The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள் குரு தத் 100

குருதத் 100 #11 காலங்கள் மாறும், சாம்ராஜ்யங்கள் சரியும்

The Talkie by The Talkie
November 1, 2026
in குரு தத் 100, தொடர்கள்
A A
0
Guru dutt
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon பாஸ்கர் சக்தி

 முப்பத்து எட்டு தூக்க மாத்திரைகளை விழுங்கி மூன்று பகல், மூன்று இரவுகள்  மருத்துவமனையில் சுயநினைவின்றிக் கிடந்தார் குருதத். எப்படியோ இம்முறையும் காப்பாற்றப்பட்டு விட்டார்.

இயற்கை மனிதனுக்கு வாழ்வதற்கு ஒரே ஒரு வாய்ப்பினை,ஒரே ஒரு வாழ்க்கையை  வழங்குகிறது. ஆனால் மரணமடைவதற்கு பல தருணங்களையும் , வாய்ப்பினையும் வாழ்க்கை முழுக்க வைத்திருக்கிறது. தற்செயலாகவும், முயன்றும் அதிலிருந்து தப்பித் தப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விபத்து, நோய், அபாயம் எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்கும் விழைவை கொண்டிருப்பதால்தான் நாம் நம் வாழ்வின் ஆண்டுகளை நீடித்தபடி நகர்கிறோம்.

ஆனால் குருதத் சாவிலிருந்து தப்பிக்க விழையவில்லை. வாழ்விலிருந்து தப்பிக்க முயன்று கொண்டிருந்தார்.

இந்த மனநிலை, தற்கொலை முயற்சிக்கு நடுவில்தான்  `சாஹிப், பீபி அவுர் குலாம்’  படம் உருவானது. அந்தப் படமும் கூட ஒரு மகத்தான  வீழ்ச்சியைப் பற்றி பேசும் படம்தான்.

குருதத் உருவாக்கிய படங்களில் ப்யாஸா, காகஸ் கே பூல், சாஹிப், பீபி அவுர் குலாம் ஆகிய மூன்று படங்களும் தனித்துவமானவை. சாஹிப், பீபி அவுர் குலாம் படத்தின் இயக்குனர் அப்ரார் ஆல்விதான். ஆனாலும் குருதத் எல்லாவற்றிலும் உடன் இருந்தார். பாடல்களை அவர்தான் இயக்கினார்.

குருதத் போன்ற ஒரு பேராளுமை தயாரிப்பாளர், ஹீரோவாக இருக்கும் போது அந்தப் படத்தை இயக்குபவருக்கு சில தர்மசங்கடங்களும், நிர்ப்பந்தங்களும் ஏற்படுவது இயல்பு. அது மாதிரியான பல சந்தர்ப்பங்களும், சங்கடங்களும் இந்தப் படத்திலும் நிகழ்ந்தன.ஆனால் குருதத்தின் பெருந்தன்மையான அணுகுமுறை மற்றும் அன்பு காரணமாக அந்த மாதிரியான சந்தர்ப்பங்கள் ரசாபாசம் ஆகாமல் நீர்த்துப் போயின.

அப்ரார் ஆல்வியும் பெரும் திறமைசாலி. ஒரு காட்சி எப்படி வரவேண்டும் என்பதில் அவருக்கு ஒரு கற்பனை இருந்தது. சில காட்சிகளை படமாக்குகையில் இது இப்படி இருக்கலாம் என்று குருதத் சொல்ல, அப்ரார் ஆல்வி என்  மனதில் நான் இந்தக் காட்சியை இப்படியாகக் கற்பனை செய்திருக்கிறேன் என்று சொல்ல, அங்கே இயல்பான முரண்பாடுகள் கிளைத்து எழுந்தன.

ஒரு குறிப்பிட்ட காட்சியில் கேமரா சற்றுத் தாழ்வாக வைக்கப்பட வேண்டும், வஹிதா ரஹ்மான் டயலாக் சொல்கையில் அது சற்றே மேலே உயர்த்தப்பட வேண்டும்,  ஜன்னல்களில் அதிக வெளிச்சம் இருக்க வேண்டும் என்று அப்ரார் ஆல்வி முடிவு செய்கிறார். இதனை பார்க்கும்  குருதத்,  இது சரியாக இருக்காது கேமரா ஐ லெவலில், வஹிதா ரஹ்மானின் கண்களுக்கு நேராக இருக்க வேண்டும், இந்த லைட்டிங்க் சரியில்லை என்று சொல்கிறார்.

