நாராயணி கண்ணகி
திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி ‘படம் எப்படி?’ என்பதுதான். இந்த வினாவுக்குள் அடங்கி இருக்கும் சுவைகள் என்னென்ன? ‘படம் எப்படி?’ இது ஒரே ஒரு கேள்வி அல்ல, இதனுள்ளே நூறு கேள்விகள் இருக்கின்றன. ஒரு நிமிடம் கண்களை மூடி உள்ளே திரையிட்டுப் பார்த்தால் உங்களின் உள் பார்வையிலிருந்து அந்த நூறு வௌவால்கள் பறந்து வரும்! முதல் காட்சி முடிந்து முதல் ஆளாக வெளியே வருபவர் பறக்க விடும் சொல் அலைகள்தான் உலகம் பூராவும் பறக்கக்கூடிய நேர்மறை, எதிர் மறைத் தாக்கல்கள்!
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த படத்தை சிம்மாசனத்தில் உட்கார வைப்பார்கள், பிடிக்காத படத்தை குழி தோண்டிப் புதைத்து, உடன் பாலூற்றி காரியம் செய்வார்கள்.
‘படம் எப்படி?’
நூறு கிளைக் கேள்விகள் அடங்கிய இந்த விருட்சத்திற்கு பதில்கள் என்ன?
‘கதையே இல்லை.’
‘கதை புரியல.’
‘வளவளன்னு இழுத்துனு போறான்.’
‘இடைவேளை வரைக்கும் சாகடிக்கிறான். செகண்ட் ஆஃப் ஓகே.’
‘இடைவேளையிலயே கதை முடிஞ்சிடுது. அதுக்கு மேல வேஸ்ட்.’
‘தனுஷ் ஒருத்தரே படத்தைத் தூக்கிச் சுமக்கறார். நடிப்புக்காகப் பாக்கலாம்.’
‘ஒரே ஒரு ஃபைட். இருபது நிமிசம்! கண்ண அப்படி இப்படி அசைக்க முடியல. கொடுத்த காசுக்கு அதுக்கே சரியா போச்சு.’
‘ஸ்கிரீனே பாக்க வேணாம். கண்ண மூடிட்டு காத மட்டுமே தெறந்து வெச்சுக்கலாம். அற்புதமான மியூசிக்.’
‘ஓப்பனிங்ல இருந்து எண்டு வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தேன்.’
‘வில்லேஜ நேர்ல பாத்த மாதிரி இருந்துச்சி. செம போட்டோகிராபி.’
இப்படியே பதில் பரோட்டோக்களைத் தின்ன ஆரம்பிச்சா நூறு கோடுகள் போட்ட பிறகும், மறுபடியும் நூறு போட வேண்டி இருக்கும். குக்கர் சோறா இருந்தாலும் ஒரு குக்கர் சோறுக்கு ஒரு சோறு பதம்! பத்துப் பருக்கைகளை வைத்து விட்டேன். சினிமாவில் உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கிறது? பட்டியலை நிரப்பி கொள்ளுங்கள்! ‘படம் எப்படி?’ என்ற கேள்விக்கு நீங்களே மீதம் 90 பதில்களை எழுதிக்கொள்ளுங்கள்.
இங்கே சொல்ல வருவது, ஓடும் படமா ஓடாத படமா என்பதை அல்ல. எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அது ‘எப்படி உருவாகிறது? என்பதைத்தான். உருவாகிறது என்பதைவிட எப்படி கருவாகிறது என்பதைத்தான். அந்தக் கரு எப்படி ‘திரு’ ஆகிறது என்பதைத்தான்.
கதையின் வித்திற்கு ‘கரு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அப்படி பெயர் வைத்தவர்களைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறேன். சதைக் கருவானது தாயின் கருவறையில் பத்து மாதங்கள் வளர்கிறது. ஒரு படைப்பாளியின் கதைக் கருவானது அவரின் புத்தியில் பல மாதங்கள் வளர்கிறது. முதலில் இதயம் உருவாகிறது, மூளை, தலை, கண்கள், கால்கள், கைகள் எல்லாம் உருவாகின்றன.
