ஜா.தீபா
1978 தமிழ் சினிமாவுக்கு முக்கியமான காலகட்டம். மூத்த தலைமுறையினரும், இளையவர்களும் தங்களது திறன்களை படைப்பின் வழி காட்டிக் கொண்டிருந்த ஒரு காலம். பெரும் சாதனை செய்த இயக்குநர் பீம்சிங் அந்த வருடம் நான்கு படங்களைத் தந்திருந்தார். நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருந்த எம்ஜிஆர் இயக்கிய கடைசித் திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளிவந்ததும் இதே ஆண்டில் தான். ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது, பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், மகேந்திரனின் முள்ளும் மலரும், ருத்ரையாவின் அவள் அப்படித்தான், கே. பாலசந்தரின் தப்புத்தாளங்கள், நிழல் நிஜமாகிறது என அட்டகாசமான ஆண்டு அது. இதே ஆண்டில் சுவர் இல்லாத சித்திரங்கள் படமும் வந்தது. டைட்டிலில் கே. பாக்யராஜ் என வரும்போதே welcome you are welcome என பின்னணிப் பாடலை ஒலிக்கவிட்டு தனது வருகையை தானே மகிழ்ச்சியாக உறுதி செய்து கொண்டு வந்தார் பாக்யராஜ்.
இயக்குநர் பாரதிராஜாவுடன் படங்களில் பணி செய்ததோடு, புதிய வார்ப்புகள் படத்தில் நடித்து வசனமும் எழுதியிருந்தார். அந்தப் படத்தில் அறிமுகம் பாக்கியராஜ் என்று டைட்டில் கார்ட் வந்தாலும் கூட அதற்கு முன்பே சின்ன சின்ன வேடங்களில் பாரதிராஜாவின் படங்களில் நடித்திருந்தார். நாயகனாக இந்தப் படத்தில் அறிமுகம் என்பதால், அவரை தமிழகம் அறிந்திருந்தது. பாக்யராஜை கதாநாயகனாக பாரதிராஜா தேர்ந்தெடுத்தது தமிழ் சினிமாவுக்கு முக்கிய நிகழ்வு. பாக்யராஜ் எழுதி இயக்கியப் படங்களில் வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் கதையில் சில விட்டுக்கொடுத்தல்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். அது நிகழாமல், நினைத்த கதையை நினைத்த விதத்தில் பாக்யராஜால் தர முடிந்ததற்கு அவர் நாயகனாக தன்னை நிறுவிக்கொண்டதே காரணமாக இருந்தது.
பாக்யராஜ் , பாரதிராஜா இருவரின் படங்களுமே சில ஒற்றுமைகள் கொண்டிருந்தன. கிராமம், அங்குள்ள மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், சுயமரியாதை கொண்ட பெண் கதாபாத்திரங்கள், சாதிக்கு எதிரான கருத்துகள் என அமைந்திருந்தாலும் சொல்லும் போக்கில் இருவருக்குமே வெவ்வேறு பாணி அமைந்திருந்தது. பாரதிராஜா மக்களின் வாழ்க்கையை பதிவு செய்தவர் என்றால், பாக்கியராஜ் மக்களுக்குப் பிடித்த கதைகளைச் சொன்னவர். பாரதிராஜாவின் கதாபாத்திரங்கள், கதை ஆகியவை சூழலுக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருக்கும். அது தான் அவரது கதைகளின் அழகும் மையமும். சற்று மிகுந்தால் நாடகீய பாணியில் அமையக்கூடிய கதாபாத்திரங்கள். ஒரு பெண்ணைக் கண்டதும் கவிதை பாடுகிறவர்கள், அவள் மட்டுமே தனது உலகம் என நினைப்பவர்கள் பாரதிராஜாவின் நாயகர்கள். பாக்யராஜின் நாயகர்கள் மிக யதார்த்தமானவர்கள், எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அப்பட்டமாக ரசிப்பதைக் கொண்டாடியவர்கள். தாலி என்பதைக் குறித்து இருவரும் வெவ்வேறு வகைப்பட்ட கருத்துகள் கொண்ட படங்களையும் எடுத்திருந்தனர். புதிய வார்ப்புகள் மற்றும் அந்த ஏழு நாட்கள் என இரண்டு படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகள் ஒரு உதாரணம்.
