The Talkie
Thursday, July 2, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home ஆளுமைகள்

கனவுகளை உரமாக்கி கற்பனையை விளைவித்த கலைஞன் – பாரதிராஜா எனும் சகாப்தம்

The Talkie by The Talkie
July 2, 2026
in ஆளுமைகள்
A A
0
கனவுகளை உரமாக்கி கற்பனையை விளைவித்த கலைஞன் – பாரதிராஜா எனும் சகாப்தம்
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon பாஸ்கர் சக்தி

1977ஆம் ஆண்டு பல விதங்களில் முக்கியமானது.  மத்தியில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது.   முதல் முறையாக ஒரு சினிமா நட்சத்திரமான எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆனார். இந்த இரண்டு அரசியல் மாற்றங்கள் போலவே கலைத்துறையில் நிகழ்ந்த ஒரு முக்கிய  நிகழ்வு பாரதிராஜாவின் வருகை. அந்த வருகை என்பது ஓர் இயக்குநரின் அறிமுகம் என்று மட்டுமே சுருக்கி விட முடியாத ஒரு விஷயம்.  காரணம், அது வரையில் சினிமாவில் நிலவி வந்த பல கருத்துகள், அபிப்ராயங்கள், அளவுகோல்கள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் தனது முதல் படத்தின் மூலம் உடைத்து எறிந்தவர் பாரதிராஜா.

அதீதமாக மேக் அப் போட்ட முகங்கள், ஒளியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து படம்பிடிக்கப்பட்ட ஸ்டுடியோ செட்டுகள், செயற்கையான உடை அலங்காரங்கள், டெம்ப்ளேட் ஆக வடிவமைக்கப்பட்ட ஹீரோ, ஹீரோயின், அம்மா, அப்பா, காமெடியன் பாத்திரங்கள் போன்ற எல்லாவற்றையும் உதறி எறிந்து விட்டு, ஒரு செம்மண் உழவுக்காட்டில் வெற்றிலையைக்  குதப்பிக்கொண்டு, வாயில் எச்சில் ஒழுக சப்பாணி என்கிற `ஹீரோ’ அறிமுகமானான். முதல் தலைமுறையாக பள்ளிக்கூடம் போய் பத்தாவது பாஸ் பண்ணி டீச்சராக வேண்டும் என்கிற கனவோடு, பாவாடை தாவணியுடன் மயில் வந்து நின்றாள். மகளைப் பாதுகாக்கும் தாய்க்கோழி போல ஊரில் உள்ளவர்களையெல்லாம் தன் வாயால் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிடும்  பெட்டிக்கடைக்காரி குருவம்மா பேசத் தொடங்கினாள். கிராமத்து மரத்தடியில் எடுபிடிகளைச் சேர்த்துக்கொண்டு மிதப்புடன் பரட்டை என்பவன் சண்டியர்த்தனம் செய்தான் .

இப்படி கிராமப்புறங்களில் அன்றாடம் பார்க்கும் மனிதர்களை அச்சு அசலாக அவர்களது துணிமணிகளோடும், அவர்களது பேச்சு மொழியோடும், அவர்களது ஊரிலேயே படம் பிடித்து திரையில் உயிர்ப்பித்தார். தண்டட்டி அணிந்த கிழவிகளின் பழமொழிகளும், சொலவடைகளும் திரையில் ஒலித்தன. 

கனவுகளை உரமாகக் கொண்டு, கற்பனையை விளைய வைக்க அல்லிநகரத்திலிருந்து கிளம்பி வந்தவர் பாரதிராஜா. கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராகப்  பணியாற்றியிருக்கிறார். மற்றபடி பெரிய படிப்போ உலக சினிமாக்களைக் கரைத்துக் குடித்த அனுபவமோ இல்லாமல் அசலான ஒரு திரைமொழியையும் கற்பனை வளத்தையும் பிரத்தியேகமாக தனக்கென ஓர் அழகியலையும் எப்படி இந்த மனிதர் உருவாக்கினார் என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்.

`பதினாறு வயதினிலே’ அவரது முதல் திரைப்படம். அதில் பல காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதம் அந்தக் காலகட்டத்தில் மிகவும் புதுமையானது. வித்தியாசமானது.

