The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள்

ஸ்டார்ட் கேமரா 13 பி.சி ஸ்ரீராம்

The Talkie by The Talkie
November 1, 2026
in தொடர்கள், ஸ்டார்ட் கேமரா
A A
0
P.C.Sreeram
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon அகிலா ஸ்ரீதர்

தம் தனித்திறமையால் பிரகாசிக்கும் திறமையாளர்கள் நிறைய உண்டு. ஆனால் தங்களது மேதமையால், கூர்மையான திறமையால் ஒரு புதிய பாணியை உருவாக்கி முன்மாதிரியாகத் திகழ்பவர்கள்  மிகச்சிலரே. அவர்கள் அதுவரை நிலவிய இலக்கணங்களை உடைத்தனர். புதிய இலக்கணத்தை உருவாக்கினர். புதிய பார்வையை, அணுகுமுறையை உருவாக்கி அதை நிலைபெறச் செய்து அடுத்த தலைமுறைக்கும் அதனைக் கடத்தினர். அப்படியான ட்ரென்ட் செட்டர்களில் மிக முக்கியமானவர் பி.சி.ஶ்ரீராம். வெளிப்புறக் காட்சிகளில் பசுமையான மலைகளையும், சூரியோதத்தையும், கடல் அலைகளையும் பார்த்து அருமையான கேமரா என்று ரசிகர்கள் வியந்து கொண்டிருந்த பொழுது  வீட்டுக்குள் படம் பிடிக்கும் காட்சிகளிலும் ஒரு கவித்துவமான அழகைக் காட்ட முடியும் என்று தனது கேமரா கோணங்கள், லைட்டிங்க் மூலம் நிரூபித்தார் பி.சி.ஶ்ரீராம்.  மௌனராகம் திரைப்படத்தில் வரும் இன்டோர் காட்சிகளின் ஒளியழகும், துல்லியமும், கவித்துவமும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசிக்க வைத்தன.

1986 இல் மௌனராகம் வெளியானபோது, இந்தப் படத்தில் வரும் சந்திரகுமார் போல் ஒரு கணவர் வர வேண்டுமென்று கல்யாண வயதிலிருந்த நிறைய பெண்கள் பிரார்த்தனை செய்தனர்.    நடிகர் மோகன் அந்தக் கதாபாத்திரத்துக்கு முழுவதுமாகப் பொருந்திப் போனார். ரேவதி மழைத் திவலைகளோடு சாலையில் ஆடிப் பாடிய பாடல் புதுவிதமான அழகியலோடு இருந்தது. அதுவரை நாம் பார்த்த கோணங்களிலிருந்து மாறுபட்டு யமுனை ஆற்றின் கரையிலிருந்து தாஜ்மஹால் புதுவிதமாக இப்படத்தில் காட்டப்பட்டது. கார்த்திக் அறிமுகமாகும் காட்சியில் நண்பர்களோடு வேகமாக நடந்து வருவதை கீழிருந்து லோ ஆங்கிளில் காண்பித்து ஒரு பரபரப்பைக் கூட்டியிருப்பார்கள். அதே கார்த்திக்  சுடப்பட்டு இறக்கும் காட்சியில் டாப் ஆங்கிளில் காண்பித்திருப்பார்.  கார்த்திக் வரும் காட்சிகளில் ஒளியமைப்பு துள்ளலாக பிரகாசமாக இருக்க, மோகனுக்கும் ரேவதிக்குமான காட்சிகள் சற்றே இருட்டும், நிழலுமாக இருக்கும். 

திவ்யா, சந்திரகுமார் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், அவர்களுக்கிடையே இருக்கும் ஓர் உணர்வுப்பூர்வமான இடைவெளியை வெளிப்படுத்தும் வகையில் அறைகளின் அமைப்பு, கதவுகள், ஜன்னல்கள், கதாபாத்திரங்கள் நிற்கும் இடம் ஆகியவை ஃபிரேமில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  அந்த வீட்டை ரேவதிக்கு மோகன் அறிமுகப்படுத்தும்போதே, கேமராவும் நம்மை அந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று விடுவதால் அவர்களுக்கிடையிலான உணர்வுப் போராட்டத்திற்கு நாமும் ஒரு பார்வையாளராகி விடுகிறோம். நிலாவே  வா பாடலில் மோகன் நடந்து கொண்டே செல்ல, ரேவதி பின்தொடர்ந்து செல்வார். கண்ணாடியில் இருவரும் சந்திக்கிற காட்சி, கார்த்திக்கைப் பற்றி சொல்லி முடித்து ரேவதி அழுது கொண்டே சுவரில் சாய்ந்து கீழிறங்கும்போது  அவரும், அவருடைய நிழலும் என்றிருப்பது என கேமராவே பாதி கதையை நமக்குச் சொல்லிவிடும்.

அப்போதைய பள்ளிகளின் ஆண்டுவிழாக்களில் தவறாமல் இடம் பெற்ற ‘சின்ன சின்ன வண்ணக் குயில்’ பாடலில் குதிரை வண்டியின் சக்கரங்களோடு சேர்ந்து கேமராவும் நகர்வது அதிசயமாகவும் அழகியலோடும் பார்க்கப்பட்டது.  உணர்வுப்பூர்வமாக அவர்கள் இருவரும் பேசும் காட்சிகளில் பேக்லைட்டிங்கை ஒரு பரிசோதனை முயற்சியாகவே கையாண்டிருப்பார்கள். 

காதலையும் திருமண வாழ்க்கையில் ஏற்படும் மனநெருக்கடிகளையும் குறைவான வசனங்களோடும்,  புதுவிதமான ஃபிரேம்களோடும் காட்சிகள் வழியாகவே பேசிய  படம் “மௌனராகம்.”   இயக்குநர் மணிரத்னமும், ஒளிப்பதிவாளர் பி.சி. ஶ்ரீராமும் கூட்டணியாக இணைந்த முதல் படம்.

