The Talkie
Thursday, July 2, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home தொடர்கள்

நிவாஸ்- எண்ணங்களில் வண்ணங்களை ஒளிபாய்ச்சிக் காட்டியவர்- ஸ்டார்ட் கேமரா 10

The Talkie by The Talkie
July 2, 2026
in தொடர்கள், ஸ்டார்ட் கேமரா
A A
0
நிவாஸ்- எண்ணங்களில் வண்ணங்களை ஒளிபாய்ச்சிக் காட்டியவர்- ஸ்டார்ட் கேமரா 10
Share on WhatsappShare on FacebookShare on Twitter

Author Icon அகிலா ஸ்ரீதர்

சினிமாவின் துவக்கக் காட்சிகளில் ஏதேனும் ஒரு கோவிலின் கோபுரத்தை மங்களகரமாகக் காட்டிக் கொண்டிருந்த காலம். 

அப்போது பதினாறு வயதினிலே படம் வெளியானது. முதல் காட்சியே  செந்தூரப்பூவே பாடல் பின்னணியில் சோகமாக ஒலிக்க  மஞ்சள் நிறப் பூக்களின் தோட்டமும், கிராமத்து வயல் வெளியும், அசைந்தாடும் கதிரும்,  மரத்தின் இரு கிளைகளின் வழியே பெரிய ஆற்றையும், இலைகளிலிருந்து கண்ணீர் போல  சொட்டும் நீரையும் காண்பிக்கும் கேமரா அத்துடன் ரயில்நிலையத்தில் சோகமாக காத்திருக்கும் ஶ்ரீதேவியையும், அவரது அழகிய கண்களின் க்ளோஸ் அப் பையும்   காண்பித்தது. அட இது வேறு விதமான படம்.  இது வேறு விதமான ஒளிப்பதிவு என்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்தப் படத்தின் இயக்குனர் பாரதிராஜா… ஒளிப்பதிவாளர் நிவாஸ்.

செயற்கையான செட்டுகளுக்குள்ளும்,  மிகையான ஒப்பனைகளிலும் கட்டுண்டு கிடந்த தமிழ் சினிமாவை அதன் அசலான கிராமத்து மண்ணுக்கும், எதார்த்தமான மனிதர்களிடமும் கொண்டு சேர்த்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா என்றால், அவரின் அழகான திரைமொழியின் கண்ணாக தனது கேமராவோடு பக்கபலமாக நின்றவர் ஒளிப்பதிவாளர் நிவாஸ். பாரதிராஜாவின் திரைப்படங்களின் கதைக்களங்கள் வெறும் பின்னணியாக மட்டும் இல்லாமல், கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே பயணிப்பவை.

நிவாஸ் பிறந்தது கோழிக்கோட்டில், தேவகிரி தூய ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார். Rஅடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் டிப்ளமோ முடித்த பி. எஸ். நிவாஸ், தொடக்கத்தில் ‘குட்டியேடத்தி செம்பருத்தி,  தாகம், மப்புசாக்‌ஷி, ஸ்வப்னம் போன்ற மலையாளப் படங்களிலும்,  ஒளிப்பதிவாளர் அசோக் குமாரிடமும், ஆபரேட்டிவ் கேமராமேனாகப் பணியாற்றினார்.  பின்னர் ‘சத்யத்தின்டே நிழலில்’  என்னும் மலையாளப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். 

   பாரதிராஜா தனது `மயில்’ என்கிற கதையை முதலில் NFDC  மூலமாக  தயாரிக்கும் முயற்சிகளில் இருந்தார். s.  ஆனால் திடீரென அவர்கள் அத்திட்டத்தைக் கைவிட, தான் அப்படத்தைத் தயாரிப்பதாக தயாரிப்பாளர் ராஜ்கண்ணு கூறுகிறார். ஆரம்பத்தில் அதை கருப்பு-வெள்ளைத் திரைப்படமாகத் தான் எடுப்பதாக இருந்தது. முதலில் அவர் பாலுமகேந்திராவிடம் தான் கேட்கிறார். அப்போது அவர் மிகவும் பிசியாக இருந்ததால், அவரால் வர முடியவில்லை.  அப்போது ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் அறிமுகமான நண்பர் நிவாஸ், அப்படத்தை மிகக் குறைந்த செலவில்  ORWO  ஃபிலிமில் வண்ணப்படமாகவே எடுக்கலாம் என்று  பாரதிராஜாவிடம் கூற,  அதைக் கேட்டு வியந்த பாரதிராஜா அவரையே ஒளிப்பதிவாளராக நியமிக்கிறார். நிவாஸ் ORWO ஃபிலிமை உபயோகித்துப் படமெடுக்க, புத்தகம் வாங்கிப் படித்து தயாரானதாக பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இப்படித் தான் மலையாளத் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த நிவாஸ் தமிழ்த் திரையுலகிற்கு வந்தார்.

