The Talkie
Monday, June 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள்

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

The Talkie by The Talkie
June 1, 2026
in கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள்
A A
0
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon ராஜசங்கீதன்

ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய சினிமா தமிழில் புதிதில்லை. ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படம் வெகுஜன தமிழ் சினிமா உருவில் வெளிவந்திருக்கிறது. இப்படம் மட்டுமின்றி சிறிய அளவிலும் கலாபூர்வ சினிமா வெளியிலும் பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. தெனாலி போன்ற பல படங்களில் காட்சிகளாகவும் வசனங்களாகவும் ஈழ விடுதலைப் போராட்ட குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

இவை எல்லாவற்றிலும் இருந்து தனித்து நிற்கிற படமாக ‘நீளிரா’ அமைந்திருக்கிறது.

ஈழத்தில் பிறந்து, ஈழ விடுதலைப் போராட்டத்தை நேரடியாகக் கண்டவர் எடுத்திருப்பதால் இப்படத்துக்கு தனித்துவம் கிடைத்திருப்பதாக பலராலும் பேசப்பட்டாலும், அதை மட்டும் காரணமாகச் சொல்வதில் எனக்கு தனிப்பட்ட அளவில் பெரிய உவப்பில்லை.

அத்தகைய மதிப்பீடு, நீளிரா படத்தையும் அதன் இயக்குநரான சோமீதரனின் திறனையும் மதிப்பீடற்ற ஒரு தனி எல்லைக்குள் தள்ளி புனிதப்படுத்திவிடும் கொடுமையைச் செய்து விடுகிறது.

புனிதமே பல சமயங்களில் ஒடுக்குமுறை!

அத்தகைய புனிதம் உறுத்தாத இயல்பான இடத்திலிருந்தே இப்படத்தை அணுக எண்ணுகிறேன்.

படம் தொடங்கியதுமே கதை தொடங்கி விடுகிறது.

திருமணத்துக்கு இந்திய ராணுவத்திடம் அனுமதி பெறுவதுதான் முதல் காட்சி. இது முழுக்க முழுக்க ஈழ நிலத்தின் வாழ்வியல் முறை என்பதால் நாம் அறியாததாக இருக்கிறது. அந்த அறியாமையையே முதல் அதிர்வை ஏற்படுத்துகிறது. அங்கிருந்து தொடங்கி, மணம் முடித்ததும் வெளிநாட்டுக்கு மணப்பெண் அனுப்பி வைக்கப்படுவதற்கான பயணம், அதற்கான ஏற்பாடு என விரியும் புதிய பரப்புக்குள் நாம் பிரவேசிக்கிறோம்.

விஜயகாந்த் மீது ஈழ மக்களுக்கு இருக்கும் பற்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படத்தில் காட்டப்படும்போது இன்னும் நெருக்கமாகிறது. குறிப்பாக விஜயகாந்த் பட கேசட் வாங்கச் செல்லும் காட்சி!  சாமி ஊர்வலமோ சாமியோ எதையும் விட்டுவைக்காமல் ராணுவம் சோதனை செய்வதில் அச்சூழலின் பயங்கரம் மெல்லப் படரத் தொடங்குகிறது.


ராணுவத்தினரின் கெடுபிடி முடிந்ததும் திருமண ஏற்பாடுகள் ஓர் இனிய குடும்பப் பாடலாக மலருகையில், இது என்ன முன்னுக்கு பின் முரணான உணர்வு என நம் அனுபவ அறிவு கிடந்து அடித்துக்கொள்கிறது.

Saving Private Ryan என்கிற ஸ்பீல்பெர்க் படத்தில், எதிரி ராணுவத்தைத் தாக்குவதற்கு படைக்கலன்கள் தயார் செய்துவிட்டு ராணுவத்தினர் அமைதியாக அமர்ந்து சிகரெட் பிடித்தபடி தங்கள் வீடுகளில் நடந்த நகைச்சுவைகளைப் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும் காட்சியமைவுக்கு ஒப்பான காட்சியமைப்பு அது.

