The Talkie
Saturday, August 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Home தொடர்கள் தலைக்குள் என்ன

தலைக்குள் என்ன 03

The Talkie by The Talkie
August 1, 2026
in தலைக்குள் என்ன, தொடர்கள்
A A
0
தலைக்குள் என்ன 03
Share on WhatsappShare on FacebookShare on Twitter
Author Icon ஆனந்த் குமரேசன்


Adolescence webseries’ஐ முன்வைத்து..

ஒரு குற்றம் நிகழும்பொழுது அதற்கு யார் பொறுப்பேற்பது? யார் பழியை ஏற்பது? ஒருவிதத்தில் நாம் எல்லோருமே பழியை ஏற்க வேண்டும் – பெற்றோர், பள்ளிக்கூடம், நண்பர்கள், சமூகம், அரசு , சூழல் , இணையம் என அடுக்கியபடி, “It takes a village to raise a child” என்கிற சொல்வழக்கை மேற்கோள்காட்டி எழுத்தாளர் ஸ்டீபன் கிரஹாம், சக எழுத்தாளர் ஜேக் தார்னேவிடம் சொன்னபொழுது, அவர் “Also It takes a village to destroy a child” என எதிர்வினை புரிந்திருக்கிறார். 

எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மையில் புரிந்துகொள்ள பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் மனநிலையை இந்தப் பார்வை முற்றிலுமாகக் கலைத்துப் போடுகிறது. மேலும் குற்றச்செயலில் ஈடுபடுகிறவர் மட்டுமே அதற்குக் காரணம் அல்ல என்பதை ஏற்றுக்கொள்ளும்பொழுதுதான் அதைச் சார்ந்திருக்கிற சிக்கல்கள் பிடிபடவே தொடங்கும்.

‘யார்’ குற்றத்தைச் செய்தது? [who done it?] என்கிற கதைசொல்லல் ஒரு வெற்றிகரமான template. பொழுதைப் போக்க பெரும்பாலானோரின் தேர்வு அதுதான். ஆனால், “நடந்த குற்றத்திற்கு ‘யார்’ பொறுப்பேற்பது?” [accountability] என்கிற “தொந்தரவு செய்கிற ஒரு கேள்வி” எல்லா narrative’களிலும் தவிர்க்கப்படுகிறது. அந்தக் கேள்விதான் இந்தப் படைப்பு.

Rated U/A16+

The Content is suitable for unrestricted public exhibition, but requires parental guidance for children under the age of 16.

Parental Guidance [PG] பெற்றோரின் வழிகாட்டுதல் : திரைப்படத்தில் குழந்தைகள் பார்க்கத் தகாத வன்முறை, பயமுறுத்தும் காட்சிகள் அல்லது பெரியவர்களுக்கான உரையாடல்கள் இருக்கலாம். ஆதலால் பெற்றோர் / பெரியவர் உடனிருந்து வழிகாட்டுவது அல்லது விளக்குவது. இது குழந்தைகள் அந்தத் திரைப்படத்தை சரியாகப் புரிந்துகொள்ள உதவும். 

Genre  

Psychological crime drama

Writers

Stephen Graham & Jack Thorne

Countries of Origin

United Kingdom & United States

Release

13 March 2025 – Netflix

விருதுகள் [Emmy Awards]

OUTSTANDING LIMITED OR ANTHOLOGY SERIES
Adolescence

OUTSTANDING LEAD ACTOR IN A LIMITED OR ANTHOLOGY SERIES OR MOVIE
Stephen Graham 

OUTSTANDING SUPPORTING ACTOR IN A LIMITED OR ANTHOLOGY SERIES OR MOVIE
Owen Cooper

OUTSTANDING SUPPORTING ACTRESS IN A LIMITED OR ANTHOLOGY SERIES OR MOVIE
Erin Doherty 

OUTSTANDING DIRECTING FOR A LIMITED OR ANTHOLOGY SERIES OR MOVIE
Philip Barantini 

OUTSTANDING WRITING FOR A LIMITED OR ANTHOLOGY SERIES OR MOVIE
Jack Thorne and Stephen Graham 

OUTSTANDING CINEMATOGRAPHY FOR A LIMITED OR ANTHOLOGY SERIES OR MOVIE
Matthew Lewis 

OUTSTANDING SHORT FORM NONFICTION OR REALITY SERIES
Adolescence: The Making of Adolescence

மேலும் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 

கருப்பொருள்

// Adolescence can be understood, very broadly, as a dark warning about the potential ramifications of incel culture and the radicalisation of young men online. //

// Adolescence connects the dots between the global domination of social media and the rising normalisation of cultural misogyny //

Courtesy : VOGUE [India]

நோக்கம்

சொல்லப்படுகிற கதைகள் எல்லாவற்றிற்கும் வெவ்வேறான நோக்கங்கள் உண்டு. கதைகள் மூலம்தான் நம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன. நம்பிக்கைகள்தான் மனித வாழ்வை வழிநடத்துகின்றன. இதைப் புரிந்துகொண்டால் நோக்கம்தான் கதைகளைத் தீர்மானிக்கின்றன என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். 

அமைப்பின் நோக்கத்திற்குப் பொருந்திப்போகிற கதைகள் பொதுபுத்தியாகக் கட்டமைக்கப்பட்டு பெருவாரியான வணிக வெற்றியைப் பெறுகின்றன. அவை சிந்தனையைக் கோருவதில்லை. மாறாக பொழுதுபோக்கை மட்டும் முன் வைக்கின்றன.  சிந்தனையைக் கோருகிற கதைகளின் நோக்கம் அமைப்பின் சாதக பாதகங்களை ஆராய்வது. அவ்வாறான கதைகள் உருவாக, கலையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 

மதம் மற்றும் கல்விமுறை கேள்விகள் கேட்பதற்கான வெளியை உருவாக்காதபோது, அந்த வெளியாகத்தான் கலைவடிவங்கள் உதித்தன. 

கதைகள் construct செய்த கட்டமைப்பைக் கதைகளால்தான் deconstruct செய்ய இயலும். கற்பனையின் முன்னால் தொடர்ந்து உண்மையை வைப்பதுதான் சகமனிதர் மீது அக்கறை கொண்ட ஒரு கதைசொல்லியின் பொறுப்பு. 

யாராக ஆனபின்னரும் தனக்குள் இருக்கிற மனிதரை சொல்லிலும் செயலிலும் உயிர்ப்போடு வைத்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொருவரின் பிரக்ஞையிலும் பதிய வேண்டியிருக்கிறது. அப்படி பிரக்ஞைபூர்வமாக, இச்சமூகத்தின் முன் ‘கலை’ ஒரு கண்ணாடியாக இருக்கவேண்டும் என்கிற நம்பிக்கையின் செயல்வடிவம்தான் adolescence.  

செயல்

நடிகர், எழுத்தாளர் ஸ்டீபன் கிரஹாம்’தான் இக்கதையைச் சொல்லவேண்டும் என எண்ணியிருக்கிறார். 2021, 2023 ஆண்டுகளில் யுனைடெட் கிங்டமில் பதின்பருவப் பெண்கள் கொலை செய்யப்பட்டது அவரை மிகவும் தொந்தரவு செய்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான இத்தகைய மூர்க்கத்தனமான வன்முறைக்கு காரணம் என்ன ? என்ன நடக்கிறது? என ஆராய முற்படுகிறார். முதலில், பெற்றோர் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அது எளிதான ஒரு judgement என்பது உரைத்திருக்கிறது. பின் பெற்றோர் மட்டும் எப்படி காரணமாக முடியும்? என்கிற கேள்வியிலிருந்து இந்தக் கதை விரியத் தொடங்கியிருக்கிறது. ஜேக் தார்னேவுடன் சேர்ந்து எழுதுகிறார். பெற்றோர், சூழல், கல்விமுறை, அரசு, இணையம் என எல்லோருமே பொறுப்பை ஏற்க வேண்டும் என இருவருமே புரிந்துகொண்டிருக்கின்றனர். 