குறைந்த பட்ஜெட் படம் கறுப்பு வெள்ளையில்தான் பண்ண முடியும் என்கிற நிலையில், வண்ணப்படத்தையே குறைந்த பட்ஜெட்டில் , மிகவும் தரமானதாக உருவாக்க என்னால் முடியும் என்று சொல்லி அதனை சாதித்துக் காட்டியவர் நிவாஸ்…`16 வயதினிலே’ படம் வெளிவந்ததும், யார் இந்த பாரதிராஜா என்று வியந்தவர்கள் , கூடவே ‘யாரு இந்தக் கேமராமேன்?” என்றும் கேட்டார்கள். பாரதிராஜா- நிவாஸ் கூட்டணி உருவாக்கிய மேஜிக் `பதினாறு வயதினிலே’ படத்தில் துவங்கி `கல்லுக்குள் ஈரம் வரை ‘ நீடித்தது.

பதினாறு வயதினிலே, பாரதிராஜாவின் முதல் படம். ஆனால் நிவாஸ் அதற்கு முன்னரே மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். ‘மோகினியாட்டம்’ எனும் மலையாளப்படத்துக்கு தேசிய விருது வாங்கி இருந்தார்.

இருவரும் இணைந்த முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தனர்.

கிராமத்து நிலப்பரப்பை அதன் இயல்புத்தன்மை குறையாமல் செலுலாய்டில் படமாக்கினார் நிவாஸ்….

 குருவம்மாளும், சப்பாணியும் சந்தைக்கு நடந்து செல்லும் வழியிலும், மயிலும் அவள் தோழிகளும் சினிமா பார்க்க நடந்து செல்லும் காட்சியிலும் வைட் ஆங்கிளில் அந்த கிராமத்தின் அழகைப் பதிவு செய்திருப்பார்.

‘மஞ்சக் குளித்து’ பாடலில் கிராமத்தின் மஞ்சத்தண்ணி ஊத்தும் கிராமத்துத் திருவிழா காட்டப்படும். . அந்தப் பாடல் காட்சியின் போது  நிவாஸின் கேமரா  மேடான பகுதியில் இருந்து கிராமத்துக் களியாட்டத்தை அங்குமிங்குமாக  நகர்ந்து நகர்ந்து ( Panning )   படம் பிடித்திருக்கும் விதத்தில் அந்தப் பாடலின் கொண்டாட்ட உணர்வும், அந்தக் கிராமத்தின் அழகும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்த உற்சாக மனநிலையும் கேமரா அசைவுகளிலேயே வெளிப்படும். (  பல ஆண்டுகள் கழித்து வந்த நாயகன் திரைப்படத்தில் ‘அந்தி மழை மேகம்’ எனும் பாடலும் இதே மாதிரியான பாடல்தான். ஆனால் டெக்னிகல் வசதிகள் பெருகிய பின் எடுக்கப்பட்ட பாடல் அது.)

தனது திருமணத்திற்காக ஊருக்குச் செல்லும் டாக்டரைத் தேடி அதிர்ச்சியில் ஓடி வரும் ஶ்ரீதேவிக்கும், வண்டியிலிருக்கும் டாக்டருக்குமான காட்சியில் மாட்டு வண்டிக்குள் கேமராவை வைத்து  முன்னணியில் டாக்டரின் முகம் இருட்டாகவும், ஓடி வரும் ஶ்ரீதேவியின் முகம் இருளிலும், ஒளியிலுமாக மாறி மாறி வரும்படி எடுக்கப்பட்டிருக்கும். இருவருக்கும் இடையே இருக்கும் அந்தஸ்து இடைவெளியை விஷுவலாகவே காட்டி இருப்பார்கள்

கிராமத்தைச் சுற்றியே படமெடுக்கிறார் பாரதிராஜா என்கிற விமர்சனத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் “சிகப்பு ரோஜாக்கள்” என்கிற திரைப்படத்தை முழுக்க சென்னை நகரின் பின்னணியில் இயக்கினார் பாரதிராஜா. கிராமத்தை எடுக்கும்போது  பளீரென்ற வெளிச்சத்தில் சூரியனையே தன்னுடைய லைட்டிங் சோர்ஸாகப் பயன்படுத்திய நிவாஸ், சிகப்பு ரோஜாக்களில் அப்படியே மாறுகிறார்.  `லோ கீ லைட்’ எனப்படுகிற குறைந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி,  இருட்டைக் கதைக்குத் துணையாக்குகிறார்.

சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கான விமர்சனத்தில்,  ஆனந்த விகடன் “நிவாஸின் கேமரா, திருஷ்டி சுற்றிப் போட வைக்கும் அளவுக்கு அமர்க்களப் படுத்துகிறது” என்று குறிப்பிட்டு நிவாஸின் ஒளிப்பதிவைப் பாராட்டியது குறிப்பிடத் தக்கது.

இந்தப் படத்தில் தான் இரவு நேர சென்னையை மிக அழகாக நிவாஸ் காண்பித்திருப்பார்.  பெரும்பாலான காட்சிகளில் கமல் காரோட்டுவார். அப்படி கமல் காரோட்டும் காட்சிகளில்,  சிறு  அசைவு கூட தெரியாதபடி எங்கு கேமரா வைத்து படம் பிடித்திருப்பார் என்று வியக்கும்படி நிவாஸின் கேமரா மொழி பேசியிருக்கும்.   கமலும் ஶ்ரீதேவியும் காருக்குள் பேசியபடி வரும் காட்சிகளில் அவர்கள் முகம் தெளிவாகத் தெரியும்படி லைட்டிங் அமைத்திருப்பார். அதே போல் கமல் ஶ்ரீதேவியை திருமணம் செய்து தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து அந்த வீட்டைச் சுற்றிக் காண்பிக்கும் காட்சியிலும், கேமரா நம்மையும் அவர்களோடு எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும்.  புடவைக்கடையில் ஶ்ரீதேவியை கமல் வந்து சந்திக்கும் காதல் காட்சிகளி, அந்தக் கடைக்குள்ளேயே விதவிதமான கேமரா கோணங்களை வைத்து காட்சிகளில் அலுப்புத்தட்டாத வண்ணம் நிவாஸ் ஒளிப்பதிவு செய்திருப்பார். அதில் கமல் ஓரிடத்தில் சென்று ஶ்ரீதேவியை திரும்பிப் பார்க்கும் ஷாட்டில் கடையில் இருக்கும் கண்ணாடியை புத்திசாலித்தனமாக காட்சியில் உபயோகித்திருப்பார்.

படத்தின் க்ளைமாக்ஸில் , இரவில் ஶ்ரீதேவி தப்பிச் செல்ல , கமல் அவரை துரத்த அந்தக் காட்சிகளில் இளையராஜாவின் இசையோடு நிவாஸின் ஒளிப்பதிவும் சேர்ந்து ரசிகர்களைப் பரபரப்புக்கு உள்ளாக்கும். 

புதியவார்ப்புகள் திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் நிவாஸின் கேமரா விளையாடி இருக்கும். `இதயம்  போகுதே’ பாடலில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் நிலப்பரப்பும்,  பஸ்ஸுக்குள் இருந்து நிலப்பரப்பையும், நிலப்பரப்பில் இருந்து பஸ்ஸையும் காட்டும் விதத்தில் பாடலின் பிரிவுத் துயரை அதிகரிக்கும் விதமாக அப்பாடலுக்கான ஷாட்ஸ் அமைக்கப்பட்டிருக்கும்.

“கல்லுக்குள் ஈரம்” படத்தின் டைட்டில் வரும்போதே, வைக்கோல்கட்டுகளை சுமந்து ஓடும் பெண்கள், உழுது கொண்டிருக்கும் மாடுகள், பறக்கும் பறவைகள், ஆட்டுக்குட்டிகள், ஆற்றின் கரை வழியாக ஊருக்குள் நுழையும் கார்கள் என முழுமையான கிராமத்தை கேமரா  வழியாக நமக்குக் காட்டி விடுகிறார் இயக்குநர் நிவாஸ். ஆம், இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவோடு, இயக்குநர் பொறுப்பையும் ஏற்றார் நிவாஸ். தொடர்ச்சியாக பாரதிராஜாவோடு படங்கள் செய்ததால் கிடைத்த வாய்ப்பு. இதில் இயக்குநர் பாரதிராஜாவையே நடிக்க வைத்து இயக்கியிருக்கிறார் நிவாஸ்.

.

கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் காட்டப்படும்  லொகேஷன்கள் அத்தனை அழகாக இருக்கும். அந்தக் கிராமத்தின் குட்டிச்சுவர்கள் முதல், மணல் பரப்பு,  ஆற்றங்கரை அத்தனையும் மிகுந்த வனப்புடன் காட்டப்பட்டிருக்கும்..  நிஜமாகவே ஒரு கிராமபபுறத்தில் நடக்கும் திரைப்படப் படப்பிடிப்பை கண் முன்னால் கொண்டு வந்திருப்பார். அருணாவின் கண்களுக்காகவே அவரைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். அவருடைய கண்களுக்கு அதிக குளோசப் காட்சிகளை வைத்து, அவரின் உணர்ச்சிகள்  முழுவதையும் கண்களிலேயே காட்டப்பட்டிருக்கும்.  வில்லன் வரும்போது,  கேமரா முன்னால் நகர்ந்து மற்றவர்களின் முகபாவனைகளின் வழியே அவன் ஆபத்தானவன் என்பதைக் காட்டி விடும்.