பாடல்களில் கேமரா கதாபாத்திரங்களின் முகபாவனைகளையும் அசைவுகளையும் பின்தொடர்வதோடு, அவர்களைச் சுற்றியிருக்கும் இட த்தையும்  ஒரு கதாபாத்திரமாக மாற்றுகிறது.

சிறு வயதில் எல்லோரையும் போலவே பி.சி. ஶ்ரீராம் பள்ளியில் சேர்ந்தாலும், அவருக்குப் படிக்கவே பிடிக்கவில்லை. குறிப்பாக பரீட்சை என்றாலே வேப்பங்காய் தான்.  “சிறு வயதில் நான் ஒரு அலைக்கழிக்கப்பட்ட குழந்தை” என்று பி.சி.யே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். தோட்டக்கலை நிபுணரான அவருடைய தாத்தா தனது பணியின் ஒரு பகுதியாக செடிகளையும், தோட்டத்தையும் புகைப்படமெடுக்கும் ஸ்டில் ஃபோட்டோகிராஃபராக இருந்தார். அவர்தான் ஶ்ரீராமுக்கு ஒரு கேமராவைக் கொடுத்தார். அதை வைத்துப் படமெடுக்கத் தொடங்கிய போது, அதுவரை அவர் அறியாத  ஓர் உணர்வை, மன நிம்மதியை அது அவருக்குக் கொடுத்தது.

அதுவே அவரைத் திரைப்படக் கல்லூரியில் சேர்த்தது. அங்கு அவர் பார்த்த திரைப்படங்கள்  நிறையக் கற்றுக் கொடுத்தன.  அவர் பார்த்த The 400 Blows படம் அவருடைய சுயசரிதை போலிருந்ததாக அவரே கூறியிருக்கிறார்,  கல்லூரியில் படிக்கும்போது ஒவ்வொரு நாள் மாலையிலும் சத்யா ஸ்டுடியோவிற்குச் சென்று அங்கு நடக்கும் படப்படிப்புகளைப் பார்ப்பது அவருடைய வழக்கமாக இருந்தது.  திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களோடு பெங்களூர் சென்று உருவாக்கிய அவரது முதல் படம் வெளிவரவேயில்லை.

P.C Sreeram

யாரிடமும் உதவியாளராக இருந்திராத அவரது முதல் திரைப்படம் “வா இந்தப் பக்கம்,”   தொடர்ந்து மௌலியோடு இன்னும் இரண்டு படங்களையும் செய்தார்.  ஆனால் அந்தப் படங்களில் புதுமையாக எதையும் செய்து பார்க்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கவில்லை.

நடிகர் பிரதாப் போத்தன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் “மீண்டும் ஒரு காதல்கதை.”  ஊட்டியை மிக அழகாகக் காட்டியதோடு,  கள்ளங்கபடமில்லா இரு உள்ளங்களுக்கிடையிலான காதலை மிக அழகாக காட்சிப்படுத்தும் வாய்ப்பும்  பி.சி. க்குக் கிடைத்தது.  “அதிகாலை நேரமே” பாடல் அதற்கு ஓர் உதாரணம்.   .

அந்தப் படத்தைப் பார்த்த  இயக்குநர் ஃபாசில் பூவே பூச்சூடவா படத்திற்கு பி.சி அவர்களை அழைத்தார்,   பாட்டிக்கும் பேத்திக்குமான பாசப் பிணைப்பைக் கொண்ட மலையாளப் படம் தமிழில் ‘பூவே பூச்சூட வா’ என்ற பெயரில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்று, தமிழகத்தில் நதியாவை இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாற்றியது.  நதியா பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஒரு குருவியைத் தொடரும் கேமரா,  சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதா என்று நதியா பாடும்போதே சைக்கிளைத் தொடர்ந்து ஊரை நமக்குச் சுற்றிக் காட்டும் கேமரா, பாட்டிக்கும், பேத்திக்குமான உணர்வுபூர்வமான தருணங்களை வெளிப்படுத்துகிற இடங்கள் என ஶ்ரீராமின் கேமரா ஒரு கவிதையாக செயல்பட்டிருக்கும். 

அதன்பின் மணிரத்னத்துடன் இணைந்தார்  ஶ்ரீராம். இவர்களின் அடுத்த படைப்பான ‘நாயகன்‘ பல வழிகளில் ஒரு புதிய பாதையை அமைத்தது.  நாயகன்  படம் மூலம்  மணிரத்னம் தமிழ்த் திரையுலகில் தனது முத்திரையைப் பதித்தார் என்றால், அப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்ற பி.சி-க்கு அதுவே முதல் பெரிய அங்கீகாரமாக அமைந்தது.

படத்தின் துவக்கக் காட்சியிலேயே அப்பாவைத் தேடி ஓடி வரும் சிறுவனைப் பின்தொடர்கிற கேமரா, அவன் மணலில் சரிந்து விழுந்து போலீஸில் சிக்கிக் கொள்ளும் வரை காட்சிப்படுத்தி, ஏதோ ஒன்று நிகழப் போகிறதென்கிற பதற்றத்தை நமக்குக் கொடுத்து விடும்,

கமலின் ஆரம்பக் காட்சிகள் செஃபியா டோனிலும், வேலு நாயக்கரான பின்னர் வரும் காட்சிகள் பிரகாசமாகவும் காண்பிக்கப்பட்டிருக்கும்.  வேலு நாயக்கர் ஒரு குடும்பத் தலைவராகவும், பின்னர் அதிகாரம் மிக்க மனிதராகவும் மாறும்போது கமல் தனது நடிப்பில் வித்தியாசம் காட்டியிருப்பது போலவே பி.சி.யும் தனது  ஒளியமைப்பில் மாற்றங்களைக் காட்டியிருப்பார்..  கமலின் முகத்தில் ஒளி விழும் கோணம் மாறுவதன் மூலம், அவருடைய வயது மாற்றத்தை மட்டுமல்லாமல், வாழ்க்கையில் அவர் அடையும் நிலைகளையும் உணர்த்தியிருக்கிறார் ஸ்ரீராம். இதனால் ஒரே கதாபாத்திரத்தின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்த முடிகிறது. 

