The Talkie
Sunday, November 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள்

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

The Talkie by The Talkie
November 1, 2026
in தொடர்கள், பாலிவுட் க்ளாசிக்ஸ்
A A
0
Mother india
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon அபுல்கலாம் ஆசாத்

எம். எம். ஏ. சின்னப்பா தேவர் தயாரிப்பில் 1967இல் வெளியான ‘தெய்வச்செயல்’ திரைப்படம் பெரும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. யானைகளும் கதையில் இடம் பெற்றதால் அது குழந்தைகளையும் அரங்கிற்கு ஈர்க்கும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அது பெறவில்லை. பின்னர், அதே கதை, 1971இல் சில கதாநாயக மாற்றங்களுடன் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர் அது 1972இல் தமிழில் ‘நல்ல நேரம்’ என்றாகிப் பெரும்வெற்றியைப் பெற்றது தமிழ்த் திரையின் வரலாற்றுப் பக்கங்களில் ஒன்று.

ஒரே கதையை, ஒரே தயாரிப்பாளர், 1967இலும் 1972இலும் படமாக்கியதைப் போல இந்தியில் மதர் இண்டியாவும் 1940இலும் 1957இலும் படமானது.

அவ்ரத் என்னும் திரைப்படம் 1940இல் வெளியானது. அதன் இயக்குநர் மெஹபூப் கான். பின்னர், அவரே ‘அவ்ரத்’தை 1957இல் ‘மதர் இண்டியா’ என மீண்டும் உருவாக்கினார். அவ்ரத்தாக அதிகம் பேசப்படாத அது மதர் இண்டியாவாக மிகப் பெரிய வெற்றியடைந்து, பன்னாட்டுத் திரைப்பட ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்னும் பெருமையைப் பெற்றது. தனித்து நின்று போராடி வெல்லும் ஒரு தாயின் வாழ்க்கையைத் திரையில் உணர்வுமயமாக்கி வடிக்கப்பட்ட மதர் இண்டியா, கடந்த எழுபது ஆண்டுகளாக இந்தியத் திரையில் ஒவ்வோர் அம்மா கதாபாத்திரத்திலும் எங்காவது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. குழந்தைகளிடம் அன்பைப் பொழிந்து, வஞ்சகர்களுடன் போராடி, கடைசியில் வெல்லும் அனைத்து அம்மாக்களும் திரையிலும் நிஜவாழ்க்கையிலும் தெய்வங்களாகத்தான் போற்றப்படுகின்றனர். அப்படியிருக்கையில் மதர் இண்டியாவின் ராதா என்னும் அந்தக் கதாபாத்திரம் மட்டும் எப்படி மொத்த இந்தியாவின் முன்மாதிரித் தாயாக நிலைத்தது?

இந்திய விடுதலைக்குப் பின் பத்தாண்டுகளே கடந்திருந்த மெஹபூப்சூழலில், சமூகக்கட்டமைப்பில் நடந்துகொண்டிருந்த மாற்றங்களை அது பிரதிபலித்தது. திரைப்படங்களின் பொதுப்பண்பான பெண்ணின் பெருமையுடன் சேர்ந்து தனிப்பண்பாக சமகாலத்தில் 1951 முதல் 1956 வரை நடந்த ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத் திருத்தங்களும், முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் முடுக்கிவிடப்பட்ட கட்டுமானப் பணிகளும் மதர் இண்டியாவின் கதையில் மெல்லிய கோடாக இடம்பெற்றன. மேலும், இந்தியப் பிரிவினையால் வளமான, நீர்ப்பாசனம் உள்ள கணிசமான பகுதி  பாகிஸ்தானுக்குச் சென்ற பின் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால் தானிய இறக்குமதி அதிகமாகியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் விவசாயம் முக்கியமானதாகக் கருதப்பட்டது. மதர் இண்டியாவின் உரையாடல்கள் தானியம், நிலம் என இரண்டையும் முன்னிறுத்தின. ஜமீன்தார்களின் ஆதிக்க ஒழிப்பு, நாட்டின் கட்டுமானப் பணிகள், விவசாயம் ஆகிய மூன்றும் சேர்ந்து பெண்ணின் பெருமையுடன் கதையில் இணைந்து அதன் சமூகப் பங்களிப்பை அடுத்த தளத்துக்கு உயர்த்தியது. அவற்றுடன் அறச் சீற்றமும் சேர்ந்து ராதா என்னும் அந்தக் கதாபாத்திரத்தை பெயருக்கேற்ப, மதர் இண்டியாவாக உயர்த்தியது.