கிளைமேக்ஸ் காட்சியில் ரவுண்ட் டிராக்கில் பாரதிராஜா தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி எடுக்கப்பட்டிருக்கும்.  ரவுண்ட் டிராக் இல்லாத அந்தக் காலத்திலும் ஏதோ ஒரு உத்தியைப் பயன்படுத்தி அதைச் சாத்தியமாக்கியிருப்பார்.  

“பதினாறு வயதினிலே” படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர்  ஶ்ரீதர் தனது “இளமை ஊஞ்சலாடுகிறது” திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக நிவாஸை அழைத்துக் கொள்கிறார். முக்கோணக் காதல் கதையையும், உறவுச் சிக்கல்களையும் வெளிப்படுத்துகிற அவருடைய படத்தில் நிவாஸின் கேமரா காதல் காட்சிகளில் இளமைத் துள்ளலுடனும், ஆழ்மனதின் அகச்சிக்கல்களைத் திரையில் காட்டுவதாகவும் அமைந்தது.

கதைக்கேற்ப முதலில்  நட்புடன் இருக்கும் கமலையும் ரஜினியையும்  முதலில் நெருக்கமாகவும், விலகல் ஏற்பட்ட பிறகு அவர்களுக்கிடையே இடைவெளி இருக்குமாறும் கோணங்களை அமைத்தார்.

இந்தப் படத்தில் என்னடி மீனாட்சி,    கிண்ணத்தில் தேன் வடித்து , தண்ணி கருத்திருக்கு, ஆகிய மூன்று பாடல்களுமே செட்டில் எடுக்கப்பட்டவை. பாரதிராஜாவின் படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்பில் தன் நேர்த்தியைக் காட்டிய நிவாஸ்  இந்தப் பாடல்களில் தனது இன்னொரு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்….  உமர் கய்யாமின் இன்ஸ்ப்ரேஷனில் உருவாகி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாடலாக   கிண்ணத்தில் தேன் வடித்து பாடல் அமைந்திருக்கும்.,  அரேபியப் பாணியிலான பொருட்கள், , அதன் தன்மைக்கேற்ப வண்ணச் சேர்க்கைகளும்,  லைட்டிங்குகளும்  நிவாஸ் அமைத்து  அசத்தி இருப்பார்.    தண்ணீ கருத்திருக்கு   பாலியள் கிளர்ச்சியை வெளிப்படுத்தும்,  நாட்டுப்புறப் பாடலாக அமைந்திருக்கும்.  அந்தப் பாடலின் வண்ணச் சேர்க்கைகள் அந்த மூடை வெளிப்படுத்தும்

 தன் காதலி தன்னை ஏமாற்றி வேறொருவனுடன் இருக்கிறாள் என்கிற போது மேடையில் கமல் பாடுகிற பாடல் “என்னடி மீனாட்சி” . இதன் பின்னணியில் பல்வேறு வண்ணங்கள், குறிப்பாக கமலின் மனதிலிருக்கும் கோபத்தையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துகிற விதத்தில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  

 படத்தின் ஒரு காட்சியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இறங்கி ஃப்ளாஸ்க் வாங்கிக் கொண்டிருக்கும்போது `ஒரே நாள்’ எனும் பாடல்  ஒலிக்கும். பாடல் ஒலித்தவுடன் மனம் தடுமாறும் ஶ்ரீபிரியா,  மேலிருந்து பார்க்கும் போது, கீழேயிருக்கும் மேஜையின் கண்ணாடி வழியே  ரஜினி இப்படியும் அப்படியுமாக நகர்வதைக் கேமரா காண்பிக்கும்.

அந்தக் காட்சியில் அத்துடன் ஒரு டேபிள் ஃபேனின் , அங்கும் இங்குமாகத் திரும்பும்  அசைவை  வைத்து கமலுடனான நினைவுகளில் தடுமாறிக் கொண்டிருக்கும் ஶ்ரீப்ரியாவையும்,  அவரைக் காதலிக்கும் ரஜினியையும் , அவர்களது உணர்வுகளின் ஊசலாட்டத்தையும், தடுமாற்றத்தையும் அழகாக காட்சிப் படுத்தி இருப்பார்.