அந்தக் கரு வளர்ந்து உருவாய், திரை வடிவாய் மலரும் உன்னதமான இடம்தான் ‘கதை விவாதக் களம்.’
பழி வாங்கும் கதை என்று வைத்துக் கொள்ளுங்கள். திரைக்கதை சரியாக இல்லையென்றால், ஹீரோ வில்லனைப் பழி வாங்குவதற்கு பதிலாக, பாவம்! படம் பார்க்க வந்த ஜனங்களைப் பழி வாங்கின மாதிரி ஆகி விடும்.
கதாநாயகன், வில்லன் என்று கதை வந்தாலே அது பழி வாங்கும் கதையாகத்தான் இருக்கும். சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே அப்பாவைக் கொன்றவனை மகன் பழி வாங்குவான். இந்தக் கதைக் கருவில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வந்திருக்கும். கதை விவாதங்களில் செய்யும் விசயம் யாதெனில், ஏற்கெனவே வெளிவந்த திரைப்படங்களின் சாயல் தெரியாமல் புதிய புதிய வழிமுறைகளில் பழி வாங்க வேண்டும். அது ரசிக்கும்படியாகவும் ஜொலிக்க வேண்டும்.
நூறு திரைப்படங்கள் என்ன ஆயிரம் பழி வாங்கும் படங்கள் இருந்தாலும், எப்போதும் புதுமையாகத் தெரியும் ஒரு சில படங்களை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பா அம்மாவைக் கொன்ற வில்லன்களை மகன் பழி வாங்கும் கதைதான். வழக்கமானதாக இல்லாமல், யோசித்து யோசித்து, யாராலும் கற்பனை செய்ய முடியாத சம்பவங்களைக் கோத்து இருப்பார்கள். திரைப்படக் கதை மேதைகள் கதை விவாதத்தில் கதா அறிவை முட்டி மோதிப் பிழிந்தால் மட்டுமே ஈடு இணையற்ற திரை நகர்வுகள் வரங்களைப் போல் கிடைக்கும். இரண்டு கமல்ஹாசன்கள், அதில் ஒருவர் குள்ளமாக தோன்றுவார். இது சொல்வதற்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அப்பு கமல் சாட்சாத் குள்ளமானவராகவே தோன்றுவதற்கு எத்தனை மாதங்கள் கதை விவாதம் பண்ணி இருப்பார்கள்.
அப்பு கமல் பழி வாங்குவார். பழியெல்லாம் எந்தப் பாவமும் செய்யாத அப்புராணி கமல் மீது விழும். இதில் காதல், காதல் தோல்வி, சிரிப்பு, அழுகை, சென்டிமென்ட் எல்லாம் உண்டு. இதுவரை எந்தவொரு பழி வாங்கும் கதையிலும் வராத பின்னணியாக சர்க்கஸ்தனம் வரும். கோமாளித்தனமான ஹீரோயிசம்!
அப்பாவைக் கொன்றவனை மகன் பழி வாங்கும் இன்னொரு அற்புதமான கதை! அதுவும் உலக நாயகனின் திரைவண்ணம்தான் என்பதைச் சொல்லிப் பெருமை அடையலாம். நாயகன்! ஒரு போலீஸ் அதிகாரியை நியாயமான காரணங்களுக்காகக் கொன்று விடுவார் மும்பை தாதாவான கமல்ஹாசன். போலீஸ் அதிகாரியின், மன நலம் குன்றிய மகன், படம் முழுவதும் அப்பாவியாக நாயகனின் கூடவே வரும் அவன், அப்பாவின் துப்பாக்கியாலேயே கமல்ஹாசனைச் சுட்டுப் பழிவாங்குவான். இதில் ஆச்சர்யமான, அதிசயமான திருப்பம் என்னவென்றால் கதையின் நாயகன் கமல், வில்லன் போலீஸ் அதிகாரி, வில்லனின் மகன் கதாநாயகனைப் பழி வாங்குவான். ஹீரோ பழி வாங்கும் கதைகளுக்குதான் நாம் பழகி இருக்கிறோம். வில்லனின் மகன் ஹீரோவைப் பழி வாங்கும் புதுமையை ரசிகர்கள் வரவேற்றார்கள்.
