சவிதா
சிறுவயதிலிருந்து ஒரு விரலைப் பிடித்துக்கொண்டு நடக்கப் பழகியிருக்கிறோம். அது ஒரு பாதுகாப்பான வழிகாட்டியாக நம்மை உணர வைத்திருக்கிறது. வளர்ந்த பின் அந்த விரல் தரும் நம்பிக்கை வேறு பொருட்களில், வேறு விதங்களில் ஒவ்வொருவருக்கும் மாறுகிறது. என்னதான் வளர்ந்தாலும் அந்த வெம்மை நம்மை ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது. விரல் பிடித்து நடந்த பயணங்கள் சிலருக்கு குரல் பிடித்து நடக்க ஆரம்பித்தது எப்போதென உணர முடியாமல் திகைத்து நின்றிருக்கிறோம். நம் வாழ்வுடன் ஒரு தேவ குரல் கலந்திருந்ததை மறைந்த பிறகுதான் உணர முடிந்திருக்கிறது. எஸ்.பிபியின் திடீர் மறைவில் அனுபவித்த அதே வலி எஸ். ஜானகிம்மாவின் இழப்பிலும் நேர்ந்தபொழுதுதான் அப்பிணைப்பு துலங்கியது.
மறைந்தபின்னரே உணர்கிறோமா என்று யோசித்தால்.. இல்லை. அதற்கு முன்னரே கூட மனதோடு இறுகப் பிணைந்திருந்தவரை தனியாக நினைத்து யோசிக்க முடியாத நிலையில்தான் இருந்திருக்கிறோம். எஸ், ஜானகி என்னும் மாதரசியின் வாழ்வு திரையிசையால் நிரப்பப் பட்டது. உங்கள் வாழ்வின் மிக முக்கியமான பத்து பாடல்களைச் சொல்லுங்கள் என 80-90ல் பிறந்தவர்களைக் கேட்டால் ஜானகிம்மாவின் ஒரு பாடலின்றி அந்த பட்டியல் நிறைவடைந்திருக்க முடியாது. அந்தளவிற்கு அவருடைய பாடல்கள் அனைவரின் வாழ்விலும் இன்றிமையாததாக இருந்திருக்கின்றன.
சிறுபெண்ணாக இந்த திரைத்துறைக்கு தன் தேன் பாய்ச்சிய குரலோடு வந்த ஜானகிம்மாவிற்கு, தன் கண்முன் இருந்த சவால்களை தன் கடின உழைப்பால் எதிர்கொள்வது அநாயாசமான ஒன்றாக இருந்தது. இசையை அருந்தும் சாதகப் பறவையாய் தன்னை உருமாற்றிக் கொண்ட அவரின் வாழ்வு தொடங்கும் இடத்திலேயே விதி பேசியது. பிறகெல்லாம் கூட மலர்ப்பாதையாக இல்லை. ஆனால் அவர் குரலின் இனிமையும் இசைமீதான அர்ப்பணிப்பும் அந்த கரடுமுரடான பாதையைச் சற்றே நிரவி வைத்திருந்தது.
ஆண்ட் ராய்ட் போனும் இணையமும் இல்லாத காலத்தில் ஒரு இரவிருந்தது. நெடுந்தூரம் நடந்தே அலுவலகமோ பள்ளியோ சென்ற காலமது. உடலால் உழைந்துக் களைத்து இரவென்பது ஓய்வெடுக்கவும் மனச்சாந்தியுறவுமாக மட்டுமே நினைத்த இராக்காலங்கள். ஒளிவடிவமாக பாடலைப் பார்க்க திரையரங்கம் செல்ல வேண்டும். ஆனால் குரல்வழியாக வீட்டு வானொலியில், சற்று வசதிபடைத்தவர்கள் டேப்ரிகார்டரில் அடைய முடிந்தது. ததும்பும் குரல்வழியே இசை இரவை அமைதிக்கு இட்டுச் செல்லும் ஆதுரத்தில் சகல சங்கடங்களையும் மறக்க சில குரல்களைக் கைக்கொண்டோம்.
அதற்கு முன்பான தலைமுறையில் டி எம் எஸ், பி சுசீலா , ஜிக்கி, A.M ராஜா, பிபி ஸ்ரீனிவாஸ் போன்றோர் இருந்தனர். ஆனால், வானொலியின் வரவுக்குப் பிறகு இசை ஆர்வலர்களைத் தாண்டி நான்கு குரல்கள் மட்டுமே தெரியும். எஸ்பிபி, மனோ, சித்ரா, ஜானகி என வானொலியில் இந்த நான்கு குரல்களை மாறி மாறி சொல்லிவிட்டு போய்விடுவார்கள். நின்று பாடலை நிதானமாகக் கேட்க அவகாசமில்லாத, ரசனைக்கெல்லாம் நேரமில்லாத மனிதர்கள் கூட இந்த குரல்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். அப்படியான தனித்துவம் மிகுந்த ஒரு குரலோடு ஜானகிம்மா தன் ரசிகர்களை வசப்படுத்திக் கொண்டிருந்தார். .
