அபுல்கலாம் ஆசாத்
1. மொஹல்-ஏ-ஆஸம்
மாமன்னர் அக்பரின் மகன் சலீமின் முன்னிலையில் ‘கவ்வாலி’ என்னும் இசைப்பாடல் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அரசவை நாட்டியப் பெண்கள், அனார்கலியின் தலைமையில் ஒரு குழுவாகவும், பஹாரின் தலைமையில் இன்னொரு குழுவாகவும் அமர்ந்து ஒருவருக்கொருவர் போட்டியாகப் பாடல் புனைந்து பாடுகின்றனர். பாடலின் முடிவில் எந்தக் குழுவினர் வென்றனர் என அறிவிக்கும் பொறுப்பு சலீமிடம் தரப்படுகிறது.
எப்படியும் சலீமின் பார்வை தன் மீது விழவேண்டும் என்னும் நினைப்பில் பஹார் இருக்கிறாள். அனார்கலி அமைதியானவள். அன்றைக்கு அவளுக்கும் அப்படி ஓர் ஆசை இருந்திருக்கலாம். ஒரு ரோஜா மலரை முட்களுடன் சேர்த்துக் கையில் எடுத்து பஹாரை நோக்கி நடந்த சலீம், முட்களை நீக்கிவிட்டு மலரை மட்டும் பஹாரிடம் தருகிறான். மலரைப் பெற்ற மகிழ்ச்சியில் பஹார் தான் வென்றதாக நினைக்கிறாள். கையிலிருக்கும் முட்களுடன் அனார்கலியை நோக்கி நடக்கிறான். வேறு ஏதோ பரிசைத் தரப்போகிறான் என நினைக்கையில், அனார்கலிக்கு முட்களைப் பரிசாகத் தருகிறான்.
“முட்கள் வாடுவதில்லை.”
பட்டத்து இளவரசனிடமிருந்து வந்த பரிசை மகிழ்ச்சியோடு ஏற்று அனார்கலி சொன்ன அந்த மறுமொழியில் மாபெரும் காதல் காவியத்தின் முதல் வரியையும், தன்னுடைய தலையெழுத்தின் கடைசி வரியையும் ஒன்றாக எழுதினோம் என்பது தெரியாமல் அவள் அமைதியாக நின்றாள். மொகலாயர்களின் எந்த வரலாற்றுக் குறிப்பிலும் இல்லாவிட்டாலும் அனார்கலி காதல் காவியத்தில் நிலையாக இடம்பெற்றதன் தொடக்கம் அது.
அனார் – மாதுளம், கலி – மலர், அனார்கலி – மாதுளம்பூ.
அபுல் ஃபஸல் எழுதிய அக்பரின் வரலாறு அக்பர்நாமாவிலும் அனார்கலி தொடர்பான எந்தக் குறிப்பும் இல்லை. சலீம் என்னும் ஜஹாங்கீர் எழுதிய ஜஹாங்கீர்நாமா என்னும் சுயசரிதத்திலும் அனார்கலி தொடர்பான குறிப்புகள் இல்லை. தன்னுடைய தந்தைக்கு எதிராக, தான் புரட்சியாளனாக வெளிப்பட்டதையும், தன் இளவயது கைம்மயக்கங்களையும் தயக்கமின்றிக் குறிப்பிட்ட ஜஹாங்கீர்நாமாவில் அனார்கலியைப் பற்றி எந்தக் குறிப்பையும் சலீம் எழுதாமல் இருக்க வாய்ப்பு இல்லை. லாகூரில் இருக்கும் அனார்கலி சாமதி மட்டும் கல்லறை வாசகமாக ஒரு கவிதையைத் தாங்கி நிற்கிறது. அந்தக் கல்லறையில் இருப்பது சலீமைக் காதலித்த அனார்கலியா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
வாய்மொழிக் கதைகளில் மட்டும் அக்பரின் ஆசைநாயகியாகச் சிலரிடமும், சலீமின் காதலியாகச் சிலரிடமும் வாழ்ந்துகொண்டிருந்த அனார்கலி என்னும் கதாபாத்திரம், இம்தியாஸ் அலியின் நாடகத்தில் முழுமையடைந்தது. நாடகத்தின் முதற்பக்கத்தில் ‘இது கற்பனைக்கதை’ என்னும் கேடயக் குறிப்பைத் தாங்கி நின்றாலும், 1922க்குப் பின் ‘அனார்கலி’ என்னும் உருது நாடகத்தின் தாக்கத்தால் அனார்கலி இந்தியாவின் வீதிகளில் காதல் காவியத்தின் நாயகியாக உலா வந்தாள். அனார்கலி கதையை பேசாப் படமாகவும், பேசும் படமாகவும் எடுத்தனர். வெற்றி பெற்ற கதையாகத் தொடர்ந்து திரைத் தயாரிப்பாளர்களை ஈர்த்துவந்தது அனார்கலி.