நண்பனைக் கொன்றவனை நண்பன் பழி வாங்கும் கதைகளும் நூற்றுக்கணக்கில் வெளி வந்துள்ளன. வித்தியாசமான இரண்டு கதைகளை பந்தியில் வைத்தே ஆக வேண்டும்.
பிதாமகன். சியான் விக்ரம், சூர்யா இருவரும் நண்பர்கள். இருவருமே சராசரி நாயகர்கள் இல்லை. ஹீரோயிசம் இல்லாத ஹீரோக்கள். விக்ரம் எதுவுமே தெரியாத, அறிவுக்குச் சம்பந்தமே இல்லாத பிராணி போன்ற கதாபாத்திரம். எந்த உணர்ச்சிகளும் அற்ற மனுசன். சூர்யா சின்னஞ்சிறு குற்றங்கள் செய்து பண மோசடி செய்யும் பேர்வழி. இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் நண்பர்களாகிவிடுகிறார்கள்.
சூர்யாவை வில்லன் கொன்றுவிடுகிறான். சீயான் விக்ரமோ நல்லது எது, கெட்டது எது என்று தெரியாத ஆசாமி. வெட்டியானாக இருப்பதால் எந்தப் பிணத்தைப் பார்த்தாலும் கலங்காத கல்லுளி. ஆனால் நண்பனைப் பிணமாக பார்த்து, தாங்க முடியாமல் கதறிக் கதறி அழுகிறார். வழக்கமான கதைகளில் வில்லனை அடித்துக் கொல்வார்கள். கத்தியால் வெட்டிக் கொல்வார்கள். துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார்கள். பிதாமகன் படத்தில் ஹீரோ வில்லனின் குரல்வளையைக் கடித்து ஆத்திரம் தீர இரத்தம் குடிப்பார். வில்லன் துடிதுடித்துச் சாவார். கிராமத்தில் பகையாளிகள் சண்டை பிடிக்கும் போது, ‘உன் குரவளையைக் கடிச்சு இரத்தத்தைக் குடிச்சாதான் ஆத்திரம் தீரும்’ என்று சொல்வார்கள். பிதாமகன் படத்தில் அதைப் பழி வாங்கும் சம்பவமாக வைத்திருப்பார்கள்.
கதை விவாதம் எதற்காகத் தேவை என்றால், படம் எடுப்பவர்கள் இதைவிட சிறந்த பழி வாங்கும் ட்ரீட்மென்ட்டை கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே ‘படம் எப்படி?’ என்று கேட்டால் ‘சூப்பர்’ என்று கொண்டாடுவார்கள்.
நண்பனைக் கொன்ற வில்லனைப் பழி வாங்கும் நண்பனின் கதை இன்னொன்று…
மெட்ராஸ். நகரத்து நடுத்தர மக்களின் வாழ்வில் கலந்த, அரசியல் பின்புலத்தில் பகைக் களம்! அரசியல் காரணமாக நண்பன் கொல்லப்படுகிறான். கொன்றவர்கள் யாரென்றே தெரியாது. ஒரு சாதாரணக் குடும்பத்து ஹீரோ, எப்படி வில்லனைக் கண்டுபிடித்துக் கொல்கிறார் என்பது கதை. நகைச்சுவை, இளமை, காதல், விளையாட்டு, வீரம் எல்லாமே நேர்த்தியாக அமைந்திருக்கும். இதில் அடிப்படை கதை என்பது ஒரு பொதுவான சுவரை யார் பயன்படுத்தி கொ(ள்)ல்வது என்பதுதான், வில்லனைப் பழி வாங்குவது எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியமானதாக இருக்கும், சுவரைக் கையகப்படுத்தும் காட்சி.
சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் ‘பாட்ஷா’
பெயரில் மட்டுமின்றி, பாத்திர வார்ப்பிலும் மாணிக்கமாக ஜொலிக்கும் ரஜினிகாந்த், நண்பன் கொலையுண்ட பிறகு மாணிக் பாட்ஷாவாக மாறி பழி வாங்கும் கதை. அடிதடிக்கு பயந்த சாதாரண ரிக்சாக்காரனாகத் தோன்றும் ரஜினிகாந்த். பிளாஷ்பேக்கில் பாம்பே அதிரும் கேங் லீடராக மிரட்டுவார்.
காதலியைக் கொன்றவனைப் பழி வாங்கும் தமிழ்த் திரைப்படங்களில் பிரமிப்பை உண்டாக்கியது என்றால் கஜினி!
கதாநாயகனுக்கு தலையில் அடிபட்டு, பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எந்த ஞாபகமும் இருக்காது, இந்தக் கதையின் கரு என்பதாக இந்த ஒரு புள்ளி மட்டுமே இருந்திருக்கலாம். கதை விவாதத்தில் அந்தப் புள்ளியானது மயில் தோகையைப் போல் விரிந்திருக்கும். மிக அழகான புதிய காதல் களம், அதிர்ச்சியூட்டும் காதலியின் கொலை, எளிதில் பழி வாங்கிவிட முடியாத பலம் வாய்ந்த வில்லன்(கள்), எந்த ஞாபகமும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தாங்காத கதாநாயகன்.
பழிக்குப் பழி கதைகளைப் போல் தமிழில் காதல் கதை முக்கியமானது. காதல் இல்லாத திரைப்படங்கள் அரிது. அரிது என்பதைவிட இல்லை என்று சொல்லி விடலாம். ஆக்சன் படம், க்ரைம் த்ரில்லர் படம், பேய் பிசாசு படம், சமூக சீர்திருத்தப் படம், விஞ்ஞானப் படம், கிராமியப் படம், அதீத கற்பனைப் படம், மாயாஜாலப் படம், அரசியல் படம் இப்படி எந்தப் படமாக இருந்தாலும் அதில் காதல் தவறாது இருக்கும். தமிழ்த் திரைப்படங்களின் சாபக்கேடு என்னவென்றால் கதாநாயகிகள் என்பவர்கள் மேக்கப் பண்ணிக்கொண்டு கதாநாயகனைக் காதலிப்பவர்கள் மட்டுமே. கதாநாயகனோடு இணைந்து பாட்டுப் பாடி டான்ஸ் ஆடுபவர்கள் மட்டுமே.
காதலும் பழிக்குப் பழியும் சம கால அரசியலும் கலந்த படங்களும் வெளிவந்துள்ளன.
த்ரிஷா. ஆம் த்ரிஷா அரசியல்வாதியாகவும் காதலியாகவும் கொலைகாரியாகவும் அசத்திய ‘கொடி’.
அண்ணன் கொல்லப்பட்ட பிறகு அண்ணனாகவே மாறிவிடும் தம்பி தனுஷ், கொலைகாரி அண்ணனின் காதலி என்று தெரிந்த பிறகு பழிக்குப் பழி வாங்காமல் விடுவார். அண்ணனின் நண்பர் (துணைக் கதாபாத்திரம்) கொல்வார்.
நூறு சதவீதம் காதல் மட்டுமே பேசிய திரைப்படங்கள் நூறு சொல்லலாம். சில திரைப்படங்களை மட்டுமே உங்கள் ஞாபகத்திற்காக இங்கே குறிப்பிடுகிறேன். (இளம் தலைமுறையைக் கணக்கில் கொண்டு கறுப்பு வெள்ளைகளைக் கைவிட்டேன். 60 வயது வரை இளம் தலைமுறைதானே?)
‘ஒரு தலை ராகம்’
‘பயணங்கள் முடிவதில்லை’
‘கிளிஞ்சல்கள்’
‘காதல்’
‘அலைகள் ஓய்வதில்லை’
‘சேது’
‘காதல் கோட்டை’
இந்தக் காதலர்கள் டூயட்டுகள் பாடி ஆடிக் காதலிப்பார்கள். ஆனால், வாழ்வில் இணைய முடியாத எதிரணியாக ஜாதியோ மதமோ பொருளாதாரமோ பிற காரணங்களோ இருக்கும். பிரிக்கும்.