இருவருக்கும் முரண்பாடு எழுகிறது. குருதத் சொன்னபடியே காட்சி படம் பிடிக்கப்படுகிறது. அதை முடித்ததும் அப்ரார் சொல்கிறார். “நான் நினைத்த மாதிரியும் இன்னொரு முறை இந்தக் காட்சியை எடுத்து விடலாம். அது என்னுடைய கற்றலுக்காக. என் புரிதலுக்காக “ என்று சொல்லவும், குருதத் சரி என்று சொல்கிறார். அதன் பின் அப்ரார் ஆல்வியின் சிந்தனைப்படியே கேமரா கோணம், லைட்டிங்க் வைக்கப்பட்டு அந்தக் காட்சி மீண்டும் படமாக்கப்படுகிறது.

இரண்டு காட்சிகளையும் ரஷ் தயாரான பிறகு குருதத்தும், அப்ராரும் பார்க்கின்றனர். பார்த்து முடித்து விட்டு குருதத் சொல்கிறார், “ அப்ரார் நீ எடுத்ததுதான் சரி.. அந்த ஷாட்தான் சரியான உணர்வினைக் கொடுக்கிறது. நாம் அதையே வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லி விடுகிறார். யோசித்துப் பாருங்கள். அவர்தான் தயாரிப்பாளர், ஹீரோ, பெரிய இயக்குநர். ஆனால் ஈகோ இல்லாத இந்தப் பெருந்தன்மை குருதத்திடம் இருந்திருக்கிறது. அது மட்டுமல்ல. காட்சிதான் முக்கியம்.அந்தக் காட்சிக்குத் தேவையான உணர்வுதான் பிரதானம். அதனை எடுத்தது அப்ராரா, குருதத்தா என்பதில்லை என்கிற தெளிவு குருதத்துக்கு இருந்ததால்தான் அவர் இப்படி சொல்லி இருக்கிறார்.

அதன் பின் குருதத் பெரும்பாலும் அப்ராரின் இயக்கத்தில் தலையிடவில்லை.

`சாஹிப், பீபி அவுர் குலாம்’ திரைப்படம் வங்காளத்தில் நடக்கிற கதை.  ஒரு சிஸ்டத்தின் வீழ்ச்சியை ஒரு குடும்பத்தின் வழியாகச் சொல்லும் கதை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி , இருபதாம் நூற்றாண்டின் துவக்கம்,பெரும் நில உடமையாளர்களாகிய ஜமீன்தார்களின் ஆதிக்கம் சரியத் தொடங்கியது. பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் செல்வந்தர்கள் நசிந்து புதிய செல்வந்தர்கள் உருவான காலகட்டம். இந்தப் பின்னணியில் ஒரு ஜமீன் மாளிகையின் மனிதர்கள் வழியாக ஒரு காலகட்டத்தின் வீழ்ச்சியையும், அக்கால கட்ட மதிப்பீடுகளின் நசிவையும்,  புதிய மதிப்பீடுகளின் வருகையையும் சொல்கிற ஒரு முக்கியமான பதிவாக `சாஹிப், பீபி அவுர் குலாம்’ திரைப்படம் இருக்கிறது.

இந்தப் படத்தின் கதை பூத்நாத் ( குருதத்) எனும் மனிதனின் பார்வையில் சொல்லப்படுகிறது. மத்திய வயதுள்ள ஒரு பொறியாளனாகிய குருதத் ஒரு அழிந்து போன மாளிகையின் இடிபாடுகளை அகற்றும் பணிக்கு வருகிறான்.  அந்த மாளிகை அவனது இளவயதில் அவன் சில காலம் வாழ்ந்த மாளிகை என்பது தெரிய வர அவன் பார்வையில் கடந்த காலம் விரிகிறது. ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது.

 கிராமத்திலிருந்து வரும் அப்பாவித்தனம் கொண்ட இளைஞன் பூத்நாத். சௌத்ரி குடும்பத்தின் பிரமாண்ட மாளிகையில் ஒரு ஓரத்தில் வசிக்கும் ( ஐம்பது அறுபது அறைகள் கொண்ட பிரமாண்ட மாளிகை அது ) ஆசிரியர் ஒருவரது விருந்தினனாக வேலை தேடி வந்து தங்குகிறான்.  பிரம்ம சமாஜத்தை சேர்ந்த சுவினய் பாபு என்பவரிடம் பணி செய்கிறான்.அவர் மோகினி சிந்தூர் என்கிற ஒரு குங்குமத்தை தயாரிக்கும் கம்பெனி வைத்திருக்கிறார். சுவினய் பாபுவின் மகள் ஜப்பா (  வஹிதா ரஹ்மான்)