அவருடைய ‘வாங்க சினிமாவைப் பற்றிப் பேசலாம்’ புத்தகத்தில், தான் சினிமாவுக்கு வருகிறபோது கதைகளோடு வரவில்லை என்றும், தன்னை பாதித்த ,கேள்விப்பட்டவற்றை கதையாக மாற்றியதாகவும் சொல்கிறார். மனைவியை இழந்த தன்னுடைய நண்பன் தன்னைக் காதலிக்கும் பெண் இருந்தும் குழந்தையை அவள் சரியாகப் பார்த்துக் கொள்ள மாட்டாளோ என்கிற பயத்தில் திருமணமே செய்யாமல் இருந்ததைப் பார்த்து ‘முந்தானை முடிச்சு’ படத்தினை எடுக்கிறார். உயர்சாதி பெண்ணை தாழ்த்தப்பட்ட ஒருவர் திருமணம் செய்துகொண்டால் வருகிற பிரச்சனை ‘இது நம்ம ஆளு’. காதலிக்கவே கூடாது என்கிற நிலையில் இருந்து ஒரு பெண்ணைக் காதலித்து அவள் வேறொருவனைத் திருமணம் செய்த பின்னர் அவளது கணவனே காதலனுடன் சேர்த்து வைப்பதாக இருந்தால் அந்தக் காதலன் என்ன முடிவெடுப்பான் என்பது அந்த ஏழு நாட்கள்.. இப்படி ஒரு ஐடியாவை அல்லது கதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு முடிவு கொடுத்து அந்த முடிவினை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்துவிடுவது தான் பாக்யராஜின் பலம்.
இவருடைய எந்தக் கதையையும் சொல்லிப் பார்க்குபோதே அதில் உள்ள conflict கள் புரிந்து விடும். நியாயஉணர்ச்சி கொண்ட ஒரு மனைவி தன் கணவன் மற்றொரு பெண்ணிடம் தகாத உறவு வைத்துக் கொள்வதைத் தெரிந்து கொள்ளும்போது பிரிய வேண்டும் என்று நினைக்கிறாள். அதற்கு மதிப்பு கொடுத்து விலகியிருக்கும் கணவன் அவளை ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க நேருகையில் மீண்டும் அவளுடன் சேர விரும்புகிறான். அவளும் ஏற்றுக் கொள்கிறாள். இதைக் கதையாக சொல்லும்போது நியாயமற்றதாகவும், மனைவி கணவனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தோன்றிவிடும். கணவன் வேறு எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்வதாகக் காட்டியிருக்கலாம். மனைவியால் மன்னிக்கவே முடியாத ஒன்றைச் செய்தவனை அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள் என்று பார்வையாளர்கள் யோசிக்கும் முன்பு கணவன் கதாபாத்திரத்தின் மீது மதிப்பை ஏற்படுத்திவிடுவது தான் பாக்யராஜ் தனது திரைக்கதையில் செய்வது. இந்தக் கதை கொண்ட ‘மௌன கீதங்கள்’ படத்திற்குப் பிறகு பாக்யராஜுக்கு பெண் ரசிகைகள் இன்னும் அதிகரித்தார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. எதையும் சரியான விதத்தில் சொன்னால் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற திரைமொழி அறிந்தவர் அவர்.
அந்த ஏழு நாட்கள் படம் இப்போது வரை விமர்சிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. அதில் ராஜேஷ் கதாபாத்திரத்தை வில்லன் போலக் காட்டியிருந்தால் அந்த கிளைமாக்ஸ் பேசப்பட்டிருக்காது. மாறாக, படத்தினையே கூட உதாசீனம் செய்திருப்பார்கள். முதலிரவில் மனைவியிடம் ;உன் கடந்த காலத்துல நடந்ததைச் சொல்லு பிரெண்டு மாதிரி நினைச்சுக்கோ என்று சொல்லி, அவளுடைய காதலை சேர்த்து வைக்க நினைக்கும் கணவனாகவும் காட்டியதால் தான் ‘என் காதலி உங்களுக்கு மனைவியாகலாம், ஆனால் உங்கள் மனைவி என் காதலியாக முடியாது’ என்று பாலக்காட்டு மாதவன் சொன்னபோது எல்லோரும் சமாதானம் அடைந்தார்கள்.
