ரமேஷ் வைத்யா
“ஏய் கருப்பன் வாறாண்டா
நாலு படி ஏறி நின்னு நாடி கொடி அறுத்துருவான்
ஆறு படி ஏறி நின்னு ஆள தூக்கிருவான்
எட்டு படி ஏறி நின்னு ஏய்ச்சவன எரிச்சுருவான்
பத்து படி ஏறி நின்னு பாவக் கற தீத்துருவான்…”
சமீபத்தில் வந்த கருப்பு படத்தில் உச்சக் காட்சியில் சூரியா கறுப்பாக ஆடிய இந்தப் பாட்டின்போது பல பேருக்கு சாமி வந்து தியேட்டரில் ஆடியதாகத் தகவல். முன்பென்றால் உதட்டில் ஓர் அலட்சியச் சுழிப்பு வந்திருக்கும். இந்தக் காலத்தில் நம்பலாம். வோட்டுப் போட்டுவிட்டு வந்த அமானுஷ்யக் கூட்டமாக இருக்கும் என்று எனக்குள்ளே தர்க்கம் வந்துவிட்டது.
நான் நேரடியாகப் பார்த்த தியேட்டர்ச் சாமியாட்டங்களும் உண்டு. எனக்கு நினைவுபடுத்திக்கொள்ள வசதியாக, கால வரிசைப்படியே பார்த்துவிடலாம்.
முதல் அமானுஷ்ய அனுபவப் படத்தின் பெயர் சொன்னாலே போதும், தரம் விளங்கிவிடும். ‘ஆதிபராசக்தி’. டைட்டில் பாட்டே, ‘ஓம் ஓம் ஓம்’ என்றுதான் ஆரம்பித்தது. டீயெம்மெஸ்ஸின் குரலில் கொஞ்சம் சாத்வீக அம்மனைக் குறித்தது.
‘ஆதிபராசக்தி ஆதிபராசக்தி
உலகமெங்கணும் பரவி நின்றதும்
உயிரினங்களில் மருவி நின்றதும்
அளவிலாததும் அழிவிலாததும்
ஆதிபராசக்தி…’ என்று வேகம் பிடிக்கும் அந்தப் பாடல், பிற்பாடு சாமி மலையிறங்கப்போவதற்கான உடுக்கடி அளவில் இருந்தது. அதுவுமில்லாமல், படம் போட்டவுடனேயே சாமியாடி மலையேறி களைத்துப் போய்விட்டால், தொடர்ந்து வரும் ரெண்டே முக்கால் மணி நேரப் படத்தைப் பார்க்க முடியாது. பைசா வீண். கிளைமாக்ஸ் பாட்டுக்கு ஆடினால்தான் சாமிக்கே மரியாதை.
அம்மா மடியில் உட்கார்ந்து பார்க்கும் அளவிலான வயதுதான் எனக்கு. ச்சேச்சே அம்மா என்று என் பயாலஜிகல் அம்மாவைத்தான் சொன்னேன். வத்தலக்குண்டு என்னும் கிராமத்தில் ஏதோ ஒரு டென்ட் கொட்டாய். குன்னுவாரன்கோட்டை என்னும் கன்னாபட்டி என்னும் குக்கிராமத்தில் இருந்து பயணம் போய்ப் பார்த்த படம். டைட்டில் பாட்டு முடிந்து படம் ஆரம்பிக்கிறது. அபிராமி பட்டரான எஸ்வீ சுப்பையா ஏதோ தவறாகப் பேசிவிட (நீங்கள் நினைப்பது மாதிரியெல்லாம் இல்லை, பௌர்ணமி அல்லாத நாளில் ‘இன்று முழு நிலவு வரும்’ என்று சொல்லிவிட்டார் அவ்வளவுதான்) சம்பவ தினத்தன்று நிலா வரவில்லை என்றால் மேற்படியாருக்கு மரண தண்டனை என்பது போன்ற சிச்சுவேசன்.
நேராக அம்மனிடம் போனார். “அபிராமி, என்னடி இது? என்னை உன்மத்தனாக்கி என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டிவிட்டாயா? தன்னை மறந்து உன்னை நினைப்பவருக்கெல்லாம் இதுதான் முடிவா? சொல்லுடி” என்று கேட்டார். நான் என் அம்மாவிடம், “என்னம்மா இந்தாளு மரியாதை இல்லாமப் பேசுறாரு?” என்று தார்மீகமாகக் கேட்டேன். சுப்பையாவுக்குக் குறையாத அவமரியாதை வைபோடு அம்மாவும், “வாய மூட்றா. பாட்டு வரப்போகுது” என்றார்.