எல்லாத் திரைப்படங்களிலும் பேஸ்மென்ட்டாக ஒரே மூலங்கள் இருப்பதை அறிவீர்கள்.
காதலர்கள் இணைகிறார்களா? அல்லது பிரிகிறார்களா? அல்லது கடைசியில் சாகிறார்களா? அல்லது ஒருவர் இறந்து இன்னொருவர் உயிரோடு இருந்து அவர் இன்னொருவரைக் காதலிக்கிறாரா? என்ற வகையறாக்கள் மட்டுமின்றி ஒரு காதல் போனாலென்ன, அடுத்த காதலைத் தொடங்கிவிடலாம். அல்லது காதல் தோல்வி அடைந்த பெண்ணும் ஆணும் புதிய காதலைத் தொடங்கலாம் எனவும் பல்வேறு விதமான, விதவிதமான காதல் கதைகள் வெளிவந்துள்ளன. இன்னும் வெளி வரும்.
ஒரு சிறிய புள்ளியாகத் தொடங்கும் கதைக் கருவானது, ஒரே கதையாக இருப்பினும் மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவாக உருப்பெற்று முழுத் திரைக்கதையாக வளரும் இடம் கதை விவாதம்.
சில அறிவார்ந்த இயக்குனர்கள் தனி ஒருவராகவே, தனக்குள்ளேயே கதை விவாதம் செய்து, இந்தக் காட்சி வேண்டாம் வேறு காட்சி வைக்கலாம் என்று பல மாதங்கள், பல ஆண்டுகள் யோசித்து யோசித்து காட்சிளை மாற்றி மெருகேற்றி வருவார்கள். இந்தத் தனிநபர் கதை விவாதம் ஓரிருவருக்குதான் சரிவரும்.
நூற்றுக்கு 99 இயக்குனர்கள் குழுவாக உட்கார்ந்து மாதக் கணக்கில் கதை விவாதம் புரிகிறார்கள். விவாதத்தில் மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட திரைக்கதை மிகச் சிறந்ததாகவும் மாறும். மிகச் சிறந்த திரைக்கதை சொதப்பலாகவும் மாறும். அதிகமான திரைக்கதைகள் குழு விவாதங்களில்தான் செம்மையாகின்றன. கதை விவாதத்தில் இயக்குனர், உதவி இயக்குனர்கள், மூத்த கதாசிரியர்கள், ஓய்வு பெற்ற இயக்குனர்கள், இயக்குனர் வாய்ப்பு கிட்டாத திறமையான இயக்குனர்கள், கதை விவாதத்தில் கலந்துகொண்டு அதில் கிடைக்கும் (கிடைத்தால்) பணத்தில் ஜீவனம் செய்யும் இயக்குனர்கள் பங்கேற்கிறார்கள். திரைக்கதை மட்டுமின்றி திரைப்படங்களின் வெற்றிக்கான அம்சங்களும் இந்தக் கதை விவாதங்களில்தான் தீர்மானிக்க படுகின்றன.
சில, பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த திரைப்படங்களில் டைட்டில் கார்டில் ‘கதை இலாகா’ என்று தலைப்பிட்டு ஒரு பட்டியல் போடுவார்கள். அந்த கிரெடிட்டும் இப்போது கிடைப்பதில்லை, பணம் கிடைக்காததைப் போல். என்னதான் இயக்குனர்கள் ‘கதை, திரைக்கதை, வசனம்’ என்று நீளமாக போட்டுக் கொள்ளாமல் ‘எழுத்து,இயக்கம்’ என்று போட்டுக் கொண்டாலும் கதை விவாதம் நடத்தாமல் திரைக்கதையை உருவாக்குவதில்லை.
அந்த விவாதத்தில் என்னென்ன கூத்துகளெல்லாம் அரங்கேறும் என்பதை நேரடி அனுபவத்திலிருந்து அடுத்தடுத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.