ஸ்டீபன் அவருடைய நேர்காணல்களில் பேசும்பொழுது கவனிக்க வேண்டியது அவர் எவ்வளவு கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்பதுதான். யாரையும் எந்த நிலையிலும் சிறுமைப்படுத்திவிடக் கூடாது என்கிற பிரக்ஞை அவருக்கு இருக்கிறது. அது பேச்சில் மட்டுமல்ல. செயலிலும்தான். 

ஜேமி கதாப்பாத்திரத்திற்காக வழக்கமான முறையில் அவர்கள் நடிகர் தேர்வு செய்யவில்லை. பள்ளிகள், இளைஞர் மன்றங்கள் , நாடகக் குழுக்கள் என பல்வேறு இடங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. திரையுலகத்தின் தாக்கம் எந்தவிதத்திலும் இல்லாத, வாய்ப்புகள் மறுக்கப்படுகிற உழைக்கும் வர்க்கத்திலிருந்து ஒரு சிறுவனைத் தேடியிருக்கிறார்கள் ,  கிட்டத்தட்ட ஐநாறுக்கும் மேற்பட்ட audition tapes வந்திருக்கின்றன. அதிலிருந்து ஐந்து பேருக்கு ஒரு பயிற்சி முகாம் நடைபெற்றிருக்கிறது. பொதுவாக அதில் யாராவது ஒருவர் தேர்வு செய்யப்பட்டு மற்றவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்புவதுதான் வழக்கம். அதை அவர்கள் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் எல்லா நிலைகளையும் கடந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிற  அச்சிறுவர்களின் மனதினைக் காயப்படுத்த விரும்பவில்லை.  இதில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற பதற்றத்திற்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. ஐந்து கதாப்பத்திரங்களுக்கான தேர்வு இது. ஒருவேளை இது இல்லையெனில், இந்தக் கதாப்பத்திரத்தினை நீங்கள் செய்யலாம். அதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? எனக் கேட்டு அனுமதி பெற்றுத்தான் பயிற்சி கொடுத்திருக்கிறர்கள். ஐந்து பேருக்குமே ஏதோ ஒரு கதாப்பாத்திரம் உண்டு என்கிற உறுதியுடன்தான் பயிற்சி நடந்திருக்கிறது.  

எல்லா நடிகர்களுமே ஒத்திகையில் முழுவதுமாக இருந்திருக்கின்றனர். அது அவர்களை அக்கதாப்பாத்திரத்திற்குள் ஆழமாக அமிழ்ந்து போக உதவியிருக்கிறது. மேலும் எல்லோரும் சரிசமமாக மதிக்கப்பட்டிருக்கின்றனர். அது எல்லோருக்கும் இந்தப் படைப்பில் சமபங்கு இருப்பதாக உணர வைத்திருக்கிறது. ஸ்டீபன் அதை இவ்வாறு கூறுகிறார். ஒரு jigzaw puzzle’ல் எல்லா பகுதிகளும் முக்கியமானதுதான். எல்லாம் சேர்ந்தால் தான் இறுதி வடிவம் முழுமையாகும். ஒன்று இல்லையென்றால் கூட அது நிறைவு பெறாது. அதனால் மேலே கீழே என்கிற hierarchy எந்த அமைப்பிற்கும் தேவையில்லை. ஸ்டீபன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது எல்லோரையும் சமமாக மதித்து, அன்புடனும் கனிவுடனும் நடத்தும்பொழுது மிகச்சிறப்பான காரியங்களைச் செய்துவிடலாம் என்கிறார். மேலும் ஒருவருக்கு தாங்கள் இருக்கும் நிலையிலிருந்து முன்னேறக் கூடிய வாய்ப்பை உருவாக்க முடிந்தால் அதைச் செய்யவேண்டும் என்கிறார். அப்படித்தான் உடை வடிவமைப்பாளருக்கு இது முதல் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 

இது வழக்கமான முறையில் webseries’க்கு உரிய structure’ல் செய்யப்படவில்லை.

நான்கு episode’கள். One-shot filming முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு episode’ம் ஒவ்வொரு shot. 

shot 1 

சகமனிதர்

இன்று, 13 வயது சிறுவன் ஜேமியைக் [Jamie miller] கைதுசெய்ய அதிகாலையில், அவனுடைய வீட்டிற்கே காவல்துறையினர் துப்பாக்கிகளோடு செல்கின்றனர். அவன் தந்தை, தாய் [Eddie Miller & Manda Miller]  மற்றும் அக்காள் [Lisa Miller] மூவரும் மிரண்டு போகின்றனர். கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அவன் கைது செய்யப்படுவதாகக் காவல்துறை அதிகாரி [Bascombe] தெரிவிக்கிறார். அச்சிறுவனோ பயத்தில் தன் ஆடையிலேயே சிறுநீர் கழித்து விடுகிறான். அதிகாரி அதை முதிர்ச்சியுடன் கையாளுகிறார். அழுதுகொண்டே இருக்கிறான். “நான் எதுவும் செய்யவில்லை” எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

அதிகாரி, காவல்துறை நடைமுறைகள் குறித்தும் அவனுடைய உரிமைகள் குறித்தும் தெளிவாக விளக்குகிறார். தொடர்ந்து அவன் சந்திக்கும் சீருடையிலிருக்கும் வளர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் அவனுக்கு நடப்பவற்றை விளக்கி அவனுக்கு அது புரிகிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். 

அவன் உடல் மற்றும் மனதளவில் தகுதியுடன் இருக்கிறானா? என்பது சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. அவனுடைய பெற்றோருக்கும் அவர்களுடைய உரிமைகள் மற்றும் சட்டத்தின் நடைமுறைகள் குறித்து ஒளிவு மறைவின்றி விளக்கப்படுகிறது. காவல்துறை நடவடிக்கைகள் முறையாக நடப்பதை உறுதி செய்யவும் அவற்றைப் பேற்றோருக்கு முறையாகத் தெரிவிக்கவும் கூடவே சட்ட நிபுணர் ஒருவர் இருக்கிறார். 

காவல்நிலையத்தில் ‘அதிகாரம்’ ஜேமியுடனோ அவர்களுடய பெற்றோருடனோ தகாத முறையில் பேசவோ , நடந்துகொள்ளவோ இல்லை. அதிகாரத்தின் குணம் அதிகாரிகளின் குணமாக இருக்க வேண்டியதில்லை. காவல்துறையிடம் ஜேமிதான் கொலை செய்தான் என்கிற உறுதியான ஆதாரம் இருந்தபோதும் அவர்கள் மிகவும் கனிவுடனும், கவனத்துடனும் நடந்துகொள்கின்றனர். 

கொலை செய்யப்பட்டதும் ஒரு 13 வயது சிறுமிதான். அவள் பெயர் கேட்டி [Katie leonard] ஜேமியுடன் படிப்பவள். அவளை ஜேமி சமையலறைக் கத்தியால் ஏழுமுறை கழுத்து, நெஞ்சு ,கை, தொடை எனக் குத்தியிருக்கிறான். அதுகுறித்த குற்றவுணர்ச்சி அவனுக்கு இல்லை என்பதுதான் நமது சிந்தனைக்கு உரியது.

நான் எதுவும் செய்யவில்லை எனச் சொல்லிக்கொண்டிருந்த ஜேமி, மாட்டிக்கொண்டபின் “நான் எதுவும் தவறாகச் செய்யவில்லை” என்கிறான். காவல்துறை அதிகாரி, “இப்படி ஒரு காரியத்தை ஏன் செய்தாய்? காரணம் என்ன? எனக் கேட்கிறார். கேட்டியின் தாயாரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறாயா? எனக் கேட்கிறார். ஜேமி தலைகுனிந்தபடி அழுதுகொண்டே இருக்கிறான். அவன் அப்பாவால் தன் மகனின் செயலைத் தாங்கவே முடியவில்லை. அவர் தன்னை ஒரு “நல்ல அப்பா” என நம்பிக் கொண்டிருப்பவர். அவர் உடைந்து போகிறார். உடனடியாக முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். பின் “ஏன்?” என்கிற கேள்வியுடன் மகனைக் கட்டித் தழுவியபடி அழுகிறார். 

