The Talkie
Thursday, October 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home கட்டுரைகள் இந்தியத் திரைப்படங்கள்

ஜட்டன்பாய் மற்றும் பிப்போ- திரையிசையின் ஆதி ஆளுமைகள்

The Talkie by The Talkie
October 1, 2026
in இந்தியத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
ஜட்டன்பாய் மற்றும் பிப்போ- திரையிசையின் ஆதி ஆளுமைகள்
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon ராஜா.ஆர்


திரையரங்கின் இருள் மெல்ல அடர்ந்து, கருப்பு-வெள்ளைக் கற்றைகள் திரையில் பாயும்போது, பின்னணியில் ஒலிக்கும் ஒரு மெல்லிசை நம் ஆன்மாவை ஊடுருவுகிறது. திரைப்படம் என்பது வெறும் பிம்பங்களின் அசைவல்ல; அது உணர்வுகளின் கடத்துதல். அந்த உணர்வுக்கு உயிர் கொடுக்கும் இசையமைப்பாளர் நாற்காலி என்பது, இந்தியத் திரையுலகின் தொடக்க காலத்தில் ஆண்கள் மட்டுமே அமரக் கூடிய ஒரு புனித சிம்மாசனமாகப் பார்க்கப்பட்டது.

1930-கள் – இந்திய சினிமா தனது மௌனத்தைக் கலைத்து, பேசவும் பாடவும் தொடங்கிய ‘பேசும் படங்களின்’ (Talkies) தொடக்கக் காலம். அக்காலத்தில் திரையரங்கு என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான கொட்டகை அல்ல; அது ஒரு பண்பாட்டுப் புரட்சியின் களம். ஆனால், கேமராவுக்கு முன்பும் பின்பும் ஆண்களின் ஆதிக்கக் கோட்டையே உயர்ந்திருந்தது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவருமே ஆண்களாகவே வீற்றிருந்தனர். திரைப்படங்களில் பாடல்களின் பங்கு இன்றியமையாததாக மாறிய அந்தச் சூழலில், ஒரு பெரும் முரண் எழுந்தது. “நல்ல குடும்பத்துப் பெண்கள்” திரையுலகில் நடிப்பதையோ அல்லது பாடுவதையோ கடுமையான இழுக்காகப் பார்த்தது இந்தியச் சமூகம். இதனால், பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைகளைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்த தவாயிஃப் (Tawaif) சமூகத்தைச் சேர்ந்த பெண்களே திரையுலகின் முதல் கதாநாயகிகளாகவும் பாடகிகளாகவும் களமிறக்கப்பட்டனர்.

அப்படி களமிறங்கியவர்களில் இரு பெண்கள், இந்தியத் திரையிசையின் வரலாற்றையே தலைகீழாக மாற்றி அமைத்தனர். ஒருவர், ஜட்டன்பாய் (Jaddanbai) மற்றொருவர், இஷ்ரத் சுல்தானா என்ற இயற்பெயர் கொண்ட பிப்போ (Bibbo). இவர்கள் இருவரும் வெறும் பாடகிகளாகவோ அல்லது கவர்ச்சி நடிகைகளாகவோ மட்டும் நின்றுவிடவில்லை. ஆண்களுக்குப் பிரத்தியேகமானது எனக் கருதப்பட்ட ‘இசையமைப்பாளர்’ பீடத்தைக் கைப்பற்றி, இந்தியச் சினிமா வரலாற்றில் முதல் பெண் இசை ஆளுமைகளாக அரியணை ஏறினர். ஆணாதிக்கச் சமூகத்தின் புறக்கணிப்புகளையும், தனிப்பட்ட வாழ்க்கையின் கண்ணீர் கதைகளையும் தாண்டி இவர்கள் எழுதிய இசை வரலாறு, இந்தியப் பெண்ணிசையின் ஆதிச்சுவடாகும்.

