பாஸ்கர் சக்தி
திரைப்படத்தில் ஒரு இடத்தைப் பிடிப்பது என்பது இன்று மட்டுமல்ல, எப்போதுமே மிகவும் கடினமானது.சவாலானது. திறமை என்பது அடிப்படை. ஆனால் அந்தத் திறமை வாய்க்கப்பெற்றோர் கூட திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளுக்கும் , தருணங்களுக்கும் ஏங்கியபடி அலைக்கழிவது சினிமாவில் சகஜம். சிலருக்கு அது இலகுவாகக் கிடைக்கும், சிலருக்கு பெரும் சிரமங்களுக்குப் பின் கிடைக்கலாம்.
சிலருக்கு ஒரு காலத்திலும் கிடைக்காமல் போகலாம்.. இவை எல்லாவற்றுக்கும் உதாரணங்கள் உண்டு. கொஞ்சம் யோசித்தாலே அவை புலப்படும்.
குருதத்துக்கு இயக்கும் வாய்ப்பு சுலபமாகக் கிடைக்கவில்லை. சில படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்து போராடியபடிதான் இருந்தார். ஆரம்ப காலங்களில் குருதத்தும், தேவ் ஆனந்தும் நண்பர்களாக ஒரே அறையில் இருந்தனர். அப்போது இருவரில் யார் முதலில் வென்றாலும் அவர் மற்றவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்தனர்.
தேவ் ஆனந்த் ஒரு நடிகராக முதலில் ஜெயித்து விட்டார். குறிப்பிடத்தக்க ஒரு கதாநாயகனாக அவர் ஆனதும் தன் சகோதரனுடன் சேர்ந்து திரைப்படக் கம்பெனி ஒன்றை துவங்கி படங்கள் தயாரித்தார். அவர் தயாரித்த இரண்டாவது திரைப்படம், ‘பாஸி’.
பாஸி திரைப்படத்தின் இயக்குனராக குருதத்தை நியமித்தார் தேவ் ஆனந்த் . அவரது சகோதரருக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் தேவ் ஆனந்த் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இரண்டு காரணங்கள். ஒன்று அவர் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு நேர்மையாக இருக்க விரும்பினார். மற்றொன்று அவருக்கு குருதத் மீது மிகுந்த நம்பிக்கையும் , அன்பும் இருந்தது.
.திரைப்படம் ஒரு மேல்நாட்டுக் கலை வடிவம். அது இங்கு தனக்கான வடிவத்தையும், அழகியலையும் உடனடியாக உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு இல்லை. இன்று வரையிலும் மேலை நாட்டுத் திரைப்படங்களின் சாயலில் நமது சினிமாக்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
குருதத் இயக்கிய முதல் திரைப்படமான பாஸி ஒரு Crime noir வகைப் படம். இந்தியாவில் முதல் முதலாக இந்த வடிவத்தில் வந்த படம் பாஸி தான். இதனை Bomby noir வகைப் படம் என்றும் அழைத்தார்கள். சூதாட்டம், நிழல் உலகம், ரவுடிகள், கவர்ச்சியாக கேபரே ஆடும் அழகிகள், சிகரெட், மதுபானம், துப்பாக்கிகள் , கொலை இவற்றை எல்லாம் கூறுகளாகக் கொண்ட, எதார்த்த வாழ்க்கையை விட்டு விலகிய வடிவம்தான் மேற்சொன்ன Crime noir வகைப் படங்கள். பரபரப்பு , மர்மம், திகில், பொழுதுபோக்கு ஆகியவையே இவ்வகைப் படங்களில் பிரதானம்.
சூதாட்டத்திறமை கொண்ட ஒரு இளைஞன், டாக்ஸி ஓட்டுபவன் ( ஹீரோ மதன்) , தனது தங்கையின் மருத்துவச் செலவுக்காக ஒரு நிழல் நடவடிக்கைகள் கொண்ட க்ளப்பில் இணைகிறான். அங்கே கேபரே ஆடும் பெண் ( கீதா பாலி) அவன் மீது காதல் கொள்கிறாள். அதே சமயம் தங்கைக்கு மருத்துவம் பார்க்கு பெண் மருத்துவரும் அந்த இளைஞனின் மீது காதல் கொள்கிறாள்.
