கார்த்திக் அருள்
இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டியது மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரத்தின் அடுத்த படம் என்பதுதான். ரோமாஞ்சம்/ஆவேஷம் படங்களின் இயக்குனர் ஜித்து மாதவன் எழுதியது என்பது மேலும் ஆவலைத் தூண்டியது. ட்ரெய்லர் கட் செய்திருந்த விதமும் அருமையாக இருந்தது.
சிறையில் இருந்து விடுதலையாகி எங்கு போவதென்று புரியாமல் தவிக்கும் அம்மாவும், அவரது 6 வயது மகனும் ஊர் ஊராகச் சென்று வெவ்வேறு பெயர்களில்/ அடையாளங்களில் தம் அடுத்தக்கட்ட வாழ்க்கையை வாழ முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மீது அன்போ பரிவோ காட்டுபவர்களை விட்டு விலகிச் செல்கிறார்கள். அவர்கள் செயல்கள் மர்மமாக இருப்பதால் முதலில் அவர்கள் மீது சந்தேகம் வந்தாலும் போகப் போக அவர்கள் கடந்தகாலத்தில் ஏதோ ஒரு பெருந்துயரத்தைச் சந்தித்திருப்பார்கள் என்று எண்ண வைக்கிறது.
இப்படியாக தனியே வாழும் ஒரு மூதாட்டியிடம் ‘ஹோம் நர்ஸ்’ என்ற பெயரில் வந்தடைகின்றனர். தாய்க்கிழவி போல அராத்தாக அழிச்சாட்டியம் செய்யும் ஒரு Thug பாட்டி- துப்பாக்கியுடன் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அங்கு நடக்கும் சில சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு அம்மாவும் மகனும் பிரிய நேர்கிறது. மீண்டும் இணைந்தார்களா என்பதை ஒரு slow burn த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார்கள்.
முதல் பாதி நிதானமாக நகர்ந்தாலும் நேர்த்தியான மேக்கிங்கால் திரையுடன் ஒன்றிப் பார்க்க வைக்கிறது. இரண்டாம் பாதி டிராக்கில் இருந்து சற்று விலகியது போல் இருந்தாலும் அந்த அபாரமான இறுதிக் காட்சியால் அசர வைத்துவிட்டது! அதிக வசனங்கள் இல்லாமலே அம்மாவாக நடித்த ஃபர்ஸானா பலதிங்கள், மகனாக நடித்த ஆதிசேஷன் இருவரும் தம் அகன்ற கண்களாலேயே அவர்கள் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகின்றனர். Their eyes speak volumes. Fantastic Finds! இரண்டாம் பாதியில் பதின் வயது சிறுவனாக நடித்த முஹம்மத் ஸினானும் நல்ல நடிப்பு!
அம்மாவும் மகனும் மட்டுமே முக்கியமாக கதாபாத்திரங்கள் என்றாலும் இவர்களுடன் பயணிக்கும் துணைக் கதாபாத்திரங்களும் நன்றாக எழுதப் பட்டிருக்கிறது. குறிப்பாக அந்தப் பாட்டி. தாய்க்கிழவி ராதிகாவை எல்லாம் அசால்ட்டாக தூக்கி சாப்பிட்டு விட்டார்! கொஞ்ச நேரமே வந்தாலும் டோவினோ தாமஸ் நிறைவாகச் செய்திருக்கிறார். ஜான் பால் லாலும் (நடிகர் லாலின் மகன்) நல்ல பங்களிப்பு – தந்தை நினைவு படுத்தும் தோற்றம்
சமீபத்தில் பார்த்த அற்புதமான திரை அனுபவமாக இருந்தது இப்படம். ஷைஜு காலித்தின் அபாரமான ஒளிப்பதிவும் விவேக் ஹர்ஷனின் பிரமாதமான எடிட்டிங்கும், சுஷின் ஷ்யாமின் மர்மமான பின்னணி இசையும் அதற்கு முக்கிய காரணங்கள். உலக சினிமாக்களுக்கு சவால் விடும் Techinical Crew! வணிக ரீதியான வெற்றியைப் பெற்றுத் தந்த மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேஷம் படங்களைத் தந்த இருவர் இணைந்து இப்படியோர் சிறு முதலீட்டுப் படத்தைப் புதியவர்களை வைத்து எடுத்தது நிச்சயம் அவர்கள் திறமை மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கையைக் காட்டுகிறது! OTT ரிலீஸுக்குக்குக் காத்திருக்காமல் நிச்சயம் பெரிய திரையில் பார்க்கலாம்.