முக்கோணக் காதலின் சிக்கலை உணர்த்தி விடும்.  கிளைமேக்ஸ் காட்சியில் கமலுக்கும், ரஜினிக்கும் கோபமான உரையாடல் நிகழ்கையில், அவர்களின் கொந்தளிப்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதத்தில் கேமரா லோ ஆங்கிளில் இருக்கும். பீச் காட்சிகள், ஊட்டியில் எடுக்கப்பட்ட காட்சிகள் என அவுட்டோர் காட்சிகள் எல்லாவற்றிலுமே,  கிடைக்கும் ஒளியில் திறமையாக அந்தக் காட்சிகளுக்கான தன்மையைக் கொண்டு வந்திருப்பார்.

மலையாளச் சினிமாவில் நிவாஸின் பங்களிப்பு இன்னும் ஆழமானது. அங்கு அவர் வெறும் வணிக ஒளிப்பதிவாளராக இல்லாமல்,  மிகத் தீவிரமான கலைப்படைப்பாளியாகத் திகழ்ந்தார்.

மலையாளத்தின் மிக முக்கியமான கலைப் படமான “சுவடுகள்” திரைப்படத்தில்  மனிதர்களின் வறுமையையும், சமூக அவலங்களையும் நிவாஸ் ஆவணப் படப் பாணியில் படம்பிடித்தார். செயற்கை ஒளியமைப்பை முற்றிலுமாகத் தவிர்த்து, வீடுகளின் ஓட்டை வழியே வரும் வெளிச்சம் மற்றும் சமையலறைப் புகைக்கு நடுவே கசியும் ஒளியை மட்டுமே கொண்டு காட்சிகளை வடிவமைத்தார். இது மலையாளச் சினிமாவுக்கு ஒரு புதிய யதார்த்த அழகியலைக் கற்றுக் கொடுத்தது.

‘சத்தியத்தின்டே நிழலில்” படத்திற்குத் திரைக்கதை, வசனமெழுதிய ஶ்ரீகுமரன் தம்பி, பின்னர் தான் இயக்கிய “மோஹினியாட்டம்” திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக நிவாஸை அழைத்துக் கொண்டார்.

இந்தப் படம் பெண்களின் உடல் மீதான சுரண்டலையும், அந்தப் பெண்கள் அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதையும் மிகவும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்திய திரைப்படம். அதனாலேயே அவர்களின் இருண்ட வாழ்வை லோ கீ லைட்டிங் மூலம் காண்பித்திருப்பார் நிவாஸ்.  

ஒன்றுமறியாத அப்பாவிப் பெண்ணான லஷ்மி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையால் வீட்டை விட்டு வந்துவிட, நடனமாடும் அனுசுயா அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். மெல்ல மெல்ல ஆண்களின் சுரண்டலைப் புரிந்து கொள்ளும் லஷ்மி, அதற்கு எதிராக துணிந்து நிற்கிறார். உணர்ச்சிகள் பொங்கும் லஷ்மியின் பல்வேறு பரிமாணங்களை தனது கேமராவால் அழகியலோடு வெளிப்படுத்தியிருப்பார் நிவாஸ்.

`மோகினியாட்டம் ‘ திரைப்படத்தில்  ` ஆரன்முல பகவான்டே’ எனும் ஒரு பாடல் காட்சியில் ஒரே ஒரு மரத்தை மட்டுமே பின்னணியாகக் கொண்டு, ஐந்து நிமிடப் பாடலைச் சலிப்பில்லாமல், கவித்துவமாகப் படம்பிடிப்பது என்பது கேமராமேனுக்கு மிகப்பெரிய சவால். அதை நிவாஸ் தனது அசாத்திய ஒளிப்பதிவு உத்திகளால் சாத்தியமாக்கினார்:

ஆலமரத்தின் பிரம்மாண்டத்தையும், அதன் பழமையையும் காட்டுவதற்காக நிவாஸ் கேமராவைத் தரையோடு தரையாக மிகக் கீழே வைத்து, மரத்தின் கிளைகளை நோக்கி லோ-ஆங்கிள் கோணங்களில் படம்பிடித்தார்

எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல், ஆலமரத்தின் அடர்ந்த இலைகள் மற்றும் விழுதுகளுக்கு நடுவே சல்லடையாக வடிந்து வந்த சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தினார்.  அந்த ஒளி கீழே ஆற்றில் வெள்ளிக் காசுகள் போல் பிரதிபலிப்பதை அழகியலோடு காட்சிப்படுத்தியிருப்பார்.  மரத்தில் இருக்கும் விழுதுகளையும், இலைகளையும் கேமராவிற்கு மிக அருகில் ஃபோர்கிரவுண்ட் ஃபிரேமாக ஆக வைத்து, நாயகனும் நாயகியும் நடக்கும்போது கேமராவையும் நகர்த்தி அதன் பிரம்மாண்டத்தை முழுவதுமாக பதிவு செய்திருக்கிறார் நிவாஸ்.