ஜட்டன்பாய் மற்றும் பிப்போவின் பயணத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கு முன்பாக உலகிலும், இந்தியாவிலும், நம் தமிழ் மண்ணிலும் பெண்ணிசையின் வேர்கள் எவ்வாறு தடைகளைத் தாண்டித் துளிர்த்தன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது  அவசியமாகிறது

ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய சினிமாத் துறைகளில் ஆர்கெஸ்ட்ரா என்பது ஆண்களின் பிரத்தியேக பேரரசாக இருந்தது.

ஜெர்மைன் தைஃபேர் (Germaine Tailleferre): 1930-களில் பிரான்ஸைச் சேர்ந்த இவர் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியபோது, அவை “பெண்மையின் மென்மை” கொண்ட சிறிய படைப்புகளாகக் குறுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டன.

ஷெர்லி வாக்கர் (Shirley Walker): ஹாலிவுட்டின் பொற்காலத்தில், பிரம்மாண்டமான சிம்போனி ஆர்கெஸ்ட்ராக்களை ஆண்கள் மட்டுமே வழிநடத்த முடியும் என்ற பிம்பத்தை 1980-களில் உடைத்தெறிந்தவர். Batman: The Animated Series மற்றும் Final Destination திரைப்படங்களின் மூலம் ஆக்ஷன் படங்களுக்குப் பெண்களாலும் அதிரடி இசையமைக்க முடியும் என்பதை நிரூபித்தார். ஹில்தூர் குத்னாதோத்திர் (Hildur Guðnadóttir): 2019-இல் Joker திரைப்படத்திற்காகத் தனி நபராகச் சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருதை வென்று வரலாறு படைத்தார்.

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை, 1930-களின் தொடக்க காலத்திலேயே  ஜட்டன்பாய் மற்றும் பிப்போவின் என்ற இரு  பெண்களின் இசைப் பங்களிப்புத் தொடங்கியது.இவர்களைத் தொடர்ந்து  சரஸ்வதி தேவி (Saraswati Devi): பார்சி சமூகத்தின் எதிர்ப்புகளையும் தாண்டி தன் பெயரை மாற்றிக்கொண்டு களமிறங்கிய இவர், 1935-இல் பாம்பே டாக்கீஸின் ஜவானி கி ஹவா மூலம் வணிக ரீதியான முதல் முழுநேரப் பெண் இசையமைப்பாளராக உருவெடுத்தார்.

புகழ்பெற்ற பின்னணி பாடகி இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர், பெண்ணாக இசையமைத்தால் திரையுலகம் ஏளனமாகப் பார்க்கும் என்பதால் ‘ஆனந்த்கன்’ என்ற ஆண் புனைப்பெயரில் மராத்தி படங்களுக்கு இசையமைத்து மகாராஷ்டிர மாநில அரசின் விருதைப் பெற்றார்.

உஷா கன்னா (Usha Khanna): 1959-இல் Dil Deke Dekho மூலம் அறிமுகமாகி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த மாபெரும் ஆளுமை. Souten (1983) படத்திற்காக ஃபிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண் இசையமைப்பாளரானார்.                                                தற்போது   ஸ்னேகா கான்வால்கர் (Sneha Khanwalkar): Gangs of Wasseypur போன்ற படங்களின் மூலம் பாலிவுட்டின் புதிய அலை இசையை வழிநடத்தி வருகிறார்.

தமிழ் திரையுலகில் பெண்களின் இசைப் பயணம் என்பது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், ஆழமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

பி. பானுமதி (Bhanumathi Ramakrishna): 1953-இல் வெளிவந்த சக்ரபாணி படத்தின் மூலம் நடிகை, பாடகி, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவின் முதல் பெண் இசையமைப்பாளராக அவதாரமெடுத்தார்.

இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி (Bhavatharini): Mitr, My Friend மற்றும் தமிழில் அமிர்தம், மாயநதி போன்ற படங்களின் மூலம் மென்மையான இசைப் பாதையை உருவாக்கினார். ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காகத் தேசிய விருது பெற்று தமிழுக்கு பெருமை சேர்த்தார் .ஏ.ஆர். ரைஹானா (மச்சி), ஸ்ருதிஹாசன் (உன்னைப் போல் ஒருவன்), மற்றும் கதீஜா ரஹ்மான் வரை தமிழ் மண்ணில் பெண் இசையமைப்பாளர்களின் சுவடுகள் தொடர்கின்றன.

