டி.அருள் எழிலன்
உருவாக்கப்படும் எல்லாத் திரைப்படங்களுமே நல்ல சினிமாக்கள்தான். அது அந்தந்த இயக்குநர்களின் சாய்ஸ். ஆனால் பார்வையாளர்கள் எதை நல்ல சினிமா என்கிறார்கள் என்றால், அது வேறுபடுகிறது.
வாழ (Vaazha) மலையாளத்தில் வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. இடையில் கழிந்த ஓராண்டில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் என பல படங்கள் பார்த்தாலும் வாழ தனித்து மனதில் தங்கிவிட்டது. ’வாழ’யின் நிழலில் நான் நினைவில் உழலும்படி ஆகிவிட்டது.
ஏனெனில், என் வாழ்வும், உங்களின் வாழ்வும், ஆண் மக்களாகப் பிறந்த நம் அனைவரின் வாழ்வும் அந்தத் திரைப்படத்தில் உள்ளது. அதன் வெற்றிக்கும் கேலிக்கும் வெட்கத்திற்கும் அதுவேதான் காரணம்.
Vaazha- Biopic of a Billion Boys கோடிக்கணக்கான சிறுவர்களின் கதை என்று சொன்னாலும் அது ஏதோ ஒரு விதத்தில் தன்னை வேறுபடுத்தி நிலைநிறுத்திக்கொள்கிறது. உலகம் முழுக்க பதின் பருவ வாழ்வைப் பதிவு செய்துள்ள பல படங்கள் வந்துள்ளன. பெரும்பாலும் அவை பாலுணர்ச்சி சார்ந்த படங்களாகவோ, அல்லது வெற்றிக் கதையாகவோ இருக்கின்றன. அவற்றில் மிகச் சிறந்த திரைப்படங்கள் உண்டென்றாலும் ஆசியத் தன்மை அவற்றில் இல்லை. தெற்காசிய வாழ்க்கை முறை முற்றிலும் வேறுபட்டது. இந்தியத் தன்மை தனித்துவமான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறது. சமூகம், குடும்பம், பெற்றோர்கள், குழந்தைகள் என அடுக்கிக் கட்டப்பட்டுள்ள தென்னிந்தியக் குடும்ப மாதிரிகளை நாம் மேற்குலகத் திரைப்படங்களில் காண முடியாது. இந்தியாவில் எடுக்கப்பட்ட, தமிழில் எடுக்கப்பட்ட பதின் பருவப் படங்களில் பெரும்பாலானவை காதல் படங்கள்.
வாழ எந்த இடத்தில் பிற படங்களில் இருந்து வேறுபடுகிறது என்றால் இது ஐந்து சிறுவர்களின் வாழ்வை அதன் சாதக பாதகங்களோடு அங்கதம் செய்கிறது.
வாழை என்ற தமிழ் சொல்தான் மலையாளத்தில் ‘வாழ’ என்றழைக்கப்படுகிறது. எல்லாமே வாழை மரத்தை மட்டுமே குறிக்கிறது. தமிழில் குடும்பம் தழைத்தோங்க வாழையடி வாழையாக என்கிறோம். மலையாளத்தில் அதொரு வசவுப் பழமொழியாக உள்ளது. அதாவது ‘உன்னை எல்லாம் பெத்து வளத்ததுக்கு ஒரு வாழ மரத்தை நட்டு வளர்த்திருக்கலாம்’ என்பதுதான் அந்தப் பழமொழி. அந்தப் பொருளில் வாழ திரைப்படம், இந்தத் தலைமுறைப் பெற்றோர்களையும் இளைஞர்களையும் தொடுகிறது. இந்தப் படத்தின் பெரு வெற்றிக்கு இதுதான் காரணம்.
நாம் பெற்றோர்களின் விருப்பங்களுக்காக வளர்ந்தோம். பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறவர்களாக அவர்களாலேயே வளர்க்கப்பட்டோம். பெற்றோர் என்ற முன்னாள் குழந்தைகள், தங்கள் மீது சுமத்தப்பட்ட சுமையை, கடமை என தங்கள் பிள்ளைகள் மீது இறக்கி வைக்கிறார்கள். இப்படி, குழந்தைப் பருவம் முதல் சுமையேற்றப்பட்டவர்கள் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் வர முடியாமல் பெற்றோர்களின் கனவைத் துண்டாடி இலக்கின்றிச் செல்லும் இளைஞர்களின் கதைதான் வாழ. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு வகுப்பறையிலும் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தவர்களின் வாழ்க்கைக் கதைதான் இது. எதற்கும் பயன்படாத கடைசி பெஞ்ச் வாழா மரங்களின் கதை இது.
