The Talkie
Thursday, July 2, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் உலகத் திரைப்படங்கள்

மகத்தான தில்லாலங்கடி – Big deal on Madonna street 1958 italy

The Talkie by The Talkie
July 2, 2026
in உலகத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
மகத்தான தில்லாலங்கடி – Big deal on Madonna street 1958 italy
Share on WhatsappShare on FacebookShare on Twitter

    Author Icon     கிருஷ்ணப்ரசாத்

ரோம் நகரில் வாழும் ‘காசிமோ’ என்ற சில்லறைத் திருடன் ஒரு காரைத் திருட முயல்கையில் போலீசாரால் கைது செய்யப்படுகிறான். சிறைக்குச் செல்கிறான். அங்கே அவனுக்கு ஒரு ரகசியம் கிடைக்கிறது. ‘மடோனா’ தெருவில் உள்ள ஓர் அடகுக்கடையை  எப்படிக் கொள்ளையடிப்பது? என்பதே அந்த ரகசியம். உடனே, தனக்குப் பதிலாக தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைக்குச் செல்ல ஒரு ஆளைக் கண்டுபிடிக்குமாறு தன் நண்பர்களிடம் காசிமோ கூறுகிறான். அவர்களும் பெப்பே என்ற ஒரு குத்துச்சண்டை வீரனைப் பிடித்து அவனிடம் பணத்தைக் காட்டி, அவன் செய்யாத ஒரு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள். இந்தப் பொய் பித்தலாட்ட நாடகத்தை கண்டுபிடிக்கும் காவல்துறை பெப்பேவையும் காசிமோவுடன் சேர்த்து உள்ளே தள்ளுகிறார்கள். சிறையில் காசிமோவிடமிருந்து மிகத் தந்திரமாகக் அடகுக்கடைத் திட்டத்தைக் கறந்துவிடுகிறான் பெப்பே. அவன் குறுகிய காலத்திலேயே விடுதலையாகி வெளியே வர, காசிமோவோ சிறையிலேயே கிடக்கிறான். பெப்பே, இந்தத் திட்டத்தைத் தானாகவே செய்துமுடிக்க முடிவு செய்து ஒரு குழுவை உருவாக்குகிறான்.

பெப்பேவால்  தனியாக இந்தக் கொள்ளையை அரங்கேற்ற முடியாது என்பதால் அவன் பல தோல்வியடைந்த மனிதர்களை ஒன்று சேர்க்கிறான். திட்டம் எளிமையானது. அடகுக் கடைக்கு அடுத்துள்ள குடியிருப்பில் நுழைய வேண்டும். சுவரை உடைக்க வேண்டும். பாதுகாப்புப் பெட்டகத்தை அடைய வேண்டும். பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொழில்முறை கொள்ளைத் திரைப்படங்களில் வழக்கமாகக் காணப்படும் திட்டத்தைப் போலத் தோன்றினாலும், இவர்கள் யாருக்கும் திருடும் திறமை சுத்தமாக இல்லை என்பதே இங்குள்ள திருப்பம். இதுவே திரைக்கதையின் நகைச்சுவைக்கான மையப்புள்ளி. காமடி ஆஃப் எரர்ஸ். இதிலொரு காதல் துணைக் கதை வேறு இருக்கிறது. கொள்ளையடிப்பதில் எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத இந்தக் குழுவை, டான்டே என்ற ஓய்வுபெற்ற திருடனிடம் பயிற்சி பெற வைக்கிறான். திட்டம் என்னவென்றால், அடகுக் கடையின் பக்கத்து வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்து, சுவரை உடைத்து அடகுக் கடைக்குள் செல்ல வேண்டும். திட்டமிட்டபடி அந்த வீட்டுக்குள் நுழைகிறார்கள். ஆனால், அவர்களின் முட்டாள்தனத்தால் பல குழப்பங்கள் அரங்கேறுகின்றன. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாகச் சுவரை உடைக்கிறார்கள். திட்டமிட்டபடி அடகுக் கடையைக் கொள்ளையடித்தார்களா? என்னவெல்லாம் தகிடுதத்தங்கள் நடக்கின்றன? என்ற அடுக்கடுக்கான  சம்பவங்களே மடோன்னா ஸ்ட்ரீட்டின் திரைக்கதை.

1950களில் க்ரைம் படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. குறிப்பாக ரிஃபிஃபி போன்ற படங்கள்  மிகத் துல்லியமான கொள்ளைத் திட்டத்தை செயல்படுத்தும் ஆக்‌ஷன் சாகசக் காட்சிகளை சித்திரித்தன. 1955ல் வெளியான ஃபிரெஞ்சு திரைப்படம் ரிஃபிஃபி. இந்த படத்திற்கு பகடியாக உருவாக்கப்பட்ட படம் தான் ‘பிக் டீல் ஆன் மடோன்னா ஸ்ட்ரீட்’.  இத்தாலிய சினிமா நகைச்சுவைத் திரைப்படம். இத்தாலியில் ‘ஈ சொலிட்டி ஈன்யோட்டி’ என்றால் ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என்று அர்த்தம், ஆங்கிலத்தில் ‘பிக் டீல் ஆன் மடோன்னா ஸ்ட்ரீட்’.