ஜட்டன்பாய் மற்றும் பிப்போ ஆகிய இருவரும் வளர்ந்த சூழல், அவர்களின் இசையார்வத்திற்கு உரமிட்ட அதே வேளையில், சமூக முத்திரையையும் குத்தியது.

ஜட்டன்பாய் 1892-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஆன்மீக நகரமான வாரணாசியில் பிறந்தார். இவரது தாய் தில்பாத் ஜான் (Daleepbai), அக்காலத்தின் புகழ்பெற்ற தவாஃபி கலைஞர். தாயின் வழிகாட்டலில் இளம் வயதிலேயே தும்ரி (Thumri), கஜல் (Ghazal) மற்றும் தாத்பரா (Dadra) போன்ற பாரம்பரிய இந்திய இசை வடிவங்களில் தீவிர பயிற்சி பெற்றார்.
கொல்கத்தாவின் புகழ்பெற்ற இசை மேதைகளான உஸ்தாத் மோசம் அலி கான் மற்றும் உஸ்தாத் பார்கத் அலி கான் போன்றவர்களிடம் இசையைக் கற்றுத் தேர்ந்தார். பம்பாய்க்கு வரும் முன்பே, கொல்கத்தாவின் கிராமபோன் நிறுவனங்களில் இவரது குரலில் வெளியான தும்ரி தட்டுகள் வட இந்தியா முழுவதும் பிரபலம்.

இஷ்ரத் சுல்தானா 1906-ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். சிறுவயதிலேயே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த இவர், ‘பிப்போ’ என்ற புனைப்பெயருடன் மேடை கச்சேரிகளில் பாடத் தொடங்கினார்.

இவரது தெளிவான உச்சரிப்பும், குரலில் இருந்த கம்பீரமும் அக்காலத்து நாடகக் கொட்டகைகளில் பெரிய வரவேற்பைப் பெற்றன. பாரம்பரிய இசையோடு நாடக இசையின் மக்கள் தன்மையையும் உள்வாங்கியவராக பிப்போ விளங்கினார்.

1934-1935 வரலாற்று திருப்புமுனை – முதல் பெண் இசையமைப்பாளர் யார்?

இந்திய திரையுலக வரலாற்றில் முதல் பெண் இசையமைப்பாளர் யார் என்பதில் நீண்டகாலமாக சில குழப்பங்கள் நிலவி வந்தன.

1934-ஆம் ஆண்டு வெளியான Adl-e-Jahangir திரைப்படத்தில் பிப்போ பாடகியாகவும் நடிகையாகவும் மட்டுமே பணியாற்றினார். இப்படத்திற்கு ஜி.எச். கான் (G.H. Khan) மற்றும் பி.எஸ். ஹூக்லே (B.S. Hoogley) ஆகிய ஆண் இசையமைப்பாளர்களே இசையமைத்தனர். பிப்போ பின்னாளில் சில பாடல்களுக்கு மெட்டமைத்த போதிலும், முழுப்படத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட இசையமைப்பாளராக அவர் மாறவில்லை.

1935-ஆம் ஆண்டு வெளியான Talash-E-Haq திரைப்படம் இந்திய சினிமாவின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மைல்கல். இப்படத்திற்குப் பாடல்களை எழுதி, மெட்டமைத்து, ஆர்கெஸ்ட்ராவை வழிநடத்தியவர் ஜட்டன்பாய்.

இதன் மூலம் இந்தியத் திரையுலகின் ஆவணப்படுத்தப்பட்ட முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையை ஜட்டன்பாய் பெற்றார். அதுமட்டுமின்றி, இப்படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என்ற முப்பெரும் சாதனைகளையும் படைத்தார். இப்படத்தில் அவரது மகள் பாபி (பின்னாளில் புகழ்பெற்ற நடிகை நர்கிஸ் – Nargis Dutt) சிறுமியாக அறிமுகமானார்.