கேரள மாநிலத்தின் அமைதியான ஒரு ஊரில் – எந்த ஊர் எனத் தெரியவில்லை; காரணம் எல்லா ஊரின் பொதுவான கதையும் இதுதானே – அஜோ தாமஸ், விஷ்ணு, மூசா, அப்துல் கலாம், விவேக் ஆனந்த் என ஐந்து பதின்ம வயதுச் சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் டீச்சரிடம் பல்பு வாங்குவதில் இருந்துதான் அவர்களின் நட்பு தொடங்குகிறது. அதாவது ஒரு சிறிய அளவிலான தோல்வியில் இருந்து அவர்களின் நட்பு வட்டம் விரிவடைகிறது.
இந்தக் குழந்தைகள் மீது சமூகமும் பெற்றோரும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு இருப்பதால் இவர்களை இடைவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வேகமாக முன்னேற வேண்டும் என்பதால் அவர்கள் தோல்வியடைந்தவர்களாகச் சொல்லிச் சொல்லியே வளர்க்கப்படுகிறார்கள். சவால் மிக்க குடும்ப அமைப்பினுள் அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருந்து முதிர் வயதுக்கு மாறும் மிகச் சவாலான துயரம் மிக்க சிறுகதையை வாழ்வின் ஆகச் சிறந்த நகைச்சுவையாக மாற்றியதுதான் இந்தத் திரைப்படத்தின் வெற்றி.
அகம் சார்ந்த போராட்டங்கள், புறம் சார்ந்த அழுத்தங்களுக்கு அப்பால் அவர்கள் என்னவாக வாழ்கிறார்கள். என்னவாக மாறுகிறார்கள் என்பதை இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது.
ஒன்றிப்போகும் தன்மை முதல் பாதி முழுக்க நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகிறது. காரணம் நாம் அதனுள் அதே அவமானங்களைப் பட்டு தோல்வியடைந்தோம். இரண்டாம் பாதி மிக மோசமான சோகம் மண்டிக் கிடக்கும் வாய்ப்புகளே அதிகம். ஆனால் இரண்டாம் பாதி சோகமாகவும் இல்லாமல், மிகையுணர்ச்சியாகவும் மாறாமல் யதார்த்தமாகப் பார்த்துக் கொள்கிறார் இயக்குநர் ஆனந்த் மேனன்.
நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இந்த ஐந்து கடைசி பெஞ்ச் மாணவர்களால் பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை, கல்லூரிக் காலத்தில் இவர்களால் ஒரு காதலியைக் கைப்பிடிக்க முடியவில்லை. ஒரு வேலைக்குச் செல்லவோ, ஒரு நேர்முகத் தேர்வையோகூடச் சொதப்புகிறார்கள். இது எத்தனை பெரிய ஒழுக்கம் கெட்ட வேலை! எப்படி இப்படி ஒரு படத்தை நகைச்சுவையாக எடுக்க முடியும்? ஆனால் பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொட்டிக் கிடக்கிறது. இன்று நாம் நம் பால்யத்தைத் திரும்பிப் பார்க்கும்போது நமக்குள் இருந்த கேலிக்குரிய ஒருவனே ‘வாழ’. தோல்விகளைக் கடந்து பின்னடைவுகளைக் கடந்து பயணித்துக் கொண்டே இருக்கிறான் அந்தக் கேலிக்குரியவன்.
நாம் பயிலும் காலங்களில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் திறமையற்ற ஆசிரியர்களை எதிர்கொண்டிருப்போம். எனக்கு என் சிறு வயதில் ஓர் ஆசிரியை உலகப்போர் எப்படி உருவாகும் என்று கொடுத்த விளக்கம் இன்றும் நினைவில் உள்ளது. நான் எப்படி அந்த டீச்சரின் நிழலில் வளர்ந்து தேர்ச்சி பெற்றேனோ, அதே விதத்தில் குட்டி குட்டி ஷார்ட்ஸ், ரீல்ஸ் மூலம் உணர்வுகளாக நமக்குக் கடத்தியிருப்பார்கள். எல்லாத் திரைப்படங்களும் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும். இது போன்ற கதைகளில் எந்தத் துண்டில் இருந்து அது முடிவை நோக்கி நகரும் என்ற கேள்வி எழும். இந்தப் படம் அதன் கதாநாயகர்களைப் போலவே மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருப்பதை எழுத்தாளரும் இயக்குநரும் திடீரென உணர்கிறார்கள். எனவே, கதையை வலுப்படுத்த அவர்கள் யதார்த்தமான சில காட்சிகளைக் கொண்டுவர முடிவு செய்கிறார்கள்.