அதன் தொடர்ச்சியாக அதனைத் தழுவி கே. ஆசிப் தன்னுடைய கனவுக் கதை மொஹல்-ஏ-ஆஸத்தை உருவாக்கினார். கே. ஆசிபும் அமனும் திரைக்கதை எழுதினர். அமன், நடிகை ஜீனத் அமனின் தந்தை.
கமால் அம்ரோஹி, வஜாஹத் மீர்ஸா, எஹ்சான் ரிஸ்வி, அமன் என்னும் அமானுல்லாஹ் கான் ஆகிய நான்கு எழுத்தாளர்கள் திரைக்கதைக்கும் வசனத்துக்கும் பொறுப்பேற்றனர். இந்தியத் திரையில் முதன் முதலாக நான்கு எழுத்தாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து வசனம் எழுதிய திரைப்படம் என்னும் பெருமையைப் பெற்றது. இந்தியத் திரையில் இலக்கியத் தரமுள்ள வசனங்களைக் கொண்ட திரைப்படங்களில் முதலிடத்தைப் பெற்றது.
இந்திய விடுதலைக்கு ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட திரைப்படம், நடிகர் தேர்வில், தயாரிப்பாளர் தேர்வில், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில், என வரிசையாக சில குழப்பங்களைச் சந்தித்துக் கடைசியில் திரைத்துறைக்குத் தொடர்பில்லாத தயாரிப்பாளரின் மூலமாக 1950ல் உருவெடுக்கத் தொடங்கியது.
ஆண்டு 2005, 50ஆவது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் நடிகை ரேகா அவர்கள் மேடைக்கு வந்தார். அவரை வரவேற்க ஷத்ருக்கன் சின்ஹா அவர்கள் ஒரு வசனத்தைச் சொல்கிறார். வசனத்தை ஷத்ருக்கன் தனது பாணியில் சொன்னதாலும், சொன்னது ரேகாவுக்காக என்பதாலும் கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது.
“இவர் பெயரைக் கேட்டதும் வீரன் தன் வாளையும், மன்னன் தன் மகுடத்தையும், மனிதன் தன் இதயத்தையும் எடுத்துத் தருவர்.”
அன்றைய தேதியில் நாற்பத்தைந்தைந்து ஆண்டுகள் கடந்தும் பேரெழிலைச் சுட்டிக்காட்ட ஷத்ருக்கனுக்கு மொஹல்-ஏ-ஆஸத்தில் இடம்பெற்ற வசனம் பொருத்தமாக இருந்தது. திரைப்படம் வெளியானபோதும் 1961ல் சிறந்த வசனங்களுக்கான ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்று, ஆண்டுகள் கடந்து 2005இல் இன்னொரு ஃபிலிம்ஃபேர் விழாவில் அந்த வசனம் எதிர்பாராதவிதமாக ஒலிக்கப்பட்டுக் கைதட்டல் பெற்றது.
ரேகாவின் பேரெழிலுக்குச் சொல்லப்பட்ட வசனம், மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தில் ஒரு சிற்பி, தான் வடிக்கப்போகும் சிலையின் அழகைச் சொல்லும் வசனம். அத்தனை அழகாக நான் சிலை வடித்து மன்னனுக்குத் தருவேன் என்ற சிற்பி, கல்லில் சிலை வடிக்காமல் சிலைக்குப் பதிலாக ஓர் அழகியையே சிலையாக நிற்க வைக்கிறான். மன்னன், இளவரசன், சிலை செய்யப் பணித்த பஹார் என அனைவரும் சிலையைப் பார்த்து வியக்கையில், சிலையாக நின்ற அழக ‘நான் சிலையல்ல, பெண்’ என வெளிப்படுகிறாள்.
அவளுடைய அழகு புகழப்படுகிறது. சிலையாக நின்ற திறன் பராட்டப்படுகிறது. சிலையை மூடியிருந்த திரையைத் திறக்க எய்யப்பட்ட அம்பைக் கண்டும் அசையாமல் நின்ற தைரியம் பாராட்டப்படுகிறது. அக்பரே ராணியை அழைத்து அந்த அழகியை அரண்மனையில் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறார். அவளுக்கு அனார்கலி என்னும் பெயரைச் சூட்டுகின்றார். முக்கியமாக, அடுத்த நாள் நடைபெறவிருக்கும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அனார்கலி நடனமாட வேண்டும் எனச் சொல்கிறார். அது சலீமாலும் விரும்பப்படுகிறது.