பாக்யராஜின் படங்களைப் பார்க்கையில் அவர் திரைக்கதை அமைக்கும் விஷயத்தில் இரண்டு அம்சங்களை புரிந்து கொள்ளலாம். ஒன்று அவர் கிளைமாக்ஸ் இது தான் என தீர்மானமாக இருப்பது. அதற்கு அவர் நிறைய விவாதித்திருப்பார் , எழுதிப் பார்த்திருப்பார், சில நேரங்களில் க்ளைமாக்சில் இருந்தே கதை தொடங்கியிருக்கும். மற்றொன்று க்ளைமாக்ஸ் முடிவான பின் அந்தக் கதையில் இருக்கக்கூடிய தீர்க்கவே முடியாது என்று நினைக்குமளவுக்கான ஒரு அழுத்தமான சிக்கல். குழந்தையைத் தாண்டி போய் சத்தியம் செய்வதும் (முந்தானை முடிச்சு), காதலியை நினைத்துக் கொண்டு வாழும் காதலனை காதலி மறந்திருப்பதும் அவளுக்கு வேறொரு நிச்சயம் நடந்திருப்பதும் (டார்லிங் டார்லிங் டார்லிங்), உடல் பருமனான பெண்ணைத் திருமணம் செய்தலில் ஏற்பட்ட கசப்புணர்வும் (சின்ன வீடு) மனைவியைத் தொட மாட்டேன் என்று மனைவியின் தகப்பனிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு அதை மீறியதும் (இது நம்ம ஆளு) என ஒவ்வொரு படத்திலும் தீர்க்க முடியாத ஒன்றை முன்வைத்து அதை தீர்ப்பது தான அவரது திரைக்கதை யுத்தியாக இருந்திருக்கிறது.
கதையின் மையம் எதுவோ அதில் இருந்து இம்மி பிசகாமல் சொல்லிச் செல்வது என்பது அவரது இன்னுமொரு எழுத்துத் திறன். தளபதி படத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் இப்படி சொல்லியிருப்பார், தேவா சொன்னால் தளபதி எது வேண்டுமானாலும் செய்வார் என்பது படத்தின் தொடக்கத்தில் இருந்தே சொல்லப்பட்ட ஒன்று. ஆனால், அர்ஜுன் தன்னுடைய தம்பி என்று தெரிந்ததும் தேவா அர்ஜுனைக் கொலை செய்ய சொன்னதும் ‘அவன் என் தம்பி..என்னால் முடியாது ’ என்பதாக தளபதி சொன்னது தன்னால் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றார். அதற்குப் பதிலாக தேவா சொன்னால் தம்பியைக் கூட கொலை செய்வான் தளபதி என்றிருந்து அதை தேவா புரிந்து கொண்டு தடுத்திருந்தால் அது நட்புக்கான படமாக இருந்திருக்கும் என்பது பாக்யராஜின் கருத்து. இதை அவரது இயக்கத்தில் வெளிவந்த `எங்க சின்ன ராசா’ படத்தில் செய்திருந்தார். சின்னம்மாவின் மீது அதீத நம்பிக்கையும் அன்பும் கொண்டிருக்கும் சின்ராசு விஷம் கலந்த பாலைக் குடித்திருப்பார். என்ன செய்தாலும், யார் என்ன சொன்னாலும் கடைசி வரை சின்னம்மாவை விட்டுக் கொடுக்காத கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார். இப்படி கதாபாத்திரத்தின் தன்மை கெடாமல் கதை சொல்லக்கூடியவர்.
திரைக்கதை யுத்தி என்று நாம் எதை இன்று சொன்னாலும் அதன் ஒரு சாயலைத் தனது படத்தில் காட்டிய பெருமை இவருக்கு உண்டு. ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்தி வசனங்கள் இல்லாமல் ஒரு காட்சியை விளக்குவது இன்றைய ட்ரெண்டிங் ஆக பேசப்படுகிறது. தாவணிக் கனவுகள் படத்தின் முதல் காட்சியே ரெட்ரோ பாடலில் கதை சொல்வது தான்.
கதையின் முடிவை முதலிலேயே சொல்லி கதையை சுவாரஸ்யமாக எடுத்துச் சென்ற படமாக குஷி படத்தை சொல்கிறோம். ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் முதல் காட்சி, சுலக்ஷ்னா பிள்ளையாரிடம் ‘என்னை முதன்முதலா பாக்க வர்ற மாப்பிள்ளை தான் என்னைக் கல்யாணம் பண்ணனும்’ என்று கண்ணை மூடி வட்டம் வரைவார். அந்த வட்டம் சேர்ந்து விடும். பாக்கியராஜும், சுலக்ஷனாவும் தான் சேரவிருக்கிறார்கள் என்பதை முதலிலேயே சொல்லிவிட்டு அதற்கான சாத்தியங்களையும் ஏற்படுத்திவிட்டு அடுத்தடுத்து திருப்பங்களை வைத்த படமாக இருந்தது.
