எண்பதுகளின் இளவயதினருக்கு, மலைப்பாதையின் வளைவுகளில் வாகனத்தில் செல்கையில், `செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற பாடல் தவிர்க்கவியலாமல் மனதில் எழும். எண்பதுகளுக்குப் பின்னால் பிறந்தவர்களும் கூட ஒரு முறை ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தை பார்த்திருப்பார்களேயானால் இந்தப் பாடல் மனதில் ஒலிப்பதைத் தவிர்க்க முடியாது. காரணம் இளையராஜாவின் இசை, யேசுதாசின் குரல் , மகேந்திரனின் இயக்கம் மட்டுமல்ல. அந்த மலையின் அழகையும், எழிலையும் கண்ணுக்கு உறுத்தாமல், கலை விருந்தாக காட்சிப்படுத்திய அந்த ஒளிப்பதிவாளர்,
தி லெஜன்ட் `பாலு மகேந்திரா’.

அந்தப் பாடலில் ஜீப்பை ஓட்டிக் கொண்டே சரத்பாபு பாடிக் கொண்டிருக்க, ஷோபாவும், தோழிகளும் அதிலிருக்கின்றனர். மேகங்கள் மூடிய மலைகளையும், ஆற்றையும் கடந்து மலைப்பாதையில் பயணிக்கிற ஜீப்பில் நாமும் உடனிருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. சரத்பாபு சில வரிகளை மட்டுமே பாட, பின்னணியில் பாலுமகேந்திராவின் தனிச் சிறப்பான மான்டேஜ் ஷாட்டுகளாக விரியும் காட்சிகள் தமிழ் சினிமாவிற்குப் புதிது. மரங்களினூடே சூரியனும் நகரும். அந்த பாடல் இடம் பெற்ற படம் 1978ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படம். இன்று வரை அருமையாகப் படமாக்கப்பட்ட இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது.
அதிகப்படியான வசனங்கள், மெலோடிராமா, டூயட்கள், அதிரடி சண்டைகள் என இருந்த அக்கால தமிழ் சினிமா மரபுகளை உடைத்து இயல்பான திரைமொழியில் அறிமுக இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் முள்ளும் மலரும் வெளிவந்தது.
அந்தத் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற ராமச்சந்திர பாபுவை மகேந்திரன் அணுகியபோது அவர் அதை நிராகரித்தார்; மேலும், ராமச்சந்திர பாபு பரிந்துரைத்த அசோக் குமாராலும் இப்படத்தில் பணியாற்ற ஒப்புக்கொள்ள முடியாமல் போனது. தகுதியான ஓர் ஒளிப்பதிவாளரைக் கண்டறிய முடியாமல் மகேந்திரன் தவித்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் மகேந்திரனை பாலுமகேந்திராவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் இப்படத்தில் பணியாற்றச் சம்மதித்தார்; இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திரா அறிமுகம் ஆனார். இதற்கு முன்பே இருபதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் அவர் ஒளிபதிவாளராகப் பணியாற்றிருந்தார்.

இயக்குநர் மகேந்திரனுக்கு இது முதல் படமென்பதால் ஏற்கனவே புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக இருந்த பாலுமகேந்திரா, திரைக்கதை, வசனம், கேமரா கோணங்கள், நடிகர்களின் தேர்வு மற்றும் படத்தொகுப்பு ஆகிய அனைத்து அம்சங்களிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
சுயமரியாதையைச் சற்றே தூக்கலாக கொண்டு தன் மேலதிகாரியான சரத்பாபுவோடு மோதும் ஆக்ரோஷமான ரஜினியையும், தங்கை ஷோபாவிடம் ஓர் அண்ணனாக அவள் பாசத்தில் கரைந்து போகும் ரஜினியையும் பாலுமகேந்திரா தனது கேமரா கோணங்களால் அந்தக் காட்சிகளின் உணர்ச்சி வேகத்திற்கேற்பக் காண்பித்திருப்பார். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடலின் ஆரம்பத்தில் தெய்வத்தை ஏந்திக் கொண்டு மலையிலிருந்து இறங்கி வரும் மக்களை சூரிய அஸ்தமனப் பின்னணியில் நிழலுருவங்களாக அழகாக காண்பித்திருப்பார். டாப் ஆங்கிளில் பெண்கள் ஆடுவது பூக்கள் விரிவது போலிருக்கும், ரஜினியின் அலட்சியம் கேமரா கோணங்களில் முழுமையாக வெளிப்படும், மேக் அப் எதுமின்றி இயல்பான முகங்களை, அவர்களின் ஒரிஜினல் நிறத்தோடு , எளிமையான அழகோடு நம் கண் முன்னால் நிறுத்தினார் பாலு மகேந்திரா.