இந்த மும்முனைக் காதலின் நடுவே கெட்டவர்களால் கீதாபாலி கொல்லப்பட மதன் மீது கொலைப்பழி விழ , இறுதியில் அவன் அதிலிருந்து மீள்கிறான். பெண் மருத்துவருடன் வாழ்வில் இணைகிறான். சுபம். இதுதான் பாஸி திரைப்படத்தின் கதை. வழக்கமான ஃபார்முலா கதைதான்.
க்ளப், துப்பாக்கிகள், கவர்ச்சியாக காபரே ஆடும் பெண் முதலிய மேலை நாட்டு அம்சங்களுடன், நம் ஊர் மசாலாக்களாகிய இரண்டு பெண்கள் ஒரு ஆணை காதலிப்பது, அண்ணன் தங்கை பாச சென்டிமென்ட் இவற்றோடு பாடல்கள் எல்லாம் கலந்திருக்கும் ஒரு கலவை.
மேலை சினிமாவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டிருந்தாலும் சில இந்தியத் தன்மைகளையும் உள்ளே வைத்து ஒரு பொருத்தமான கலவையை நமது சினிமா காலம் தோறும் தேடிக்கொண்டே இருக்கிறது.
இந்த மாதிரியான ஒரு திரைப்படத்திலும் கூட குருதத் தனது திறமையயும், அவர் ஒரு ரசனை மிகுந்த கலைஞன் என்பதையும் உறுதிப்படுத்தவே செய்தார். அதற்கு அவர் கையில் கிடைத்தவை பாடல்கள். மற்ற இயக்குனர்கள் போலில்லாமல் குருதத் பாடல்களை படமாக்குவதில் ஒரு தனித்த கூர்மையும், அழகியலும் கொண்டவராக இருந்தார். அதற்கான அடையாளமாக இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் இருந்தன.
பொதுவாக அப்போதெல்லாம் பாடல்கள் படத்தின் இடைவெளிகளை இட்டு நிரப்புவதாகவோ அல்லது ஸ்க்ரிப்டின் பலவீனத்தை மறைப்பதற்கு உபயோகப்படுத்துபவையாகவோ இருந்தன. ஆனால் குருதத் தனது திரைப்படங்களில் பாடல்களையும் ஸ்க்ரிப்ட்டின் ஒரு பகுதியாக ஆக்கினார். உணர்வுகள், சம்பவங்கள், கதையின் நகர்வு ஆகியவற்றையும் பாடல்களில் இணைத்தார். பாடல் வரிகளிலும், இசையின் தன்மையிலும் தான் சொல்லும் கதையின் இழைகளை நெய்தார்.
உதயசங்கரிடம் அவர் கற்ற நடனமும், இசையில் இருந்த ஈடுபாடும், ஒளியையும் இருளையும் காட்சிகளில் கவித்துவமாக ஒருங்கிணைப்பதில் அவருக்கு இருந்த ஆர்வமும் அவரது பலம்.. எனவே தன் முதல் படத்தில் இருந்தே அவரது படங்களில் பாடல்களை காட்சிப் படுத்துவதில் அவர் அழகுணர்ச்சியும், கவித்துவமும் கொண்ட திறமைசாலியாக இருந்தார்.
பாஸி திரைப்படம் வெளியானபோது குருதத்தின் வயது 26. அந்த வயதின் வேகத்தோடு மனம் நிறைய யோசனைகளோடும், செயலூக்கத்தோடும் இருந்தார். அந்தத் திரைப்படம் உருவாகும் போது அவர் மனதில் சில வருத்தங்களும் கசப்புகளும் நிகழ்ந்தன. பாஸி திரைப்படத்தின் கதையை குருதத்துடன் இணைந்து எழுதியவர் பால்ராஜ் சஹானி. ( பின்னாளில் பெரிய நடிகராக புகழ்பெற்றவர்.)