இயலாமையால் குடும்பத்தை விட்டு ஓடிப்போன கணவனுடன் வாழ்க்கை முடிந்ததாக எண்ணாமல் ராதா போராடுகிறார்.

சுரண்டிப் பிழைக்கும், பெண்ணாசை பிடித்த பணக்காரனுக்கு எதிராக நிற்கிறார்.

இரண்டு மகன்களை வளர்த்தெடுக்கிறார்.

தன்னுடைய நிலத்தில் கடுமையாக உழைத்து விவசாயம் செய்கிறார்.

புரட்சியாளனாக மாறும் தன் ஒரு மகனை அறத்தின்பால் நின்று கொல்கிறார்.

வயதான காலத்தில் அணையைத் திறந்து வைக்கும் பெருமையைப் பெறுகிறார்.

சுருக்கமாக, உழைப்பும் போராட்டமும் அறமுமாகத் தன் வாழ்க்கையை இந்தியப் பெண்களுக்கு முன்மாதிரியாக வைக்கிறார்.

ராதாவாக நடித்தவர் நர்கீஸ்.

ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாகத் திரையில் அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாகி, ராஜ் கபூருடன் ஆவாரா, ஷ்ரீ 420, சோரி சோரி என வெற்றிப் படங்களைத் தந்து மதர் இண்டியாவில் இணைகையில் நர்கீஸின் வயது 27. நிஜ வாழ்க்கையில் ஏறத்தாழத் தன்னுடைய வயதையொத்த இரண்டு கதாநாயக நடிகர்களுக்குத் திரையில் தாய். திரை ரசிகர்கள் இதனை ஏற்பார்களா என்னும் கேள்வி மெஹபூப் கானுக்கு எழவேயில்லை. நர்கீஸ்தான் ராதா என அவர்  முடிவு செய்திருந்தார். ராதாவின் இரண்டு மகன்களுள் ஒரு மகனாக நடிக்க திலீப் குமாரைக் கேட்க, அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். அது நடந்திருந்தால் திரைப்படத்தின் கதாநாயக அந்தஸ்து இன்னும் கூடியிருக்கலாம். ஆனால், நர்கீஸ் ஒப்புக்கொள்ளவில்லை. திலீப் குமாரின் கதாநாயகியாகத் தான் நடித்திருப்பதால், அவரைத் தன் மகனாக ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் எனச் சொல்லி மறுத்திருக்கிறார். அதன் பின்னர் அந்த வாய்ப்பு சுனில் தத்துக்குச் சென்றது.

அவ்ரத்தைவிடவும் பிரம்மாண்டமாக மெஹபூப் கான் மதர் இண்டியாவைத் தயாரித்தார். முன்னணிக் கதாநாயகி நர்கீஸ், வளர்ந்து வரும் இளம் நடிகர் சுனில் தத், மதர் இண்டியாவைத் திருப்புமுனையாக ஆக்கிக்கொண்ட கதாநாயக நடிகர்கள் ராஜ் குமார், ராஜேந்திர குமார் என நட்சத்திர வரிசை அமைந்தது.  நட்சத்திர வரிசையுடன் வெளிப்புறப் படப்பிடிப்பு, வண்ணத் திரைப்படம் எனப் பொருட்செலவைக் கோரக்கூடிய பெரிய தயாரிப்பாக மதர் இண்டியா உருவானது.