சௌத்ரி குடும்பத்தில் அண்ணனும், தம்பியுமாக  இரண்டு முறுக்கு மீசை ஜமீன்தார்கள். ஏகப்பட்ட நிலபுலம் , செல்வம். எனவே புறாப் பந்தயம், குடி, தாசிகளிடம் களியாட்டம் என்கிற வாழ்க்கைமுறையை கைக்கொண்டிருக்கிறார்கள். இதில் இளைய ஜமீன்தாரின் மனைவி, சோட்டி பாஹு (மீனா குமாரி) மிகவும் நல்லவள். ( சோட்டி பாஹு என்றால் இளைய மருமகள்) கணவன் இரவானால் தாசி வீட்டுக்குச் சென்று விடுகிறான்.  ஆனால் தன் கணவன் தன்னிடம் இருக்க வேண்டும் என்று ஏங்குகிறாள் சோட்டி பாஹு. மோகினி சிந்தூரை இட்டுக்கொண்டால் கணவன் அவளுடன் இருந்து விடுவான் என்று நம்புகிறாள். அதனை வாங்கும் பொருட்டு பூத்நாத்தை தன் மாளிகை அறைக்கு வரவழைக்கிறாள். அப்பாவியான பூத்நாத் அவள் அழகில் மிரள்கிறான். அவளிடம்  மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கிறான். அவளுக்கு மோகினி சிந்தூர் கொண்டு போய் கொடுக்கிறான். ஆனால், அந்த குங்குமத்தால் எந்த நற்பயனும் விளையவில்லை. சின்ன ஜமீன்தார் தொடர்ந்து தன் மனைவி சோட்டி பாஹுவை புறக்கணிக்கிறார்.

இதனிடையே ஜப்பாவுக்கும், பூத்நாத்துக்குமிடையே சின்னச் சின்ன சீண்டல்களுடன் கூடிய ஒரு மெல்லிய சினேகம் உருவாகிறது. சோட்டி பாஹுவுக்கும் பூத்நாத்துக்கும் இடையிலான ஒரு மரியாதையான நட்பும் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் சோட்டி பாஹூவிடம், சின்ன ஜமீன்தார் நான் உன்னுடன் இருக்கவேண்டுமானால் நீயும் குடிக்க வேண்டும் , உன்னால் குடிக்க முடியுமா? என்று  கேட்க ( அந்தக் காலகட்டத்தில் ஒரு பெண், அதிலும் மணமான பெண் குடிப்பது என்பது கற்பனைக்கே எட்டாத ஒழுக்கக் கேடு. பாவம் )  அவள் தன் கணவனுக்காக குடிக்கத் துவங்குகிறாள். அவள் மது வாங்கித்தருமாறு பூத்நாத்திடம் கேட்க, கோபத்துடன் முடியாது என்று மறுக்கும் பூத்நாத் அவள் மிகவும் கெஞ்சிக் கேட்டதால் வேறு வழியின்றி மது வாங்கித் தருகிறான். ஆனால் அவள் குடிப்பது தவறு என்று தொடர்ந்து அவளிடம் சொல்லியபடி இருக்கிறான்.

 இதனிடையே பூத்நாத் வேலைக்காக சிலகாலம் வெளியூர் செல்ல வேண்டி வருகிறது.

இந்த இடைவெளியில் ஜமீன் குடும்பம் மெல்ல மெல்ல வீழ்ச்சியின் பாதையை நோக்கிச் செல்கிறது. சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதற்காக ஜமீன்தார் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டு சொத்துகளை இழக்கிறார். கணவனுக்காக குடிக்க ஆரம்பித்த சோட்டி பாஹு குடிக்கு அடிமையாகிறார். அவளது கணவன்  பக்கவாதம் வந்து படுக்கையில் வீழ்கிறான்.

பூத்நாத் திரும்பி வருகிறான். உடல் நலக்குறைவில் இருக்கும் சுவினய் தன் மகள் ஜப்பாவை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.  உள்ளுக்குள் காதலுடன் இருக்கும் பூத்நாத்தும், ஜப்பாவும் உடைந்து போகின்றனர்.

இதனிடையே சிறிய வயதிலேயே பூத்நாத்துக்கும் , ஜப்பாவுக்கும் திருமணம் நடந்திருப்பது தெரிய வருகிறது. சுவினய் இறந்து போகிறார். ஜப்பா தந்தை நிச்சயித்த மாப்பிள்ளையைப் புறக்கணித்து அனுப்புகிறாள். பூத்நாத்துடன் இணைகிறாள்.