இலங்கையைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளியிலிருந்து சுற்றுலாவுக்கு அழைத்துப் போனார்கள். அப்போது அங்கு கூட்டமாக ஆட்கள் நின்று கொண்டிருக்க, சிறுவனாக இருந்த அவர் உள்ளே புகுந்து பார்த்த போது, அங்கு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது, ( அது புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன் இயக்கிய திரைப்படமான Bridge On The River Kwai படத்தின் ஷுட்டிங்).
ஒரு பெரிய கிரேனில் கேமராமேன் அருகிலிருந்த நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். நடிகர்கள் கீழே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மேலே அமர்ந்திருக்கும் அந்த மனிதரின் ஒரு சொல்லுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘Rain’ என்று அந்த மனிதர் சொன்னதும், மழை கொட்ட ஆரம்பிக்கிறது. அப்போது சிறுவனாக இருந்த பாலுமகேந்திரா ஆச்சர்யத்தில் திகைத்துப் போனார். அத்துடன், ‘நானும் ஒருநாள் இப்படி மேலிருந்து Rain என்று சொல்வேன், மழை பெய்யும். அதற்கு நானும் ஒரு ஃபிலிம்மேக்கர் ஆவேன்’ என்று தனக்குள் உறுதியாகச் சொல்லிக் கொண்டார்.
அமெரிக்காவிலிருக்கும் பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்புகள் வந்த போதிலும், பெற்றோர் மறுத்ததால், புனேயிலிருக்கும் திரைப்படக் கல்லூரிக்கு டைரக்ஷன் படிப்புக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால் அவர் அப்ளிகேஷனுடன் இணைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்த கல்லூரி நிர்வாகம் அவருக்கு சினிமாட்டோகிராஃபிக்கு அட்மிஷன் அளித்தது. வேண்டாவெறுப்பாக சேர்ந்தாலும், எல்லா வகுப்புகளிலும் அமர்ந்து அனைத்து துறைகளையும் கற்றுக் கொண்டார்.
திரைப்படக் கல்லூரியில் பிராஜக்ட்டுக்காக செய்த A View from the Fort படத்தைப் பார்வையிட்ட செம்மீன் பட இயக்குநர் ராமுகரியாத் பாலுமகேந்திராவை அழைக்கிறார். செம்மீனின் கேமராமேன் மார்கஸ் பார்ட்லேதான் `நெல்லு’ படத்துக்கும் ஒளிப்பதிவு செய்வார். நாம் மார்கஸ் பார்ட்லேக்கு உதவியாளராகப் போகிறோம் என்று நினைத்து பாலுமகேந்திரா மகிழ்ச்சியுடன் செல்ல, ராமு கரியாத் அவரிடம் நீதான் `நெல்லு ‘ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறாய் என்று சொல்ல பாலு மகேந்திரா அதிர்ச்சி அடைகிறார். தான் வண்ணப் படங்களில் பணியாற்றியதில்லை என்று ராமு கரியாத்திடம் அவர் சொல்ல, ராமு கரியாத் அவரை வரவழைத்து கலர் ஃபிலிம் ரோலைக் கொடுத்து இன்று முழுவதும் நீ சுற்றி அலைந்து இஷ்டம் போல படமெடுத்து இந்த ரோலை தீர்த்துக் கொண்டு வந்து காட்டு என்று சொல்லி அனுப்புகிறார். சென்னை பாலுமகேந்திராவுக்குப் புதுசு. அத்துடன் மழை கொட்டுகிறது. ஆனாலும், அந்த மழையிலும் ஓர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு போய் அங்குமிங்கும் அலைந்து சென்னையின் காட்சிகளை படமெடுத்து வந்து பிராசஸிங்குக் கொடுக்கிறார். முதல்நாள் அவரை அலட்சியமாகப் பார்த்த அனைவரும், அந்த ஒளிப்பதிவின் நேர்த்தியைக் கண்டு பிரமித்தனர்.
ஸ்டுடியோவின் செட்களைத் தவிர்த்து முழுப் படத்தையும் இயற்கையழகு கொட்டிக் கிடக்கும் வயநாட்டின் அடர்ந்த காடுகள், திருநெல்லி நதிக்கரை, மலைச் சரிவுகள் மற்றும் நெல் வயல்களில் படம்பிடித்தார். அடர்ந்த மரங்களின் இலை வழியே ஊடுருவி வரும் சூரிய வெளிச்சம், பழங்குடி மக்களின் குடிசைகள் மற்றும் அவர்களின் உடல்கள் மீது விழுவதை மிகக் கவித்துவமாகப் படம்பிடித்தார்.
அடியார் பழங்குடி மக்களின் உடலமைப்பு, அவர்களின் பாரம்பரிய ஆடைகள், பச்சை குத்தும் முறைகள், அவர்களின் நடனம் மற்றும் சடங்குகளை ஆவணப்படத் தன்மையோடும், கலை நயத்தோடும் கேமராவில் பதிவு செய்தார்.
