The Talkie
Monday, June 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள் குரு தத் 100

குருதத் உருவாக்கிய வெற்றிக் கூட்டணி.

The Talkie by The Talkie
June 1, 2026
in குரு தத் 100, தொடர்கள்
A A
0
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon பாஸ்கர் சக்தி

கலைமனம் கொண்ட ஒருவனது சிந்தனைகள் கட்டற்று விரியும். அவன் ஓர் எழுத்தாளனாகவோ ஓவியனாகவோ கவிஞனாகவோ இருந்தால் தனது சிந்தனைகளை ஒருங்கமைத்து, தனது படைப்பில் குவிப்பான். அதில் இன்னொருவரின் சிந்தனைக்கோ யோசனைக்கோ இடமே இல்லை. ஆனால் திரைப்படம் எனும் கலை வடிவம் வெவ்வேறு கலைகளின் கூட்டிணைவு. எனவே ஓர் இயக்குனர் தனது சிந்தனைகளை, பல்வேறு திறமைகளோடு உரசியும் இணைத்தும் ஒருங்கிணைத்து ஒரு படைப்பில் செலுத்த வேண்டி இருக்கிறது.  அதற்குச் சில அடிப்படையான தகுதிகள் தேவைப்படுகின்றன.

முதலில் தேவைப்படுவது திறந்த மனம். எல்லாவற்றையும் கவனிக்கும் தன்மை.  தன் முன்னே இருப்பவற்றை ரசித்து அதில் தனது படைப்புக்குச் செழுமை சேர்ப்பதைக் கண்டறிந்து, தன் படைப்பில் சுருதி பிசகாது அவற்றை இணைக்கும் கூர்மை. பிறரது திறமையை அங்கீகரிக்கும் பரந்த மனம். தான் சொல்வதே சரி எனும் ஈகோ இன்றி, சொல்லப்படுகிற விஷயங்களை விலகி நின்று ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் திறன் இவை எல்லாம்தான் அடிப்படைத் தகுதிகள்.

குருதத் அதிகம் பேசுகிறவர் இல்லை. ஆனால் எல்லோருடைய குரலையும் கேட்பவர். கருத்துகளை மதிப்பவர். திறமைகளைப் புரிந்து கொண்டு ஏற்பவர். மிகுந்த ரசனைக்காரர். அவருக்கு ஓர் அருமையான டீம் அமைந்தது. அந்த டீமை மிகுந்த தோழமையுடனும் நட்புடனும் அக்கறையுடனும் அவர் தலைமை தாங்கி வழிநடத்தினார்.  அவர்களோடு கடுமையாக வாதிட்டிருக்கிறார். ஆனால் அவை யாவும் படைப்பு நலன் கருதியே.

குருதத் வெறும் இயக்குனர் மட்டுமல்ல. அவரே ஹீரோ, அவரே தயாரிப்பாளரும்கூட.  ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான மூன்று அதிகாரங்கள் இவை. இவை மூன்றும் குருதத்திடம் இருந்தாலும்கூட தனது டீமின் சகாக்களோடு அன்பும் நட்பும் கொண்ட நண்பனாகவே அவர் பழகியிருக்கிறார். தொழில் ரீதியாக அவருடைய டீமில் இணைந்த சகாக்கள் அவரது வாழ்வின் இறுதிவரை நண்பர்களாக இருந்திருக்கின்றனர். அதற்குக் காரணம் குருதத்தின் அணுகுமுறைதான். அவர் ஒரு ஜென்டில்மேனாகவும், டீமின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கிற ஒரு `பாஸ்’ ஆகவும் இருந்திருக்கிறார்.

அவரது சகாக்களும்கூட `பாஸ்’ என்பதால் அவருக்குத் தலையாட்டுகிறவர்களாக இல்லாமல், தங்கள் கருத்துகளை அவரிடம் தயங்காமல் முன்வைக்கிறவர்களாக, கடுமையாக விவாதிக்கிறவர்களாக இருந்திருக்கின்றனர்.  தங்கள் படைப்பு சிறந்ததாக வர வேண்டும் என்கிற அக்கறை ஒவ்வொருவருக்கும் இருந்திருக்கிறது.

குருதத்தின் அணி ஒரு கனவு அணி. சிறந்தவர்கள் ஒன்று சேர்ந்து நட்புடன் இயங்கி வெற்றிகளைக் குவித்த அணி. அந்த அணியில் கேமராமேன் வி.கே . மூர்த்தி, எழுத்தாளர் அப்ரார் ஆல்வி, நடிகர் ஜானிவாக்கர், தயாரிப்பு நிர்வாகி குருசாமி ஆகியோர் இருந்தனர். இவர்களனைவரும் கடைசிவரை குருதத்துடன் இருந்தவர்கள்.