ஜட்டன்பாயும் பிப்போவும் அடைந்த வெற்றிகள் கம்பள விரிப்பில் கிடைத்தவை அல்ல. 1930-களில் பம்பாய் ஸ்டுடியோக்கள் ஆண்கள் மட்டுமே ஆளும் பேரரசாக இருந்தன. ஆர்கெஸ்ட்ராவில் பணியாற்றிய வயலின், தப்லா, கிதார் கலைஞர்கள் அனைவரும் ஆண்கள்.

“ஒரு தவாயிஃப் பெண் எங்களுக்கு இசை சொல்லிக் கொடுப்பதா? ஆர்கெஸ்ட்ராவின் தாளத்தையும் சுருதியையும் தீர்மானிக்கும் அதிகாரம் ஒரு பெண்ணுக்கு இருக்கக் கூடாது.” —என அன்றைய பம்பாய் ஸ்டுடியோக்களில் எழுந்த ரகசிய சலசலப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது

பாரம்பரியக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும் பத்திரிகையாளர்களும் இவர்களது படைப்புகளை “கலாச்சார சீரழிவு” என்று விமர்சித்தனர்.

ஜட்டன்பாய் தனது சொந்த நிறுவனமான ‘சங்கீத் பிலிம்ஸ்’ (Sangeet Films) தொடங்கியபோது, ஒரு பெண்ணின் நிறுவனத்திற்கு நிதியளிக்க வங்கிகளும் விநியோகஸ்தர்களும் மறுத்தனர்.

ஒதுக்கப்பட்ட அங்கீகாரம்:
பிப்போ பாடி, இசையமைப்பில் துணையாக இருந்த பல பாடல்களுக்கு, அன்றைய முன்னணி ஆண் இசையமைப்பாளர்களே சுவரொட்டிகளில் உரிமை கோரினர்.

 சாதனைகளின் உச்சம் – ‘மேடம் ஃபேஷன்’ முதல் ‘பார்க்கிங்’ வரை
அடுக்கடுக்கான எதிர்ப்புகளையும் தாண்டி, ஜட்டன்பாயும் பிப்போவும் தங்களின் தனித்துவமான இசையால் இந்திய ரசிகர்களைக் கட்டிப்போட்டனர்.

Madam Fashion (1936): பெண்களின் நவீனத்துவத்தைப் பேசிய இத்திரைப்படத்திற்கு ஜட்டன்பாய் அமைத்த மேலைநாட்டு மற்றும் இந்திய பாரம்பரிய இசையின் கலவை பெரும் வரவேற்பைப் பெற்றது.

Moti Ka Haar (1937): பாரம்பரிய தும்ரி ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் அமைத்த பாடல்கள் அக்கால வானொலிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டன.

Hridhay Mandir (1936): உணர்ச்சிப்பூர்வமான பின்னணி இசையை உருவாக்கியதில் ஜட்டன்பாயின் இசை நுட்பம் வெளிப்பட்டது.

பிப்போ 1930-கள் மற்றும் 40-களில் முன்னணி கதாநாயகியாகவும் பாடகியாகவும் கோலோச்சினார். Gharib Ka Lal (1939) போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபல்யமாயின. லதா மங்கேஷ்கர் காலத்திற்கு முன்பே, தனது வசீகரமான குரலாலும் துள்ளலான மெட்டுகளாலும் பம்பாயின் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக உயர்ந்தார்.

ஜட்டன்பாயும் பிப்போவும் இசையமைத்த விதம் அன்றைய திரையிசையில் ஒரு பெரும் அழகியல் புரட்சியை ஏற்படுத்தியது. வெறும் மெட்டுகளை அமைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், இந்திய செவ்வியல் ராகங்களை வெகுஜன சினிமா ரசனைக்கு ஏற்ப உருமாற்றினர்.