தன் குருவிடம் கீழ்ப்படிதலுடன் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் ஒரு குறும்பான மாணவி ஒருநாள் அவர் சட்டைப்பையிலிருந்து கீழ்விழும் புகைப்படத்தைப் பார்க்கிறாள். அது அவருடைய மகன் என்று தெரிய வருகிறது. பார்த்த மாத்திரத்தில் அவரை விரும்பத் தொடங்குகிறாள். பின் அவருடைய சகோதரி வீட்டில் நேரே முதன்முதலில் பார்க்கிறாள். குருவானவர் இந்த பெண்ணைப் பாடச் சொல்ல ஜானகிம்மா முதலில் பாடிய பாடல் :’ரசிக் பல்மா ஆயா” . சோரி சோரி என்னும் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியது். தவிப்பும் காதலும் நிறைந்த அந்த பாடல் என் ரசனைக்குரிய காதலனே, உன்னிடம் ஏன் என் இதயத்தை இழந்தேன் என்பதாக ஆரம்பிக்கிறது.. இப்படி ஒரு ரசனையான திறமையான நுண்ணுணர்வான காதலைக் கண்டதுண்டா எங்கேனும்?
அந்தக் காதலின் மேன்மையை எங்கும் கைவிடாதவராக அவரின் கணவர் திரு. வி. ராம்பிரசாத் அவர்கள் ஜானகிம்மாவின் இசைப்பயணத்திற்கு பெரும் ஆதரவாக இருந்துள்ளார். அன்று ஜானகிம்மாவின் பாடலைக் கேட்டபிறகு தன் தந்தையிடம் திரைப்படத்துறைக்கு பரிந்துரை செய்யும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படியே ஜானகிம்மாவின் குருவும் மாமனாருமான திரு சந்திரசேகர் அவர்கள் ஜெமினி ஸ்டுடியோவிற்கும் ஏவி எம்மிற்கும் கடிதம் எழுதிப்போட்டு அதன்படி ஏவி எம்மில் இசையமைப்பாளர் திரு. ஆர். சுதர்சனம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏவி எம்மின் மாத சம்பள பாடகியாக திரைத்துறையில் இணைந்தார்.
தன்னுடைய காதலை மிகச்சரியாக புரிந்துக்கொள்ளப்பட்ட பெண்ணாக, அவர் முகத்தின் நிறைவைக் கண்டே அறிய முடியும். எஸ். ஜானகிம்மாவை குரலாக, ஸ்தூல வடிவமாக உணர்ந்த பெண்களை விட அவராகவே உணர்ந்த பெண்கள் அதிகம். சங்கீதத்தின் சங்கதிகள், பிரிகாக்காள், நெளிவு வளைவுகள், முகடுகள் இதையெல்லாம் சங்கீத உலகின் மேதையாக அவரை உயர்த்தி இருந்தாலும், ஜானகிம்மா அவரின் குரல் பாவத்தால் மட்டுமே அனைத்து மனங்களிலும் நெருங்கி வந்தார்.. நடிப்பு என்பது என்ன ? சொல்ல நினைக்கும் மனதின் உணர்வை பெற்றுக்கொள்ளும் மனதிற்கு மிகச்சரியாகக் கடத்துவது. அதை செவ்வனே ஜானகிம்மாவின் குரல் செய்தது. என் குரல் நடிக்கிறது என்று அவர் சொன்னாலும் உணர்வைத் தன்னியல்பாக உணராமல் அவ்வளவு நெருங்கியிருக்க முடியாது.

தென்னிந்தியா மொத்தத்துக்குமான பெண் குரல் எஸ் ஜானகி என்று சொன்னால் மிகையாகாது. என்றைக்குமே இரு பகுதிகளுக்கும் இருக்கும் பிரச்னைகள் குரல்களையும் பிரித்திருந்ததோ என்னமோ? ஆனால் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் எஸ். ஜானகி முடிசூடா ராணிதான். தாலாட்டுக்கு, காதலுக்கு, மோகத்துக்கு, தாய்மைக்கு என எல்லாவற்றிற்கும் ஒத்துழைக்கும் ஒரு குரல் இருந்தது எல்லா இசையமைப்பாளர்களுக்கும் வசதியாகப் போய்விட்டது. 20க்கும் மேலான மொழிகளில் ஆயிரக்கணக்கானப் பாடல்கள் பாடியிருப்பதாக ஒரு கணக்கு சொல்கிற்து. Mono Acting செய்வார், பல பக்தி ஆல்பங்களுக்கும், தனிப்பாடல்களுக்கும் தானாகவே இசையமைத்துப் பாடியுள்ளார். ‘ மெளனப் போராட்டம்(1989) என்னும் தெலுங்குப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சில திரைப்படங்களில் பாடகியாகவே தோன்றியிருக்கிறார். புதிதாய் வரும் இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக ஜானகிம்மாவே அவர் இருந்திருக்கிறார். அவரின் இயல்பே தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் உற்சாகமாக வைத்துக் கொள்வதாக இருந்திருக்கிறது.