அதிகாலை நேரத்தில் மலையிடுக்குகளில் இருந்து இறங்கி வரும் மெல்லிய பனிமூட்டம், பாறை இடுக்குகளில் சலசலவென ஓடும் பனி நீர், அதைச் சுற்றியுள்ள பிரம்மாண்ட மரங்கள் என ஒட்டுமொத்த வயநாட்டின் இயற்கையை ஒரே ஃபிரேமில் கொண்டுவந்திருப்பார். நீரோடையில் பிரதிபலிக்கும் காலைச் சூரியனின் வெளிச்சத்தைக் காட்சிப்படுத்தி, பார்வையாளர்களை அந்த இடத்திற்கே நேரடியாக அழைத்துச் செல்லும் மாயத்தை பாலுமகேந்திரா தனது அறிமுகப் படத்திலேயே சாதித்துக் காட்டினார்.
அடியார் என்னும் பழங்குடி சமூகத்திற்குள் இருக்கும் கடுமையான சடங்குகள், விதிகள் மற்றும் பெண்களின் மீது சுமத்தப்படும் பாலியல் சுரண்டல்கள், சமூக ஒதுக்கல் ஆகியவற்றை மிக அழுத்தமாகப் பேசிய ‘நெல்லு’ திரைப்படம் பாலுமகேந்திராவுக்குக் காட்சி அழகியலையும் வண்ண மேலாண்மையையும் பரிசோதித்துப் பார்க்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
வானவில்லையும், ஆற்றினுள் பிரதிபலிக்கும் மரத்தையும், மரங்களிலிருந்து பறந்து செல்லும் பறவைகளையும் காண்பித்து, ‘நீலப் பொன்மானே’ என்று தொடங்கும் பாடல் கண்களுக்கு விருந்து. காதலர்களின் நெருக்கத்தை கவித்துவமாகத் தன் கேமராவில் பதிவு செய்தார். இப்படத்தின் சிறந்த வண்ண ஒளிப்பதிவிற்காக பாலுமகேந்திராவிற்கு கேரள அரசின் மாநில விருது கிடைத்தது.
பி.என். மேனன் – பாலுமகேந்திரா கூட்டணியில் அக்கால மலையாள சினிமாவில் வழக்கத்தில் இருந்த செயற்கையான ஸ்டுடியோ பாணி ஒளிப்பதிவை உடைத்து, ஒரு புதிய ஆவணப்படத் தன்மையை ‘பணி முடக்கு’ திரைப்படம் கொண்டுவந்தது. முதலாளித்துவத்தின் அடக்குமுறை, தொழிலாளர்களின் வறுமை, அவர்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் போராட்டம், வேலைநிறுத்தக் காலத்தில் குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகள் ஆகியவற்றை மிகவும் யதார்த்தமாகப் பேசிய கதைக்களத்தைக் கொண்டது.
தொழிலாளர்களின் வாழ்வுக்கும் இயந்திரமயமாக்கலுக்கும் இடையிலான மோதலை மையமாகக் கொண்ட அந்தப் படத்தில், கருப்பு–வெள்ளை ஒளிப்பதிவு வெறும் காலத்தின் தொழில்நுட்பத் தேர்வாக இல்லாமல், மனித உடலுக்கும் இயந்திர உலகத்திற்கும் இடையிலான முரண்பாட்டை வலுப்படுத்தும் காட்சி மொழியாகவும் செயல்படுகிறது.
செட்களின் செயற்கை பிரகாச வெளிச்சங்களைத் தவிர்த்து, தொழிலாளர்களின் வீடுகள், தொழிற்சாலை பகுதிகள் மற்றும் தெருக்களின் இயற்கையான ஒளியிலேயே படம்பிடித்தார்.
படம் கருப்பு-வெள்ளையில் படமாக்கப்பட்டது. தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் ஊர்வலக் காட்சிகளில் கேமராவை மக்களின் நடுவே கொண்டு சென்று, இயல்பான மனிதர்களின் கோபத்தையும் தவிப்பையும் மிக அருகில் சென்று படம்பிடித்தார்.
பாலுமகேந்திராவின் முதல் படம் நெல்லு. அது வெளிவரத் தாமதம் ஆகியது. எனவே ‘மாயா’ எனும் ராமு காரியத்தின் அடுத்த படத்திலும் வேலை செய்தார். அந்தப் படமும் வெளிவரத் தாமதம் ஆனது. இதனிடையே `பணி முடக்கு’ ரிலீஸ் ஆனது. எனவே பாலு மகேந்திராவின் ரிலீஸ் ஆன முதல் படம் ‘பணி முடக்கு’ தான்.
தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை வாயிலில் ஒன்றுதிரண்டு ‘பணிமுடக்கு’ அறிவித்துவிட்டு வெளியேறும் காட்சியும் அதைத் தொடர்ந்து இயங்காமல் நிற்கும் தொழிற்சாலையின் உட்புறக் காட்சியும் சிறப்பானது. வெளிவாயிலில் திரண்டிருக்கும் தொழிலாளர்களின் முகங்களை ஒன்றன்பின் ஒன்றாக ‘டீப் க்ளோஸ்-அப்’ ஷாட்களில் பதிவு செய்து, தொழிலாளர்களின் வர்க்கக் கோபத்தையும், ஒற்றுமையையும் வார்த்தைகளின்றித் திரையில் கொண்டுவந்திருப்பார்.
பின்னாளில் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவின் அடையாளமாக மாறப்போகும் இயற்கைத் தன்மை, இடத்தை கதாபாத்திரமாகப் பார்க்கும் பார்வை, மிகைப்படுத்தப்படாத காட்சி மொழி ஆகியவற்றின் ஆரம்பத் தடங்களை பணிமுடக்கு திரைப்படத்தில் காணலாம்.
எழுபதுளின் பிற்பகுதியில் வண்ணப்படங்கள் வேகமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில், பாலுமகேந்திரா ஒரு இயக்குநராகத் தான் அறிமுகமாகும் “கோகிலா” படத்தைக் கருப்பு-வெள்ளையிலேயே உருவாக்கினார். காரணம், கதையின் இயல்பான தன்மையும் கதாபாத்திரங்களின் அக உலகமும் வண்ணங்களை விடக் கருப்பு-வெள்ளை நிழல்களிலேயே மிக ஆழமாக வெளிப்படும் என்று அவர் நம்பினார்.
கோகிலா திரைப்படத்தில் கமலஹாசன் ஹீரோ. ஷோபாவைக் காதலித்துக் கொண்டிருக்கும்போதே, வேலைக்காரியாக இருக்கும் பெண்ணுடன் உணர்ச்சி வேகத்தில் கலவி கொண்டுவிட்ட கமலின் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியும், வெளிப்படுத்த முடியாத தவிப்பும் கருப்பு-வெள்ளையின் நிழல்களுக்குள் மிக இயல்பாகப் பொருந்தின. பிரகாசமான வண்ணங்கள் இல்லாதது, பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக நடிகர்களின் முக உணர்ச்சிகளின் பக்கம் திருப்பியது. கமல் ஷோபா இருவர் முகத்திலுமே ஒரு பக்கம் ஒளியும் ஒரு பக்கம் இருளுமாக காட்டியிருப்பார்.
கமல் மன உளைச்சலில் இருக்கும் காட்சிகளில், அவரை கதவுச் சட்டங்கள், ஜன்னல் கம்பிகள் அல்லது அறையின் மூலைகளுக்குள் அடைபட்டிருப்பது போல கேமரா படம் பிடித்திருக்கும்.கமலின் கண்களையும், உதடுகளின் நடுக்கத்தையும் மிக நெருக்கமான குளோசப் கோணங்களில் படம்பிடித்து, அவரது உள்மனப் போராட்டத்தைப் பார்வையாளனுக்குக் கடத்தி விட்டார்.
இந்தப் படத்தின் பாடல் காட்சிகளிலிருந்துதான் தனது பிரத்யேகமான மான்டேஜ் உத்தியை கையாளத் தொடங்கினார் பாலு மகேந்திரா. இதன் பிறகு தேசிய அளவில் பலரும் இந்த உத்தியைத் தொடர்ந்தனர்.
மனிதர்களின் உடலும் பாலு மகேந்திராவின் கண்களில் ஒரு கலைப் பொருள்தான். அவருடைய கேமராவுக்கு ஆண், பெண் அழகியலுக்கு எந்த பாரபட்சமும் இல்லை. கோகிலா திரைப்படத்தில் கமல் குளிக்கும் நீண்ட காட்சி உள்ளது. பெரும்பாலான காட்சிகளிலும் மேல்சட்டை அணியாமல் தான் கமல் இருப்பார். அதே போல் நீங்கள் கேட்டவை படத்தில் பானுசந்தர், வண்ண வன்ணப் பூக்கள் படத்தில் பிரசாந்த் என்று இதற்கு உதாரணங்களைச் சொல்ல முடியும்,
கமல், ஷோபா, மோகன், ரோஜாரமணி ஆகியோர் நடித்த கோகிலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததுடன், சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதையும், சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில அரசின் விருதையும் வென்றது.
ஒரு திரைப்படத்தை ஆடம்பரமான செட்கள் இன்றி, இயற்கை ஒளியையும் மனித உணர்வுகளையும் மட்டுமே கொண்டு எப்படி ஒரு கவிதையாக மாற்ற முடியும் என்பதை தான் இயக்கிய முதல் படத்திலேயே அவர் நிரூபித்துக் காட்டினார்.
ஆண்கள் தங்களுடைய பால்ய கால நினைவுகளை மீட்டும் வகையில் கிட்டத்தட்ட தனது சுயசரிதை என்று சொல்லத் தக்க கதையை “அழியாத கோலங்கள்” என்னும் தலைப்பில் பாலுமகேந்திரா படமாக்கினார். இத்திரைப்படம் மூலமாகத்தான் தமிழில் இயக்குநராக அவர் அறிமுகமானார்.