அவர் ஒரு இடது சாரி சிந்தனையாளர். குருத்துக்கும் அவருக்கும் இடையில் பல கருத்து வேறுபாடுகள் கதை எழுதும் போது தோன்றின. மக்களால் ரசிக்கப்படும் ஒரு கமர்ஷியல் படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் குருதத்தின் எண்ணம். ஆனால் சஹானியின் சிந்தனை சற்று மாறுபட்டிருந்தது. எனவே மோதல்கள் உருவாகின. இதில்லாமல் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவ் ஆனந்த்தின் சகோரதருக்கும் , குருதத்துக்கும் பரஸ்பரமாக வருத்தங்கள் ஏற்பட்டன.
குருதத்துக்கு தன்னுடைய படைப்பூக்கத்துக்கு துணையாக இருக்கக் கூடிய, தன்னைப் போலவே தேடலும், உத்வேகமும், திறமையும் கொண்ட ஒரு டீம் வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியபடியிருந்தது. தேடிக்கொண்டே இருந்தார்…அப்படி அவர் தேடிக் கண்டடைந்த ஒரு சகாதான் வி.கே. மூர்த்தி.
பாஸி திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது ஒளிப்பதிவு உதவியாளராக இருந்தவர் மூர்த்தி. ஒரு நாள் ஷூட்டிங்கின் போது மூர்த்தி சொன்ன ஒரு யோசனையை கவனித்தார் குருதத். அவர் மனதில் தான் தேடிக்கொண்டிருக்கும் ஆள் இவர்தான் என்று தோன்றி விட்டது . அன்று ஷூட்டிங் முடிந்ததும் மூர்த்தியை அழைத்தார்.
“எனது அடுத்தபடத்திலிருந்து நீதான் என்னுடைய கேமராமேன். நாம சேர்ந்து வேலை செய்வோம்” என்றார்.
குருதத்-வி.கே. மூர்த்தி கூட்டணி அதன் பின் திரைப்படங்களில் இணைந்து நிகழ்த்திய மாயாஜாலங்கள் இன்றும் பேசப்படுகின்றன.
பாஸி திரைப்படத்தில் குருதத் மூர்த்தியை மட்டும் கண்டடையவில்லை. தன் வாழ்வின் துணையையும் அங்குதான் அவர் அறிந்தார். ஆம்… கீதா ராய் எனும் காந்தக் குரல் பாடகியை அங்குதான் அவர் சந்தித்தார். அவர்தான் பின்னால் கீதாதத் தாக, குருதத்தின் மனைவியாக ஆனார்.
குருதத்தின் திரைப்படங்களில் பெண் பாத்திரங்களின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. ஆணின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் பெண்களே முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள். பெரும் வியப்பாக, குருதத்தின் வாழ்க்கையும் கூட அவ்வாறானதாகவே இருந்திருக்கிறது. அவர் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான பெண்கள். கீதா தத், மற்றும் வஹிதா ரஹ்மான். இந்த இருவரும் குருதத்தின் வெற்றிகளுக்கு காரணமான இருவர். குருதத்தின் வீழ்ச்சிக்கும், துயருக்கும், மரணத்துக்கும் கூட இதே இருவரும்தான் காரணமாக இருந்திருக்கின்றனர்.
ஒட்டுமொத்தப் பழியும் அந்தப் பெண்கள் மீதா? என்கிற கேள்வி எழலாம்.. ஆனால் அது அப்படி புரிந்துகொள்ளப் பட வேண்டியதில்லை. இந்த இரு பெண்களுமே குருதத்தின் மீது பேரன்பு கொண்டவர்கள். அவரது கலையை மதித்தவர்கள். ஆனாலும் வாழ்வின் சிக்கலான முடிச்சுகள் இந்த இரு பெண்களுக்கும், குருதத்துகும் நடுவே விழுந்தன. அந்த முடிச்சுகளை அவிழ்க்க மூவராலுமே இயலவில்லை. பலவீனமான மனம் கொண்ட குருதத் அந்த முடிச்சுகளால் மூச்சுத் திணறினார். அந்த அழுத்தத்தில் இருந்து தப்ப விரும்பி மரணத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
சில தருணங்கள் வாழ்வில் மிக இயல்பாக, எந்தவித முக்கியத்துவமும் இன்றி சாதாரணமாக நிகழ்கின்றன. பின்னால் ஒருநாள் நினைவுகூர்கையில், இத்தனை காரியங்களுக்கும் அதுவா துவக்கப்புள்ளி ? எனும் வியப்பு தோன்றுகிறது. கீதா ராய் எனும் புகழ்பெற்ற பாடகி, தன் வாழ்வின் விதியை தீர்மானிக்கும் குருதத் எனும் இளைஞனை சந்தித்த முதல் தருணமும் அப்படியானதுதான்.