இங்குதான் adolescence இதுவரையிலுமான narrative’களிலிருந்து முற்றிலுமாக மாறுபடுகிறது. என்ன செய்தார்? யார் செய்தார்? எப்படி செய்தார்? என்பதை வைத்தே நம்முடைய நீதிகளும் தர்மங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. குற்றம் செய்துவிட்ட ஒருவனை எந்த வரைமுறையுமின்றி அவமானப்படுதலாம், வதைக்கலாம், தண்டிக்கலாம்  என்பது பல கதைளின் வழியே தொடர்ந்து நியாயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்பொழுது, ஒருவரைக் ‘குற்றவாளி’ என brand செய்யாமல், குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிற ‘சகமனிதர்’ அதிலும் ‘சிறுவன்’ என்கிற பார்வையில் அணுகுகிறார்கள். 

இந்த அத்தியாயத்தில் ஒரு முக்கியமான விஷயம் கவனிக்கப்பட வேண்டியது. பொதுவாக சினிமாவை visual medium என claim செய்வார்கள். உரையாடல்களைக் குறைக்கவேண்டும் என்கிற வாதம் எழும். ஆனால் இதில் உரையாடல்கள் இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கும். அது, பொதுவாக நாம் சொல்லத் தவிர்ப்பதை, கேட்கத் தவிர்ப்பதை, பேசத் தவிர்ப்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. உதாரணத்திற்கு, நாம் பெரியவர்களாக குழந்தைகளுக்குச் செய்கிற எல்லாமே ‘சரி’ என்று நம்புவோம். அது அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா? என்பது குறித்த சிந்தனையோ கேள்விகளோ நமக்கு கிடையாது. அந்தக் கேள்விகள் தொடர்ந்து இந்த உரையாடல்களில் எழுந்துகொண்டே இருக்கின்றன.    

Shot 2

இணை[ய] உலகம்

மூன்றாம் நாள், அதிகாரிகள் Luke Bascombe மற்றும் Misha Frank ஜேமியின் பள்ளிக்கு விசாரணைக்காகச் செல்கின்றனர். மாணவர்களின் நடத்தையில் நமக்குப் பழக்கப்பட்ட பணிவோ அதிகாரிகள் குறித்த பயமோ இல்லை. அதிகாரிகள் தாங்கள் மரியாதைக்குரிய விதத்தில் நடத்தப்படாததைக் பொருட்படுத்தவில்லை. மாறாகக் குழந்தைகளை அவர்களின் இயல்பில் இருப்பதை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். சகமாணவர் கொலை செய்யப்பட்டதால் சிலர் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இருக்கின்றனர். Bascombe’ன் மகன் [Adam Bascombe] அவர் முன்னாலேயே நிறவெறியால் கேலி செய்யப்படும்பொழுதும் கூட அவர் உணர்ச்சிவசப்படுவதில்லை. அவர்கள் சிறுவர்கள். பெரியவர்கள் திட்டமிட்டுப் பயிற்றுவித்ததை அவர்கள் தெரியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவராய் இருக்கிறார். 

Emotional intelligence இருப்பவரைத்தான் adult என நிறுவ முடியும். Adult’களிடம்தான் அதிகாரத்தைக் கையாளக்கூடிய பண்பு இருக்கும். நாம் நம்மை விடப் பெரியவர் என ஏற்றுக்கொள்ளும் ஒருவருடைய ego’வை சகித்துக்கொள்ளப் பழகியிருக்கிறோம். நம்மை விடச் சிறியவர்களாக நினைப்பவர்கள் அவ்வாறு நடந்துகொண்டால் தக்க பாடம் கற்பிக்கப்படவேண்டும் என்றுதான் நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். வயது, பதவி, அதிகாரம் இன்னபிற காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு பிறரை சகமனிதராக மதிக்கும் குணம் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்க வேண்டியது. அதுதான் Bascombe’ன் கதாப்பாத்திரம்.   

Bascombe கொலைக்கருவியான கத்தியைத் தேடித்தான் பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்தார். ஆனால் அவர் மகனின் மூலமாக அவர் முற்றிலும் அறியாத சில உண்மைகளைத் தெரிந்துகொள்கிறார். மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக இருந்தபோதும் தான் வழக்கமான பாணியில் பணிபுரிவது தவறு என்பதை மகன் சுட்டிக்காட்டியபொழுது ஒத்துக்கொள்ளக்கூடிய பக்குவம் உடையவராக இருக்கிறார். அவனுக்கு நன்றி சொல்கிறார்.அவனைப் பாராட்டுகிறார்.   

மகன்  மூலமாக manaosphere, incel, red pill, dyanamite போன்ற insta உலகத்தில் புழங்கும் சொற்கள் அவருக்கு அறிமுகமாகின்றன. 80 to 20 % rule பற்றி மகன் சொல்ல, இவர் புரியாமல் விழிக்கிறார். 80 சதவிகித பெண்களுக்கு 20 சதவிகித ஆண்களைத்தான் பிடிக்கும். அந்த இருபது சதவிகிதத்தில் தானும் இருக்கவேண்டும் என ஒவ்வொரு ஆணுக்கும் பதற்றம் இருக்கும் என்கிறான். “If you want to live a normal life you have to manipulate the world” என்பதுதான் சிறுவர்களின் மனதில் விதைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கை. 

மேலும் கொலை செய்யப்பட்ட Katie , ஜேமியை bullying செய்திருக்கலாம் என அவளுடைய insta comment’கள்  மூலம் மகன் அனுமானிப்பதை தந்தைக்குத் தெரியப்படுத்துகிறான். அவருக்கு insta’வைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதை அவர் உணர்கிறார். சக அதிகாரியான Frank, Andrew Taite போன்ற பெண்வெறுப்பைப் [misogyny] பரப்புகிற சமூகவலைதள inflencers’ன் தாக்கம் குறித்து அறிந்தவராக இருக்கிறார்.  

“All kids really need is onething that makes them feel okay about themselves” என Bascombe’யிடம் Frank சொல்கிற அந்த வார்த்தைகள்தான் நாம் accountability’யுடன் நுட்பமாக அவதானிக்க வேண்டியது. ஏதோ ஒரு விதத்தில் தங்களைக் குறையுள்ளவர்களாகப் பார்க்கக்கூடிய  சூழலியே உலகெங்கிலும் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணம் அவர்களை மிகவும் பதற்றத்திற்குள்ளாக்குகிறது. எதையாவது செய்து தங்களை நிரூபித்து விடுகிற ஆவேசம்தான் பதின்பருவத்தின் ஆதார உணர்ச்சி.

பள்ளியில், கேட்டியின் தோழி [Jade] மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறாள். தன் தோழி கொலை செய்யப்பட்டதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஜேமியின் நண்பனைத் [Ryan] தாக்குகிறாள். சக மாணவர்கள் ‘பெண்ணிடம் போய் அடிவாங்குகிறாயே?’ எனக் கேலி செய்கின்றனர். அவன்தான் ஜேமியிடம் சமையலறைக் கத்தியைக் கொடுத்ததை Bascombe கண்டுபிடிக்கிறார். கேட்டியை பயமுறுத்துவதற்காகத்தான் கொடுத்தேன் என்கிறான். அவன் கைது செய்யப்படுகிறான்.

அதிர்ந்து போன Bascombe தன் மகனுடனான உறவைப் பொருட்படுத்த வேண்டியதும், அவனை மதிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறார். அதை உடனடியாகச் செயல்படுத்துகிறார்.