பாலியல் பற்றிய விழிப்புணர்வும், பயமும், குழப்பமும் ஒருசேர முட்டி மோதும் பதின்ம பருவத்தின் அடர்த்தியான மனக்குழப்பங்களும் அப்பாவித்தனமும் நிறைந்த மூன்று சிறுவர்களின் கதைதான் `அழியாத கோலங்கள்’.
அந்த கிராமத்து நிலப்பரப்பு முழுவதையும் வைட் ஆங்கிளில் பச்சை நிற ஒளியமைப்பில் காட்டியிருக்கிறார். மூன்று சிறுவர்களும் வயல்வெளிகளில் ஓடி வரும்போது, பக்கத்தில் ரயில் போகும், அப்படியே வேகமாக ஓடி வந்து ஆற்றின் பாலத்தின் மீதிருந்து குதித்து தண்ணீரில் விளையாடும்போது அந்தத் தன்ணீர் நம் மீது படுகிறதோ என்று எண்ணும்படி படமாக்கியிருப்பார்.
சிறுவர்கள் மூவரும் ஊரின் ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும் காட்சிகளும், கிராமத்துத் தெருக்களில் அலைந்து திரியும் தருணங்களிலும் இயற்கை வெளிச்சத்தையே பயன்படுத்தினார். இந்து டீச்சர் அந்த ஊருக்குள் வரும்போது, அதுவரை சிறுவர்களாக இருந்தவர்களுக்குள் ஆண்மை விழித்துக் கொள்கிறது. அவர்களுடைய பாலியல் குறுகுறுப்புகளையும், ஷோபாவைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பதையும், பாலியல் புத்தகங்களைப் படிக்கும் போதும், அதிலொருவன் இரவில் மிகப் பயத்துடன் எவரும் அறியாமல் தன் அத்தை பொண்ணுடைய காலை, முகத்தை, உதடை தொட்டுப் பார்க்கும் போதும், அவர்களுடைய முகங்களிலிருக்கும், பயத்தை, தயக்கத்தை, மீறத் துடிக்கும் இளமையை குளோசப் ஷாட்டுகளில் காண்பித்து அந்தக் காட்சிகளின் உணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்தியிருப்பார். `பூவண்ணம் ‘ பாடலில் அவருக்கேயுரிய மான்டேஜ் ஷாட்களில் பிரதாப் ஷோபா இருவரின் நெருக்கத்தை உணர்த்தி விட்டார். இருபக்கமும் ஓங்கி வளர்ந்து சாலையின் நடுவே குடை போல் வளைந்திருக்கு மரங்களின் கீழ், மழையில் குடை பிடித்துக் கொண்டு ஷோபா நடந்து வரும் காட்சி பச்சை நிற ஒளியில் ஒரு கவிதை போலிருக்கும்.
தனது மாமனார் R.M. வீரப்பனின் சத்யா மூவிசை நிர்வகித்துக் கொண்டிருந்த தியாகராஜன், வழக்கமான வணிக பாணி சினிமாவிலிருந்து சற்று விலகி, வித்தியாசமான கதைக்களமும் யதார்த்தமான தொனியும் கொண்ட திரைப்படங்களை எடுக்க வேண்டுமென்கிற நோக்கத்தோடு ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகிறார். அதன் முதல் தயாரிப்பாக, இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் “மூன்றாம் பிறை” படத்தை தயாரித்து வெளியிட்டார். இன்று வரை கல்ட் கிளாசிக்காக விளங்கும் அத்திரைப்படத்தின் வெற்றி சத்யஜோதி ஃபிலிம்ஸை மாபெரும் தயாரிப்பு நிறுவனமாக மாற்றியது.
இது மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும் விஜிக்கும், அவளைக் குழந்தை போல் பாதுகாக்கும் சீனுவிற்கும் இடையே மலரும் களங்கமற்ற அன்பையும், அதன் துயர்மிகுந்த முடிவையும் பேசிய திரைப்படம்.
‘மூன்றாம் பிறை’ திரைப்படம் முக்கியமாக ஊட்டியிலும், அதற்கு அருகில் அமைந்த சிறிய நகரமான கேத்தியிலும் படமாக்கப்பட்டது. பெங்களூரிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘பூங்காற்று புதிதானது’ மற்றும் ‘கண்ணே கலைமானே’ (கண்ணதாசனின் கடைசிப் பாடல் இது) ஆகிய பாடல்களுக்கான மாண்டேஜ் காட்சிகளை பாலுமகேந்திரா ஒரே நேரத்தில் படம்பிடித்தார். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்போது வெளிப்புறக் காட்சிகளை பாலுமகேந்திரா படம்பிடிக்க, ‘கண்ணே கலைமானே’ பாடலின் உட்புறக் காட்சிகள் இரண்டு நாட்களுக்குள் படமாக்கப்பட்டன.