நமக்குப் பரிச்சயமில்லாத நிலப்பரப்புகளைச் சார்ந்த கதைகள் எப்போதுமே நமக்கு ஆர்வம் கொடுப்பவை. ஒரு புது வாழ்நிலம் கொண்டிருக்கும் வாழ்வியலை நாம் ஒரு சுற்றுலா பயணி போல தெரிந்து கொள்ள விழைகிறோம். கேரளா சினிமாக்களையும் ஈரான் சினிமாக்களையும் வெளிநாட்டுப் படங்களையும் நாம் ரசிப்பது இப்படித்தான். ஆனால் அது போன்ற வாழ்வியலை நுகருவது ஓர் இன்பச் சுற்றுலாவின் வழியாக நேராமல், துயருலாவினூடாக நேரும்போது மூளையின் நியூரான்கள் குழம்பித் தவிக்குமே, அந்த அனுபவத்தைதான் நீளிரா நமக்குக் கொடுக்கிறது.

ஈழம் குறித்து நம் மனங்களுக்குள் இருக்கும் பரிவும் கழிவிரக்கமும் இந்த அனுபவத்துடன் வினையாற்றுகையில் நம் வாழ்வில் கண்டறிந்திராத ஓர் அனுபவம் நமக்குள் விரியத் தொடங்குகிறது.

விஜயகாந்த் படம் டெக்கில் போடப்பட்டு மொத்த குடும்பமும் பார்க்கிறது. இடையில் திடீரென, தியாக தீபம் திலீபனின் குரல்! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பரப்புரைப் படம் ஒளிபரப்பாகிறது. மொத்தக் குடும்பத்தினரும் பரப்புரைப் படத்தை ஆழமாக கவனிக்கின்றனர். ஒரு வசனம் இல்லை. எந்த நாடகத்தன உணர்ச்சியும் இல்லை. அந்த அடர் அமைதியே அக்காட்சிக்கு கனத்தைக் கூட்டிவிடுகிறது. இயக்குநர் அங்கு ஒரு வார்த்தை அல்லது ஓர் அசைவை அரசியலாக வெளிப்படுத்தி இருந்தாலும் அந்த அடர்த்தி குலைந்திருக்கும்.

விமானம் மற்றும் துப்பாக்கி பொம்மைகள் வைத்து குழந்தைகள் விளையாடுவது, புலிகள் அமைப்பிலிருந்து வீட்டுக்கு வந்து உணவு வாங்கிச் செல்வது என போர்ப் பதற்றம் ததும்பிக் கொண்டிருக்கும் வாழ்வியலுக்குள் ஒரு திருமணம் என்பது யோசித்துப் பார்க்கவே மிகை யதார்த்தக் கனவு போல விரிகிறது.

படத்தில் ஒரு கட்டத்தில், பதற்றம் வீட்டு வாசலுக்கே வந்துவிடுகிறது.

இந்திய அமைதிக் காப்பு ராணுவம் புலிகள் மீதான தாக்குதல் ஒன்றில் பங்கேற்கக் கிளம்பி வழிமாறி, மண வீட்டருகே பதுங்குகிறது. மணக் கொண்டாட்டங்களின் சத்தம் அடங்கி, சடுதியில் அமைதி சூழ்கிறது. மயான அமைதி!

பாதுகாப்புக்கென ஒரு கட்டத்துக்கு மேல் வீடு புகும் ராணுவமும் குடும்பமும் அடையும் நிலை, ஈழமும் இந்தியாவும் வரலாற்றில் நின்ற நிலை!

அதற்குப் பிறகு திரையில் விரிவது யாவும் சினிமா நுட்பத்தின் அற்புதம்!

இந்தியா, ஈழம், ராணுவம், சிங்களம், போராளிகள் என ஈழ விடுதலையின் எல்லா அரசியல் முனைகளும் குடும்ப உறுப்பினர்களாகப் பரிணமித்து, பார்வையாளர்களுடன் உரையாடத் தொடங்குகின்றன.

எல்லா முக்கிய அரசியல் தருணங்களையும் நீட்டி முழக்காமல் காட்சிகளாகவும் ஒன்றிரண்டு வசனங்களாகவும் மட்டுமே வைத்து பார்வையாளர்களுக்குக் கடத்தி இருக்கிறார் இயக்குநர்.

இந்தியப் படையில் இருக்கும் இளைய வீரனின் பயம், குழந்தைகளைப் பரிதவிப்புடன் அவன் பார்க்கும் இடம், மத்திய இந்தியாவின் வீரனாக வருபவனிடம் வெளிப்படும் மூர்க்கம், ராணுவம் வந்தவுடன் வீட்டுப் பெண்கள் ஓடிச் சென்று உடைகளுக்கு மேலே சட்டைகளைப் போட்டுக் கொள்ளும் விதம், ‘வீட்டுக்குள்ளாவது அமைதியை உருவாக்க உதவுங்கள்’ என்று தாய் பேசும் இடம், ‘இயக்கத்துக்கு நீ போனா, நானும் வந்திடுவேன்’ என காதலனிடம் காதலி சொல்லும் இடம், ‘யாருக்குத்தான் போர் பிடிக்கும்’ எனப் போராளி பேசும் இடம் என எல்லாமும், மூழ்கியிருக்கும் பனிமலையின் நுனி போல் அர்த்தம் கூட்டுகின்றன.