நான் சிரித்தால் தீபாவளி பாடல் முடிந்ததும், கமல் ஓர் அறைக்குள் நுழைவார், அந்த அறையிலிருக்கும் கட்டிலின் மரச்சட்டங்கள் வழியாக அவரைக் காண்பித்திருப்பார்கள். கட்டிலின் பின்னிருந்து பார்க்கும் சரண்யாவின் பாய்ண்ட் ஆஃப் வ்யூ அது. சரண்யாவின் குரல் மட்டும் கேட்க, கமல் சட்டையைக் கழற்றிக் கொண்டே திரும்பிப் பார்ப்பார் அங்கிருக்கும் கண்ணாடியில் அது தெரியும். பேசிக் கொண்டே கொசு வலைக்கு அந்தப் புறமிருந்து இந்தப் பக்கம் வருவார், அப்போது தான் கமலின் தோள் வழியாக சரண்யாவை காட்டியிருப்பார்கள்.. முதன்முதலாக அப்போது தான் கமல் சரண்யாவைப் பார்ப்பார். ஒரு அறைக்குள், கட்டில்  மற்றும் கொசுவலை இவற்றினூடே இந்த இருவருக்கான உரையாடல், அந்த மனநிலை ஆகியவற்றைக் கம்போஸ் பண்ணி இருக்கும் விதம் அருமையானது. 

காலையில் கண் விழித்து  கமல் கதவைத் திறக்க சூரிய ஒளி உள்ளே வரும். சோம்பல் முறித்துக் கொண்டே சரண்யாவைத் திரும்பி பார்க்க சூரிய ஒளி அவர் பின்னாலிருந்து கசிந்து முன்புறம் வரும். அவளை ஒளி தொந்தரவு செய்யாமல் ஒரு கதவை மட்டும் கமல் மூடிவிட்டுச் செல்வார். அந்தக் காட்சியே ஒரு கவிதை போலிருக்கும்.

 இன்ஸ்பெக்டரை வீட்டிலிருந்து அடித்து வெளியில் கொண்டு வந்து தெருவில் துரத்திச் சென்று கொல்லும் காட்சியில், குறுகலான சந்து பொந்துகளில்  கேமராவும் வேகமாக நகர்ந்து அந்த பதற்றத்தை பார்வையாளருக்குக் கடத்தியிருக்கும்.

இன்றைய நவீன உபகரணங்கள் இல்லாத அந்த காலகட்டத்தில், வேலு நாயக்கர் தன் மகனின் மரணச் செய்தியைக் கேட்டு, அவனது முகத்தைப் பார்க்க மாடியிலிருந்து கீழிறங்கிச் செல்லும் காட்சி டாப் ஆங்கிளில் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும். ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ பாடலில் சிறகடிக்கும் புறாக்களின் பின்னணியில் கமலும் சரண்யாவும் ஒன்றாக நடந்து செல்லும் ஷாட் அழகியலோடு இருக்கும். 

“ஒரு நடிகர் என்னைப் புரிந்து கொண்டு என் லைட்டிங்குடன் விளையாட முடியும் போது நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் கமலஹாசனுடன் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பணியாற்றும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். ஒளியைக் கவனித்து அதை தனது நடிப்பில் இணைத்துக்கொள்ளும் விதிவிலக்கான திறன் அவருக்கு உண்டு. ஒரு நடிகரின் முகத்தில் ஒளியைப் பிரகாசிக்கச் செய்வது மட்டும் போதாது. ஒளி தன் முகத்தில் வருகிறது என்பதை அந்த நடிகர் காட்ட வேண்டும்.” என்று கமல்ஹாசனைப் பற்றி பாராட்டியிருக்கிறார்.

1988 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக இயக்குநர் மணிரத்னத்தின் ஸ்டைலிஷான திரைப்படமான ‘அக்னி நட்சத்திரம்’ வெளியாகி. அக்கால கல்லூரி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் ஒளிப்பதிவு ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் லைட்டிங்கும் ஒரு கதாபாத்திரமாகவே வந்தது.

படம் ஆரம்பிக்கும்போது டைட்டிலில் பறவைகளின் சத்தம் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க, சூரியன் மெல்ல மெல்ல உதயமாகி அது முழுமையாக வெளிப்படும் வரையிலும் அந்தக் காட்சியைக் காண்பித்திருப்பார்கள்.  “அதிகாலையில் ஒரு ஸ்டாப் வாட்ச் எடுத்துக் கொண்டு பி.சி.யும் நானும் சென்று சூரியன் மெல்ல உதயமாகி முழுமையடைவதை எடுத்தோம்” என்று மணிரத்னம் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.  

அப்படி தொடங்கிய ஒளிப்பதிவு சில எல்லைகளை மீறிச் செயல்பட்டதால்தான் இப்படம் பெரும் புகழ் பெற்றது. குறிப்பாக, இந்தப் படத்தின் லைட்டிங் ஒரு புதிய தரத்தை நிர்ணயித்தது. சொல்லப்போனால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மினுமினுக்கும் ஒளியில்  படமாக்கப்பட்ட விதம் ஒட்டுமொத்தத் திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தது.  அந்த உத்தியை சிலர் வரவேற்றாலும் சிலர் விமர்சனம் செய்தனர்,  அது அந்தக் காட்சியைப் பரபரப்பாக்கி, பார்வையாளர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை.  . அதற்குப் பிறகு விமர்சகர்கள் பலரும் ஒளியமைப்பைப் பற்றிப் பேசத் தொடங்கியதோடு, திரைப்பட விமர்சனங்களில் ஒளிப்பதிவு தனித்த கவனத்தையும் பெற்றது. 