எந்த ஊரில் ராதா கலப்பை பிடித்து உழுதாரோ அந்த ஊரில் டிராக்டர் ஓடும் காட்சி தொடக்கத்தில் பெயர் காட்டும்போது பின்னணியில் விரிகிறது. விளக்கொளியில் வாழ்ந்த கிராமங்களுக்கு மின்சாரம் வருவதைக் காட்டுகிறது. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் பலன் கிராமங்களை எட்டியிருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டி பெயர் காட்டுவதை முடித்து, வயதான ராதாவிடம் காமிரா வந்து நிற்கையில் படம் தொடங்குகிறது.

சுவரொட்டிகளில் ராதா நுகத்தடியை ஏந்தியிருக்கும் காட்சியைக் கண்டு அரங்கிற்கு வரும் ரசிகரும், ஆவாராவிலும் ஷ்ரீ 420இலும் சோரி சோரியிலும் பார்த்த இளமையான நர்கீஸின் நினைப்பில் வரும் ரசிகரும், வயதான ஒப்பனையில் நர்கீஸைக் கண்ட வியப்பு முடிவதற்கு முன்னர் ராதாவின் நினைவுகளைப் பின்னோக்கி ஓட விட்டு, நர்கீஸ் (ராதா) – ராஜ் குமார் (ஷாமு) திருமணக் காட்சியில் கதையைத் தொடங்கிய உத்தி ஏமாற்றத்தைக் கொடுக்கவில்லை.

ஷாமுவின் இளம் மனைவியாக ராதா கிராமத்துக்கு வருகிறார். திருமணத்தை உள்ளூர் பனியாவிடம் கடன் வாங்கி நடத்துகிறார் ஷாமுவின் தாய். பனியாவின் சூழ்ச்சியால் விளைச்சலில் பெரும்பங்கை ஒவ்வொரு அறுவடைக்கு பின்னும் பனியாவுக்குச் செலுத்த நேர்கிறது. இந்த இடத்தில் இந்தியாவில் நடந்த ஜமீன்தார் ஒழிப்பு, நில உச்ச வரம்பு, தானிய விநியோகக் கட்டமைப்பு போன்ற சமூக மாற்றங்கள் பரப்புரையாக அல்லாமல் கதையில் உள்ள பிரச்சனைக்கு சமூகத்தில் கிடைக்கும் தீர்வாக இணைகின்றன.

நிலத்தில் கிடக்கும் பாறையைப் பெயர்த்து விளைச்சல் பரப்பை அதிகப்படுத்தும் பாறை கைகளின் மீது அழுந்தி விபத்து உண்டாகிறது. விபத்துக்குப் பின் ஷாமு படுக்கையில் கிடக்கிறார். அவருக்கு சுருட்டு புகைக்கக் கொடுத்துவிட்டு, அடுப்படிக்கு ராதா செல்கிறார். சுருட்டு பிடிக்கும் ஷாமுவுக்கு இருமல் வருகிறது, சுருட்டு அவர் மேல் விழுகிறது, அலறுகிறார். அடுப்படியில் இருக்கும் ராதா அலறியடித்து ஓடி வந்து ஷாமுவின் மீது விழுந்து கிடக்கும் சுருட்டைத் தள்ளிவிடுகிறார். கைகளை இழந்த காட்சியின் அவலத்தையும், அந்த நிலையிலும் ஷாமுவுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் தனக்கு சுருட்டு பற்ற வைத்துத் தரும் அளவுக்கு மனைவியை வைத்திருக்கும் நிலையும் இன்றைய பார்வையாளர்களுக்கு உவப்பானதாக இருக்காது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் ஓங்கியிருந்த ஆணாதிக்கம் தொடர்பான புரிதல் இருப்பின் காட்சியை உள்வாங்கலாம்.

சுருட்டு மார்பில் விழுந்து அலறியதும் ராதா அடுப்படியிலிருந்து ஓடி வந்து சுருட்டைத் தட்டிவிடும் காட்சி அருமையான திரைமொழி.