அந்த இடத்தில் அவர்களின் பெற்றோர்களின் இளம் பருவ வாழ்வைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அவர்களும் இதே தோல்விகளைச் சந்தித்தவர்கள், உருப்படியாக ஒரு காதலியை வாழ்வுக்குள் இணைத்துக் கொள்ள முடியாதவர்கள். இதை எல்லாம் திரைக்கதையில் அவர்கள் உணரும் தருணத்தில் நாம் நம் பிள்ளைகளுக்கு என்ன செய்தோம் என்பதையறிந்து இடிந்து போகிறார்கள். அந்த இடத்தில் திரைபடம் சோகமாகிறது. வாழ்வின் வெற்றியை அல்ல, தோல்வியை பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒரு இடத்தில் புள்ளியாக உணர்ந்து சந்திக்கும்போது யதார்த்தம் உரைக்கிறது. மதிப்பெண், கீழ்ப்படிதல், மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி என அதன் படிமம் நம்மீது கடத்தப்படுகிறது. ஆனால் அதில் மிகை உணர்ச்சி எங்கும் இல்லை.
இந்தப் படத்தின் இயக்குநர் 31 வயது இளைஞரான இயக்குநர் ஆனந்த் மேனனுக்கு இது மூன்றாவது படம். முந்தைய படங்கள் மூலம் கவனம் ஈர்த்திருந்தாலும் ‘வாழ’ சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பெரிதும் பேசப்பட்ட ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மற்றும் ‘குருவாயூர் அம்பல நடயில்’ படங்களின் இயக்குநர் விபின் தாஸ்தான் இந்த படத்தின் கதாசிரியர். அவரது எழுத்து இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். அது நம்முடன் எளிதில் ஒன்றிப்போகும் தன்மையை இயல்பில் கொண்டிருக்கிறது.
இதில் அஜோ தாமஸாக நடித்திருக்கும் சிஜு சன்னி, விஷ்ணுவாக நடித்த அமித் மோகன், மூசாவாக நடித்த ஜோ மோன் ஜோதிர், விவேக் ஆனந்தாக நடித்த அன்சிட் அனு, அப்துல் கலாமாக நடித்த அனுராஜ் என ஐந்து இளைஞர்களுமே முதல் தலைமுறை நடிகர்கள். அவர்கள் சமூக வலைத்தளப் பிரபலங்கள். அவர்களை சினிமாவுக்குள் அழைத்து வந்து திரைக்கதைக்குள் பொருத்தியது இயக்குநரின் வெற்றி.
அஷீஸ் நெடுமாங்காட், கோட்டயம் நசீர், கதையை இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்த்த போலீஸ் அதிகாரியாக வந்த பசில் ஜோசப் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
திரைக்கதை, நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என ‘வாழ’ ஒரு முழுமையான திரைப்படம் என்ற அனுபவத்தைக் கொடுக்கிறது. வாழ இரண்டாம் பாகமும் வந்து சென்றுவிட்டது. இயக்குநர் மாறியிருக்கிறார் விபின்தாஸ்தான் எழுதியிருக்கிறார். அதுவும் நன்றாக வரவேற்கப்பட்டிருக்கிறது.
2024-ஆம் ஆண்டு வாழ மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தது. வெறும் நான்கு கோடி ரூபாய் செலவில் உருவான வாழ திரைப்படம், 40 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது. முதிர்ச்சியடைந்து வரும் தீவிரமான மலையாள சினிமா உதாரணங்களை கூட்டிச் செல்கிறது. பிரமாண்ட சினிமா தொழிற்சாலையை வைத்திருக்கும் தமிழ் சினிமா அதிலிருந்து எதை எடுத்துக் கொள்கிறது எனத் தெரியவில்லை. இது, வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த அதிசயிக்கத்தக்க ஒரு மாற்றம் ஆகும்.
மலையாள சினிமாவும் பெங்காலி சினிமாவுமே இந்திய முகமாக இருந்தன. பெங்காலி சினிமாவை இந்தி சினிமா துடைத்தழித்துவிட்டது. ஆனால் மலையாள சினிமாவை இந்தி சினிமாவால் அழிக்க முடியவில்லை. தமிழையும் மீறி ஒரு தென்னிந்தியப் பண்பாட்டு அடையாளமாக மலையாள சினிமா உன்னதமான ஓரிடத்தைத் தொட்டுள்ளது.