அக்பரும் சலீமும் தங்களுடைய வாழ்க்கையில் நிகழவிருக்கும் கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாக இருக்கப்போகும் காதல் கதையின் முதல் வரியைத் தங்களையறியாமல் எழுதினர்.
கிருஷ்ண ஜெயந்திப் பாடல் ஒலிக்கிறது.
‘மோஹெ பன்ஹட் மேன் நந்தலால் சேடு கயோரே’ என இந்தியில் ஒலித்தது.
‘ஆற்றங்கரைதனிலே கண்ணன் என்னைக் கேலி செய்தானே’ எனத் தமிழில் ஒலித்தது.
இந்தியில் பாடலாசிரியர் ஷகீல் பதாயுனி. தமிழில் கம்பதாசன்.
அனார்கலியை சிலையாகப் பார்த்த போதே ஈர்க்கப்பட்ட சலீம், அவளுடைய கிருஷ்ண ஜெயந்திப் பாடலுக்குப் பின், சிற்பி சொன்னதைப் போல் தன் மனதைத் தருகிறான். அவர்களுக்கு இடையில் காதல் மலர்கிறது. மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைப்பாக வந்து அமர்ந்துகொள்ளப்போகும் காதல் கதையின் தொடக்கம் அது என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிற்பியைச் சிலை வடிக்கச்சொன்ன பஹார் மட்டும் அனார்கலியின் மீது சலீம் மயக்கம் கொள்வான் எனப் புரிந்துகொள்கிறாள்.
இந்தத் திரைப்படம், தலைப்பில் மொஹல்-ஏ-ஆஸம் என மொஹலாயர் புகழைப் பேசினாலும், இதனுடைய தமிழ் டப்பிங்க் ‘அக்பர்’ எனப் பெயரிடப்பட்டாலும் கதை அனார்கலியைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்.
ஜலாலுத்தீன் மொஹம்மத் அக்பர், நீண்ட நாள்களாகக் குழந்தையில்லாமல் இருக்கிறார். தனக்கு வாரிசு வேண்டி ஹஸ்ரத் ஷேக் சலீமுத்தீன் சிஷ்தியிடம் செல்கிறார். வேண்டினால் கிடைக்கும் நம்பிக்கையுடன் இறைவனைக் கேள் எனச் சொல்ல, அவருடைய வேண்டுதலை இறைவன் நிறைவேற்றுகிறான். ‘ராணி ஜோதாபாயின் மடியில் குழந்தைப் பேறு உண்டாகட்டும்’ என வாழ்த்திய ஞானிகளின் வாக்கு பலிக்கிறது. ஜோதா பாய் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அரண்மனைப் பணிப்பெண் ஓடி வந்து அக்பரிடம் அந்தச் செய்தியை அறிவிக்கிறார்.
குழந்தை பிறந்ததை முதலில் அறிவித்த பெண் என்பதால், அக்பர் தனது முத்திரை மோதிரத்தைப் பணிப்பெண்ணுக்குத் தந்து, ‘உனக்கு என்றேனும் எதுவேனும் தேவைப்பட்டால் அக்பரிடம் வந்து இந்த மோதிரரத்தைக் காட்டிக் கேள், தவறாமல் நிறைவேற்றுவேன்’ எனத் தன்னுடைய நீதி காக்கும் துலாக்கோல் மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறார்.
தன்னுடைய ஆளுமைக்கு சவாலாக இருக்கப்போகும் நெருக்கடியை இப்போது வரவேற்பதாக அந்த உறுதிமொழி அமைந்துவிடுகிறது.
இப்படிக் கதையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் கதையின் திருப்பங்களுக்கும் முடிவுக்கும் காரணமாக அமைந்து, எந்தக் காட்சியமைப்பும் கதையிலிருந்து விலகாமல், ஒவ்வொரு வசனமும், சில நிமிடங்களே வந்து செல்லும் பாத்திரமாக இருந்தாலும், கதையில் ஓர் அற்புதத்தை நிகழ்த்திச் செல்லும் பாத்திரங்களாக, அவர்கள் பேசும் வசனங்கள் கதையைவிட்டு விலகாமல் எழுதப்பட்டிருக்கும்.