இயக்குனர் மோனிசெல்லி ‘சீரியஸான க்ரைம் படங்களைக் கிண்டல் செய்யும் விதமாக ஒரு நகைச்சுவைத் திரைப்படத்தை உருவாக்கினால் என்ன?’ என்று நினைக்கிறார். ஆனால், அப்படியே பகடி செய்யாமல், ‘துறை நிபுணத்துவம் கொண்ட திருடர்களாக இல்லாது, தோல்வியடைந்த ஏழைகள் அதே கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்ற முயன்றால் என்ன ஆகும்?’ என்று யோசித்திருக்கிறார். மிகச் சாமர்த்தியசாலிகளாக காட்டப்படும் 50களின் ஐரோப்பிய க்ரைம் படங்களில் தோன்றும்  கொள்ளையர்களின் பிம்பத்தை கேலி செய்த முதல் படம். வழக்கமான ஆக்‌ஷன், க்ரைம், கொலை, கொள்ளை, ஹீஸ்ட் மற்றும் கேப்பர் வகையறா படங்களில் தோன்றும் திருடர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், சமயோஜித உளவாளிகளாகவும், அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இந்தப் பகடிப் படத்தில் வரும் கொள்ளையர்களோ தங்களுக்குத் தாங்களே ஆபத்தை விளைவிக்கும் கோமாளிகளாக உலா வருகிறார்கள்.

சமூகப் பிரச்சனைகளை நகைச்சுவையோடு சொல்லும் ‘காமெடியா ஆல் இத்தாலியானா’ என்ற புதிய வகையறா சினிமாவிற்கு அடித்தளமாக அமைந்த படம். கதாநாயகனாக நடித்திருக்கும் விட்டோரியோ காஸ்மன் அப்போதைய இத்தாலியின் மிகப் பெரிய நட்சத்திரம். அதுவரை சீரியஸான நாடகப் பாணி நடிகராகவே அவர் அறியப்பட்டார். அவரை ஒரு முட்டாள் திருடனாக இதில் நடிக்க வைத்தது இயக்குநர் மோனிசெல்லி எடுத்த மிகப் பெரிய ரிஸ்க். பலர் சொல்லியும் பிடிவாதமாக விட்டோரியோவை, ‘பெப்பே’ கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார். அந்த முயற்சிதான் மோனிசெல்லிக்கு இத்தாலிய சினிமாவில் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுத்தந்தது. விட்டோரியோவுடன் சேர்ந்து இத்தாலியின் பிரபல நகைச்சுவை நடிகர் டோட்டோவும் இதில் நடித்துள்ளார். டோட்டோ, இத்தாலிய சினிமாவின் சார்லி சாப்ளின் என்று குறிப்பிடப்படும் நடிகர். அவரின் பங்கு படத்தை இன்னும் மெருகேற்றியிருக்கிறது. 

போருக்குப் பிந்தைய இத்தாலியச் சமூகத்தின் வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரப் போராட்டங்களை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. பெப்பேவின் திருட்டுக் கூட்டம் என்று  படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் பிறவியிலேயே கெட்டவர்கள் கிடையாது, வறுமையின் பிடியில் தத்தளிக்கும் சாதாரண ஏழைகள். பணத்தின் மீதுள்ள பேராசைக்காகத் திருடாமல் அன்றாட வாழ்வாதாரத்திற்காக அவர்கள் திருடினார்கள் என்ற பார்வையைப் படம் முன்வைக்கிறது. அவர்கள் அடிப்படையில் அப்பாவிகள். ஒருவரையொருவர் ஏமாற்ற நினைத்தாலும், உண்மையில் ஒருவரையொருவர் சார்ந்தே இருக்கிறார்கள். வறுமை அவர்களைக் குற்றவாளிகளாக மாற்ற முயன்றாலும், அவர்களின் உள்ளார்ந்த அப்பாவித்தனம் அவர்களை மாறவிடாமல் தடுத்துவிடுகிறது.

big-deal-1
big-deal-2

உலக சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த க்ளைமாக்ஸ் க்ளிஷே கட்டுடைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் படம். அனைத்துக் கதாபாத்திரங்களும் வறுமையில் வாழ்கிறவர்கள். எளிதில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற கனவோடு,  பிழைப்பிற்கே போராடுபவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அது தோல்வியடைகிறது. இந்தப் படத்தில் யாரும் வெற்றி பெறுவதில்லை. ஆனால் அவர்களின் தோல்வி நகைச்சுவையாக மாறுகிறது. ஒரு சாதாரண கொள்ளைத் திட்டத்தை எடுத்துக் கொண்டு சமூக விமர்சனம், மனிதநேயம், கறுப்பு நகைச்சுவை மற்றும் சினிமா பகடியாக மாற்றியதால், இந்த திரைப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.  ஒரு திருட்டுக் கூட்டத்தின் தோல்வி, மனிதநேயத்தின் வெற்றியாக மாறுகிறது.