இதனிடையே  சோட்டி பாஹு பூத்நாத்தை அழைக்கிறாள். தன் கணவனின் உடல் நலம் சரியாவதற்காக ஒரு சாமியாரைப் பார்க்க வேண்டும் என்றும், தன்னுடன் துணைக்கு வருமாறும் பூத்நாத்தை அழைக்கிறாள். இருவரும் சாரட் வண்டியில் செல்கின்றனர். இதனைப் பார்த்து கோபம் அடையும் பெரிய ஜமீன்தார் அவர்களை கொல்வதற்கு அடியாட்களை அனுப்புகிறார். அவர்களால் பூத்நாத் தாக்கப்பட்டு மயக்கமடைகிறான்.  சில தினங்கள் கழித்து கண் விழிக்கும் பூத்நாத்துக்கு சோட்டி பாஹுவின் கணவன் இறந்து போனது தெரிய வருகிறது. சோட்டி பாஹு எங்கே என்று கேட்கையில் “ சோட்டி பாஹு எங்கே போனாள், அவளுக்கு என்ன நேர்ந்தது?   என்றே தெரியவில்லை என்று வேலையாள் சொல்கிறான்.

ஃப்ளாஷ் பேக் முடிகிறது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அந்த ஜமீன் மாளிகையின் இடிபாடுகளை தனது குழு அகற்றிக் கொண்டிருப்பதை பூத்நாத் வேதனையுடன் பார்க்கையில் வேலையாட்கள் இடிபாடுகளைத் தோண்டுகையில் ஒரு உடல் கிடப்பதாக ஓடி வந்து சொல்கிறார்கள். ஓடிப்போய் பார்க்கிறான் பூத்நாத். அந்த எலும்புக்கூட்டின் கையிலிருக்கும் வளையல் பூத்நாத்துக்கு பரிச்சயமானது. அது சோட்டிபாஹுவின் எலும்புக் கூடுதான் என்பதை அறிகிறான். துயரத்தால் தேம்புகிறான். அவனை அவனது மனைவி ஜப்பா அழைத்துச் செல்வதுடன் படம் முடிகிறது.

 பெரும் இலக்கியங்கள், படைப்புகள் பேசும் முக்கியமான ஒரு அம்சம் கால மாற்றம்.  ஒரு காலகட்டத்தின் மதிப்பீடுகளும், வாழ்வு முறையும் வீழ்ந்து புதிதாக மற்றொன்று உருவாகும் விதம். அதனை எதிர்கொள்ளத் திணறும், குழம்பும் மனிதர்களின் இயல்பு. இவற்றைப்  பல படைப்புகள் பேசி இருக்கின்றன. அதனாலேயே அவை முக்கியப் படைப்புகளாகவும் திகழ்கின்றன.

மனிதவாழ்வு தன்னைப் புதுப்பித்துக் கொண்டே நகர்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதியதைக் கண்டு குழம்புகிறது. அஞ்சுகிறது. பழசை இழப்பதின் வேதனையும், புதியதை ஏற்றுக் கொள்வதில் தயக்கமும் மனித மனதின் இயல்பாக இருக்கிறது.

`சாஹிப், பீபி அவுர் குலாம்’ திரைப்படத்தின் பின்னணியில் காட்டப்படும் மாற்றம் மிகப் பெரியது. இந்தியா சுதந்திரத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலம். தேசம் ஒரு அரசியல் ரீதியான மாற்றதுக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளை அது. கலாச்சார ரீதியிலும் சமூகம் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. பிரம்ம சமாஜம் போன்ற அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. அந்தக் காலகட்டம் இந்தத் திரைப்படத்தில் வெகு சிறப்பாகப் பதிவாகி இருக்கிறது.

பெண்களை ஒரு உடைமைப் பொருளாக நினைக்கும் சிந்தனை இந்தப் படத்தில் வரும் ஜமீன்தார் போன்ற மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. “சௌத்ரி வம்சத்து ஆண்களின்  ஆசையைத் தீர்க்க மனைவியால் முடியாது அது தாசியால்தான் முடியும் “ என்று சோட்டி பாஹுவிடம் சொல்லும் சின்ன ஜமீன்தார். பணக்காரன், ஆண் என்கிற இரண்டு தகுதிகளைத் தவிர அன்போ, பரிவோ, அக்கறையோ எதுவுமற்ற ஒருவனை கணவனாக அடைந்து விட்ட ஒரே காரணத்துக்காக,  கடவுளாக எண்ணி வாழும் சோட்டி பாஹு  போன்ற பாத்திரங்கள் அந்தக் காலகட்டத்தையும், அப்போதிருந்த மதிப்பீடுகளையும் பிரதிபலிக்கின்றன.