நர்கீஸ் – ராதா கதாபாத்திரம் தாய் என்ற அளவில் கடுமையான உழைப்பு, தன்னைக் காத்துக்கொள்வது, மகன்களை வளர்த்தெடுப்பது, உள்ள நிலத்தைக் காத்துக்கொள்வது, மகன்கள் உயர்வது என்ற அளவில் நின்றிருக்குமேயானால், அது தாயின் சிறப்பு வரிசையில் இருக்கும் கதைகளுள் ஒன்றாக இருந்திருக்கும். ராதாவின் சிறப்பு அவர் அறத்தின் பால் நின்றது.

நர்கீஸ் – இருபத்தேழு வயது நடிகையை, அறுபது வயதுத் தாயாகப் பார்வையாளர்களை ஏற்கவைத்து, 1958இன் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார். பெயருக்கு ஏற்பத் தன்னை நிலைநிறுத்தித் திரைப்படத்தைத் தாங்கிப் பிடித்த கதாபாத்திரத்தை நர்கீஸ் சிறப்பாகச் செய்தார்.

மனைவியாகப் பொறுப்பேற்ற பின்னர் தானியம் அரைக்கும் இயந்திரம் சுழல்வது ராதாவின் கைகளுக்கு வரும் காட்சியமைப்பு குறிப்பிடத்தக்கது. கைகளால் சுற்றப்பட்டுச் சுழன்றுகொண்டே இருக்கும் அந்த இயந்திரம் ராதாவின் வாழ்க்கை இனி இதைச்சுற்றித்தான் சுழன்றுகொண்டே இருக்கும் என்பதன் குறியீடோ என நினைக்கவைக்கும். தேய்வழக்குக் காட்சிகளை நவீனப் பார்வையில் புறந்தள்ளும்   திரை விமர்சகர்கள் ஏற்கும் அளவுக்கு இந்த அரவை இயந்திரம் சுற்றும் காட்சியைக் கடத்தியிருப்பது இயக்குநரின் திறன்.

கடனைத் தள்ளுபடி செய்வதற்கு ராதாவை விலையாகக் கேட்கும் லாலாவை எதிர்கொள்ளும் காட்சியின் வசனங்கள் பக்கம் பக்கமாகப் பெண்ணின் பெருமையைப் பேசிக் கண்ணீரைப் பொழியாமல், நான் அப்படிப்பட்டவள் அல்ல; என்னை இந்த எண்ணத்தில் நெருங்காதே எனத் தீர்மானமாகப் பேசும்படி அமைந்தது. அவ்ரத் திரைப்படத்துக்கு பாபுபாய் மேத்தாவுடன் இணைந்து வசனம் எழுதிய வஜாஹத் மீர்ஸா, இதில் அலி ரஸாவுடன் இணைந்து வசனம் எழுதினார்.

நன்மை – தீமை, நாயகன் – வில்லன், என எதிர்த்துருவங்களாக இரண்டு கதாநாயக நடிகர்கள் இயங்கும் கதையமைப்பின் முன்னோடிகளுள் மதர் இண்டியாவும் ஒன்று. ராமு, நல்ல மகனாக ராஜேந்திர குமார். பிர்ஜு, புரட்சியாளனாக மாறும் மகனாக சுனில் தத். பிர்ஜு சிறுவனாக இருந்தபோதிலிருந்து பனியா லாலாவை எதிர்க்கிறான்,  இளைஞனான பின் லாலாவை எதிர்க்கிறான், புரட்சியாளனாக மாறிய பின்னும் பிர்ஜுவின் எதிர்ப்பு தொடர்கிறது.