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பற்றிய ஒரு முக்கியமான தன்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். திருட முயற்சிக்கும் கதாபாத்திரங்கள் எவரும் தொழில்முறைத் திருடர்கள் அல்ல. தங்கள் பிழைப்பிற்காக உழைத்து வேலை செய்ய விரும்பாதவர்களும் அல்ல. மாறாக, அமைப்புகளால் ஒதுக்கப்பட்டவர்கள். பெப்பே, இறுதியில் நேர்மையான வேலை தேட முடிவு செய்கிறான். செய்தித்தாளில் ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ அடுக்குமாடியில் புகுந்து பாஸ்தாவும் கொண்டைக்கடலையும் திருடியதாகச் செய்தி வருகிறது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இத்தாலி ஒரு நொடிந்த நாடாக இருந்தது. ரோம் நகரம் முழுவதும் சிதைந்த கட்டடங்கள், வேலையற்ற இளைஞர்கள், பசியால் தவிக்கும் குடும்பங்கள்தான். இந்தக் காலகட்டத்தில் நாட்டின் சினிமா ‘இத்தாலிய நியோ ரியலிச சினிமா’ என்ற ஓர் இயக்கத்தைக் கண்டது. தெருவில் நின்று, உண்மையான மனிதர்களோடு, அவர்களின் வலியைப் படம் பிடிக்கும் சினிமா வகை. துயரத்தை நேரடியாகக் காட்டுவதற்குப் பதிலாக, சிரிப்பின் வழியாக அம்பலப்படுத்த நினைத்தார் மரியோ மோனிசெல்லி. அப்படிப் பிறந்ததுதான் இந்தப் படம். சிரிப்பு ஒரு ஆயுதம். ஏழைகளின் கனவுகள், தோல்விகள், அவமானங்கள்  எல்லாவற்றையும் சிரிப்பு என்ற கண்ணாடியில் காட்டி, பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும் அழவும் வைத்திருக்கிறார். 

கனவு காண்பதால் ஏற்படும் தோல்வி. ஏழைகள் கனவு காணும்போது, அந்தக் கனவு எவ்வளவு அபத்தமானாலும், அதை நாம் மரியாதையோடு பார்க்க வேண்டும் என்று மோனிசெல்லி கதை சொல்கிறார். சோகத்தை நேரடியாகத் திணிக்காமல், நகைச்சுவையின் வழியாக உணரவைக்கிறார். பைரோ உமிலியானியின் ஜாஸ் இசை படத்திற்கு ஒரு தனி உயிர் கொடுக்கிறது. படத்தின் இலகுவான தொனியை வேறொரு தளத்திற்கு உயர்த்துகிறது. 1950களின் அமெரிக்க ஜாஸ் உணர்வுடன், இத்தாலிய வீதிகளின் தூசியைக் கிளப்பும் ரம்மியமான இசை.

சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான இத்தாலியப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது இப்படம். இது இத்தாலிய சினிமாவை உலகம் முழுவதும் அடையாளப்படுத்திய படங்களில் ஒன்று. 1958-ல் இத்தாலியில் வெளியானதும் மிகப்பெரிய வணிக மற்றும் விமர்சன வெற்றியை பெற்றது. அந்த ஆண்டின் மிக அதிகமான வருவாயை ஈட்டிய படங்களில் ஒன்றானது. அதனால்தான் பிற்காலத்தில் வெளிவந்த அமெரிக்கத் திரைப்படமான வூடி ஆலனின் ‘ஸ்மால் டைம் க்ரூக்ஸ்’, ‘வெல்கம் டு காலின்ஸ்’, ‘க்ராக்கர்ஸ்’ எல்லாமே அதன் தாக்கத்தில் எழுதி எடுக்கப்பட்டன.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக பெப்பேவும் அவனது நண்பர்களும் வாழ்வில் தோற்றவர்கள்தான். ஆனால் அவர்கள் அனைவரும் இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அதுதான் படத்தின் உவமை. இரண்டாம் உலகப்போருக்கு பின் எஞ்சிய இத்தாலி நாட்டு மக்களுக்கும் இது பொருந்தும்.

கதையின் மாந்தர்கள், தப்பிப் பிழைத்தலுக்காக தற்காலிகமாக ஒரு விஷயத்தைக் கனவு கண்டார்கள். திட்டமிட்டார்கள். உழைத்தார்கள். சாப்பிட்டார்கள்! இதுதான் இந்தப் படத்தின் தத்துவம். போருக்குப் பிறகு சிதைந்த இத்தாலியில், அரசின் கரங்கள் உதவாத தெருக்களில் வாழும் மனிதர்களுக்கு கனவு காண்பதுதான் புரட்சி. தோல்வியடைந்தாலும், மீண்டும் எழுந்து வாழ்வதுதான் வழி. இத்தாலியின் ஓரங்கட்டப்பட்ட உழைக்கும் வர்க்க மனிதர்களின் கதை. கைகொடுத்துத் தூக்கிவிட தங்களுக்கு நேரமில்லை என்று சொல்லும் உலகில் வாழ்வதற்குப் போராடுவோரின் கதை. ஒரு படம் நகைச்சுவையாக இருப்பதற்கும், நகைச்சுவை என்ற முகமூடியில் சோகமாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்தப் படம் இரண்டாவது வகை.

ஜூல்ஸ் டாஸ் எடுத்த ரிஃபிஃபி என்ற ஃபிரெஞ்சு படம். துல்லியமாகச் செயல்படும் கொள்ளைக்காரர்களை வெளிக்காட்டும் திரைப்படம். உலகின் மிகப்பெரிய சீக்வென்ஸ்களில் ஒன்றான, எந்த வார்த்தையுமின்றி 30 நிமிடங்கள் அரங்கேறும் கொள்ளைக் காட்சியைக் கொண்ட படம். மற்றொன்று, ஜான் ஹுஸ்டனின் ஆஸ்ஃபால்ட் ஜங்கிள் என்ற அமெரிக்கத் திரைப்படம். அழுத்தமான குற்றவாளிகளைக் கதாநாயகர்களாக கொண்ட சோகமான கொள்ளைக்கார வகையறா. மோனிசெல்லி இந்த இரண்டு படங்களையும்தான் பகடி செய்திருக்கிறார். ‘இந்தப் படம் ரிஃபிஃபியின் பகடி’ என்று அவர் நேரடியாக ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார். ஆனால் பகடியாக மட்டுமே இருந்திருந்தால் இந்தப் படம் ஒரு வாரம் மட்டுமே வாழ்ந்திருக்கும். ஆனால் 65 ஆண்டுகள் கடந்தும் இந்தப் படம் வாழ்கிறது. ஏனென்றால் மோனிசெல்லி ஒரு சாதாரணப் பகடிப் படத்தை எடுப்பதைவிட அர்த்தம் பொதிந்த ஆழமான படத்தை எடுத்து உலகிற்குக் கொடுத்திருக்கிறார்.