மதிப்பீடுகள் என்னவாக இருந்தாலும் மனித மனம் என்பது அடிப்படையில் ஆசாபாசங்கள் கொண்டதுதான். அது சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி தன்னை தணிக்கை செய்தபடிதான் இயங்குகிறது. ஆனாலும் ஆழ்மனதில் வேட்கைகள் இல்லாமலிருக்க  வாய்ப்பில்லை.பூத்நாத், சோட்டி பாஹு இந்த இருவருக்குமான நட்பு, அதனை வெறும் நட்பு என்று மட்டும் வரையறுத்து விட முடியாது. தன்னை விட பெரிய அந்தஸ்தில், ஒரு மகாராணி  போல் அமர்ந்திருக்கும் சோட்டி பாஹுவை முதல் முதலில் பார்க்கும் அந்த நொடியில் அவள் அழகு பூத்நாத்தை பிரமிப்பில் ஆழ்த்தும் அதே நேரம். அவள் தன்னால் ஒருபோதும் அணுகி விட முடியாதவள் என்கிற உணர்வும் பூத்நாத்துக்கு எழுகிறது. 

அதே போல் கணவன் தன்னுடன் இருக்க வேண்டும். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று சோட்டி பாஹு சொல்லும் இடத்தில் அவளது பாலியல் வேட்கை மிக மெல்லியதாக வெளிப்படுகிறது.

`சாஹிப், பீபி அவுர் குலாம்’  படம் முழுக்க பூத்நாத்துக்கும், சோட்டி பாஹுவுக்குமான இந்த நட்பு அல்லது உறவு மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஒரு ஆணின் அன்பு கிடைக்காமல் ஏங்கும் பெண், வசீகரமான, அக்கறை கொண்ட ஆண்  இந்த இருவருக்குமிடையில் முகிழ்க்கும் ஒரு உறவை இந்தப் படம் பேசுகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தின் வரம்புகளை மீற முடியாத ஒரு உறவு இது.  சோட்டி பாஹு மீது கொண்ட அக்கறையால் அவளை தன் எல்லையை மீறி பூத்நாத் கோபிக்கும் இடம், கடிந்து கொள்ளும் இடம், அவள் கையைப் பற்றி குடிக்காதே என்று சொல்லும் இடம் போன்ற தருணங்கள் முக்கியமானவை. அந்த இடத்தில் அவள் ஒரு ஜமீந்தாரிணி , இவன் ஒரு சாமான்யன் என்பதை எல்லாம் கடந்து அன்பும், அக்கறையும் கொண்ட ஆணாக பூத்நாத் வெளிப்படுகிறான். அவள் அவனிடம் , “ என்கிட்ட இப்படிப் பேச உனக்கு என்ன தைரியம் ?” என்று வெளியே சொன்னாலும் உள்ளுக்குள் அவள் அவனிடம் கோபம் கொள்வதில்லை.

இருவருக்கும் இடையில் அடிநாதமாக ஓடும் இந்த ஈர்ப்பு.  அதனை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் இந்தப் படத்தை மிகவும் ரசிக்க வைக்கிறது.

காலம் நிகரற்றது. காலத்தின் ஓட்டத்தில் எதுவுமே நிலைத்து நிற்பதில்லை என்னும் பேருண்மையை சொல்லும் படம்தான் `சாஹிப், பீபி அவுர் குலாம்’    அதனை மனிதர்களின் உணர்வுகளின் வழி சிறப்பாக சொல்கிறது.

ஜமீன் மாளிகையில் இருக்கும் கடிகாரங்களை பராமரிக்கும் ஒரு வயதான பாத்திரம் இந்தப் படத்தில் வருகிறது.  சற்றே மனநிலை பிறழ்ந்தவர் போல் பேசும் அவரிடம் பூத்நாத் மாட்டிக் கொள்கிறான். அது ஒரு அருமையான காட்சி. சுற்றிலும் கடிகாரங்கள் சூழ்ந்திருக்க அந்த  மனிதன் பூத்நாத்திடம் பேசுகிறான்.