சில காட்சிகளில் அந்த வீட்டிலிருக்கும் பல்வேறு நுட்பமான கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், நடன சிற்பங்கள் வழியாகவே வசனமின்றி காட்சியின் தன்மையை உணர்த்தியிருப்பார். கலைநுணுக்கம் நிறைந்த இந்தப் படத்தின் சிறந்த ஓளிப்பதிவுக்காகவே தேசிய விருது பெற்றார் நிவாஸ்.

நிவாஸின் கலை நுணுக்கம் வாய்ந்த ஒளிப்பதிவுக்கு சான்றான இன்னொரு  திரைப்படம் “சலங்கை ஒலி”.

கமல் ஹாசன் மழையில் நனைந்துகொண்டே கிணற்றின் சுவரிலும், வழுக்கும் தரையிலும் ஆடும் அந்தப் புகழ்பெற்ற “தகிட ததிமி” பாடல் காட்சியில் நிவாஸ் கேமராவை ஒரு தனி மனிதப் பார்வையாகவே மாற்றியிருப்பார். கட்-ஷாட்கள் அதிகமாக இருந்தால் நடனக் கலைஞரின் உடலசைவின் தொடர்ச்சியும், அந்த உணர்ச்சியின் வேகமும் கெட்டுவிடும் என்பதை நிவாஸ் உணர்ந்திருந்தார்.

கேமராவைத் டிராக்கிங் க்ரேன் மற்றும் ஹேண்ட்ஹெல்டு முறையில் கமலின் கால்களுடனும், அவரது சுழற்சிகளுடனும் சேர்த்தே நகர்த்தினார். கமல் கிணற்றின் விளிம்பில் ஏறி ஆடும்போது, கேமரா மிகக் கீழே இருந்து அவரது ஆளுமையைப் பிரம்மாண்டமாகக் காட்டும். அதே சமயம் தரையில் வழுக்கி விழும் தருணத்தில் கேமரா அவரோடு சேர்ந்து கீழே இறங்கும். இது கமலின் அசாத்தியமான நடனத் திறமையையும், கதாபாத்திரத்தின் அத்தருணத்து உணர்ச்சிப் பெருக்கையும் எடிட்டிங் தடையின்றி முழுமையாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தது.

கமலும், ஜெயப்பிரதாவும் காதலை நேரடியாகச் சொல்லாமல் கண்களாலேயே உணர்த்தும் “மௌனமான நேரம்” பாடல்  வள்ளுவர் கோட்டத்தின் தேர் அருகே படமாக்கப்பட்டிருக்கும். இரவின் மென்மையான ஒளியில் தேரை ஒட்டிய சலவைக்கல்லில் கமல், ஜெயப்பிரதாவின் பாதங்களும், நிழல்களும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் விதம் ஒரு கவிதையை ஒத்ததாக இருக்கும்

திரில்லர் வகைப் படங்களில் மைடியர் லிசா என்னும் பேய்ப் படத்திலும் நிவாஸ் பணியாற்றியிருக்கிறார். இதில் நிவாஸின் கேமரா அசைவுகள் பார்வையாளர்களைப் பயத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றன.

ஒரு மர்மமான உருவம் பின் தொடர்வதைக் காட்ட, கேமராவையே அந்த உருவத்தின் கண்ணாக மாற்றும்  “பாயிண்ட் ஆஃப் வியூ” உத்தியை இதில் கையாண்டார். காட்டின் நடுவே கேமரா வேகமாக நகரும் அந்த அசைவுகள் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தன.

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் நிவாஸ் மற்றும் பாரதிராஜாவைப் பற்றிய தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