தும்ரி மற்றும் கஜல் வடிவம்: ஜட்டன்பாய் தனது இசையமைப்பில் பிலாவல் (Bilawal), கமாஜ் (Khamaj) மற்றும் பைரவி (Bhairavi) ராகங்களை அதிகமாகப் பயன்படுத்தினார். Talash-E-Haq திரைப்படத்தில் இவர் அமைத்த மெட்டுகள் மெதுவான தாளத்தில் (Vilambit Laya) தொடங்கி, உணர்வுகளின் உச்சத்தில் வேகமான தாளத்திற்கு (Drut Laya) மாறும் தன்மையைக் கொண்டிருந்தன.

ஆர்கெஸ்ட்ரா அமைப்பு:  சாரங்கி, தப்லா மற்றும் ஹார்மோனியம் ஆகிய பாரம்பரிய கருவிகளுடன் முதன்முறையாக மேலைநாட்டு கிதார் மற்றும் வயலின் இசையை இணைத்து புதுமையான ‘ஹைப்ரிட்’ ஒலியை உருவாக்கினார்.

பிப்போவின் குரல் தடிமனான, அதே சமயம் வசீகரமான ஆழத்தைக் கொண்டிருந்தது (Contralto voice). நாட்டுப்புறமும் செவ்வியலும்: பிப்போ பாடிய பாடல்களில் பஞ்சாபி மற்றும் அவதி பகுதி நாட்டுப்புற தாளங்களின் சாயல் வெளிப்பட்டது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது குரலை வளைத்து பாடும் ‘மீண்ட்’ (Meend) நுட்பத்தை அவர் இயல்பாகப் பயன்படுத்தினார்.

1930-களின் திரையிசை என்பது பாடல்களின் கவித்துவ வரிகளாலும், நேரடி ஒலிப்பதிவு முறையாலும் (Live Recording) தனித்துவம் பெற்றது. பிப்போ மற்றும் ஜட்டன்பாய் பாடி, இசையமைத்த சில முக்கிய பாடல்களின் வரிகளும் அவற்றின் அழகியலும் இதோ:

பிப்போவின் புகழ்பெற்ற duet (1937 – Tujhi Meri Zindagi)
Gharib Ka Lal திரைப்படத்திற்காகப் பாடகர் ஜி.எம். துர்ரானியுடன் (G.M. Durrani) இணைந்து பிப்போ பாடிய பாடல் இந்திய திரையிசையின் ஆதி காதல் பாடல்களில் ஒன்று.

“Tujhi Meri Zindagi, Tujhi Meri Bandagi…”
(நீயே என் வாழ்க்கை, நீயே என் வணக்கம்…)

 இப்பாடலில் பிப்போவின் குரல் காதலனின் குரலுக்கு இணையாகக் கம்பீரமாக ஒலிக்கும். பெண்களின் குரல் மென்மையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்து, காதலின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக இப்பாடலின் மெட்டு அமைக்கப்பட்டிருந்தது.
 ஜட்டன்பாயின் Talash-E-Haq (1935) பாடல்கள்:

ஜட்டன்பாய் இசையமைத்து பாடிய பாடல்கள் ஆன்மீகத் தேடலையும், பெண்ணின் அந்தரங்கக் குமுறலையும் பிரதிபலித்தன.

“Haq Ki Talash Mein Bhatkae Dil…”
(உண்மையைத் தேடி அலைகிறது என் மனம்…)

பிலாவல் ராகத்தின் அமைப்பில், தப்லாவின் மெதுவான தாளக் கட்டில் அமைந்த இப்பாடல், ஜட்டன்பாயின் சொந்த வாழ்க்கைப் போராட்டத்தின் இசையாக்கமாகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

 நர்கிஸ் – ஜட்டன்பாய்: தாய்-மகள் பாசமும் திரைப்பயணமும்

ஜட்டன்பாயின் வாழ்க்கையில் மிக முக்கியமான அத்தியாயம் அவரது மகள் பாபி (Fátima Rashid), பின்னாளில் இந்திய சினிமாவின் பேரரசியாக விளங்கிய நர்கிஸ் தத் (Nargis Dutt).