அந்த அர்த்தங்களைக் கையாளவும் முடியாமல், கையாளாமல் இருக்கவும் முடியாமல் பார்வையாளர்கள் கொள்ளும் சங்கடம்தான், படம் பேச விரும்பும் கருத்து வெற்றி பெறும் இடமாக மாறுகிறது.

படத்தில் இடம்பெறும் முக்கியமான போராளியின் பெயர், கேஸ்ட்ரோ! க்யூப நாட்டில் இடதுசாரிய ஆட்சியை வெற்றிகரமாகக் கட்டமைத்தவரின் பெயர். பகத் சிங் தொடங்கி, கேஸ்ட்ரோ, சே குவேரா என புலிகள் இடதுசாரிய அரசியலை அடியொற்றித்தான் இயங்கினர். திலீபனின் வார்த்தைகளில் சொல்வதெனில், ‘சமதர்ம சோசலிச தமிழீழம்’தான் புலிகளின் திட்டமாக இருந்தது. 

உலகம் முழுவதும் நடக்கும் இனப்படுகொலைகளை முதல் ஆளாகக் கண்டிப்பவர்கள் இடதுசாரிகளாக உலகளவில் இருந்து வரும் நிலையில், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை இந்தியாவின் கட்சிசார் இடதுசாரிகள் இந்தியாவின் ராஜதந்திரப் புள்ளியில் நின்றபடி அணுகிக் கொண்டிருந்தது அவர்கள் இழைத்த வரலாற்றுப் பிழை.

இன்னொரு முக்கியமான திறப்பையும் படத்தில் நிகழ்த்தியிருந்தார் இயக்குநர் சோமீதரன். புலிகள் எப்போதும் ரத்தம் பார்க்கத் துடிக்கும் பாசிஸ்டுகள் என இங்கிருக்கும் பிழைப்புவாதிகள் கதையடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தாக்குதலைக்கூடத் தவிர்த்துவிட்டுச் செல்லக் கூடிய பக்குவம் நிறைந்தவர்கள் புலிகள் என்பதை எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றிக் காட்டியிருக்கிறார்.

ஒரு வீட்டுக்குள் கதை அடைபட்டாலும் அலுப்பு இல்லாமல், Twelve Angry Men படம் போல ஒரு முக்கியமான அரசியலை பார்வையாளர்களின் தருக்கங்களுக்குட்பட்டே விளக்கி வென்றிருக்கிறார் இயக்குநர் சோமீதரன்.

முடிவில் மணமகன் இன்றி குடும்பச் சடங்காக மணப்பெண்ணுக்கு நடத்தப்படும் திருமணம் ஈழத்து வாழ்வின் யதார்த்தம் என்றாலும், போரின் கோரத்துக்கு நடுவேயும் மானுட வாழ்வு கொள்ளும் யத்தனத்தின் துயர நிலையை நம் முகத்திலறைந்து சொல்லிவிடுகிறது.

ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர் குணா கவியழகன் ஒரு நிகழ்ச்சியில் இப்படி பேசியிருந்தார்:

“Genocide என்கிற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இனவழிப்பு என அர்த்தம். அதுபோல் Memocide என ஒரு வார்த்தை உண்டு. நினைவழிப்பு என அர்த்தம்.

“எங்கள் மீது நினைவுகளை அழிக்கும் யுத்தம் தொடுக்கப்படுகிறது. எனவே நாங்கள் மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மீண்டும் மீண்டும் நினைவழிப்புக்கு எதிராக நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாங்கள் நினைவுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அதுதான் எங்களின் போராட்டமாக இப்போது இருக்கிறது.”

Author Image

ராஜசங்கீதன்

எழுத்தாளர், கட்டுரையாளர், சினிமா ஆர்வலர். சமூகம் மற்றும் அரசியல் குறித்த தெளிவான அலசலும், அக்கறையும் கொண்ட எழுத்துகளைத் தொடர்ந்து எழுதிவருபவர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post

தலைக்குள் என்ன?

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

மைக்கேல் – குழந்தைமையின் ஆன்மிகம்

June 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?