தொடக்கம் முதலே வில்லனாகக் காட்டப்பட்ட லாலாவின் வீட்டைச் சூறையாடி அடகு வைக்கப்பட்டத் தன்னுடைய அம்மாவின் வளையல்களை மீட்பதுடன் பிர்ஜுவின் புரட்சிக்குணம் கதைக்கு நியாயம் சேர்ப்பது முடிந்திருந்தால், இது இன்னொரு வெற்றிக்கதையாக இருந்திருக்கும். வில்லன் லாலாவின் கொட்டத்தை அடக்கி, தன் அம்மாவின் நகைகளை மீட்பதுடன், லாலாவிடம் அடமானம் வைக்க கிராமத்து மக்கள் எழுதித் தந்த கடன் பத்திரங்களைத் தீயிட்டுக் கொளுத்துவதுடன் அவ்வளவு நேரம் வில்லனாகக் கதையில் வந்த லாலா ஒடுக்கப்படுகிறார். பிர்ஜுதான் அடுத்த காட்சியில் ராமுவை மிஞ்சி அம்மாவுக்காகப் போராடிய மகனாகக் கதையில் நிலைபெற்றிருக்கவேண்டும். ஆனால், இயக்குநர் நினைத்தது வேறு. வில்லன் லாலா ஒடுக்கப்படும் காட்சியிலிருந்து மதர் இண்டியாவின் கடைசிக் காட்சிக்குள் பிர்ஜு வில்லனாக மாறுகிறான்.

மணப்பெண்ணாகக் கிராமத்துக்கு வரும் ராதா, வயதாகிக் கடைசியில் மணப்பெண்ணைக் காப்பதற்காகத் துப்பாக்கி ஏந்தி மதர் இண்டியாவாக மாறும் வரையில் அவர்தான் கதையைத் தாங்கிப் பிடிக்கிறார்.

ராதாவைச் சுற்றிலும் வந்து செல்லும் ஆண்கள் ஒவ்வொருவரும் ராதாவின் உன்னதத்தையும் தியாகத்தையும் உயர்த்துகின்றனர். கணவனாக வரும் ஷாமு மனதறிந்து ராதாவின் மீது எதையும் திணிப்பதில்லை. நிலத்தில் உழைப்பதும், எப்படியாவது கடனிலிருந்து வெளியேறுவதும், மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உழைப்பதுதான் ஷாமுவின் வாழ்க்கையாக இருக்கிறது. கைகள் இழந்து யாருக்கும் உதவ இயலாமற் போன பின்னும் உடனே ஷாமு ஊரைவிட்டுச் செல்லவில்லை. லாலாவால் அவமானப்படுத்த பின்னர், தான் யாருக்கும் பயனற்றவன் எண்ணம் தாக்குவதால்தான் ஷாமு அந்த முடிவை எடுப்பதாகத் தோன்றுகிறது. ஷாமு ராதாவைப் பிரிவது, ராதாவின் பாத்திரத்தின் அழுத்தத்தை உயர்த்துகிறது.

லாலா, அன்றைய ஜமீன்தார் – பண்ணையாரின் வார்ப்பு. கடன் கொடுத்து மக்களின் சொத்துகளை ஒவ்வொன்றாகத் தனதாக்கிக்கொள்வதுடன், ராதாவின் மீது உள்ள ஈர்ப்பும் லாலாவைக் கதையுடன் ஒன்றவைக்கிறது. லாலாவுக்கு வயதான பின்னும் ராதாவின் மீதுள்ள ஈர்ப்பு தீர்ந்தபாடில்லை. கடன் வசூலிக்க அடியாள்களுடன் வயலுக்கு வந்து முரட்டுத் தனமாக பிர்ஜுவைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வேளையில், அங்கு ராதா வருகிறார், லாலாவைத் தடுக்கிறார். அதுவரையில் கடன் வசூலில் கறாராக இருந்த லாலா, ராதாவைக் கண்டதும் உடனே நாடகம் போடுவார். ‘கடன் என்ன கடன்? எப்போது வேண்டுமானாலும் வசூல் செய்யலாம்’ எனத் தன் அடியாள்களைத் திட்டி, ராதாவுக்காகத் தன்னிடம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் ஏக்கத்தை வெளிப்படுத்துவார். அது ஒரு சிக்கலான ஆண் பாத்திரம். ராதாவின் மீது ஈர்ப்பும் உண்டு, ஆனால் பணத்தாசையால் ராதாவின் வளையல்களை அடகு பிடிப்பதும் உண்டு. தன்னுடைய ஆசைக்கு ராதா உடன்பட்டால் மட்டுமே பணத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக – கறாராக இருக்கும் பணப்பித்து லாலாவுக்கு உண்டு.