“நான் காலத்தை  பராமரிப்பவன் ( time keeper ).  இந்தக் கடிகாரத்தைப் பார்த்தாயா? இது மாயைகளை உடைக்கிறது. மாபெரும் காலத்தை நொடிகளாக, நிமிடங்களாக, மணிகளாக பிரிக்கிறது. இதோ…காலத்தின் டிக் டிக்  ஓசையைக் கேள். மாயையை உணர்ந்து கொள்.    சாம்ராஜ்யங்கள் நிலைக்காது. அரண்மனைகள் நீடிக்காது . இந்த மாளிகைகள் தாக்குப்பிடிக்காது. நான் சொல்வது உண்மை . காலம் அதைச் செய்யும் “     அப்ரார் ஆல்வியின் கூர்மையான வசனங்களுக்கு உதாரணம் இந்தக் காட்சி. இந்த ஒரே காட்சியில் இந்தத் திரைப்படத்தின் அடிநாதம் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுகிறது.

செட்டுகளிலும், காட்சி அமைப்பிலும், ஒளிப்பதிவிலும், இசையிலும் பெரும் கவனத்துடனும், அழகுணர்ச்சியுடனும் உருவாக்கப்பட்ட திரைப்படம்  `சாஹிப், பீபி அவுர் குலாம்’.

மூர்த்தி வழக்கம் போல தனது இருளும் ஒளியும் கலந்த ஒளிப்பதிவில் வித்தைகளைச் செய்திருந்தார். ஒரு பாடலில் வஹிதா ரஹ்மான் முகத்தில் இருளும், ஒளியும் மாறி மாறித் தோன்றும் காட்சியும், மற்றொரு பாடலில் நடனமாடும் பிரதானமான நடனமங்கை வெளிச்சத்தில் சுழன்று ஆட, பின்னணியில் ஆடும் துணை நடன மங்கையர் எல்லாம் அவர்கள் மேல் வெளிச்சமின்றி நிழல் உருவங்கள் போல் ஆடும் காட்சியும் இன்றும் விமர்சகர்களாலும் , ஒளிப்பதிவாளர்களாலும் குறிப்பிடப்படும் காட்சிகள்.

“பியா ஐஸோ ஜிமா மே “ என்று துவங்கும் பாடலை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். (பாலியல் விழைவை (Eroticism ) காட்சிப்படுத்துவதற்கு ஒரு அழகியல் உணர்ச்சி தேவை. நுட்பமான ரசனையும், கவனமும் இல்லாவிடில்  அது ஆபாசமாகப் போய்விடக்கூடிய சாத்தியமிருக்கிறது.) மீனாகுமாரி ( சோட்டி பாஹு ) கணவன் தன்னைத் தேடி வருவான் என்கிற எண்ணத்திலும், ஏக்கத்திலுமிருக்க, பணிப்பெண்கள் அவரை அலங்கரிக்க, அவள் தயாராகும் பாடல் காட்சி அது . தலைக்குளித்த கூந்தலை மிகவும் நெருக்கமான க்ளோஸ் அப்பில் காட்டும் கேமரா அப்படியே மேலே சென்று நிமிர்ந்து ஏக்கத்துடன் மேலே பார்த்திருக்கும் அவள் முகத்தை பக்கவாட்டில் காட்டுகிறது. பாடல் முழுக்க அவள் அலங்கரிக்கப்படும் காட்சிகள்.  க்ளோஸ் அப் ஷாட்களை வெகு அழகாக  உபயோகிப்பதில் குருதத்தின் அழகுணர்ச்சி இணையற்றது. பாடல்களை படம் பிடிப்பதில் குருதத் மன்னன் என்பதற்கு இந்தப் பாடலும் சாட்சி.                        ( இந்தப் பாடலைப் பார்க்கையில் இந்தப் படம் வெளிவந்த பின் வெளியான நம்முடைய திருவிளையாடல் படத்தில் வரும், `பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’ பாடல் நினைவுக்கு வருகிறது . இன்ஸ்பிரேஷன் போல )

 திருமணமான ஒரு பெண், அதுவும் சின்ன ஜமீன்தாரின் மனைவி, அவள் இன்னொருவனுடன் நட்பாக இருப்பதே அந்தக் காலகட்டத்தில் ஏற்க முடியாத ஒன்று. மூச்சுக்கு மூச்சு தன் கணவன் மீதான பக்தியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் அவளுக்கும், அவள் மீதான அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் குருதத்துக்குமான நட்பு ஓரிடத்தில் அதன் இறுக்கமான வரம்பை சற்றே நெகிழ்த்தும் ஒரு காட்சி படத்தில் வருகிறது.