Shot 3

நல்ல பையன்

ஏழு மாதங்கள் கழித்து, Briony Ariston என்கிற Psychologist ஜேமியை அவன் இருக்கும் training center’ல் சந்திக்க வருகிறார். அவர் ஏற்கனவே சிலமுறை ஜேமியை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவனுக்குப் பிடித்த hot chocolate with sprinkles மற்றும் sandwich with pickles’உடன் ஜேமியை சந்திக்கிறார். நினைவு வைத்து தனக்காக hot chocolate & sprinkles கொண்டு வந்தது ஜேமியை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனால் அவனுக்கு pickles பிடிக்காது என்பதைப் பின்னர் தெரிவிக்கிறான். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அதை எடுத்து ஒரு வாய் மட்டும் சாப்பிடுகிறான். 

இந்த shot மொத்தமுமே ப்ரயானிக்கும் ஜேமிக்கும் நடக்கும் உரையாடல்தான். ஆனால் வழக்கமானது அல்ல. அதன் நோக்கம் ஜேமிக்குத் “தன்னைப் பற்றிய புரிதலை” ஏற்படுத்துவது. 

மேற்கத்திய சிந்தனையில் வளர்ந்த ஒரு 13 வயது சிறுவனின் மன அமைப்பை ஒவ்வொரு மடிப்பாக கவனத்துடன் விரித்துக் காண்பித்தது போன்ற ஒரு உரையாடல். அது முடியும்பொழுது, ஆண் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிற ‘பெண் குறித்த பார்வை’,  கிழக்கத்திய சிந்தனையில் கட்டமைக்கப்பட்டிருக்கிற நமது மன அமைப்பிற்கும் முற்றிலும் ஒத்துப் போகிறது. கட்டுப்பாடுகளுடன், கட்டுக்கதைகளும் இங்கு இன்னும் அதிகம் என்பதும் உரைக்கிறது. 

ப்ரயானி பெண் என்பதும், அழகாய் இருப்பதாகவும் தன்னை விட உயர்தர வர்க்கத்தைச் சார்ந்தவர், அவர் லண்டனில் இருக்கிறார், தான் ‘local’ என்பதும் ஜேமியின் நம்பிக்கைகள். அவற்றிலிருந்தே அவன் ஜேமியை எதிர்கொள்கிறான். ப்ரயானி ஜேமியின் தந்தையைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தவுடன் ஜேமி பதற்றமாகிக் கோபப்படுகிறான். அது தேவையில்லாத கேள்வி என நினைக்கிறான். அவருக்கும் தன்னுடைய இந்த நிலைக்கும் சம்பந்தம் இல்லை எனச் சொல்கிறான். ப்ரயானி சரியா? தப்பா? என்கிற கேள்விகளைக் கேட்பதுதான் normal, மற்ற கேள்விகள் தன்னை சிக்க வைப்பதற்காக விரிக்கப்படும் வலை என நினைக்கிறான். ஆனால் ப்ரயானி தன்னுடைய பொறுப்பில் உறுதியாக இருக்கிறார். மெல்ல ஜேமி தான் அறியாத தன்னைத் திறந்து காட்டத் துவங்குகிறான்.   

ஜேமியின் தாத்தாவும் அப்பாவும் “ஆண்களாக” எப்படி வாழ்ந்தனர் என்பதைச் சொல்கிறான். அவர்கள் புழங்கும் வெளிகள், நடவடிக்கைகள், செயல்கள், விளையாட்டுகள் என எல்லாவற்றிலும் “ஆண்” என்கிற நிலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  தாத்தாவுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. அவனுடைய அப்பவை அவன் plumber எனச் சொல்லவில்லை. Toilets repair செய்கிறவர் என்கிறான். 

“அப்பா வேடிக்கையானவரா?” என ப்ரயானி கேட்க, ‘சமயங்களில்’ எனச் சொல்கிறான். அன்பாய் இருப்பாரா? என்கிற கேள்வியே அவனுக்கு விசித்திரமாய் இருப்பதாகப் பதிலளிக்கிறான். அவனுடைய தந்தை அடிக்கடி கோபப்படுபவராக இருக்கிறார். அது normal தானே எனக் கேட்கிறான். உச்சபட்ச கோபத்தில் ஒரு shed’ஐ அவர் தரைமட்டமாக்கியதைப் பற்றிச் சொல்கிறான். இவன் Football விளையாட வேண்டும் என அவர் விரும்பியிருக்கிறார், அவனை உற்சாகப்படுத்தியிருக்கிறார். இவன் சொதப்பும்பொழுது முகத்தைத் திருப்பிக்கொள்பவராக இருக்கிறார். ஜேமி தான் sporty கிடையாது என்கிறான். ஆனால் அவர் ஒருபோதும் தன்னை அடித்ததில்லை என்கிறான். அவருக்கு பெண் நண்பர்கள் இருக்கிறார்களா என்கிற கேள்வியே  ‘அது எப்படி?’ என்பது போல் அவனுக்கு வினோதமாய்ப் படுகிறது. 

ஜேமியிடம் ப்ரயானி  “ஆணாய் இருப்பது என்றால் என்ன?” எனக் கேட்கிறார். குறிப்பாக “ஆண்மை” [masculine] அது ஜேமியைப் பதற்றமாக்குகிறது. 13 வயது சிறுவனாக இருந்தபோதும் , அவனுக்குள் இருக்கிற “ஆண்” விழிப்புடனே இருக்கிறான். “Fragile ego’வுடன் இருக்கும் ஒரு பொதுவான ஆண்”. அவன் ப்ரயானியைப் பயமுறுத்த விழைகிறான். பயமுறுத்தி விட்டதாக நம்புகிறான். பெண்கள் பலவீனமாவர்கள் என்கிற நம்பிக்கையிலிருந்து அவனுடைய நடவடிக்கைகள் உற்பத்தியாகின்றன என்பதை ப்ரயானியைப் போலவே நாமும் உணரலாம். ப்ரயானி தளர்ந்துபோகவில்லை. ஜேமி தன்னைக் குறித்து தான் சிந்திக்காத எல்லாவற்றையும் அவனுடைய வாயாலேயே சொல்லவைப்பதில் ப்ரயானி உறுதியாக இருக்கிறார். 

Insta’வில் அவன் பகிர்ந்திருந்த புகைப்படங்களைக் காட்டி , பெண்ணுடல் குறித்து அவனுடைய எண்ணம் என்ன என்பதை ப்ரயானி ஆராய்கிறார். பெண்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்த்திருப்பதாகவும், அவற்றைத் தொட்டிருப்பதாகவும் சொல்கிறான். அவர்களும் தன்னைத் தொட்டிருப்பதாகக் கூறுகிறான். அவனுடைய முகபாவங்களைக் கவனித்து, அது உனக்கு பிடிக்கவில்லையா? என்கிற கேள்விக்கு ‘தெரியவில்லை’ என பதிலளிக்கிறான். “There is no right or wrong answer in this room Jamie. You do know that. It’s just your best attempt at the truth” என ப்ரயானி சொல்கிறார். பின், தான் பொய் சொன்னதாக ஒத்துக்கொள்கிறான். அந்தரங்க புகைப்படங்களை மட்டும் பார்த்ததாகச் சொல்கிறான். பரப்பப்பட்ட கேட்டியின் அந்தரங்கப் புகைப்படத்தை அவனும் பார்த்திருக்கிறான். “அது அவளுக்கு மகிழ்ச்சியைத் தருமா?” என ப்ரயானி கேட்கிறார். எல்லோரும் தான் பார்த்ததார்கள், பரப்பினார்கள் என்கிறான். பெரும்பான்மை செய்யும்பொழுது ‘தப்பு’ தப்பாகப் பார்க்கப்படுவதில்லை.  பெரும்பான்மையின் பொதுபுத்தியைக் கட்டமைப்பது ‘narrative’. அதை உருவாக்குவதும், கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும் ‘system’ 

Incel culture’ன் 80 – 20 rule குறித்து ஜேமியும் பேசுகிறான். அதுதான் அவனுடைய பெண்வெறுப்பை பலப்படுத்தியிருக்கிறது. ஆண்களுக்காகத்தான் பெண்கள் என்கிற நம்பிக்கையை பலப்படுத்தியிருக்கிறது. Toxic masculinity’யும் வன்முறையும்தான் “ஆண்மையின்” அடையாளம் என்கிற எண்ணத்தை பலப்படுத்தியிருக்கிறது. பெண்கள் நம்மை வேண்டாம் என நினைக்கிறார்கள், அவர்களுக்கு நம் மீது அக்கறை இல்லை, எதை வேண்டுமானாலும் [manipulate] செய்து பெண்கள் “அடைய வேண்டியவர்கள்” என்கிற கருத்தை தொடர்ந்து முன்வைக்கிறது. கொலைகளைக் குற்றவுணர்ச்சியின்றி நியாயப்படுத்தவும் செய்கிறது. 