இவர்கள் அணிசேர்ந்த விதமும்கூட வெகு சுவாரஸ்யமானது. `லகான்’ திரைப்படத்தில் ஒரு கிரிக்கெட் டீம் உருவாகும் விதம் ரசிக்கும் விதத்தில்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அது போலத்தான் குருதத்தின் டீம் உருவானது.

குருதத்திடம் ஒரு பிரத்யேக உள்ளுணர்வு இருந்திருக்கிறது. அவர் ஆட்களை இனங்கண்டு தன்னுடன் இணைத்துக்கொள்ள அந்த உள்ளுணர்வுதான் காரணம் என்று தோன்றுகிறது. ஒரு காதலனுக்கோ காதலிக்கோ தன் இணையைப் பார்க்கையில் இவன் / இவள் நமக்கான ஒரு நபர் என்று தோன்றுவதைப் போலதான் அது… குருதத்தின் உள்ளுணர்வு தனக்கான மனிதர்களைத் தேர்ந்தெடுத்தது. (தனக்கான துணையாக கீதா தத்தையும், தனது படங்களின் நாயகியாக வஹீதா ரஹ்மானையும்கூட அந்த உள்ளுணர்வுதான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் தேர்வுகளின் முடிவுகள் எப்போதும் நல்விளைவை மட்டும் தருவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.)

       குருதத்தின் முதல் படமான `பாஸி’ யில் ஒரு முக்கியமான காட்சி. கதாநாயகன் தேவ் ஆனந்த், பெண்கள் நடனம் ஆடும் மது விடுதிக்குப் போகிறார். அவரைக் கொல்வதற்கான ஏற்பாடுகள் அங்கே நிகழ்கின்றன. பரபரப்பை உள்ளடக்கிய இசையோடு கூடிய பாடலுக்கு பெண்கள் நடனமாடுகின்றனர். அந்த நடனத்தின் தொடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று அதற்கான ஷாட் பற்றிய விவாதம் நடக்கிறது. ரத்ரா என்பவர்தான் கேமராமேன். அவரது உதவியாளர் மூர்த்தி. ஒரு முதல் பட இயக்குனர் என்பதால் குருதத் திறந்த காதுகளுடன் ஆலோசனைகளுக்குச் செவிசாய்ப்பவராக  இருப்பார் என்கிற நம்பிக்கையில் அவரிடம் மூர்த்தி ஓர் ஆலோசனை சொன்னார். அந்தப் பாடலின் இசையோடு கேமரா இணைந்து பயணிக்க வேண்டும்.  இசையும் கேமராவின் நகர்வும் ஒத்திசைவோடு இருக்க வேண்டும் என்பதுதான் ஐடியா.  மூர்த்தி சொன்ன யோசனை இதுதான்: ஒரு பெரிய நிலைக்கண்ணாடி இருக்கிறது. அந்தக் கண்ணாடியில் ஆடும் பெண்களின் பிம்பம் காட்டப்படுகிறது. ஆனால் அது பிம்பம் என்று முதலில் தெரியாது. கேமரா லேசாகப் பின்னால் வருகையில் அது கண்ணாடி என்று தெரிய வரும். கண்ணாடி அருகே நிற்கும் ஹீரோ தேவ் ஆனந்த் மெதுவாக நடந்து, ஆடிக்கொண்டிருக்கும்  பெண்களை நோக்கிச் சென்று அங்கிருக்கும் நாற்காலியில்  அமர்வார். ஷாட்டின் துவக்கத்தில் கண்ணாடியின் பிம்பத்தைக்  காட்டும் கேமரா அப்படியே பின்னால் வந்து ஹீரோவை பின்தொடர்ந்து சென்று அவர் அமரும்வரை அந்த ஷாட் நீடிக்கும்.

இதனை மூர்த்தி சொன்னதும் குருதத் கவரப்பட்டார்.புதிய யோசனைகளும், சிந்தனைகளும் கிளைத்துப் பெருகும் இளைஞராக குருதத் இருந்தார். மூர்த்தியும் அதே போன்ற இன்னொருவர் என்று குருதத் உணர்ந்தார்.