சாதாரண விளக்குகளைப் போல தொடர்ந்து ஒரே சீராக ஒளியைத் தராமல், ஸ்டிரோப் லைட்டுகள் துடிப்புடன் வேகமாக ஒளிரும்.  இந்தத் தொழில்நுட்பம் நகரும் பொருட்களைத் துண்டு துண்டான மெதுவான அசைவுகளாகக் காட்டவோ அல்லது ஒருவித மயக்கமான, அதிக ஆற்றல் கொண்ட காட்சிச் சூழலை உருவாக்கவோ பயன்படுகிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், பி. சி. ஸ்ரீராம் இந்த அதிரடியான ஒளிரும் லைட்டிங் நுட்பத்தை தான் பயன்படுத்தினார். 

இந்தப் படத்தின் நேர்காணலில், தான் குழந்தையாக இருந்தபோது பார்த்த ஸ்டான்லி குப்ரிக்கின் “கிளாக்வொர்க் ஆரஞ்சு” (Clockwork Orange) படத்தின் டிரெய்லர் தன்னிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அந்த வகையான காட்சியாக்கத்தை இப்படத்தில் பயன்படுத்த முயன்றதாகவும் பி.சி. கூறியிருக்கிறார், 

‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாடலிலும் ஒளியும், நிழலும் நடனத்தின் ஒரு பகுதியாகவே செயல்படுகின்றன.  நடனமாடுபவர்களின் அசைவுகளுக்கு ஏற்ப மாறும் நிழல்கள் காட்சிக்கு வேகத்தையும் துடிப்பையும் அளிக்கின்றன. ‘ராஜா ராஜாதி’ பாடல் ஒரு டிரெண்ட்செட்டராகவே மாறியது. 

கார்த்திக்,பிரபு இருவருக்குமிடையிலான ஒரு சண்டைக்காட்சி குதிரைகளை வளர்க்கும் ஓர் இடத்தில் எடுக்கப்பட்டிருக்கும். இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ள, அவர்களைச் சுற்றிலும் குதிரைகள் மிரண்டு ஓடும். இருவரும் தரையில் புரள்கையில் அவர்களருகே ஓடும் குதிரையின் கால்கள் காட்சியின் பரபரப்பைக்  கூட்டும். சண்டையின் தன்மைக்கேற்ப பின்னணியை உபயோகித்து படம் பிடிக்கப்பட்டிருக்கும் ஷாட்கள் ஶ்ரீராம், மணிரத்னம் கூட்டணியின் புத்திசாலித்தனத்துக்கு ஒரு சான்று.

Agninatchathiram

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் குள்ளமான கதாபாத்திரத்தில் நடிக்க கமல் எடுத்த முயற்சிகளை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாத அந்த காலகட்டத்தில், சரியான கோணங்களைத் தேர்ந்தெடுத்தும், வெளிப்படையான கோணங்களைத் தவிர்த்தும் குள்ளமான தோற்றத்தைச் சரியாகக் கொண்டுவர பி.சி-யின் ஒளிப்பதிவு நுட்பமும் முக்கியப் பங்கு வகித்தது.

தமிழ்நாட்டின் கிராமப்புற நிலப்பரப்பின் இயல்பான தோற்றத்தையும் உணர்வையும் நமது கண்களுக்கு முன்னால் கொண்டு வந்த மற்றொரு திரைப்படம் ‘தேவர் மகன்’.  கிராமத்து வாழ்க்கை, குடும்ப உறவுகள், சாதிய அதிகாரம், தலைமுறைகளுக்கு இடையிலான மோதல் ஆகியவற்றைப் பேசும் படத்தில், கிராமத்தின் சூழலையும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் நம்பகத்தன்மையுடன் காட்டுவது முக்கியம். வயல்வெளிகள், வீடுகள், கிராமத்து வீதிகள், மனிதர்களின் அன்றாடச் செயல்பாடுகள் எனப் படத்தின் உலகம் மிகைப்படுத்தப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

காட்சியின் அழகை முன்னிறுத்துவதற்காக இங்கு கேமரா தனியாகச் செயல்படுவதில்லை. கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்குள் இருந்து அவற்றைப் பார்ப்பதுபோல் அமைந்திருக்கிறது. இதுவே அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து தேவர் மகன் படத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. இரண்டு படங்களிலும் பி.சி. தான் ஒளிப்பதிவாளர் என்றாலும், கதையின் தேவைக்கு ஏற்ப அவர் தனது காட்சி மொழியை, உத்திகளை மாற்றிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தைப் பற்றி அவர் அளித்த நேர்காணலில்,  இப்படத்தில் ஒளிப்பதிவு தன்னை முன்னிலைப்படுத்தாமல் படம் தன்னுடைய கதையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக  ஆவணப்பட பாணியைக் கையாண்டதாக  கூறியிருக்கிறார். 

“திருடா திருடா” திரைப்படம் வேகமான கதை நகர்வும், சாகசமும், நகைச்சுவையும் கலந்த படம். இதற்கேற்பக் கேமராவின் இயக்கமும் ஃபிரேம்களின் அமைப்பும் படத்துக்கு ஒரு துடிப்பான தோற்றத்தை உருவாக்குகின்றன.