ப்ரயாணி சில insta post’களைக் காட்டி Kidney beans மற்றும் incel ஆகியவற்றைக் குறித்து விளக்கம் கேட்கிறார். Incel என்பது சுயபச்சாதாபத்துக்கு ஆளாகிற ஆண்களைக் குறிக்கிறது. அவர்களுடைய தனிமைக்கும் , romantic relationships’ல் ஈடுபடமுடியாத இயலாமைக்கும் காரணம் பெண்கள்தான் என்கிற நம்பிக்கையில் இருப்பவர்கள். இவர்கள் manosphere’ன் அங்கத்தினரும் கூட. மேலும், ஆண்களின் உரிமைக்காக வாதாடுகிறவர்கள், தங்களுடைய சுதந்திரத்திற்குப் பெண்கள் தடை என எண்ணி அவர்களை முற்றிலுமாகத் தவிர்ப்பவர்கள், பெண்களை வசப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள், ஆணாதிக்க மனநிலையில் இருப்பவர்கள் மற்றும் பெண் வெறுப்பாளர்களைக் கொண்ட ஆண்களின் உலகம் அது. 

கேட்டியின் comments’களிலிருந்து kidney beans என்கிற emoji incel’களைக் குறிப்பது. ஜேமி bullying’ற்கு ஆளாகியிருக்கிறான் என்பதை ப்ரயானி புரிந்துகொள்கிறார்.

குழந்தைகளுக்கு இணைய உலகம் “இணை உலகமாக” ஆகியிருக்கிறது. அவர்கள் அதில்தான் வாழ்கிறார்கள். அல்லது அங்கு தங்களை நிறுவ முயல்கிறார்கள். அதுதான் அவர்களுடைய reality என்பதுபோல் துரிதமான ஒரு கட்டமைப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கு கிடைக்கிற attention மற்றும் validation’னுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய எத்தனிக்கிறார்கள். அதே நேரத்தில் cyber bullying online abuse மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, நிஜ வாழ்க்கையில் நடக்கிற கேலி/கிண்டல்/வசைகளுக்குப் பார்வையாளர்கள் இல்லை அல்லது குறைவு. ஆனால் ‘இணையம்’ உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற மாயையை உருவாக்கியிருக்கிறது. அதுதான் கேட்டியை பயமுறுத்த ஜேமியைக் கத்தியைக் கொண்டுபோகச் சொல்கிறது. 

ஜேமி, தான் அசிங்கமாக இருப்பதாக நினைக்கிறான். அவனுக்குப் பெண்கள் பிடிக்கும் என்கிறான். ஆனால் பெண்களுக்குத் தன்னைப் பிடிக்காது என நினைக்கிறான். ஆனால் அவனுக்கும் தன் நண்பர்களைப் போல பள்ளியில் popular’ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. கேட்டியுடன் வெளியே செல்லவேண்டும் என விரும்பியிருக்கிறான். அவளுடைய புகைப்படம் பரவி அவள் மற்றவர்கள் அவளை வெறுப்பதால் மனதளவில் பலவீனமாக இருப்பாள். அப்பொழுது அவளை நெருங்கினால் அவள் தன்னை ஏற்றுக்கொள்வாள் என எண்ணியிருக்கிறான். “Her weakness made her more gettable was your theory?” என ப்ரயானி கேட்க, அவள் மார்பகங்கள் தட்டையாக இருந்தபோதும் தான் அதைப் பொருட்படுத்தவில்லை என வாதாடுகிறான். ஆனால் அவள் தான் ஒன்றும் அவ்வளவு desperate’ஆக இல்லை எனச் சொல்லி ஜேமியை நிராகரிக்க, ஜேமிக்குள் பொறுமிக் கொண்டிருந்த ஆண் கத்தியை எடுத்திருக்கிறான். 

ஜேமி இப்பொழுதும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என உறுதியாக நம்புகிறான். தான் அவளைத் தொடவில்லை, நினைத்திருந்தால அவள் உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தொட்டிருக்கலாம். மற்ற பையன்கள் அதைதான் செய்திருப்பார்காள். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. அவளைக் கத்தியால் குத்தினேன், ஆனால் தொடவில்லை. அதனால் அவன் மற்றவர்களை விடச் சிறந்தவன் என நினைக்கிறான். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா ? என ப்ரயானியைக் கேட்கிறான். அவரோ அதிர்ந்து போய் இருக்கிறார். அப்பொழுதுதான் தனக்குப் பிடிக்காத sandwich with pickle’ஐ எடுத்து ஒரு வாய் சாப்பிடுகிறான். இந்தச் செயல், “எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் , உங்களுக்காக சாப்பிடுகிறேன்” என பரிதாபத்தைக் கோர பிரக்ஞைபூர்வமாக நிகழ்த்தப்படுவதாகும்.  

ஜேமி ஒரு பெண்ணைக் கொலை செய்திருக்கிறான் என்பது இன்னுமே அவன் சிந்தனைக்கு எட்டவில்லை என்பதுதான் ப்ரயானியையும், நம்மையும் ஒருசேர மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவனுக்குத் துளிகூட குற்றவுணர்ச்சி இல்லை. ஏனெனில் தான் செய்தது குற்றம் என அவன் மனம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு ஆணாகத் தன்னை நிரூபிக்க, தான் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்திருப்பதாக அவன் நம்புகிறான். கேட்டி கொல்லப்படவேண்டியவள்தான் என்பது இதற்குப் பின்னால் கட்டமைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கை. குற்றவுணர்ச்சி இல்லாத இடங்கள்தான் வன்முறைக்கான ஊற்றுக்கண். கட்டற்ற வன்முறையை நிகழ்த்திவிட்டு அதை நியாயப்படுத்துவதைத் தொடர்ந்து heroism’ஆக glorify செய்துகொண்டே இருக்கிற narrative இவ்வளவு ஆபத்தானது. 

இந்த உரையாடலின்போது ஜேமி தொடர்ந்து தான் ஒரு “ஆண்” என்பதை நிரூபிக்க முயன்றுகொண்டே இருக்கிறான். ஒரு இடத்தில், ப்ரயானி தன்னைக் கட்டுப்படுத்த முயல்வதாக ஆத்திரப்படுகிறான். “என்னுடைய வாழ்க்கையில் நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த செய்யமுடியாது” என ஆவேசமாகக் கத்துகிறான். ப்ரயானிக்குத் தெரியும் இது ஜேமி தன் அப்பாவிடம் சொல்ல முடியாத வார்த்தைகள் என்பது. இதற்குப்பின் இருக்கிற உளவியலைத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எதிர்க்க முடியாத இடத்தில் அமைதியாக இருந்துவிட்டு, பலவீனமானவர்களிடம் அடக்கி /அமுக்கி வைத்திருந்த எல்லாவற்றையும் கட்டற்ற முறையில் வெளிப்படுத்துவதுதான்  நிகழ்கிறது. குடும்ப வன்முறை தொடங்கி எல்லா இடங்களிலும் பலவீனமாவர்கள் எனக் கருதப்படுபவர்களே வன்முறைக்கு இலக்கு ஆகின்றனர். அது normalize செய்யப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தக் ‘கத்தல்’. அதுதான் அந்தக் ‘கொலை’. 