மிகுந்த போராட்டத்தின் பின்னர் கிடைத்த வாய்ப்பு, நண்பன் தேவ் ஆனந்த் அளித்த இயக்குனர் பொறுப்பு. சினிமா எனும் துள்ளும் குதிரையில் ஏறி வலம் வருவோமா அல்லது சினிமா நம்மை காலில் மிதித்து விட்டு நகருமா? என்கிற புதிரான கேள்வியும், அது தரும் பதட்டமும்தான் பெரும்பாலானவர்களின் ஆரம்பமாக இருக்கும். குருதத்தும் அப்படியான மனநிலையில் இருந்திருக்கக் கூடும்.
பாஸி யின் இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன். அவரிடமிருந்து கீதா ராய்க்கு ரிகர்சலுக்கு அழைப்பு வந்தது. தன் தந்தையுடன் கீதாராய் ஸ்டுடியோவுக்குச் செல்கிறார். ரிகர்சல் ரூம் எங்கிருக்கிறது என்று தந்தை தேட, கீதா காரில் அமரந்திருக்கிறார். ஒரு இளைஞன் உள்ளிருந்து வருகிறான். “வாங்க ரிகர்சல் ரூமைக் காட்டுகிறேன்” என்று சொல்லி இருவரையும் அழைத்துச் செல்கிறான். அவன் வங்க மொழியில் பேசுவதை கீதா கவனிக்கிறார். அவனை லேசாக ஒரு முறை பார்க்கிறார்.
உள்ளே ரிகர்சல் நடக்கிறது. கிடைக்கும் ஒரு சிறு இடைவெளியில் கீதா மனதில் நிற்கும் அந்தக் கேள்வியை எஸ்.டி.பர்மனிடம் கேட்கிறார்.
“யார் அந்த பெங்காலி ஜென்டில்மேன்?”
பதிலுக்கு எஸ்.டி.பர்மன் சிரிக்கிறார்,” அவர்தான் பாஸி படத்தோட டைரக்டர். பேரு குருதத். ஆனால் அவர் பெங்காலி இல்லை. .” என்று சொல்கிறார்.
இப்படித்தான் கீதாவுக்கும், குருதத்துக்கும் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. குருதத் மிகவும் வசீகரமான மனிதர். பெண்கள் அவர் வயப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல. கீதா அவர் பால் ஈர்க்கப்பட்டார்.
குருதத் எக்ஸ்ட்ரோவர்ட் அல்ல, உள்ளொடுங்கிய மனம், எல்லாவற்றையும் தனக்குள் பூட்டி வைத்துக் கொள்கிற குணம். கனவான். மரியாதையாகவும், கண்ணியமாகவும் அனைவரிடமும் பழகுபவர்.
கீதாவோ நேர் எதிர். கலகலப்பான எக்ஸ்ட்ரோவர்ட். நண்பர்கள் அதிகம். அந்த முதல் சந்திப்பின் தொடர்ச்சியாக அவர் அடிக்கடி குருதத்தை சந்தித்தார். குருதத்தின் வீட்டுக்குச் சென்றார். பாடல்கள் பாடிக்காட்டினார். குருதத்தின் அம்மா, சகோதரியிடமெல்லாம் வெகு சகஜமாக பேசிப் பழகினார. அவர்களது சமையலறையில் உதவி செய்தார். ஒரு பெரிய ஸ்டார் பாடகி வீடு தேடி வந்து இப்படிப் பழகியதில் குருதத்தின் குடும்பமே அவரை விரும்பியது.