அந்த யோசனையை மூர்த்தி சொல்லும்போதே இன்னொன்றும் சொன்னார், “இதனை நான் நாலைந்து ஷாட்களாவது எடுப்பேன். அதில் சிறந்தது எது என்று நான் சொல்கிறேனோ, அதைத்தான் நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.”

குருதத் அதற்கு ஒத்துக்கொண்டார். அந்த ஷாட் எடுக்கப்பட்டது. இரண்டாவது ஷாட் ஓகே ஆனது.

அன்று மாலை ஷூட்டிங் முடிந்ததும் மூர்த்தியிடம் வந்தார் குருதத்.

“என் அடுத்த படத்தின் கேமராமேன் நீதான். நாம் இணைந்து வேலை செய்வோம்.”

அவர்கள் இணைந்தார்கள். இந்தித் திரையுலகின் திரைமொழியில் பல புதுமைகளை நிகழ்த்தினார்கள்.

                பத்ருதீன் என்பவர் ஒரு ப்ரைவேட் பஸ் கண்டக்டர். ஆனால் எல்லா கண்டக்டர்களையும் போல் அவர் இல்லை. சிரித்த முகத்துடன் ஜோக் அடித்துக்கொண்டு கலகலப்பாகப் பேசியபடிதான் தன் வேலையைச் செய்வார். பொதுவாகவே, கண்டக்டர் சிடுசிடு என்று இருக்க, பஸ்ஸில் வேலைக்குச் செல்வோர் தத்தம் பிரச்னைகள் , கவலைகளுடன்,  கடனே என்று போய்வருகிற, டல் அடிக்கும் பஸ் பிரயாணங்கள்தானே எண்ணிக்கையில் அதிகம்…  ஆனால் பத்ருதீன் வேலை செய்த பஸ் மட்டும் எப்போதும் கலகலப்பாக இருந்தது. பஸ் பிரயாணத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பார் பத்ருதீன். பஸ்ஸில் ஏறிவிட்டால் எல்லோரிடமும் பேசியபடி, கமென்ட் அடித்தபடி, எப்போதும்  சிரித்தபடி மிக உற்சாகமாக இருப்பார். ஒவ்வொரு ஸ்டாப்பிங் பெயரையும் அவர் சொல்லி விசிலடிக்கும் விதம் பயணிகளை வெடித்துச் சிரிக்கவைக்கும். பத்ருதீனுக்குள் ஒரு கலைஞன் இருந்தான். வாய்ப்புகள் கிடைக்காத கலைஞன். ஆனால் தனது கண்டக்டர் தொழிலையே ரசனைக்குரியதாக அவனது கலை மனம் மாற்றிக்கொண்டுவிட்டது. பயணிகள் அதனை ரசித்தார்கள். பத்ருதீன் வரவில்லை என்றால், ‘அவர் வரலையா’ என்று தேடினார்கள்.

அந்த பஸ்ஸில் ஒரு நாள் பால்ராஜ் சஹானி பயணம் செய்தார். பாஸி படத்துக்கு அவர்தான் ஸ்க்ரிப்ட் ரைட்டர். அந்தப் பயணத்தில் பத்ருதீன் செய்த லூட்டியை ரசித்த பால்ராஜ் சஹானி, பத்ருதீனை ஆடிஷனுக்கு அழைத்தார். பத்ருதீனிடம், “நீ  டைரக்டர் குருதத்தை அவசியம் வந்து பார்க்க வேண்டும். ஆனால் சம்பிரதாயமான முறையில் அல்ல. கொஞ்சம் வித்தியாசமாக அந்த சந்திப்பு இருக்க வேண்டும்“ என்றார்.  ”சரி”  என்றார் பத்ருதீன்.

  `பாஸி’ படப்பிடிப்பில், எடுக்கப்போகும் ஷாட் ஒன்றைப் பற்றி குருதத்தும் தேவ் ஆனந்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு குடிகாரன் செட்டுக்குள் வந்துவிட்டான். அதுவரை யாரும் ஒருபோதும் கேட்டிராத ஒரு மொழியில் (ஜிப்ரிஷ்) அவன் பேசத் தொடங்கினான். அவனது சேட்டைகளும் உடல் மொழியும் வித்தியாசமாக இருந்தன. அவன் செய்த கோணங்கித்தனங்களைப் பார்த்து செட்டில் இருந்த அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். குருதத்துக்கும் தேவ் ஆனந்துக்குமே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தபடி அவனைப் பார்த்திருக்க, சிலர் ஓடிப்போய் அவனைப் பிடித்து நிறுத்தினர். உடனே  அவன் சட்டென்று நார்மலானான். தள்ளாடிய உடம்பு நேரானது. குழறிக்கொண்டிருந்த குரல் சட்டென்று கம்பீரமாக மாற,  ஒரு விநயமான தொனியில் குருதத்தைப் பார்த்து, “நான் குடிக்கவில்லை” என்று சொல்ல குருதத் வாயடைத்துப் போனார். யார் இவன் என்று வினோதமாகப் பார்க்க, கண்டக்டர் பத்ருதீன்தான் ஆடிஷனுக்காக பால்ராஜ் சஹானி சொல்லி வந்திருப்பதைச் சொன்னார்.