கிராமத்துப் பெண் மயிலு, நகரிலிருந்து வந்த வெடரினரி டாக்டரை காதலிக்கிறாள். அவனோ அவளை உபயோகப்படுத்திக் கொள்ள நினைக்கிறான். அவன் கல்யாணம் செய்துகொள்ள நகருக்குச் செல்லும் செய்தி அறிந்த மயிலு  பதறிப்போய் ஓடி வருகிறாள்.

இந்தக் காட்சியை பாரதிராஜா அவர்கள் எடுத்திருக்கும் விதம் அன்றைய காலகட்டத்தில் வெகு புதுமையானது.

அவன் மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருக்கிறான். கேமரா வண்டிக்குள் இருக்கிறது. டாக்டர் கேமராவின் முன் புறம் இருக்க மயில் வண்டியின் பின்னால் ஓடி வந்தபடியே  பேசுகிறாள்.  “ கல்யாணத்துக்கு ஊருக்குப் போறீங்களா?” என்று அவள் கேட்க, “ஆமா, என் கல்யாணத்துக்குத்தான் ஊருக்குப் போறேன்” என்று அவன் சொன்னதும் , மயில் திகைத்து நிற்கிறாள். நகர்ந்து கொண்டிருக்கும் வண்டியோடு ஓடி வந்த அவள் நின்றதும், வண்டியிலிருக்கும் டாக்டருக்கும் அவளுக்குமான இடைவெளி சட்டென்று அதிகரிக்கிறது.

அதன்பின் மறுபடி ஓடி வருகிறாள். வண்டி ஒரு கல் தட்டி நிற்கிறது. தன் காதலை டாக்டரிடம் சொல்ல அவன் மயிலை இழிவுபடுத்தும் வார்த்தைகளை உதிர்க்க, வண்டிக்காரன் மாட்டை சுளீர் சுளீர் என்று சாட்டையாலடிக்கிறான்.

வெறும் வசனங்களைப் பேசிக் கதை சொல்லிக் கொண்டிருந்த சினிமாவில் காட்சியின் ஒட்டு மொத்தச் சூழலும், பின்னணியும்  ஒத்திசைவாக காட்சியின் உணர்வுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கும் காட்சி அது.

படத்தில் இது போலப் பல காட்சிகள் உண்டு.  மயிலை டாக்டர் அடைய முயற்சிக்க அவள் அவனிடமிருந்து தப்பி ஓடுகையில், கை நழுவிச் செல்லும் இளநீர்,  டாக்டருக்கும் மயிலுக்குமான சினேகத்தைப் பார்த்து மனமுடைந்து போய் சப்பாணி , டாக்டர் கொடுத்த உடைகளை எறிந்து விட்டு கோவணத்துடன் நடந்து வருகையில், பின்னணியில் இருவர் மரத்தை ரம்பத்தால் அறுக்கும்,  களிமண்ணை மிதித்துத் துவைக்கும் காட்சிகள் காட்டப்படுவது இவை எல்லாமே அன்று திரைக்குப் புதியவை.  

வெள்ளந்தியான சப்பாணியின் காதல், அதனை மயிலு புரிந்து கொண்டு அவனை மெதுவாக மாற்ற முயல்வது… சிறுவர்கள் ஓணானைக் கொல்வதைக்கூடப் பார்க்க சகிக்காத சப்பாணி கடைசியில் மயிலின் மீது  கொண்ட அன்பால்  ஒரு கொலை செய்பவனாக மாறுவது என்று பார்வையாளனைத் தனக்குள் இழுக்கும் திரைக்கதை 16 வயதினிலே.  ஒட்டுமொத்தத் திரைப்படமும் ஃப்ளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது. ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மயிலிடம் தொடங்கும் கதை, அவள் ஏன் , எதற்காக, யாருக்காகக் காத்திருக்கிறாள்? என்று முழுக்கதையையும் சொல்லி முடிக்கையில் மயிலின் சோகத்தில் நாமும் பங்கேற்கிறோம். சப்பாணி வர மாட்டானா? என்று ஏங்குகிறோம். சப்பாணிக்காக  ஏங்கி நிற்கும் மயிலின் காத்திருப்பே படத்தின் தொடக்கமாகவும் முடிவாகவும்  இருக்கிறது.