தமிழ் சினிமா வசனங்களால் ஆனது. ஊர்த்திருவிழாக்களில் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் படங்களின் ஒலிநாடாக்களை ஒலிக்கவிட்டு ரசித்தவர்கள் நாம். பாட்டு புத்தகங்கள் போலவே வசன புத்தகங்களும் விற்பனையில் கொடிகட்டியது. ஒருவர் படம் பார்த்து முடித்ததும் மற்றவர்களுக்கு கதை சொல்லும்போது தக்க இடத்தில் வசனத்தை மனப்பாடமாக சொல்லிக் காட்சியை சொன்னால் அவருக்கு அந்த ஊரிலேயே மதிப்பு கூடும். வசனத்துக்கென கைதட்டியதெல்லாம் உண்டு. சில ஊர்களில் தொடர் வசனங்கள், கதையின் போக்கை மாற்றும் வசனங்களுக்கு திரையரங்கில் லைட்டினை ஒருமுறை எரியவிட்டு அணைப்பார்கள். பிரபலமான வசனங்கள் வரக்கூடிய காட்சிக்காகக் காத்திருந்த பார்வையார்கள் நாம். கதைக்கு அடுத்து வசனம் என்கிற இலாகா தான் நம்மிடையே இருந்தது. வசனமே கதையை நகர்த்தியது. இதன் பின்னணியில் தான் பாக்யராஜின் வசனங்களைப் பார்க்க வேண்டும். பார்வையாளர்கள் தான் சொல்லும் கதையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் பெரிதும் நாடியது வசனங்களையும் தான்.
அனாவசியமாக ஒரு வசனம் கூட இல்லாத காட்சிகள் அவருடையது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதற்கேற்ற தன்மையில் பேசுவார்கள். இரட்டை அர்த்த வசனங்களும் உண்டு தான். ஆனால், அதை எல்லோரும் ரசிக்கும்படி வைப்பது என்பது கத்தி மேல் நடப்பது போல. அவர் அதில் வித்தை காட்டுபவர். பாக்யராஜ் படங்ககளுக்கு முன்பு பெண்கள் சிலவற்றை வெளிப்படையாக பேசமாட்டார்கள் என்பதாக இருந்தது. அடக்கம் அல்லது ஆவேசம், எப்போதேனும் நகைச்சுவை என பெண் கதாபாத்திரங்களுக்கான வசனங்கள் எழுதப்பட்டபோது அதை மீறியவர் இவர். ‘இது நம்ம ஆளு’ படத்தில் மனோரமாவும் ஜானகியும் சம்பந்திகள். இருவரும் ஜவுளிக்கடையில் இருந்து திரும்பி வரும்வழியில் தங்கள் மகனையும், மகளையும் எப்படி சேர்த்து வைப்பது என்று பேசுவார்கள். இவரைத் தவிர வேறு யார் இப்படி எழுதிவிட முடியும் என்பது போன்றதான வசனம் அது. கற்பனை செய்து கூட பார்க்கத் தயங்கும் காட்சி இது.
நாயகன், நாயகி தவிர குணச்சித்திர கலைஞர்களுக்கு பாகியராஜ் கொடுத்த இடம் பெரியது. எஸ்.எஸ் சௌந்தர், ‘கல்லாப்பெட்டி’ சிங்காரம், கவுண்டமணி, செந்தில், மனோரமா, குமரிமுத்து, ஜனகராஜ், கோவை சரளா, மாஸ்டர் காஜா ஷெரிப் , ராஜேஷ் என இவர்களை நாம் கதாபாத்திரங்களாக எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம். கதைக்கு என்ன தேவையோ யார் தேவையோ அதை மட்டுமே கொண்டு எழுதப்பட்டவை இவரது திரைக்கதைகள்.
இன்று திரைக்கதைக்கென ஒரு விதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. திரைக்கதை யுக்திகளுக்கு பெயர்கள் இருக்கின்றன. பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. இன்றும் நாம் திரைக்கதைகளுக்கான உதாரணங்களாக பாக்யராஜ் படங்களை முன்வைக்கிறோம். அவர் எந்தத் திரைப்படக் கல்லூரியிலும் படித்திருக்கவில்லை. திரைக்கதைக்கென புத்தகங்களை வாசித்ததில்லை. அவர் செய்ததெல்லாம் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாகவும், யதார்த்தமாகவும் புரியும்படியும் எளிமையாக ஒரு கதையைச் சொனனது தான். சினிமாவில் கடினமே எளிமை தான். ஆனால், அதை பாக்யராஜ் சிறப்பாகக் கையாண்டார். ஒரு கைதியின் டைரி படத்துக்கு தமிழுக்கு இந்திக்கு என்று இரண்டு க்ளைமாக்ஸ் எழுதி இரண்டையும் ஏற்றுக்கொள்ள வைக்க முடிந்தது.