சீனுவிற்கும் நடராஜனுக்கும் இடையிலான சண்டைக் காட்சிக்கு, வழக்கமான சினிமா சண்டையைப் போல இல்லாமல் தெருவில் நடக்கும் இயல்பான சண்டையைப் போல இருக்க வேண்டும் என்று கமலும் பாலுமகேந்திராவும் சண்டைப் பயிற்சி இயக்குநரிடம் கூறினர். டூப் இல்லாமல் வெகு இயல்பாக அந்த சண்டை அமைந்திருக்கும்.
ஶ்ரீதேவி இங்க் கொட்டும் காட்சியும், அதைத் தொடர்ந்து அடுத்த நாள் இன்ஸ்பெக்ஷனுக்குத் தேவையான ஆவணங்கள் நனைந்து சிதறிக் கிடக்க, கடிகாரம் கத்திக் கொண்டிருக்க, அடுப்பில் வைத்த குழம்பு தீய்ந்து விட என இயலாமையும், கோபமுமாக கமல் அவளைத் திட்டும் காட்சியெல்லாம், அன்றாட வாழ்வின் அசலான மனித உணர்வுகளை வெளிப்படுத்துகிற பாலுமகேந்திரா என்னும் கலைஞனின் தனிச்சிறப்பான எழுத்து,
சில்க் ஸ்மிதாவை அவருடைய கதாபாத்திரத்துக்கேற்ற கோணங்களில் கவர்ச்சியாகக் காட்டியிருப்பாரே தவிர அதில் விரசமே இருக்காது. பொன்மேனி உருகுதே பாடலின் நடனமும் அதைப் படமாக்கிய விதமும் அற்புதம், பாலுமகேந்திரா இப்பாடலை சாதாரண வெளிச்சத்தில் படம்பிடிக்க விரும்பவில்லை; “காலை 6 மணி முதல் 8 மணி வரை படம்பிடிப்போம், பிறகு இடைவேளை எடுத்துக்கொண்டு, மாலை 4.30 மணிக்கு மீண்டும் ஒன்று கூடி, சூரியன் மறையும் நேரமான மாலை 5 மணி முதல் 7 மணி வரை படம்பிடிப்போம்” என்று கூறி, ஐந்து நாட்களுக்குள் இப்பாடலை எடுத்து முடித்தார். ஆனால் பாலுமகேந்திரா எனும் கலைஞனுக்கு தனிப்பட்ட முறையில் இதில் சம்மதமில்லை. இப்பாடல் படத்தில் இடம்பெற்றது முற்றிலும் தேவையற்றது என்றும், வியாபார நிர்ப்பந்தத்துக்காக படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சில்க் ஸ்மிதாவின் நடனம் வேண்டுமென்று இப்பாடல் சேர்க்கப்பட்டதென்றும் பின்னாளில் அவர் கூறினார்.
கிளைமாக்ஸ் படமாக்கப்பட்ட நாளில் மழை பெய்து கொண்டிருந்தது. திரைக்கதையில் மழை ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும் பாலுமகேந்திரா படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்தார். கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கக் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகின. இரயிலை நோக்கி நடந்து செல்லும்போது சீனு மரக்கம்பத்தில் மோதிக்கொள்ளும் காட்சி முன்கூட்டி திட்டமிடப்பட்டது அல்ல; காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே கமல் அதைத் தானாகவே இம்ப்ரூவைஸ் செய்து நடித்தார். அக்காட்சியைப் படம்பிடிக்க, பாலுமகேந்திரா தனது இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு இரயிலின் படிகளில் அமர்ந்திருக்க, படப்பிடிப்புக் குழுவினர் அவரை கீழே விழாமல் பிடித்துக்கொண்டனர். இத்தகைய அபாயகரமான சூழ்நிலையிலும், அவர் அக்காட்சியைச் சரியாகப் படம்பிடிக்க, கமல் ஒரே டேக்கில் ஓகே செய்தார். சீனுவின் காயங்கள் உண்மையாகத் தெரிய வேண்டுமென்பதற்காக, கமல் டூப் போடாமல் தானே நடித்ததோடு கண்ணில் கரு வளையமும் உதடுகளில் வீக்கமும் ஏற்படுத்துவது உட்படப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
நினைவு திரும்பிய விஜிக்குச் சீனு யார் என்றே தெரியாது. இரயில் பெட்டிக்குள் உட்கார்ந்திருக்கும் அவளுக்குத் தன்னை அடையாளம் காட்ட, இரயில் நிலையத்தில் சீனு குரங்கைப் போல நடித்தும், கால்களை மடக்கியும் தன் முழு அன்பையும் வெளிப்படுத்திப் போராடும் காட்சியில் இரயிலுக்குள் இருக்கும் விஜியை கேமரா நிலையாக, அமைதியாகப் பிடிக்கும். ஆனால் பிளாட்ஃபாரத்தில் இருக்கும் சீனுவைக் காட்டும்போது கேமரா அவனது ஒவ்வொரு அசைவையும் துரத்தும்.