இந்த வினோதமான, சுவாரஸ்யமான ஆடிஷன் காரணமாக உடனே தேர்வானார் பத்ருதீன். “இந்தப் படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்”  என்றார் குருதத். பத்ருதீன் ` பாஸி ‘ படத்தில்  இணைந்தார்.  டைட்டிலில் உங்கள் பெயர் எப்படி இடம் பெற வேண்டும் என்று குருதத் கேட்டார். பத்ருதீனுக்கு தன்னுடைய பத்ருதீன் க்வாஸி எனும் பெயர் உவப்பாக இல்லை. எனவே குருதத் அவருக்கு வேறு ஒரு பெயர் சூட்டத் தீர்மானித்தார்.

குருதத் மது அருந்துகிறவர். அவருக்கு மிகவும் பிடித்த விஸ்கியின் பெயர் ஜானிவாக்கர். எனவே அந்தப் பெயரையே பத்ருதீனுக்கு வைத்தார். எப்போதுமே குடிக்காத பத்ருதீனுக்கு ஒரு பிரபலமான விஸ்கியின் பெயர் அடையாளம் ஆனது.

அன்று குருதத்துடன் இணைந்த ஜானிவாக்கர், ஒரு  நடிகனாக மட்டுமல்ல, ஒரு நல்ல நண்பனாகவும் கடைசிவரை குருதத்துடன் இருந்தார்.

                      இயக்குனருக்கு ஸ்க்ரிப்ட் ரைட்டர்தான் பெரும் பலம்.  ஒரு திரைப்படத்தின் விதை என்பது கதைதான். மற்ற அம்சங்கள் எல்லாம் விதை முளைத்த பின் கிளைத்துக் கிளம்புகிறவை. ஆனால் ஆதாரம், உயிர் என்பது கதைதான். குருதத் தன் முதல் படம் தொடங்கியதில் இருந்து தனக்கான எழுத்தாளரைத் தேடிக்கொண்டிருந்தார்.

`பாஸி’ திரைப்படத்தின் ரைட்டர் பால்ராஜ் சஹானி. அவருக்கும் குருதத்துக்கும்  நிறைய வேறுபாடுகள் இருந்தன. கருத்துகளை முன்வைக்க வலியுறுத்தும் கறாரான இடதுசாரிச் சிந்தனையாளர் பால்ராஜ் சஹானி. ஆனால் குருதத் இசை, பாடல்கள், அழகுணர்ச்சி கொண்ட பொழுது போக்குத் திரைப்படங்களே தனது விருப்பம் எனக் கொண்டிருந்தவர். ‘பாஸி’ வெற்றி பெற்றபோதும்கூட, அதன்பின் பால்ராஜ் சஹானியுடன் குருதத் இணைந்து பணியாற்றவில்லை. அடுத்து அவர் இயக்கிய  ஓரிரு படங்களுக்கு, தானே கதை எழுதினார்.

      அப்ரார் ஆல்வி எம் ஏ, மற்றும் சட்டம் படித்தவர். சில மேடை நாடகங்கள்கூட எழுதி இருக்கிறார்.  ஆனால், வேலையின்றி இருந்தார். அவரது உறவினரான யஷ்வந்த் என்பவர்  குருதத் இயக்கிய , ‘பாஸ்’ ( Baaz) படத்தில் ஒரு வேடம் ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் கார் இருந்தது. ஆனால் அவருக்கு  கார் ஓட்டத்  தெரியாது. எனவே வேலையற்று  இருந்த அப்ரார் ஆல்வி அவருக்கு டிரைவராக மாறினார். காரில் ஸ்டுடியோவிற்குச் சென்று யஷ்வந்தை இறக்கிவிட்ட பின் செட்டில் நடப்பவற்றை சும்மா வேடிக்கை பார்ப்பவராக இருந்தார். சமயங்களில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஒரு பெண்மணிக்கும் கார் ஓட்டுவார். தினமும் செட்டுக்குச் சென்றதில் அங்கிருந்த பலருக்கும் நண்பராக மாறிவிட்டார் அப்ரார். அதில் ஒருவர் குருதத்தின் உதவி இயக்குனரான ராஜ் கோஸ்லா. அப்ராரும், ராஜ் கோஸ்லாவும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர்.