ஜானகியம்மாவின் சிரிப்பு மிகுதியாய் செழிப்படைந்த பூக்களின் இதழ்களைப்போல விரிந்துக் கொண்டே செல்லும். பாடல்களில் நடிப்பதற்காக சிரிக்கும் சிரிப்பு, பக்கத்தில் இருப்பவர்களின் மீதான வாஞ்சையுடன் கூடிய சிரிப்பு,, மேடையில், கூட இருப்பவர்களிடம் பேசும்போது வருவது என்று வகைப்படுத்திக் கொண்டாலும் சுப்பிரமணி என்று விளித்து இரண்டு பால்மணம் மாறாத குழந்தைகள் போன்று எஸ்பிபி அவர்களிடம் சிரித்து விளையாடிப் பேசிக்கொள்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.
ஜானகிம்மாவின் உருவம் கூட தனித்துவமானதுதான். நெளிநெளியான கூந்தல், அந்த காலத்துக்குரிய பெரிய குங்குமப் பொட்டு, தன் கணவரின் இழப்புக்குப் பிறகு வண்ணங்களை மறுத்துவிட்டு வெண்மையை தேர்வு செய்திருந்தார். அப்போதும் நெற்றி நிறைய சந்தனமும் திருநீறும் இருக்கும். கூந்தலை நுனியில் ஒரு முடிச்சு. க்ளோஸ்ட் நெக் எனப்படும் பின்கழுத்து உயர்த்தித் தைக்கப்பட்ட பிளவுஸும் புடவையை நேர்த்தியாக பின் செய்துகொண்டு மேடைக்கு வருவார். பாடும்போதும் பேசும்போதும் உடையை சரிபடுத்திக்கொண்டிருக்க மாட்டார். கையில் ஒரு சின்ன புத்தகம்(அதில் பாடல்வரிகளும் சங்கதிகளும் விளக்கமாக எழுதப் பட்டிருக்குமாம்) மற்றும் ஒரு கர்ச்சீஃப். வாய்ஸ் ரூமில் எஸ்பிபி கர்ச்சீஃபைப் பறித்துக்கொண்டு பாடவிடாமல் குறும்பு செய்வாரென்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். விளையாட்டு, குறும்பு, நகைச்சுவை என்று இருப்பதனால் அவரை இலகுவாக எண்ண முடியாதபடிக்கு நிமிர்வான பெண்ணாகவும் இருந்தார்.அதற்கு இளையராஜாவே திருப்பிக் கூப்பிடும் வரை பொறுமை காத்ததும் தனக்கு அளித்த விருதை மறுத்ததும் ஆதாரங்கள்.
ஆரம்பத்தில் ஜானகி அறிமுகமான 1957லிருந்து அத்தனைப் பாடல்களையும் சாட்ஜிபிடியால் கூட வரிசைப்படுத்தி விட முடியுமா என்பது தெரியவில்லை.
எத்தனைப் பாடல்கள் குறிப்பிட்டாலும் நிச்சயம் இந்த பாடலை ஏன் குறிப்பிடவில்லை என்று ஒரு பத்து கேள்விகளாவது எதிர்கொள்ள வேண்டி வரும்.
ஆலாபனைகளில் மட்டுமே உச்சம் தொடும் அழகு ஜானகி குரலுக்கு உண்டு.
தேன் நிலவில் ‘காலையும் நீயே மாலையும் நீயே’, அன்பாலே பேசிய என் அறிவுச்செல்வம், மெட்டி ஒலி காற்றோடு, சங்கத்தில் பாடாத, விக்ரம் அறிமுகப்பாடல் இன்னும் பல பாடல்களில் தனித்துவம் மிகுந்து இருக்கும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இளையராஜா இசையமைத்த பாடல்களில் இரண்டாம் இடையிசை மற்றும் பாடலின் முதலில் வரும் துவக்க இசையில் எஸ் ஜானகிம்மாவின் ஆலாபனைகளை மட்டுமே ஒரு தனிக்கட்டுரையில் பேசலாம்.
போலீஸ்காரனின் மகளில் ‘பொன் என்பேன், சிறு பூவென்பேன் மெல்லிய மிதத்தல் என்றால் இசையமைப்பாளர் ஜி ராமநாதன் இசையமைத்த தெய்வத்தின் தெய்வம் படத்தில் கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் பாடல் துள்ளிச்செல்லும் அழகு.
1965ல் காட்டுத்துளசி என்ற படத்தில் இசையமைப்பாளர் எம். எஸ் பாபுராஜ் இசையமைத்த சூரியகாந்தி(மலையாளம்) பாடல். இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவரான திரு. சாரதா அவர்களின் குரலில் “வெயிலறியாதே. மழையறியாதே” ..என்று சரணத்தில் மிளிரும்போது பிரித்தறிய முடியாத பாவம் எழும்பும்.