அவன் அங்கிருந்து கொண்டுசெல்லப்படும்போது “தான் நல்ல பையன்” என தன் அப்பாவிடம் தெரிவிக்குமாறு கத்துகிறான். 

எல்லா குழந்தைகளுக்கும் நல்லவர்களாக அறியப்படவேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்கிறது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமாவதை நாமே தடுத்துக் கொண்டிருக்கிறோம். மிருகங்களில் தான் ‘ஆண்’ தன்னை நிரூபிக்க வேண்டியது இயற்கையின் விதி. ஆனால் மனிதர்களாகப் பரிணமித்துவிட்ட பிறகும் ஆண்களுக்கு அந்த விதியை அப்படியே வைத்திருக்கிறோமா? ஒரு ஆண் ஏன் தன்னை நிரூபிக்க வேண்டும்…நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும் ?

குழந்தைப்பருவ innocence’லிருந்து adolescence’னுள் shift ஆகும்பொழுது அவர்களை வழிநடத்துவது அவர்களுடைய நம்பிக்கை அமைப்புதான் [belief system] நம்முடைய நம்பிக்கைகளைத்தான் நம் குழந்தைகளுடைய நம்பிக்கைகளாகவும் ஆக்கியிருக்கிறோம். நம்முடைய நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தாமல் நாம் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். அதுகுறித்து சிந்தித்திருக்கிறோமா? 

Shot 4

நல்ல பெற்றோர்

13 மாதங்களுக்குப் பிறகு, ஜேமியின் தந்தை Eddie’யின் 50’வது பிறந்தநாள். ஜேமி இன்னும் training center’ல் தான் இருக்கிறான். அன்றைய நாளில் வந்த வாழ்த்துகளை eddie பார்த்துக்கொண்டிருக்கிறார். மகனிடமிருந்து வந்திருந்த வாழ்த்து அட்டையில் அவருடைய முகத்தைப் பென்சிலால் வரைந்திருக்கிறான். அதைத் தாயார் பாராட்டுகிறார். அபோழுது அங்கு வரும் லிசா தந்தையின் வேனை வெளியே வந்து பார்க்கச் சொல்கிறார். அதில் NONCE எழுதப்பட்டிருக்கிறது. அது பிரிட்டிஷ் வழக்கில் குழந்தைகளுக்கு எதிரானப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவரைக் குறிக்கும் இழிசொல்லாகும். Eddie மிகவும் பதற்றமாகிறார். கோபப்படுகிறார். அவற்றை அழித்துவிட முயல்கிறார். முடியவில்லை. அது அவரை மேலும் பதற்றமாக்குகிறது. அந்தப் பதற்றம் மனைவிக்கும் மகளுக்கும் தொற்றிக் கொள்கிறது.

தாய் மகளிடம் சொல்லி அதைப் புகைப்படம் எடுத்து யாருக்கோ email செய்யச் சொல்கிறார். பின்னர் அவள் வேறு யாருக்கோ text செய்துகொண்டிருப்பதைப் பார்த்து, தாய் யார்? என்று கேட்க, அது Billy என்கிறாள். அவன் உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறானா என அவர் கேட்க, ‘என்னை என்னால் பார்த்துக்கொள்ள முடியும் , என்னை நான்தான் பார்த்துக்கொள்கிறேன்’ என லிசா கூறுகிறாள். 

Eddie இருவரையும் அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்று அந்த எழுத்துக்களை அழித்துவிடக்கூடிய ரசாயனங்களை வாங்க முயல்கிறார். செல்லும் வழியில் நிதானமாக முயல்கிறார். தனக்குப் பிடித்த bass பாடல் ஒன்றைக் கேட்க விரும்புகிறார். அது அவருடைய மனைவியின் கடந்தகால நினைவுகளைக் கிளறுகிறது. பள்ளிநாட்களில் eddie ஒரு pink wig மற்றும் red & white bowling shoes’ஐ மாட்டிக்கொண்டு நடனமாடிய ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். அப்பொழுது எல்லோரும் அவரைப் பார்த்து சிரித்தனர் என்கிறார். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் ஆடும்பொழுது வழுக்கிக்கொண்டே இருந்தீர்கள் என மனைவி கூறுகிறார். அதற்கு தான் அணிந்திருந்த bowling shoes தான் காரணம். அதுதான் தன்னால் அப்போது வாங்க முடிந்தது என்கிறார். தொடர்ந்து மனைவி அவர் முகம் தரையில் மோத கீழே விழுந்து. மூக்கில் ரத்தம் கொட்டியதைப் பற்றிச் சொல்கிறார். எழுந்த eddie, “I am bleeding here” எனச் சொலியிருக்கிறார். ஏற்கனவே சிரித்துக் கொண்டிருந்தவர்கள் இன்னும் அதிகமாகச் சிரித்திருக்கின்றனர். பின் அதைச் சொல்லியே அவரைப் பள்ளிநாட்களில் கேலி செய்திருக்கின்றனர். Eddie’யிடம் இருக்கிற self pity ஜேமியிடம் இருப்பதையும் நாம் உணரலாம்.   

Supermarket’ல் பொருட்கள் வாங்கும்பொழுது , அங்கு வேலை செய்கிற ஒருவர் eddie’ஐ அடையாளம் கண்டு ஜேமியைக் குறித்துப் பேசியது அவரைத் தொந்தரவு செய்கிறது. கோபமாக வெளியேறும் அவர் காலையில் nonce எனக் கத்திக்கொண்டே சென்ற சிறுவர்களை மீண்டும் பார்க்கிறார். அவர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொள்கிறார். மொத்த பெயிண்டையும் வேனின் மீது ஊற்ற, ஊழியர்களோடு வாக்குவாதம் ஏற்படுகிறது. அங்கிருந்து கிளம்புகிறார். மனைவியும் மகளும் மிகவும் பதற்றமாக இருக்கின்றனர்.

செல்லும் வழியில் training center’லிருந்து ஜேமியின் அழைப்பு வருகிறது. அவன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுகிறான். தான் வரைந்திருந்த படம் ஆவருக்குப் பிடித்திருக்கிறதா? எனக் கேட்கிறான். மேலும் தான் குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதாகக் கூறி மன்னிப்பும் கேட்கிறான்.மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூற eddie நன்றி சொல்வதற்குள் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. 

அவனுடைய மனமாற்றம் eddie’ஐ ஏதோ ஒரு விதத்தில் தொந்தரவு செய்கிறது.

வீட்டிற்கு வந்த eddie உடை மாற்றிவிட்டு, ஏற்கனவே முடிவு செய்ததுபோல படத்திற்கு செல்லலாம் என்கிறார். ஆனால் அவர் மனம் நிலைகொள்ளாமல் தவிப்பதை மனைவி உணர்கிறார். அவர் அவரோடு பேச முயற்சிக்கிறார். Eddie “நாம் மீண்டும் அதைச் செய்ய வேண்டாம்” எனச் சொல்ல, இப்படிச் சொல்லியே பேசவேண்டியவற்றைப் பேசாமல் தடுத்து விடுகிறீர்கள் என்கிறார். இதுவரை அவர்கள் வாழ்வில் நிகழாத difficult conversation நிகழ்கிறது.