குருதத்தை எட்ட நின்று கவனிப்பவராகவும், `குட்மார்னிங் சார்’, `ஹலோ சார்,’ என்று சில வார்த்தைகள் மட்டுமே பேசுகிறவராகவும் இருந்தார் அப்ரார் ஆல்வி. ஆனால் வேடிக்கை பார்த்தே குருதத்தை அவதானித்திருந்தார். அதில் முக்கியமான விஷயம் குருதத்   ஷூட்டிங்கின்போது சுலபத்தில் திருப்தி அடையாதவர். காட்சிகளை எடுக்கும்போதுகூட அதில் ஏதேனும் மாற்றங்களைச் செய்துகொண்டே இருப்பார். தனது எழுத்தாளர்கள் குறித்து சுலபத்தில் திருப்தி அடையாதவர் குருதத். இன்னும் இன்னும்… இன்னும் கொஞ்சம் சிறப்பாக… என்று சிறப்புக்கான  ஒரு தேடல் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் மதியம் அப்ரார் ஆல்வி வழக்கம் போல் ரிலாக்ஸாக அமர்ந்திருக்கையில் ராஜ் கோஸ்லா பரபரப்புடன், சீன் பேப்பரும், பேனாவுமாக வந்து அருகே அமர்ந்தார். எழுதப்பட்ட சீனை, குருதத் சொன்ன மாறுதல்களைச் சேர்த்துத் திருத்தி, புதிதாக எழுதித் தரும்படி குருதத் சொல்லி இருந்தார். எனவே தேர்வு எழுதும் மாணவன் போல் ஒரு பரபரப்புடன் எழுதிக் கொண்டிருந்தார் ராஜ் கோஸ்லா. கொஞ்ச நேரத்தில் குருதத் உள்ளே வந்து அருகே அமர்ந்து கொண்டார். இவர் எப்போது எழுதி முடிப்பார், சீன் கேட்கலாம் என்று அவர் வந்து அமர்ந்திருக்க, அப்ரார் ஆல்வி இவர்களை தொந்தரவு செய்யாமல் தன் பாட்டுக்கு வெறுமனே உட்கார்ந்திருந்தார்.

எழுதி முடித்துவிட்டு குருதத்திடம் சீனைச் சொன்ன ராஜ் கோஸ்லா, சும்மா இருந்திருக்கலாம். ஆனால், இந்தப் பக்கம் திரும்பி அப்ரார் ஆல்வியைப் பார்த்து, ஒரு குறிப்பிட்ட வசனத்தை சொல்லி, “இந்த வசனம் ரொம்பச் சரியா இருக்கு, இல்லையா?” என்று அபிப்ராயம் கேட்டார்.

பொதுவாக, தன் நண்பர் தன்னிடம் இப்படி ஒரு கேள்வியை, டைரக்டரையும் முன்னால் வைத்துக்கொண்டு கேட்டால், ஷூட்டிங்கிற்குச் சம்பந்தம் இல்லாத ஒருவர் , நல்லாருக்கு என்கிற பதிலை சொல்வதுதானே இயல்பு, உலக வழக்கம்?

ஆனால் அப்ரார் ஆல்வி வழக்கமானவர் அல்ல. அவர் யோசித்துவிட்டுச் சொன்னார், “அது எப்படிச் சொல்ல முடியும்? அந்த கேரக்டர் பற்றியோ, சிச்சுவேஷன் பற்றியோ தெரியாமல் இந்த வசனம் பொருத்தமாக இருக்கிறது என்று ஜஸ்ட் லைக் தட், சொல்ல முடியாது. அவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டார்.

இந்த பதில் ராஜ் கோஸ்லாவுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆனால் இந்த பதிலைச் சொன்ன அப்ரார் ஆல்வியை குருதத் கவனித்தார்.  இயக்குனர் முன்னிலையில், சம்பிரதாயமாகப் பேசாமல், எந்தத் தயக்கமும் இன்றி, உறுதியாக தனது அபிப்ராயத்தைச் சொன்ன அப்ரார் ஆல்வி குருதத்தின் மனதில் பதிந்தார்.