1963ல் ஸ்வர்ணகெளரி ( கன்னடம்) படத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம். வெங்கட ராஜு ‘ஜெய கெளரி ஜெகதீஸ்வரி’ பாடலைப் பாட ஜானகிம்மாவைத் தேர்ந்தெடுத்தார். நாரத முனிவர் தன் சிஷ்யையின் திறமையை கெளரி தேவி முன் நிரூபிக்க வேண்டியிருந்தது. ஸ்வர ஆலாபனைகள் இறுதியில் அமைந்த அந்த ஆரம்ப காலப் பாடலை ஜானகி தன் குரலால் அநாயாசமாகப் பாடி முடித்திருப்பார்.
1960ல் வந்த பாதை தெரியுது பார் படத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பாடல் தென்னங்கீற்று ஊஞ்சலிலே’ பாடல் உள்ளது. பி.பி. ஶ்ரீனிவாஸின் குரலும் ஜானகியின் குரலும் இணைந்தால் தேன் வழிவது போன்ற பிரம்மையை உண்டாக்கிவிடும்.
1962ல் மஞ்சி மனசுலு(தெலுங்கு) என்ற படத்தில் ஓஹோ. ஓஹோ. பவுரமா என்ற பாடலை கே. வி மகாதேவன் இசையமைப்பில் ஜானகி பாடியிருப்பார். அதே படம் இருவர் உள்ளம் என்று தமிழாக்கம் செய்து வந்தபோது மியா மியா பூனைக்குட்டி என்ற அதே மெட்டில் அமைந்த பாடலை பாடியவர் எல். ஆர் ஈஸ்வரி. எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் துள்ளலும் இளமையும் இருந்தால் ஜானகியின் குரலில் தன் தலைவனைப் பற்றி அறிகின்ற தவிப்பும் இணைந்தே இருக்கும்.
அதே ஆண்டில் வெளியான ‘தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே’ பாடல் இன்றுவரை பலரின் உறக்கத்திற்குமுன் பாடலாக இசைக்கப் படுகிறது. மலையாளத்தில் இதே போல உறங்குவதற்கு முன் கேட்கும் பாடலாக தொம்மண்டே மக்கள் படத்தில் இடம்பெற்ற “ஞான் உறங்கான்போகும் முன்பாய்” பாடும் பாடல் திகழ்கிறது. இன்றளவும் பிரார்த்தனைப் பாடலாக விளங்கும் அந்த பாடலின் ஜீவன் ஜானகிம்மாவின் குரலின் ஆழ்ந்த தெய்வீகத்தன்மையுடன் விகசிக்கிறது.
கைவிடப்பட்ட ஒரு தாய் தன் மகளை வைத்துக்கொண்டு தவிப்பதை அந்த குரலைக் கேட்ட மாத்திரத்தில் உணரவைக்கிறது என்பதை அழகிய கண்ணே பாடலில் அடைந்தோம் அதே போல் கன்னடத்தில் வெளீயான கெஜ்ஜே பூஜேவில் ‘மகுவே நின்னா.. ஹுனகே’ பாடலைக் கேட்டு நெக்குருகி நின்றுதான் ஆக வேண்டும். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைப்பில் வெளிவந்த சுமைதாங்கி படத்தில் ‘ராதைக்கேற்ற கண்ணனோ’ பாடல் துள்ளலிசை வகையில் சேர்ந்திருந்தாலும் ஜானகியின் குரல் மட்டும் அப்படத்தின் மொத்த சோகங்களுக்கும் நிகரான ஆறுதலாய் துடிப்புடன் இருக்கும்.
1962ல் வெளிவந்த நர்த்தன சாலா படத்தில் தியாகராஜர் பரம்பரையில் வந்த சுசர்லா தக்ஷிண மூர்த்தி அவர்கள் இசையமைத்தார். விராட பருவ கதையான அந்த படத்தில் அன்றைய புகழ்பெற்றவர்களான பி சுசீலா, கண்டசாலா, , பாலமுரளிகிருஷ்ணா, என அனைவரும் பாட கண்டசாலாவுடன் இணைந்து ஜானகிம்மா பாடிய ‘ஜெய கணா நாயகாவும் தனித்துப் பாடிய ‘நரவரா.. ஓ குருவரா’ பாடலும் அன்றே அவரின் ஆழ்ந்த ஞானத்தைப் போற்றியிருக்கிறது.