 தாயின் தொலைநோக்குப் பார்வை:

ஆணாதிக்க சமூகத்தில் ஒரு தவாயிஃப் பெண்ணின் மகளாகப் பிறப்பது எத்தகைய சவாலானது என்பதை ஜட்டன்பாய் அறிந்திருந்தார். அதனால் தன் மகளுக்கு உயர்தரக் கல்வியையும், செவ்வியல் நடனத்தையும், இசையையும் கற்றுக்கொடுத்தார்.

1935-இல் தன் சொந்தத் தயாரிப்பான Talash-E-Haq படத்தில் ‘பேபி ராணி’ என்ற பெயரில் நர்கிஸைக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.


நர்கிஸ் தன் தாயைப் பற்றிப் பகிர்ந்த நினைவுகள்:

பின்னாளில் இந்திய திரையுலகின் மாபெரும் நடிகையாக உயர்ந்த நர்கிஸ், பல பேட்டிகளில் தன் தாயைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்:
“என் தாய் ஜட்டன்பாய் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல; அவர் ஒரு போராளி. அன்றைய சமூகம் எங்களை ஏளனமாகப் பார்த்தபோது, அவர் தன் தலையை உயர்த்தியே நடந்தார். ‘நீ யாருக்கும் சளைத்தவள் இல்லை, திரையில் உன் ஆளுமையை நிறுவு’ என்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர் அவர்தான். நான் அடைந்த அனைத்துப் புகழும் என் தாயின் சலங்கை ஒலியிலும், அவர் அமைத்த மெட்டுகளிலும்தான் தொடங்கின.”
— நர்கிஸ் தத் (பழைய பேட்டி ஒன்றிலிருந்து)

திரையில் பிரகாசித்த இந்த இரு மாபெரும் கலை ஆளுமைகளின் தனிப்பட்ட வாழ்க்கை, மிகுந்த வேதனைகளும் கண்ணீரும் நிறைந்ததாகவே இருந்தது

ஜட்டன்பாயின் திருமண வாழ்க்கை சீராக அமையவில்லை. இவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். கடைசியாக உத்தம்சந்த் மோஹன்சந்த் (அப்துல் ரஷீத்) என்பவரை மணந்தார். சமுதாயத்தின் கடுமையான விமர்சனங்களுக்கும், தன் குடும்பத்தைப் பற்றிய வதந்திகளுக்கும் இடையேதான் தனது இசையமைப்பைத் தொடர வேண்டியிருந்தது. சொந்தத் தயாரிப்பில் ஏற்பட்ட நிதி இழப்புகளால் கடனில் மூழ்கியபோதும், தன் மகள் நர்கிஸை இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக உயர்த்த அவர் அல்லும் பகலும் போராடினார்.

பிப்போவின் வாழ்க்கை மேலும் துயரம் நிறைந்தது. 1947-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது (Partition of India), நிலவிய அரசியல் சூழல் காரணமாக அவர் புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானுக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அது அவரது கலை வாழ்க்கையின் பேரழிவாக மாறியது.

இந்தியாவில் தான் பெற்ற மாபெரும் புகழையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு லாகூருக்குச் சென்ற பிப்போவை, பாகிஸ்தான் திரையுலகம் முற்றிலுமாக ஒதுக்கியது. இந்தியப் பின்னணி கொண்டவர் என்பதால் அவருக்கு இசையமைக்கும் வாய்ப்புகளோ அல்லது கதாநாயகி வேடங்களோ வழங்கப்படவில்லை. சிறிய துணை வேடங்களில் மட்டுமே நடிக்க முடிந்தது.

பாகிஸ்தான் இடப்பெயர்வும், பிப்போவின் வறுமை நிலையும்

1950-கள் முதல் 1980-கள் வரையிலான பிப்போவின் வாழ்க்கை, எந்தவொரு திரைப் படத்தையும் விடக் கொடூரமான சோகம் கொண்டது. இந்தியாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த ஒரு பெண் இசையமைப்பாளர், தனது வாழ்நாளின் இறுதியில் லாகூரின் ஒரு சிறிய வாடகை வீட்டில், உண்ண உணவின்றி, மருத்துவ உதவிக்குக்கூடப் பணமின்றி வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.