கிருஷ்ண ஜெயந்திப் பாடலுக்குப் பின் சலீமின் மனதில் தோன்றும் காதல், தோழிப் பெண் தூது செல்ல வளர்கிறது. அனார்கலியும் சலீமும் அக்பர் தான்சேனின் நாதத்தில் மயங்கியிருக்கும் வேளையில் ரகசியமாகச் சந்தித்துக்கொள்கின்றனர். அரண்மனையில் நாட்டியமாடும் பெண்ணுடன் இளவரசனுக்கு உண்டாகும் காதலை எந்தச் சக்கரவர்த்தியும் ஏற்பதில்லை. காதல் நிராகரிக்கப்படுகிறது. அனார்கலியின் மீது பழி சுமத்தப்படுகிறது. சிறையில் அடைக்கப்படுகிறாள்.
சக்கரவர்த்திக்கு எதிராகப் படை நடத்தி அனார்கலியை சலீம் மீட்கிறான். அனார்கலிதான் மீட்கப்படுகிறாள். சலீம் அக்பரிடம் கைதாகிறான்.
அனார்கலியை ஒப்படைத்தால் மன்னிக்கப்படுவாய் என அரசு சொல்கிறது. சலீம் அந்த உடன்படிக்கைக்கு மறுப்பதால், அனார்கலிக்குப் பதிலாக சலீமுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது.
மரணதண்டனைக் களத்தில் சலீமின் மீது பீரங்கிக் குண்டு பாயும் நேரத்தில் அனார்கலி களத்துக்கு ஓடி வருகிறாள். அனார்கலியைப் பார்த்த ராஜா மான்சிங் உடனே பீரங்கியின் குழாயைத் திருப்பி சலீமைக் காப்பாற்றுகிறார். அனார்கலியை உயிருடன் சமாதியில் அடைக்கத் தீர்ப்பாகிறது. இறப்புக்கு முன் கடைசி ஆசையாக அவளை ஒரு நாளுக்கு ராணியாக்கி, ஓர் இரவு மட்டும் சலீமுடன் வாழ அனுமதி அளிக்கப்படுகிறது.
கதையின் தொடக்கத்தில் அக்பரிடமிருந்து முத்திரை மோதிரத்தைப் பெற்ற பெண் மீண்டும் கதைக்குள் வருகிறாள். முத்திரை மோதிரத்தைக் காட்டித் தன் மகள் அனார்கலிக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கேட்கிறாள். துலாக்கோலின் மீது ஆணையிட்டுச் சொன்னதால் அக்பரால் அவளுடைய வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. உயிருடன் கட்டப்படும் கல்லறையிலிருந்து சுரங்கம் வழியாக அனார்கலியை மீட்டு, அவளுடைய தாயுடன் கண்காணாத இடத்துக்கு அக்பர் அனுப்பி வைக்கிறார்.
வரலாற்றில் இல்லாத ஒரு கதை காதல் காவியமாகி நிற்கிறது.
நடிப்பு, வசனம், திரைக்கதை, காட்சிக் கோணங்கள், குளோசப்புகள், முக்கியமாக பிரமாண்ட அரங்க அமைப்புகள் இதனை இந்தியத் திரையின் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கச் செய்தன.
கிருஷ்ண ஜெயந்திக் கொண்டாட்டத்தை ராணி ஜோதா பாயின் வழியாக இணைத்து, இந்து முஸ்லிம் இணைப்பை முன்னிறுத்திய அக்பரின் ஆளுமையைக் காட்டியது சிறப்பென திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பேசப்பட்டது.
ஒவ்வொரு தோற்றத்திலும் சக்கரவர்த்தியின் நிலையிலிருந்து இறங்காத கர்வத்துடன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அக்பரை ஒரு நாட்டியப் பெண் தன்னுடைய பாடலில் ‘காதல் கொண்டே அஞ்சிடுவேனோ’ எனக் கேள்வி கேட்டதும், அவளுடைய நடனம் பத்து நூறு ஆயிரமாக கண்ணாடி அலங்காரங்களில் பிரதிபலிப்பதும் அன்றைய காலகட்டத்தில் படமாக்கப்பட்ட உத்தியை வியந்தனர்.
தொழில் நுட்பம், பிரமாண்டம், ஒப்பனை இவை ஒரு பக்கமும், தொய்வில்லாத கதையமைப்பும், உருதுவின் செழிப்பை உள்வாங்கிக் கவித்துவமாகவும் கூர்மையாகவும் எழுதப்பட்ட வசனங்கள் இன்னொரு பக்கமும், மதுபாலா – திலீப் குமார் – பிருத்விராஜ் கபூர் மூவர் கூட்டணியின் நடிப்பும் ஒவ்வொரு காட்சியையும் உயர்த்திப் பிடித்தன.