நகைச்சுவையும் பகடியும் சேர்ந்த காமடியோ ஆல் இத்தாலியானா, புதுமையான வகைமையை உருவாக்கி விடுவதோடு இயக்குனர் நிற்கவில்லை. கூர்ந்து கவனித்தால் இயக்குனர் இதை இத்தாலிய நியோரியலிச பாணியிலும் எடுத்திருப்பது புரியும். ஒரே நேரத்தில் இரண்டு உலகில் வாழ்வது போல, கடிவாளம் கட்டிய இரண்டு குதிரைகளில் மீது ஒரே சமயத்தில் பயணித்திருக்கிறார். ரோம் தெருக்களில் உழலும் உழைக்கும் வர்க்க மனிதர்களின் வழியே ஒளிப்பதித்து கதை சொன்னதால் நியோரியலிச பாணியின் தாக்கமும் படத்தில் இருக்கும். இந்தப் படம் ஒரே நேரத்தில் இரண்டு பார்வையாளர்களை நோக்கியும் பேசுகிறது என்பது புரியும். கவனமான ஃப்ரேமிங், ரோமின் வெளியோர நிலங்கள், பாசிஸ்ட் கட்டட எச்சங்கள், மறுகட்டுமானத்தின் அழுக்கடர்ந்த இடங்கள் போன்ற நிலவியல்கள் படத்தில் பதிவானது, திரைக்கதையில் மோனிசெல்லி வைக்குமொரு அரசியல் அறிக்கை. கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் ஃபாசிசத்தின்  எச்சங்களில் எப்படி வாழ்கிறார்கள், பாருங்கள் என்று அந்த காட்சிகளின் வழி கதை சொல்கிறார் இயக்குனர். அதைத் தத்ரூமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கியானி டி வெநென்ஸோ. அவருடைய ஒளிப்பதிவு, கறுப்பு வெள்ளையில், ரோமை ஒரு கவிதையாக மாற்றுகிறது.

திரைக்கதையில் திரும்பத்திரும்ப வரும் பாவனை, கதாபாத்திரங்கள் தங்களை மிகவும் தீவிரமானவர்களாக எடுத்துக்கொள்வது. அவர்களுடைய திருடும் திறமையின்மையினால் உடனடியாக அந்த பிம்பம் உடைந்து விடுகிறது. இந்த நகைச்சுவை வேலை செய்வதற்கு படம் உண்மையான கேப்பர் வகைப் படம் போலத்  தோற்றமளிக்க வேண்டும். ‘நெகிழ்வற்ற விஷயம் ஒரு உயிரோட்டமான சூழலில் விழும்போது சிரிப்பு வருகிறது’ என்ற ஹென்றி பெர்க்சனின் கோட்பாட்டிற்கிணங்க, பெப்பே, தானே குழுவின் தலைவன் என்று நம்புகிறான். மறுகணம் விழுகிறான். நாம் சிரிக்கிறோம். ஆனால் இந்தக் கதையும் படமும் க்ளாஸிக் என்பதைக் குறிப்பது போல அந்தச் சிரிப்பிற்குப் பிறகு ஒரு அசௌகரியம் வருகிறது. ‘இவர்கள் நாமல்லவா? நாமும் நம்முடைய திட்டங்களும் தோற்கும்போது இப்படி சிரிக்கலாமா?’ என்ற கேள்வி நமக்கு வருகிறது.

மணிக்கணக்கில் உழைத்து, சுவரை உடைத்து, சுரங்கம் தோண்டி கடைசியில் அவர்கள் காண்பது  ஒரு  சமையலறை. அவர்களின் திட்டம் முழுவதும் தவறாகிப்போய் திசைமாறி, பிழைத்து, நேரம் விரயமென எல்லாமே நடந்தும் இறுதியில் அவர்கள் சுற்றி அமர்ந்துகொண்டு கிடைத்த உணவைப் பசிதீரச் சாப்பிட்டார்கள். அவர்களுக்கு திருடப்போன இடத்தில் உள்ள செல்வம் எங்கே என்று தெரியவில்லை, ஆனால் பசி இருக்கிறது. அடுத்த நாள் செய்தித்தாளில் ‘அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு  வீட்டில் நுழைந்து பாஸ்தாவும் கொண்டைக்கடலையும் திருடி சென்றனர்’ என்று வருகிறது. மக்கள் அலட்சியப்படுத்தப்போகும் இந்தச் சிறிய செய்தி சில மனிதர்கள் போட்டு செயல்படுத்திய திட்டத்தின் தோல்வி.  ஊடகங்களும் சமூகமும் இவர்களை அடையாளம் தெரியாதவர்கள் என்று சொல்கின்றன. ‘நகை திருடப் போனவர்கள் உணவைத் திருட்டுத்தனமாகத் தின்றுவிட்டு வந்தார்கள்’ என்று கேலி செய்கின்றன. ஆனால் பசியிலிருந்து தப்பிக்கத்தானே அவர்கள் திருடவே செய்தார்கள்? அப்படிப்பட்ட மக்கள்  திருடுவது பாவமா? அல்லது அந்தப் பசியை உருவாக்கிய சமூகமும் அரசாங்கமும் பாவிகளா? என்று  மோனிசெல்லி இந்தக் கேள்வியை நம்மிடம் நேரடியாகக் கேட்காமல் பாஸ்தா கொண்டைக்கடலைக் காட்சி மூலம் கேள்வியை நம் மனதில் விதைக்கிறார். 