 சாமானிய மக்களின் நினைவிலிருந்தும், ஊடகங்களின் வெளிச்சத்திலிருந்தும் அவர் மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டார். ஒரு காலத்தில் பம்பாய் வீதிகளில் இவருடைய கார் செல்லும்போது கூடிய கூட்டம், லாகூரின் இடுக்கான சந்தில் இவர் ஆதரவற்று நடந்தபோது அறியாமல் கடந்து சென்றது.

 ஜட்டன்பாய் தனது 56-வது வயதில், 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி மும்பையில்  காலமானார். தனது மரணத்தின் போது, தன் மகள் நர்கிஸ் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக (பின்னாளில் Mother India மூலம் புகழ்பெற்றவர்) உருவெடுத்ததைக் கண்டு அமைதியடைந்தார்
.
இந்திய திரையுலகில் ஒரு பெண் இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அமைத்த பாதை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

பிப்போவின் மறைவு (1985 மே 25): பாகிஸ்தானில் வறுமையின் பிடியில் வாழ்ந்த பிப்போ, 1985-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி தனது 79-வது வயதில் லாகூரில் ஆதரவற்ற நிலையில் காலமானார்.

இந்திய சினிமா வரலாற்றின் ஆதி பெண் ஆளுமைகளுள் ஒருவரான இவரது மறைவு எந்தவொரு பெரிய செய்தித்தாளின் முகப்புச் செய்தியாகவும் மாறவில்லை என்பது சினிமா உலக வரலாற்றின் பெரும் சோகம்.


இன்று ஹில்தூர் குத்னாதோத்திர் ஆஸ்கார் மேடையில் நிற்பதற்கும், உஷா கன்னா 100 படங்களுக்கு இசையமைத்ததற்கும், ஸ்னேகா கான்வால்கர் அல்லது கதீஜா ரஹ்மான் திரையிசையில் புதுமைகளைச் செய்வதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பே, சமூகத்தின் வசவுகளையும் ஆணாதிக்க அமைப்பின் தடைகளையும் உடைத்தெறிந்தவர்கள் ஜட்டன்பாயும் பிப்போவும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரமோ அல்லது சரியான வரலாற்று இடமோ வழங்கப்படவில்லை. ஆனால், இந்தியத் திரையிசையின் பக்கங்களை ஆழமாகப் புரட்டிப் பார்த்தால், அந்தப் பக்கங்களின் வரிகளுக்கு இடையே அவர்களின் சலங்கை ஒலியும், அவர்கள் உருவாக்கிய மெட்டுகளின் ஈர்ப்பும் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

ஜட்டன்பாயும் பிப்போவும் வெறும் பெயர்கள் அல்ல; அவர்கள் இந்திய திரையுலக ஆணாதிக்க எக்குக்  கோட்டையில் முதன்முதலில் துளையிட்ட வரலாற்றுப் பெண் வீராங்கனைகள்.

Author Image

ராஜா.ஆர்

ஓவியர், வரலாறு, சினிமா தொல்பொருள் துறைகளில் ஆர்வம் கொண்டவர். கவிஞர், கட்டுரையாளர்

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
 ட்ரெண்டு கொட்டாய் 16 –  தேசுலாவும் தேன்மலர்கள்

 ட்ரெண்டு கொட்டாய் 16 -  தேசுலாவும் தேன்மலர்கள்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026
கரு உரு 05

கரு உரு 05

October 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

பாலிவுட் க்ளாசிக்ஸ் – கரம் ஹவா

October 1, 2026
கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

கொஞ்சம் கம்பீரமுள்ள கொஞ்சும் புறா – எம்.எல்.வசந்த குமாரி

October 1, 2026
குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

குரு தத் 100 #10 பாம்பே ஏணியாக, ஏணியே பாம்பாக…

October 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • கரு உரு
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?