க்ளைமாக்ஸின் நெருக்கத்தில் படுக்கையில் கிடக்கும் கணவனை காப்பாற்ற ஒரு சாமியாரை தேடிச் செல்கிறாள் சோட்டி பாஹு. உடன் பூத்நாத். இருவரும் மூடப்பட்டிருக்கும் சாரட் வண்டியில் பயணிக்கின்றனர். அது ஒரு அந்தரங்கமான தருணம். அதில் மனம் விட்டுப் பேசும் சோட்டி பாஹு, ஆறுதல் வேண்டி பூத்நாத்தின் மடியில் படுத்துக் கொள்கிறாள். இப்படி படம் எடுக்கப்பட்டு ரிலீஸும் ஆகி விட்டது.

ஆனால் ஜனங்கள் இந்த விஷயத்தை ஏற்கவில்லை. சோட்டி பாஹு , பூத்நாத்தின் மடியில் தலை சாய்க்கும் அந்தக் காட்சி கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. தியேட்டர்களில் ரசிகர்கள் கோபத்துடன் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் தகவல்கள் குருதத்துக்கு வந்தன. அவரே தியேட்டர்களில் போய் பார்த்தார். ரசிகர்களின் சென்டிமென்ட்டை அவர் மதித்தார்.  உடனடியாக அந்தக் காட்சியை ரீ ஷூட் செய்தார். எல்லா ப்ரிண்ட்டுகளையும் வரவழைத்து , மடியில் தலைசாய்க்கும் அந்தக் காட்சியை நீக்கி புதிய காட்சியை வைத்து விட்டார். இப்போது படம் எதிர்ப்புகளின்றி நன்கு ஓடியது.

இப்போது நாம் பார்க்கும் திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பது மாற்றப்பட்ட அந்தப் புதிய காட்சிதான். ஆனால் அந்தக் காட்சியும் கூட வெகு அருமையான ஒன்று.

இரவு நேரம். ஆறு ஓடிக்கொண்டிருக்க, ஆற்றில் ஒரு  படகு பயணிகளுடன் வெளிச்சமாக பயணிக்கிறது. அதனை ஒட்டி கரையில் பூத்நாத்தும், சோட்டி பாஹுவும் பயணிக்கிற சாரட் வண்டி இணையாகப் பயணிக்கிறது. அந்தக் காலத்தில் இப்படி ஒரு காட்சியை யோசித்து அழகாக படம்  பிடித்திருக்கிறார்கள்.

அருகருகே அமர்ந்து இருவரும் பேசியபடி பயணிக்கிறார்கள்.

“ சோட்டி பாஹு”

“ம்”

“சோட்டி பாபு ( சின்ன ஜமீன்தார்) உடல் நிலை எப்படி இருக்கிறது ?”

“ அவரைப் பற்றித்தான் எனக்கு கவலையா இருக்கு. என் உயிரை எடுத்துகிட்டு கடவுள் அவரை காப்பாத்தட்டும். நான் இறந்ததும் என்னை ரொம்ப அழகா அலங்காரம் பண்ணனும் கேக்குதா பூத்நாத்?”

“ம்”

“ என்னை ரொம்ப கம்பீரமா அலங்காரம் பண்ணி, மை தீட்டி,குங்குமம் வைக்கணும்.   ஒரு தர்மபத்தினி இறந்து போயிட்டான்னு எல்லாரும் சொல்லணும்”

“ இப்படியெல்லாம் பேசாதீங்க சோட்டி பாஹு”

“இதிலதான் என் ஆத்மாவோட சந்தோஷமே இருக்கு. இதுலதான் . கடவுள் என் உயிரை அவருக்கு கொடுக்கட்டும்”

என்று சொல்லும் சோட்டி பாஹு சற்று அமைதிக்குப் பிறகு அழைக்கிறாள்.

“பூத் நாத்”

“ம்”

“ நீ என்னை புரிஞ்சுகிட்ட மாதிரி வேற யாருமே என்னைப் புரிஞ்சுக்கலை…..யாருமே ”

கொஞ்சம் அமைதிக்குப் பின்

“ நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கலை”

“கல்யாணமா?”

“ம். நான் சந்தோஷமான ஒரு கல்யாண வாழ்க்கைக்கு எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா? எனக்கு ஒரு மருமகள் வரணும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா? எனக்கு ஒரு மருமகளைக் கொடு..நான் அவளை சந்தோஷமாப் பாத்துக்குவேன்”

“ எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு சோட்டி பாஹு”

என்று பூத்நாத் சொன்னதும் வியப்புடன் “ எப்போ?” என்று கேட்பாள் சோட்டி பாஹு.

(அப்போதுதான் அவர்கள் ஜமீன்தாரின் ஆட்களால் தாக்கப்படுவார்கள்.)