16 வயதினிலே திரைப்படம் பாரதிராஜா என்கிற ஓர் இயக்குநரின் வரவை உரக்க அறிவித்தது. தமிழகமே வியந்து பார்த்தது. பத்திரிகைகள் கொண்டாடின. அன்று சினிமா ரசனையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்கிய ஆனந்த விகடன் 62.5 மார்க்குகளை இந்தப் படத்துக்கு வழங்கியது.இன்றுவரை அந்த மதிப்பெண்ணை வேறு எந்தத் திரைப்படமும் பெறவில்லை.

அடுத்ததாக `கிழக்கே போகும் ரயில்,’ திரைப்படம் வெளியானது. முற்றிலும் புதுமுகங்கள். முதல் திரைப்படத்தில் காதலை மட்டுமே பேசிய பாரதிராஜா இந்தப் படத்தில் சாதிய முரண்களையும், மூடப் பழக்கங்களையும் சாடினார்.  முதல் படத்தைப் போலவே இளையராஜாவின் இசையும், நிவாஸின் ஒளிப்பதிவும் படத்தைப் பிரகாசிக்கச் செய்தன. கதையை ஆர்.செல்வராஜ் எழுதினார். இந்தப் படமும் பெருவெற்றி பெற்றது. முதல் படத்தில் தான் பெற்ற நாற்காலியை இந்தப் படத்தில் பாரதிராஜா உறுதி செய்தார்.

ஆனால், இவருக்கு கிராமியப் படங்கள்தான் எடுக்க வரும் என்கிற விமர்சனங்கள் கிளம்பின. அவற்றை இல்லை என்று ஆக்குவதற்காக  எடுத்த அடுத்த படம்தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. ஒரு `சைக்கோ த்ரில்லர்’ படமாக உருவானது சிகப்பு ரோஜாக்கள். அதே  இளையராஜா, அதே நிவாஸ் உதவியுடன் ஒரு ஸ்டைலிஷ் ஆன படத்தை உருவாக்கினார். முதல் இரண்டு படங்களிலும் கிராமப்புறத்து ஆணும் பெண்ணும் பண்ணுகிற காதல்  குறும்புகளையும், சொல்லாடல்களையும் அழகாகக் காட்சிப்படுத்திய மனிதர், நகரத்தில் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணான ஶ்ரீதேவிக்கும், பணக்காரக் கமலுக்கும் நடுவே நிகழும் காதல் தருணங்களை ரசிக்கத்தக்க விதத்தில் படமாக்கினார். காதலின் தருணங்கள் உருவாக்கும் சீண்டலும் ரசனையும் பாரதிராஜாவின் படங்களில் சிறப்பாக அமையும். ஶ்ரீதேவி வேலை பார்க்கும் கடைக்கு கமல் வந்து கர்ச்சீஃப் வாங்குவது அப்படியான ரொமான்டிக் விளையாட்டுக்களில் ஒன்று. இளையராஜா மேற்கத்திய ஸ்டைலில்  பின்னணி இசையில் புகுந்து விளையாடியதோடு இரண்டு சூப்பர்ஹிட் பாடல்களையும் கொடுக்க,  சென்னையின் இரவுக் காட்சிகளை நிவாஸின் உதவியோடு, ஆங்கிலப் படங்களுக்கு இணையாக அழகாகப் படம்பிடித்தார் பாரதிராஜா.  கிராமத்தான் என்கிற கிண்டலை இந்த ஒரே படத்தில் ஓரம் கட்டி எனக்கு எல்லா விதமான படங்களையும் எடுக்க வரும் என்று நிரூபித்தார்.

தமிழின் முதன்மை இயக்குனர்கள் வரிசையில் பாரதிராஜா என்கிற பெயர் மூன்றாவது படத்தில் ஆழமாகவும் உறுதியாகவும்  நிலை நிறுத்தப்பட்டது. அவரது பயணம் தொடர்ந்தது.