‘மனிதன் முட்டாள்தனமானவன், அவன் திரும்பத் திரும்பத் தோற்பான், சமூகம் அவனுக்கு உதவாது. ஆனால் அந்த முட்டாள்தனத்திலும் ஒரு மனிதத்தன்மை இருக்கிறது, அதை மரியாதையோடு பார்க்க வேண்டும்’ என்பதே இத்தாலிய சினிமா பகடிக்காரன் மரியோ மோனிசெல்லியின் தத்துவம். இடையிலே வரும் திருடத் திட்டமிடும் சில காட்சிகள் சற்று இழுக்கின்றன. நகைச்சுவையின் தாளம் அங்கங்கே சொடுக்குகிறது.

நீங்கள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் பெரிய வீரர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் உங்கள் பக்கத்து வீட்டு மனிதர்களைப் போல, கவலைகளுடனும் பலவீனங்களுடனும் நகைச்சுவை உணர்வுடனும் இருக்கட்டும். அந்த எதார்த்தம்தான் பார்வையாளர்களை உங்கள் கதையோடு நெருக்கமாக்கும். எளிமையே அழகு. அப்படி இயல்பான பொழுதுகளைப் போன்று படத்தில் பல நகைச்சுவைக் காட்சிகள் வசனங்கள் இல்லாமலேயே நகரும்.

திருடர்கள் அந்த வீட்டின் சுவரைத் துளையிடும்போது, அந்தத் துளையின் வழியாகத் தெருவில் நடப்பதைப் பார்ப்பார்கள். அந்த மௌனம், அவர்கள் எவ்வளவு பரிதாபமான நிலையில் இருக்கிறார்கள் என்பதையும், திருடப்போன இடத்தினுடைய அந்தச் சூழலின் அபத்தத்தையும் நமக்கு கடத்தும். வசனமேயில்லாத மிக மௌனமான காத்திருப்புக் காட்சியிலும் நாம் சிரித்துக்கொண்டிருப்போம். உண்மையான மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் சிறு சிறு தோல்விகளைப் படம்பிடிப்பதே ஒரு மிகச்சிறந்த கதையின் தொடக்கப்புள்ளி.

ஒரு திருடன் ஒரு தவறு செய்வான். உடனே கேமரா அடுத்த திருடனின் முகத்தைக் காட்டும். அந்த ரியாக்‌ஷன் ஷாட் தான் நகைச்சுவையின் உச்சம். ஆக்‌ஷன்-ரியாக்‌ஷன் டைமிங். தவறு செய்பவனைவிட, அந்தத் தவற்றைப் பார்த்து அதிர்ச்சியடையும் எதிர்வினை முகபாவனைதான் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும். இதை ‘கட்’ செய்யும் வேகம், மோனிசெல்லியின் தனிப்பட்ட முத்திரை. கதாபாத்திரங்கள் முக்கியமான ஒரு இடத்தில் கவனக்குறைவுடன் ஒரு  தவற்றைச்  செய்துவிட்டால், அதன் விளைவு உடனே தெரியாது. சில நிமிடங்கள் கழித்து, அந்தத் தவறு ஒரு பெரிய சிக்கலாக மாறும்போதுதான் பார்வையாளர்கள் சிரிக்கத் தொடங்குவார்கள். திரைக்கதையில் இந்த அடித்தளம் அமைத்துத் திருப்பிக் கொடுக்கும் முறையை, மிகக் குறுகிய இடைவெளிகளில் மோனிச்செல்லி  கையாண்ட விதம், இன்றைய இயக்குநர்கள் பலருக்கும் ஒரு கையேடு.

ஒரு காட்சியின் நகைச்சுவை உச்சத்தை எட்டிய அடுத்த நொடியே, அடுத்த காட்சிக்குத் தாவிவிடுகிறார். காட்சியை நீட்டித்து நகைச்சுவையைச் சலிப்படையச் செய்யாமல், ‘சிரிப்பு வந்தவுடன் நகர்ந்துவிடுவது’ அவருடைய  ஸ்டைலாக இருக்கிறது. இந்த நுணுக்கம்தான், இன்றும் இந்தப் படம் பழையதாகத் தெரியாமல், நவீனமாக இருப்பதற்கான காரணம். பொதுவாக சினிமாவில் நாயகர்கள் பலசாலியாகவோ, புத்திசாலியாகவோ இருப்பார்கள். ஆனால், மோனிசெல்லி அவர்களை ‘குறைபாடுள்ள மனிதர்களாக’ உருவாக்கியிருக்கிறார். ஒரு திருடன் பசியால் தவிப்பதும், இன்னொருவன் தனது குடும்ப அழுத்தத்தால் குழம்புவதும், அவர்களது தவறுகளை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. ஒரு நல்ல திரைக்கதையில், கதாபாத்திரங்களின் பலவீனம்தான் கதையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார் மோனிசெல்லி.