ஒருபுறம் பழைய நினைவுகளை மறந்து தன்னுடைய உலகிற்கு விஜி செல்ல மறுபுறம் அவளுக்காகத் தனது உலகத்தை இழந்து பிளாட்ஃபாரத்தில் நிற்பான் சீனு.
இரயில் மெதுவாக நகரத் தொடங்கும்போது, கமல் தள்ளாடி நடந்து வருவார். மழை பெய்த ஈரம் எங்கும் படர்ந்திருக்க, நனைந்து களைத்து, வாழ்க்கையை இழந்த தவிப்பை தன் உடல்மொழியில் வெளிப்படுத்தியபடி நடந்து வரும் கமல் தோற்றுப் போனதொரு உடல் மொழியோடு அங்கிருக்கும் பெஞ்சில் சரிந்து அமர, கேமரா மெதுவாக பின்னோக்கி நகர்ந்து, மெதுவாக க்ரேனில் உயர்ந்து டாப் ஆங்கிளில் கேத்தி ரயில் நிலைய பலகையையும், கைவிடப்பட்டு தனியனாகக் கிடக்கும் சீனுவையும் காட்டுகையில் அந்தக் காட்சிக் கவிதையை எழுதிய பாலுமகேந்திராவின் பெயர் திரையில் வந்து நிற்கும்.
தமிழ் சினிமா வரலாற்றில் பார்வையாளனை உலுக்கிய கிளைமாக்ஸ்களை பட்டியலிட்டால் அதில் மூன்றாம் பிறை கிளைமாக்ஸுக்க்குப் பிரதான இடம் உண்டு.
காதலையும், பரிதவிப்பையும், இறுதியில் ஏற்படும் பேராற்றாமையையும் பார்வையாளனின் ஆன்மாவுக்குள் நேரடியாகக் கடத்திய பாலுமகேந்திரா சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதையு, சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றார்
பாலுமகேந்திராவின் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் மான்டேஜ் ஷாட்டுகளாகத் தான் இருக்கும். ‘எங்கேயாவது ஹீரோவும் ஹீரோயினும் யதார்த்த வாழ்க்கையில் மரத்தைச் சுற்றியோ, உடன் பல டேன்சர்களைக் கொண்டோ ஆட முடியுமா’ என்று கேட்ட அவர். நிஜமாகவே நம்மால் வாழ்க்கையில் செய்ய முடிந்தவற்றையே காட்சிகளாக காட்டினாரே தவிர மிகைப்படுத்தி எதையுமே அவர் காண்பித்ததில்லை.
‘யாத்ரா’ திரைப்படத்தில் பாலுமகேந்திராவின் கேமரா இயங்கிய விதம், மலையாள சினிமா கண்ட ஆகச்சிறந்த காட்சிப் பரிமாணங்களில் ஒன்றாகும்.
சிறையிலிருந்து மீண்டு வரும் உன்னிகிருஷ்ணன், “துளசி இன்னும் எனக்காகக் காத்திருக்கிறாளா, அல்லது வேறு மணம் முடித்துவிட்டாளா?” என்ற நடுக்கத்தோடு அவளது வீட்டை நோக்கி இரவில் நடந்து செல்லும் போது, சுற்றிலும் அடர்ந்த கருப்பு நிற இருட்டு. கேமரா வைட் ஆங்கிளில் வெகு தொலைவில் நிற்கும். உன்னிகிருஷ்ணன் ஒரு நிழல் உருவமாக இருளுக்குள் நடந்து செல்வான். திடீரென, தொலைவில் இருக்கும் அந்த மரத்திலும் வீட்டின் முற்றத்திலும் நூற்றுக்கணக்கான அகல் விளக்குகள் பிரகாசமாக எரியும். துளசி அவனுக்காக காத்திருப்பாள். பாலுமகேந்திரா அந்த இருட்டிற்கும், அகல் விளக்குகளின் தங்க நிற வெளிச்சத்திற்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான ‘கான்ட்ராஸ்ட்’டை உருவாக்கியிருப்பார்.
1979-இல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி, இந்தியச் சினிமா வரலாற்றையே திருப்பிப் போட்ட காவியம் ‘சங்கராபரணம்’ திரைப்படம், கர்நாடக இசையின் பெருமையையும், சங்கீத கலாநிதி சங்கர சாஸ்திரிக்கும், துளசி என்ற தேவதாசி குலத்தைச் சேர்ந்த நாட்டியப் பெண்ணிற்கும் இடையே நிலவும் தெய்வீக பந்தத்தையும் பேசிய இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.