பாரதிராஜாவுக்கென்று ஒரு ஃபார்முலா உருவாகிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. பாரதிராஜாவின் படங்களுக்கென்று சில பிரத்யேகமான அம்சங்கள் இருந்தன. பாடல் காட்சிகளில் வெண்ணிற உடைப் பெண்கள், நாயகிகளின் கண்களுக்கான க்ளோஸ் அப் இவை எல்லாம் அவரது முத்திரைகளாக இருந்தன. பெண்களின் கண்களை க்ளோஸ் அப்பில் காட்டுவதை அவர் மிகவும் ரசித்துச் செய்தார். அழகுணர்ச்சி மட்டும் அதில் இல்லை. ‘புதிய வார்ப்புகள்‘ திரைப்படத்தில் நடித்திருக்கும் ரத்தி அக்னிஹோத்ரி மிகச்சிறந்த நடிகை என்று சொல்ல முடியாது. ஆனால் அவரது கண்கள் மிகவும் உயிர்ப்பானவை. தீட்சண்யம் மிகுந்தவை. அந்தக் கண்களை வைத்தே கோபம், அலட்சியம், அருவருப்பு, காதல் என்று அனைத்து உணர்வுகளையும் பாரதிராஜா காட்டி இருப்பார். அந்தப் படத்தில் ரத்தியின் கண்களை மட்டுமே நடிக்க வைத்து காட்சிக்கு உயிர் கொடுத்திருப்பார்.

காட்சிப்படுத்துதலில் பல புதுமைகளை அவர் செய்தார். ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தை முடிதிருத்தும் தொழிலாளி. அவரது மகனை சாதி மாறிக் காதலித்ததற்காக கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஊர்வலம் விட்டு அவமானப் படுத்துவார்கள். அதைத் தாங்க முடியாமல் அந்தத் தகப்பன் தனது  சவரக்கத்தியை கழுத்தில் வைத்தபடி குளத்தில் இறங்குவார். அப்படியே நீரில் மூழ்குவார். அடுத்தநொடி, சலனமற்ற குளத்தின் நீர்ப்பரப்பில் செந்நிறமாக ரத்தம் குபு குபு என்று கொப்பளிக்கும்.

‘ புதிய வார்ப்புகள்’ படத்தில் நாயகியின் தந்தை கோவிலில் நாயனம் வாசிப்பவர். மகிழ்ச்சியோ துக்கமோ அதை நாயனத்தில் வாசித்து வெளிப்படுத்துகிறவராக அவர் இருப்பார். ஊரார் மகளின் நடத்தையை அசிங்கப்படுத்தியதில் மனம் உடைந்து போவார். நாயனத்தை எடுத்து மிகவும் சோகமாக ஓர் இசையை வாசிப்பார் (அந்த இசைத் துணுக்கில் இளையராஜாவின் இசை நம் நெஞ்சை அறுக்கும்). வாசித்துக் கொண்டே இருந்தவரின் நாயனம் கீழே நழுவி விழ, நாயனத்தின் வாய்ப் பகுதியில் இருந்து ரத்தம் கோடாக வழியும். இப்படியான காட்சிகள் தமிழ் சினிமாவுக்குப் புதுசு.

பாரதிராஜாவிடம் ஓர் அதீத தன்னம்பிக்கை இருந்தது. யாரை வேண்டுமானாலும் நடிகராகவோ நடிகையாகவோ ஆக்கிவிடலாம் என்கிற உறுதி இருந்தது. அதனை சாதித்தும் காட்டினார்.  பாண்டியன் போன்ற வெகு சுமாரான நடிகர்கள்கூட அவரது படங்களில் பொருந்திப் போனார்கள். அவரது கண்டுபிடிப்புகளில் ஹீரோயின்கள் ஜொலித்த அளவுக்கு  ஹீரோக்கள் ஜொலிக்கவில்லை. அவர் கண்டுபிடித்த ஹீரோக்களில் பெரும் வெற்றி பெற்றவர் கார்த்திக். கவனத்தைக் கவர்ந்தவர் `என் உயிர்த்தோழன்’ பாபு . நிழல்கள் ரவி, சந்திரசேகர், நெப்போலியன், சந்திரசேகர், தியாகராஜன் போன்றவர்கள் தங்கள் தொடர் முயற்சிகளால் நிலைத்தவர்கள்.