மரியாதைக் குறைவான ஸ்தாயியிலேயே, ‘சொல்லுடி அபிராமி’ என்று தொடங்கினார் அபிராமி பட்டர்.
அப்படியே,
‘செங்கையில் வண்டு கலின் கலினென்று ஜெயம் ஜெயமென்றாட- இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட – இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று குழைந்து குழைந்தாட – மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட’
என்று பட்டர் போட்ட போட்டில் எனக்கே என்னமோ மாதிரி இருந்தது. மனிதர்களுக்குச் சாமி வரும் என்று தெரிந்திருந்தால், அன்றைக்கு நானுமே ஆடியிருக்கக் கூடும். எஸ்.வரலட்சுமி அம்மன் வந்து கம்மலைக் கழற்றி வீசி நிலவைக் கொண்டுவந்ததும் எதுவும் புரியாமல் நான் சொரிந்துகொண்டிருக்கக் கூடும். அது புல்லரிப்பாகவும் இருந்திருக்கக் கூடும். கூடாததென்றால் அடுத்த பாட்டைச் சொல்லலாம். மீனவ நண்பன் சுருளிராஜன் வீட்டுக்கு ஆதிபராசக்தி வந்தாள். அவனும் சுப்பையாவுக்குச் சளைத்தவனில்லை போலும்,
ஆத்தாடி மாரியம்மா சோறு
ஆக்கிவச்சேன் வாடி அம்மா
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேணாம்
தின்னுப்புட்டுப் போடி அம்மா
என்று ஏகவசனத்தில் பாடினான்.
அந்தச் சின்ன வயதில் அது எனக்கு அசௌகரியமாக இருந்தது. பின்னாளில் நான் வளர்ந்து அம்மன் சாமி பாடல்கள் கேட்க நேர்ந்தது. அவற்றை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்தவராக எல்லார் ஈஸ்வரி தென்பட்டார்.
//அந்தப் பாசத்தோடு வந்தேன் அடி மாரியாத்தா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
மக்களை ஆதரிக்க வேண்டுமடி செல்லாத்தா//
//உப்புத் தண்ணி ஊறுதம்மா
கண்ண விட்டு சிந்துதடி//
என்று சகட்டுமேனிக்குப் பேசுவது வழக்கம் என்று தெரிந்தது.
எல்லார் ஈஸ்வரியை விட்டாலும், ஐயப்பனை மரியாதை குறையாமல் பாடும் கி.வீரமணியே அம்மனைப் பார்த்து,
நெறஞ்ச மனசு உனக்குத்தாண்டி மகமாயி
உன்னை நெனைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாக
மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி
என்றுதான் பாடினார் என்பது வரலாறு.
என்றாலும் ‘தின்னுப்புட்டுப் போடி’ என்பது ஜீரணம் ஆகவில்லை. அதைத் தொடர்ந்து, என் தாயின் கை என் கண்களை மூடின. (இப்போது நாம் ஆதிபராசக்தி படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.) என்னவென்றால், சனி பகவான் யாரையோ பார்க்கப் போகிறான். அந்தப் பார்வையை நான் பார்த்துவிடக் கூடாதென்றுதான் கண்ணை மூடியிருக்கிறார். நான் விரலிடுக்கு வழி பார்த்துவிட்டேன். (ஒருவேளை அதுதான் இன்றைய நிலைமைக்குக் காரணமாக இருக்குமோ… ச்சேச்சே இருக்காது.) அதெல்லாம் முடிந்து மகிஷாசுரனை அழித்து பராசக்தி விஸ்வரூபம் காட்டியபோது, தியேட்டரில் ரெண்டு பேருக்குச் சாமி வந்துவிட்டதை அங்கே ஏற்பட்ட கசகசப்பின் மூலம் தெரிந்துகொண்டு அம்மா எனக்குச் சொன்னார்.