பூத்நாத், சோட்டி பாஹு இருவருக்கிடையிலான உறவு பரஸ்பர அன்பினாலும், அக்கறையாலும் விளைந்தது. தன்னைப் புரிந்து கொண்ட ஒரு ஆணின் மடியில் தலைசாய்க்கும் அந்தக் காட்சி, ரசிகர்கள் அடைந்த , சமூகம் அடைந்த அதிருப்தியின் காரணமாக மேற்சொன்ன உரையாடல்களுடன் மாற்றப்பட்டு விட்டது.

ஆனாலும் கூட கூர்மையான பார்வையாளனால் இந்த உறவின் தன்மையை உணர முடியும்.

இன்னொரு விஷயமும் இந்தத் திரைப்படத்தில் நடந்தது. படத்தில் மேலே சொன்ன அந்தக் காட்சிக்கு எதிர்ப்பு வந்தது மட்டுமல்ல. படம் சரியாகப் போகவில்லை எனவே க்ளைமாக்ஸை மாற்றி விடலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அதாவது சோகமான முடிவை மாற்றி சின்ன ஜமீனுக்கு உடல் நிலை சரியாகி சோட்டி பாஹுவும் அவரும் நல்லபடியாக வாழ்ந்தார்கள் என்பது போல் காட்சிகளை ஷூட் செய்து க்ளைமாக்ஸை மாற்றி விடலாம் என்பதுதான் ஐடியா.அதற்காக காட்சியை மாற்றி எழுதுகையில் குருதத் வந்தார்.

“வேண்டாம்.  படத்தின் முடிவை மாற்ற வேண்டாம்.  இந்தப் படத்தை பார்க்க யாருமே வராவிட்டாலும் சரி. லட்சக்கணக்கில் நஷ்டம் வந்தாலும் சரி. எனக்கு கவலை இல்லை. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் இதுதான். இது ஒரு வித்தியாசமான கதை. ஜனங்கள் இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் நஷ்டம் அவர்களுக்குத்தான், எனக்கில்லை. ஒருக்காலும் இந்தப் படத்தின் முடிவை மாற்ற மாட்டேன்.”

ஜனங்களின் சென்டிமென்ட்டை மதித்து சாரட் வண்டிக் காட்சியை மாற்றிய அதே குருதத் படத்தின் முடிவை மாற்ற மறுத்து விட்டார். ஒரு படைப்பாளியாக எங்கே நெகிழ்ந்து கொடுக்க வேண்டும், எதில் பிடிவாதமாக இருக்கவேண்டும் என்கிற ஒரு தீர்மானம் அவருக்கு இருந்தது.

காட்சிகளை மாற்றி திருத்தம் செய்த பின்னர், பத்திரிகைகளும், விமர்சகர்களும் இந்தப் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்று கொஞ்சம் பதட்டத்துடனேயே இருந்தார் குருதத்.

பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன. “ வணிக சினிமாவின் எல்லைக்குள் இருந்தபடியே அற்புதமாக எடுக்கப்பட்ட திரைப்படம். பல்வேறு கதாபாத்திரங்களின் உணர்வுகள் நேர்த்தியாகப் பின்னப்பட்டிருக்கின்றன. பிமல் மித்ரா எழுதிய மிகவும் சிக்கலான அமைப்புக் கொண்ட நாவலை மிகவும் சிறப்பான படமாக மாற்றி இருக்கின்றனர்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியது.

வசூல் ரீதியாக  பெரிய வெற்றி இல்லையென்றாலும் விமர்சன ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் பெரும் பாராட்டுகளையும், புகழையும் பெற்றது  `சாஹிப், பீபி அவுர் குலாம்’.

 சிறந்த திரைப்படம், சிறந்த டைரக்‌ஷன், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய மூன்று  ஃபில்ம்ஃபேர் விருதுகளை வென்றது `சாஹிப், பீபி அவுர் குலாம்’

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது.

ஆஸ்காரில் பங்கு பெறத் தேர்வானது. பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

வினோதம் என்னவென்றால் குருதத் இத்தனை படங்களை இயக்கியும் கூட  சிறந்த இயக்குநருக்கான விருதை அவர் வென்றதில்லை. ஆனால் தன் வாழ்நாளில் ஒரே ஒரு  படத்தை  மட்டும் இயக்கிய அப்ரார் ஆல்விக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது.

                                                                                            ( தொடரும் )

Author Image

பாஸ்கர் சக்தி

திரைப்பட இயக்குநர். எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
K.R.Ramasamy

நேர்கையில் நிகழும் சொற்பதம் – கே.ஆர். ராமசாமி

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?