கீதாவின் அழகும், குரலும் குருதத்தை மயக்கியது. அவருக்கு வங்க மொழிப்பாடல்கள் என்றால் வெகு பிரியம். கீதா அவருக்காக பாடுவதும், அதனை அவர் கேட்டு மயங்குவதுமாக , எல்லாக் காதலின் துவக்கம் போலவே மிகவும் அழகான நாட்களாக அவை இருந்தன.
இப்படியாக பாஸி படத்தின் ஷூட்டிங் துவங்கும் முன்னரே கீதாவுக்கும், குருதத்துக்குமான காதல் துவங்கி விட்டது.
பாஸி படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களித்தவை அந்தப் படத்தின் பாடல்கள். கீதா ராய் அந்தப் படத்தில் ஆறு பாடல்கள் பாடினார். ஆறு பாடல்களுமே கொண்டாடப்பட்ட பாடல்கள். கேபரே, க்ளப் டான்ஸ் பாடல்களுக்கு கீதாவின் குரல் ஒரு புதிய அழகைக் கொடுத்ததாக எல்லாரும் சொன்னார்கள். எஸ். டி . பர்மன் மந்திரம் போன்ற இசையை வழங்கினார். பாடல் காட்சிகளை குருதத் தன்னுடைய பிரத்யேக அழகோடு காட்சிப் படுத்தினார்.
பாடல்களும், படமும் பெரிய வெற்றியைப் பெற்றன. குருதத்தின் முதல் திரைப்படமே வெள்ளி விழா கண்டது. குருதத்தின் திரையுலக சரித்திரம் துவங்கியது.
படம் பெரும் வெற்றி . ஆனால் விமர்சனங்கள் கலவையாக இருந்தன. அந்த காலகட்டத்தில் முக்கிய சினிமா விமர்சகர் என்று அறியப்பட்ட பாபுராவ் படேல், டைரக்ஷன் மோசம் என்று விமர்சித்தார். இந்தப் படம் ஓடியது பாடல்களால்தான் குறிப்பாக கீதாராயின் குரலில் உருவான பாடல்களால்தான் பாஸி ஓடியது என்றெல்லாம் சிலர் சொன்னார்கள்.
ஆனால் வெற்றி என்பது எல்லாவற்றையும் உண்டு செரிக்கும். பாஸி படத்தின் வெற்றி , அதுவரை குருதத் அனுபவித்த பொருளாதார சிரமங்களில் இருந்து அவரை மீட்டது. தன் வீட்டுக்கான முதல் சீலிங்க் ஃபேனையும், ஒரு ரேடியோவையும் குருதத் மகிழ்ச்சியுடன் வாங்கினார். அவரது பணம் சம்பந்தமான கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து அவர் செல்வத்தின் வாசலில் அடியெடுத்து வைத்தார்.
பணம், புகழ், காதலி, மனைவி இந்த நான்கையும் பாஸி திரைப்படம் குருதத்துக்கு அளித்தது. வாழ்க்கையில் இதை விட மகிழ்ச்சி என்ன வேண்டும். பெரும்பாலான மனிதர்களின் கனவு இந்த நான்கைத் தாண்டி என்னவாக இருந்து விட முடியும்? உலகின் மிக மகிழ்ச்சியான மனிதனாக குருதத் இருந்திருக்க வேண்டும் இல்லையா?
ஆனால் எப்போதுமே எல்லா வெளிச்சத்தின் அடியிலும் ஒரு கருநிழல் நமக்குத் தெரியாமல் இருக்கிறது. எல்லா இன்பங்களும் அவை சீக்கிரம் முடிந்து போகும் இடத்தை நோக்கியே செல்கின்றன என்பதுதான் வாழ்வின் விசித்திரம்.
கீதாவை சந்தித்த சில ஆண்டுகள் கழித்துத்தான், குருதத்-கீதா திருமணத்துக்குப் பிறகுதான் வஹிதாவை குருதத் சந்தித்தார்.