அந்தக் காலி அடுக்குமாடி வீட்டிற்குச் செல்ல, திருடர்கள் நள்ளிரவில் ஒரு ஸ்கைலைட் கண்ணாடி மீது தத்தித் தத்தி நடந்து, மறுபுறம் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே நுழைய வேண்டும். அவர்கள் உலோகச் சட்டத்தின் மீது நழுவிச் சென்று, ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கையில், திடீரென அவர்களுக்குக் கீழே இருந்த அறையில் மின்விளக்குகள் எரியும். சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க அவர்கள் அந்த கண்ணாடி மீது அப்படியே தட்டையாகப் படுத்துக்கொள்வார்கள். கீழறையில் ஒரு இளம் ஜோடி நுழைந்து, அவள் தன்னை உண்மையாகவே காதலிக்கிறாளா, அவன் துரோகம் செய்தானா என்பது குறித்து சத்தமாக வாக்குவாதம் செய்யத் தொடங்குகிறார்கள். அவர்கள் மாறி மாறி ஆவேசமாகக் கத்திக் கொண்டிருக்க, பத்து அடி உயரத்தில் அசையாமல் இருக்கும் கும்பல், ஒவ்வொருவராகத் தூங்குவதும், திட்டமிட்ட நேரம் வீணாவதைக் கண்டு பொறுமையின்றி சைகை காட்டுவதுமாக இருக்கிறார்கள். மிகவும் வேடிக்கையான இது போன்ற பல காட்சிகள் படத்திலுண்டு.

வசனங்களை நம்பி நகைச்சுவை செய்வதைவிட, சூழ்நிலையை நம்பி நகைச்சுவை செய்வது மோனிசெல்லியின் மிகப் பெரிய பலமாக இருக்கிறது. சூழலே நகைச்சுவையின் ஊற்று. திறம்பட எழுதப்படும் திரைக்கதைச் சூழல்களே காலத்தை வெல்லும். உதாரணமாக, அந்த ஜன்னல் காட்சி. திருடர்கள் சுவர் இடிக்கும் முயற்சியில் அவர்கள் காட்டும் பதற்றமும் அவர்களுக்கு ஏற்படும் தோல்விகளுமே சிரிப்பை வரவழைக்கின்றன. வசனம் இல்லாமல் வெறும் உடல் மொழியாலும் சூழலாலும் சிரிக்க வைப்பதுதான் இந்த படத்தினுடைய திரைக்கதையின் ஆகச் சிறந்த வெற்றி. பெரும்பாலான கதைகள் வெற்றி அல்லது தோல்வி என்ற இரு துருவங்களில் முடியும். ஆனால், இப்படம் ‘தோல்வியை’ புனிதப்படுத்துகிறது. ஒரு மிகப் பெரிய இலக்கை அடைய முயற்சி செய்து தோற்றுப்போன பிறகு, அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அந்த இறுதிக் காட்சி, தோல்வி என்பதும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்பதை ஆழமாகப் பதிய வைக்கிறது.

கதையின் முடிவில் கதாபாத்திரம் எதை அடைகிறது என்பதைவிட, அந்தத் தோல்வியிலிருந்து அவன் என்ன கற்றுக்கொள்கிறான். தோல்வியின் வீரியத்தில் அவனது மனநிலை எப்படி மாறுகிறது என்பதில்தான் ஒரு நல்ல கதையும் வாழ்வும் இருக்கிறது என்பதை உணர்த்தும் திரைப்படம். படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் அனைவரும் ஒரு நிஜமான திருட்டுப் பட்டாளத்தைப் போலவே இயங்கியிருக்கிறார்கள். இடையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில், அவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்வதும், ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதுமாக இருந்திருக்கிறார்கள். அந்த நட்பு, படத்தினுள் அவர்கள் உரையாடல்களில் பிரதிபலிக்கிறது. நகைச்சுவை ஜாம்பவான் டோட்டோ, மற்ற இளம் நடிகர்களுக்கு அந்த நேரத்தில் இருந்த கமர்ஷியல் மற்றும் நகைச்சுவை நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்திருக்கிறார். மடோன்னா தெரு தவிர்த்து இதே மரியோ மோனிசெல்லி இயக்கிய ‘காப்ஸ் & ராபர்ஸ் 1951’ படமும், டிசிகா இயக்கிய ‘கோல்ட் ஆப் நேப்பிள்ஸ் 1954’ படமும், பஸோலினி இயக்கிய ‘ஹாக்ஸ் & ஸ்பாரோஸ் 1966’ படமும் டோடோவின் முக்கியமான படங்கள். டோடோவுக்கு இதில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறியது என்றாலும், அவர் செட்டில் இருந்த விதம் படத்தின் முழு நகைச்சுவை உணர்வுக்கு உதவியிருக்கிறது.