“ஸ்டூடியோவில் ஷூட் செய்து கொண்டிருந்த சினிமாவை கிராமத்துக்குக் கூட்டிட்டு வந்தது பாரதிராஜா என்று பெருமையாகச் சொல்கிறோம். அந்தப் பெருமைக்கு அப்போது பக்கபலமாக இருந்தது நிவாஸ் சார். எப்போதுமே ஒரு இயக்குநரின் சிந்தனைக்கு ஒரு கேமராமேனின் ஒத்துழைப்பு மிக அவசியம். அப்படி அவர்களுக்கிடையே ஒரு சிறந்த புரிதல் இருந்த து. கேமராவைத் தூக்கிக் கொண்டு வெளியில் செல்ல லாம் என்கிற நம்பிக்கையை நிவாஸ் பாரதிராஜாவுக்குக் கொடுத்திருக்கிறார். அன்று இருந்த ஃபிலிம்ஸ் மிகவும் ஸ்லோ-ஸ்பீட் ஃபிலிம்ஸ்.அதற்கு அதிகமான லைட் வேண்டும். இன்று டிஜிட்டலில் 5000 என்றெல்லாம் வந்து விட்டது. அன்று அதன் ஸ்பீட் 50 தான்,அதற்கு நிறைய வெளிச்சம் தேவைப்படும். அதனால்தான் செட்களில் லைட்டிங் செய்து எடுத்தார்கள். அப்படியான காலத்தில் ஒரு தொழில்நுட்பத்தை வைத்து தைரியமாக வெளியில் போய் எடுக்கலாமென்கிற நம்பிக்கையை நிவாஸ் கொடுத்தாரென்பது மிக முக்கியமானது. அன்னக்கிளி படமும் அந்தக் காலகட்டத்தில்தான் வந்தது.  ஆனால் அப்போது கருப்பு-வெள்ளைப் படமாக மிக குறைந்த பட்ஜெட்டில் அன்னக்கிளி படம் உருவாக்கப்பட்டது.  ஆனால் முதன்முதலில் இவர்கள்தான் குறைந்த பட்ஜெட்டில்  வண்ணப் படமாக 16 வயதினிலே வை  முதலில் எடுத்தார்கள். ஒரு கிராமத்தின் அழகை இயற்கையாக இவர்கள் திரையில் கொண்டு வந்தார்கள்.

எப்போதுமே  பூ, பறவைகள், விலங்குகள் என அழகு சார்ந்த விஷயங்களை ஃப்ரேமில் பாரதிராஜா கொண்டு வந்து விடுவார். அட்டகாசமான சன்லைட், சன்செட் காட்சியை எப்படியும் நிவாஸ் படத்தில் கொண்டு வந்து விடுவார். கதையோடு சேர்த்து அதைக் கொண்டு வந்து விடுவார்.

பொதுவாக காலை ஒன்பது மணிக்குள் அல்லது மூன்று மணிக்கு மேல் என்று தான் கேமராமேன்கள் ஷாட் வைப்பார்கள். நண்பகல் வெயிலில் எடுக்க மாட்டார்கள். ஆனால் பாரதிராஜா படங்களில் நல்ல வெளிச்சமாக இருக்கும். கிராமத்து மனிதர்களுக்கு வெயில் பழக்கமான ஒன்று என்பதால் வெயிலிலும் ஷுட் செய்வார்கள். இயற்கை ஒளியை அப்படியே பயன்படுத்திக் கொண்டார் நிவாஸ். அதற்கு அவருடைய  DFT படிப்பு உதவியது.

பாரதிராஜா படங்களில் காட்சிக்கேற்ப நிறைய ஜூம் இன், ஜூம் அவுட் செய்வார். அப்போதுதான் ஜூம் லென்ஸ்கள் வந்திருந்தன. நிறைய நீளமான டிராலிகளைப் பாரதிராஜா பயன்படுத்துவார். வழக்கமாக ஒரு டிராலி செட் என்பது ஆறு டிராக் இருக்கும்.  சில சமயங்களில் இவர் பனிரெண்டு டிராக்கெல்லாம் பயன்படுத்துவார். குறிப்பாக பதினாறு வயதினிலே படத்தில் பட்டத்தை டாக்டரிடமிருந்து வாங்க கமலை ஶ்ரீதேவி அனுப்புவார். அது முழுவதும் சிங்கிள் ஷாட்டாக நிவாஸ் எடுத்திருப்பார்.  கதை நடக்கும் நிலப்பரப்பை முழுவதுமாகப் பதிவு செய்திருப்பார்.

சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் ஸ்லோ-ஸ்பீட் ஃபிலிம் என்றாலும், அதை டெக்னிக்கலாக புஷ் பிராசஸிங் முறையில் செய்தார்கள் என்று சொல்வார்கள்.  அதைத் தனிக்கவனமெடுத்து செய்ய வேண்டும்.

fore groundல் ஒருவர் இருக்க, பின்னால் ஒருவர் நிற்பதும் தெரியும்,  இதை  fore perspective என்பார்கள்.  அப்போதிருந்த படங்களில் இதையெல்லாம் அவர் செய்திருக்கிறார்.

ஒரு படத்தின் சினிமாட்டோகிராபி என்பதை அதன் லைட்டிங்கை வைத்து தான் மதிப்பிட வேண்டும்.  ஏனெனில் முழுக்க அது மேமராமேன்களின் முடிவு. ஒளிப்பதிவில் இருவகை இருக்கிறது. அழகியல், ரியலிசம். நிவாஸின் படங்களில் பெரும்பாலும் இயற்கையாக கிடைத்த லைட் சோர்சைப் பயன்படுத்தினார். அது ரியலிசம் வகையைச் சேர்ந்தது.