முதல் ஐந்து படங்களிலும் வெற்றியைக் கொடுத்த பாரதிராஜா சந்தித்த முதல் தோல்விப் படம், ’கல்லுக்குள் ஈரம்’. அதில் பாரதிராஜா கதாநாயகனாக நடித்தார். (படத்தை இயக்கியவர் கேமராமேன் நிவாஸ். டைரக்‌ஷன் மேற்பார்வை பாரதிராஜா என்று டைட்டிலில் வந்தது. இருந்தாலும் அது பாரதிராஜாவின் படமாகத்தான் கருதப்பட்டது.) இன்றைக்கும் ரசிக்கப்படும் சிறப்பான பாடல்களும், இயல்பான காட்சிகளும் கொண்டிருக்கும் படமான, கல்லுக்குள் ஈரம் ஏனோ அன்று எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அது வரையிலும் பாரதிராஜாவின் படங்களுக்கு கேமராமேனாக இருந்த நிவாஸ் இந்தப் படத்துக்குப் பின் பாரதிராஜாவுடன் பணியாற்றவில்லை. பாரதிராஜாவின் ஆரம்பகாலப் படங்களை தன் ஒளிப்பதிவால் அழகுபடுத்தியவர் நிவாஸ். ஆனால், அடுத்து வந்த படமான `நிழல்கள்’ படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் கண்ணனுடன் கைகோத்தார் பாரதிராஜா. வைரமுத்துவும் நிழல்கள் திரைப்படத்தில்தான் இவருடன் இணைந்தார். அவர் எழுதிய `பொன்மாலைப் பொழுது’ பாடல் சூப்பர் ஹிட்.

கல்லுக்குள் ஈரம், நிழல்கள் இரண்டுமே அடுத்தடுத்த தோல்விப் படங்கள். இத்தனைக்கும் பாரதிராஜாவின் படங்களில் வரும் மென்மையான, குறும்புத்தனமான காதல் காட்சிகள், இனிமையான பாடல்கள் எல்லாம் அவற்றில் இருக்கத்தான் செய்தன. இருந்தாலும் அவை ரசிகர்களின் வரவேற்பைப் பெரிய அளவில் பெறவில்லை. ஆனால், அடுத்து வந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டியது.

பாரதிராஜாவின் திரைப்பயணத்தில் பல முறை அவர் இவ்வாறாக தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றியைக் கொடுத்திருக்கிறார்.

‘காதல் ஓவியம்’, ‘வாலிபமே வா வா’, ‘புதுமைப் பெண்’ ஆகிய படங்கள் சறுக்கினாலும்  மண்வாசனை, முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே போன்ற பெரிய வெற்றிகளையும், ஒரு கைதியின் டைரி, கடலோரக் கவிதைகள் போன்ற ரசிக்கத்தக்க படங்களையும் கொடுத்தபடி அவரது கேரியர் கிராஃப்  வெற்றிகளையும் பின்னடைவையும்  உள்ளடக்கியதாகவே இருந்தது.

‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். படமும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் கிட்டத்தட்ட பத்துப் பனிரண்டு நிமிஷம் எந்த விதமான வசனமும் கிடையாது. சத்யராஜைப் பார்க்க வரும் ரேகா, மருத்துவமனைப் படுக்கையில் மயங்கிக் கிடக்கும் சத்யராஜின் அருகே அவர் பரிசாகக் கொடுத்த சங்கை வைத்துவிட்டு கிளம்பிச் செல்வார். சங்கின் ஓசை கேட்டு எழும் சத்யராஜ், ஆஸ்பத்திரி ஊசி, சலைன் எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்துவிட்டு ஓடி, சர்ச் மணியை அடிக்க, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் விட்ட ரேகா, சர்ச் மணி ஓசை கேட்டு ஓடி வந்து சத்யராஜுடன் இணையும் நீளமான க்ளைமாக்ஸ் காட்சி முழுக்க எந்த வசனமும் இல்லாமல் வெறும் காட்சிக்கோவையாக இருக்கும். திரைப்படத்தின் மிக முக்கியமான அந்தப் பகுதி முழுக்கவும் இளையராஜா தனது பின்னணி இசையால் அற்புதமாக  உயிரூட்டி இருப்பார்.