பிர்ஜு, ராதாவின் ஒரு மகன்தான் அவரை மதர் இண்டியாவாக உயர்த்தும் கதாபாத்திரம். லாலா கொல்லப்பட்டதும் திரையில் புதிய வில்லனாக பிர்ஜு உருவெடுக்கிறான். அதுவரையில் புரட்சியாளனாக சித்தரிக்கப்பட்ட அவன், லாலவின் மகள் ரூபாவைக் கடத்தும் காட்சியில் வில்லனாகிறான். லாலாவைக் கொல்வதை ஏற்கும் யாரும் லாலாவின் மகளைக் கடத்துவதை ஏற்பதில்லை. லாலா அத்தனை நாள்களாகத் தன் குடும்பத்தைச் சுரண்டியது லாலாவின் கொலையை நியாயப்படுத்தும். ஆனால், பழிவாங்கும் செயலாகவே இருப்பினும் ரூபாவை கடத்துவதை யாராலும் நியாயப்படுத்த முடியாது.

ராதாவின் வசனங்களும் இதை ஆழமாகச் சொல்லும். “அவள் லாலாவின் மகளாக இருக்கலாம். ஆனால், இந்தக் கிராமத்தின் மகள். என்னுடைய கிராமத்தின் ஒரு பெண்ணை நீ கடத்திச் செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது” என்னும் ராதா, துப்பாக்கியை ஏந்தியிருந்தாலும் தன்னைக் கொல்லமாட்டாள் என்னும் நம்பிக்கையில் பிர்ஜு ரூபாவைக் கடத்திச் செல்கிறான்.

தன் கிராமத்திலிருந்து ஒரு பெண்ணைக் கடத்திச் செல்லும் கொள்ளைக்காரனாக மட்டுமே ராதா பிர்ஜுவைப் பார்க்கிறார். மகன், புரட்சியாளன், கிராம மக்களின் சொத்துகளை லாலாவிடமிருந்து விடுவித்தவன், என வேறு எதற்கும் அவர் முன்னுரிமை தரவில்லை. என் நிலத்தின் பெண்ணுக்கு இழுக்கு வருமென்றால் மகனாக இருப்பினும் மன்னிக்கமாட்டேன், கொல்வேன் என பிர்ஜுவைச் சுடுகிறார்.  

வில்லனின் தீக்குணம் எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்குக் கதாநாயகனைக் கதைகள் உயர்த்தும் என்னும் பொது விதி மதர் இண்டியாவையும் உயர்த்துகிறது. அவ்வளவு நேரம் புரட்சியாளனாக இருக்கும் பிர்ஜு பெண்ணைத் தொட்டதும் கொள்ளைக்காரனாகிறான். இந்தக் காட்சியின் உள்ளுறையாக புரட்சியாளர்கள் மீது சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கை நிற்கிறது. புரட்சியாளன் பண்ணையாரைக் கொள்ளையடிப்பதை நியாயப்படுத்தும் சமூகம், அதே புரட்சியாளன் பெண்ணுக்கு மானபங்கத்தை உண்டாக்காமல் கடத்திச் செல்வதும் அவள் மாண்பைக் குறைப்பதாக நினைத்து ஏற்பதில்லை. சுருக்கமாக, செல்வத்தைக் கொள்ளையடிப்பது புரட்சியாளனுக்கு அனுமதிக்கப்பட்டது. அவன் பெண்ணைத் தொட்டால், அவனுடைய புரட்சித்தன்மை நீர்த்துப்போகிறது.

மகனையே கொன்று பெண்ணைக் காத்து மதர் இண்டியாவாக ராதா உயர்கிறார்.

‘மதர் இண்டியா’ என்னும் பெயரின் பின்னால் இருக்கும் அரசியலையும் உற்று  நோக்க வேண்டும்.