படத்தின் சாகசக் காட்சிகளிலும் துரத்தல் காட்சிகளிலும் கேமரா கதாபாத்திரங்களுடன் நகர்ந்து, அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தையும் பரபரப்பையும் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. காட்சிகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லும் வேகத்துக்கு ஏற்ப ஃபிரேமிங்கும் மாறுகிறது. பரந்த காட்சிகள் கதாபாத்திரங்கள் பயணிக்கும் நிலப்பரப்பை அறிமுகப்படுத்துகின்றன; நெருக்கமான காட்சிகள் அவர்களின் எதிர்வினைகளையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துகின்றன. கொஞ்சம் நிலவு பாடலில் சென்னை எக்மோர் மியூசியத்தை காட்சிப்படுத்தி இருக்கும் அழகு அபாரமானது. அந்தக் கட்டிடத்தின் அழகை அணுஅணுவாக ரசித்து காட்சிப்படுத்தியிருக்கும் அவரது ரசனை அலாதியானது.

இந்தப் படத்தின் வண்ணத் தேர்வுகளும் காட்சியமைப்பும் அதன் சாகசத் தன்மைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. நாயகன் படத்தில் காணப்பட்ட அடர்த்தியான காட்சி மொழியிலிருந்தும், அக்னி நட்சத்திரம் படத்தின் பகட்டான ஒளியமைப்பிலிருந்தும் மாறுபட்டு, இங்கு கதையின் வேகத்தோடு இணைந்த காட்சி மொழியை ஸ்ரீராம் உருவாக்கியிருக்கிறார்.

2000-ல் வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் வெவ்வேறு நிலைகளை மணிரத்னம் காட்சிப்படுத்தியிருப்பார். 

கார்த்திக், சக்தி இருவரும் சந்திக்கும் தருணங்களிலும், காதல் வளர்கின்ற காட்சிகளிலும், பின்னர் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ளும் தருணங்களிலும் கேமரா அவர்களுடைய உணர்வுகளுக்கு ஏற்ப மாறுகிறது. காதலின் தொடக்கத்தில் இருக்கும் உற்சாகத்தையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளுக்கும், உறவில் விரிசல் ஏற்படும்போது காட்டும் காட்சிகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண முடியும் ‘பச்சை நிறமே’ பாடலில் அனைத்து வண்ணங்களையும் பயன்படுத்தி ஒரு மேஜிக்கையே நிகழ்த்தியிருப்பார் பி.சி.

ஓ காதல் கண்மணி படத்தில் ஆதியும் தாராவும் வாழும் நகர்ப்புற வாழ்க்கை, அவர்களின் காதல், நவீன உறவுகள் ஆகியவை மையமாக இருக்கின்றன. மும்பையின் நகரச் சூழலைக் காட்டும் காட்சிகளிலும், கதாபாத்திரங்கள் தங்களுக்குள் நெருக்கமாக இருக்கும் தருணங்களிலும் ஒளிப்பதிவு மென்மையான காட்சி மொழியைப் பயன்படுத்துகிறது.

அவர்கள் சந்திக்கும் இடங்கள், பயணிக்கும் வழிகள், ஒன்றாகக் கழிக்கும் தருணங்கள் என அவர்களின் உறவின் ஒரு பகுதியாகவே நகரம் அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்கள் இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகளில் கேமரா அவர்களை மிகையாக முன்னிலைப்படுத்தாமல், அவர்களின் உறவு வளர்வதைப் பதிவு செய்கிறது.

.இயக்குநர் மணிரத்னம் – பி. சி. ஸ்ரீராம் கூட்டணியில் தெலுங்கில் வெளியான ஒரே திரைப்படம் “கீதாஞ்சலி”.  தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் வெளிவந்தது.  நாகார்ஜுனாவை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இப்படத்தின் பாடல் காட்சிகள் அழகியலின் உச்சம்.  குறிப்பாக இதழ் முத்தத்தை வைத்தே முழுவதும் வருகிற ‘ஒம் நமஹ’ பாடல் பெரியவர்களிடையே முகச்சுளிப்பையும், இளைஞர்களிடம் ஏகோபித்த ஆதரவையும் பெற்றது.  பாடல் முழுவதும் டாப் லைட்டில், வித்தியாசமாக சுழன்று சுழன்று படமாக்கப்பட்டிருக்கும். படம் முழுவதும் குளிர்பிரதேசமான ஊட்டியில் படமாக்கப்பட்டதால்,  அதன் பனி மூட்டமும் ஒரு கதாபாத்திரமாகவே காதலர்களுடன் வரும்.  இயற்கையான மூடுபனியையும், செயற்கையாக உருவாக்கப்பட்ட புகையையும் பயன்படுத்தி, காட்சிகளுக்கு ஒரு கவித்துவமான உணர்வை பி.சி. கொண்டுவந்தார்.

சாகப்போகும் தருணத்திலிருக்கும் இருவர்க்கு இடையிலான காதலைப் பற்றிய இக்கதையில், மரண பயத்தையும், காதலின் துடிப்பையும் ஒளிப்பதிவு மூலமே பி. சி. ஸ்ரீராம் கடத்தியிருப்பார். ‘ஓடிப் போயிடலாமா’ என்று கிரிஜா நாகார்ஜுனனிடம் கேட்கிற வசனம் இன்று வரையிலும் காதலர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாகார்ஜுனாவின் நோய்மை மற்றும் மரணத்தின் பின்னணியைக் காட்ட சாம்பல், நீலம் ஆகிய நிறங்களை பயன்படுத்தியவர்  கிரிஜாவின் துடிப்பான குணத்தைக் காட்ட பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வண்ணங்களை அமைத்தார்.

இப்படத்தில் வரும் ஒரு காட்சியில், மழைநீரில் நாகார்ஜுனனின் ஷூ லேஸ் துளைகள் வழியே தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிற எக்ஸ்ட்ரீம் குளோசப் ஷாட் இன்றளவும் சினிமா பயிற்றுவிப்பில் ஒரு சிறந்த உதாரணமாகப் பேசப்படுகிறது.