செகந்திரபாத்தில் ஒரு எருமையின் மீது கார் மோதியதன் காரணமாகத்தான் குருதத் – வஹிதா சந்திப்பு நிகழ்ந்தது. அது ஒரு சிறிய சாதாரண சந்திப்பு….அதன் பின் தனது சிஐடி படத்தின் போது வஹிதாவை தன் படக்கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்கிறார் குருதத்.. அப்போது இருவருக்குமான இரண்டாவது சந்திப்பு நிகழ்கிறது.
வஹிதா ஒப்பந்தம் செய்ய அழைத்து வரப்பட்டிருக்கிறார். குருதத் தன் இயல்புப் படி அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கிறார். வஹிதாவுடன் இயக்குனர் ராஜ் கோஸ்லா, ப்ரொடக்ஷன் கன்ட்ரோலர் குருசாமி, ஸ்க்ரிப்ட் ரைட்டர் அப்ரார் ஆல்வி மூவரும்தான் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
முடிவில் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார் வஹிதா. முதல் ஆண்டு மாதம் 1200 ரூபா சம்பளம். பேசி முடித்ததும் குருதத் வஹிதாவிடம் கேட்கிறார்.
“ உனக்கு சந்தோஷமாக இல்லையா?”
அதற்கு வஹிதாவின் பதில்,”என்னோட காஸ்ட்யூம்ஸ் எனக்கு திருப்தியா இருந்தாத்தான் நான் சந்தோஷப்படுவேன்”
“கவலைப்படாதே, உனக்கு பிடிக்காத காஸ்ட்யூமை போடச் சொல்லி யாரும் வற்புறுத்த மாட்டாங்க. சரியா? உனக்கு ஓகே தானே?”
“சரிதான். ஆனா அதை கான்ட்ராக்ட்லயும் எழுதிக்கலாமே?”
“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“அதுக்காக சொல்லலை. ஆனா அது கான்ட்ராக்ட்லயும் இருந்தா நல்லது இல்லையா?”
குருதத் மறுப்பேதும் சொல்லவில்லை. கான்ட்ராக்ட்டில் அது குறிப்பிடப்பட்டது.
பெரிய இயக்குனர், பெரிய கம்பெனி. அது வஹிதாவுக்கு முதல் படம். வேறு இயக்குனாராக இருந்தால், இப்படிச் சொல்லும் புதுமுகத்தை வெளியேற்றி இருப்பார்கள். ஆனால் வஹிதா சொன்ன கன்டிஷனை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை மிகுந்த கனவானாக குருதத் இருந்தார். அவரிடம் இயல்பாகவே சக மனிதர்களிடத்தில் ஒரு மரியாதையும், பரிவும் இருந்தது. இதன் பின்னரும் கூட ஷூட்டிங்கில் வஹிதா தனக்கு அளிக்கப்பட்ட ஒரு ஆடையை அணிந்து கொள்ள முடியாது என்று பிடிவாதமாக சொல்லி விட்டார். அது குருதத்தின் கவனத்துக்கு வந்தபோதும் குருதத் அதற்கு கோபப்படவில்லை.
வஹிதா மீது அவருக்கு ஒரு மென்மையான அணுகுமுறைதான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
கலை மனம் எப்போதும் உணர்ச்சிவயப்பட்டதாகவே இருக்கிறது. அதன் காரணமாகவே அந்த மனம், மற்ற மனிதர்களால் உணர முடியாத புள்ளிகளை உணர்கிறது. தொட முடியாத இடங்களைத் தொடுகிறது. சிறப்பான தருணங்களை உருவாக்குகிறது. ஆனால் இந்த இயல்பே பெரும் துயரங்களையும் சம்பாதித்துக் கொடுக்கிறது.
குருதத்தைப் பொறுத்த மட்டில் அவருக்கு கிடைத்த இன்பங்கள் எல்லாம் முகமூடி அணிந்த துன்பங்கள். அவரைத் தேடி வந்த தேவதைகள் வரங்களோடு , சாபங்களையும் சேர்த்தே கொண்டு வந்தார்கள்.
( தொடரும்)