அதன் பின் குருதத், அப்ரார் பற்றி விசாரித்தார். அப்ரார் ஆல்வி எம்ஏ மற்றும் சட்டம் படித்தவர் என்று தெரிந்ததும் யோசித்துவிட்டு, ‘அவரை உடனே வந்து என்னை பார்க்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அப்போது பார்த்து அப்ரார், சொல்லாமல் கொள்ளாமல் ஒரு  நண்பர் அறையில் போய் நாலைந்து நாட்கள் தங்கிவிட்டார். குருதத் யஷ்வந்திடம் விசாரித்தபடி இருந்திருக்கிறார்.

ஒருவழியாக அப்ரார் திரும்பி வந்ததும் உடனே குருதத்தைப் போய் பார்க்கச் சொல்லி தகவல் சொல்லப்பட அப்ரார் ஆல்வி குருதத்தை அவர் வீட்டில் போய்ப் பார்த்தார்.

குருதத் நேரடியாக அவரிடம், ”என்னுடைய படங்களுக்கு  நீங்கள் எழுதுகிறீர்களா?” என்று கேட்க திகைத்துப் போனார் அப்ரார் ஆல்வி.  தயக்கத்துடன், “நான் எழுத்தாளன் இல்லை.  ஒரு சில மேடை நாடகங்கள் எழுதியதைத் தவிர்த்து  எனக்கு எந்த அனுபவமும் இல்லை. என்னால் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய இயலாது“ என்று சொன்னார்.

அது பற்றி குருதத் அலட்டிக்கொள்ளவில்லை. “நீங்கள் ஒரு நல்ல திரை எழுத்தாளராக  இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். பெரிய படிப்பு படித்திருக்கிறீர்கள். அது மட்டுமில்லாமல் அன்று ராஜ்  கோஸ்லாவிடம் நீங்கள் பேசியதை நான் கவனித்தேன்.”

என்றாலும் அப்ராருக்குத் தெம்பு வரவில்லை. தயக்கத்துடன், “நான் எழுதிய நாடகங்களை வேண்டுமானால் தருகிறேன். நீங்கள் படித்துப் பார்த்துவிட்டு ஒரு முடிவு செய்யுங்கள்” என்று பலவீனமான குரலில் சொல்ல குருதத், ”அதெல்லாம் தேவையில்லை. நாளை காலையில் வாருங்கள். உங்களிடம் ஒரு சிச்சுவேஷன் சொல்கிறேன். அதற்கு நீங்கள் காட்சியும் வசனமும் எழுதுங்கள். பார்த்துக் கொள்ளலாம்“ என்று சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் காலையில் அப்ரார் ஆல்வி குருதத் வீட்டிற்குப் போனார். அவரிடம் குருதத் ஒரு கதைச் சூழலைச் சொல்லி, காட்சி, வசனங்கள் கேட்டார். அப்ரார், “சரி சார், நான் போய் எழுதிக்கொண்டு வந்து மதியம் தருகிறேன்“ என்றார்.

(கிட்டத்தட்ட அப்ராரின் மனநிலை தப்பித்து ஓடுவதாகவே இருந்திருக்கிறது.)

“வேண்டாம்” என்று உறுதியாக மறுத்தார் குருதத். ”இங்கேயே உட்கார்ந்து எழுதுங்கள். எங்கும் போக வேண்டாம்” என்றவர் பணியாளை அழைத்தார். ”இவருக்கு என்ன வேணுமோ கேட்கும்போது கொடுங்க. டீ, காஃபி, சாப்பாடு எது வேணாலும்” என்று உத்தரவிட்டார். “நான்  என் ஆஃபீசுக்குப் போறேன். நீங்க எழுதுங்க. மதியம் மூணு மணிக்கு வர்றேன். எப்படி எழுதி இருக்கீங்கன்னு பாக்கலாம்”  என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

புதிதாக ஹாஸ்டலில் சேர்ந்த மாணவன் போலாகிவிட்டது அப்ராரின் மனநிலை. ஆனால் வேறு  வழி இல்லை. நம்பிக்கையைத் திரட்டிக்கொண்டு அமர்ந்து எழுதத் தொடங்கினார். மூன்று மணி வாக்கில் சீன் எழுதி முடித்து விட்டு குருதத்துக்காக காத்திருக்கத் தொடங்கினார். குருதத் ஐந்து மணிக்குத்தான் வந்தார்.