உயிருடன் சமாதியாக்கப்படும் முன், கடைசி ஆசையாக ஒரு நாள் ராணியாக சலீமுடன் இருக்க அனுமதிக்கப்பட்ட அனார்கலிக்கு அக்பரே இந்துஸ்தானத்தின் ராணியாக முடி சூட்டுகிறார். ராணியான அடுத்த நிமிடம் அனாரின் நாவிலிருந்து கட்டளை பிறக்கிறது.
“ஜலாலுத்தீன் மொஹம்மத் அக்பராகிய நீர் அனார்கலிக்கு மரணதண்டனை விதித்த குற்றத்தை மன்னிக்கிறேன்.”
அதுவரையில் மற்றவர்களுக்காக மட்டுமே மன்னனின் அரசாணையை உச்சரித்த அக்பர், அனார்கலியின் அரசாணையைக் கேட்டுத் திகைக்கிறார். ராணியாகக் கிரீடத்துடனும் முகத்திரையுடனும் தன் முன்னே உயர்ந்து நிற்கும் அனார்கலியிடம் தோற்று நிற்பதை, பிருத்திவி ராஜ் கபூர் வெளிப்படுத்திருக்கும் நடிப்பு அற்புதமானது. கோபமும் தாழ்வும் இயலாமையும் சேர்ந்து சக்கரவத்தியைத் தாக்கி நிலைகுலையச் செய்யும் காட்சி அது.
சலீமின் ஒழுக்கம் கெடுவதைக் கண்ட அக்பர் அவனை அரண்மனையிலிருந்து போர்முனைக்கு அனுப்புகிறார். பதின்ம வயதில் போர்முனைக்குச் சென்ற சலீம் இளைஞனாக, வீரனாக வளர்ந்து திரும்பி வருகிறான். போர்முனையில் ஒழுக்கத்தையும் வீரத்தையும் பெற்ற சலீமுக்கு நகரிலும் அரண்மனையிலும் பெரிய வரவேற்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. நிமிடத்து ஒருமுறை சலீமின் வருகையின் நேரடி வர்ணனை தனக்குத் தெரிவிக்கப்படவேண்டும் என்ற ராணியின் கட்டளைப்படி, சலீம் வீதியில் இருக்கிறான், அரண்மனை வாசலில் இருக்கிறான், ராணியின் மாளிகையை நோக்கி நடக்கிறான், வாசலுக்கு வந்துவிட்டான் எனப் பணிப்பெண்கள் நிமிடத்துக்கு நிமிடம் ராணிக்குத் தகவல் அறிவிக்கின்றனர்.
தன் அறை வாசலுக்கு சலீம் வந்துவிட்ட செய்தி கிடைத்ததும், ஜோதாபாய், சலீம் தன்னை விட்டுப் பிரிந்தபோது எவ்வளவு உயரம் இருந்தானோ அவ்வளவு உயரத்தில் தன் முகத்தை வைத்துக் கண்களை மூடிக்கொள்கிறார். விழிகளைத் திறந்ததும் மகன் சலீமின் முகம்தான் தன் விழிகளில் படவேண்டும் என்பது அவள் விருப்பம். வந்து நிற்கும் சலீம் ராணியின் முகத்தினும் உயரமாக நிற்கிறான். அவள் முகத்துக்கு நேரே தன் முகம் வருமளவில் அமர்ந்து அவளை அழைக்கிறான்.
தாயின் தவிப்பும், எவ்வளவு வளர்ந்தாலும் குழந்தைகளைத் தன் குழந்தையாகவே பார்க்கும் தாயின் தன்மையும், மகனின் வீரத் தோரணையும், பிரிவும், அனைத்தையும் இணைத்து மனவெழுச்சியுடன் படமாக்கப்பட்ட காட்சி.
கலைஞர்களின் கருத்துச் சுதந்திரத்தை மன்னர்கள் எப்போதும் ஏற்பதில்லை. கலைஞர்கள் என்றல்ல தன்னுடைய வரலாற்றில் சர்வாதிகாரம் இருப்பதை ஆவணப்படுத்தும் எந்தக் கலையையும் மன்னர்கள் ஏற்பதில்லை என்று சிற்பி வாதாடும் காட்சியின் வசனங்கள் கூர்மையானவை.
போர்க்களத்திலிருந்து அரண்மனைக்குத்திரும்பிய சலீமுக்குப் பரிசளிக்க, பஹார் சிற்பியைத் தேடிச் செல்கிறாள். சிற்பியை உருதுவில் ‘சங்க்தராஷ்’ என்பர்.