சிறிய இடைவேளைக்குப் பிறகு ஏகப்பட்ட அம்மன் படங்கள் வந்தன. விதவிதமான அம்மன்கள் ஒரே விதமான கதைகளோடு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர். என்ன மாதிரி அம்மன்கள் என்றால்,
திருப்பத்தூர் கௌமாரி
திருவானைக்கா அம்மா
மாங்காட்டு காமாக்ஷி
மலையாள பகவதி
தஞ்சாவூர் மாரி
கன்னியாகுமரி
மலையனூர் செண்பகம்
மயிலாப்பூர் கற்பகம்
கன்னிகா பரமேஸ்வரி
துலுக்காணத்தம்மா துர்க்கை அம்மா
முக்குழி அம்மா
வழங்கி அம்மா
எல்லை அம்மா
கங்கை அம்மா
நாச்சியம்மா
தங்க பேச்சியம்மா
அன்னை மூகாம்பிகா
எங்கள் யோகாம்பிகா
அலமேலம்மா
வரிக்கோலம்மா
தூய தஞ்சையம்மா
வீர படவேட்டம்மா
வைரவி
பைரவி
தேனாட்சி திருப்பாச்சி
அம்மாயி
ப்ரம்மாயி
அழக்கம்மா
கனகம்மா
ஆதிபராசக்தி….
பட்டியலுக்கு முடிவு கிடையாது.
தமிழ்த் திரையுலகில் நான் பார்த்த அம்மன்களின் பட்டியலுக்கும் அவ்வண்ணமே முடிவில்லை.
என் அம்மன் தரிசனம் கேயார் விஜயாவிடமிருந்துதான் தொடங்கியது. ஐஎஸ்ஸோ சான்றிதழ் குத்தப்பட்ட முதல் அம்மன். அதன் பிற்பாடு மார்க்கெட் நிலவரம் பார்த்து வகை வகை அம்மன்கள்.
பப்பிம்மா
சாவித்ரிம்மா
மீனாம்மா
பானுப்ரியாம்மா
ரோஜாம்மன்
சௌந்தர்யாம்மன்
விஜயசாந்திம்மா
அனுஷ்காம்மா
நயனதாராம்மா…
எல்லோரிலும் தனித்த ரம்யாகிருஷ்ணம்மா. ஏனெனில் வெள்ளை உள்ளம் என்கிற படத்தில்தான் நான் ரம்யா கிருஷ்ணனை முதன்முதலாக பரிச்சயப்பட்டிருந்தேன்.
இந்த போதம் வந்த பிறகுதான் தமிழ் சினிமாக்களில் இந்த அம்மன் கேரக்டர் சித்திரிக்கப்படுவதில் Succubus Syndrome என்னும் உளவியல் சமாச்சாரம் இருப்பது தெரியவந்தது.
அம்மன் என்று ப்ளெயினாகத் தொடங்கிய பக்திப் பட வரிசை, பாளையத்து அம்மன், ராஜகாளி அம்மன், பொட்டு அம்மன், பண்ணாரி அம்மன், நாகாத்தம்மன், சோட்டாணிக்கரை அம்மன் என்று வளர்ந்து, மூக்குத்தி அம்மனில் வந்து நிலை நின்றது. அதுவும் 2, 3 என்று தொடரக்கூடும்.
இவற்றுள் நாகாத்தம்மன் என்பதை மட்டும் என்னால் பதம்பிரித்துப் பொருள்கொள்ள முடியவில்லை என்பது ஒரு தமிழ்ப் புலவனாக என் ஆதங்கம். ஆனால் நான் மேலே சொன்ன சிண்ட்ரோம் புரிந்துகொள்ளத் தக்கதே.
நேரடி அம்மன் படமாக இல்லாவிட்டாலும், கரகாட்டக்காரனில் வந்த மாரியம்மா மாரியம்மா பாட்டில் பல ஊர்களில் பல பேர் சாமி வந்து ஆடினார்கள். சாமி பாட்டு தனி ஆல்பங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது அந்த சினிமாப் பாட்டு. இளையராஜா கைங்கர்யம்.
கனகாம்மாவோடு இணைந்து ஆடிய ராமராஜனை ஆம்பளை அம்பாள் எனக் கொண்டாடிய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு.
இந்த அமானுஷ்ய ஆட்டங்களில் மற்றொரு பெரும்பிரிவான பேய்களைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது.