ஆனால் இந்தத் திரைப்படத்துடன் பாரதிராஜா, இளையாராஜா, வைரமுத்து  மூவரும் அடங்கிய அற்புதக் கூட்டணி உடைந்தது. நிழல்கள் திரைப்படம் தொடங்கி கடலோரக் கவிதைகள் வரை இணைந்திருந்த இந்த மூவர் அணி உருவாக்கிய திரைப்படப் பாடல்கள் காலத்தை வென்று நிற்பவை.

அடுத்து `வேதம் புதிது’ படத்துக்கு தேவேந்திரன், `கொடி பறக்குது’ படத்துக்கு அம்சலேகா ஆகியோரை இசையமைப்பாளர்கள் ஆக்கிய பின்னர், மீண்டும் பாரதிராஜா இளையராஜா கூட்டணி இணைந்தது.  என் உயிர்த் தோழன், புதுநெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் ஆகிய படங்களை அவர்கள் அளித்தனர். பாடல்கள் எல்லாமே சிறப்பாக அமைந்தன. ஆனால் படங்கள் பெரிய வெற்றியை ஈட்டவில்லை.

அதன் பின் ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து இணையுடன்,  ரத்னகுமார் கதை வசனத்தில் ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தை இயக்கி  பெரிய இடைவெளிக்குப் பின்னர் மிகப் பெரிய வெற்றியை பாரதிராஜா மீண்டும் அடைந்தார். இந்தக் கூட்டணியில் அடுத்து உருவான ‘கருத்தம்மா’ திரைப்படம் தேசிய விருதை வென்றது.

பாரதிராஜா ஒரு கலைஞனாக எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கியபடியே இருந்தவர். ஒரு போதும் அவர் தனது முயற்சிகளையும் ஊக்கத்தையும் விட்டதே இல்லை. துள்ளலோடு எல்லாக் காலத்திலும் ஒரு இளைஞனாகவே இயங்கிக் கொண்டிருந்தார்.

அவர் தன் மனதுக்குப் பிடித்த படங்களை இயக்கிய அதே நேரம், வியாபார ரீதியாக, அப்போதைய ட்ரெண்ட்டுக்கு ஏற்றாற்போலவும் சில படங்களை இயக்கி இருக்கிறார்.  ரஜினியை வைத்து `கொடி பறக்குது‘, குஷ்பூவை வைத்து ‘கேப்டன் மகள்’ விஜயகாந்த்தை வைத்து ‘ தமிழ்ச்செல்வன்’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை. தனிப்பெரும் ஆளுமைகள், ஹீரோ பிம்பங்களுடன் இணைகையில் ஏதோ ஒன்று அங்கு பிசகிவிடுகிறது போலும்.

சமூகம், அரசியல் ஆகியவற்றைக் குறித்தும் பாரதிராஜா அக்கறை கொண்டிருந்தார். அந்த அக்கறையிலிருந்துதான் ‘என் உயிர்த் தோழன்’ உருவானது.

பிற்காலத்தில் அவர் எடுத்த இரண்டு முக்கியமான திரைப்படங்கள் ‘பொம்மலாட்டம்’, ‘கண்களால் கைது செய்’. இரண்டு திரைப்படங்களும் பாரதிராஜா தன்னை புதுப்பித்துக் கொண்டு நவீனமாக முயன்ற திரைப்படங்கள். வணிக வெற்றியைப் பெறாவிட்டாலும்கூட இரண்டு படங்களுமே குறிப்பிடத்தக்க படங்கள்.

பல்வேறு விதமான படங்களை இயக்கினாலும், எல்லாப் படங்களிலும் காதல் குறித்த சித்திரிப்புதான் பாரதிராஜாவின் தனி முத்திரை. அவர் ஒரு பெருங்காதலர் என்பதை அவர் படங்களில் வரும் காதலர்கள் நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். வெகுளித்தனமான காதல், ஆத்மார்த்தமான காதல், குறும்புத்தனமான  சீண்டலுடன் கூடிய காதல் என்று விதம் விதமான காதல் தருணங்களை அவர் தனது படங்களில் உருவாக்கிக் காட்டிக் கொண்டே இருந்தார்.