Eddie தான் ஒரு “நல்ல தந்தை” எனக் கூறுகிறார். அவருடைய அப்பா தன்னை பெல்ட்டால் அடித்ததைப் போல, தான் தன்னுடைய பிள்ளைகளிடம் நடந்துகொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும் , அதை இன்றுவரை கடைப்பிடிப்பதாகவும் கூறுகிறார்.  ஜேமியை football, boxing என அழைத்துச் சென்றதாகவும் அவனோ வரைவதில் காட்டிய ஆர்வத்தை மற்றவற்றில் காட்டவில்லை என்கிறார். பின் அவன் computer கேட்டதால் அதையும் வாங்கிக் கொடுத்ததாகக் கூறுகிறார். அவன் இரவு நெடுநேரம் உறக்கத்தைத் தவிர்த்து அதிலேயே உழன்றதாகத் தாயார் குறிப்பிடுக்கிறார். நாம் என்ன செய்ய முடியும்? என eddie கேட்க, “நாம் அதைப் பார்த்திருக்க வேண்டும், நிறுத்தியிருக்க வேண்டும்” என மனைவி கூறுகிறார். “நாம் நம்மைக் குறை சொல்ல முடியாது” என eddie கூறுகிறார். “ஆனால் நாம்தானே அவனை உருவாக்கினோம், இல்லையா?” என மனைவி கேள்வி கேட்கிறார். Eddie மெளனமாக இருக்கிறார். “அவன் உங்களை idolize செய்தான்” எனக அவர் கூறும்பொழுது, ஜேமியிடம் eddie’ன் பண்புகள் மேலோங்கியிருப்பது நமக்குப் பிடிபடும். ப்ரயானி ஏன் ஜேமியிடம் அவன் தந்தை மற்றும் தாத்தாவைப் பற்றிக் கேட்டார் என்பதும் பிடிபடும். “அவன் வரைவதை மிகவும் விரும்பினான்” என eddie கூறுகிறார். “என்னுடைய வாழ்வை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது” என ஜேமி கத்தியது ஏன் என்பது இப்பொழுது பிடிபடும். 

Eddie தன் மகள் கோபத்தில் வசைச்சொற்களைப் பயன்படுத்தும்போதெல்லாம் வார்த்தைகளில் கவனம் வேண்டும் என எச்சரிக்கிறார். லிசா அதே வீட்டில் இருந்தாலும் அவள் emotionally intelligent’ஆக இருக்கிறாள். இதே வீட்டில் வளர்ந்த ஜேமி உணர்ச்சிவசப்படக்கூடியவனாக இருக்கிறான். Eddie மனைவியிடம் “How do we made her?” எனக் கேட்க, “The same way we made him” என அவர் மனைவி சொல்கிற பதில் சிந்தித்துப்பர்ர்க்க வேண்டியது. மகளை வளர்ப்பதற்கும், மகனை வளர்ப்பதற்கும் உலகெங்கிலும் பெற்றோர் ஒரே வழிமுறைகளைத்தான் பின்பற்றுகின்றனர். எல்லாருமே தாங்கள் நல்ல பெற்றோராக அறியப்பட வேண்டும் என விரும்புகின்றனர். 

Eddie மெல்ல நிலைகுழைகிறார். மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். மகனின் அறைக்குச் செல்கிறார். அவன் படுக்கையில் ஒரு சிறிய teddy bear இருக்கிறது. அதனிடம் “என்னை மன்னித்துவிடு மகனே” என அழுதுகொண்டே சொல்கிறார். அதனை முத்தமிடுகிறார். “நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்” என அவர் சொல்வது கவனிக்கத்தக்கது. பின் அறையை விட்டு வெளியேறுகிறார். அந்த teddy bear மெளனமாகப் படுத்திருக்கிறது.  

தன்னுடைய மகன் செய்த குற்றத்திற்கு தானும் ஒரு காரணம் என்கிற Eddie’ன் குற்றவுணர்ச்சிதான் அவரை நிலைகுழைய வைத்திருக்கிறது. அதுவரை அவர் எந்தத் தவறும் செய்யவில்லை எனவே நம்பினார். ஜேமியும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றே நம்பினான்.  பெற்றோரின் பொறுப்பேற்பு தான் [accountability] குழந்தைகளையும் accountable ஆக்கும். 

நேர்காணலில்,

// How does it feel for you now that Adolescence is out in the world?


Stephen Graham [eddie] : We made it with such love, such integrity, such respect, and it came from a place of passion for each and every single member [of] the crew  and I include the cast as the crew. We’re all a collective. And it was probably the most joyous experience I’ve ever had as an actor.

I think, because it was made from love, we made our little stone, our pebble or whatever it was, and we threw it into the universe, and it landed in the pond. And the ripple effect has been, in all honesty, slightly overwhelming. You have no idea of the impact it can have. But the intention was always from a place of purity, truth, and honesty.

We made a piece that was based on truth and things that are happening in Britain with young men stabbing young girls to death. We just wanted to shine a light there, and, predominantly, we just wanted to create conversation between parents and children. //

Courtesy : TUDUM By Netflix

சிந்தனைமுறையில் மாற்றம்

இதன் வெளியீட்டிற்குப்பின் தன்னை சந்தித்தப் பல ஆண்கள் தனக்கு நெகிழ்ச்சியோடு நன்றி கூறியதாக ஸ்டீபன் தெரிவிக்கிறார். தங்கள் பிள்ளைகளை அரவணைக்கத் தொடங்கியிருக்கின்றனர். மகன்களோடு பேச ஆரம்பித்திருக்கின்றனர்.  

Boys don’t cry , Boys will be Boys, Man enough ஆகிய சொல்லாடல்கள் உருவாக்குகிற அழுத்தம் தொடர்ந்து நாம் வாழும் சூழலில் இருந்துகொண்டே இருக்கிறது. அதிலிருந்து முற்றிலுமாக வெளியேறி, தன்னுடைய உலகத்தினுள் அவர்களை வரவேற்று அங்கமாக்குவதுபோல் இணையம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் பொய்களுக்கும் கட்டுக்கதைகளுக்கும் முடிவே இல்லாத வெளி அது. அங்கேயும் ஒரு ஆண் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அங்கேயும் பெண்களுக்கு எதிரான abuse மோசமாக வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சொல்லாடல்கள் மட்டும்தான் மாறுகின்றன. இது எவ்வளவு சிக்கலானது என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டு உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

ஆண்களும் மனிதர்கள்தான். அவர்கள் “ஆண்களாகவே” இருக்கவேண்டியதில்லை. அவர்களும் vulnerabiltity’ஐ express செய்யலாம் என்கிற space உருவாகிக் கொண்டிருக்கிறது.

United Kingdom பள்ளிகளில் பெண்வெறுப்பை deconstruct செய்வதற்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பொறுப்பேற்பு

குழந்தைகளை சக மனிதர்களாகப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை இக்கதை-சொல்லல் நமக்கு உணர்த்துகிறது. அவர்கள் நம்புகிற முதல் பெண்ணாகவும், ஆணாகவும் பெற்றோர் இருக்கின்றனர். எனில் பெற்றோராய் இருப்பது என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படவேண்டிய ஒரு பொறுப்பாக ஆகிறது. பெற்றோரைப் போல்தான் வெளியுலகமும் இருக்கும் என்பதுதான் பிள்ளைகள் ஏற்படுத்திக் கொள்கிற அடிப்படையான நம்பிக்கை. எனில் பேச்சும் செயலும் ஒன்றாக இல்லாமல் போனால் குழந்தைகள் குழப்பமடைவார்கள். பெற்றோரின் பேச்சை விடவும் அவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்து அதைத்தான் எல்லா குழந்தைகளும் பின்பற்றுகின்றனர். குழந்தைகளின் நம்பிக்கை அமைப்பைக் கட்டமைப்பதில் பெற்றோருக்குப் பெரும்பங்கு இருக்கிறது. அந்த நம்பிக்கை அமைப்புதான் ஒட்டுமொத்த வாழ்வையும் வழிநடத்துகிறது.  