சங்க் என்றால் கல், சங்க்-ஏ-மர்மர் என்றால் பளிங்கு. தராஷ் என்றால் செதுக்குதல். சங்க்தராஷ் என்றால் கற்களைச் செதுக்குபவன், சிற்பி. ஒவ்வொரு வசனத்திலும், சிற்பியே சிற்பியே என பஹார் அழைப்பது, பஹாருக்கு அதிகாரம் செலுத்தும் திறன் உண்டு என்பதை ரசிகனுக்கு அறிவிக்கும்.
அரசவைக்கு ஒரு சிலை வேண்டும் என பஹார் சிற்பியை அணுகுகிறாள். சிற்பி மறுத்துவிடுகிறான்.
“கலைஞனின் விமர்சனத்தைத் தாங்கும் மனப்பக்குவம் சக்கரவர்த்திக்கு இல்லை, என்னுடைய எந்தச் சிற்பம் சக்கரவர்த்திக்கு பிரியப்பட்டதாக இருக்கும்? சக்கரவர்த்திக்குப் பல்லக்கு சுமக்கும் இந்தச் சிற்பமா? அதிகாரம் காட்டும் இந்தச் சிற்பமா? தன்னை எதிர்ப்பவர்களைச் சிறைப்பிடித்து மரணதண்டனை கொடுக்கும் இந்தச் சிற்பமா? எது சக்கரவர்த்திக்குப் பிடிக்கும்” – என பஹாரைக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கிறான்.
‘‘இவையெல்லாம் வேண்டாம் புதிதாக ஒரு சிற்பம் வடித்துக்கொடு’’ என்கிறாள். அப்போதுதான், அவன் தன் கையிலிருக்கும் உளியையும் சுத்தியலையும் அனாயாசமாக எறிந்துவிட்டு,
“அப்படியென்றால் நான் ஒரு சிலை வடிக்கிறேன். அதைப் பார்த்ததும் வீரன் தன் வாளையும், மன்னன் தன் மகுடத்தையும், மனிதன் தன் இதயத்தையும் எடுத்துத் தருவர்” – என்னும் அந்த வசனத்தைப் பேசி முடிக்கிறான்.
நால்வரின் கூட்டணி இந்த வசனத்தை எழுதி முடித்த பின் காட்சியமைப்பில் வீரனையும், மன்னனையும், மனிதனையும் சிற்பி சொல்லும்போது தன்னிடம் இருக்கும் வீரன், மன்னன், மனிதன் சிலைகளை வரிசையாகச் சுட்டிக்காட்டிப் பேசும் காட்சியமைப்பு சிறப்பு.
சலீமைத் தன்வயப்படுத்தும் எண்ணம் பஹாருக்கு இருக்கும் காட்சியமைப்புகள் திரைப்படத்தில் உண்டு. அதன் முதற்கட்ட முயற்சியாக அவள் செய்யச் சொல்லும் சிலையே அவளுக்கும் சலீமுக்கும் இடையில் காதலியாக வந்து நின்றது பஹாரின் வாழ்வினை. தான் ஆணையிட்டுச் செய்த சிலை, தன்னுடைய ஆசைக்கு இடையூறாக வந்து நிற்கவிருக்கும் பெண் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தால், சலீமை வரவேற்க வேறு எதையாவது அவள் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
அனார்கலியும் சலீமும் சந்திப்பது தனக்குத் தெரிந்த பின், பெண்களுக்கே உரித்தான நையாண்டித் தொனியில்,
“இப்போதெல்லாம் அரண்மனையில் மாதுளம்பூ பூப்பதாகத் தெரிகிறதே” எனக் குத்தும் வசனம் புன்னகையை வரவழைக்கும்.
அக்பரிடம் சலீமின் காதலைச் சொல்வதும், சலீமிடம் அனார்கலி தொடர்பான அவதூறைப் பரப்புவதும் பஹார்தான். சலீமும் அனார்கலியும் அக்பரும் படத்தை ஆக்கிரமித்திருப்பினும், தனிப்பட்ட முறையில் பஹார் கதாபாத்திரம் என்னை ஈர்த்தது. சலீமை நெருங்க நினைத்து இயலாமற்போனதும், அரண்மனையில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அக்பரையும் சலீமையும் அணுகிக் கொஞ்சம் கொஞ்சமாக அனார்கலியை அக்பரிடமிருந்து பிரிப்பது கதையமைப்பில் வில்லத்தனமாகத் தோன்றினாலும், பாத்திரப் படைப்பில் தனக்கான நியாயத்தைக் கற்பிக்கும் ராஜதந்திரச் செய்கை அது. புனைவேயாயினும் தார்மீகப் பார்வையில் பஹாரின் ராஜதந்திரம் தன்னலமானதெனச் சொன்னாலும், அவளுடைய நியாயம் அவளுக்கு. தன்னால் அரசவைக்கு வந்த ஒரு பெண், தன்னுடைய கண் முன்னால் தனது கனவைச் சிதைக்கிறாள் என்னும் நினைப்பில் உருவான காய் நகர்த்தல் அது என்னும் அளவில் பஹாரின் நியாயத்தையும் ஏற்கலாம்.