பாடல்களிலும் வெளிப்புறக் காட்சிகளிலும் மலைப்பிரதேசங்களின் பசுமை, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளை மிகவும் பரந்த கோணங்களில் படமாக்கி, ஒரு ஓவியப் புத்தகத்தைப் போன்ற காட்சி அனுபவத்தைத் தந்தார்.  படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகியலின் உச்சமாக இருக்கும்.

குறிப்பாக `ஓ ப்ரியா ப்ரியா’பாடல் பாலைவனப் பின்னணியில் வித்தியாசமாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அழகான மணல்வெளியில் ஒட்டகங்கள், குதிரைகள், பல்லக்கு என்று அரேபிய மண்ணுக்குரிய அம்சங்களுடன் காட்சிப்படுத்தி இருக்கும் விதம், அந்தப் பாடலின் மூடுக்கு வெகு பொருத்தமாக அமைந்திருந்தது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா நடிப்பில் வெளியான  காதலும், நகைச்சுவையும் கொண்ட திரைப்படம் ‘கோபுர வாசலிலே’. மலையாள சினிமாவுக்குரிய இயல்புத் தன்மையும், பி. சி. ஸ்ரீராமின் நவீன லைட்டிங் பாணியும் இணைந்த ஒரு சுவாரசியமான கலவை இது.

பிரியதர்ஷன் படங்களின் சிறப்பம்சமான விறுவிறுப்பான நகைச்சுவை மற்றும் துரத்தல் காட்சிகளுக்கு ஏற்ப, பி. சி. ஸ்ரீராமின் கேமரா மிக வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கியது.  இப்படத்தில் நகைச்சுவை வசனங்களிலிருந்து மட்டுமே உருவாகவில்லை. மனோகரைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் செய்யும் செயல்கள், அவர்கள் உருவாக்கும் குழப்பங்கள், மனோகர் அவற்றை நம்பிவிடும் தருணங்கள் ஆகியவற்றிலிருந்துதான் நகைச்சுவை உருவாகிறது.  Panning மற்றும் Tracking Shots மூலமாக ஒரே ஷாட்டில் பல கதாபாத்திரங்களின் ரியாக்‌ஷன்களைப் படமாக்கினார்.

‘தேவதை போல் ஒரு பெண்’ மற்றும் ‘காதல் கவிதைகள் படித்திடும்’ போன்ற பாடல்களில், பாரம்பரியமான இடங்களுக்குள் நவீன வண்ண விளக்குகளைப் பயன்படுத்தி  ஒரு புதுமையான காட்சி அழகியலை உருவாக்கியிருக்கிறார்.

“இதில் சரியான அளவு இனிப்பும் (தபு), தேவையான அளவு காரமும் (அமிதாப் பச்சன்), சரியான அளவு புளிப்பும் (பரேஷ் ராவல்), கச்சிதமான அளவு உப்பும் (ஸ்வினி காரா) மற்றும் ஒரு கரண்டி தாளிப்பும் (ஜோஹ்ரா சேகல்) கலந்திருக்கிறத.” என்று கிளாம்ஷாம் இதழின் மார்ட்டின் விமர்சனம் எழுதிய ‘சீனிகம்’ படத்தின் இயக்குநராக பால்கி   அறிமுகமானதோடு, அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய பி.சி.யையும் தன்னோடு அழைத்துக் கொண்டுவந்து ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

73 வயதான லண்டன் உணவகச் சமையல்காரர் புத்ததேவுக்கும் 34 வயதான நீனாவுக்கும் இடையிலான காதலைச் சொன்ன படம் Cheeni Kum. வயது வித்தியாசம் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே மையமாக்காமல், இருவரின் பேச்சு, பிடிவாதம், நகைச்சுவை, தனித்துவமான மனநிலை ஆகியவற்றின் வழியாகக் காதலை அணுகியது இதன் சிறப்பு. 

P.C Sreeram

வயதான அமிதாப்பும், தபுவும் உணவகத்தில் எதிரெதிரே அமர்ந்து பேசும் காட்சிகளில், அவர்கள் ஒருவரையொருவர் கவனிக்கும் விதத்தையும், அவர்களுடைய முகத்தில் தோன்றும் சிறிய மாற்றங்களையும், ஶ்ரீராமின் கேமரா  காட்சிப்படுத்தியிருக்கும். இரு நடிகர்களின் முகபாவனைகளும் வசனங்களின் நுட்பமும் ஒளிப்பதிவுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கும்.

அமிதாப்பும், தபுவும் லண்டன் தெருக்களில் நடக்கும் சில காட்சிகளை மட்டுமே அங்கே படமாக்கி விட்டு, மீதி படம் முழுவதுமே மும்பையில் செட் போட்டு படமாக்கப்பட்டதாக ஶ்ரீராம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் சொல்லியிருக்கிறார். லண்டன் நகரமே படத்தின் அழகுக்குக் காரணம் என்று மக்களை நம்ப வைத்ததில் பி.சி.யின் ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்டரின் கலை வண்ணமுமே முக்கிய பங்காற்றுகின்றன.  வசனங்களின் நகைச்சுவைதான் முன்னணியில் இருப்பதால், ஒளிப்பதிவு தேவையற்ற கவனத்தைத் தன்பக்கம் இழுக்காமல் கதாபாத்திரங்களின் முகங்களையும் உறவையும் மையப்படுத்துகிறது.

‘பா’ திரைப்படம் தனக்கு மிகவும் சவாலாக அமைந்த படம் என பி.சி. கூறியிருக்கிறார்.

“இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு கமாண்டோ நடவடிக்கையைப் போல இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் நான் மிகுந்த கவனத்துடன் படமாக்க வேண்டியிருந்தது. ஆரோவுக்கு மேக்கப் போட்ட பிறகு, முதல் இரண்டு மணி நேரத்திற்குள் மட்டுமே அவரது சிறந்த வெளிப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என்பதால், அது எனக்கு  மாபெரும் சவாலாக இருந்தது. எனவே, ஒவ்வொரு ஷாட்டும் ஒரு போராட்டமாகவே இருந்தது,  அமித்ஜியை ஒரு குள்ளமான சிறுவனாகக் காட்டுவதற்கு நான் தொழில்நுட்பத்தை நம்பியிருந்தேன்; அதுவே ஒரு பெரிய பணியாக இருந்தது. அதோடு, வித்யா பாலனை அமித்ஜியை விட உயரமானவராகக் காட்ட வேண்டியிருந்தது. இருப்பினும், அதை என்னால் சிறப்பாகச் செய்து முடிக்க முடிந்தது.  அத்துடன் ஆரோ பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தான்.  உணர்ச்சிகளற்ற  நபராக கருதிக் கொண்ட என்னையே அழவைத்துவிட்டது.  என்று பி.சி குறிப்பிடுகிறார்.

அபிஷேக்பச்சன், வித்யாபாலனின் ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்காக ஒரு வித்தியாசமான  கலர்டோனைப் பயன்படுத்தினார்.  அதனால் அக்காட்சிகள் கூடுதல் அழகுடன் ரொமான்டிக் மனநிலையைக் கொடுத்தது.

மிகுந்த ஒப்பனையால் முகத்தோற்றம் மாறிய அமிதாப் பச்சனை ஒரு குழந்தையாக நம்ப வைப்பதும், அந்த ஒப்பனையின் நுணுக்கங்கள் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாகத் தெரியும்படி படமாக்குவதும் பெரும் சவால்.

ஆரோவாக நடித்தது அமிதாப் பச்சன் என்றால் அவருடைய உண்மையான மகன் அபிஷேக் பச்சன் படத்தில் அவருடைய தந்தையாக நடித்தார். 

மிகச் சிறந்த ஒப்பனையால் ஒரு நடிகரின் தோற்றத்தை மாற்றிவிடலாம், ஆனால் அந்தத் தோற்றம் நம்பகமாகத் திரையில் நிலைத்திருக்க ஒளி, கேமராவின் கோணம், நடிகரின் அசைவுகள், ஒவ்வொரு ஷாட்டுக்கும் இடையிலான தொடர்ச்சி ஆகியவற்றை மிகச் சரியாக அமைக்க வேண்டும்.   கேமரா அவனை ஒரு மருத்துவ ரீதியில் பார்க்காமல் ஒரு குழந்தையாகப் பார்க்க உதவியதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அதனாலேயே பி.சி யை மக்கள் கொண்டாடினர்.

குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் ஆணையும், தொழிலில் முன்னேற விரும்பும் பெண்ணையும் காண்பித்து,  வழக்கமான கதாபாத்திரங்களை  சற்றே மாற்றிப் பார்க்கிறது Ki & Ka திரைப்படம். கபீர் வீட்டைப் பார்த்துக்கொள்ள விரும்புகிறான்; கியா தனது நிறுவனப் பணியில் உயர விரும்புகிறாள். இந்த ஏற்பாடு முதலில் அவர்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கினாலும், திருமணத்தில் அதிகாரம், அடையாளம், ஒருவருடைய தேர்வை மற்றவர் மதிப்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. 

பி.சி. ஸ்ரீராம், பால்கியுடன் தனக்கிருக்கும் பந்தத்தை விவரிக்கும் போது, “அறியப்படாத பல புதிய கருத்தாக்கங்களால் அவர் என்னை மயக்குகிறார். இதுவரை கண்டிராத புதிய எல்லைகளுக்கு என்னை அழைத்துச் செல்லும் இத்தகைய திரைக்கதைகளுக்காகவே நான் காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிடுகிறார். 

திரைப்படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ப, அத்தம்பதியினரின் உறவிலிருக்கும் நுணுக்கங்களைச் சித்திரிக்க ஒரு பார்வையாளராக நின்று ஸ்ரீராம் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். “இப்படத்தின் பெரும்பகுதி இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலேயே நகர்வதால், ஒளிப்பதிவு மிகவும் இயல்பானதாக இருக்க வேண்டியிருந்தது. அது கதையின் அழகை வெளிக்கொணர்வதோடு, கதை சொல்லலை மேலும் வலுப்படுத்துகிறது,” என்று அவர் கூறுகிறார்.

இந்தப் படத்தின் பெரும்பகுதி வீடு, சமையலறை, அலுவலகம் போன்ற அன்றாட இடங்களில் நடைபெறுகிறது. ஒரே வீட்டுக்குள் நிகழும் வழக்கமான செயல்களையும், வேலைக்குச் செல்லும் பெண்ணின் நகர்ப்புற வாழ்க்கையையும் சலிப்பின்றிக் காட்சிப்படுத்துவதுதான் சவாலான விஷயம்.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் வீட்டையும் அலுவலகத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது. கபீர் வீட்டில் செய்யும் வேலைகளுக்கும் கியா அலுவலகத்தில் செய்யும் வேலைகளுக்கும் இடையே காட்சிகள் மாறும்போது, இருவரின் உழைப்பும் அவரவர் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பது வெளிப்படுகிறது. இந்த வேறுபாட்டை ஒளிப்பதிவு மிகச் சிறப்பாகக் கையாண்டது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகத் தொழில்முனைவோர் அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையால் உந்துதல் பெற்ற படம் Pad Man. மாதவிடாய் சுகாதாரம் பற்றிய சமூகத் தடைகளை எதிர்கொண்டு, குறைந்த செலவில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடும் லட்சுமிகாந்த் சௌஹானின் கதையைச் சொல்கிறது. உண்மையான வாழ்க்கைச் சம்பவங்களால் உந்துதல் பெற்றிருந்தாலும், திரைப்படத்துக்காகக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