1970க்குப் பின்னும், தமிழுலகில் இளையராஜா அவர்களின் வருகைக்குப் பின்னும் ஜானகிம்மாவின் குரல் திசையெட்டும் பரவ ஆரம்பித்தது. சந்திரகாந்தம் ஆ நிமிஷத்திண்டே, அன்னக்கிளியே உன்னைத் தேடுதே, எரடூ மனசூவில் இந்து எனகே கோவிந்தா, அவளூடே ராவுகளில் ராக்கேந்து கிரணங்கள், செந்தூரப்பூவே,, அவள் அப்படித்தானில் வாழ்க்கை ஓடம் செல்ல பாடலின் நடுவே நாமும் அந்த நதியின் ஓரம் தனித்துச் சென்றுக் கொண்டிருப்போம். சன்னடி அப்பண்ணாவில் கரேதரு கேளடே பாடல் ஷெனாய் இசையுடன் இணைந்து பாடியதில் குரலும் இசையும் தனித்தனியாக பிரித்தறிய முடியாத அளவு இனிமையைக் கொண்டுவந்து தரும். சலீல் செளத்ரியின் மலர்க்கொடி போலே மற்றொரு தாலாட்டு. கண்ணிலே என்ன உண்டு பாடலையும் பெண்களையும் என்றுமே இணைத்துத்தான் நினைக்க முடியும். உறவின் வழியே விரக்தியடைந்த ஒரு சுதந்திரமான பெண்ணின் தனிமையை குரல் உணர்த்திக்கொண்டே செல்லும். அங்கிருந்து ஜானகிம்மாவின் ராஜ்யம்தான் வியாபித்து நின்றது. பின் விடுதலையாய் சிறகடிக்கும் காற்றுக்கென்ன வேலி பாடலில் கன்றுகுட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு என்று எல்லா விலங்கும் அறுபட்டுவிட்டது என்றே மனம் துள்ளும். ஏ… நன்னடி கோகிலயே என்று நடிகை லஷ்மி பாடகியாய் பாடும்போதும் அந்த குறும்பு எட்டிப்பார்த்தபடி நாயகனைச் சீண்டும்.

1980களில் ஜானகிம்மா பெயரை அறிந்திடாத எவருமில்லை. 1983ல் வந்த படம் பல்லவி அனுபல்லவி. மணிரத்னம், பாலுமகேந்திரா, இளையராஜா, லஷ்மி, அனில் கபூர் அனைவரும் இணைந்த முக்கியமானப் படம் அது. நகுவா நயனா பாடல் தரும் இளமை குறுகுறுப்பையும் நகு எண்டிடே பாடல் முதிர்ந்த பெண்ணின் நிதானத்தையும் சொல்லி இரண்டு எல்லைகளில் நின்றது. அதிலும் நகு எண்டிடே இரண்டாம் இடையிசையில் நீரில் இலேசாக காலை நனைத்தபின் உடல் முழுவதும் பரவும் குளுமையில் மனம் விம்மும்.
ஜானகிம்மாவின் குரலில் மட்டும்தான். கூடெவிடே பாட்டின் ஆடிவா காட்டே… பாடிவா. பாடலில் மந்தாரப்பூக்களும் லல லாவும் மலர்ந்து விரியும். அந்த காலங்களின் பெண் தன் இணையை தலைவனாக, இறைவனாக நினைத்துப் பாடும் பெண்ணின் குரல் ஜானகிம்மாவுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். ஶ்ரீவாரி ப்ரேமலேகா படத்தில் தொலிசாரி மிம்மல்னி பாடலில் முதலில் சொல்லிக்கொண்டே வந்து சந்தியா ராகம் சந்திரஹாரத்தி என்று தன் மயக்கும் குரலில் சொல்வதை கேட்க வேண்டும். அவ்வளவுதான். நகரவே முடியாது. தும்பி வா இன்றும் கேரளத்தின் தாலாட்டுப்பாடல்.
ஹேமாவதி என்ற படத்தில் எல் வைத்யநாதன் இசையமைத்த “சிவா சிவா என்னாத நாலிகேயெகே” பாடல் மட்டும்தான் கடினமாக இருந்தது என்று ஜானகிம்மா குறிப்பிட்டிருக்கிறார். “சாமஜவர வரகமணா” பாடலை விழிவிரித்துக் கேட்டிருக்கிறோம். ஒரு பேட்டியில் காய்ச்சலில் பாடியது என்கிறார். அந்த அர்ப்பணிப்புதான் ஜானகிம்மா. “தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடலில்” உயிரெல்லாம் உதிர்ந்தது போல அந்த உக்கிரமான இசையும், வரிகளும் அதை உணர்வில் கொண்டு சென்ற குரலுமாய் பிரமித்து நின்றபோது இந்த பாடலுக்கு விருது கிடைக்கவில்லையா என்ற கேள்வியும் பிறந்தது. அதற்கு முன்னரே தெலுங்கில் சித்தாரா படத்தில் ‘வென்னேல்லோ கோதாரி அந்தம்’ என்ற இதே மெட்டிலான பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்ற செய்தியே அப்புறம்தான் தெரிந்தது. ஜானகிம்மாவுக்குதான் விருதை விட ரசிகர்கள் முக்கியமானவர்களாயிற்றே.