பெற்றோர், பெரியோர், மதம், பள்ளி, சமூகம், இன்னபிற அமைப்புகள் சொல்வதைக் கேட்டு வளர்ந்தவர்கள்தான் நாம். குழந்தைகளோடு நம் உறவு என்பது பொதுவாக ஆணைகளைப் பிறப்பிப்பதாகத்தான் இருக்கின்றது. நாம் சொல்வதை அவர்கள் கேட்டுப் ‘பின்பற்றுபவர்களாக’ இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். மாறாக, குழந்தைகள் சொல்வதைக் ‘கவனிக்க’ ஆரம்பிக்கும் பொழுதுதான், உரையாடல் தொடங்குகிறது. உறவு தொடங்குகிறது. 

சிறுவயதில் பேச அனுமதிக்கப்படாத எல்லா குழந்தைகளும் வளர்ந்தபின்னும் ‘பின்பற்றுபவர்களாகவே’ இருப்பதை நாம் உணரலாம். குழந்தைகளைப் பேச, மறுத்துப் பேச, மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்க, வாதாட, உரையாட, முக்கியமாகக் கேள்வி கேட்க அனுமதிப்பதுதான் ‘சிந்திக்கும் திறனை’ ஊக்குவிப்பதற்கான வழி. அப்படியான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. கல்விக்கூடங்களின் பொறுப்பு. அத்தகைய சூழலில்தான் குழந்தைகள் பாதுகாப்பாக உணருவர். மதிக்கப்படுவதாக உணருவர். [I Belong] ‘இது எனக்கான இடம்’ என்கிற உணர்வு ஒரு குழந்தைக்கு இன்றியமையாதது. அது நிஜவாழ்வில் கிடைக்காதபோது , அப்படியான ஒரு மாயையை உருவாக்க இணையம் எல்லா வல்லமைகளுடனும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. 

பெற்றோராய் இருப்பது என்பது நிச்சயமாக ஒரு பெரிய பொறுப்புதான். நாம் பேற்றோர் ஆகிறோம் என்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும், இன்னொரு புதிய உயிரை உலகத்துக்கு கொண்டுவருகிறோம் என்கிற பொறுப்பும் கூடவே முக்கியமானது. அந்த உயிர் வருவதற்கு முந்தைய உலகத்தின் நிலைக்கு நாமும் காரணம் என்கிற பிரக்ஞையும் முக்கியமானது. பொறுப்பேற்பும் முக்கியமானது.  இது வரைத் தெரிந்து கொள்ளாததைத் தெரிந்துகொள்ள வாழ்நாள் முழுவதுமே அவகாசம் உண்டு, முக்கியமாக நம் குழந்தைகள் மூலமாக நாம் தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். ஏற்றுக்கொள்ள வேண்டும். பின் தெரிந்துகொண்டதை சிரத்தையோடு செயல்படுத்த வேண்டும். அதைத்தான் “அன்பு” என நிறுவ முடியும். அந்த அன்புதான் நம்முடைய வாழ்வில் அவர்களை incude செய்யவும். அவர்கள் வாழ்வில் நம்மை include செய்யவும் வெளியை உருவாக்கும்.  

இதில் நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, அச்சிறுவன் தவறு செய்திருக்கிறான் என்பது , தண்டிக்கிற இடத்திலிருக்கிற காவல்துறை அதிகாரிகளுக்கு ஆதாரப்பூர்வமாகத் தெரிந்திருந்தாலும், அவர்கள் அவனிடம் எநத்ச் சூழ்நிலையிலும் ஆதிக்கம் செலுத்தவோ, அவமானப்படுத்தவோ முனையவில்லை. மாறாக மிக மிக கவனத்தோடு அவனைக் கையாளுகிறார்கள். அவன் சிறுவன், அவன் தெரியாமல் இதைச் செய்திருக்கிறான் என்பதை முழுமையாக உணர்ந்த இடத்திலிருந்து செயல்படுகிறார்கள். அதனால்தான் அவன் மெல்ல தான் செய்தது குற்றம்தான் என்கிற உணர்தலுக்கு வரவே முடிந்தது. அவனுக்குப் பின்னர்தான் அவனுடைய அப்பாவால் தன் மகன் செய்த குற்றத்திற்குத் தானும் பொறுப்பேற்க வேண்டும் என்கிற உணர்தலுக்கு ஆளாக முடிந்தது.   

அந்தரங்க வெளிக்குள் மனிதரை அனுப்பதிப்பதற்குத் தயங்கிய நாம் இன்று கையில் வைத்திருக்கும் திறன்பேசி வழியே உலகத்தையே அனுமதித்திருக்கிறோம். எப்பொழுதும் திறந்தே கிடக்கிற வாசல் அது. யாராவது வருகிறார்களா? என எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிற மனத்தின் அடிப்படைக் கட்டுமானமே பதற்றத்தால் ஆக்கிரமிக்கப்படிருக்கிறது. அது பதின்பருவத்தின் எண்ணவோட்டங்களில் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

நம்முடைய [adults] புறச்சூழல்கள் குறிப்பிட்ட உணர்ச்சிகளை எளிதாகத் தூண்டக்கூடிய வகையில் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன என்பதை நாம் அறிய வேண்டும். We are conditioned to react.  Algorithm ஆட்டுவிக்கிற பதற்றமும் அதைப் பூதாகப்படுத்துகிற echo chambers’ம்தான் பதின்பருவத்தினரின் [children] படுக்கையறையைக் கைப்பற்றியிருக்கின்றன. புற உலகின் ஆபத்துகளிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள, பாதுகாப்புக்காக மனிதன் உருவாக்கியதுதான் “வீடு” என்கிற அமைப்பு. அது பாதுகாப்பானதாக இல்லை என்கிற உண்மையை நாம் உணர வேண்டும். ஆபத்தின் வடிவங்கள் மாறியிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். நம் கண் முன்னாடி இருக்கிற பிள்ளைகளின் மனம் இணைய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். இதைத் தடுக்க நினைப்பது சாத்தியமில்லை. ஆனால் முறையாகப் பயன்படுத்துவது எப்படி? என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும். அதற்கு முதலில் நாம் அதை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.  

சிறுவனாக இருந்தபோதிலும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் அவன் சகமனிதனாக மதித்து நடத்தப்படுகிறான். அவனுக்குள் இருக்கிற மனிதனை அவனுக்கு காட்டுவது மூலமாக நமக்குள் இருக்கிற மனிதனை நாமும் உணர முடியும். அதுதான் இன்னொரு கேட்டி பலியாகாமல் தடுக்கும். 

குற்றத்திற்கான ‘தண்டனை’ நீதி அல்ல. குற்றம் உருவாகாமல் தடுப்பதுதான் மனிதகுலத்துக்கான நீதி.   இன்னொருவர் பாதிக்கப்படாமல் இருப்பதும், இன்னொருவர் குற்றவாளி ஆகாமல் இருப்பதுவும்தான் ‘நீதி’. 

“ஏன்?” என்கிற கேள்வியிலிருந்து செயல்படத் தொடங்குவதுதான் ஒரு மனிதர் தன்னையும், சகமனிதரையும் மதிப்பதற்கான அறிகுறி.

Author Image

ஆனந்த் குமரேசன்

திரைக்கதை ஆசிரியர், இயக்குனர். திரைப்படங்களைக் குறித்த விரிவான, ஆழமான பார்வையும், சமூக அக்கறையும் கொண்ட எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post

குருதத் 100 தொடர் வெற்றிகளும், தோல்வியின் துவக்கமும்

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

August 1, 2026
The Odyssey – கூடடையும் கலை

The Odyssey – கூடடையும் கலை

August 1, 2026

ஆதிக்க உணர்வின் உளவியல்

August 1, 2026

இரு கண்களும் பன்னிரு கைகளும்

August 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • கரு உரு
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • தலைக்குள் என்ன
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

ஜானகி – நம் வாழ்வின் ஒலித்தடம்

August 1, 2026
The Odyssey – கூடடையும் கலை

The Odyssey – கூடடையும் கலை

August 1, 2026

ஆதிக்க உணர்வின் உளவியல்

August 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?