The Talkie
Monday, June 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள் ட்ரெண்டு கொட்டாய்

பணிமூப்பும் ஓய்வூதியமும்

The Talkie by The Talkie
June 1, 2026
in ட்ரெண்டு கொட்டாய், தொடர்கள்
A A
0
Share on WhatsappShare on FacebookShare on Twitter

ரமேஷ் வைத்யா

மாலையானால் கொஞ்சம் மதுபானம் செய்யும் பழக்கம் இருந்தது ஒரு காலம். அன்று கொஞ்சம் இளமாலையிலேயே தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டாயிற்று. காரணம், ஒரு சீனியர் கவிஞரின் வேண்டுகோள். அவருக்குத் தீர்த்தவாரி செய்யவேணுமென்று இலக்கிய உற்சாகம். தமிழிலக்கியத்தின் கவிஞ அண்ணாச்சிகளில் அவர் ஒருவர். தென் மூலை மலையாள எல்லையிலிருந்து ஓர் அண்ணாச்சி. கொஞ்சம் இப்புறமாக நெல்லைச் சீமையில் பிரசித்தி கூடுதல் பெற்ற ஒருவர். மூன்றாவதாக கோவில்பட்டியாரான இவர்.

உற்சாகமாகப் புறப்பட்டுப் பானம் சார்த்தியாயிற்று. நேரம் காலம் கடந்து சஞ்சாரங்கள் நடக்கும்போது அண்ணாச்சி ஆர்வமாகக் கேட்டார்: “டீயெம்மெஸ் நம்பர் இருக்கா தம்பீ?”

அப்போது நாங்கள் வேலை பார்த்த அலுவலகத்தில் மேற்படி டீயெம்மெஸ்ஸின் அத்யந்த தாஸராக ஓர் அதிகாரி இருந்தார். அவருடனான புழக்கத்தில் என்னிடம் நம்பர் இருந்து தொலைத்தது. பிசிஓக்கள் வழக்கொழியாத காலமா… ஒரு பூத்துக்குப் போய்விட்டோம்.

அண்ணாச்சி டயல் செய்ய எடுத்தவர் டீயெம்மெஸ். “வணக்கம் சார். ஒங்களோட நூத்துக்கணக்கான பாட்டைக் கேட்டு மயங்குன பல லட்சம் பேர்ல நானும் ஒருத்தன்” என்று தொடங்கினார் அண்ணாச்சி.

அந்தப் பக்கம் பாடகருக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

இப்போதே சொல்லிவிடுகிறேன். நாங்கள் செய்தது பெரிய தவறு. இன்றைய இளைஞர்கள் யாரும் இப்படிச் செய்யக் கூடாது.

அண்ணாச்சி தொடர்ந்தார். “ஆனா, அப்பிடியே போயிருக்கலாமில்ல” என்றவர் கர்ணகடூரமான குரலில், “உன்னை தினம் தேடும் தலைவன் இன்று கவி பாடும் கலைஞன்” என்று மேல் தளத்தில் ஆரம்பித்தார். ‘அட, என்னைவிடக் கேவலமாகப் பாடுகிறாரே’ என்று எனக்கும் சந்தோஷமாகிவிட்டது. என் பங்குக்கு, “புட்பங்கேள்… பாஆஆஆல் பளங்கேள்ள்ள்ள்” என்று அதே ஸ்தாயியில் எடுத்தேன்.

அந்தப் பக்கம் மௌனம்.

அண்ணாச்சி பாட்டை நிறுத்தி, “இப்பிடி எல்லாம் பாடினீங்கன்னா எங்க மனசுக்குச் சங்கடமா இருக்குல்ல? கொஞ்சம் பாத்துச் செய்ங்களேன்” என்றார். முகத்தில் ஒரு பெருமிதம். அந்தப் பக்கம் போன் துண்டிக்கப்பட்டிருக்கும்.

ஒரு ரசிகனான என் மனம் புண்பட்டதென்னவோ உண்மை. அண்ணாச்சியைக் கண்டிக்கும் விதமாக நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு பேச எங்கள் உரையாடல் வளர்ந்தது. எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை அண்ணாச்சி சொன்னார். ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று பல்லவி கொடுத்து தன் இசை வாழ்க்கையை டிராஜேந்தர் அழித்துவிட்டதாக டீயெம்மெஸ் பேட்டி கொடுத்ததைச் சொன்னார்.

நான் நேரிலேயே பார்த்த காட்சி ஒன்று என் மனதில் நிழலாடியது. தீர்த்தம் போட்ட போட்டில் நிழல்கூட ஆடியது. மெல்லிசைக் கச்சேரி ஒன்றில் பாடுவதற்கோ சிறப்பு விருந்தினராகவோ வந்திருந்த பாடகர், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, பாடத் தெரியாதவர்களெல்லாம் பாடுவதாகவும், இசையமைக்கத் தெரியாதவர்களெல்லாம் இசையமைப்பதாகவும், தன்னை யாரும் பயன்படுத்திக்கொள்வதில்லை என்பதையும் உரத்த குரலில் பிரலாபித்துக்கொண்டிருந்த காட்சிதான் அது.

இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று உளவியல் பகுப்பாய்வு செய்வதற்கேற்ற பரவச நிலையில்தான் நாங்கள் அன்று இருந்தோம்.

ரிட்டயர்மென்ட்டை ஏற்றுக்கொள்ள இயலாத மனித இயல்பு.

இதையொட்டி என் மனோநாயகர்களின், ஹ்ருதயநாயகிகளின் ரிட்டயர்மென்ட் பற்றிய சிந்தனைகள் எனக்குள் எழுந்தன.

நாயகர்களிலேயே தனிப்பெரும் தலைநாயகர் சிவாஜிதானே? எத்தனையெத்தனை காவியங்கள், வேறுபாடுகள், ‘ஆசிய மார்லன் ப்ராண்டோ’ என்ற பொருத்தப் பட்டம்… அவர் நடித்து பார்க்க நேர்ந்த ‘ஒன்ஸ் மோர்’. கேரக்டரும் முதியவர்தான். முன்னதாக ‘முதல் மரியாதை’யில் ரசித்த அனுபவம் நினைவில் உண்டு. அதைக்கூட நடுத்தர வயது என்று வகைப்படுத்திவிடக் கூடும். ஆனாலும் சிறுவனான எனக்கு அதுவே முதுமைதான்.

ஏன் அப்படிச் சொல்கிறேனென்றால், நான் ‘இரு மலர்கள்’ படமே பார்த்தவன். அஞ்சு வயசில் ஒண்ணாப்பு சேர்ந்து பதினாறு வயதில் எஸ்ஸெல்சி முடித்து பதினேழில் பியூசி என்று வைத்துக்கொண்டாலுமே பதினெட்டாம் வயதில் முழுமையடைந்து பச்சிளம் டீனேஜராக ‘மாதவிப் பொன்மயிலாள்’ என்று சிவாஜி குரல் எடுத்ததெல்லாம் கண்களின் கருவிழிப் படலத்திலிருந்து அகலாது. அதிலிருந்து பல தசாப்தங்கள் கடந்து முதல் மரியாதை. அது ஒரு நல்ல மைல் கல். அந்தப் படம் வந்து டஜன் ஆண்டுகள் கழித்து ரசிகப்பெருமக்கள் ஒன்ஸ்மோர் கேட்டு வந்த படம்தான் ஒன்ஸ்மோர். அந்தப் படத்தில் சிவாஜிக்கு நடிப்புச் சொல்லிக் கொடுப்பவர் விஜய் என்கிற தகவல் உங்களுக்கு நினைவிருக்குமேயானால், காலம் பின்னாளில் எப்படி எல்லாம் கழுதைக் கூத்து ஆடப்போகிறது என்பதை நீங்கள் முன்னுணர்ந்திருப்பீர்கள்.

சிவாஜியின் முதுமையைப் பார்த்து மகிழ்ந்த எனக்கு, சரோஜாதேவியைக் கனவுப் பாட்டியாக தரிசிக்கும் வாய்ப்பும் இலவச இணைப்பாகக் கிடைத்தது.

படத்தைப் பார்த்துவிட்டு போன் போட என்னிடம் சிவாஜியின் நம்பர் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

நடிகர் திலக அதிர்ச்சிக்கு இணையாக, இதே தாக்குதலை உணர்ந்தது நடிகையர் திலகத்தைப் பார்த்துத்தான். ‘வாராயோ வெண்ணிலாவே’ என்று பாடிய சந்திரவதனத்துக்கு உரிமையாளரான அதே சாவித்ரி. கந்தன் கருணை படத்தில், ‘சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா’ என்று நின்றது நின்றபடி பாடும் காட்சியை மறக்கவொண்ணாது. உணவுப் பழக்கமா, ஓய்வின்மையா, அந்தக் காலப் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுக்களின் நிரூபணமா… கலங்கிப் பிதுங்கிய கண்கள். இளைத்துப்போன சரீர வாகு. அதைத் தூக்கிச் சாப்பிடுவது மாதிரி, ஜெகன்மோகினி படத்தில், ‘ஜெகதீஸ்வரி பரமேஸ்வரி’ என்ற பாடலில் தானும் ரெண்டு வரி பாடும் தோற்றப் பரிதாபம், அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் கமலின் அம்மாவாக வந்த நிலை… இவையெல்லாம் எனக்குள் ஒரு நாயகி பிம்பம் கலைந்த தருணங்கள்.