‘இது ஒரு நிலாக்காலம்’ ஒரு ஃபேஷன் ஸ்டேட்மெண்ட். மிண்ட் குரலில் யவ்வனத்தின் குதூகலம் வழிய வழிய ஆடை கூட பாரமாகும் என்று பாடுவார். ‘நாதா நீ வரும்’ என்ற பாடலை ஒரு குளிர்க்காலையில் கேட்டுப்பாருங்கள். சப்தபதி படத்தில் ‘நெமலிக நெர்பின’ ஒரு சங்கீத நாட்டியம். சங்கீத ஜதிகளில் அற்புதம் காட்டும் அதே குரல் எளிமையின் வார்ப்பில் ‘ராசாவே… உன்னை நம்பி’ என்று முதல் மரியாதையில் நம்மைக் கட்டிக்கொள்ளும். ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்’ போதையில் மிழற்றும். ‘தேனும் வயம்பும்’ ( தமிழில் பாடி அழைத்தேன்) பாடலில் சில்லிக்கும் குரல் சுற்றுப்புறங்களில் இயற்கையைத் தேடி ஓடவைக்கும்.
உணர்வெழுச்சி பாடல்கள் என்று கொண்டால், நெளிவு வளைவுகள் கொண்ட பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன், மோகமுள் கதையின் தங்கம்மாவுக்கான குரலாய் சொல்லாயோ வாய் திறந்து, கலைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவளாய் நாதம் என் ஜீவனே, வந்து சேராத கணவனை எண்ணி பாடவா உன் பாடலை,, பிரிந்தவனை எண்ணி கண்ணா வா கவிதை சொல்ல வா, தொழுது பாடும் சோகத்தின் விளிம்பில் எனது கானம் உன் காதில் விழவில்லையா? அன்பே அன்பே எங்கே எங்கே என சாவின் விளிம்பில் நின்று போராடும் காதலின் குரல், தன்னந்தனியாக வாழ சபித்த விதியைச் சொல்லும் அழகு மலராட, தாபத்தின் வேட்கையில் அதோ அந்த நதியோரம் என்னும் கவர்ந்திழுக்கும் பாடல், உயிரே உறவில் என்று அவனுடன் இணைந்து கொள்ளல், ஜென்மமாக காத்திருக்கும் அவனுடன் சேர்வதற்காக ஒருநாள் அந்த ஒருநாள், வசந்த கால கோலங்கள் என வெதும்பி, தொலைந்த காதலுக்காக காற்றில் என் கீதம் எனத் தேடி ஒவ்வொன்றும் வேறு வேறு களங்கள். வேறு வேறு உலகங்கள்.
கோயில் புறா (1981) சங்கீத ரசிகர்களுக்கு மிக முக்கியமான இசை ஆல்பம். பாதிவிழி மூடிய தேவதையான சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய வினுசக்ரவர்த்தி இயக்கிய படம் அது. அதன் இசைக்காக இன்றும் தனித்துவம் பெற்றிருக்கிறது. சிங்கார வேலனே தேவா எப்படி மேதையான காருக்குறிச்சி அவர்களின் நாதஸ்வரமும் ஜானகிம்மாவின் குரலும் இணைந்த அதிசயமோ அதே போல் சங்கீதமே என் தெய்வமே பாடலும் இன்னொரு அற்புதம். இந்த பாடலின் நாதஸ்வர பகுதியை வாசித்தது எம்.பி.என் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி சகோதரர்கள். இதுவே இவர்களது இறுதிப் படமாக அமைந்ததாக இணையம் சொல்கிறது. ‘ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல் தவித்தது பெண்மனம் ஒன்று’ என்று குரலும் நாதஸ்வரமும் இணைந்து அதற்கடுத்த வரிகளில் ஜானகிம்மாவின் தேர்ந்த இசைஞானத்தில் பாடல் உச்சத்தைத் தொடும்.
High Notes எனப்படும் உச்சஸ்தாயியில் பாடுவதற்கு ஜானகிம்மாவை அழைத்திருக்கிறார்கள். வெண்ணெல்லா கோதாரி, சங்கீதமே என் தெய்வமே, ஏ துரியோதனா, பிடேனு நின்ன பாதா, சின்னஞ்சிறிய வண்ணப்பறவை, சரப்பொளி மாலா ஆகிய பாடல்களில் அவற்றை நிகழ்த்தியிருக்கிறார்.