“ ம்… என்ன எழுதினீங்க? சீனைச் சொல்லுங்க” என்று எதிரே அமர்ந்து குருதத் கேட்க, அப்ரார் நேர்முகத் தேர்வுக்குப் புதிதாக வந்திருக்கும் நபரின் மனநிலையில், அவர் எழுதிய  காட்சியை வாசித்துக் காட்டினார். மிகவும் கவனமாக அதனை குருதத் கேட்டார். கேட்டு முடித்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

தேர்வின் முடிவை எதிர்பார்க்கும் மாணவன் போல் இதயம் துடிக்க அப்ரார் ஆல்வி தயக்கத்துடன் கேட்டார்.

“ சீன் எப்படி இருக்கு சார்? நீங்க நினைச்ச மாதிரி இருக்கா?”

குருதத் முகத்தில் சலனமே இல்லை. “ம்” என்றார். எந்த விதத்திலும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு ‘ம்’ அது.

“சார்?”

“நாளைக்கு வாங்க.”

“இந்த சீனைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“ நீங்க நாளைக்கு வாங்க. பேசிக்கலாம்”

அடுத்த ஒரு வாரமும் தினம் தினம், இதே சம்பவம் திரும்பத் திரும்ப நடந்தது. சிச்சுவேஷன் சொல்லிவிட்டுப் போவது, இவர் எழுதுவது, டீ குடிப்பது, சாப்பிடுவது, மதியம்  ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுவது, எழுதுவது, மாலை அவர் வருவார். கேட்பார்.  ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறது என்று சொல்ல மாட்டார். 

 தினந்தோறும் இவர், “சீன் பத்தி என்ன நினைக்கிறீங்க சார்?”

 பதிலுக்கு  அவர், “நாளைக்கு வாங்க, பேசிக்கலாம்”

ஒரு பணயக் கைதி போல், குருதத்தின்  வீட்டில் உட்கார்ந்து ஏழு நாட்களும் எழுதியபடி இருந்தார் அப்ரார். தன் எழுத்து பற்றி குருதத்தின் கருத்து என்ன? அவருக்கு பிடிக்கிறதா இல்லையா? தான் எழுதுவது குப்பையா இல்லை பயனுள்ளதா? என்கிற பதட்டத்திலும் குழப்பத்திலும்  கழிந்தன அப்ராரின் பொழுதுகள்.

ஆனால் அவருக்கு ஒரு விஷயம் பிடிபட்டது. குருதத் ஏன் தன்னை ஜெயிலில் அடைப்பது போல், அசைய விடாமல் வீட்டில் வைத்து எழுத வைக்கிறார்? என்பதன் காரணத்தை அப்ரார் யோசித்து அறிந்துகொண்டார்.

தான் யாரிடமும் காட்சி பற்றி விவாதிக்கக் கூடாது. எழுதுவது எதுவாக, எப்படியாக இருந்தாலும் அது யாருடைய பாதிப்பும் இன்றி முழுக்க முழுக்க அப்ரார் ஆல்வியின் சிந்தனையில் இருந்தே வர வேண்டும். அப்படி இருந்தால்தான் அப்ராரின் எழுத்து பற்றி சரியாக மதிப்பிட முடியும் என்று குருதத் நினைத்திருக்கிறார். ராஜ் கோஸ்லாவிடமோ, அல்லது பிறரிடமோ காட்சி பற்றி அபிப்ராயம் கேட்டு இவர் இன்ஃப்ளூயன்ஸ் ஆகிவிடக் கூடாது. அப்ரார் ஆல்வியிடமிருந்து என்ன வரும் என்பதை அப்பழுக்கின்றி உணரத்தான் இந்த அணுகுமுறையை குருதத் கையாள்கிறார் என்பதை அப்ரார் உணர்ந்துகொண்டார்.

       இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ஒரு வாரம் நீடித்தது. அன்றும் வழக்கம் போல், “சீனைப் படித்துவிடலாம், எப்படியும் இந்த ஆள் ஒன்றும் சொல்லப்போவதில்லை” என்று அப்ரார் யோசிக்க,

 “கொஞ்சம் இருங்கள், இப்போது இரண்டு பேர் வருகிறார்கள். அவர்களோடு பேச வேண்டி இருக்கிறது“ என்றார் குருதத்.

அவர் குறிப்பிட்ட அந்த இருவரும் அன்று மிக முக்கியமான  திரை எழுத்தாளர்கள்.