மதர் இண்டியா என்னும் புத்தகம் 1927இல் வெளியானது. அதன் ஆசிரியர் காத்தரீன் மாயோ என்னும் அமெரிக்கர். அந்தப் புத்தகம் இந்தியப் பெண்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதைப் பேசியது. பேசிய கருத்து அதுவாக இருப்பினும் அதன் உள்நோக்கம் இந்தியாவின் கலாசாரத்தைக் கேள்விகேட்பதும், இந்திய விடுதலைப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்துவதும்தான். புத்தகத்துக்கு இந்தியா முழுதும் எதிர்ப்பு வலுத்தது. புத்தகம் எரிக்கப்பட்டது. அது பேசிய கருத்துகளை மறுத்துப் பல புத்தகங்கள் எழுதப்பட்டன. மகாத்மா காந்தியும் அந்தப் புத்தகத்தை எதிர்த்ததால் அது அதிர்வலைகளை உண்டாக்கியது. புத்தகத்தை அன்னி பெசண்ட் அம்மையார் எதிர்த்தார். பெர்னார்ட் ஷா அமெரிக்காவின் அடக்கு முறைகள் இந்தியாவுக்குத் தெரியாது அல்லவா என்னும் கருத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அந்தப் புத்தகம் தொடர்பான சர்ச்சைகள் நீண்டுகொண்டே இருந்தன. மதர் இண்டியாவைப் பெயெரின் ஒரு பகுதியாகக் கொண்ட புத்தகங்கள் வெளிவந்தன. அவற்றுள் காத்தரீனின் மதர் இண்டியவுக்கு ஆதரவாக எழுதப்பட்ட புத்தகமும் ஒன்று.

அதன் பின்னர் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து இந்தியாவின் கலாசாரத்தையும் இந்தியப்பெண்ணின் பெருமையையும் உயர்த்திப் பிடிக்கும் கதையமைப்புள்ள திரைப்படம், ‘மதர் இண்டியா’ வெளியானது.  

இந்த வரலாற்றுப் பின்னணியுடன் ராதாவை இணைத்துப் பார்க்கையில் ராதாவைத் திரையில் வந்து சென்ற ஒரு கதாபாத்திரம் என்ற அளவில் மட்டும் பார்க்க இயலாது. திரைப்படமேயானாலும், அந்தப் பெயரின் கனம் திரைப்படத்தின் கதையின் மீதும் ராதாவின் மீதும் அழுத்தத்தைத் தந்தது.

வாழ்க்கையின் மீது பற்று விடுபட்டபோது ‘வாழ்க்கை வாழத்தான்’ என்னும் கருத்தில் ஒலிக்கும் திரைப் பாடல்கள் வாழ்வின் மீது உள்ள பற்றினை மீட்டுத் தந்தது பலரும் கடந்துவந்திருக்கும் நிகழ்வு. கவிஞர் வாலி அவர்களும் தன்னுடைய உரையாடல்களில் கண்ணதாசனின் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் தனக்கு நம்பிக்கை அளித்ததைச் சொல்லியிருக்கிறார். மதர் இண்டியாவின் ஒரு பாடல் அப்படியான தாக்கத்தை அந்நாள்களில் உண்டாக்கியது.

உலகில் பிறந்துவிட்டோம் வாழத்தான் வேண்டும்

வாழ்க்கையே ஒரு விஷமாயினும் அருந்தத்தான் வேண்டும்

(துனியாமேன் ஹம் ஆஹேன் ஹை ஜீனாஹி படேகா

ஜீவன் ஹை ஸஹ்ர்தோ பீனாஹி படேகா)

ஷகீல் பதாயுனியின் வரிகள், நௌஷாதின் இசையமைப்பில், லதா மங்கேஷ்கரின் குரலில் (மீனா காடிக்கர், உஷா மங்கேஷ்கர் இருவரும் சேர்ந்து பாடியிருப்பர்) திரையிசை ரசிகர்களைக் கட்டிப்போட்டது. திரைப்படத்தின் சுவரொட்டிகளில் நர்கீஸ் நுகத்தடியைச் சுமந்து நிற்பது இந்தப் பாடல் காட்சிதான்.