.லட்சுமிகாந்த்தின் கண்டுபிடிப்பு ஒரு ஆய்வகத்துக்குள் மட்டும் நிகழ்வதில்லை.  அவன் வாழும் கிராமம், அவன் சந்திக்கும் மனிதர்கள், அவன் மேற்கொள்ளும் பயணங்கள் ஆகியவற்றோடு இணைந்தே அது வளர்கிறது.  இந்தப் படத்தின் சிறப்பு அதன் டாப் ஆங்கிள் காட்சிகளும், வைட் ஆங்கிள் காட்சிகளும்.  அவை ஒரு தனி மனிதனின் முயற்சியை அவன் வாழும் நிலப்பரப்போடு இணைத்துக் காட்டுகின்றன.

படம் மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர், இந்தூர், மஹூ உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. கதையின் பின்னணியைத் தமிழ்நாட்டிலிருந்து மத்திய இந்தியாவுக்கு மாற்றியமைத்தது தான் முக்கியமான மாற்றம். 

மாதவிடாய் சுகாதாரம் பற்றிப் பேசுவதே சமூகத் தடைகளை எதிர்கொள்ளும் செயல். இப்படிப்பட்ட கதையைப் படமாக்கும்போது, கதாநாயகனின் முயற்சியையும் அவன் எதிர்கொள்ளும் தடைகளையும் பார்வையாளருக்கு நம்பகத்தன்மையோடு புரிய வைப்பதாக  பி.சி. யின் ஒளிப்பதிவு இருக்கிறது..

பி.சி யின் ஒளியமைப்பும் காட்சிச் சட்டகங்களும் வசனங்களைத் தாண்டி அர்த்தம் தருவதாகப்  பிஹைண்ட்வுட்ஸ் தனது விமர்சனத்தில் பாராட்டியது.  அக்‌ஷய்குமாரும், ராதிகா ஆப்தேவும், சோனம் கபூரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர்.

குரலால் புகழ் பெறும் ஒருவனுக்கும், அந்தக் குரலை உடலாகத் திரையில் வெளிப்படுத்தும் மற்றொருவனுக்கும் இடையே உருவாகும் அதிகாரப் போட்டிதான் ஷமிதாப் திரைப்படம்..  இத்திரைப்படத்தில் தனுஷ் பேச முடியாத, ஆனால் நடிகராக வேண்டும் என்ற கனவு கொண்ட டேனிஷ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமிதாப் பச்சனின் குரல் அவனுக்குக் கிடைக்கும்போது, அவனுடைய உடலும், அவருடைய குரலும் சேர்ந்து அவன் ஹீரோவாக ஆகி புகழ் பெறுகிறான்.   

உள்ளுக்குள் தனிமையும், வாழ்வின் மீது வெறுப்பும் கொண்ட அமிதாப்பைக் காண்பிக்கும்போது சற்றே மங்கலான ஒளியமைப்பும்,   தனது உடல்மொழி, முகபாவனை, நடிப்பின் மூலமாக ஹீரோ ஆகும் தனது கனவை அடைய விரும்புகிற  தனுஷ் வரும் காட்சிகளில் வண்ணங்களோடும் காண்பித்திருப்பார் பி.சி.ஶ்ரீராம். 

படத்தின் சில காட்சிகளில் கேமரா நடிகர்களின் முகங்களைச் சுற்றி நகரும் விதம் கவனத்தை ஈர்ப்பதாகக் கூறியதோடு பாலிவுட் படங்களின் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையும் காட்சியமைப்பையும் கேலி செய்யும் தருணங்களில், கேமராவே அந்த ‘சினிமாத்தனத்தை’ வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுவதாக பிஹைண்ட்வுட்ஸ் இந்தப் படத்தை விமர்சனம்  செய்தது. 

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு  விதமான ஒளியமைப்பைப் பயன்படுத்தினார்.  திரைப்படத்தின் கதையையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, அதற்கேற்ப ஒளியையும் கேமராவையும் பயன்படுத்தியவர் பி. சி. ஸ்ரீராம். அவருடைய படங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்தின் காட்சி மொழி எவ்வாறு அதன் கதைசொல்லலின் ஒரு பகுதியாக மாறுகிறது என்பதை உணர முடிகிறது. அதனால்தான் அவருடைய ஒளிப்பதிவு குறித்துப் பேசும்போது, அழகான ஃபிரேம்களை மட்டும் நினைவுகூராமல், அந்த ஃபிரேம்கள் கதைக்குள் என்ன செய்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இவருடைய பெரும்பான்மையான படங்களில் இளையராஜாவின் இசை கூடுதல் பலமாக நின்றிருக்கிறது. புதுமையான பரிசோதனையான முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கிற இயக்குநர்களும், இசையால் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிற இசையமைப்பாளர்களும் கிடைத்ததால், பி.சி.யின் ஒளிப்பதிவு நுணுக்கங்கள் ,மிகச் சரியாக ரசிகர்களை சென்றடைந்தன..

ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் சில படங்களையு,ம் இயக்கியிருக்கிறார் பி.சி. இயக்குநர் பி.சி.யைப் பற்றியும், இன்னும் சில படங்கள் குறித்தும் அடுத்த இதழிலும்

தொடரும்.

Author Image

அகிலா ஸ்ரீதர்

மொழிபெயர்ப்பாளர். உதவி இயக்குநர். எழுத்தாளர். ஆங்கிலப் படங்களுக்கான வசனங்களை சப்டைட்டில் செய்யும் பணியிலும் இருக்கிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
singeetham

கற்பனாவாதி Unlimited

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?