தகவலாக இருப்பினும், சுவாரசியம் கலந்திருப்பதால் பஹாராக நடித்த நிகர் சுல்தானாவைப் பற்றிச் சில வரிகள்.
ஹைதராபாதைச் சேர்ந்த நிகர் சுல்தானா பழம்பெரும் நடிகை. மொஹல்-ஏ-ஆஸத்தின் இயக்குநர் கே. ஆசிபைத் திருமணம் செய்துகொண்டவர். புகழ் பெற்ற திரைப்படங்கள் மீர்ஸா காலிப், யஹூதி போன்றவற்றில் நடித்தவர். கே. ஆசிப் – நிகர் சுல்தானா தம்பதியினரின் மகள் ஹீனா கௌசர். அவரும் ஒரு நடிகை. இத்தொடரில் நாம் காணவிருக்கும் பாக்கீஸா, நிக்காஹ் திரைப்படங்களில் நடித்தவர். குறிப்பாக நிக்காஹ் திரைப்படத்தில் இடம்பெறும், ‘செஹ்ரா சுப்பாலியாஹை கிஸீனே ஹிஜாப்மே’ (யாரோ முகத்திரையில் முகம் மறைத்துக்கொண்டனர்) என்னும் பாடலில் பாடகியாக நடித்தவர். இவர் மும்பை நிழலுக ‘டான்’ இக்பால் மிர்ச்சியின் மனைவி.
மொஹல்-ஏ-ஆஸத்தின் இசை, இந்தியத் திரையில் ஒரு மைல்கல்.
ஷகீல் பதாயினியின் வரிகள், ‘மொஹப்பத் கி ஜூட்டி கஹானிபே ரோயே’ என்றும், கம்பதாசனின் வரிகள், ‘கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே’ என இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு ஐம்பது அகவை கடந்தவர் யாரேனும் காதல் தோல்வியைப் பேசும் பாடல்களைப் பட்டியலிட்டால் முதல் பாடலாக இது இருக்கும் வாய்ப்பு உள்ளது.
சலீமின் மரணதண்டனை நிறைவேற்றப்படும் கொலைக்களத்தில் சிற்பி பாடும் பாடலைப் பாடியவர் மொஹம்மத் ரஃபி. ‘ஸிந்தாபாத் ஸிந்தாபாத் ஏ மொஹப்பத் ஸிந்தாபாத்’ (வாழ்க! வாழ்க! காதல் வாழ்க!). மக்களிடம் புரட்சியைத் தூண்டுவதற்கான அனைத்துக் காரணிகளையும் தன்னுள்ளே கொண்டது அந்தப் பாடல். புனைவாகவே இருப்பினும், ஒருவேளை அனார்கலி களத்துக்கு வராமல் சலீமின் மரணதண்டனை நிறைவேறியிருக்குமானால், அக்பருக்கு எதிராக ஒரு புரட்சியை அந்தக் கொலைக்களத்தில் மக்கள் தொடங்கியிருக்கக்கூடும் அளவுக்கு உணர்வுமயமான பாடல்.
இரவில் அக்பர் கேட்டு ரசிக்கும் தான்சேனுக்காகக் குரல் கொடுத்தவர் வுஸ்தாத் படே குலாம் அலி கான். ‘ப்ரேம் ஜோகன் பன்கே’ (காதல் சன்னியாசி ஆகி) திரையில் ஒலிக்கையில் காட்சியமைப்பும் இசையும் ரசிகனை மொகலாயர் காலத்திய இசையில் சிறிது நேரம் உலவவிடும்.
தமிழ்த்திரையில் தான்சேனை நகலெடுத்த கனவுப் பாடலாக, தவப்புதல்வன் திரைப்படத்தின் ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ பாடலைச் சொல்லலாம். எம்.எஸ்.வி. + கண்ணதாசன் கூட்டணியில் எழுபதுகளின் தொடக்க ஆண்டுகளில் வானொலியை நிறைத்த பாடல்களுள் இதுவும் ஒன்று.
