளவர்கள் இன்னும் எங்கள் ஊருக்கு வந்திராத புதுப் பாடல்களைப் பழகிவந்து பாடுவார்கள். அப்படிப் பல படங்கள் பார்த்திருக்கிறேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆர்க்கெஸ்ட்ரா பார்த்த அனுபவம் இன்னும் நினைவிலிருக்கிறது. முன் வரிசையில் உட்கார்ந்துவிட்டேன். அண்ணாந்துதான் மேடையைப் பார்க்க வேண்டும். 

பாட்டுக் கச்சேரிகளில் லைட்டுகளைப் போட்டு அணைக்கும் ட்ரெண்ட் தாண்டி, டான்ஸும் போடும் ட்ரெண்ட் வந்திருந்தது. மேற்படி ஆர்க்கெஸ்ட்ராவிலோ இந்தக் கால ரிச் கேர்ள்ஸ் போன்ற ஒரு யுவதி குட்டைப் பாவாடை அணிந்து இதயங்களை ஆட்டத் தயாராகிவிட்டாள். கருமாரி அம்மன் கோயில் திருவிழா. நானும் ஒரு தொழிலாளி படப் பாட்டு… ‘ஜிகுஜிகுச்சான் ஜிகுஜிகுச்சான் ஜிகுஜிகுச்சான்’ என்று அவள் போட்ட டான்ஸில் வெலவெலத்துப் போனோம். மேடை டேன்ஸே இப்பிடி இருந்தால் படத்தில் எப்படி இருக்கும் என்று வெளியூர் கிளம்பிப் போய்ப் படத்தைப் பார்த்து துன்பக் கடலில் நீந்தினோம். 

ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு படத்திலும் எவ்வளவு பரவசம். என்னென்ன அனுபவம். இன்றைக்கு ‘ஞாயிற்றுக்கிழமை பாட்டு ரிலீஸு, திங்கட்கிழமை கொஞ்சம் ஃபேமஸு, செவ்வாய்க் கிழமை ஹிட்டு – அவுட்டு, புதன் கிழமை அடுத்த ரிலீஸு என்று அற்பாயுசு பாடலகளைக் கேட்கிறோம். 

காலம் வேறு வேறு காட்சிகளைக் காட்டும்தானே…

Author Image

ரமேஷ் வைத்யா

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர். சிறார் இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ ‘அபாயப்பேட்டை’ போன்றவை அதிகம் கவனம் பெற்ற புத்தகங்கள்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?