நடிகர்-இயக்குநர் என்ற உறவைத் தாண்டி, ஒரு குடும்பத் தலைவரைப் போல மோனிசெல்லி அவர்களை ஒருங்கிணைத்திருக்கிறார். எல்லோருடைய தனிப்பட்ட திறமைகளையும் சரியாகப் பயன்படுத்தினால், ஒரு மிகச்சிறந்த படைப்பு உருவாகும் என்று அவர் நம்பினார், அதுவே திரையில் எதிரொலித்திருக்கிறது. பெரும்பாலும் ஸ்டுடியோக்களில் செட் அமைத்துப் படமாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், மோனிசெல்லி ரோமாபுரியின் உண்மையான வீதிகளையும், பழைய கட்டடங்களையும் தேடித் தேடிப் படமாக்கினார். இந்த எதார்த்தம் படத்தில் ஒரு உண்மை தன்மையைக்  கொண்டுவந்திருக்கிறது. கொள்ளைத் திட்டக் காட்சிகளில் திருடர்கள் செய்யும் ஒவ்வொரு சிறு தவறுக்கும் இடையே கேமரா வேகமாக நகரும். அந்த விரைவான எடிட்டிங், கதாபாத்திரங்களின் பதற்றத்தை மிகச் சரியாகக் கடத்தும். இருண்ட அறைகளில் நடக்கும் காட்சிகளைப் படமாக்கும்போது, மிகக்குறைந்த ஒளியிலேயே கதாபாத்திரங்களின் முகபாவனைகளைத் தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.

பின்னணி இசையைத் தாண்டி, அவர்கள் திருடும்போது ஏற்படும் சிறிய சத்தங்கள், உதாரணமாக அந்தச் சுவரில் ஓட்டை போடும்போது வரும் சத்தம், படத்தின் பதற்றத்தைக் கூட்டின. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத காலத்தில் ஒலியை மட்டுமே வைத்து ஒரு சூழலை உருவாக்குவதில் அவர்கள் காட்டிய நேர்த்தி மிக முக்கியமானது. ஏகப்பட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, குழப்பம் ஏற்படாமல் கதையை நகர்த்துவது எப்படி என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அறிமுகப்படுத்தப்படும் விதம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் கதையோடு பின்னிப் பிணைந்திருக்கும் விதம் இன்றைய திரைக்கதை எழுத்தாளர்களுக்குப் பெரிய பாடம். இந்த கதாபாத்திரங்களுக்கென்று பிரத்யேக உபகதைகள் இருக்கிறது. இந்த உபகதைகள்  இல்லையெனில் படம் வெறும் கொள்ளைச் சம்பவமாக மட்டுமே இருந்திருக்கும். இத்தகைய தனிப்பட்ட கதைகள்தான் பார்வையாளர்களை அந்த கதாபாத்திரங்களோடு ஒன்றச் செய்த்திருக்கின்றன.

மோனிசெல்லி  படத்தின்  நடிகர்களை ஒரு மேடை நாடக நடிகர்களைப் போலவே நடத்தியிருக்கிறார். ஒரு சாதாரணத் திருடன் எப்படிப் பேசுவான், எப்படி நடப்பான், எப்படி பயப்படுவான் என்பதை மிக நுணுக்கமாக அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதனால்தான் படத்தில் வரும் ஒவ்வொரு திருடனுக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயம்  இருந்தது. நகைச்சுவைக்கு ‘டைமிங்’ மிகவும் முக்கியம் என்பதால் எந்த இடத்தில் மௌனம் தேவை, எந்த இடத்தில் வசனம் தேவை என்பதை மிகத் துல்லியமாகக் கையாண்டிருக்கிறார். திருடர்கள் அமைதியாகப் பதுங்கிச் செல்லும் காட்சிகளில், அவர்கள் படும் உடல் சிரமங்களை வெறும் கேமரா கோணங்கள் மூலமே நமக்குத் தெரியப்படுத்துவார்.  திருடர்கள் மேல்மாடியில் இருந்து கொள்ளையடிக்கக் காத்திருக்கும்போது, அவர்களுக்குக் கீழே உள்ள அறையில் ஒரு இளம் ஜோடி சண்டையிடும் காட்சி நடக்கும். திருடர்கள் மேலே அசையாமல், சுவாசத்தைக்கூடக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம். கீழே உள்ள ஜோடி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ள, மேலே இருக்கும் திருடர்கள் தூக்கத்திலும் பசியிலும் அலுப்பிலும் செய்யும் சைகைகள் அபாரமானவை. இது ஒரு காட்சியை எவ்வளவு அமைதியாக வைத்து, அதனுள் எவ்வளவு சத்தமான நகைச்சுவையைக் கொண்டு வர முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம்.

திருடர்கள் மெதுவாக அடிமேல் அடி வைத்து நடக்கும்போது ஒலிக்கும் அந்த ஜாஸ் இசை, அவர்கள் எவ்வளவு ‘முயற்சி’ செய்கிறார்கள் என்பதையும், அந்த முயற்சி எவ்வளவு கோமாளித்தனமானது என்பதையும் இசையிலேயே புரிய வைத்துவிடும். பதற்றமான காட்சிகளில் ஒலிக்கும் இசை, பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும் ஒரு கருவியாகவே செயல்பட்டிருக்கும். ஒரு காட்சியில் அவர்கள் கொள்ளையடிக்கத் தயாராகும்போது, கேமரா அவர்கள் முகத்தில் இருக்கும் பதற்றத்தை மட்டும் காட்டும். அடுத்த நொடியே அவர்கள் செய்யும் ஏதோ ஒரு மக்குத்தனம் ஒட்டுமொத்த காட்சியின் சீரியஸ் தன்மையையும் உடைத்துவிடும். இதுதான் திறமையான ஒளிப்பதிவின் கலை. தீவிரமான சூழலுக்குள் ஒரு நகைச்சுவை வெடிப்பதை, காட்சி மொழியால் சிறப்பாகப் படம் பிடித்திருப்பார்கள்.