இதன் பின்னணி இசையும் மேற்கத்திய இசைக்கலவையக் கொண்டது. பிளானட் பாலிவுட் பட்டியலிட்ட இந்தியத் திரைப்படங்களின் நூறு திரைப்பாடல்களில் (sound track) மதர் இண்டியாவும் இடம்பெற்றுள்ளது. பெயர்க் காட்டும் காட்சியில் இந்தியாவின் முன்னேற்றத்தைக் காட்டும்போதே பின்னணி இசை, திரைக்காட்சிக்கு உணர்வூட்டுவதைத் தொடங்கிவிடும்.  

அன்றைய காலகட்டத்தில் மதர் இண்டியா பேசப்பட்ட படமாக இருக்கலாம். வளர்ந்த இன்றைய இந்தியாவில், பெண்ணுரிமை என்பது குடும்பம் பெண்ணின் பெருமை சமுதாயம் என்னும் கட்டுக்குள் நிற்காமல், ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் ‘செவ்வியல்’ என்னும் தன்மையைத் தாண்டி ‘மதர் இண்டியா’வின் இடம் என்னவாக இருக்கும் என்னும் கேள்வி எழலாம். ஆயினும், ‘மதர் இண்டியா’ வெளியாகி எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும், பெண்ணுரிமை நம்மிடையே பேசுபொருளாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

எழுபது திரை விமர்சகர்களின் பங்களிப்பில், ஆண்டு 2003இல் வெளியான ‘நீங்கள் இறப்பதற்கு முன் காணவேண்டிய 1001 திரைப்படங்கள்’ என்னும் புத்தகத்தில் மதர் இண்டியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்தியத் திரைக்குப் பல கதைகளைத் தந்த மதர் இண்டியா, நர்கீஸ் – சுனில் தத் இருவரின் நிஜ வாழ்க்கைக் காதலுக்கும் ஒரு கதையைத் தந்தது. நர்கீஸ் – சுனில் தத் இருவரின் காதல் இத்திரைப்படத்தின் அரங்கில்தான் தொடங்கியது. படப்பிடிப்பில் தீப்பிடிக்கும் காட்சியில் எதிர்பாராதவிதமாக நர்கீஸ் தீயின் உள்ளே சிக்கிக்கொண்டார். சுனில் தத் தீக்குள் பாய்ந்து நர்கீஸைக் காப்பாற்றினார். நர்கீஸுக்குக் குறைவான காயங்களும், சுனில் தத்துக்கு அதிகமான தீக்காயங்களும் உண்டாகின. அதன் பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்து, திரைப்படம் வெளியான சில மாதங்களுக்குப் பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஆஸ்கருப் பரிந்துரைக்கப்பட்டது, அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்ஃபேர் விருது, சிறந்த இயக்குநர் மெஹபூப் கான், சிறந்த நடிகை நர்கீஸ், சிறந்த ஒளிப்பதிவு ஃபர்தூன் இரானி, சிறந்த ஒலிப்பதிவு கௌஷிக் என வரிசையாக விருதுகளைப் பெற்றது, இந்தியத் திரையில் பெண்ணின் பெருமை பேசும் படங்களில் முதல் வரிசையில் இருப்பது என்னும் பல பதக்கங்களைப் பெற்று நிலைத்திருப்பது மதர் இண்டியா.

திரைப்படங்களில் ஆர்வமுள்ளோர் அவசியம் காணவேண்டிய திரைப்படம்.

Author Image

அபுல்கலாம் ஆசாத்

ஸீரோ டிகிரி இலக்கிய விருதுப் போட்டியில் நெடும், குறும்பட்டியல்களில் இடம்பெற்றவர்.’கடற்கழியோடி’ நாவலுக்கு முதல் பரிசு வென்றவர். நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
Karu uru

கரு உரு 06

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026
singeetham

கற்பனாவாதி Unlimited

November 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
Trend-kottaai

 ட்ரெண்டு கொட்டாய் 17 – திரை அனுபவத்துக்கு அழைப்பவர்கள்

November 1, 2026
Karu uru

கரு உரு 06

November 1, 2026
Mother india

 பாலிவுட் க்ளாசிக்ஸ் மதர் இண்டியா

November 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
    • பாலிவுட் க்ளாசிக்ஸ்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?