பின்வரும் பாடல்களில் எதைவிடுவது எதை எடுப்பது என்று தெரியாதவண்ணம் முழு இசையுலகையும் ஜானகிம்மா கட்டுப்படுத்தியிருந்தார். அன்பில் நிறைவதென்றால், அழகிய கண்ணே, முத்து நகையே முழு நிலவே, அள்ளி அள்ளி வீசுதம்மா,, பிள்ளை நிலா, தூரி தூரி தும்மக்க தூரி, தாலாட்டில் மூழ்குவதென்றால், தேன் தூங்கும் பூவே, தாயும் நானே, தேனே தென்பாண்டி மீனே, வரம் தந்த சாமிக்கு, தாலாட்டு மாறிப்போனதே, மந்திர புன்னகையோ எனப் பொழிந்து, மர்மமான ஒரு பெண்ணாக, அன்பே வா அருகிலே, நாளும் என் மனம், வெட்ட வெளி பொட்டலிலே, பூவே பனிப்பூவே.., நதியோடும் கரையோரம் என மிளிர்ந்து, தலைவனை எண்ணி பாடுவதாக வைதேகி ராமன், பூங்காற்றே தீண்டாதே, வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது, காட்டுக்குள்ளே காதல், மலரே மலரே உல்லாசம், ஒரே முறை உன் தரிசனம், தாலாட்டும் பூங்காற்று, கண்ணன் வந்து பாடுகின்றான், , சின்ன சின்ன வண்ணக்குயில், வான்மதியே, காதல் வானிலே, ராதா அழைக்கிறாள், தூது செல்வதாரடி, உன்னை நான் அறிவேன், சின்ன கண்ணன் அழைக்கிறான், எண்ணத்தில் ஏதோ சில்லென்றது, கண்டேன் எங்கும் பூமகள், தண்ணீர் குடம் கொண்டு தனியாக, தேவன் கோயில் தீபம் ஒன்று என உல்லாசித்து, குறும்பான இளம்பெண்ணாக பூட்டுகள் போட்டாலும், இவளொரு இளங்குருவி, ஒரு பூங்காவனம், ரோஜாப்பூ ஆடிவந்தது, சின்ன பூ சின்ன பூ, அம்மம்மா, ஓஹோஹோ காலை குயில்களே, புத்தம் புது காலை, எந்த பூவிலும் வாசம், அன்னக்கிளியே உன்னை, பூவரசம்பூ பூத்தாச்சு எனக் குளிர்ந்து, மாடுலேஷனில் ஏரியிலே என்ன மரம், பாடச்சொல்லாதே, டாடி டாடி ஓ மை டாடி, ஓ மேக ராஜனே( கன்னடம்), மம்மி பேரு, கண்ணா நீ எங்கே, போடா போடா மொட்ட என அசத்தி, மோகத்தில் குங்குமத்து தங்க மேனி, அட மச்சம் உள்ள மச்சான், நான் ஆளான தாமரை அட்டு அமலாபுரம்,, கன்யாகுமரி, இழுத்து போத்தி நான், என் தேகம், கட்டி பிடிக்கட்டுமா, கன்னி மனம் கெட்டுப்போச்சு, வா மாமா, வா வா பக்கம் வா என ததும்பி, தெய்வீகத்தில் உதயம் நீயே, நல்லதோர் வீணை செய்து, மாதா உன் கோவிலில், அழகாக கண்ணுக்கு அழகாக, மார்கழித் திங்கள் அல்லவா என நிறைந்து மெல்லிய காமத்தை பொன்வானம் பன்னீர் தூவும், எடுத்து வெச்ச பாயும், கன்னி மனம் கெட்டுபோச்சு, மனசு மயங்கும், மெளனமான நேரம், எனத் தூண்டி என சொல்லிக்கொண்டே போக இந்த கட்டுரை நிறைவடையாது. இவையெல்லாம் தனித்த பாடல்கள்.
எஸ்பிபியுடன் இணைந்த பாடல்களில் இருவருக்குமான ஒத்திசைவு நன்றாகத் தெரியும் ஏகாந்த வேளை போன்ற கடினமான பாடல் முதற்கொண்டு இயல்பான பாடல்களில் கூட இருவரும் மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு சங்கதிகளை அள்ளித் தெளிப்பார்கள். ஓ வசந்த ராஜா, ரோஜா ஒன்று முத்தம், ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், நிலவே முகம் காட்டு, சோலை மலை ஓரம், இன்னும் என்னை, வானம் இடி இடிக்க, நடு சாமத்துல, என் கண்ணுக்கொரு நிலவா, வாசலிலே பூசணிப்பூ, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, முத்துமணி. சாமிக்கிட்ட சொல்லிவெச்சு, பூ பூ பூ பூத்த சோலை, தானா வந்த சந்தனமே, தென்ன மரத் தொப்புக்குள்ள, பாடு நிலாவே, மலரே மெளனமா என கணக்கிலடங்கா பாடல்கள். க்ளப் பாடல்களில் இருவரும் சேர்ந்து அதகளம் செய்திருப்பார்கள். சொல்லப் போனால் சில்க் ஸ்மிதா அவர்களுக்காக ஜானகிம்மா பாடிய பாடல்கள் எனத் தனித்தொகுப்பை உருவாக்கலாம்.