அவருடைய நாயகர்கள் பலவீனமானவர்கள், தவறு செய்து திருந்துபவர்கள் , பெண்களிடம் அசடு வழிபவர்கள், கண்மூடித்தனமான அன்பைக் காட்டுபவர்கள். அவர் காலத்தில் எந்த நடிகரும் இது போன்ற பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியிருப்பார்கள். பாக்யராஜ் தன்னை அதில் பொருத்திக் கொண்டார். அவருடைய உதவியாளர்கள் தங்கள் கதைகளில் தாங்கள் நடிக்கக் கூடிய நம்பிக்கையை அவர் கொடுத்திருந்தார். கதாநாயகன் என்பதற்கான இலட்சணங்களை அவர் தாண்டிக்கொண்டே இருந்தார். தன்னையே தன் படத்தில் பகடி செய்து கொண்டார் “ஏம்பா துணை மாப்பிள்ளையை இலட்சணமா கூட்டிட்டு வரக்கூடாதா? திருஷ்டி பொட்டு வச்சாப்ல இருக்கான்..ஆளும் மூஞ்சியையும் பாரு. இவன் கெட்ட கேட்டுக்கு கழுத்துல மப்ளரு வேற” என ஒரு பாட்டி போகிற போக்கில் பாக்யராஜை வெளுத்து வாங்குவார். திருதிருவென முழிக்க, கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் உங்கள் பாக்யராஜ் என்று கார்டு வரும். இதெல்லாம் துணிச்சலின் தன் எழுத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் உச்சம்.
கதையையும், அதன் உணர்வுகளையும் மட்டுமே நம்பி தன் திரைக்கதையை அமைத்துக் கொண்ட இவரது படங்கள் ஒவ்வொன்றையும் குறித்து நாம் தனிக் கட்டுரைகளே எழுதலாம். ஒரு காட்சியை எங்கு தொடங்குகிறார், எந்த இடத்தில் முடிக்கிறார் அதற்குள் எத்தனை அடுக்குகள் வைக்கிறார் என்பதெல்லாம் ரசிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்குமானவை. ஒரு கதையின், ஐடியாவின் பலம் தெரிந்ததாலேயே தமிழ் சினிமாவின் கதைத் திருட்டு விவகாரத்தில் அவரால் நியாயங்கள் பெற்றுத் தர முடிந்தது.
பாக்யராஜ் அவர்களின் இழப்பு செய்தியைக் கேட்டதும் தங்களுடைய ஆசிரியரை இழந்ததாகவே பலரும் நினைத்தார்கள். அவர் கைபிடித்து எழுதச் சொல்லித் தரவில்லை. எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். சினிமாவுக்குத் தேவை நம்பிக்கை என்பதை ஒரு வழிகாட்டியாக சொல்லித் தந்திருக்கிறார். சினிமா எப்போதும் வழிகாட்டிகளால் வாழ்கிறது.
இன்றைய தலைமுறை எதையும் புதுமை என்கிறது. Vibe , Genre, Trending என்று பெயர் வைக்கிறது. Syd field என்ன சொல்லியிருக்காருன்னா எனப் பேசுகிறது. இவை எல்லாவற்றுக்கும் தொடக்கத்தினை எவரேனும் ஆராய்ந்தால் அதில் பாக்யராஜ் அவர்களை பிரதானமாகக் கண்டடைவார்கள். இறுதி வரை கதைக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தாருங்கள் என சினிமாவின் இலக்கணமாக சொல்லிச் சென்றிருக்கிறார்.
எந்தத் திரைப்பட டிஸ்கஷன் என்றாலும் பாக்யராஜின் பெயரைச் சொல்லாமல் அவர் படத்தைப் பற்றிப் பேசாமல் எவரும் தொடர்ந்ததில்லை. இனியும் அப்படித் தான் . ஒரு கலைஞன் இப்படித் தான் தன் சாசுவதத்தை நிலை நிறுத்தமுடியும். பாக்யராஜ் என்றும் நிலைபெற்றிருப்பவர் !