முதுமையைப் பற்றிப் பேசும்போது, இடையில் சில போலி முதிய நட்சத்திரங்கள் நினைவில் இடறுகிறார்கள். கமலா காமேஷ், தன் முதல் படமான அலைகள் ஓய்வதில்லையிலேயே அம்மா கேரக்டர். இருபத்தொன்பது வயதில் அடிபட்ட அம்மாவாக என்ட்ரி கொடுத்தார்.

கன்னடத் திரையுலகின் முதல் கதாநாயகியாக அறிமுகமான பண்டரிபாய், தமிழில் நுழைந்து ரெண்டொரு படங்களில் இளமை நடிப்பைக் காட்டி, கூடிய சீக்கிரமே சிவாஜிக்கும் எம்ஜியாருக்குமெல்லாம் அபலை அன்னையாகி ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்துவிட்டார்.

பணிமூப்பிலும் என்னை வருத்தப்படுத்தாத இளமைக்கால நினைவுகளின் அரசி எனவும் நடிகையர் உண்டு. பப்பிம்மா. மணமகள் படத்தில் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பாலையாவின் முன்னால் உட்கார்ந்து பாடிய அந்தச் சித்திரம், பல காலம் கழித்து ‘பூவே பூச்சூட வா’ என்று அழைப்பு மணி ஒலிக்கக் காத்திருந்தது. சற்றே வயதாகியிருந்ததுதான். ஆனாலும் வேதனையைக் கிளப்பவில்லை. பத்மினி வழிச் செலவின் இழப்பீடாக  புதுத் தென்றல் நதியாவின் வரவை மனம் ஏற்றுக்கொண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். எனர்ஜி குறையாத நடிப்பை வழங்கினார். அமெரிக்கா போய் டான்ஸ் பள்ளி வைத்துத் திகழ்ந்தார்.

வயசானாலும் கிரேஸ் இன்னும் குறையலம்மா என்று சொல்ல வைத்த இன்னொரு பணி மூப்பு, மனோரமா. ராசுக்குட்டி படத்தில் பாக்கியராஜ் மனோரமாவின் மகனல்ல; எடுத்துவளர்த்த பிள்ளை என்று ஒருத்தி சொன்னதும் வீறிடும் காட்சி ஒன்று போதும். பின்னர் வந்த பல படங்களிலும் கிராஃப் இறங்காமல் கடமையாற்றியது நினைவில் எழுகிறது.

இதற்குச் சற்றும் குறையாத என் அபிமான நட்சத்திரம் மற்றொருவர். உங்களுக்குச் சிரிப்பாக இருக்கலாம். நிழல்கள் ரவி அவர். மை டியர் மார்த்தாண்டன் பார்க்கும்போது இவர் நகைச்சுவையாக நடிப்பார் என்று எனக்குத் தெரியவந்தது. காலங்கள் உருண்டோட வடக்குப்பட்டி ராமசாமியில் ஓய்வு பெற்ற மேஜராக வந்து கூத்தடித்ததுவரை என் அபிமான நாற்காலி நிழல்கள் ரவிக்கே உரித்தானதாக இருக்கிறது.

வேறு துறைகளில் என்றால் எனக்கு நேரடி அனுபவம் உள்ள ஒரு பணி மூப்பு ஏ எல் ராகவன் அவர்களுடையது. ‘எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க’ என்கிற தனித்துவக் குரல். நண்பர் பத்ரி, ஆடாம ஜெயிச்சோமடா என்று படம் செய்தார். அதில் ‘நல்லாக் கேட்டுக்க பாடம் இனி வில்லன் சப்ஜெக்டுதான் ஓடும்’ என்று பாட்டு. ஷான் ரோல்டன் மியூசிக் போட்டு ஏ எல் ராகவன் பாடினார். இசையமைப்பாளரும் பாடினார். பாடலாசிரியர் என்ற ரீதியில் நானும் ரெக்கார்டிங்குக்குப் போயிருந்தேன். பாடகர் நன்றாகப் பாடினார். ஏனோ, ஷான் ரோல்டன் பாடிய வெர்ஷனே வந்தது.

இப்படியான நினைவுகளுக்கு மத்தியில் புதுச் செய்தி. ரொம்பப் புதுசு இல்லை. ரெண்டு மூணு மாசப் புதுசு. கோயிங் ஸ்டெடி நாட் அவுட் ரீதியில் சூப்பர் ஸ்டாரும் சூப்பர் ஆக்டரும் இணைந்து நடிக்கும் படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போது நிலவுகிறது.

இவர்களை மேட்ச் செய்ய ஒரு பணிமூத்த இயக்குநர் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் மட்டுமே என்னிடம் எஞ்சியுள்ளது.

Author Image

ரமேஷ் வைத்யா

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர். சிறார் இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ ‘அபாயப்பேட்டை’ போன்றவை அதிகம் கவனம் பெற்ற புத்தகங்கள்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post

‘வாழ’ - கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கை

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

மைக்கேல் – குழந்தைமையின் ஆன்மிகம்

June 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?