முதல் மரியாதையில் மண்ணில் காதலியின் பாதம் பட்டவுடன் உடல் சிலிர்க்கும் காதல், அலைகள் ஓய்வதில்லையில் விடலைத் தனமான ஈர்ப்போடு கூடிய காதல், சிகப்பு ரோஜாக்களில் ஶ்ரீதேவியின் இடுப்பில் சொருகி இருக்கும் கர்ச்சீஃப்பை காட்டி கமல் செய்யும் சீண்டலான காதல், புதிய வார்ப்புகளில் விளையாட்டுத்தனமும் அக்கறையும் கூடிய காதல், மண்வாசனையில் வரும் அர்ப்பணிப்போடு கூடிய காதல், கடலோரக் கவிதையில்  வரும் ஆறுதல்படுத்தும் காதல்  என்று விதம் விதமான பாத்திரங்களின் வழியே அவர் காதலின் பல்வேறு பரிமாணங்களை ஓயாமல் தேடிய மனிதர் அவர்.

எழுத்தாளர்களை மிகவும் மதித்து இணைந்து பணி செய்தவர் பாரதிராஜா. தனக்கான கதையைப்  பெற்று அதனை தன் படமாக மாற்றிக்கொள்ளும் திறமை கைவரப் பெற்றவர் அவர்.  எழுத்தாளர்களை தனது சகாக்களாக இணைத்துக்கொண்டு பயணித்ததால்தான் பல ஆண்டுகள், பல விதமான படங்களை அவரால் உருவாக்க முடிந்தது.

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், பொம்மலாட்டம், அன்னக்கொடி ஆகிய படங்கள்தான் பாரதிராஜாவின் கதைகள்.  பெரும்பாலான திரைப்படங்களுக்கு ஆர். செல்வராஜ்தான் கதை எழுதி இருக்கிறார். பாக்கியராஜ், மணிவண்ணன், ரத்னகுமார், வேதம் புதிது கண்ணன், கடலோரக் கவிதைகள் – சோமசுந்தரேஷ்வர், பசும்பொன் -சீமான், கண்களால் கைது செய் – பிரேம்நாத் (வசனம் சுஜாதா), நாடோடித் தென்றல் கதை – இளையராஜா, வசனம் சுஜாதா. கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் மூலக்கதை சந்திரபோஸ் என்று பல கதாசிரியர்களை உடன் இணைத்துக்கொண்டு பயணித்திருக்கிறார். தனக்கு என்ன தேவை என்பதை, சரியாக இனம் கண்டு கிரகித்துக் கொண்டு வேலை செய்யும் பாங்கு அவரிடம் இருந்திருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் இளைஞர்களிடையே சினிமாவில் சென்று வெல்லலாம் என்கிற தன்னம்பிக்கையை ஊட்டி , பெரும் திரளான இளைஞர்களிடம் கலையார்வத்தை தூண்டி, சென்னையை நோக்கி கிளம்பி வரச் செய்தது ஒற்றை மனிதனாக அவர் நிகழ்த்திய பெரும் சாதனை. தமிழ் சினிமாவின் ரசனையை, தன் படங்களின் வழியே பெருமளவு மாற்றியமைத்தது அவரது இன்னொரு சாதனை.

இத்தனை ஆண்டுகள், இத்தனை திரைப்படங்கள், இடையறாது இயங்கிய கலை மனம் அத்தனையும் கடந்து அவரது  தனிச்சிறப்பாகத் தோன்றுவது எதுவெனில், எந்தச் சாயலும் பாதிப்பும் இல்லாமல் ஒரிஜினலாக தமிழ் மண்ணில் தோன்றிய முதல், அசல்  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா என்பதுதான்.

Author Image

பாஸ்கர் சக்தி

திரைப்பட இயக்குநர். எழுத்தாளர்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
கதை TO திரைக்கதை : MADE IN INDIA – A TITAN STORY

கதை TO திரைக்கதை : MADE IN INDIA – A TITAN STORY

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026
காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

July 2, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?