‘தேரி மெஹ்ஃபில் மேன் கிஸ்மத் ஆஸ்மாகர் ஹம் பி தேக்கேங்கே’ (உந்தன் அவையில் என்னுடைய அதிர்ஷடம் என்னவெனக் காண்போமே) என்னும் கவ்வாலி பாடல், அனார்கலிக்கும் பஹாருக்கும் இடையே நடக்கும் போட்டியெனப் பார்த்தோம். அனார்கலி – மதுபாலாவுக்கு லதா மங்கேஷ்கரும், பஹார் – நிகர் சுல்தானாவுக்கு ஷம்ஷாத் பேகமும் பின்னணி பாடினர். கவ்வாலி போட்டிப் பாடல்கள் பலவுண்டு, அவற்றுள் முதன்மையனது மொஹல்-ஏ-ஆஸத்தின் இந்தப் பாடல். குறிப்பாக பஹாரின் தீர்க்கமான காதல் வெறுப்பு ஒலிக்கும் வரிகளில் ஷம்ஷாத் பேகத்தின் தனித்துவமான குரலும், அனார்கலியின் காதல் ஒலிக்கும் குழைவான வரிகளில் லதா மங்கேஷ்கரின் குரலும், தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் இசையமைப்பாளர் நௌஷாத் இருந்தாரோ, இயக்குநர் ஆசிப் இருந்தாரோ, அந்தத் தேர்வை தெய்வீகத் தேர்வு என்றும் சொல்லலாம். மயக்கும் இசை.
அக்பரின், ஜஹாங்கீரின் மாபெரும் வரலாற்றுச் சித்திரத்தில் இடையில் வந்து சேர்ந்த புனைவாக நின்று, இன்றைக்கு அமரகாவியமாகி நிற்கும் இதிலும் ஒட்டாமல் நிற்கும் போர் ஒன்று உண்டு.
புனைவேயானாலும் அக்பர் சக்கரவர்த்திக்கு எதிரான சிறிய கிளர்ச்சியாக அல்லாமல் ஒரு முழுவீச்சுப் போரை சலீம் நடத்துவது, அதுவும் அக்பரின் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தில் இருந்துகொண்டே நடத்துவது கதையின் முரண். சலீம் அக்பருக்கு எதிராகச் செயல்பட்டுத் தனக்கென ஒரு அரசாங்கத்தை நடத்திய காலகட்டத்தை, அக்பர் பெருந்தன்மையாக மன்னித்தார் என்றும், போர் எதுவும் இல்லாமல் தந்தையும் மகனும் ஒன்றாயினர் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
அப்படியிருக்கையில், சலீம் எப்படிப் படைதிரட்டினார்? இந்துக்களுக்கு மஹாபலியாகவும், முஸ்லிம்களுக்கு ஜில்லே இலாஹியாகவும் பொதுவாக ஷஹேன்ஷாவாகவும் அரசாண்டு கொண்டிருந்த சக்கரவர்த்தியின் நிலத்தில் அவருக்கு எதிராக அத்தனை படைகளைத் திரட்டுவது புனைவிலும் ஏற்க இயலாதெனினும், அனார்கலியின் மீது சலீம் மட்டுமல்லாமல், ரசிகர்களும் பித்தாகியிருந்ததனால் ‘சரித்திரத்தில் இடம் பெறாத போர்’ என்ற அளவில் தங்கள் விமர்சனத்தை நிறுத்திக்கொண்டனர்.
நூருத்தீன் மொஹம்மத் சலீம் என்னும் ஜஹாங்கீரின் காதலைப் பேசிய காவியம் அனார்கலி, மொஹல்-ஏ-ஆஸமாகி இந்தியத் திரையில் பிரமாண்டங்களின் முன்னோடியாக நின்று, பல இடங்களில் காதலுக்கு அடையாளமாக அனார்கலி – சலீம் என இணைத்துச் சொல்லப்படும் புனைவு என்றாலும், சலீம் என்னும் ஜஹாங்கீர் இருபது திருமணங்கள் செய்துகொண்டது வரலாறு. சில திருமணங்கள் அரசியல் காரணங்களுக்காகவும், சில சொந்த விருப்பத்திலும் நடந்தன. கடைசியாக, ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான் ஜஹாங்கீரின் ஆட்சிக்குப் பக்கபலமாக இருந்தார்.
ஜஹாங்கீரின் இளம் வயதில் அரசியல் காரணங்களுக்காக நடந்த திருமணங்களும், அரசாட்சியில் ஜஹாங்கீர் கண்ட வெற்றிகளும், அனார்கலி என்னும் பாத்திரம் புனைவாக இருக்கக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருப்பினும், காதலர் உலகம் அவளை முழுமையாக ஏற்றுக் கொண்டாடியது.