பரந்த ஆற்றங்கரையில் சோமையாஜுலு பாட, மஞ்சு பார்கவி ஆடுவதை வைட் ஷாட்டாக அந்த ஆற்று நீர் ஓடிக் கொண்டிருக்க மேகங்கள் சற்றே கீழிறங்கி இருக்க,, அந்த இயற்கையும் இவர்களோடு கை கோர்த்துக் கொண்டது போல் கேமரா கோணத்தை அமைத்திருப்பார். மாலை நேரத்துச் செவ்வானத்தின் பின்னணியில், அந்த ஆற்று நீரில் துளசியின் நிழல் ஆடும் காட்சியில் அங்கே பெண்ணுடலின் கவர்ச்சி மறைந்து, நாட்டியத்தின் தூய்மை மட்டுமே பார்ப்பவரின் கண்களை நிறைக்கும்.
ராகம், தாளம் பல்லவி பாடலில் கலையம்சம் நிறைந்த கோயில் பின்னணியில் நடனமாடும் துளசியிடம் கலைத்தன்மை நிரைந்திருக்கும். துளசியின் அதிவேகமான பாத அசைவுகளுக்கும், கை முத்திரைகளுக்கும் ஏற்ப கேமரா மெதுவாகவும் சுழன்றும் அவளது உடலமைப்பைப் பின்தொடரும்.
‘சங்கரா, நாதசரீராபரா’ பாடல் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு மிகுந்த பாடல். சிவனிடம் முறையிட்டு நியாயம் கேட்பதைப் போன்ற ஒரு மனநிலையில், ஆற்றாமையும், தவிப்பும் நிறைந்த ஒரு பாவத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட, அதற்கு இணையாக சோமையாஜுலு நடிக்க, அந்தக் காட்சியின் உணர்வுகளுக்கு பலம் சேர்ப்பதைப் போல பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு அமைந்திருக்கும். மின்னல், வேகமாக ஆடும் தீபங்கள், காற்று இவற்றோடு ஒத்திசைந்து அங்குமிங்கும் நகரும் கேமராக் கோணங்களின் வழியே அந்தப் பாடல் அமைந்திருக்கும் சிச்சுவேஷனின் முழுப்பரிமாணத்தையும் கொண்டு வந்திருப்பார் பாலுமகேந்திரா.
சாஸ்திரி பாடும் காட்சிகளில் கேமரா சற்று கீழே இறங்கி மேலிருந்து கீழாக அவரை நோக்கும். இது அவரது இசையின் பிரம்மாண்டத்தை பார்வையாளனுக்கு உணர்த்துகிறது.
இருவரின் உயிரும் பிரியும் தருணத்தில், கேமரா மேடையிலிருந்து மெதுவாக மேல்நோக்கி உயர்ந்து ஒட்டுமொத்த அரங்கத்தையும் மேலிருந்து பார்க்கும். அது மரணம் அல்ல; இரண்டு ஆத்மாக்கள் இசையின் வழியே ஒன்றுபட்டு இறைவனிடம் சென்றுவிட்டது என்பதை உணர்த்தும் காட்சி மொழியாக அது இருக்கும்.
இத்திரைப்படத்தில் இசையின் கம்பீரத்திற்கு எந்த இடத்திலும் தனது கேமரா இடையூறாக இல்லாதபடி, அதே நேரத்தில் அந்த இசையின் ஆன்மாவை ஒளியினாலும் கோணங்களினாலும் பார்வையாளனின் இதயத்திற்குள் கடத்தும் ஒரு தெய்வீகமான பணியை பாலுமகேந்திரா செய்திருப்பார்.
`சங்கராபரணம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு கே.வி. மகாதேவனின் இசை. கர்நாடக சங்கீத மேதையின் குரலாக தான் ஒலிக்க முடியுமா என தயக்கத்தில் இருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் அர்பணிப்பான குரல், கே. விஸ்வநாத்தின் இயக்கம் இவற்றோடு பாலுமகேந்திராவின் கேமராவும் மிக மிக முக்கிய காரணம்.
மான்டேஜ் ஷாட்கள், ஜன்னலோரம் கசிந்து வரும் வெளிச்சத்திலும், ஒற்றை விளக்கொளியிலும் காட்சிகள் எடுப்பது, கேமரா தனியாகத் தெரியாமல் திரைக்கதையோடு இணைந்து பயணிப்பது, வசனங்களின்றி காட்சிமொழியிலேயே உணர்வுகளைக் கடத்துவது என பாலுமகேந்திராவின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சிறந்த ஒளிப்பதிவுக்காக மட்டுமன்றி, காட்சி அனுபவம் தியேட்டர்களில் எவ்விதச் சேதாரமுமின்றி பார்வையாளனை அடைவதற்காகப் பாலுமகேந்திரா உருவாக்கிய உத்திகளையும், அவரது மாற்று சினிமாக்களையும், பிற படைப்புகளில் உறைந்திருக்கும் மேதமையையும் அடுத்த இதழில் தொடர்வோம்.