பாரதிராஜா படங்களெல்லாம் independent படங்கள். உலகளவில் பல இயக்குநர்களின் முதல் படங்களும் independent படங்கள் தான். இன்று Obsession படத்திற்குப் பிறகு எல்லோருமே இதைப் பற்றிப் பேசுகிறார்கள். சின்ன டீம், அவசியமான கருவிகள், குறைந்த ஆட்கள் எனப் போய் எடுப்பதுதான் independent படங்கள். Panindia படங்களை எடுப்பவர்கள் independent படங்களுக்குத் திரும்ப வேண்டும்.

இந்த நேரத்தில் பாரதிராஜாவைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன்.

செட்களில் அவர் நிறையக் கோபப்படுவார் என்று சொல்வார்கள். ஆனால் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நான் வேலை செய்த போது அவரை அப்படிப் பார்க்கவில்லை. எல்லாரையும் நெருக்கமாகத் தான் கூப்பிடுவார். யாரையும் மிகவும் ஃபார்மலாக அழைத்து நான் பார்க்கவில்லை. அவர் எப்போதுமே ஒரு எளிய கிராமத்து மனிதராகத் தான் இருந்தார்.  செட்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். ஃப்ரேமில் எதையாவது வைக்க வேண்டும், நகர்த்த வேண்டுமென்றால் அவரே எழுந்து போய் தான் செய்வார். எவரிடமும் சொல்ல மாட்டார். எல்லா நடிகர்களுக்கும் இவர்தான் நடிக்கச் சொல்லித் தருவார்.  ஒரு வீடு பெருக்கற சீன் என்றாலும் இவர்தான் பெருக்கி சொல்லித் தருவார். மொத்த ஃபிரேமையும்  தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்குநராக பாரதிராஜா இருந்தார்.  உடல்நிலை சரியில்லையென்றாலும் ஷூட்டிங் வந்துவிட்டால் மிகவும் உற்சாகமாக இருப்பார், எத்தனை மணிக்கு ஷுட்டிங் பேக் அப் செய்தாலும் அன்று என்ன சீன் எடுத்தோம், எடுக்காமல் விட்டது என்ன என்பதையெல்லாம்  தவறாமல் அவர் ஒரு நோட்டில் எழுதி வைப்பார்.”

செயற்கையான ஆர்க் விளக்குகளைத் தவிர்த்து, சூரிய ஒளி, ஜன்னல் வழியே கசியும் வெளிச்சம், அல்லது ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியை மட்டுமே கொண்டு காட்சிகளை அமைப்பதில் நிவாஸ் வல்லவர்.

காட்சியில் முன்னால் நிற்கும் முதன்மைக் கதாபாத்திரம் மட்டுமன்றி, பின்னணியில் இருக்கும் இயற்கையோ, மனிதர்களோ, அல்லது ஒரு எளிய சுவரோ கூடக் கதையைச் சொல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

ஒளிப்பதிவாளர், இயக்குநர் எனப் பன்முகத் தன்மையோடு விளங்கிய பி.எஸ். நிவாஸ், ஒரு காட்சியை அழகாகக் காட்டும் வெறும் தொழில்நுட்பக் கலைஞராகத் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. மாறாக, லென்ஸ்கள், ஒளியின் கோணங்கள் மற்றும் நிழல்களின் அடர்த்தி ஆகியவற்றின் வழியே திரைக்கதையின் ஆன்மாவைத் திரையில் எழுதியவர். தமிழ் மற்றும் மலையாளச் சினிமாக்களின் காட்சிப் பரிணாம வரலாற்றில், நிவாஸின் கேமரா கோணங்கள் என்றும் அழியாத எதார்த்தத்தின் தடங்களாக நிலைத்திருக்கும்.

Author Image

அகிலா ஸ்ரீதர்

மொழிபெயர்ப்பாளர். உதவி இயக்குநர். எழுத்தாளர். ஆங்கிலப் படங்களுக்கான வசனங்களை சப்டைட்டில் செய்யும் பணியிலும் இருக்கிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post
கரு உரு 02

கரு உரு 02

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026
காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

காலத்தின் முன்னால் தோற்றுப்போன சூப்பர்ஹிட் படங்கள்

July 2, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ
மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

மாற்று சினிமாவின் புதிய வெளிச்சம்: ‘ஹபீபி’

July 2, 2026
தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

தோல்வியில் விழுந்து, வெற்றியில் எழுந்து….

July 2, 2026
கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

கண்ணகியின் சிலம்பும், பாக்கீஸாவின் தங்கக் காப்பும்

July 2, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?