இத்தாலிய எல்லையைத் தாண்டி, உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம். படத்தில் வரும் ஒவ்வொரு திருடனுக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்னை இருக்கிறது. குறிப்பாக கபன்னெல்லே என்ற கதாபாத்திரம் எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று துடிப்பான். மரியோ கதாபாத்திரம் எப்போதும், மூன்று பெண்களுக்கும் ஒரே மாதிரியான பொருட்களைக் கொண்டு போய் தருவான். அவன் ஒரு அநாதை, அவனை வளர்த்த அந்த மூன்று ‘தாய்மார்களுக்காக’ அவன் படும் பாடு, படத்தின் வறுமைக்கு நடுவிலும் இருக்கும் மென்மையான மனித நேயத்தைப் பிரதிபலிக்கும்.

சிறையில் கைதிகள் ஒரு சிகரெட்டைப் பகிர்ந்துகொண்டு, புகையை பாட்டிலில் அடைத்துச் சேமிக்கும் காட்சி, வறுமையின் உச்சத்தை எவ்வளவு நகைச்சுவையாகவும் பரிதாபமாகவும் சொல்ல முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். இந்தச் சிறிய விஷயங்கள்தான் அந்தத் திரைப்படத்தை வெறும் கொள்ளையர்களின் கதையாக மட்டும் காட்டாமல், அந்த காலத்து இத்தாலிய மக்களின் வாழ்வியலைச் சொல்லும் ஆவணமாக மாற்றியது.

இத்தாலிய நகைச்சுவையின் ராஜா என்று அழைக்கப்படுபவர் டோட்டோ. அவர் இந்தப் படத்தில் நடித்த ‘டான்டே குரூசியானி’ கதாபாத்திரம் மிகச் சிறியது, ஆனால், மிகவும் முக்கியமானது. பழைய திருடனாக அவர் சொல்லிக்கொடுக்கும் திருட்டு வித்தைகள் அனைத்தும் வேடிக்கையானவை. இத்தகைய ஜாம்பவான் நடிகர்களை, ஒரு கூட்டமாகச் சேர்த்து மோனிசெல்லி இயக்கியதே ஒரு கலைதான். இந்தத் திரைப்படத்தை உருவாக்கிய மோனிசெல்லியுடன், இத்தாலிய சினிமாவின் ஜாம்பவான்களான அஜினோர் இக்ரோச்சி மற்றும் ஃபுரியோ ஸ்கார்பெல்லி இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். இவர்கள் ‘அஜி-ஸ்கார்பெல்லி’ என்ற பெயரில் புகழ்பெற்றவர்கள். நகைச்சுவையுடன் சமூக அவலங்களைக் கோப்பதில் இவர்கள் கில்லாடிகள்.

திருடர்கள் தங்களை ஏதோ ஒரு பெரிய சர்வதேச உளவாளிகளைப் போல நினைத்துக்கொண்டு, கொள்ளையைத் திட்டமிடுவார்கள். நிலக்கரித் தொட்டி வழியாக உள்ளே செல்வது, கார் ஜாக்கை வைத்து சுவரை இடிப்பது என அவர்கள் காட்டும் வேகம், நொடிப் பொழுதில் அவர்களை சோதனைக்குட்படுத்தும். திட்டமிடுதலில் உள்ள குளறுபடிகளின் இந்த முரண்பாடுதான் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிறது. ஒரு சாதாரணமான திருட்டைக்கூட அவர்களால்  திருடித் தப்பிக்க முடியாது என்பதுதான் மையக் கரு. அவர்கள் திருட முயற்சிக்கும் அந்தப் ‘பெரிய தொகை’ அவர்களுக்குக் கிடைக்கவே போவதில்லை என்பது தெரிந்தும், அவர்களின் அப்பாவித்தனமான முயற்சியைத் தொடர்ந்து பார்க்கும்போது, அந்தத் திருடர்கள் மீது நமக்கு ஒரு பரிதாபமும்  நகைச்சுவையும் பிறக்கிறது.

ஒரு மனிதன் உண்மையில் தோல்வியடைவது எப்போது? கவலைப்பட வேண்டியது எப்போது? என்ற கேள்வியை கேட்டுவிட்டு ‘அவன் கனவு காண்பதை நிறுத்தும்போது’ என்ற பதிலையும் தரும் காவியம்.

ஒரு கனவு தோற்றது. ஆனால் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள். நாளை மறுபடியும் ஏதோ ஒரு கனவு வரும். அது தான் மனித இனம். ஊடகங்கள் அவர்களுக்கு கொடுக்கும் பெயர் ‘அடையாளம் தெரியாத நபர்கள்’.  அவர்கள் அடையாளம் தெரியாத நபர்கள்தாம். அறியப்படாதவர்தாம். ஆனால் நாம் அவர்களை அறிவோம். ஏனென்றால் நாம்தான் அவர்கள்.

Author Image

கிருஷ்ண பிரசாத்

ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்சு, இத்தாலிய திரைப்படங்களில் ஆழ்ந்த அறிதல் கொண்டவர். இலக்கியத்தையும் உலக சினிமாவையும் இணைக்கும் பாலமாகத் தன் கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
நிவாஸ்- எண்ணங்களில் வண்ணங்களை ஒளிபாய்ச்சிக் காட்டியவர்- ஸ்டார்ட் கேமரா 10

நிவாஸ்- எண்ணங்களில் வண்ணங்களை ஒளிபாய்ச்சிக் காட்டியவர்- ஸ்டார்ட் கேமரா 10

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026
காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

July 2, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?