அதற்குப் பங்காற்றியவர்கள் பலர், மாலையாள சினிமா பேசத் தொடங்கிய காலம் தொட்டு சமூகம் சார்ந்த கதைகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சினிமாவின் வளர்ச்சிப் போக்கில் எப்போதும் மிகச் சிறந்த உதாரணங்களை ஒவ்வொரு தசாப்தங்களிலும் புதுப்பித்துக் கொள்கிறது மலையாள சினிமா. என் நினைவில் இருந்து ஒரு பட்டியலைக் கொடுக்கிறேன். சில விடுபடல்கள் இருக்குமே தவிர இப்பட்டியல் மலையாள சினிமாவின் வரலாற்றுப் போக்கை இப்போதுவரை இணைக்கும். ராமு காரியத், ஏ. வின்சென்ட், பி. பாஸ்கரன், அடூர் கோபாலகிருஷ்ணன், ஜான் ஆப்ரஹாம், கோவிந்தன், அரவிந்தன், பரதன், எம்.டி.வி. பத்மராஜன், லோகிததாஸ், சத்யன் அந்திக்காடு, சீனிவாசன், என அதன் தொடக்கத்தைத் தோராயமாகச் சொல்ல முடியும். அதற்கு ஆபாசப் பட வரலாறு உண்டென்றாலும் பின்னர் அது தன்னை முழுமையாக மீட்டுக்கொண்டது. 90களில் உலகமயச் சூழலுக்குப் பின்னர் தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட மாற்றம் தமிழில் ரத்தக் கதைகளைக் கொண்டுவந்தது. மலையாளம் தொழில்நுட்பத்தைத் தன் அழகியலுக்கு மாற்றிக்கொண்டது.
இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னர் மலையாள சினிமா டஜன் கணக்கில் இயக்குநர்களை உருவாக்கியது. முன்னர் எப்போதையும்விட திரைப்படத் தயாரிப்புகளில், நடிப்பில், எழுத்தில், இயக்குவதில் பெரும் புரட்சியே மலையாளத்தில் நடந்திருக்கிறது. ஆளுக்கு ஒரு கோடி நான்கு பேர் முதலீடு போட்டு ஒருவர் எழுத இன்னொருவர் நடிக்க இன்னொருவர் இயக்குகிறார். நல்ல லாபம் ஈட்டி திரைப்படத்தையும் தரமாகக் கொடுக்கிறார்கள். சினிமா ஒரு கூட்டு உழைப்பு. அதை நாம் மலையாளத்தில் பார்க்க முடியும். புதிதாக வரும் இளைஞர்கள் தங்களை நடிகர்களாகவோ இயக்குநர்களாகவோ சுருக்கிக் கொண்டதில்லை.
நடிகரே திரைக்கதையாசியராகவும் இயக்குநராகவும் மாறி மாறி பணி செய்கிறார்கள். சினிமா என்ற கூட்டுழைப்பைப் பிரமாதமாகச் செயல்படுத்துவதே இத்தனை ஆரோக்கியமாக சினிமா மலையாளத்தில் இருக்கக் காரணம். வினீத் சீனிவாசன், திலீஷ் போத்தன், லிஜோ ஜோஸ் பிலிச்சேரி, ராஜிவ் ரவி, சனல் குமார் சசிதரன், அன்வர் ரஷீத், மது சி. நாராயணன், அல்போன்ஸ் புத்திரன், சக்காரியா முகமட் என நீள்கிறது பட்டியல்.
இதே காலக்கட்டத்தில் விநாயகன், கிரேஸ் ஆண்டனி, நிஷார் அகமட், சுபின் சாகிர், தருண் மூர்த்தி, நாகாஸ் நாசர் என்கிற பட்டியலும் உண்டு.
நிச்சயம் நாம் இப்படி ஒரு பட்டியலை தமிழில் தயாரிக்க வாய்ப்பே இல்லை.வாழ என்ற திரைப்படம் ஓராண்டுக்குப் பின்னரும் ஏன் மனதில் நிற்கிறது என்பதற்கு இதுதான் காரணம். அவர்கள் புதிதாகச் சிந்திக்கிறார்கள். ஆனால் நம் வாழ்க்கையினூடே சிந்திக்கிறார்கள். அதை எழுத முயல்கிறார்கள். அப்படி ஒரு நினைவுதான் வாழ.
‘பிறர் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது பற்றி தெளிவான யோசனைகள் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கை பற்றி அப்படியான எதுவும் இல்லை’ என்கிறார் பாவ்லோ கொய்லோ. வாழயும் அதுதான். வாழத் தெரியாத நாம் ஒரு வாழ்வை கடத்திக் கொண்டிருக்கிறோம்தானே!