அப்ராருக்குச் சட்டென்று காற்று இறங்கி உற்சாகம் வடிந்தது. ‘சரிதான். தான் ஒரு வாரம் மாங்குமாங்கென்று  எழுதிய பிறகு இரண்டு பெரிய எழுத்தாளர்கள் வருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? அவர்கள்தான் எழுதப்போகிறார்கள். குருதத்தின் தேர்வில் நான் தோற்றுவிட்டேன்’ என்று மனமுடைந்துபோனார் அப்ரார்.

அந்த எழுத்தாளர்கள் இருவரும் வந்தார்கள். (அவர்கள் பெயர் ராஜிந்தர் சிங் பேடி, மஜ்ரூ சுல்தான்புரி) இருவரிடமும் குருதத் பேசிக்கொண்டிருக்க, அப்ரார் வேறு ஓர் அறையில் நொந்துபோய் அமர்ந்திருந்தார்.

அவர்கள் போனதும் குருதத் அப்ராரிடம் வந்தார். அப்ரார்  இயந்திரத்தனமாக சீன் பேப்பரை எடுத்து, ”சீனைப் படிக்கலாமா?” என்க, குருதத் அதை கவனிக்காமல் வேறு யோசனையுடன் “பரவாயில்லை இருக்கட்டும்” என்று சொல்ல,

“சரி, அப்ப நான் கிளம்பறேன்” என்றார் அப்ரார்.

“வேணாம். இரு, நாம கொஞ்சம் பேசணும்” என்று குருதத் சொல்ல அப்ரார் வேறு வழியின்றி அமர்ந்தார்.

“இப்ப வந்தாரே, எழுத்தாளர் ராஜிந்தர் சிங் பேடி, அவரைப் பத்தி என்ன நினைக்கிறே?”

“ரொம்பப் பெரிய ஆள். நல்ல ரைட்டர். அவரெல்லாம் நூறு மார்க்குன்னா, நானெல்லாம் பத்து மார்க்தான்.”

குருதத் லேசாகச் சிரித்தார், “நீ ஏன் உன்னை அவர்கூட கம்பேர் பண்றே?”

“ஆமாமா, அவர்கூட கம்பேர் பண்ணிக்கிற அளவுக்குக்கூட நான் இல்லை” அப்ராரின் சுதி இறங்கிக்கொண்டே இருந்தது.

“ அது வந்து… மஜ்ரூ கேட்டுக்கிட்டாரேன்னுதான் நான் ராஜிந்தரை சந்திச்சேன். இப்ப முடிவு பண்ணிட்டேன். நீதான் எனக்கு அடுத்த படத்துக்கு ரைட்டர். ஏழு நாளா நான் உன்னோட சீன்களைக் கேட்டுட்டு இருக்கேன். எனக்குப் பிடிச்சிருக்கு.”

அப்ரார் ஆல்வி இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை. ஆழத்தில் மூழ்கித் தரைதட்டிப் போன மனம் மகிழ்ச்சியில் மேலெழுந்து துள்ளியது. வார்த்தைகள் வரவில்லை. ஒரு வாரமாக அனுபவித்த இனம் புரியாத குழப்பம் நீங்கி ஆசுவாசம் பிறந்து முகம் மலர்ந்தது.

“ஆனால் ஒரு நிபந்தனை. ஷூட்டிங் முழுவதும் என்கூட இருக்கணும்.  காட்சிகள், வசனங்கள் சரியான உணர்வுடன் நடிகர்களிடம் வெளிப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். சரியா?”

“நிச்சயமாக சார்…“

“வெல்கம் டூ அவர் யூனிட்.”

அப்ரார் ஆல்வி குருதத்தின் அணியில் எழுத்தாளராக இணைந்தார்.

             குருதத்தின் அணி உருவானது. இதில் குருசாமி எனும் ப்ரொடக்‌ஷன் எக்ஸிக்யூடிவ்வும் இணைந்தார். இவர்கள் அனைவரும் தொழில் முறையில் மட்டுமல்ல, குருதத்துடன் வாழ்நாள் நண்பர்களாக மாறினார்கள். ஓர் உற்சாகமான விளையாட்டு அணி போல் அவர்கள் செயல்பட்டு வெற்றிகளை அடைந்தார்கள்.

                                                                                       (தொடரும்)

Author Image

பாஸ்கர் சக்தி

திரைப்பட இயக்குநர். எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post

பி.எஸ். லோகநாத் - இருள் ஒளியால் இதயம் ஈர்த்தவர்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

மைக்கேல் – குழந்தைமையின் ஆன்மிகம்

June 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?