மலேசியா வாசுதேவனுடன் ‘கட்டி வெச்சுக்கோ’வில் வரும் தொகையறா மட்டுமே எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். பாடலின் அழகே வேறு திசையில் மாறிவிடும். ‘தானந்தன கும்மி கொட்டி, கைவலிக்குது, தங்கச் சங்கிலி, இதயமே, இக்குசக்கா..இக்குசக்கா என்று தொடங்கும் உனக்கும் எனக்கும், பேரு வெச்சாலும் பாட்டு இந்த தலைமுறையையும் சேர்த்து இழுத்திருக்கிறது. சீவி சிணுக்கெடுத்து, வெட்டி வேரு வாசம், ஆகாய கங்கை, என பட்டியல் இழுத்துக்கொண்டே செல்கிறது.
இளையராஜா குரலுடன் இணைந்து பாடிய அத்தனைப் பாடல்களுமே முத்திரைதான். முக்கியமாக நாடோடி தென்றலில் வரும் ஒரு கணம் ஒரு யுகமாக மற்றும் ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே மறுக்க முடியாத பாடல்கள்.
ஒரு கணம் ஒரு யுகமாக பாடலில் தவிப்பும் நிராசையும் ஏக்கமுமாக ஜானகி காதலனை நினைத்துப் பாடுவதும் நடுவில் ஒரு இடைவெளியும் அதற்கான பதிலாய் இளையராஜா அவர்கள் பாடுவதும் காலத்தால் கடக்க முடியாத ஒன்று. ஒரு சந்தனக்காட்டுக்குள்ளேவில் அன்பால் ஆளத் தெரிந்த மனைவியின் குரல் ஜானகிம்மாவிற்கு. நான் எப்படிப்பட்ட வாழ்வை வாழ்ந்தேன் தெரியுமா என கதாநாயகன் நினைவு கூர்வதற்கு ஏற்றாற்போல் அந்த முதற்பகுதி தழைந்திருக்கும். “என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது” என்று க்ரிஸ்டல் குரலில் ஓங்கி முழங்கும் அந்த ஒரு வரியில் ஜானகிம்மாவின் முத்திரை அழுத்தமாய் நிற்கும்.
ஜேசுதாசுடன் தென்றல் வந்து என்னை , மேகம் கருக்குது, ஒரு ராகம் பாடலோடு, வெள்ளை புறா ஒன்று, எந்தன் கைக்குட்டையை, கங்கை நதி மீனோ, நாதம் எழுந்ததடி, தூங்காத விழிகள் ரெண்டு, உன்னையும் என்னையும், சிப்பிக்குள் ஒரு முத்து, அலைபாயுதே கண்ணா என்ற பட்டியலுண்டு,
மனோ ஜானகி டவுன் பஸ்ஸில் கேட்பதற்குண்டான பல பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். தூதுவளை இலை அரைச்சு, அடி அரச்சு அரச்சு, மானே மரகதமே, காதோரம் லோலாக்கு, சலக்கு சலக்கு சேலை, பூத்தது பூந்தோப்பு, சிட்டான் சிட்டான் குருவி, சந்தன மார்பிலே போன்ற பாடல்கள் பயணத்தை இலகுவாக்குவதற்கென்றே ஒலிக்கும்.
ஒட்டகத்த கட்டிக்கோ, எர்ராணி, குர்ரதாணி, காதல் கடிதம் தீட்டவே, நெஞ்சினிலே என்று பல பாடல்களுடன் 2000த்தை நெருங்க நெருங்க ஜானகிம்மா பாடுவதைக் குறைத்துக் கொண்டார். ஒரு பாடகி தன் வாழ்நாளில் பாட முடிகிற பாடல்களை விட பலமடங்கு பங்காற்றிய ஜானகிம்மா தன் ஓய்வை அறிவித்தபோது திரையுலகம் ஆச்சரியமாகப் பார்த்தது. ஆனாலும் அப்படி விலகியிருந்ததே உணர முடியாத அளவு நீக்கமற அவர் பாடல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தன. விஐபியில் மிகச்சரியாக பாடல்வரிகள் பொருந்தும் வண்ணம் அவர் பாடிய பாடலையே தமிழர்கள் இறுதிப்பாடலாக எண்ணிக் கொள்ளலாம்.
ஆனால் நகமும் சதையுமாக வாழும் மனிதர்களுக்குத்தானே ஆதி அந்தம் எல்லாம். இசைக்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்து சரஸ்வதி தேவியாக எல்லா இடங்களிலும் பரிமளித்தவரின் சுகந்தம் இந்த பூமியை விட்டு அகல வாய்ப்பேயில்லை. நீங்காதிருக்கும் அவரின் குரலைப் பற்றிக்கொண்டு இன்னும் நம் வாழ்க்கை செல்லும்.
// நீ கேட்கத்தானே நிதம் பாடுவேனே தேனாகவே
காயங்கள் ஆறும் கவலைகள் தீரும் தானாகவே
நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும் நான் பாடும் ஆலோலமே.










